Sunday, July 22, 2018

என்ரோகில் எனப்படும் சதி மலை.


என்ரோகில் எனப்படும் சதி மலை.



இஸ்ரேல் தேசத்தின் வரலாற்றில் இந்த என்ரோகில் என்னும் இந்த இடத்திற்கு ஒரு தனி சிறப்பான இடம் உண்டு. இந்த இடம் பல சதிகளைக்கண்டதால் இந்த இடமே சதிமலை எனப்படுகின்றது. காரனம் இல்லாமல் இல்லை. தாவீதரசரின் மகன் அப்சலோம் தன் தந்தைக்கு எதிராக கலகம் செய்ததினால் ஜோனத்தானும் அஹிமாசும் நாட்டுக்குள் நுழைய முடியவில்லை..  இருப்பினும் அவர்களைப்பற்றிய தகவல் அறியவேண்டி இருந்ததால் ஒரு பெண் உளவாளி தாவீது அரசரால் நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் வழியாகவே இவர்கள் என்ரோகில்லில்  தங்கியிருப்பது  கண்டறியப்பட்டது. இவளே தாவீதரசருக்கும் ஜோனத்தானுக்கும் தொடர்பாக இருந்தாள்.சில காலத்திற்குப்பிறகு  நடந்த போரின்போது அப்சலோம் கொல்லப்பட்டதால் தாவீதரசருக்குப்பிறகு அவருடைய சிம்மாசனம் யாருக்கு என்ற போட்டியில் அவரது வாரிசுகளில் ஒருவனாகிய அதோனிஜா கிளர்ந்தெழுந்தான். தனக்கு ஆதரவான அரச பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி தாவீதின் அடுத்த வாரிசு பதவி தனக்கே கிடைக்கும்படி கேட்டுக்கொண்டு ஒரு நாளில் பாம்புக்கல் என்னும் இடத்தில் ஒரு பெரும் விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்து ஒரு பெரும் பலியும் ஒப்புக்கொடுத்தான். அந்த இன்றளவும் சோஹிலாத் ( ZOHILATH ) என்றழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு நீரூற்றிற்க்கு நெஹெமியாவின் கிணறு என்றும்  மேரியின் நீரூற்று என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த விஷயம் உடனே தாவீதின் உளவாளியான அந்தப்பெண் வழியாக தாவீதரசருக்கு தெரியப்படுத்தப்பட்டது.  உடனே சுதாரித்துக்கொண்ட ராணி பெத்ஷீபா தாவீதரசருக்கு கொடுத்த நெருக்கடியில் அவர் உடனே சாலமோனுக்கு அந்த இரவிலேயே இளவரச பட்டம் சூட்டினார். உடனே அரச தோட்டத்தில் கிஹூன்  என்னும் நீறூற்றுக்கு அருகில் பிரம்மாண்டமான விதத்தில்ஒருபெரும் விருந்து நடந்தது. இளவரசர் சாலமோன் வாழ்க என்னும் வாழ்த்தொலி கேட்டது. அவ்வளவுதான். தனக்கு இளவரசு பட்டம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சந்தோஷமாக இருந்த  அதோனிஜாவின் எண்ணத்தில் மண் விழுந்தது. இப்படியாக இந்த என்ரோகில் அருகில் நடந்த அரச சதி முறியடிக்கப்பட்டது.
       இயேசுநாதரின் காலத்தில் இந்த என்ரோகில் என்னுமிடத்தில் சில ருசிகரமான சம்பவங்களும் நடைபெற்றன. அவற்றில் ஒன்றுதான் மரியாளின் கிணறு.  மிகப்பழமையான காலத்தில் இந்த கிணறு நெஹேமியாவின் கிணறு என்றும் யோபுவின் கிணறு என்றும் அழைக்கப்பட்டது.
தேவத்தாயார் தனது  பேறுகாலத்தில் பெத்லஹேம் நகருக்கு செல்ல வேண்டி நேர்ந்தது. இந்த நெஹேமியாவின் கிணற்றருகில் வந்த உடன் அவருக்கும் அவர் கணவர் யேசேப்புக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்டது. ஆனால் கிணறு ஆழமாக இருந்ததால் ஒரு கயிறு மற்றும் வாளி இல்லாமல் தண்ணீர் எடுக்க முடியாததால் யோசேப்பு அருகில் இருந்த ஒரு வீட்டில் தனக்கும் தன் நிறைமாத கர்பிணியான தன் மனைவிக்குமாக தண்ணீர் கேட்டார். ஆனால் அந்த வீட்டு எஜமானி அவரை கொடும் சொற்களால் துறத்தினாலள். ஆனால் அவள் மருமகள் அவருக்கு தயவாய் நடந்துகொண்டாள். அவருக்கு ஒரு கயிறும் வாளியும் தந்து உதவினாள். நடந்ததை அறிந்த தேவதாயார் மிகவும் வருந்தினார். தங்களால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பதிற்காக அந்த மருமகளிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அவரிடமே அந்த வாளியையும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதற்கு நன்றியும் கூறினார்.
    பிறகு கடவுளுக்கு தங்களுக்கு தண்ணீர் தாகம் தீர்க்க ஒரு வேண்டுதளையும் வைத்தார்.. அப்போது உடனே ஒரு பெரும் புதுமை நிகழ்ந்தது. பெரும் ஆழமாக இருந்த கிணற்றின் நீர் மட்டம் மளமளவென்று உயர்ந்தது. அது தரைமட்டம் வரை உயர்ந்தது. இந்த அதிசயத்தைக்கண்ட அந்த மருமகள் பெரும் ஆச்சர்யம் அடைந்து மாதாவின் கால்களை பிடித்துக்கொண்டு தன் மாமியாரை மன்னிக்கும்படியாக மன்றாடினாள். மாதாவும் தான் எதையும் மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அவள் அழுவதை நிறுத்தவே இல்லை. இந்த  நிகழ்வு இன்றளவும் இங்குள்ள பாலஸ்தீனிய மக்களால் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றது. அதனால்தான் இந்த கிணறு மாதா மேரியின் கிணறு ( Virgin’s fountain…Ain Sitti Maryam ) என்று சொல்லப்பட்டு வருகின்றது. கதை இத்துடன் முடியவில்லை.
    இயேசுநாதரை சந்திக்க மூன்று அரசர்கள் பெத்லஹேமுக்கு வந்தார்கள் அல்லவா. அவர்கள் இந்த என்ரோகில் நகருக்கு வந்தபோது இங்கேதான் தங்கினார்கள். இந்த மாதாவின் கிணற்றருகில்தான் தங்கினார்கள். அந்த இரவு முழுவதும் அந்த மூன்று அரசர்களும் கடவுளை தொழுதுகொண்டே இருந்தனர். குழந்தை இயேசுவை கண்டு மீண்டும் தங்கள் தாய் நாடு திரும்பிச்செல்லும் வரை இந்தக்கிணற்றின் நீர் மட்டம் குறையவே இல்லை.
இயேசுநாதரின் மூன்றாம் வருட வேதபோதகத்தின்போது அவருடைய சீடன் யூதாஸ் தான் பொது நிதியிலிருந்து ஒதுக்கிவைத்திருந்த பணத்தில் இந்த இடத்தருகேதான் ஒரு நிலம் வாங்கி இருந்தான். இயேசுநாதரை காட்டிக்கொடுக்கும் சதி இந்த நிலத்திலிருந்துதான் உருவாகி இருந்தது. அன்றைய  தலைமை குருவாயிருந்த கைப்பாஸ் யூதாசை ரகசியமாக சந்தித்ததும் இங்கேதான். கைப்பாஸின் அடியாள் சீமோன் என்பவனும் யூதாசும் இந்த விஷயத்தில் நண்பர்கள் ஆயினர். இந்த சதிகாரர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்துக்கொள்வதும்  இந்த என்ரொகில் கிணற்றருகேதான்.
   ஆதிகாலத்தில் தாவீது ராஜாவின் காலத்தில் அவரை அகற்றிவிட்டு தானே அரசாளவேண்டுமென்ற ஆசையின் விளைவாக சதி தீட்டினான் அதோனிஜா. ஆனால் முடிவில் தன் சதி வெளிப்பட்டுவிட்டதால் அவன் கொல்லப்பட்டான்.
இதே நிலைதான் இப்போதும் ஏற்பட்டது. தாவீது அரசரின் வம்சாவளியில் வந்த யூதர்களின் அரசர் என்றழைக்கப்பட்ட யேசுநாதரை கொல்ல இப்போதும் இதே இடத்தில் மீண்டும்  ஒரு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. அதற்கான ஒரு ஒப்பந்தமும் போடப்படுகின்றது. முப்பது வெள்ளிக்காசுகளை கைபாஸிடமிருந்து யூதாஸ் பெற்றுக்கொண்டதும் இதே இடத்தில்தான்..
      என்ரோகெல் எனப்படும் இந்த இடம் ஜெருசலெமுக்கு தென் கிழக்கில் ஊருக்கு வெளியே அடுத்திருப்பதால் இரவில் ஜனசந்தடி என்பதே இராது என்பதினால் ரகசியமாக செய்யக்கூடிய வேலைகளுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாக அமைந்துவிட்டது. எனவேதான் யூதாஸ் தன் சதி வேலைகளுக்கு இந்த இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டான். யேசுநாதரின் மற்றைய சீடர்களுக்கு இவனைப்பற்றிய நடவடிக்கைகளை கண்டறிய முடியாமல் போனதற்கு இந்த இடமும் ஒரு காரணம். இந்த இடத்தில் யூதாசுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் இருப்பதும் யாருக்கும் தெரியாது. இந்த தோட்டத்தில் மிகவும் பெரிதான ஒரு பெரும் ஓக் மரமும் இருந்தது. அதற்கு பெரிதான எட்டு கிளைகளும் இருந்தன. யேசுநாதரைக்காட்டிக்கொடுத்த பிறகு யூதாசை அவன் மனது சும்மாவிடவில்லை. அதன் மனக்குத்துகளால் அவன் மிகவும் மனம் உடைந்தான்.இத்தனைக்கும் அவன் யேசுநாதரை அவரது சிலுவையின் பாடுகளின்போது இருமுறை சந்தித்தான்.அப்போதுகூட அவன் மனது மாறவில்லை. அவரது கனிவான பார்வைகூட அவனை மனம் மாறச்செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு சாத்தான் அவனை முற்றிலும் தன் வயப்படுத்தியிருந்தான். அவனுக்கு யாரையும் காணப்பிடிக்கவில்லை. ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் முடிவு வரை ஓடினான். எங்கு  ஓடியும் அவனுக்கு மனது சாந்தி அடையவில்லை. யேசுநாதரின் ராப்போஜன அறைக்குள்ளுமாக சென்றான். அங்கே தேவத்தயாரை சந்தித்தான். “ மகனே  என்னுடன் ஒரு நிமிடம் பேசு. உன் தாயாராக நாம் இருகின்றோம்.என்னை விட்டுப்போகாதே. மீண்டும் என் மகனிடம் திரும்பி போ. உனக்கு மனமிருந்தால் சொல். அவர் உன்னை மன்னிக்கும்படி நாம் பரிந்துரைப்போம் “ என்று அவன் மனது உருகும்படி பலவிதமான வார்த்தைகளால் அவனிடம் கூறினார். ஆனால் அனைத்தும் வீனாகின. அவன் அங்கிருந்து மீண்டும் ஓடத்துவங்கினான். ஓடி ஓடி அன் கால்கள் சலித்துப்போய் அவன் தோட்டத்திலிருந்த அந்த பெரிய ஓக் மரத்தின் கிளைகளில் ஒன்றில் தொக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இயேசுநாதரின் திரு உடல் மூன்று நாட்க்களாக கல்லறையில் இருந்ததென்றால் யூதாசின் உடலும் மூன்று நாட்க்களாக இந்த மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனால் அவன் உடல் அழுகி பெருத்துப்போய் மிகுந்த துர்நாற்றத்துடனிருந்தது. முடிவில் அந்த சவத்தின் பாரம் தாங்காமல் பொத்தென்று கீழே விழந்தது. உடனே அவன் வயிறு வெடித்து அவன் குடல் குந்தாணிகள் எல்லாம் வெளியே வந்து பார்க்கவே பயங்கரமாகவும் அருவருப்பாகவும் இருந்தபடியால் யாரும் அதன் அருகிலே செல்லவே பயந்தனர். முடிவில் எப்படியோ அவன் உடல் எடுத்து செல்லப்பட்டு கெதரோன் பள்ளத்தாக்கில் உள்ள குயவன் நிலத்தில்  (akladhamaa)  எனப்படும் இரத்த நிலத்தில் உள்ள ஒரு குகையில் அடக்கம்  செய்யப்பட்டது. இப்போதும் இந்த இடத்தில் அவனது கல்லறை உள்ளது.      Saint Onuphriusஎன்னும் ஒரு துறவியின் பெயரால் இந்த இடத்தில் ஒரு மடாலயம் உள்ளது
இயேசுநாதரின் மறைவுக்குப்பின் அவரது சகோதரன் முறையினரான புனித சின்ன யாகப்பர் ஜெருசலேமின் ஆயராக பதவி ஏற்றார். அப்போது நடந்த ஒரு வேதகலாபணையின்போது இவருக்கு யூதர்கள் கல்லால் அடித்துக்கொல்லும்படி உத்திரவிட்டனர். அதன்படி அவர் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டார். அவரது திரு உடலை ஊருக்கு வெளியே இழுத்துப்போட்டுச்சென்றனர்.  ஆனால் அவர் குற்றுயிராக இருந்ததை அவர்கள் அறியவில்லை. பலமணி நேரம் கழித்து அவர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
 இரவில் அவர் தடுமாறி வரும்போது இந்த என்ரோகில் அருகில் அவர் காணப்பட்டார். அங்கே துணி துவைத்துக்கொட்ண்டிருந்த ஒருவன் இவர் மரண தண்டனை விதிக்கபட்ட ஒரு  கைதி எனக்கண்டு தான் துணித்துவைக்க வைத்திருந்த  ஒரு நீண்ட கழியால் அவரது கழுத்திலும் தலையிலும் அடிமேல் அடியாக அடித்ததினால் அவர் மரணமடைந்தார். அவரைப்பின்பற்றி வந்த அவரது சீடர்கள் அவரது உடலை கைப்பற்றி நல்ல விதமாக அடக்கம் செய்தனர். இப்போது அவரது கல்லறை ஜெருசலேமின் மத்தியப்பகுதியில் உள்ள  அர்மீனீயர்களின் ஆதிக்கத்தில் உள்ள மடாலயத்தில் உள்ளது.இதே மடாலயத்தில் அவரது கல்லறையின் அருகிலேயே புனித சந்தியாகப்பர் எனப்படும் பெரிய யாக்கோபுவின் சிரசு புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது மற்ற எலும்புகள் அருளிக்கங்கள் ஸ்பெயின் தேசத்தில் கம்போஸ்த்தலா என்னுமிடத்தில் உள்ள சந்தியாகப்பர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
   இந்த என்ரோகில் நகருக்கு அருகில்தான் சிலுவான் என்னும் ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில்தான் பழம்பெரும் தீர்க்கதரிசி இசையாஸ் சதியால் மனாசே என்னும் மன்னனால் இரண்டாகப்பிளந்து கொல்லப்பட்டார்.அவரது சமாதியும் இதே கெதிரோன் பள்ளத்தாக்கில் சாலமோன் மன்னருடைய எகிப்த்திய  இளவரசியின் கல்லறைக்கு கீழாக இருக்கின்றது. இப்போது அவரது சமாதி இந்த சிலொவான் நகரில் உள்ளது. அவர் கொல்லப்பட்ட இடத்தில் இப்போது ஒரு மசூதி உள்ளது  இன்றைக்குள்ள என்ரொகில் நகரம் மிகவும் ஜன சந்தடிமிக்க நகரமாக மாறிவிட்டது. பழைய சரித்திரங்களை மறக்கடிக்கும் அளவுக்கு முற்றிலும் நாகரீகமான நகரமாக மாறி உள்ளது.
இஸ்ராயேல் தேசத்தின் இந்த என்ரோகில் நகரில் இன்னும் என்னென்ன சதிகள் நடந்ததோ அது ஆண்டவருக்குத்தான் வெளிச்சம். முற்றும்..