Wednesday, March 30, 2022

இயேசுவின் பாடுகளின் சிலுவை பாதை.

                   
          இயேசுவின் பாடுகளின் சிலுவை பாதை.

    முதல் ஸ்தலம்.


கர்த்தர் சிலுவை சாவுக்கு தீர்வை இடப்படுகின்றார். இந்த அகில உலகையும் அண்ட சராசரங்களையும் படைத்து, அதல சுதல விதல பாதாள பைரவ என்னும் உலகங்களையும் படைத்து அதில் மனிதன் வாழும் விதமான அனைத்து வசதிகளையும் படைத்து கடைசியில் மனிதனையும் படைத்து தன் உயிர்காற்றால் அவனுக்கு உயிரையும் கொடுத்து  பெற்ற பிள்ளையைப்போல் அவனை சீராட்டி பாராட்டி சகல உரிமையையும் கொடுத்து  வளர்த்து  ஆளாக்கிய கடவுளுக்கு நன்றியாக மனிதன் கொடுத்த நல்லபரிசு சிலுவைச்சாவு. என்ன உங்கள் அரசனை நான் கொல்வதா என்று கேட்டான் பிலாத்து, சீசரே எங்கள் அரசர் என்று கொக்கரித்தது யூத வெறியர் கூட்டம். அப்படியானால் உங்கள் அரசனை நான் என்ன செய்யட்டும் என்றான் பிலாத்து. அவனை சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் எனறனர் யூதர். அன்று அகஸ்ட்டஸ் சீசரிடம்  ஜெருசலேமில் ரோமர்களின் ஆட்ச்சியை நிலை நிறுத்தமல் தான் மீண்டும் ரோமுக்கு திரும்பி வரப்போவதில்லை என்ற கூறிய தன் வாக்குறுதியை  நினைவுகூர்ந்தான் பிலாத்து. தான் இந்த ஜெருசலேமுக்கு வந்த காரியம் இவ்வளவு எளிதாக நிறைவேறும் என்று கனவிலும் நினையாத பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைந்துகொல்ல உத்திரவிட்டான்,

 பிலாத்துவின் அரண்மனையில் சுவாமி விசாரணைக்காக நின்ற இடம் மிகவும் பரிசுத்தமானதாக ஆக்கப்பட்டிருந்தது. சுவாமி பிறந்த ஆறாம் மாதம் மஹா ஏறோது மன்னன் மாசில்லா குழந்தைகளை  கொல்ல     உத்திரவிட்டான் அல்லவா. அந்த உத்திரவு  ஜெருசலேமிலும் அமுல்படுத்தப்பட்டது. மூன்று வயதுக்குட்பட்ட அழகான ஆண்குழந்தைகளை ஏறோதின் அரண்மனையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு பெரும் பரிசுகள் கொடுக்கப்படும்  என்ற அரசாங்க அறிவிப்பால் ஜெருசலேமில் அதோணியாக்கோட்டைக்குள் பெரும் தாய்மார்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. சரியான முன்னேற்பாட்டின்படி தாய்மார்களும் குழந்தைகளும் தனித்தனியே பிரிக்கப்பட்டார்கள். கோட்டையின் உள்ளே தனி அறையில் மாசில்லாக்குழந்தைகள் சத்தம் வெளியே தெரியாதபடி கழத்தறுத்து கொல்லப்பட்டார்கள். வெகு நேரம் ஆகியும் தங்கள் குழந்தைகள் வராததால் சந்ததேகபட்ட ஒரு தாய் ரகசியமாக உள்ளே நுழைந்து பார்க்கையில் அப்போதுதான் அவளுடைய குழந்தை கொல்லப்பட்டிருந்த கோரக்காட்ச்சியை கண்டு ஐய்யோ வென்றழுதாள். அவளோடு சேர்ந்து ஜெருசலேமே கதறியது.  ஜெருசலேமில் பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கதியைக்கண்டு பைத்தியம் பிடித்திருந்தது. கொல்லப்பட்ட அத்துனை குழந்தைகளையும் அங்கேயே போட்டுப்புதைத்தனர். ஆக பிலாத்துவின் முன்பாக விசாரணைக்கைதியாக யேசுநாதர் நின்ற இடம் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தங்களுடைய புனிதமான இரத்தத்தினால் மாசில்லாக்குழந்தைகளால் பரிசுத்தப்படுத்திய இடமாகும்.

திவ்ய யேசுவே…….. இரண்டாம் ஸ்தலம். கர்த்தரின்மீது சிலுவை சுமத்தப்படுகின்றது.

முதல் மனிதனாகிய ஆதாம் துவங்கி உலகம் முடியும்போது வாழும் கடைசி மனிதன் வரை செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற அனைத்து பாவங்களையும் இயேசு சுமக்க வேண்டி இருந்ததால் அந்த சிலுவையின் பாரம் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் உணர்ந்து பார்க்கலாம். ஆதாம் தான் இந்த பூமியில் வாழும் மட்டும் தான் உண்ட அந்த நன்மைதீமை அறியும் கனியின் விதையை தன்னுடனே வைத்திருந்தான். அவன் இறக்கும்போது அவன் வாயினுள் அந்த கனியின் விதையை வைத்து அவனோடு புதைத்தனர்.  பிதாப்பிதா நோவாவின் காலத்தில் ஆதாமின் எலும்புகள் எடுக்கப்பட்டு ஒரு கல் பெட்டியில் வைத்து கல்வாரி மலையில் அடக்கம் செய்யப்பட்டது. தீர்க்கதரிசி எசேக்கியேல் இந்த கல்வாரி மலையில் தவம் செய்து வரும்போது  ஒரு கல்பெட்டியிலிருந்த மண்டை ஓட்டை எடுத்தார். அப்போது ஒரு சம்மனசானவர் தோன்றி எசேக்கியெல் அது ஆதாமின் மண்டை ஓடு. அதை அந்த பெட்டியிலேயே வைத்துவிடு என்றார். அதிலிருந்துதான் இந்த கல்வாரிமலைக்கு மண்டைஓடு என பெயர் வந்திருக்க வேண்டும். இந்த மலையின் தோற்றமும் மண்டை ஓட்டை போலிருக்கும்.

      அந்த விதையினின்று பல தலைமுறைகள் கழித்து புறப்பட்டதுதான் திருச்சிலுவை மரம். மோயீசன் காலத்தில் இந்த மரத்தின் நெடும் கழிகள் பரிசுத்த வாக்குத்தத்தத்தின் பெட்டகத்தை தூக்கிச்செல்ல பயண்பட்டன. தாவீது அரசரின் விருப்பப்படி இந்த மரத்தின் ஒருபகுதி வெட்டிவரபட்டு அவர் கட்ட நினைத்திருந்த தேவாலயத்தில் பயன்படுத்த கொண்டு வந்தனர். ஆனால் ஆனால் அவர்காலத்தில் அவரால் தேவாலயம் கட்டப்படாததால் அவர் மகன் சாலமோன் காலத்தில் பயன்பட வைக்கப்பட்டது. ஆனால் மன்னர் சாலமோன் தான் தேவாலயம் கட்டும்வரை இந்த நெடுமரத்தை கெதரோன் நதிமீது பாலமாக போட்டிருந்தார். சாலமோனின் ஞானத்தை கேள்விப்பட்டு அவரை சந்திக்க ஷேபா நாட்டு இளவரசி  ஜெருசலம் வந்தபோது இந்த கெதரோன் நதிமீது போடப்பட்டிருந்த பாலத்தின் மரம்மீது கால் வைத்தபோது மூர்ச்சையானாள். பதறிப்போன சாலமோன் அவளின் மூர்ச்சை தெளிய வைத்து அதன் காரியத்தை அறியவிரும்பினார். அவள் இந்த மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையை மெசியா சுமந்து செல்வதை தான் கண்ட காட்ச்சியாக கூறினாள். சாலமோன் காலத்திற்க்கும் இயேசுவின் காலத்திற்க்கும் ஆயிரம் வருட வித்தியாசம்.. இதை அறிந்த சாலமோன் இந்த விஷயம் வெளியே தெரியாதபடி அந்த  மரப்பாலத்தை ஜெருசலேமின் நடுவில் அமைந்திருந்த பெத்தெஸ்தா குளத்தில் மூழ்கடித்து வைத்தார். இயேசுநாதரின் காலத்தில் பிலாத்துவின் ஆணைப்படி ஜெருசலேம் நகருக்கு தண்ணீர்கொண்டுவரும் திட்டமாக இந்த பெதெஸ்த்தா குளாத்தை சீர் செய்யும்போது  அதிலிருந்த ஆதாமின் மரம் வெளியே கொண்டு வரப்பட்டது. கடைசியில் இந்த மரமே இயேசு சிலுவை சுமந்து செல்லவும் அதிலே அறைந்துகொல்லப்படவும் தீர்மானிக்கப்பட்டது.

திவ்ய யேசுவே………

மூன்றாம் ஸ்தலம்…இயேசு முதல் விசை கீழே விழுகின்றார்.

கீழ்படியாமையே சகல பாவங்களுக்கும் தாய். இந்த பாவத்திலிருந்தே சகல பாவங்களும் உற்பத்தியாகின்றன. ஆகவே இயேசுநாதர் சகல பாவங்களுக்கும் தாயான கீழ்படியாமை என்னும் பாவத்திற்கு பரிகாரமாக முதல்விசை கீழே விழுகின்றார். ஆதாமை படைக்க அவர் தேர்ந்தெடுத்த மண் இருந்த இடமே சுவாமி முதல் விசைகீழே விழ  கடவுளால் தீர்மானிக்கப்பட்ட.  இடமாகும்  இந்தப்பழத்தின் கனியை உண்ணாதே என்றார் கடவுள், ஆனால் ஆதாம் கீழ்படியாமை என்னும் பாவத்தைக்கட்டிக்கொண்டு கடவுளின் கட்டளையை மீறி அந்த விலக்கப்பட்ட கனியை உண்டான். அதன்பலனாக சாவு இந்த உலகத்தில் வந்தது. மீண்டும்  அவனுக்கு வாழ்வுகொடுக்க கடவுள் மனிதாவதாரமாக இந்த உலகத்திற்கு வரவேண்டியதாயிற்று. சுவாமி இயேசுநாதர் 7 தலையான பாவங்களுக்கும் பரிகாரமாக 7 விசை கீழே விழுந்ததாக திருகாட்ச்சியாளர் புனித காத்தரின் எம்மரிக் என்னும் கன்னிகாஸ்த்ரீ கூறுகின்றார்.

திவ்ய யேசுவே….

நான்காம் ஸ்தலம்.

        இயேசுநாதர் தம் தாயாரை சந்திகின்றார். சிலுவையின் பாதையில் மிகவும் கொடுமையான காட்ச்சி இது. உடல் வேதனையைவிட மனவேதனை அதிகம் துன்பம் தரக்கூடியது. இத்தகைய துன்பத்தை ஸ்வாமியும் அவரது திருத்தாயாரும் அனுபவத்த இடம் இந்த சந்திப்பு நிகழ்ந்த இடம் .யாருக்கு யார் ஆறுதல் சொல்லக்கூடும். அவமான சின்னம் சிலுவையில் கொல்லப்படப்போகும் தன் மகனுக்கு தாயர் ஆறுதல் சொல்ல முடியுமோ, அல்லது தன் கண்முன்னே தன்னுடையதாயார் மனவேதனையால் இறந்துவிடக்கூடும் என்றறிந்த யேசுநாதர் அவருக்கு என்ன ஆறுதல் தரக்கூடும். ஆயினும் தான் இந்த உலகிற்கு வந்த காரியம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்றால் தன் நேசத்தாயார் உயிருடன் இருப்பது அவசியம் என்றுணர்ந்த ஸ்வாமி அவருக்கு தன் கண்களால் ஆறுதல் பல கூறினார். தன் தாயாருடன் அவருக்கு பேச அவகாசம் அளிக்கப்படவில்லை. ஆகவே ஒரு சில நிமிடங்கள் அவருக்கு ஆறுதல் அளிக்க விரும்பிய  யேசுநாதர் அவருக்காகவே தன் பாரமான சிலுவையை  ஒருமுறை கீழே போட்டு விழுந்தார். தன்மகனின் பரிதாப நிலையைக்கண்ட மாதா கண்ணீர்விட்டு அழுவதை தவிர  வேறொன்றும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் நூற்றுவர் தலைவன் காசியுஸ் கூறிய வார்த்தைகள் மாதாவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. இப்போது அழுது என்னம்மா பிரயோஜனம். உனக்கு பிள்ளையை வளர்க்கத்தெரியவில்லை. அவனை சரியான முறையில் வளர்த்திருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை உனக்கு வந்திருக்குமோ என்றான். அடப்பாவி…எனக்கா பிள்ளை வளர்க்கத்தெரியாது.. என்னை யார் என்று நினைத்துக்கொண்டாய்.. என் மகன் யேசுவை யார் என்று நினைத்துக்கொண்டாய் அட  நீசப்பிறவியே என்பன போன்ற கேள்விகள் மாதாவின் மனதில் எழுந்திருக்க வேண்டும். ஆனால் அடக்கம் கருதி இப்படியோரு கேள்வியை அவர் கேட்க்கவில்லை.    அப்படி அவர் கேட்டிருந்தால் அது பரமபிதாவின் சித்தத்திற்கு எதிராக இருந்திருக்கும். மேலும் இதுபோன்ற நிந்தை அவமானங்களை அவர்கள் அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனால்  அவனை இயேசுநாதர் பார்த்த ஒரு பார்வையால் அந்த நூற்றுவர் தலைவன் காஸியஸின் சப்த்த நாடியும் அடங்கிவிட்டது. பெண்ணோடு சேர்ந்து ஆணும் பாவம் செய்ததால்  ஆணுக்கு இயேசுநாதரும் பெண்ணுக்கு தேவத்தாயாரும் பாவப்பரிகாரம் செய்ய இந்த ஸ்த்தலத்தை தேர்ந்துகொண்டு தங்கள் துயரத்தை பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.

 திவ்ய இயேசுவே……

ஐந்தாம் ஸ்தலம்…. சிலுவையை சுமக்க சீரானே என்னும் ஊரை சேர்ந்த் சீமோன் என்பவர் உதவி செய்கின்றார். சிலுவையின் பாரத்தாலும் கற்றூணில் கட்டுண்டு பட்ட அடிகளாலும் பெரிதும் ஏற்பட்ட இரத்த இழப்பினால் ஏற்பட்ட சோர்வும் அவரை திக்கு முக்காட்டி விழவைப்பதைக்கண்ட நூற்றுவர்தலைவன் காஸியுஸ் நல்ல வாட்டசாட்டமான பலசாலியான ஒரு மனிதனைக்கண்டு இயேசுவின் சிலுவை தூக்கிவர பணித்தான்.அவன் பெயர் சிமோன். பிழைப்புதேடி ஜெருசலேம்  நகருக்கு வந்தவன். நான் ஏன் சிலுவை சுமக்க வேண்டும். நான் என்ன தவறு செய்தேன். ஏன் என்னை சிலுவை சுமக்க வைக்கிறீர்கள். என்னால் முடியாது என்றான். உனக்கு இஸ்ட்டம் இருக்கின்றதோ இல்லையோ. நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும். நீ சிலுவை சுமக்க வராவிட்டல் நீ ஓட்டிவந்திருக்கும் கழுதையை நான் இப்போதே கொண்றுவிடுவேன் . மேலும். அரசாங்க ஆணையை மீறிய குற்றத்திற்காக இருபது கசைஅடிகளையும்  நீ பெற வேண்டி இருக்கும். என்றான் காஸியுஸ்

      வேண்டாம் வேண்டாம்.. நான் சிலுவையை சுமக்க வருகின்றேன். என் பிள்ளைகள் ரூபசையும் அலெக்சாண்டரையும் என் உறவினர்வசம் ஒப்படைத்துவிட்டு இதோ வருகின்றேன் என்றான். திருச்சிலுவையை சீமோன் பெற்றுக்கொண்டவுடன் இயேசு சற்றே ஆறுதல் பெற்றவராய் அங்கிருந்த சுவற்றின் மீது தன் கரங்களை வைக்கவே அந்த சுவரும் அவருடைய கையின் சாயலை தனக்குள் பதித்துக்கொண்டது. இன்றளவும்  யேசுவின் கைபதித்த சாயலை அந்தக்கல்லில்  இதே ஸ்தலத்தில்  காணலாம்.

  ஆரம்பத்தில்  இயேசுவுக்கு இந்த சேவையை செய்ய அவனுக்கு மனம்  இல்லவிட்டாலும் போகப்போக இயேஸுவின்மேல் அவனுக்கு இனம்புறியாத பாசம் ஏற்பட்டு கல்வாரியின் கடைசிவரை அவருக்கு துனை நின்றான்.  என் சுமை எளிது. என் நுகம் இனிது என்பது  இப்படித்தான்போலும். இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் என்ன செய்வோம். என் நண்பா… என் துயரில் நீ எனக்கு துணை நிற்க என்னோடு வருவாயா..நான் அன்று சீரேனே ஊரனாகிய சீமோனுக்கு விடுத்த அதே அழைப்பை உனக்கும் கொடுகின்றேன்…உன் பதில் என்னா?

திவ்ய இயேசுவே…..

ஆறாம் ஸ்தலம்..   வெரோணிக்கம்மாவின் பரிவு.


 இந்த வெரோணிக்கம்மாள் என்பவர் யார்? இயேசுவுக்கும்  அவருக்கும் என்ன உறவு என்பன போன்ற கேள்விகள் பலராலும் எழுப்பப்படுகின்றன. உண்மையில் வெரோணிக்கம்மாள் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட அடைமொழிதான். அவரது உண்மையான பெயர் செராபி. அவரது கணவர் பெயர் சீரியாக்கு.  செராபியின் தகப்பனார் எலிசபெத்தம்மாளின் கணவர் சக்காரியாசின் உறவினர் . இதனால் இந்த செராபி இயேசுவின் தாயாரின் குடும்பத்தோடு மிகுந்த  நெருங்கிய ஐக்கியத்தோடு வாழ்ந்துவந்தவள். தன் வீட்டின் முற்றத்தில் இருந்த தெரு வழியே இயேசுநாதரின் சிலுவைப்பயணம் வருவதைக்கண்ட செராபி மிகுந்த விசனமுற்று இயேசுநாதருக்கு ஏதாவது ஒருவிதத்தில் ஆறுதல் அளிக்க முற்பட்டாள். அவரது திருமுகத்தை ஒரு துண்டால் துடைத்து அவருக்கு ப்ணிவிடை செய்தாள். இந்த சேவை இயேசுவுக்கு அந்த நேராத்தில் மிகுந்த ஆறுதலை அளித்தது. அவர் அந்த சேவைக்கு பரிசாக அந்த துண்டில் தன் திருமுக சாயலை பதித்துக்கொடுத்தார். அந்த துண்டு இப்போதும் வத்திக்காணில் காட்சிக்கு வைக்கப்பட்டிருகின்றது. இயேசுநாதருக்கு ஆறுதல் அளிக்கும் யாவருக்கும் அவரது பிரதிபலன் கிடைக்காமல் போகாது. என் நண்பா என் துயரில் நீ  எனக்கு ஆறுதல் அளிக்க வரமாட்டாயா?

திவ்ய சேசுவே…..

ஏழாம் ஸ்தலம்.   இயேசு இரண்டாம் விசை கீழே விழுகின்றார்.

என் மக்களே… இந்த உலகில் பாவம் செய்யாமல் இருப்பது முடியாத காரியம் என்று பலர் நினைகின்றார்கள். அது அப்படி அல்ல. நானும் இந்த உலகத்தில் மனிதனாகத்தானே வந்தேன். எனக்கும் உங்களனைவருக்கும் இருப்பதுபோன்ற வலி வேதனை சோதனை பசி பட்டிணி  எல்லாமே இருந்தது. ஆனால் நான் ஒருபோதும் பாவம் செய்ததில்லையே.. என்னால் இந்த மனிதாவதாரத்தில் பாவம் செய்யாமல் இருக்க முடியுமானால் உங்களாலும் ஏன் முடியாது. பணம், பெண்கள் அதிகாரம் நல்ல ஆரோக்கியம், வசதிகள் கௌரவங்கள் ஆகியவைகள்தான் நிஜான பயனுள்ள காரியங்கள் அவற்றைத்தான் தேடவேண்டும். எப்பாடுபட்டாவது இவற்றை அடைந்துகொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருகின்றீர்கள். ஒருவேளை பசிக்காக அந்த ஒருகிண்ணம் கஞ்சிக்காக் தன் சகோதர உரிமையை விற்றுப்போட்ட ஏசாயை விட மோசமான நீங்கள் உங்கள் சரீர ஆரோக்கியத்திற்கும் நித்திய இரட்ச்சன்யத்திற்கும் கேடான காரியங்களுக்காக உங்கள் ஆன்மாவையும் நித்திய நன்மைகளையும் விற்றுப்போடுகின்றீர்கள்.

  என் நண்பா  பாவம் என்னும் படுகுழியில் அந்த நாற்றமிகு படுகுழியில் விழுந்துவிட்டாயா. உன் கைகளையும் உன் மனத்தையும் என்னிடம் நீட்டி என்னை சரணடைந்துவிடு. அன்று நான் இரண்டாம் விசை சிலுவையோடு கீழே வீழ்ந்தபோது சிமியோன் என்னை தூக்கிவிட்டு எழுப்பியதுபோல நானும் உன்னை அந்த பாவம் என்னும் படுகுழியிலிருந்து தூக்கிவிடுவேன். என்னை அல்லாது உன்னை வேறு யாரலும் காப்பாற்ற முடியாது என்பதை நன்றாக நினைவில் கொள்.

திவ்ய யேசுவே..

எட்டாம் ஸ்தலம். ஜெருசலேம் பெண்களுக்கு ஆறுதல்.

சிலுவையின் பாதையில் இயேசு இந்த ஸ்த்தலதிற்கு வரும்போது அனேக பெண்கள் இயேசுவின் பாடுகளை காண சகிக்க முடியாமல் தங்கள்  வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஆண்டவரே இந்த மக்கள் நன்றி கொண்றவர்கள். நன்மைகள் பல செய்த உமக்கா இந்த கதி என்றழுதனர்,

அப்போது கூட்டத்திலிருந்த ஒரு பெண்  ரபேக்கா  பலத்த சப்த்தமிட்டு இவ்வாறு புலம்பினாள். “ ஓஓஓமனித புத்திரர்களுக்குள்ளே அதிக சௌந்தர்யமுள்ளவரே  உமக்கா இந்த கதி. …

வலிமை வாய்ந்த அசூரை அடித்த செங்கோல் உம்முடையதல்லவா..அந்த வலிமை வாய்ந்த செங்கோலைப்பிடித்திருந்த உமது கரங்கள் இப்போது சிலுவையை பிடித்துள்ளதேஉமக்கா இந்த கதி

என் நேசர் வெண்மையும் சிகப்புமாயிருந்து..ஆயிரம் பேர்களில் சிறந்தவர்.-அவர் சென்னி பத்தரைமாற்றுத்தங்கம் போல் விளங்கும் அந்த அழகு எங்கே?...

அவர் தலை முடியோ பனங்குருத்துப்போல் அழகும் காகம்போல் கருமையாயும் இருக்கும் அதில் இப்போது  முள்முடி அல்லவா சூட்டப்பட்டுள்ளது.. அந்த அழகு எங்கே?...

 அவர் கண்களோ பாலில் கழுவப்பட்டு மஹா நதிகளின் ஓரமாய் வாசம்பண்ணி மலை அருவி அருகே தங்கும் வெண்புறாவை நிகரும். அந்த அழகு எங்கே?

 அவர் கன்னங்களோ பரிமள வர்க்க பாத்திகள் போன்றவை.. இப்போது அவை அடிபட்டு அடிபட்டு கோரமாய் மாறிப்போனது ஏன்?.

அவர் உதடுகளோ தெளிந்த வெள்ளைப்போளத்தின் சாரத்தை வடியவிடும் லீலி மலர்கள் அவை எப்படி கிழிந்து போயின?

அவர் கரங்களோ சீராய் கடையப்பட்ட  சொக்கப்பச்சை பதித்த பொற்கரங்களேயாம் அவை இப்போது சக்தியிழந்து போனதெப்படி?

அவர் மார்போ இந்திர நீல இரத்தினங்கள் பதித்த யானைத்தந்தமேயாம்.

 அவர் கால்களோ பசும்பொன் பாதங்களின்மேல் நிருத்தப்பட்ட பளிங்குத்தூணுக்கு ஒப்பானவை. அவை இப்போது சக்தி இழந்து தள்ளாடுவதேன்?

அவர் முகத்தைக்கண்டால் லீபான் மலையை காண்பதுபோலும் அவர் நிற்கக்கண்டால் சிறந்த கேதுரு மரத்தை காண்பதுபோலும் இருக்குமே அய்யோ என் ஆண்டவரின் தோற்றம் முற்றிலும் மாறிப்போனதெப்படி?

 அவர் குரளோசை இனிமையானது. என் நேசர் முற்றிலும் விரும்பத்தக்கவரே . ஐய்யோ ஐயையோஎன் நேசரின் குரல் முற்றிலும் அடங்கிப்போனது ஏன் என்று அழுது புலம்பித்தள்ளிவிட்டாள்.

அப்போது ஒரு பரிசேயன், அடியே ஜெருசலேம் குமார்த்திகளாஅவர் அழகை வர்ணித்தது போதும். அவர் முழு நிர்வாணத்தையும் மலைமீது காணலாம். மேலே வந்து பாருங்கடி என்று கொச்சையாய் தூஷித்தான்.

  அப்போது இயேசுநாதர்,ஜெருசலேம் பெண்களே..நீங்கள் இங்கிருக்க வேண்டாம்.கடவுள் கொலை செய்பவர் மத்தியில் நீங்கள் நிற்பதைவிட உங்கள் இல்லங்களுக்கு செல்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும். நீங்கள் எனக்காக அழவேண்டாம்..உங்கள் கணவர்களுக்காகவும் உங்கள் பிள்ளகளுக்காகவும் அழுங்கள். ஏனென்றால் இந்த நேரம் தண்டனை இல்லாமல் போகாது. பச்சை மரத்திற்கே இந்த கதி என்றால் பட்ட மரத்துக்கு என்ன ஆகும்? அந்நாளில் பிள்ளை இல்லாத தாய்மார்கள் பாக்கியவதிகள்.. அந்த நாளில் அழிபாட்டுக்குள் முதலில் விழுபவன் பாக்கியவான்.அவன் கொடுத்து வைத்தவன் என்று சொல்லப்படுவான். ஆகவே கொடுமை உங்கள் மேல் விழாதபடிக்கு உடனே வீடு திரும்புங்கள்.. உங்களை நான் ஆசீர்வதிக்கின்றேன். பரமபிதாவிடம் எனக்காக மன்றாடுங்கள் .போய் வாருங்கள். என்றார்.

ஒன்பதாம் ஸ்தலம்.  இயசு மூன்றாம் விசை கீழே விழுகின்றார் இன்று நாம் காணக்கூடிய இடங்கள் மூன்றாம் ஸ்தலம், ஏழாம் ஸ்தலம் மற்றும் ஒன்பதாம் ஸ்தலம் ஆகியவை இயேசு கீழே விழுந்ததான இடங்கள். மற்ற நாங்கு  கீழே விழுந்ததான ஸ்தலங்களும் போர்களினாலும் காலங்களின் மாற்றத்தாலும் அடையாளம் காண முடியாதபடி மாறிப்போயின. திருச்சபை தனது பாரம்பரியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதால் இப்போது மூன்று ஸ்தலங்க்ள் மட்டுமே சுவமி கீழே விழுந்ததான இடங்களாக உள்ளன.
           எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? எதிலே உனக்கு குறை வைத்தேன் ..எனக்கு பதில் கூறு. அன்று போஞ்சிபிலாத்து என்னிடம் உண்மையா அது என்ன … என்று கேட்டான். ஆனால் அதைப்பற்றி ஏதும் தெரிந்துகொள்ள விரும்பாமல் தனக்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் தன் தலையை ஆட்டிக்கொண்டும் தோல்களை ஆட்டிக்கொண்டும் தன் வேலையை கவனிக்கப்போய்விட்டான். இப்படித்தான் நீங்களும். ஓஓஓ நன்றி மறந்த நவீன காலத்து போஞ்சிபிலாத்துகளே இந்த இருபது நூற்றாண்டுகளில் என் போதனைகள் உங்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது. உங்களின் ஆத்தும இரட்ச்சண்யம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கின்றது. நீங்கள் செய்யும் பாவத்தைவிட என்னைக்குறித்து நீங்கள் செய்யும் அசட்டை என்னை உங்களுக்கு வேண்டாத விருந்தாளியாக்குகின்றது. நீங்கள் என்னை வேண்டாம் என்று ஒதுக்கும்போது என் ஆன்மா படும் வேதனை என்னை பலமுறை விழத்தாட்டுகின்றது. என் நண்பா… நீயாவது என்னிடம் ஆண்டவரே உம்மை நான் மிகவும் நேசிகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா? எனக்கு அது போதும்.

         திவ்ய யேசுவே….

பத்தாம் ஸ்தலம்.   இயேசு ஆடை களையப்படுகின்றார்.

 இந்த மனித ஜென்மத்தின் மிகவும் அதிகபட்ச அவமானம் மானபங்ககம். கல்வாரி மலையின் அடியிலிருந்து சிலுவை சாவுவரை அவமானமான மானபங்கத்துக்கு உள்ளாக்கபட்டார். தன் தாயின் முன்பாகவும்

அங்கே வந்திருந்த பெண்களின் முன்பாகவும் உலகத்துக்கு முன்பாகவும் மானபங்கப்பட்டார். இந்த மனித ஜென்மத்துக்கு இதைவிட கொடுமை வேறென்ன வேண்டும். ஆனாலும் மனித ஜென்மம் நிர்வாணகோலத்தில் செய்யும் வெட்க்கக்கேடான  மோகபாவம் விபச்சாரம் போன்ற பாவங்களுக்கு பரிகாரமாக இந்த மானபங்கத்தின் அவமானத்தை  பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார்.

     திவ்ய யேசுவே….

     


   பதினொன்றாம் ஸ்தலம்… இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார்.  இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது முதல் அதில் இறக்கும்வரை அவர் அடைந்த பாடுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவர் அடைந்த வேதனைகளை எழுதினால் 1000 பக்கமுள்ள புத்தகமாக எழுதினாலும் பற்றாது. அவர் தன் சிலுவையில் தானே படுத்துக்கொண்டார். தன்னைக்கொல்லப்போகும் கொலைகாரர்கள் சொன்னபடி எல்லாம் செய்தார்..முதலில் இடது கரம் சிலுவையில் அறையப்பட்டது. அந்த முதல் அடியில் அவர் எழுப்பிய அலரல் அவரது தாயாருக்கு நெஞ்சுவலியை ஏற்படுத்தியது. தன் நெஞ்சத்தில் தன் கரத்தை வைத்து அழுத்திப்பிடித்துக்கொண்ட காட்ச்சியை கண்ட இயேசு அதுமுதல் கதறி அழும் குரலை வெளிப்படுத்தவில்லை. முக்கி முனகி அந்த வலியை அவர் ஏற்றுக்கொண்டார். இடதுகரம் சிலுவையில் அறையப்பட்டதால் மணிக்கட்டு நரம்புகள் அறுந்துபோக இடதுகை தன் கட்டுப்பாட்டை இழந்தது அதனால் வலதுகரத்தின்  நரம்புகளும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் அதனால் வலதுகரத்தை அதற்கான இடத்தில் பொருத்தவும் முடியாமல் போகவே இரண்டு குடிகார ரோமைய வீரர்கள் அவரது மணிக்கட்டை ஒரு முறட்டு கயிற்றால் கட்டி தங்கள் கால்களால் இயேசுவின் பரிசுத்த திருமார்பில்  நன்றாக ஊன்றிகொண்டு இழுக்கவே அது மலுக் என்னும் சத்தத்துடன் மூட்டு நழுவி போனது. இவ்விதமே கால் நரம்புகளுமே இழுத்துக்கொண்டதால் அவற்றை அதன் இடத்தில் பொருத்த முடியாமல் போகவே ஒரு நீண்ட இரும்பு ஆணியால் அவர் இரண்டு கால்களையும் சேர்த்து சிலுவையில் அறைந்தார்கள். கால்களை தாங்கும் ஒரு மரக்கட்டை உடைந்துபோனதால் வெறுமனே அவரது கால்கள் ஆணியால் துளைக்கப்பட்டு ஸ்வாமி அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. இந்த சடங்கு எல்லாம் நிறைவேறிய பிறகு சிலுவை உயர்த்தப்பட்டு அதற்கான குழியில் நிலையாக நிறுத்தப்பட்டது. இதற்கென சில ஆப்புக்கட்டைகள் சிலுவையினடியில் குழியில் செறுகப்பட்டன. எனவே சிலுவையை நிலைநிறுத்த பல அடிகள்  சிலுவையோடு சேர்த்து அடிக்கப்பட்டதால் அவரது சரீரம் பலமுறை குலுங்கி வார்த்தையில் சொல்லமுடியாத வேதனையை ஸ்வாமிக்கு ஏற்படுத்தின. இந்த நேரம்  ஜெருசலேமில் தேவாலயத்தில் பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதற்கான ஊதுகுழல் ஊதப்பட்டது.  அன்று உண்மையான திருப்பலி  இயேசுநாதரே தன்னை   உலகின் பாவம்போக்கும் பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை அன்றைய யூதர்கள்  அறிந்திருக்க  வாய்பில்லை.

    திவ்ய யேசுவே..

  பன்னிரெண்டாம் ஸ்தலம்……இயேசு சிலுவையில் மரிக்கின்றார். முதல் மனிதன் ஆதாம் காலத்தில் அன்று காயீன் ஆபேலை கொலை செய்தான். ஆபேல் சிந்திய இரத்தம் அவன் மரித்த இடத்தை நிரப்பியத. அன்று ஆபேல் இரத்தம் சிந்தி மரித்த அதே இடத்தில்தான் திருச்சிலுவையும் நாட்டப்பட்டு                  இயேசு நாதரின் இரத்தமும் சிந்தப்பட்டு அவரும் அந்த சிலுவையில் மரித்தார்.  மாசற்ற ஆபேலை கொண்றது கொடியவனான காயீன் என்றால் மாசற்ற  திவ்ய இயேசுவை கொல்வது  நவீன காலத்திய  காயீன்களான நாம்தான்.

 என் மகனே நீ மனம் திரும்பவேண்டுமென்றால் நான் மீண்டும்கூட ஒருமுறை உனக்காக சிலுவை மரணம் அடைய தயார் என்கின்றார் இயேசுநாதர்.

இயேசுநாதரின் பிறப்பும், வாழ்வும் மரணமும் யாவும்  முன்குறிக்கப்பட்டவைகளே. தான் இந்த உலகத்துக்கு  வந்த காரியம்  முடிந்தது என்றுணர்ந்த இயேசுநாதர் தன் கடைசி நேரத்திலும் தாம் இந்த மனுமக்கள் மீது கொண்டிருந்த அன்பினால் தன் தாயாரை நோக்கி இதோ உம் மகன் என்றதன் மூலம் அவர் நம் அனைவருக்கும் தாயாரானார்.

எல்லாம் முடிந்தது என்று கூறி அந்த நேரத்திலும் அவர் தம்  தாயாருக்கு தம் அன்பை தெரிவிக்கும் பொருட்டு அம்மா என்று கூறி உயிர்விட்டார். அங்கிருந்தவர்கள் இயேசுநாதர் தன் வேதனையில் ஏதேதோ சப்த்தம் கொடுகின்றார் என்றனர். இந்த பூமியும்  இயேசுவுக்கு இது அநியானமான மரணதண்டனை என்று தன் கண்டனத்தை தெரிவிப்பதுபோல் இடியாய் இடித்து பூமி பிளந்தது. அந்த பிளவு சிலுவையின் அடியிலிருந்து அந்த கல்வாரி மலையின் அடிவரை தோன்றியது. இயேசுவின் உடலிலிருந்து வழிந்து ஓடிய அவருடைய திரு இரத்தம் பூமிபிளப்பின் வழியாக உள்ளே சென்று அங்கிருந்த ஆதாமின் எலும்புகளை நனைத்தது. ஆதாமுக்கும் அவன் வழித்தோன்றல்களூக்கும் இயேசுவின் இரத்தம் சாப விமோச்சனத்தை கொடுத்தது

    நூற்றுவர்தலைவன் காஷியுஸ் இயேசு அதற்குள் இறந்துவிட்டர் என்பதை உறுதிப்படுத்த அவரது மார்பை தன் ஈட்டியால் குத்திப்பிளக்கவே அதிலிருந்து வெளிவந்த ஒரு சொட்டு இரத்தம் அவனுடய ஒரு குருட்டுக்கண்மீது விழவே அவன் பார்வைபெற்றான். உண்மையில் இவர் இறைமகன் என்று கூறி இயேசுவின் தெய்வீகத்துக்கு சாட்சியம் கொடுத்தான். அதன்பலன் அவன் ஒரு கிறிஸ்த்துவன் ஆனான்  இப்போது அவர் பெயர்  புனித லொஞ்சினுஸ். குருடர்களுக்கு பாதுகாவலர்.

      திவ்ய யேசுவே….

பதிமூன்றாவது ஸ்தலம்….. வியாகுல மாதா….. வியாகுலத்தாயாரின் வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தான் அருமையாகப்பெற்ற ஒரே மகன் 33 வருடங்களாய் கண்ணும் கருத்துமாய் வளர்த்தமகன் இன்று சடலமாக தன் மடிமீது வ்ளர்த்தப்பட்டிருகின்றார் என்ற நிலையில் ஒரு தாயின் மனநிலை எவ்வாறு துடிதுடிக்கும் என்பதை யாரால் விவரிக்கக்கூடும். தான் அன்று கபிரியேல் சம்மனசானவருக்கு இது கடவுளின் சித்தமானால் அப்படியே ஆகட்டும் என்று கூறிய வார்த்தைக்கு தான் இன்று கொடுத்துள்ள விலை எவ்வளவு பெரிது. இந்த நினைவு வந்தவுடன் தேவத்தயாரின் மனதில் தான் இயேசுவை கருத்தாங்கியது முதல் இப்போது மரித்து தன் மீது கிடத்தப்பட்டிருக்கும் நேரம் வரை சுவாமி வாழ்ந்த 33 வருட வாழ்க்கை ஒரு திரைப்படம்போல்  ஓடி மறைந்தது. அப்போதுதான் புதிதாய் பிறந்த குழந்தையை வாரி அணைத்து முத்தமிடும் தாய் போல் அப்போதுதன் மரித்திருந்த இயேசுவை வாரி எடுத்து முத்தமழையாக பொழிந்தார் தேவத்தயார். அவர் மனத்தில் என்னென்ன  வியாகுலங்கள் தோன்றி மறைந்தன என்று அவரது திருக்குமாரனைத்தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது.

 திவிய யேசுவே……

 பதினாங்காம் ஸ்த்தலம் …. இயேசுவின் அடக்கம்.


    பறவைகளுக்கோ கூடுகள் உண்டு.. நரிகளுக்கு வலைகள் உண்டு. ஆனால் மனுமகனுக்கோ தலை சாய்க்கவும் இடம் இல்லை. இந்த உலகத்தையே படைத்த தேவனுக்கு தலை வைத்துப்படுக்க தனக்கென ஒரு இடமும் இல்லை. மரித்த யேசுநாதருக்கு சொந்தமாக ஒரு கல்லறையும் இல்லை. அவருடைய சீடர்  அரிமத்தியா சூசை என்பவர் தனக்கென வெட்டி வைத்திருந்த  புதிய கல்லறை குகையில் யேசுவின் மரித்த திருவுடலை வைப்பதற்கு  சம்மதித்தார். ஆனால் மாதா தன் திருக்குமாரனை அடக்கம் செய்ய விட மனம் இல்லாதிருந்தார்..

 போதும் அம்மா …. தயவு செய்து உத்திரவு கொடுங்கள். உங்கள் மகனின் திருவுடலுக்கு அடக்கம் செய்யும் வேலைகள் இருகின்றன .ஏற்கனவே இருட்டிவருகின்றது. எங்களோடு ஒததுழையுங்கள் அம்மா. என்றார் அரிமத்தியா சூசை.. ஐய்யா சூசையே எனக்கு ஒரு உதவி செய்வீரா?? தயவு செய்து என்னையும் என் மகனோடு சேர்த்து இந்த குகையில்  வைத்துவிடுங்கள்.  உங்களுக்கு புண்ணியமாக  போகட்டும். அம்மா அப்படி செய்யக்கூடாது அதற்கு சட்டத்தில் இடமுமில்லை…. சம்பிரதாயமும் இல்லை. அருளப்பா எல்லாம்  சட்டப்படியும் சம்பிரதாயப்படியும் தான் நடந்ததோ  என் மகன் யாருக்கு என்ன தீங்கு செய்தார்…ஏன் அவரை கொண்றார்கள்…

அரிமத்தியா சூசையே    நிக்கோதோமுவே  நீங்கள் எல்லாம் யூத சங்கத்தில் தலைபொருப்பில் இருந்துகொண்டு என்ன பிரயோஜனம்.. ஏன் என் மகனை காப்பாற்ற உங்களால் முடியவில்லை.?     அன்று மாதாவின் மனநிலையில் அவர் கேட்ட கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல இயலவில்லை. ஆனால் காரியங்கள் நடக்கவேண்டுமே.

 அம்மா  இனிமேல் நீங்களே எங்களின் தாயும் வழிகாட்டியும் ஆவீர்கள் உங்கள் திருமகன் மரித்து மூன்றாம் நாள் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்து வருவார் என்பது உண்மைதானே… அப்போது நீங்கள்தானே  அவரை முன்நின்று வரவேற்க முதலில் வரவேண்டும். தயவுசெய்து வாருங்கள் அம்மா என்ற தேறுதல் வார்த்தைகளால் மாதாவை சமாதானப்படுத்தியபின் இயேசுவின் திரு உடலுக்கு யூத முறைப்படி சடங்கு ஆச்சாரங்கள் செய்து அடக்கம் செய்தார்கள். இயேசுவின் திருக்கல்லரை பேராலயம் அமைந்துள்ள இடம்தான் இந்த உலகத்தின் மையம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் இயேசுநாதர் உலகத்துக்கே பொதுவானவர் என்பது உறுதியாகின்றது.

திவ்ய இயேசுவே