Thursday, August 10, 2017

" இயேசுவின் சகோதரன்."




" இயேசுவின் சகோதரன்."

இந்த கதை நிகழ்ந்தது அன்னோ தோமினி எனப்படும் கிறிஸ்த்து பிறந்த வருடம்.அன்றைய ரோமைய சக்கரவர்த்தி அகஸ்த்து இராயனின் குடிக்கணக்கு ஆணையால் யூதர்கள் ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் எந்த நாட்டில் இருந்தலும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று தங்களை ஆஜர் படுத்திக்கொள்ள வேண்டும்.ரோமையர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட தொலை தூரத்திலிருக்கும் யூதர்கள் தங்கள் பிறந்த தேசத்திலேயே ஆங்காங்கிருக்கும் தலைமை அதிகாரியிடம் தங்களின் குடி உரிமையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
     தங்களைப்பற்றியவும் தங்கள் சொத்து பத்துக்களையும் பற்றிய அனைத்து விபரங்களையும் முறையாக தெரிவிக்க வேண்டும் என்னும் இந்த அரசாங்க ஆணைக்கு யாரும் விதி விலக்கு அல்ல. இந்த அரசாங்க ஆணைக்கு அடிபணிந்து நசரேத்தில் வசித்து வந்த சூசையும் தன் மனைவி மரியாளை அழைத்துக்கொண்டு தம் சொந்த ஊராகிய பெத்லஹேமுக்கு பயணம் மேற்கொண்டார்.அப்போது மாதா மரியாவுக்கு நிறைமாதம்.
மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த நெடும் பயணத்தை மேற்கொண்டனர்.
இதேபோல ஒரு தம்பதியினர் துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் எப்பேஸுப்பட்டிணத்திலிருந்து தங்கள் குடிக்கணக்கு சமர்பிக்க ஜெருசலேம் பயணம் மேற்கொண்டனர்.
" அன்பே... இந்த பயணத்தை தவிர்க்கவே முடியாதா.? நிறைமாதமாக இருக்கும் என்னால் இவ்வளவு தொலைவான பயணத்தை மேற்கொள்வது மிகவும் பயமாக இருகின்றது. கூடுமானால் நான் வரவில்லை.நீங்கள் மட்டும் போய்வரலாமே?" என்றாள் அவள்.
" இல்லை அன்பே நவோமி. இது அரசாங்க ஆணை மட்டும் அல்ல. இது தெய்வ கட்டளை என்றுகூட நான் நினைக்கிறேன்...நீ இது நாள் வரை ஜெருசலேம் போய்வந்தது கிடையாது அல்லவா. நம் சொந்த நாட்டையும், நம் பழைய
சொந்தங்களையும் அதைவிட நம் முன்னோகள் வழிபட்டுவந்த சாலமோன் பேரரசர் கட்டிய தேவாலயத்தையும் அதனுள்ளே உறையும் நம் முன்னோகள் வணங்கிவந்த தேவாதிதேவனாகிய இஸ்ராயேலின் தேவனையும் நாம் சென்று பார்த்து வணங்கி வரவேண்டும் என்பதும் என்னுடைய நீண்ட நாள் ஆசை. தாவீது ராஜாவின் ஊராகிய பெத்லஹேமில் எனக்கும் சில அசையா சொத்துக்கள் இருகின்றன.நானும் தாவீது ராஜாவின் பரம்பரையில் வந்தவந்தான்.எனக்கும் ஒரு இளவரசனுக்கு உள்ள எல்லா தகுதியும் உரிமையும் இருக்கின்றது. இந்த உரிமையை நாம் புதுப்பித்தே ஆக வேண்டும். அப்போதுதான் அவற்றை நாம் நமக்கு பிறக்கப்போகும் நம் மகனுக்கு மாற்றித்தர இயலும் அல்லவா. அது என் கடமையும் கூட.
அதற்காகவும் நாம் போய்த்தான் ஆக வேண்டும்.கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு கவலைப்படாமல் பயணத்தை துவங்கு. சீக்கிரம் தயாராகு" என்றான் அவள் கணவன்.
     சற்று நேரத்தில் ஒரு அழகிய அப்சரசாக அவன் முன்னே வந்து நின்றாள் அவன் மனைவி நவோமி.அவள் அழகிய மயங்கிய அவள் கணவன்," அன்பே நவோமி..உன் வயற்றில் இருப்பது யார்.? அது ஆணாக இருந்தால் அவனும்
என்னைப்போன்று தாவீது அரசின் பாரம்பரியத்தில் வந்திருக்கும் ஒரு இளவரசனாக இருப்பான்.பெண்ணாக இருந்தால் ?.
" இது என்ன கேள்வி.அது பெண்னாக இருந்தால் அவளும் ஒரு இளவரசியாகத்தான் இருப்பாள்."
" சரி. அது ஆணாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம். பெண்ணாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம்.?"
" எனக்கு மகன் பிறந்தால் அவனுக்கு ஆண்டவனின் அருள் என்னும் பெயரை வைக்கலாம்."
" சரி.. அது பெண்ணாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம்."
" ஓஓஓஓ... அதற்கு வாய்ப்பே இல்லை. எனக்கு ஒரு மகன் தான் பிறப்பான் என்று என் உள் மனது சொல்கின்றது. தவறி பெண்ணாக பிறந்துவிட்டால் அதற்கு ரபேக்கா என்னும் பெயர் வை. அவளைப்போன்ற ஒரு பெண்ணழகி இந்த இஸ்ராயேல் குலத்தில் யாரும் இதுவரை பிறந்ததில்லை."
" அன்பே உங்கள் இஸ்ட்டமே என் இஸ்டமும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அதற்கு ஆண்டவனின் அருள் என்றே பெயர் வைப்பேன். .பெண்ணாக பிறந்தால் அதற்கு ரபேக்கா என்னும் பெயரையே சூடுவேன். இது சத்தியம் என்றாள் நவோமி.
" அன்பே இது உனக்கு நிறைமாதம்.இங்கிருந்து ஜெருசலேம் செல்ல மூன்று நாள். அங்கே நம் வேலைகளை முடித்துவர ஒரு வாரம். மீண்டும் எப்பேசு திரும்பிவர ஒரு நான்கு நாள். எப்படியும் உனக்கு இந்த எப்பேசில்தான் பிரசவம். ஆண்டவன் சித்தப்படி எல்லாம் நடந்தால் நம் பெத்லஹேம் பயணம் ஒரு பெரும் வெற்றியாக இருக்கும். புறப்படு " என்றான் அவள் கணவன்.ஆனால் அவர்களுக்கு ஏற்படப்போகும் பயங்கரம் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
. ஆண்டவன் சித்தம் வேறுமாதிரியாக இருந்தது.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஆயிரக்கணக்காண யூதர்கள் தூர தூர தேசங்களிலிருந்து வந்து தங்கி தங்கள் குடிக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டி இருந்ததால் அந்த சிறிய பெத்லஹேம் கிராமம் அல்லோகல்லோகப்பட்டது.
     சூசையப்பர் தானும் தன் மனைவியும் தங்குவதற்கு ஒரு நல்ல இடமாக எவ்வளவு தேடியும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. தன் சொந்த ஊரில் அவருடைய சொந்தங்களும் பந்தங்களும் நண்பர்களும் எந்த உதவியும் தரமுடியாது என்று கை விரித்துவிட்ட நிலையில் அவர் மிகவும் தவித்துப்போனார். எனவே அவர் வேறு வழி இன்றி ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்திலிருந்த ஒரு குகையில் தங்கவேண்டியது அவசியம் ஆயிற்று. இந்த நிலையில் பெத்லஹேமின் மாட்டுக்குடிலில் தேவ தாயாருக்கு இயேசு நாதர் பிறந்தார். அவர் பிறந்து ஒரு சில நாட்களே ஆகியிருக்கும். ஒரு நாள் இரவில் அந்த குகையின் ஒரு மூலையில் தொப் என்னும் ஒரு சப்தமும் யாரோ வலி வேதனையில் முனகுவது போன்ற ஒரு சப்தமும் ஒரு குழந்தை அழும் சப்தமும் மாதாவுக்கு மிகத்தெளிவாக கேட்டது.
" என் அன்பரே, யாரோ இங்கே இருகிறார்கள். அவர்களுக்கு ஏதோ துன்பம் நேர்ந்தது போல் இருகின்றது. தயவு செய்து சிரமம் பாராமல் போய் பார்த்து வாருங்கள்" என்றார் மரியாள்.
    இந்த சப்தத்தை சூசையப்பரும் கேட்டிருந்ததால் அவரும் தீவட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு அடுத்த குகைக்கு போய் பார்த்தபோது அவருக்கு தலை சுற்றிப்போனது. ஒரு பச்சிளம் குழந்தையும் அதன் தாயும் மரண அவஸ்த்தை
பட்டுக்கொண்டிருந்தனர். அந்தப்பெண்ணால் பேச முடியாத அளவுக்கு நோய்வாய்பட்டிருந்தாள். தீவட்டியின் வெளிச்சத்தில் அவர்களை பார்த்த சூசையப்பர் அதிர்ச்சியுற்று," அடக்கடவுளே...இவளுக்கு குஸ்ட்ட நோய் பீடித்திருக்கின்றது.இந்த நிலையில் இவளை விட்டல் அவள் இன்றோ அல்லது நாளையோ இறப்பது உறுது. என்ன செய்யலாம் எனறு யோசித்தவராய் மீண்டும் தன் மனைவி மரியாளிடம் வந்தார்.
" மரியா.... இது என்ன கொடுமை. யாரோ ஒரு எபிரேய பெண். குழந்தையுடன் நோய்வாய்ப்பட்டிருகின்றாள். குஸ்ட்டம் போல் தோன்றுகிறது. அவள் நிலையும் அவள் குழந்தையும் நிலையும் மிகவும் பரிதாபம். அந்த குழந்தை இன்னும் சிலமணி நேரத்தில் இறப்பது உறுதி.அவள் குஸ்ட்ட ரோகி என்பதால் நாம் மிகவும் யோசிக்கிறேன்." என்றார்.
" அன்பரே... இந்த நேரத்தில் யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. அந்த குழந்தை உயிரோடிருக்கின்றது என்றால் அதை உடனே என்னிடம் எடுத்து வாருங்கள்.நான் பார்த்துக்கொள்கிறேன். அதன் தாயை நாளை பார்த்துக்கொள்ளலாம் ".என்றார்.
" மரியா... நீ விஷயம் தெரியாமல் பேசுகின்றாய். அந்தக்குழந்தையும் குஸ்ட்டம் என்றால்... நாம் தீட்டுப்படுவோம்.நம் குழந்தையும் தீட்டுப்படும்.. இந்த குற்றதிற்காக நீயும் நானும் வேதபாரகர்களால் தீர்வையிடப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்படுவோம்..இது எல்லாம் நமக்கும் தேவையா?" என்றார் சூசையப்பர்.
" அன்பரே... அப்படியானால் நம் கண்முன்னே இரு உயிரை பலியாக்க சொல்கிறீர்களா. அவர்கள் கடவுளின் திருவுளப்படியே இங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது நம் கடமை. இவர்களை இப்படியே சாகட்டும் என்று விட்டுவிடுவது பிறர் சினேகத்திற்க்கு எதிரான பாவம். இந்த விஷயத்தில் ஊர் உலகத்தைப்பற்றியோ வேத சாஸ்த்திரங்களைப்பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அப்படி இந்த தாயையும் சேயையும்  தொட்டு காப்பாற்றிய பாவத்துக்கு நாம் ஆளானால் நம் உயிரே போனாலும் கடவுள் நமக்கு சன் மானம் அளிப்பார் என்பதில் நாம் தெளிவாக இருப்போம். முதலில் அந்த குழந்தையை என்னிடம் எடுத்து வாருங்கள். அதனை சுடு நீரில் குளிப்பாற்றி என்னிடம் எடுத்துவாருங்கள் அதற்கு உயிர்பால் கொடுக்க வேண்டும்.. சீக்கிரம் எடுத்துவாருங்கள்" என்றார் தேவ மாதா..தன் பத்தினியின் பிறர் சினேகத்தைப்பற்றி மிகவும் வியந்துபோன சூசையப்பர் அந்த வியாதி பீடித்திருந்த குழந்தையை தொட்டு எடுத்துவந்து அதைக்குளிப்பாட்டி தன் மனைவியிடம் கொடுக்க தேவத்தாயார் எந்தவிதமான அருவருப்பும் அடையாமல் அந்த குழந்தைக்கு இயேசுநாதருக்கு கொடுக்க வேண்டிய தன் தாய்ப்பாலை கொடுத்தார்.
    இதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் இயேசு என்னும் அந்த குழந்தை தனக்கு பசியே இல்லை என்பதுபோல மிகவும் ஆர்ப்பாட்டமாக விளையாடிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அக்காலத்தில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கி.பி. 33.
இயேசு நாதரின் மூன்றாம் வருட வேதபோதகத்தின்போது பல ஆச்சரியமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின.இயேசுநாதர் ஜெருசலேம் தேவாலயத்தில் பிரசங்கித்தபின் சற்றே ஓய்வெடுக்க ஜனசந்தடியற்ற ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது  அவரை சந்தித்துப்பேச சிறு கூட்டத்தோடு வந்த ஒரு முதியவர் வந்தார். " ராபி வாழ்க" என்றார். அதற்கு இயேசுநாதரும் ஆண்டவரின் சமாதானம் உம்மோடு இருப்பதாக " என்று கூறினார்." ராபி... என் குருநாதர் யோவான் ஸ்நானகர்  தங்களைப்பற்றி அனேக காரியங்கள் கூறியிருகின்றார். ஆனால் நான் கேட்டறிந்த அனேக காரியங்கள் எங்களுக்கு அச்சமூட்டுபவையாக இருகின்றன.தங்களுக்கு சித்தமானால் அவற்றைபற்றி உங்களிடம் தனியே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்." என்றார். இயேசுநாதரின் ஒரு பார்வையில் அனைவரும் அகன்றனர்." பெரியவரே இப்போது நீர் கூற நினைப்பதை என்னிடம் கூறலாம் " என்றார்.
" ராபீ... என் குருநாதர் எங்களை விரியன் பாம்பு குட்டிகளே என்றழைப்பார். அவருடைய வல்லமையான பிரசங்கங்களால் நாங்கள் மனம் மாறி உண்மையான தேவனை அறிந்துகொண்டோம். பாம்பாக இருந்த நாங்கள் இப்போது ஆண்டவர்க்கு பயனுள்ள பிறவிகளாக மாறிவிட்டோம். ஆனால் இப்போது பாம்புகள் எங்களிடம் இல்லை. அவை இப்போது உம் சீடர்களிடயே சில பேரிடம் நுழைந்துவிட்டன. அதோ அந்த செந்தாடிக்காரனை [ யூதாஸ் ] பார்த்தீர்களா.. அவனுடம் பேசுகிறானே ஒருவன். அவன் பெயர் மார்க்கு. இவன் வேறு யாரும் அல்ல. முன்பு ஒரு சமயம் கலிலேயாவில் பேய் பீடிக்கப்பட்டிருந்த மனிதன் ஒருவனின் அசுத்த ஆவிகளை விரட்டி அவைகளை இரண்டாயிரம் பன்றிக்கூட்டத்தில் செலுத்தி அவனை
காப்பாற்றினீரே... அவனேதான். அவன் மனம் திருந்தி நன்றாகத்தான் வாழ்ந்து வந்தான். ஆனால் காலப்போக்கில் காசுக்கு ஆசைப்பட்டு மனம் மாறி பழையபடியே அந்த அசுத்த ஆவிகளைவிட அதிக வல்லமையான ஆவிகளை தானே வலிய ஏற்றுக்கொண்டதினால் அவன் இப்போது ஏவல் பில்லி சூனியம் என தொழில் செய்து வருகின்றான்.சொல்லப்போனால் அவன் உயிருள்ள சாத்தான் ஆகிவிட்டான்.முன்பு ஊமையும் செவிடுமாயிருந்த சாத்தான்கள் இப்போது அவனுக்கு நிறைய பேசும் வல்லமைகளை கொடுத்திருகின்றன. அவன் பல விஷயங்களைப்பற்றி அதிகம் பேசுகிறான்.அவனிடம் தர்க்கம் செய்யும் எவனும் அவனிடம் தோற்பது உறுதி. தாங்கள் சொல்லியபடி அவன் பிந்திய நிலை முந்திய நிலையைவிட மோசமாயிற்று. இந்த செந்தாடிகாரனாகிய யூதாசும் இந்த பேய் மனிதனாகிய மார்க்கும் ஜெருசலேமில் தேவாலய பெரிய குரு கைப்பாஸின் வீட்டில் அடிக்கட்டி காணப்படுகின்றார்கள். இவர்கள் மட்டில் தேவரீர் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று நான் மிகவும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
     " பெரியவரே தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.நான் என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும். நான் என்பிதாவின் சித்தப்படியே போக வேண்டி உள்ளது. நாம் ஆத்மாக்களை நேசிப்பவர் ஆதலால் என்னை விரும்பி அழைப்பவர்  உள்ளங்களில் நாம் பிரவேசிப்போம். சாத்தானை விரும்பி ஏற்றுக்கொள்பவர் இதயங்களில் அவன் பிரவேசிகிறான்.நாம் இருக்கும் இடாங்களில் சாத்தான் இருப்பதில்லை. இவன் இருக்கும் இடங்களில் நாம் இருப்பதில்லை. மனிதன் சுத்த சுயாதீனமாக படைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் சுய விருப்பங்களில் நாம் தலையிடுவதும் இல்லை. அவனவன் ஆத்துமங்களுக்கு அவனவனே அதிபதியாவான்.இப்போதும் மார்க்கும் யூதாசும் என்னுடைய நேரடிப்பார்வையில் இருந்தாலும் நாம்
அவர்கள் மட்டில் இரக்கம் மிக்கவறாகவே இருகின்றோம். என்னை சரணடையும் பட்சத்தில் அவர்களையும் இரட்சிக்கவே நாம் விரும்புகிறோம்." என்றார்.
" ஆண்டவரே...இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. அந்த செந்தாடிக்காரனை இப்போதே நீர் விலக்கிவிடுவது நல்லது.உமது உயிருக்கு அவனால்தான் ஆபத்து என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். நீவீர் உண்மையிலேயே அளவுக்கு மீறி நல்லவராகவும் இரக்கம் மிக்கவராகவும் இருப்பதால் மனிதர்கள் பலர் உம்மிடம் வேண்டி கொடைகளை பெற்றுக்கொண்ட பிறகு கரும்பை சுவைத்தபின் துப்பிவிடுவதுபோல் உம்மைவிட்டு போய்விடுகின்றார்கள். இன்னும் அவனை நீர் உம்முடன்
வைத்துக்கொண்டால் இனிமேல் உம்பாடு கஸ்ட்டம் தான்.உம்மை இனிமேல் அந்த பரலோக பிதாதான் காப்பாற்ற வேண்டும். நான் சென்று வருகின்றேன்" என்றார்.
" பெரியவரே..இவை அனைத்தையும் நான் அறிவேன்.மனிதர் அனைவருமே நன்றிகெட்டவர்கள்தான்.ஆனாலும் அவர்களையும் நான் நேசிக்கவே செய்கிறேன்.இந்த உலகத்தில் பிறந்த ஒரு சில மனிதரை தவிர என் பிதாவின் மனதைக்காயப்படுத்தாதவர்கள் யாருமே இல்லை." என்றார் இயேசுநாதர்.
       அப்போது ஒருவன்," ஆண்டவரே... நசரேத்தூர் இயேசுவே....என்மேல் இரக்கம் வையும் " என்றான். " ஆண்டவரே...உம்மைக்காண நான் வெகு தூரத்திலிருந்து வந்திருகின்றேன்.ஆண்டவரின் புண்ணியத்தில் எனக்கு செல்வத்திற்கு குறைவில்லை. ஆனால் எனக்கு பார்வை இல்லை.தேவரீர் எனக்கு பார்வை தர வேண்டுகிறேன்." என்றான்.
அவனை சற்றே உற்றுப்பார்த்த இயேசுநாதர்," என் சகோதரா... நீர் வேண்டியபடியே உனக்கு பார்வை உண்டாகட்டும்" என்றார்.அப்போதே அவன் பார்வை பெற்றான்.
" ஆண்டவரே...தேவரீர் உம் திருவாயால் என்னை சகோதரா என்றழைத்ததும் எனக்கு பார்வை தந்ததும் என்னை மிகுந்த பரவசத்தில் ஆழ்த்தியது. தேவரீருக்கு அனந்த கோடி நமஸ்காரம் உறித்தாகுக" என்றார்.
அன்று மாலை வேளையில் செல்வ செழிப்பான ஒரு பெண்ணும் அவளது உறவினர்களும் இயேசுவின் திருத்தாயாரை சந்தித்தனர். வந்திருந்த அந்தப்பெண் தேவதாயாரை சந்தித்த அக்கணமே," அருள் நிறைந்த மரியே வாழ்க, பெண்களுக்கும் ஆசி பெற்ற மாதரசியே வாழ்க " என்று முகமன்கூறி அவரது பாதங்களில் சாஸ்டாந்தமாக விழுந்தாள். அந்த நிலையிலே அவள் பரவசமாக ஆனந்தக்கண்ணீர் வடித்தாள்.
" பெண்னே யாரம்மா நீ... நீ ஏன் என் கால்களில் விழவேண்டும். நான் உனக்கு என்ன செய்தேன்.?" என்றார் தேவத்தாயார்.
" அம்மா... நீங்கள் என்னை மறந்து போனீர்களே அம்மா. இந்த நவோமியை.... எப்பேசுவின் நவோமியை மறந்துவிட்டீர்களா அம்மா?" என்று மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவளாக அவள் அழுதுகொண்டே இருந்தாள்.
" சகோதரி..என்னுடைய தினசரி வாழ்க்கையில் நான் எவ்வளவோ பேரை சந்திக்கிறேன்.அனைவரையும் நான் நினைவில் கொள்ள முடியாதல்லவா. உண்மையில் நீ யாரென்றே எனக்கு தெரியவில்லை. நீ யாரென்பதை தயவு செய்து எனக்கு ஞாபகப்படுத்து. முதலில் எழுந்திரு.பேசு" என்றார் தேவ தாயார்.
தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்ட எப்பேசுவின் நவோமி," அம்மா...தாவீதின் நட்ச்சதிரமே...மிகவும் இரக்கமுள்ள தாயாரே....தேவரீர் என்னை சகோதரி என்றழைத்தற்கு அனந்த கோடி நன்றி உறித்தாகுக. ஆனால் அத்தகைய ஒரு உறவுக்கு நான் தகுதியானவள் அல்ல.நான் உங்களையும் உங்கள் திருமகனையும் கடந்த முப்பத்து மூன்று வருடங்களாக தேடி வருகின்றேன்.ஆனால் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.தேவரீருடைய திருப்பெயரையும் தங்களின்
முகத்தோற்றத்தையும் தங்களின் திருமகனின் குழந்தை முகத்தையும் நான் ஒரு நாளும் மறந்ததில்லை. ஜெருசலேமிலிருந்து வந்திருந்த ஒரு மனிதரால் இயேசுநாதர் யார் என்று நான் கண்டுகொண்டேன்.அப்போதே நான் முடிவு செய்து விட்டேன்..தேவரீரும் உமது திருக்குமாரனும் நிச்சயம் உயிரோடு இருகின்றீர்கள் என்று. உங்களை நான் இறப்பதற்கு முன்பாக ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டுமென்று வெகுவாக ஆசைப்பட்டேன். உடனே எப்பேசிலிருந்து வந்துவிட்டேன். உம்மையும் உமது திருச்சுதனையும் காணும் பாக்கியம் பெற்றுவிட்டேன்." என்றாள்.
" என் அன்பு சகோதரியே ...நீ எப்பேசிலிருந்து வந்த நவோமியா...இப்போதுகூட என்னால் உன்னை நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை. சற்று விளக்கமாக கூறு" என்றார் தேவத்தாயார்..
ஒரு நீண்ட பெரு மூச்சுவிட்டு தன் கதையைகூறினாள் எப்பேசுவின் நவோமி.
" அம்மா...என் நேசத்தாயாரே... நான் எப்பேசு நகரை சேர்ந்தவள். நவோமி என்பது என் இயற்பெயர்.என் கணவர் பெத்லகேமில் யூத குலத்தை சேர்ந்தவர்.தாவீது அரசரின் பாரம்பரியத்தில் வந்தவர்.. தாவீது ராஜாவின் வம்சாவளியில் வந்த அவருக்கு ஒரு இளவரசருக்குறிய சட்டபூர்வமான எல்லா எல்லா உரிமையும் இருந்தது. அவருக்கென பெத்லஹேமில் உரிமைசொத்துக்கள் பல உண்டு.அகஸ்டஸ் சீசரின் ஆணைப்படி நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் இந்த பெத்லஹேம் பயணம் மேற்கொண்டோம். எப்படியும் பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் அதற்குள்ளாக திரும்பிவிடலாம் என்பது எங்கள் கணக்காக இருந்தது. ஆனால் எங்கள் கணக்கு தவறாகிப்போனது. கடற்பயணம் அவருக்கு
ஒத்துக்கொள்ளாததால் அவர் உடல் நலம் கெட்டது. பெத்லஹேம் சேர்ந்து எப்படியோ அவரது குடிக்கணக்குகளை சமர்ப்பித்துவிட்டு சொந்தங்களை சந்திக்கலாம் என்றபோது அங்கு எழுந்தது பிரச்சனை. எங்கிருந்தோ வந்தவன்
தாங்கள் இது நாள் வரை ஆண்டு அனுபவித்து வந்த தங்கள் சொத்தை கேட்கிறான் என்று அவர்மீது வர்மம் கொண்ட அவரது சொந்தங்கள் அவரை பகைத்து நையப்புடைத்தனர்.. என்னையும் அவ்வாறே செய்தனர்.
    இந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த இருபது நாளில் என் கணவர் மிகவும் வாதைபட்டு இறந்தார். அவரை பெத்லஹேமிலேயே புதைத்தனர். பிறகு என்னை கைவிட்டனர். என்னை சகதியில் வீசினர். எனக்கும் என் குழந்தைக்குமாக தொற்று நோய் பீடித்தது. அதில் என் அழகிய ரூபமே மாறிப்போனது. என் குழந்தையும் என்னோடு சேர்ந்து துன்பப்பட்டது. என்னால் தாய்பால் கொடுக்க முடியாதபடி என்னுடைய துக்கத்தால் அது விஷமாக மாறிப்போனது. சில நாளில் அதுவும்
வற்றிப் போனது. இந்த நிலையில் நாங்கள் இறந்தால் அது வெளி உலகிற்கு தெரிந்தால் தங்கள் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்று எண்ணிய என் கணவரின் குடும்பத்தை சேர்ந்த சிலர் எங்களை குண்டுகட்டாக கட்டி ஊருக்கு வெளியே இருந்த பெத்லஹேம் குகையில் ஒரு இரவில் எங்கள் தூக்கிப்போட்டுச்சென்றனர். அப்போதுகூட அவர்கள் நீ இங்கே கிடந்து மரித்துப்போ... அதுதான் உனக்கும் நல்லது . எங்களுக்கும் நல்லது என்று கூறிச்சென்றனர். இந்த வார்த்தைகள் நாங்கள் பட்ட துன்பங்களை விட எங்களுக்கு அதிகதுன்பத்தை தந்தன. இஸ்ராயேலின் தேவனே இனிமேல் எனக்கும் என் குழந்தைக்கும் நீயே கதி என்று நான் வாய்விட்டே கதறினேன்.      நான் வணங்கும் இஸ்ராயேலின் தேவன் எங்களை கைவிடவில்லை. அவர் உங்கள் கணவரின் உருவில் வந்தார். என் குழந்தையை எடுத்து உங்களிடம் தந்தார். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தரவேண்டிய தாய்ப்பாலை அவனுக்கு புகட்டினீர்கள்.பிறகு என்னையும் கவனித்துக்கொண்டீர்கள்.
   இது எத்தகைய ஒரு ஆபத்தாயிருந்தது என்றால் நான் மட்டும் வேறு யார் மூலமாகவோ காணப்பட்டிருந்தால் என்னை குஸ்ட்ட ரோகி என்று சபித்து என்னையும் எனக்கு ஆதரவு தந்த உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கல்லால் எறிந்தே கொண்றிருப்பார்கள்.உங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் என்னக்காப்பாற்றி குணப்படுத்தினீர்களே உங்களுக்கு நன்றி செலுத்த நான் எவ்வளவோ முயன்றேன். ஆனால் முடியவில்லை. உங்களை சந்திக்க எப்போதும் யார்யாரோ உங்கள் உறவினர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். தொலை தேசங்களிலிருந்து யார்யாரோ ராஜாக்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரிடமும் நீங்கள் என்னை பற்றி எதையுமே கூறவே இல்லை.இப்படியாக ரகசியமாக ஒரு மாதம் அளவாக என்னை காபாற்றியபின்பு ஒரு பை நிறைய தங்கக்காசுகளையும் விலை உயர்ந்த துணிகளையும் கொடுத்து என்னை எப்பேசுக்கு அனுப்பி வைத்தீர்கள்.அவைகள் குழந்தை இயேசுவைக்காண வந்திருந்த மூன்று ராஜாக்களின் காணீக்கைப்பொருட்க்கள் என்று நான் பிற்பாடு அறிந்துகொண்டேன்.எப்பேசு பட்டிணம் சென்ற நான் அங்கு என கணவரின் வியாபாரத்தை மீண்டும் துவங்கி நான் இப்போது பெரும் பணக்காரியாக இருகின்றேன்......
    என் கணவரின் உறவினர்களால் பெத்லஹேமில் நான் அடைந்த துன்பமும் அவமானமும் பெரிது என்பதால் என் உரிமையை நிலைநாட்ட நான் மீண்டும் பெத்லஹேம் வந்து என் கணவருக்கு சேர வேண்டிய சட்டபூர்வமான
சொத்துக்கள் அனைத்தையும் நான் பெற்றேன். அப்போதெல்லாம் அந்த பெத்லஹேம் குகைக்குசென்று என் பழைய நினைவுகளை புதுப்பித்துக்கொள்வேன். என்றாவது ஒருநாள் உங்களையும் உங்கள் திருக்குமாரனையும் நான் சந்திப்பேன் என்னும ஆவலை தினந்தோரும் வளர்த்துக்கொள்வேன்.ஆனால் பெத்லஹேம் நகரின் மாசில்லாக்குழந்தைகள் கொல்லப்பட்டபோது அதில் மடிந்தவர்களில் நீரும் உம் திருக்குமாரனும் உம் கணவரும் அடங்குவர் என்று நான் கேள்விப்பட்டபோது  என் இதயமே வெடித்துவிட்டது. ஆனாலும் என் உள்மனது மட்டும் இதை நம்ப மறுத்தது. இப்போதாவது என்னை உங்களால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிந்ததா அம்மா?" என்றாள் நவோமி.
" ஆம் சகோதரி நவோமி... இப்போது எல்லாம் எனக்கு நினைவுக்கு வருகின்றது.பெரிய ஏரோதின் ஆணையால் மாசில்லாக்குழந்தைகள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் எங்களுக்கு முன்னதாகவே சம்மனசானவர் இதை அறிவித்ததினால் நாங்கள் எகிப்திற்கு தப்பிச்சென்றோம். பிறகு ஒன்பது வருடம் கழித்து எகிப்த்திலிருந்து திரும்பிவந்தபிறகு நாங்கள் நசரேத்தில் வசித்து வந்தோம். என் மகனுக்கு இருபத்து ஐந்து வயதாகும்போது நசரேத்தில் என் கணவர் சூசை காலமானார். அதனால்தான் நீ பெதலஹேமுக்கு வரும்போதெல்லாம் எங்களைக்காண முடியாமல் போனது. இப்போது உன் மகன் எங்கே... கூப்பிடு அவனை... அவனுக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றாய்?' என்றார் தேவ தாயார்.
" அம்மா... இதோ என்மகன். அருள். என் மகனே... இதோ உன்னை பாலூட்டி வளர்த்த தேவ தாயார். போய் அவரை வணங்கு... அம்மா... அவனுக்கு அவன் தந்தை விரும்பியபடியே ஆண்டவன் அருள் என்றே பெயர் வைத்திருகின்றேன்.நீங்கள் அவனுக்கு கொடுத்துவளர்த்த ஒவ்வொரு துளி தாய்ப்பாலுக்காவும் நான் நூறுமுறை ஆயிரம் முறை நன்றி செலுத்துகின்றேன்.எங்களுக்கு மீண்டும் உயிரும் கொடுத்து வாழ்வும் கொடுத்து காப்பாற்றிய உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி
கூறுகின்றேன். எங்கள் உயிரையே உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்." என்றாள் நவோமி.
" நவோமி... அன்று நான் செய்தது எந்த தாயும் செய்யும் ஒரு சாதாரண காரியமே.இதை ஏன் நீ பெரிது படுத்துகின்றாய்?.ஆனாலும் எந்த தாயும் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் உயிருக்கு போராடும் எந்த குழந்தைக்கும் தன் தாய்ப்பால் கொடுக்க மறுக்கக்கூடாது. சரி உன் மகன் எங்கே? கூப்பிடு அவனை. நான் அவனைக்காண விரும்புகின்றேன்" என்றார் தேவத்தாயார்.பிறகு தன்னைக்காணவந்த அருளைப்பார்த்து " மகனே .. அருள்.. இஸ்ராயேலின் பரிசுத்த தேவன் உன்னை ஆசீர் வதிப்பாராக.நீயும் என் மகனைப்போல் என்னவாக வளர்ந்திருக்கின்றாய் " என்று அவனை உச்சிமுகர்ந்து அவன் நெற்றியில் முத்தமிட்டார் தேவ தாயார்.
" அம்மா...உங்கள் திருக்குமாரன் எங்கே ?" என்றாள் நவோமி.
" மகனே .. என் இயேசுவே... இங்கே வா...இவர்கள் யார் என்று பார் " என்று தேவதாயார் அழைக்க " அம்மா.. இதோ வந்தேன் " என்று அவர் அருகிலே வந்தார் இயேசு நாதர்.
" அம்மா... நசரேத்தூர் இயேசுநாதர் உங்கள் மகனா... இவர்தான் அம்மா எனக்கு இன்று காலையில் பார்வை கொடுத்தவர்." என்றார் அருள்.
" சகோதரா... நான் எவ்வளவோ பேருக்கு ஏதேதோ செய்திருக்கின்றேன். நான் உனக்கு எப்போது பார்வை கொடுத்தேன்." என்றார் இயேசுநாதர்.
" இன்று காலையில் தான் ஆண்டவரே தேவரீர் எனக்கு பார்வை கொடுத்ததுமல்லாமல் என்னை சகோதரனே என்று அழைத்ததற்கு நான் நன்றி கூறுகின்றேன். ஆனால் நான் அதற்கு தகுதியானவன் அல்ல. ஒருமாதகாலம் நான் குழந்தையாய் இருந்தபோது உங்கள் நேசத்தாயார் எனக்கு உங்களுக்கு கொடுக்க வேண்டிய தாய்பாலை எனக்கு கொடுத்து காப்பாற்றினார்கள் என்பதற்காக நான் உங்களிடம் சகோதர உரிமை கேட்க மாட்டேன். நீவீர் உலக இரட்ச்சகர். உங்களுடைய தாயார் எங்களுக்கு செய்த உதவி மிகப்பெரிது. எங்களுக்கு இந்த உலகில் வாழும் உரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ள பெரும் உதவி புறிந்தார்கள். இதற்கு கைமாறாக நாங்கள் என்ன கொடுக்கப்போகிறோம்.இதோ எங்கள் உடமைகள்.இவை யாவையும்
தங்களுடைய சேவைக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். எங்கள் உயிரையும் உமக்கே காணிக்கையாக தருகின்றோம். தயவு செய்து எங்களை ஏற்றுக்கொள்ளூம் " என்றார் அருள்.
" அம்மா... உங்கள் அருள் என்ன சொல்கிறான் பார்த்தீர்களா... இதில் உங்களுக்கு சம்மதமா?" என்றார். இயேசுநாதர்.
" சுவாமி... உமக்கே ஸ்த்தோத்திரம் உண்டாகக்கடவது. நானும் கணவனை இழந்தவள். உம் நேசத்தாயாரும் கணவரை இழந்தவர். எனக்கும் ஒரே ஆண் பிள்ளை. உம் நேசத்தாயாருக்கும் நீவீர் ஒரே பிள்ளை. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சேர்ந்தே வாழ்வோமே" என்றாள் நவோமி.
" அம்மணி.. அதுதான் உங்கள் விருப்பமானால் வந்து என் தாயாருடன் சேர்ந்துகொள்ளுங்கள். அருள் வா என்னோடு..நீ இங்கு வரும் முன் என்ன செய்துகொண்டிருந்தாய்?" என்றார் இயேசு நாதர்.
" ஆண்டவரே நான் என் வியாபார நேரம் போக தேவாலயத்தில் ஊழியம் புறிந்துகொண்டிருந்தேன். வேத நூல்களை படிக்கமுடியாதபடி என் கண் பார்வை இழந்ததாலேயே நான் உம்மை நாடி வந்தேன். உம்மை கண்டுகொண்டேன்.பார்வை பெற்றேன்."
" நன்று என் சகோதரா... நீ மீண்டும் எப்பேசு சென்று என் வேதத்தை போதி. இப்போதல்ல. நான் பரமேறிய பிறகு" என்றார் இயேசுநாதர்.
இந்த சம்பாஷணங்களை கண்ட சிமோன் இராயப்பர்..ஆண்டவரே ..எங்கிருந்தோ வந்தவனை என் சகோதரா என்றழைத்தீர்கள்...இது எப்படி?" என்றார்.
"பிறர் ஸ்நேகத்தின் காரணமாக என் தாயார் செய்திருக்கும் ஆயிரக்கணக்கான காரியங்கள் வெளி உலகத்திற்கு தெரியாமலே மறைக்கப்பட்டுவிட்டன. இத்தகைய காரியங்கள் அவருடைய தாழ்ச்சியினால் பரலோக பிதாவுக்காக
ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதால் அவை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டன. ஏன் இராயப்பா... அருளை நான் சகோதரா என்றழைத்தது உனக்கு பொறாமையாக இருகின்றதா... அல்லது பிடிக்கவில்லையா?   ஒரு குழந்தையாக என்னோடு என் தாயின் ஸ்தனங்களில் பால் அருந்தியவனை நான் சகோதரா என்றல்லாமல் வேறு என்னவென்று அழைப்பது ?"
" ஆனாலும் ஆண்டவரே... இது தங்களுக்கே அதிகமாகத்தோன்றவில்லையா ?'' என்றார் இராயப்பர்..
" இராயப்பா... நான் உன்னிடம் ஒன்று ரகசியமாக சொல்ல வேண்டும். ஒரு நாள் வரும். அப்போது அப்போஸ்த்தலர்கள் நீங்கள் அனைவரும் என்னைப்பற்றி கொடுக்கும் சாட்ச்சியத்தை விட இவர் கொடுக்கும் சாட்ச்சியம் மிக அதிகமாக
" ஆண்டவரே... அருள் மட்டில் உங்கள் தீர்மானம் என்ன?"
" அவர் சாட்ச்சியத்தல் பெரும் உவகை கொள்ளும் என் பரலோகத்தந்தை மோட்சத்தில் தங்க இழை நூலால் நெய்யப்பட்ட பெரும் இரத்னாம்பரத்தால் அவரை மூடி கௌரவித்த்து பரலோகத்தில் வரவேற்பார்."
" ஆண்டவரே அப்படியானால் அவர் உம் சகோதரர் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.அவரை நாங்களும் எங்கள் சகோதரர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்கிறோம். வாழ்க அருள். " என்றார் இராயப்பர்..
பின் குறிப்பு : இந்த கதைக்கு ஆதாரம் தூத்துக்குடி ரோஸா மிஸ்டிக்கா பதிப்பகத்தாரால் வெளிடப்பட்டுள்ள மரியா வால்டோரொட்டாவின் கடவுள் மனிதன் காவியம் என்னும் புத்தகம் ஆறாம் பாகம் பக்கம் 682 முதல் 684 வரை.
ரோஸா மிஸ்டிக்கா பதிப்பகத்தாருக்கு என்னுடைய நன்றி உறித்தாகுக.
































."