Thursday, September 5, 2019

“ இப்படியும் ஒரு குழந்தை யேசு “ “ Santo Bambino “


“ இப்படியும் ஒரு குழந்தை யேசு “ “ Santo Bambino “




 இந்த உலகில் இயேசுநாதர் மனிதனாக அவதரிக்கும்போது ரோமைய சாம்ராஜியத்தின் அதிபதியாக இருந்தவர் அகஸ்டஸ் சீசர் தான். இந்த சாம்ராஜிய மக்கள் தன்னை ஒரு கடவுளாக அங்கீகரிக்கபோகிறார்கள் என்று அவர் கேள்விப்பட்டபோது அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. எனவே அவர் மக்களின் பிரதிநிதியாக இருந்த சிபில் என்பவளை அழைத்து இதுபற்றி விசாரித்தார். கடவுளின் கிருபையால் அவளுக்கு ஒரு தீர்க்கதரிசனம் கிடைத்தது.

   அதாவது காலங்களைக்கடந்தவரும் காலங்களுக்கு அதிபதியுமானவர் இங்கே இறங்கிவரப்போகின்றார். இந்த இடம் பரலோகத்தின் வாசல் எனப்படும். எனவே அவருக்கு இந்த அரகோலி மலையின்மீது ஒரு கோயிலும் அதிலே ஒரு பலி பீடமும் கட்டுவீராக என்று இறைவாக்கு உரைத்தாள். இதே நேரத்தில் மாமன்னர் அகஸ்டச் சீசர் ஒரு காட்ச்சி கண்டார். பரலோகம் திறந்தது. மஹா பிரகாசம் அங்கே தோன்ற ஒரு பெண் தன் இடது கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்திருந்தாள். அவள் தலையை சுற்றி ஒரு நட்சத்திரக்கூட்டமே இருந்தது.  அவர் எண்ணியவரையில் பன்னிரெண்டு நட்சத்திரங்கள் அவள் சிரசை சுற்றி நின்றிருந்தன. அவள் தன்  கால்களை சந்திரன் மீது வைத்திருந்தாள். அவள் சூரியனை தன் ஆடையாக அணிந்திருந்தாள். அப்போது வானினின்று ஒரு குரல் “ இதுவே ஆண்டவனின் இல்லம் “ என்றது. அத்துடன் காட்ச்சி முடிவு பெற்றது.  
     அரசர்  சிபில் என்னும் அந்த தீர்க்கதரிசினியை அழைத்து “யார் அந்தப்பெண்? அவள் கையிலுள்ள குழந்தை யார்? இதைப்பற்றி எனக்கு நீ அறிவிக்கவேண்டும். நான் கண்ட அந்த காட்ச்சியின்படி அந்த மாதுக்கு இந்த அரக்கொல்லி மலையின் மீது ஒரு ஆலயம் அமைப்பேன்.அந்த ஆலயத்தில் அவள் ஆண் குழந்தைக்கும் ஒரு பலிபீடம் அமைப்பேன். இந்த இடத்தை நான் அதற்காக தேர்ந்தெடுத்திருக்கின்றேன். என்றார். அதற்கு சிபில்,” அரசே.நீவீர் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த இடம் ஜுபிடர் தேவனுக்கு உறியது. இந்த ஆலயத்தின் அடியில்தான்  நம் நாட்டின் பொற்காசுகள் அச்சடிக்கப்படுகின்றன. இந்த ஜூபிடர் கோயிலை இடித்தால் மக்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள்” என்றாள். அதற்கு சீசர்,” நான் சொன்னால் சொன்னதே.” என்றார். அவரது ஆணையின்படி மிகவும் அழகிய தேவாலயம் கட்டப்பட்டு அது தூய மரியாளின் பெயரால் The church of Santa Maria in Aracoeli “என்று அழைக்கப்பட்டு வருகின்றது.  இந்த தேவாலயம் அரக்கோலி என்னும் குன்றின் மீது கட்டப்பட்டுள்ளதால் இதைக்காண்பதற்கு 214 படிகள் மேலே ஏற வேண்டும். இப்போது கதைக்கு வருகின்றேன்.
   இந்த சரித்திர நிகழ்வு நடந்த வருடம் 15 ஆம் நூற்றாண்டு. அப்போது ஜெருசலேம் என்னும் புனித பூமியில் பல முக்கியமான தேவாலயங்கள் ஃபிரான்சீஸ்கன் துறவிகளால் நிர்வாகிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. ஒரு துறவி சுமார் ஒன்றரை அடி அளவிலான  ஒரு ஒலிவ மரக்கட்டையை ஒலிவ மலையில் அதாவது சுவாமி இரத்தவியர்வை வியர்த்ததும் அவரை காட்டிக்கொடுத்ததுமாகிய மலையில்  கண்டார். இந்த கட்டையை வைத்து என்ன சுரூபம் செய்யலாம் என்று அவர் நினைக்கும் போது அவர் மூளையில்  தோன்றியது குழந்தை இயேசுவின் உருவம்தான். பிறகு அவர் அந்த மரக்கட்டையில் குழந்தை யேசுவின் திருஉருவத்தை செதுக்கினார். அந்த ஒலிவ மரக்கட்டை சொரூபத்துக்கு உயிர் வந்ததுபோல சுருண்ட கேசமும் அழகிய கருவண்டு போன்ற கண்களும் சற்றே உப்பிய கண்ணங்களுமாயும் தீர்க்கமான நாசியும் அழகிய உதடுகளும் கொண்ட அந்த சொரூபத்தை பார்க்கும் யாவருக்கும் ஒரு கொழுக்மொழுக் குழந்தையைப்போல்  அதைத்தூக்கி கொஞ்சவேண்டும் என்னும் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கும்.
   ஸ்ஒரே நாளில் இந்த உருவத்தை செய்து முடிப்பதற்குள் பொழுது இருட்டிவிட்டது.சிற்பிக்கும் தூக்கம் வந்துவிடவே அடுத்த நாள் இந்த சிலைக்கு என்னமாதிரியான் வர்ணம் கொடுத்தால் சுரூபம் தத்ரூபமாக இருக்கும் என்ற நினைவிலேயே தூங்கிப்போனார். அப்போது ஒரு சம்மனசானவர் வந்து அந்த குழந்தை இயேசுவின் திருவுருவத்துக்கு அழகான வர்ணம் பூசி அதை அப்படியே விட்டுச்சென்றார்.. அடுத்த நாள் தான் எப்படி இந்த குழந்தை இயேசுவின்  சொரூபத்துக்கு வர்ணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ அதற்கும் மேலாக அதிரூபமாக இந்த சிற்பம் இருக்ககண்டு தன் சபையின் மடாதிபதியிடம் இதுபற்றிக்கூறினார். அவரும் வியந்து இது மனிதரால் செய்யப்பட்டும் கடவுளின் தூதரால் வர்ணம் பூசப்பட்டது என்பதை உணர்ந்து ரோமிலுள்ள தன் சபையின் மடாதிபதிக்கு தெரிவித்தார். அவர் அந்த சிலையை உடனே ரோமுக்கு தக்க பாதுகாப்புடன் அனுப்பிவைக்க கட்டளையிட்டார். அதன்படி இந்த அற்புத குழந்தை இயேசுவின் சொரூபம் கப்பலில் அனுப்பிக்கப்பட்டது. இந்த கப்பல் மத்தியதரைக் கடலை கடந்து இத்தாலியில் ரோமுக்கு பயணம் செய்யும்போது பல ஆபத்துகளை சந்தித்தது. கடலுக்கடியில் பெரும் பூகம்பமும் ஜலப்பிரலயமும் ஏற்பட்டது. எனவே கப்பலில் இருக்கும் வேண்டாத சாமான்களை எல்லாம் கடலில் தூக்கி எறியும்படி கப்பலின் தலைவன் உத்திரவிட்டான். இந்த உத்திரவுக்கு இந்த குழந்தை இயேசுவின் சொரூபமும் தப்பவில்லை..
   இங்கிருந்துதான் இந்த குழந்தை இயேசுவின் மகிமை வெளிப்பட்டது. கடலில் தூக்கி ஏறியப்பட்ட இந்த குழந்தை இயேசுவின் சொரூபம் படுத்தபடி இல்லாமல் நேராக எழுந்து நின்றது. அது கப்பலின் முன்னே மிகவும் கம்பீரமாக நின்றபடியே சென்றதைக்கண்ட அனைவரும்  பயத்தாலும் பெரும் உவகையினாலும் விவரிக்க முடியாத உணர்ச்சிகளை அடைந்தனர்.. இந்த பயணிகளின் கப்பலை மடக்கினால் நமக்கு பெரும் பணம் கிடைக்கும் என்ற நப்பாசையினால் இதைக்கொள்ளையடிக்க வந்தனர் கடற்கொள்ளையர்கள். அவ்வளவுதான் . அற்புத குழந்தை இயேசுவின் திருமுகம் இந்த கொள்ளையர்களைக்கண்டு  பயங்கரமாய் முறைத்தது. அதன் கண்கள் உக்கிரத்தால் சிவந்தன. கடலில் இந்த சூறாவளிக்காற்றில் ஒரு மரக்கட்டை பொம்மை தங்களை வெறித்து நோக்கும் பார்வையால் மிறண்டுபோனான் கொள்ளையர் தலைவன் . இருப்பினும் சற்றே தைரியத்தை  வரவழைத்துக்கொண்டு,” நான் எத்தனையோ போர்களை கண்டிருகின்றேன். யாரும் என் வாள் வீசுக்கு தப்பியதில்லை. இந்த மரக்கட்டை பொம்மை என்னை என்ன செய்துவிட முடியும். இந்த ஒல்லாந்தரை நீ யார் என்று நினைத்துக்கொண்டாய். ஆகவே வீரர்களே துணிந்து தாக்குங்கள்” என்று கட்டளை கொடுத்தான்.
(அக்காலத்தில் ஒல்லாந்தர் எனப்பட்டவன் கொடும் கடற்கொள்ளையனாய் விளங்கியவன். அவனது ஆதிக்கம் மத்திய தரைக்கடலின் எல்லையிலுள்ள எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. அவன் பெயரைகேட்டாலே கடலாடிகளுக்கு சிம்ம சொப்பனம்தான். இவனுடைய பெயர் பல தூர தேசங்களிலும் பரவி இருந்ததால் பல கடற்கொள்ளையர்கள் பல நாடுகளில் இவன் பெயரை வைத்தே தங்களின் கொள்ளை தொழிலில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.)
  அடுத்த நொடியில் கப்பலின் கொடி மரங்கள் அனைத்தும் தீப்பற்றி எரியத்துவங்கின. தன் கப்பல்கள் அனைத்திலும் தீ… அதுவும் எவ்வித காரணமும் இன்றி. அந்தக்காலங்களில் கப்பல் படைகள் போரில் ஈடுபடும்போது அதன் கொடிமரம் தீபிடித்தால் பெரும் அபசகுணமாக கருதப்படும். எனவே கடற்கொள்ளையன் இவ்வாறு நினைத்தான்.
ஆஹா இது ஏதோ மரக்கட்டை பொம்மையே அல்ல. இது ஏதோ தெய்வீக சக்த்தி வாய்ந்த சொரூபம். இந்த ஒல்லாந்தர் பாரம்பரியத்தில் வந்த யாவருக்கும் பயம் என்பதே கிடையாது. ஆனால் எனக்கு இப்போது பயம் ஏற்படுகின்றது. இந்த தெய்வீக சக்தியை  எதிர்த்து போரிடுவது தற்கொலைக்கு சமம் என்று எண்ணியவனாய் தன் சகாக்களுடன் அப்படியே பின்வாங்கிசென்றான்.
    இதேபோல பல சொகுசுக்கப்பல்கள் வியாபார போட்டியின் நிமித்தம் இந்த கப்பலை இடித்து மோதும்படியாக இதை நெருங்கி வந்தன. அவர்களுக்கும் குழந்தை இயேசுவின் உக்கிரமான பார்வை செலுத்தப்பட்டு அவர்களும் பயந்து பின்வாங்கிச்சென்றனர். பிறகு கடலின் சூறாவளி யாவும் அமைதிப்படுத்தப்பட்டன. ஆனாலும் யாருக்கும் இந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை மீண்டும் கப்பலில் ஏற்ற துணிவு வரவில்லை. ஒருவழியாக இந்த கப்பல் லிவொமோ “ the shores of Livorno.” என்னும் இடத்தை அடைந்தது. இந்த கப்பலின் வருகைகாக காத்திருந்த ஒரு பிரான்சீஸ்கன் துறவி ஒருவர் கப்பல் வருவதற்கும் முன்பே இந்த குழந்தை இயேசுவின் சுரூபம் கறைக்கு வர அதை அவர் அப்படியே வாரி அணைத்து எடுத்துச்சென்றார்.
    இந்த குழந்தை இயேசுவின் திரு உருவம்  அன்று அகஸ்டஸ் சீசரின் காட்ச்சியில் கண்ட அதே உருவம்தான் என்பதற்கு பல புதுமைகள் சாட்ச்சியாய் இருந்தபடியால் இதை மேலே குறிப்பிட்ட அரக்கொல்லி மலையின் மீது அமைந்துள்ள சாந்தா மரியா பேராலயத்தில் வைத்தனர். ஒவ்வொரு கிறிஸ்த்துமஸ் பெரு விழாவின்போதும் இந்த சாந்தா மரியா பேராலையத்தில் இந்த குழந்தை இயேசுவின் சொரூபத்துக்கு பெரும் மகிமையும் விழாவும் கொண்டாட்டமும் களைகொட்டும். இந்த வைபோகம்  மூன்று ராஜாக்கள் திருவிழாவரை நிகழும். கிறிஸ்த்துமஸ் திருவிழாவின்போது இந்த அற்புத குழந்தை இயேசுவின்  சொரூபம் உச்சி முதல் பாதம் வரை மிகுந்த மகிமை பிரதாபத்துடன் பெரும் விலை உயர்ந்த தங்க நகைகளாலும் வைரங்களாலும் அலங்கரிக்கப்படும். அப்போது இந்த குழந்தை இயேசுவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது. அலங்கரிக்கப்பட்ட இந்த குழந்தை இயேசுவின் திருசொரூபம் ஒரு மூடு துகிலால் மூடப்பட்டு இந்த தேவாலயத்தின் இடதுபுறமுள்ள  பலிபீடத்தில் பரோக்கி முறையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாதனத்தில் வைக்கப்படும். பிறகு கிறிஸ்த்துமஸ் விழிப்பு பூசையின்போது வானோர் பாடல் பாடப்படும்போது குழந்தை இயேசுவின் மூடுதுகில் அகற்றப்பட்டு முழு உருவமும் மிகப்பிரமாண்டமாய் காட்ச்சி அளிக்கும்.  பெரும் திரளான ரோமைய மக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் வந்து இந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை தொட்டு முத்தமிட்டு ஆராதனை செலுத்துவர்.
        ஏனெனில்  குழந்தை இயேசு குழந்தைகளை மிகவும் விரும்புவார் என்றும் தம் மக்கள் குழந்தை இயேசுவுக்கு  நண்பர்களாய் விளங்க வேண்டும் என்றும் அவர்கள் குழந்தைகளூக்கு கற்றுக்கொடுப்பதால் அவர்கள் பிற்காலத்தில் நல்ல கிறிஸ்த்துவர்களாய் வாழ்வார்கள் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை. பிறகு இந்த குழந்த இயேசுவின் சொரூபம் கிறிஸ்த்துமஸ் ஜோடனையில் மாதாவின் மடியில் வைக்கப்படும். ஜோடனையில் வைக்கப்பட்டுள்ள சொரூபங்கள் அனைத்தும் ஒரு ஆள் உயரதிற்கு குறையாதிருக்கும். திருவிழா முடிந்ததும் மீண்டும் அதனுடைய அரியாசனத்தில் வைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு நாள் இரவிலும் இந்த சொரூபம் வெளியே எடுக்கப்பட்டு துணியால் சுற்றப்பட்டு இந்த ஆலயத்தின் பாதுகாவலர்களாகிய ஃபிரான்சீஸ்கன் துறவிகளின் மடாலயத்தில் வைக்கப்படும். இந்த அற்புத குழந்தை இயேசுவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் வரும் விண்ணப்பங்கள்  சேகரிக்கப்பட்டு அவை படிக்கப்படாமலே தீயால் எரிக்கப்பட்டுவிடும். அங்கு வந்திருக்கும் விண்ணப்பங்களை குழந்தை இயேசு படித்துக்கொள்வார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.தான் இதற்கு காரணம். அதி தீவிரமாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி இந்த குழந்தை இயேசுவிடம் வந்து அவரின் திருமுகத்தை உற்றுப்பார்க்கும் பக்தர்களுக்கு சில வேலைகளில் ஒரு குறிப்பு காட்டப்படுகிறதாம். அதாவது குழந்தை இயேசுவின் முகத்தில் அவரது திரு உதடுகள் சிகப்பு நிறத்திற்கு மாறினால் அவரது வேண்டுதல் நிறைவேற்றப்படுவது உறுதி  என்றும் மாறாக வெண்மை நிறமாக மாறினால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படமாட்டாது என்றும், அந்த காரியம் குழந்தை இயேசுவுக்கு பிடித்தமானதல்ல என்றும் அர்த்தம். இவ்வாறக பலருக்கும் நேர்ந்திருப்பதாக இங்கு வரும் பக்த்தர்கள் தெரிவிக்கின்றார்கள்.
    சாந்தா மரியா பேராலயம் ஒரு பெரும் கலைப்பொக்கிஷம். இந்த ஆலயம் பரலோகத்தின் வாசல். இந்த கோயிலில் நுழையும்போது யாவருக்கும் சொர்க்கத்தில் நுழைவதைப்போல ஒரு உணர்வு ஏற்படும். இந்த தேவாலயத்தின் அழகை வார்த்தைகளின் வர்ணிக்க முடியாது. அகஸ்ட்டஸ் சீசரின் படுக்கை அறையில் இருந்த ஒரு பெரும் தூண் இங்கே பல தூண்களோடு நிற்கின்றது. இப்படியாக பல தூண்கள் .ஒவ்வொன்றுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. இந்த தேவாலயத்தினுள் பல கல்லறை தளங்கள் பளிங்கினால் பாவப்பட்டுள்ளன. இந்த தேவாலயத்துள் ரோமில் கிறிஸ்த்துவத்தை ஆட்சி மதமாக அறிவித்த கான்ஸ்டன்டைன் மன்னருடைய தாயார் புனித ஹெலினாவின்  கல்லறையும் அடக்கம்.
    சாந்தா மரியா பேராலயத்தில் ஒரு செவ்வக வடிவ மரத்தில் வரையப்பட்டுள்ள துயரமான முகத்தோற்றத்துடன் கூடிய மாதாவின் திரு உருவப்படம் மிகவும் பிரசித்தி பெற்றது.கி.பி. 594ல் பெரிய கிரகோரியார் என்னும் பரிசுத்த பிதா இந்த படத்தை மிகுந்த ஆடம்பரமாக ரோமிலுள்ள பிரதான வீதிகளில் பவனியாக கொண்டுவந்தார். அ[ப்போது அந்த நகரில் பரவி இருந்த பிளேக் என்னும் கொடும் நோய் உடனே நின்றது. இந்த தேவாலயத்தின் மேல் விதானத்தில் தங்க இழைகளாலும் தங்க அடுக்குகளாலும் வரையப்பட்டுள்ள ஒரு பெரும் வரைபடம் அனைவராலும் பாராட்டப்படும். ஜெபமாலை மாதாவின் ஜெயம் என்னும்படியாக ஒட்டாமானிய சுல்தான் கடற்படைகளுக்கும் பாப்பரசரின் கிறிஸ்த்தவ கப்பற்படைகளுக்கும் லெபாந்த்தோ என்னும் இடத்தில் கடலில் நடந்த போரில் பாப்பரசருடைய கிறிஸ்த்துவ கப்பல்படைகள் வென்றன. இந்த வெற்றியின் நினைவாக வரையப்பட்டதுதான் அந்த மேல் விதானத்தில் வரையப்பட்டுள்ள ஜெபமாலை மாதாவின் ஜெயம் என்னும் படம். இந்த போரின் விளைவாக தாங்கள் கொண்டுவந்திருந்த தங்கங்களை வைத்தே இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. ஆக இந்த சாந்த மரியா பேராலயம் பரலோகத்தின் வாசல் என்றாலும் ஆண்டவருடைய பீடம் என்றாலும் மிகையாகாது.