" மிகவும் வணக்கத்துக்குறிய ஆயர் புனித ஜனுவாரியுஸ் "
புனித ஜனுவாரியுஸ் என்னும் ஒரு ஆயர் ஒரு நல்ல ஆயன் என்றால் அது மிகையாகாது. அவர் இத்தாலியில் ஒரு உயிர்ந்த குடியில் அதாவது பத்ரீசியர் என்னும் குடும்பத்தில் பெனெவந்தூர் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்து அங்கேயே ஆயராக பணியாற்றினார் என்னும் தகவல்களே நமக்கு கிடைத்தன. பெனவெந்தூர் என்னும் நகர் நேபிள்ஸ் நகருக்கு
வட கிழக்கில் சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் மலைமீது அமைந்துள்ள ஒரு அழகான நகர். ரோமர்கள் காலத்திற்கு முன்பிருந்தே சுமார் 4000 ஆண்டு சரித்திரம் இந்த நகருக்கு உண்டு. இந்த நகர் ரோமர்களின் ஆதிக்கத்தில் வந்தபோது அதன் பெருமைக்கு எல்லையே இல்லை என்னும் அளவுக்கு இதன் புகழ் உயர்ந்தது. பிற்காலத்திய ரோமைய சக்கரவர்த்திகள்
பலர் இந்த நகருக்கு அடிக்கடி விஜயம் செய்ததால் ராணுவம், வியாபாரம், சுற்றுலா, கல்வி, கேள்வி, கலை போன்ற விஷயங்கள் இந்த நகரில் அதிகமாக பரவின.
இந்த பெனவெந்தூருக்கு அகஸ்ட்டஸ் சீசர். நீரோ மன்னர், செப்டிமுஸ் செவெருஸ், காமக்கிழத்தன் காலிகுலா போன்ற ரோமைய சக்கரவர்த்திகள் விஜயம் செய்திருப்பது இந்த நகரம் ரோமர்களுக்கு எவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லாமலேயே விளக்கும். ஆக இந்த பெனவெந்தூர் என்னும் பட்டிணம் அக்காலத்திய ரோமர்களுக்கு முக்கிய காலனியாய் விளங்கியது.
இந்த காலக்கட்டத்தில் அதாவது கொடுங்கோலன் தியோக்குலேசியன் [கி.பி.254-305] காலத்தில் அவனால் ரோமையரின் ஆதிக்கத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசாங்க ஆணை பல கிரிஸ்த்துவர்களின் உயிரை காவு கேட்டது. அதன்படி ரோமைக்குடிமகன் அல்லது குடிமகள் யாராக இருந்தாலும் அவர் எந்த நாட்டவராய்
இருந்தாலும் சமூகத்தில் அவர் எந்த அந்தஸ்த்தில் இருந்தாலும் ரோமைய சக்கரவர்த்திகளை கடவுளாக ஏற்று அவருக்கும் அவர் வணங்கும் ரோமைய தெய்வங்களுக்கும் தீபாராதணை காட்டி தங்கள் ராஜ விசுவாசத்தை அரச பிரதிநிகள் முன்பாக அறிக்கை இட்டு தங்கள் ரோமைய குடி உரிமையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மறுப்பவர்கள் ராஜ துரோகிகளாக
கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவர். அவர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். வெறும் இரண்டு வருடம் அளவே தியோகுலேசியனால் அந்த ரோமைய அதிகார நாற்காலியில் அமர முடிந்தது. அதற்குள் அவன் போட்ட ஆட்டம் வார்த்தையில் சொல்ல முடியாதவையாய் இருந்தன. அவன் போட்ட சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யூதர்களும் கிறிஸ்த்துவர்களும்தான். நம்மைத்தவிர வேறே கடவுள் உனக்கில்லாமல் போவதாக என்னும் பத்துக்கட்டளைகளில் முதல் கட்டளை அரசாங்க ஆணையை மீறச்சொன்னது. கடவுள் ஒருவரே..நம்மைத்தவிர வேறே கடவுள் உனகில்லாமல் போவதாக என்பது கடவுளே நமக்கு கொடுத்த கட்டளை ஆனதால் ரோமானிய சக்கரவர்த்திகளை கடவுளாக ஏற்க
கிறிஸ்த்துவர்களும் யூதர்களும் மறுத்தனர். எனவே அவர்கள் ரோமைய அரசரையும் அவர்தம் தெய்வங்களையும் கடவுளாக ஏற்று வணங்க மறுத்ததால் பலர் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர். அவர்தம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாதி ரோமைய அரசாங்க அதிகாரிகள் வீட்டுக்கும் மீதி அரசாங்க கஜானாவுக்கும் போனது.
இத்தகைய அபாயத்திலிருந்து தன்னையும் தன்னுடைய மந்தைகளைச்சேர்ந்த கிறிஸ்த்துவ மக்களையும் காக்க ஜெனுவாரியுஸ் என்னும் ஆயர் தன்னுடைய ஆட்ச்சிபீடமாகிய பெனவேந்தூரிலிருந்து வெகுதூரத்திலுள்ள நோலா என்னும் கடற்கரைப்பட்டிணத்திற்கு வந்தார். அவரோடு சேர்ந்து பல கிறிஸ்த்துவர்கள் குடும்பம் குடும்பமாக இந்தப்பட்டிணத்திற்கு குடி பெயர்ந்தனர். ஆனால் இங்கும் அவர்களைப்பிடித்திருந்த சனியன் விடவில்லை. ஆயர் ஜனுவாரியுஸ் தான் குருமானவராகப்பயிலும்போது தன்னுடைய நண்பராகிய மெசினியா
என்னும் கடற்கரைப்பட்டிணத்தை சேர்ந்த சோசியுஸ் என்னும் தியாக்கோனை தன்னுடனே வைத்திருந்தார். அவரோடு பச்சொல்லி நகரைச்சேர்ந்த ப்ரோக்குலஸ் என்னும் தியாக்கோனும் மேலும் யூதேக்கி மற்றும் அக்கூடியுஸ் என்னும் இரு இல்லறத்தாரும் நம் ஆயர் ஜனுவாரியுஸுக்கு உதவியாளர்களாய் பணிபுறிந்தனர். இவர்காள் யாரும் ஒருவருகொருவர் பக்தியிலும் பண்பிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். ஆயினும் நம் ஆயர் சோசியுஸை அதிகம் விரும்பினார் என்றால் அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. சோசியுஸ் என்னும் தியாக்கோன் ஞான வாசகம் படித்தாலும் சரி அல்லது பலி பூசையில் நிரூபம் படித்தாலும் சரி அப்படியே பக்தி பிரவாகமாய் மாறிவிடுவார். அப்போது பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்கிவருவார். அப்போது அவரது சிரசை சுற்றி ஒருவிதமான சிகப்பு நிற ஒளி வெள்ளம் பரவி இருப்பதை நம் ஆயர் ஜெனுவாரியுஸ் பல முறை கண்டு ஆச்சரியப்பட்டிருகின்றார். எனவே இந்த தியாக்கோன் சோசியுஸ் கூடிய விரைவில் ஒரு வேத சாட்ச்சியாக மரிக்கப்போகிரார் என்பது அவருக்கு நிச்சயமாக தெரிந்துவிட்டது. இத்தனைக்கும் நம் தியாக்கோன் சோசியுஸுக்கு வயது அப்போது முப்பதுதான். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது இந்த நகருக்கு திமோத்தி என்னும் ஒரு கொடுங்கோலன் ஆளுநனாக வரும்வரை.
இந்த கால கட்டத்தில் நேபிள்ஸ், நோலா, பெனெவெந்தூர் ஆகிய பட்டிணங்களுக்கு பெரிய மாநிலமான காம்பானியா என்னும்பட்டிணத்திற்கு ஆளுநராக வந்து சேர்ந்தான் ஒரு கொடுங்கோலன் திமோத்தி என்னும் பெயரில். அவனது ஆணையின்படி தியாக்கோன்கள் சோசியுஸ், ப்ராக்குலஸ்,தெசிடோரியுஸ், யூதேக்கி, அக்கூடியுஸ் ஆகிய அனைவரும்
கைது செய்யப்பட்டு பச்சொல்லி நகருக்கருகிலுள்ள சொல்பதாரா என்னும் ஒரு எரிமலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த ஒரு சிறைச்சாலையில் சங்கிலிகளால் கட்டப்பட்டு சொல்லமுடியாத ஆக்கினைகளுக்கு ஆட்ப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த சொல்பதாரா என்னும் எரிமலையின் உஷ்ணம் அந்த சிறைச்சாலையிலும் பரவி இருந்ததால் வேறு எந்த துன்பமும்
அவர்களுக்குத்தேவை இல்லை. வெறும் காலுடன் நிற்கவைக்கப்பட்டிருந்தாலே போதும் எரிமலையின் வெப்பப்பறைகள் இந்த சிறைச்சாலை வரையிலும் இருந்ததால் கால்களும் வெற்றுடம்பும் வெகு விரைவில் புண்னாகிவிடும். மேலும் கந்தக நாற்றமும் சகிக்கமுடியாதபடி இருக்கும். மூச்சுவிடுவதென்பது அனல்பரக்கும் அளவில் இருக்கும். எந்த மனிதருக்கும் இத்தகைய கொடுமை நேரக்கூடாது.
ஆனால் வேத சாட்ச்சிகளுக்கு நம் தேவன் இத்தகைய கொடுமைகளை அனுமதித்தார். வேதனையில்தான் அவர் சாதனை விளங்கும். அந்த கொடுமையான வேதனைகளில்தான் வேத சாட்ச்சிகளை அவர் திடப்படுத்தி அவர்தம் விசுவாசத்தை வெளிப்படுத்தச்செய்கிறார். இப்படியாகவே அவர்களை நம் தேவன் இவ்வுலகிலும் அவ்வுலகிலும் கணம் பண்ணுகிறார்.
காம்பானியா பட்டிணத்தின் ஆளுநராகப்பதவி ஏற்ற திமோத்தி ஒரு நாள் இந்த கொடுமையான சொல்பதாரா சிறைச்சாலைக்கு வந்தான். அங்கிருந்த சோசியுஸ் மற்றும் ப்ராக்குலஸ் ஆகியோருடன் அடைபட்டிருந்த மற்ற இருவரான யூதேக்கி, அக்கூடியுஸ் ஆகியவர்களின் தண்டனைகள் பற்றி அறியவந்தான். அப்போது சோசியுஸ் தன் சகாக்களுடன் " நான் என்
ஆண்டவரும் என் எஜமானனுமான ஜெனுவாரிஸை பார்க்க வேண்டுமென என் ஆன்மா மிகவும் ஆவலாக உள்ளது " என்றார். மற்றவர்கள் ," நண்பா...அது எப்படி சாத்தியம்...நாமோ சிறையில் உள்ளோம்... அவர் கடவுளின் கிருபையால் வெளியே பாதுகாப்பாய் இருகிறார்...மேலும் அவர் அங்கிருப்பது தான் அவருக்கும் நல்லது..நம் கிறிஸ்த்துவர்களுக்கும் நல்லது.
எனவே அவரைப்பார்க்க வேண்டும் என்னும் ஆசையை தயவு செய்து விட்டுவிடும் " என்றனர். அதற்கு சோசியுஸ்," இல்லை...கூடிய விரைவில் அவர் இங்கே வருவார்..நாம் அனைவரும் ஒன்றாகவே பரலோகம் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்றார்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக்கேட்ட வாயில் காப்போன் அதை அப்படியே ஆளுநன் திமோத்தியிடம் போட்டுக்கொடுத்தான். அப்போது அந்த ஆளுநன் திமோத்தி நம் ஆயர் ஜெனுவாரிசைப்பற்றி நன்றாக அறிந்து கொண்டான். அடுத்த நாள் காலை ஆளுநன் திமோத்தி அனுப்பிய
வீரன் ஒருவன் ஆயர் ஜனுவாரிஸை கைது செய்ய அவரது இல்லத்தில் நுழைந்தான்..நம் பெருமதிப்புக்குறிய ஆண்டவர் ஜெனுவாரிஸ் கைது செய்யப்பட்டு நோலா என்னும் ஊரில் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த நாள் ஆளுநன் மாளிகையில் திமோத்தி அமர்ந்திருக்க கைதுசெய்யப்பட்ட வணக்கத்திற்குறிய ஆண்டவர் ஜெனுவாரியுஸ் அவர்முன்னே விசாரணை கைதியாக நிற்க வைக்கப்பட்டிருந்தார்.
" ஜனுவாரியுஸ்...நீர் மதிப்புமிக்க உயர் குலத்தில் பிறந்து வந்திருகிறாய் என்பதாலும் சமுதாயத்தில் உயிர்ந்த அந்தஸ்த்தில் இருகிறாய் என்பதாலும் நானும் உமக்கு சில விஷயங்களில் சலுகை கொடுக்க வேண்டியவனாய் இருகிறேன். நீர் வணங்கும் கடவுளை விடுத்து நம் முன்னோர்கள் வணங்கிவந்த ரோமைய தெய்வங்களுக்கு தீப ஆராதனை கட்ட முடியுமா ..
முடியாதா..?"
" ஐய்யா ஆளுநர் அவர்களே..நான் ..நான் வணங்கும் யேசுவின் பிரதிநிதி. என்னிடம் பல இனத்தை சேர்ந்த கிறிஸ்த்துவ மக்கள் ஒப்படைக்கப்பட்டிருகிறார்கள். நான் அவர்களுக்கு நல்ல ஆயனாக மட்டுமே இருப்பேனே தவிர ஒருபோதும் துர் மாதிரிகையாக இருக்க மாட்டேன். என்னால் என் கடவுளுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய முடியாது. உம் முன்னோர் வணங்கிய துர் தேவர்களை ஒரு போதும் வணங்கவும் மாட்டேன்..அவர்களுக்கு கடவுளுக்குறிய தீபாராதணையும் காட்டவும் மாட்டேன்"
" ஜனுவாரியுஸ்...இதன் விளைவுகள் மிகவும் கொடுமையாக இருக்கும்... அந்த தண்டனைகளைக்கண்டு நீர் வனங்கும் அந்த யேசுநாதரேகூட அஞ்சி ஒளிவார்...தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்கும்"
" ஆளுநர் அவர்களே..நானும் உம்மை எச்சரிகிறேன்...வாழ்வின் அனைத்து உண்மையான சந்தோஷங்களையும் தொலைத்தவனே... என்றாவது ஒரு நாளாவது நீர் சந்தோஷமாக இருந்ததுண்டா? அல்லது இருக்கத்தான் முடியுமா.. இந்த அண்ட சராசரங்கைள்யும்...பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல எம் கடவுளை நீர் நிந்திக்கின்றாய்..
நீ கண்னிருந்தும் குருடனாய் வெகு சீகிரமே மாறிபோவாய். உன்னால் வாழ்விழந்தவர்கள் எத்தனை பேர்..கற்பிழந்தோர் எத்தனை பேர்? உன் அக்கிரமத்தினால் கட்டாயமாக பிற தெய்வங்களை கும்பிடவைத்து அவர்களின் ஆண்மாவை தீட்டுப்படுத்தியதால் கடவுளின் சாபம் உன் மேல் விழுகின்றது..இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீ உயிரோடு இருக்கப்போ
கிறாய்? நீதியுள்ள எம்தேவன் உன்னை கேட்க்கட்டும் போ"
" ஜனுவாரியுஸ்...உன் சாபம் என்னை ஒன்றும் பண்னாது...உன்னை என்ன செய்கிறேன் பார்... இவனைக்கொண்டுபோய் சிறையில் அடையுங்கள் " என்றான் திமோத்தி.
அந்த நோலா என்னும் ஊரில் இருந்த சிறையில் மீண்டும் அடைபட்டார் நம் ஆயர் ஜுனுவாரியுஸ். ஒரு மூன்று நாள் அளவாக இரவும் பகலும் தீ கொழுந்துவிட்டு எரியும்படி ஒரு பெரும் ராட்சத செங்கல்சூலை ஒன்று தயார் செய்யப்பட்டது. ஆளுநன் திமோத்தியின் உத்தரவுபடி நம் ஆயர் அந்த செங்கல் சூலையின் உள்ளே இறக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது ஆளுநன் திமோத்தி," ஜெனுவாரியுஸ்..தீ நன்றாக எரியூட்டப்பட்டிருகின்றது.
நன்றாக உன் கடவுளை கும்பிட்டுக்க்கொள்..இப்போது உள்ளே போகும் நீர் சாம்பலாகத்தான் வெளியே வருவாய்...போ" என்றார். அப்போது நம் ஆண்டவர் ஜெனுவாரியுஸ் கைகளை உயர்த்தி தன் கண்களை ஏறெடுத்து விண்னை நோக்கி," என் ஆண்டவரே , என் தேவனே...உம் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக... தேவரீர் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும்
நான் தகுதியானவன் அல்ல என்றாலும் நானும் தேவரீர் உம் மீது அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பது தேவரீருக்கும் தெரியும்.. தேவரீர் தம்மை அன்பு செய்பவர்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை தயவு செய்து மறவாதேயும்.. அன்று பாபிலோனில் உம் அன்பு மக்கள் அனானியாஸ். அசாரியாஸ், மிஷாயேல் ஆகியோர்களை தேவரீர் அன்று அந்த
கொடும் வெப்பம் மிகுந்த தீ சூலையிலிருந்து காத்தது போல என்னையும் காத்தருளும்...உம் எதிரிகள் கையிலிருந்து என்னை விடுவித்தருளும்..ஆனால் இது உம் விருப்பத்தை பொருத்தது. தேவரீர் என் மீது இரங்கும். உமது சித்தம் போல் எனக்கு ஆகட்டும்..பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அமேன்." என்று தன் கரங்களை குவித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த செங்கல் சூலையில் இறக்கப்பட்டார். அப்போது அவருடன் இரண்டு சம்மனசுகளும் அவரோடு கைகோர்த்துக்கொண்டு அந்த கொடும் வெப்பம் மிகுந்த சூலையில்
காணப்பட்டார்கள்.
ஒரு நாள் முழுவதும் அந்த செங்கல் சூலையில் நம் வனக்கத்துக்குறிய ஆண்டவர் ஜெனுவேரியுஸ் ஜெபித்துக்கொண்டும் யேசுவை ஆராதித்துக்கொண்டும் ஆண்டவருக்கு புகழ் பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதையும் கண்ட ரோமைய வீரர்கள் அன்று இரவு ஆளுநன் திமோத்தியுவை சந்தித்து," எம் எஜமானே.. நாங்கள் கூறப்போகும் செய்தியால் எங்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம். தங்களால் தண்டணை பெற்ற ஜெனுவாரியுஸ் அந்த வெப்பம் மிகுந்த செங்கல் சூலையில் இன்னும் உயிரோடு இருப்பதையும் யேசுவின் திருநாம கீர்த்தனைப்பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதையும் நாங்கள்கண்ணாறக்கண்டோம்...காதாரக்கேட்டோம்" என்றார்கள்.
" என்னா... ஜெனுவாரியுஸ் இன்னுமா உயிரோடு இருகிறான்...நன்றாகப்பார்த்தீர்களா" என்றான் ஆளுநன் திமோத்தி. " ஆம் ஐய்யா... நாங்கள் நன்றாகப்பார்த்துதான் இந்த அதிசயத்தை உங்களுக்கு தெரிவிக்க ஓடோடி வந்தோம்" என்றனர் அந்த ரோமைய வீரர்கள். " சரி... நான் காலையில் வந்து பார்க்கிறேன்" என்றான் ஆளுநன் திமோத்தி.
அடுத்த நாள் காலை ஆளுநன் நம் வணக்கத்துக்குறிய ஆண்டவர் ஜெனுவாரியுஸ் இரக்கப்பட்டிருந்த சூலைக்கு வந்தான். அந்த சூலையின் வாயில் திறக்கப்பட்டது.
அம்மாத்திரத்தில் அந்த வெப்பமிகுந்த சூலையிலிருந்த தீ ஜுவாலை ஒன்று சடேரென வெளியே வந்து அங்கிருந்த காவலாளிகளை சுற்றி வளைத்து சுட்டெரித்தது. அவர்கள் பொசுங்கி செத்தனர். அப்போது நம் வணக்கத்துகுறிய ஆயர் ஜெனுவாரியுஸ் தம் கைகளை குவித்த வண்ணம் யேசுநாதரின் ஜெயகீதங்களை பாடிக்கொண்டு வெளியே வந்தார். அவரது முகமும்
திரேகமும் பரலோக காந்தியால் ஒளிர்ந்தது. அவரது ஆடைகளோ அவரது கேசங்களோ எதுவும் அந்த கொடும் தீயால் எந்த விதமான பாதிப்புக்கும் ஆளாகவில்லை. இதைக்கண்ட ஆளுநன் பெரும் ஆச்சர்யம் அடைந்தான். இருப்பினும் தொடர்ந்து தன் அடக்கு முறையை அவர் மீது பாய்ச்சவேண்டி மீண்டும் அவரை சிறையில் அடைத்தான். அன்று இரவு அந்த
ஆளுநன் நம் ஆயரை மீண்டும் எந்த விதத்தில் கொடுமைபடுத்தலாம் என்று எண்னி அந்த இரவு முழுவதும் யோசித்தான்.
அடுத்தநாள் மீண்டும் விசாரணை ஆரம்பித்தது.
" ஜெனுவாரியுஸ்...உம் சித்து வேலைகள் எல்லாம் இனிமேல் என்னிடம் பலிக்காது. உன்னை என்னவிதமான தண்டனைகளால் உன்னை கொடுமைப்படுத்தப்போகின்றேன் பார். முடிந்தால் உன் கடவுள் என்னிடமிருந்து உன்னைக்காப்பாற்றட்டும்... என்ன சொல்கிறாய்... என் தேவர்களை வணங்கிகிறாயா அல்லது கொடுமையான மரனத்தை தழுவப்போகிறாயா?"
" அட அற்பப்பதரே...நீ என் கடவுளின் பொருமையை அதிகமாக சோதிக்கிறாய்..அவர்தம் பெருமையையும் வலிமையையும் நீ கண்ணாறக்கண்டிருந்தும் வீணே அவரை சீண்டுகிறாய். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள். அதுதான் உனக்கு நல்லது..இல்லாவிடில் உன் வார்த்தைகளே உனக்கு விரோதமாக எழும்பி
உலகமுடிவில் அந்த கொடுமையான நாளில் உனக்கு எதிர் சாட்ச்சியாக நிற்கும். அப்போது உன் நிலை மிகவும் வெட்க்கத்துக்குறியதாகவும் பரிதாபத்துக்குறியதாகவும் இருக்கும். ஆகவே காலம் இருக்கும்போதே உன்னை மாற்றிகொள். அவர் பாதம் பணிந்து அவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்" என்றார் வணக்கத்துகுறிய ஆயர் ஜெனுவாரியுஸ்.
" ஜெனுவாரியுஸ்...நிறுத்து உன் பிரசங்கத்தை.இனிமேல் என் காதில் எதுவும் ஏறாது..நான் பேச வேண்டிய காரியத்தை நீ பேசுகிறாய்...நீ விசாரணைக்கைதி என்பதை மறந்து போனாய். யாரிடம் யார் மன்னிப்புக்கேட்க வேண்டும்..உனக்கு உன் உயிர் மீது ஆசை இருந்தால் நீ என்னிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள். நான் நினைத்தால் இப்போதே உனக்கு மரண
தண்டனை கொடுக்க இயலும்..ஆனால் அதற்கு முன் நான் உன்னை பணிய வைக்க விரும்புகிறேன். நாளைக்கு நான் தரப்போகும் தண்டனை கண்டு உனக்கு பயமா?" என்றான் ஆளுநன்.
" பயமா... எனக்கா... அடே கொடுங்கோலா...நாம் ஆயர்..உயிருள்ள தேவனாகிய யேசுகிறிஸ்த்துவின் பிரதிநிதி. ஒரு உண்மையான கிரிஸ்த்துவன் யாரைக்கண்டும் பயப்பட மாட்டான்.
உன் கொடுங்கோண்மை எத்தகையதாயினும் நாம் அதற்கு அஞ்சோம். நடத்திக்கொள் உன் நாடகத்தை. என் ஆண்டவறாகிய யேசுவின் நாமத்தினால் நாம் சொல்வது நடக்கும்.இன்றுமுதல் நீ குருடனாக நாம் சபிக்கிறோம். நீர் எம் ஆண்டவரிடம் மன்றாடிக்கேட்டு மன்னிப்பு பெறாதவரை உனக்கு பார்வை கிடைக்காது...பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். என்றார். " இவனைக்கொண்டு போய் மீண்டும் சிறையில் அடையுங்கள் " என்றான் அந்தக்கொடுங்கோலன். வணக்கத்துகுறிய ஆயர் மீண்டும் சிறையில்
அடைக்கப்பட்டார். அன்று இரவிலே அந்த கொடுங்கோலன் பார்வை இழந்தான். நேரம் ஆக ஆக வலியும் வேதனையும் அவனை ஆட்கொண்டன. கொடும் மாய காட்சிகளாலும் கொடுமையான வலி வேதனையாலும் அலறி அலறி சாய்ந்தான். அந்த நோலாவிலிருந்த மருத்துவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். யாராலும் அவனுக்கு ஏற்பட்ட கண்
நோயையையும் வலியையும் வேதனையையும் குணப்படுத்தவே முடியவில்லை. அவனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்று யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை.
இவர்கள் வைத்தியத்தால் தனக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை என்றும் அவர்கள் வைத்தியத்தால் தனக்கு மேலும் மேலும் வலியும் வேதனையும் தான் அதிகரித்ததே தவிர மீண்டும் பார்வை கிடைக்கவே கிடைக்காது என்னும் நிலைக்கு தள்ளப்பட்ட அந்த கொடுங்கோலன் தனக்கு இப்போது ஜெனுவாரியுஸை விட்டால் வேறு வழியோ இல்லை நாதியோ கிடையாது என்று உணர்ந்தான். போதாததற்கு அவன் கண்களிலிருந்து புறப்பட்ட சீழும் நாற்றமும் சகிக்கவேமுடியாத அளவுக்கு போனாதால் அவனைக்காணவே யாருக்கும் இஸ்ட்டமில்லாமல் போனது. எல்லாம் ஒரே இரவுக்குள் நிகழ்ந்துவிட்டன.
" சரி ஆபத்துக்குப்பாவமில்லை... வலியும் வேதனையும் அவரவருக்கு வரும்போதுதான் தெரியும்.. அதுவரை எல்லாம் சிரிப்புதான்...எல்லாம் இன்பம் தான். அடேய்...யாரெங்கே...கூப்பிடு அந்த ஜெனுவாரியுஸை" என்றான் ஆளுநன். காவலாளிகள் மிகவும் கேட்டுக்கொண்டதால் நம் வணக்கத்துக்குறிய ஆயரும் பெரிய மனது வைத்து ஆளுநரை சந்தித்தார்.
" ஜெனுவாரியுஸ்... என்னை மன்னித்திக்கொள். உனக்கு அதிகம் சிரமம் கொடுத்துவிட்டேன்..உன் கடவுள் வல்லமையான கடவுள் என்று உணருகிறேன். என்னை மன்னிக்கும்படி உன் கடவுளிடம் மன்றாடு... எந்த விதத்திலாவது எனக்கு மீண்டும் பார்வை கிடைக்க தயவு செய் " என்று அழுதான்.
" திமோத்தி...நீ உன் தவறுகளை ஏற்று மனம் வருந்தியதால் என் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து உன்னை மன்னிக்கிறார். நீர் மீண்டும் பார்வைபெற நானும் மன்றாடுகிறேன் " என்று நம் ஆயர் அவனுகாக ஜெபித்தார். அந்த வினாடியே அவன் பார்வை பெற்றான். உடனே அவனுக்கு திமிர் வந்துவிட்டது. நன்றி மறந்தான் ஆளுநன் திமோத்தி. இதுதான் மனிதனின் குறுக்கு புத்தி என்பது. காரியம் ஆகும்வரை காலை பிடி...காரியமானபின் காலை வாறி அடி என்பது அவனுக்கு கைவந்த கலை போலும். மீண்டும் அவனுக்கு தன் அதிகாரம் நினைவுக்கு வர உடனே ஆணையிட்டான் " இந்த ஆயர் ஜெனுவாரியுஸை சிறையில் அடையுங்கள்" என்று. சிறைகாவலாளிகளுக்கு அப்படியே தலை சுற்றிப்போனது. மனித ஜென்மத்தில் இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா... என்ன மனிதன் இவன்.. இரவு வரை கண் இழந்து எப்படி வேதனை பட்டான்.. குணமானபின் எப்படி நன்றி மறந்தான்.. இவனை அவர் குணப்படுத்தி இருக்கவே கூடாது என்று அவர்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள். அப்போதே ஆயர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விஷயம் சொல்பதாரா எரிமலைச்சிறையில் இருந்த அந்த தியாக்கோன்களுக்கு அறிய வந்தபோது அவர்கள் மிகவும் வருந்தினர். அப்போது பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர்களில் நால்வர் அதாவது சோசியுஸ் என்பவரத்தவிர மற்ற மூன்று தியோக்கண்களும் இரு இல்லறத்தாரும் விடுதலை செய்யப்பட்டு இரவோடு இரவாக நம்
வணக்கத்துக்குறிய ஆயர் ஜெனுவாரியுஸை சந்தித்தனர். நம் ஆயர் அவர்களுக்கு நடக்கப்போகும் அனைத்து காரியங்களையும் விவரித்தார். அதன்படி அவர்கள் அனைவரும் ஆண்டவரின் ஆசீர் பெற்று விசுவாசத்தில் உறுதியாய் இருக்கும் வரம் பெற்றனர். இவர்கள் சிறைச்சாலையில் நம் ஆயரை சந்த விஷயம் ஆளுநனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள்
அத்தனை பேரையும் கைதுசெய்து அடுத்தநாள் விசாரணைக்காக தன்முன் கொணர்ந்தான்.
" இவர்கள் அத்தனை பேரின் கைவிலங்குகளையும் அவிழ்த்துவிடுங்கள் " என்றான் ஆளுநன் திமோத்தி. " ஜெனுவாரியுஸ் ...நீர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றம் நிரூபிக்கப்படாதவரை நிரபராதிகளே...நான் சட்டத்தை மிகவும் நுனு நுனுக்கமாக கடைபிடிக்க விரும்புகிறேன்..நான் எவ்வளவு நீதிமான் என்று தெரிந்துகொள்ளுங்கள்" என்றான் ஆளுநன்.
" அதனால்தான் நேற்று கடவுளின் அருள் பெற்றும் உமக்கு பார்வை பெற்றும் அதற்கு நன்றியாக எம்மை சிறையில் அடைத்தீறோ?" என்றார் ஆண்டவராகிய ஜெனுவாரியுஸ்.
" ஜெனுவாரியுஸ்.. அதை விடு... நீர் உம் ஆண்டவனின் பிரதிநிதி என்றால் நான் ரோமைய சர்வாதிகாரி தியோக்குலேசியனின் பிரதிநிதி. நான் அவரது சட்டங்களை மதித்து நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருகிறேன்...உம் மக்கள் அனைவரோடும் நீர் இப்போது விசாரணைக்கைதியாக இங்கு வரவழைக்கப்பட்டிருகின்றீர்.. என்ன சொல்லுகின்றீர்."
தியாக்கோன்மார்கள் மூவரும் மற்றும் அந்த உபதேசிகளான குடும்பஸ்த்தர் இருவரும் தாங்கள் யேசுவை மறுதளியோம் என்றும் யேசுவுக்கு விசுவாசமாக தங்கள் இன்னுயிரையும் இழக்க தயராய் இருப்பதாகவும் அறிக்கையிட்டதை தொடர்ந்து அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அடுத்த நாள் காலை வணக்கத்துகுறிய ஆயர் ஜெனுவாரியுஸ் உட்பட அந்த ஐந்து உதவியாளர்களும் கைகால்களின் விலங்கிடப்பட்டு நோலா பட்டிணத்து சிறைச்சாலையிலிருந்து அவர்களை குதிரைகளோடு பிணைத்து ஓட்டமும் நடையுமாக வெகு தூரத்திலுள்ள பச்சொல்லி என்னும் பட்டிணத்திலுள்ள சிறைச்சாலையில் அடைத்தனர். அதோடு நில்லாமல் அந்த
சொல்பதார எரிமலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த சிறைச்சாலையில் அடைபட்டிருந்த சோசியுஸ் என்னும் தியாக்கோனையும் இழுத்துவந்து இந்த பச்சோல்லி சிரைச்சாலையில் இருந்த வணக்கத்துகுறிய ஜெனுவாரியுஸ் ஆயருடன் அடைத்தனர். ஆக ஆண்டவரின் சித்தப்படி ஆயரின் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சிறையில் சந்தித்துக்கொண்டார்கள்.
இவ்விதமாக மூன்று நாட்க்கள் கழிந்தன. நான்காம் நாள் காலை நம் வணக்கத்துகுறிய ஆயர் ஜெனுவாரியுஸ் மற்றும் அவர் சகாக்கள் ஐவரும் அந்த பச்சொல்லி பட்டிணத்திலிருந்த ரோமர்களின் விளையாட்டரங்கத்தினும் அழைத்துவரப்பட்டார்கள். ஆக இந்த மூன்றுநாள் ஓய்வு என்பது தங்களுக்கல்ல என்பதும் இந்த நாட்க்களில் அரங்கம் தயார் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த மூன்று நாளில் கொடும் விலங்குகள் பல பட்டிணிபோடப்பட்டு தங்களைக்கவ்வுவதற்காக தயாரிப்பு வேலைகளுக்காகத்தான் என்பது ஆண்டவர் அவர்களுக்கும்
அவரது சகாக்களுக்கும் மிக நன்றகப்புறிந்தது. ஆண்டவர் ஜெனுவாரியுஸ் அவர்கள் தன் உதவியாளர்களைப்பார்த்து " சகோதரர்களே..நடக்கபோகும் காரியங்கள் அனைத்தும் ஆண்டவரால் ஏற்படுத்தப்படுபவை. எனவே வீரத்தோடும் நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இவற்றை ஏற்றுக்கொள்வோம். ஆண்டவர் நம்மோடு இருப்பாராக...பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமேன்..கண்களை மூடிக்கொள்ள வேண்டாம்.. அது பயத்தின் அடையாளம்... நடப்பதை பாருங்கள்... துணிவுகொள்ளுங்கள்... ஆண்டவர் நம்மோடு இருகிறார்" என்றார்.
ஆளுநன் திமோத்தியின் தலைமையில் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இந்த கண்ணாறாவியைப்பார்க்க கூடி இருந்தார்கள். அவற்றுள் பலர் ரகசிய கிறிஸ்த்துவர்கள்.. அவர்கள் ஆண்டவருகாகவும் அவருடைய சகாக்கள் ஐவருகாகவும் மனமுறுகி ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்..அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெரும் அருவிபோல் வழிந்தோடியது.
இருப்பினும் யாரும் பார்க்காதபடி அந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்கள். பெரும் கரகோஷத்தோடு கொடிய வனவிலங்குகள் அந்த அரங்கத்தினும் அவிழ்த்துவிடப்பட்டன. பெரும் கரடிகளும் சிருத்தைப்புலிகளும், சிங்கங்களும் பாய்ந்து வந்தன. மூன்று நாள் பட்டினியால் காய்ந்துபோயிருந்த அந்த கொடிய விலங்குகள் பெரும் கர்ஜனையோடு ஒன்றை ஒன்று
தாக்கக்கொண்டு தங்களின் இரையை நோக்கியபடி பாய்ந்து வந்தன. ஆனால் அப்போது ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்தது.
பெரும் கோபாவேசத்தோடு பாய்ந்து வந்த அந்த கொடிய வனவிலங்குகள் வணக்கத்துக்குறிய ஜெனுவாரியுஸ் ஆண்டவரின் முன் வந்தவுடன் அவை அவர்முன் மண்டியிட்டு வணங்கின. அனைத்து விலங்குகளும் தங்கள் கோபத்தையும் பசியையும் மறந்து ஒன்றுக்குள் ஒன்று சமாதானமாகி பின்பு அவரவர் முன்பாக நாய்க்குட்டிகள்போல் படுத்துக்கொண்டன.
சில அவர்களின் பாதங்களை நக்கிக்கொடுத்தன.
இவற்றை உசுப்பேற்றுவதற்காக அதனை வளர்த்தவர்கள் தைரியமாக அரங்கத்தினுள் நுழைந்தார்கள். ஆனால் சாதுவான பிராணிகள் போல் படுத்திருந்த அந்த கொடிய வனவிலங்குகள் தங்களுக்கு நல்ல இரை கிடைத்ததென தங்களை வளர்த்தவர்கள் மீது பாய்ந்து அவர்களை கடித்துக்குதறி கொண்று தின்றன. மீண்டும் சாதுவாக வணக்கத்துகுறிய ஜெனுவாரியுஸ் ஆண்டவரின் திருப்பாதங்களில் போய் அமர்ந்துகொண்டன.
இந்த நிகழ்ச்சியால் கவரப்பட்ட அனேக புறவினத்தார் ஆண்டவறாகிய யேசுவின்மேல் நம்பிக்கைக்கொண்டனர். தங்கள் களியாட்டம் நிறைவேறாமல் பெரும் அதிருப்த்தியில் சோர்ந்த போன பலமக்கள் அடடா..நல்ல களியாட்டத்தை இழந்துவிட்டோமே..அச்சச்சோ..சோ.சோ.என்று தங்களின் அதிருப்தியை காட்டிக்கொண்டனர். ஆயிற்று.. மாலை ஆனதும் ஆளுநன் திமோத்தி அந்த பச்சொல்லி சிறையில் நம் வணக்கத்துகுறிய ஆயர் ஜெனுவாரியுஸை சந்தித்தான்.
" ஜெனுவாரியுஸ்...ஜெயித்துவிட்டோம் என்று சந்தோஷப்படவேண்டாம்...நாளைக்கு காலை உனக்கும் உன் சகாக்களுக்கும் கொடும் தண்டனை காத்திருகிறது.." என்றான் ஆளுநன்.
" திமோத்தி...அதிகாரம் உன் கையில் இருகின்றதென நீ அதிகம் ஆட்டம் போட வேண்டாம்..ஜெயிப்பது நான் அல்ல.. எனக்குள் இருக்கும் என் யேசுவே எங்களை ஜெயிக்க வைக்கிறர். இந்த உடலைத்தான் உன்னால் துன்புறுத்த இயலும்... ஆனால் என் மனதையோ ஆன்மாவையோ உன்னால் பணிய வைக்க முடியாது. காரணம் எங்களுக்கும் வாழ்பவர்
யேசுகிறிஸ்த்துவே..அவர் உன்மட்டில் மிகவும் பொருமை காத்துவருகிறார்.. அவரை நீ அனாவசியமாக துன்புறுத்துகிறாய். அவர் உனக்கு பார்வைகொடுத்தும் உன் வலி வேதனைகளை குணமாக்கியதும், எங்களை அந்த கொடும் வன விலங்குகளிடமிருந்து காத்ததும் அவரே...உனக்கு அவரின் வல்லமைகளை நன்றாக விளக்க வைப்பதற்காகத்தான் எங்களை அவர்
காத்து அந்த வனவிலங்குகளை பராமரித்துவந்தவர்களை அவைகள் உண்ணச்செய்தார். இன்னும் நீர் மனம் மாறவில்லை என்றால் நீ நன்றாக அடிபடுவாய்... நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்...இனிமேல் உன்பாடு...அவர்பாடு..போய்வா திமோத்தி..மீண்டும் கடைசி நாளில் சந்திப்போம்" என்றார் வணக்கத்துக்குறிய ஆண்டவர் ஜெனுவாரியுஸ்.
இதே இரவில் பெனவெந்தூரில் நம் வணக்கத்துகுறிய ஆயர் ஜெனுவாரியுஸின் தாயார் ஒரு கனவு கண்டார். அதாவது தன் மகன் வானத்தில் பறப்பதைப்போல அக்கனவு இருந்தது. அடுத்தநாள் இக்கனவைப்பற்றி சிலரிடம் விளக்கம் கேட்க்கும்போது அவர்கள் கூறிய விளக்கம் அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. அதாவது அவரது மகன் ஆயர் அவர்கள் மூன்று நாளைக்கு முன்பே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்தநாள் அவருக்கு தலை வெட்டப்படும் தண்டனை நிறைவேற இருப்பதாகவும் கூறியதால் அவரது தாயார் மிகவும் விசனப்பட்டு சரியாக நமது ஆயர் தலை வெட்டப்பட்ட அன்றே பெனெவெந்தூரில் அவரும் இறந்து போனார்.
அடுத்த நாள் காலை நமது வணக்கத்துக்குறிய ஆயரும் அவரது ஆறு உதவியாளர்களும் சங்கிலியால் கட்டுண்டு அந்த சொல்ஃபதாரா எரிமலையின் உச்சிக்கு பலியாக வெட்டுப்பட இழுத்துச்செல்லப்பட்டார்கள். இந்தப்பயணம் ஏற்குறைய கல்வாரி மலையில் நம் ஆண்டவறாகிய யேசுநாதரின் கல்வாரிப்பாடுகளை ஒத்திருந்தது. பாதையும் கரடு முரடாக இருந்தது.
அவர்களை இழுத்துச்சென்ற காவளாளிகளின் செய்கையும் அதைவிட முறட்டுத்தனமாக இருந்தது. அப்போது ஒரு ஏழை முதியவர் நம் வணக்கத்துக்குறிய ஆயரின் வழியில் சாஸ்டாங்கமாக விழுந்து அவரின் கால்கள் இரண்டையும் கட்டிப்பிடித்துக்கொண்டு," என் ஆண்டவரே .. என் எஜமானே... பாவி என் மேல் இரங்கும்...எனக்கு ஏதாவது
கொடுத்தருளும் " என்றார். அதற்கு நம் ஆண்டகை அவர்கள்," பெரியவரே..உமக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையே...காசோ...பணமோ.. எதுவும் இல்லை.. சாகப்போகும்
என்னிடம் உமக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே...நீர் என்னிடம் விரும்புவது என்ன?" என்றார். அதற்கு அந்த ஏழை முதியவர்," ஆண்டவரே.. தேவரீர் வாழும் புனிதர் எனவும், தாங்கள் இறையருள் பெற்றவர் எனவும் நான் அறிவேன்..தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் ஒன்றை எனக்குத்தர வேண்டுகிறேன்.. தங்களிடம் நான் விரும்புவதும் அது ஒன்றே "
என்றார். அதற்கு நம் ஆண்டவர்," பெரியவரே...நான் இப்போது அதை உமக்குத்தர முடியாது. நான் இறந்தபிறகு நானே உமக்குத்தருவேன்...இது உறுதி." என்றார்.
இதைக்கேட்ட காவலர் இருவர்," இவர் இப்போதே கொடுக்க முடியவில்லை என்றால் இறந்த பின் எப்படி கொடுப்பார்?" என்றுகேலியாகப்பேசிக்கொண்டனர்.
ஒரு வழியாக இந்த கல்வாரிப்பயணம் அந்த சொல்பதாரா எரிமலையின் உச்சியை அடைந்தது. குதிரையின் மீது அமர்ந்து வந்த ஆளுநன் திமோத்தி கொலைகுற்றத்திற்கான தன் உத்திரவை வாசித்தான்.
" ஆயர் ஜனுவாரியுஸ், அவர்தம் தியாக்கோன்கள் சோசியுஸ்,ப்ரோக்லஸ், ஃபெஸ்டோஸ்,டெசிடெரியுஸ் மற்றும் இல்லறத்தார் யூதேக்கி, அக்கூடியுஸ் இவர்களோடு பல கிறிஸ்த்துவர்கள் ரோமைய மன்னர் தியோக்குலேசிய மஹா ராஜாவின் ஆணையை மதியாதனாலும் அதை மீறியதாலும், நம் முன்னோர்கள் வழிபட்டு வந்த கடவுளர்களை அவமதித்ததாலும், தடை
செய்யப்பட்ட கிறிஸ்த்துவ மதத்தை பின்பற்றியதாலும் நாட்டின் அமைதிக்கு பங்க மேற்படுத்தியதாலும் இவர்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை அளிக்கப்படுகிறது."
அப்போது நம் வணக்கத்துக்குறிய ஆண்டவர் ஜெனுவாரியுஸ் தம் கைகளை உயர்த்தி மண்டியிட்டு," ஆண்டவரே எம் தேவனே, தேவரீர்தாமே இந்த உலகத்திற்கு வந்து பாடுகள் பல பட்டு இந்த உலகத்தை மீட்டு ரட்ச்சித்தீரே....ஸ்வாமி உமக்கு தோத்திரம் உண்டாகக்கடவது..என்னையும் உம்மை நாடி வந்திருக்கும் நம் அடியார்களையும் காத்து ரட்சிப்பீறாக. எங்களை வேத விசுவாசத்தில் கடைசி வரை நின்று உமக்கு சாட்ஷியாய் மரணிக்கும் வரத்தை எங்களுக்குத்தாரும்.. இந்த உலக மாய்கையினின்றும் இந்த உலக பந்தங்களினின்றும் எங்களை விடுவித்தருளும் ஸ்வாமீ.....பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமேன்" என்று ஜெபித்து அங்கு கூடியிருந்த தன் சாகாக்களுகும் அன்று மராணிக்கப்போகும் கிறிஸ்த்துவர்கள்
அனைவருக்கும் ஆசீர்வாதம் கொடுத்தார். பின் " இனிமேல் என் கண்கள் இந்த உலகைப்பார்க்கக்கூடாது " என்று தன் ஓராரியும் என்னும் தன் கைத்துணியால் தன் கண்களைக்கட்டிக்கொண்டார். தன் தொப்பியையும் தன் தலையையும் சரியாக அமைத்துக்கொண்டு " சேவகனே நீர் உம் காரியத்தை செய்யலாம் " என்று கூறி தன் கையை இறக்குவதற்குள் சேவகனின் நீண்ட உடைவாள் அவர் கழுத்தில் பலமாக இறங்கியது. அவரது திரு சிரசோடு அவரது கை விரல் ஒன்றும் வெட்டுப்பட்டது.
இவ்விதமாகவே அன்று யார் யாருக்கெல்லாம் சிரச்சேத தண்டனை கொடுக்கப்பட்டதோ அவர்கள் அனைவரும் அவ்விதமே கொல்லப்பட்டார்கள்.
இந்த துன்பமான வேளையிலும் எசூபியா என்னும் பெயர் கொண்ட ஒரு புண்ணியவதி ஒருத்தி எப்படியோ கூட்டத்தில் நுழைந்து தான் கொண்டு வந்திருந்த இரண்டு கண்ணாடிக்குப்பிகளில் நம் வணக்கத்திற்குறிய ஆண்டவர் ஜெனுவாரியுஸின் கழுத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த அந்த பச்சை இரத்தத்தை சேகரித்துக்கொண்டாள்.
அந்தக்காலத்தில் வேத சாட்ச்சிகள் சிந்தும் திரு ரத்தத்தை சேகரித்து வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. [ இப்பாடியாகத்தான் புனித பிலோமினம்மாளின் ரத்தமும் ஒரு மண் குப்பியில் சேகரிக்கப்பட்டு இன்றுவரை அவரது அருளிக்கமாக இத்தாலியில் நேபிள்ஸ் நகருக்கு அருகில் முக்னானோ என்னும் ஊரில் அவரது பெயர் கொண்ட புனித பிலோமினம்மாள்
தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.]
தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த இரவில் பல கிறிஸ்த்துவர்கள் ரகசியமாக இந்த சொல்பதாரா எரிமலையின் உச்சியில் வந்து நம் வணக்கத்துக்குறிய ஆயர் ஜெனுவாரியுஸின் திரு உடலை எடுத்துச்செல்லும்போது அவர் அவர்களுக்குத்தோன்றி, " சகோதரர்களே.. என் தலை வெட்டப்படும்போது என் கை விரல் ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது அதையும் தேடிக்கண்டுபிடித்து எடுத்துச்சென்று புதையுங்கள்" என்றார். அவ்விதமே வெட்டப்பட்ட அவரது திரு விரலும் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு ரகசியமாக ஒரு குகைகல்லறையில் புதைக்கப்பட்டது.
அதே போல் நம் வணக்கத்துக்குறிய ஆயர் ஜெனுவாரியுஸ் தான் ஏற்கனவே வாக்குகொடுத்திருந்தபடி அந்த ஏழை முதியவருக்குத்தோன்றி தன் ஓராரியும் என்னும் கைத்துண்டை கொடுத்து மறைந்து போனார். அந்த ஏழைக்கிழவர் அதை தன் கண்களில் ஒற்றிக்கொண்டு தன் இடுப்பில் முடிந்துகொண்டார்.. அப்போது முன்பே அவரைப்பழித்த காவளாளிகள் " என்னப்பா... ஜெனுவாரியுஸ் செத்தபின் உனக்கு ஏதோ துணி கொடுப்பதாக கூறினாரே... அவரும் இப்போதுசெத்துவிட்டார்..எப்பொது துணிகொடுக்கப்போகிறார் ?. "
என்று கேலி பேசினார்கள். அந்த ஏழை முதியவர்," வாயை மூடுங்கடா கபோதிகளா...எங்கள் ஆண்டவரை என்னவென்று நினைத்துக்கொண்டீர்கள்... இதோ பார் அவர் கொடுத்த துணி...இதில்பார் அவர் வெட்டுபட்ட இடத்திலிருந்து வழிந்த ரத்தம்... நம்புகிறாயா? இப்போதுதான் அவர் வந்து இதை என்னிடம் கொடுத்துவிட்டுப்போனார்..இதை எல்லாம் நீங்கள்
நம்பப்போவதில்லை" என்றார்.. அதைக்கேட்ட அந்த காவலாளிகள் திக்பிரமை அடைந்து " உங்கள் ஆண்டவர் உண்மையில் சக்தியுள்ளவர்தான் ..இதை நாங்கள் நம்புகிறோம்.யேசுவை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம் " என்றனர். அவர்கள் மட்டுமல்ல ... அன்று அந்த துக்கமயமான நிகழ்வைக்கண்ட பல புறவினத்தார்கள் யேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
இதே இரவில் அந்த பச்சொல்லி அரண்மனியில் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான் ரோமைய ஆளுநன் திமோத்தி." அடே ஜெனுவாரியுஸ்... ஒழிந்தாயடா நீ... உன்னைக்கொல்வதற்குள் நான் பட்ட பாடுகள் எவ்வளவு என்று எனக்கு மட்டுமே தெரியும்... அடடா... அந்த கண்வலியும் கும்மிருட்டும்..அந்த நாசமாய்போன ஜெனுவாரியுஸ்...
என்னை நீ என்ன பாடுபடுத்திவிட்டாய்.. உன்னை ஒழித்ததில் எனக்கு பரம சந்தோஷம்தான் போ " என்று தன்னை பாராட்டிக்கொள்ளவும் செய்தான். அப்போது அவன் கண்களுக்கு முன்பாக ஒரு பெரும் சவுக்கு தோன்றியது. வேறு யாரும் அவன் கண்களுக்கு தோன்றவில்லை. சற்று நேரத்தில் ஒரு சம்மனசானவர் அங்கு தோன்றினார்..
இப்போது அவன் கண்களுக்கு முன்பாக ஜெனுவாரியுஸ் கைகொட்டி சிரிப்பதுபோல் தோன்றியது. அவ்வளவுதான்... அந்த சவுக்கு வானில் சுழன்றது. ஒவ்வொரு அடியும் ஆளுநன் திமோத்தியை பின்னி எடுத்தது. காட்டுக்கூச்சலாக கத்தினான் ஆளுநன். ஆனால் அவனைக்காப்பாற்ற அங்கு யாருமே வரவில்லை.. எல்லோரும் பார்க்கும்போது ஏதோ ஒரு ஆவி
சவுக்கால் ஆளுநன் திமோத்தியை வெளு வெளு என்று வெளுப்பதுபோல் தோன்றியது..ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை....ஜெனுவாரியுஸ் என்னைகாப்பாற்று... சத்தியமாக நான் உனக்கு செய்ததெல்லாம் அநீதிதான்...கிறிஸ்த்தவர்களை கொடுமையாய் தண்டித்ததும் தப்புதான்... என்னை மன்னித்துக்கொள்... மன்னித்துக்கொள்.. என்று அலறினான்..எல்லாம் கொஞ்ச நேரம்தான். கடைசியாய் கேட்டது ஒரு பெரும் மரண ஓலம்... அவன் வாயில் ரத்தம் கக்கி செத்தான். அவன் முகம் பார்க்கவே விகாரமாய் பயங்கரமாக மாறி இருந்தது. பிறகு அந்த மாய சவுக்கும் மாயமாய் மறைந்துபோனது.
அன்று அந்த எசூபியா என்னும் புண்ணியவதி சேகரித்த வணக்கத்துக்குறிய ஆயர் ஜெனுவாரியுஸின் திரு ரத்தம் இன்று வரை பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளது. நம் வணக்கத்துக்குறிய ஆயர் ஜுனுவாரியுஸ் நேப்பிள்ஸ் நகர பாதுகாவலராக ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கபட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 19 ஆம் நாள் கி.பி.305 ஆம்
வருடம் அவர் வேத சாட்ச்சியாக மரித்த நாள் ..எனவே செப்டெம்பர் மாதம் 19 ஆம் தேதி அவரது திருவிழா கொண்டாடப்படுகிறது. பதினாங்காம் நூற்றாண்டில் சீகோ என்னும் பெனெவேந்தூர் இளவரசனின் வேண்டுகோளின்படி அவரது சொந்தநாடான பெனவெந்தூருக்கு அவரது திரு உடல் எடுத்துச்சென்று அருளிக்கமாக அங்கிருந்த தேவாலயத்தில்
புதைக்கப்பட்டது. ஆனால் அவரது திரு சிரசு மட்டும் நேப்பிள்ஸிலேயே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காலம் செல்லச்செல்ல மீண்டும் அவரது திரு உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் நேப்பிள்ஸ் நகரில் கி.பி.1497ல் அவரது தலையுடன் சேர்த்து வைக்கப்பட்டது.
நம் வணக்கத்துக்குறிய ஆயர் ஜெனுவாரியுஸ் ஆண்டகைக்கு வருடத்தில் மூன்று திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன்.அதாவது
நம் ஆயர் தலை வெட்டுண்டு மரித்த செப்டெம்பெர் 19 ஆம் தேதியும்,
நம் ஆயர் நேப்பிள்ஸ் நகர பாதுகாவலராக முடி சூட்டப்பட்ட டிசம்பர் 16 ஆம் தேதியும்,
நம் ஆயரின் திரு சிரசும் அவரது திரு உடலும் மீண்டும் இணைந்த மே மாத முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்திய சனிக்கிழமையும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் திரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
காலம் காலமாக இந்த மூன்று திருவிழாக்களின் நாட்க்களில் நம் வணக்கத்துக்குறிய ஆயர் ஜெனுவாரியுசின் திரு ரத்தம் அடங்கிய அந்த கண்ணாடிக்குப்பிகள் சகல மரியாதைகளுடன் அவரது திரு சிரசின் முன்பாக கொண்டு வரும்போது அந்த உறைந்த போன அவரது திரு ரத்தம் மீண்டும் உருகி திரவமாக மாறிவிடும்.. இந்த அதிசயம் ஆண்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றது. சில சரித்திரக்குறிப்புகளின்படி இந்த அதிசய ரத்தம் உருகாமல் போனதும் நடந்தது.
அப்போதெல்லாம் நேப்பிள்ஸுக்கு ஏதோ அபாயம் வரும் என்று மக்கள் பயப்படுவர்.. அந்தக்காலங்களில் அங்கிருக்கும் வெசுவேருஸ் என்னும் எரிமலை வெடிக்கும் மக்கள் பெரும்பீதி அடைந்து நம் நேப்பிள்ஸ்நகர பாதுகாவலரை சரணடையும்போது இந்த ரத்தம் அடங்கிய குப்பியை அந்த எரிமலையை நோக்கி காட்டுவார் அங்குள்ள கர்தினால்.. அப்போது அந்த எரிமலை தன் சீற்றத்தை நிறுத்திக்கொள்ளும் அல்லது
அதன் எரிமலைக்குழம்புகளை வேறு புறமாக வீசி அடிக்கும். மக்கள் காப்பாற்றப்படுவார்கள். இந்த வெசுவேருஸ் என்னும் எரிமலையின் சீற்றத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான நகரம்தான் அக்காலத்தில் மிகவும் பெயர் பெற்று விளங்கிய போம்பீ நகரம். இன்றுவரை நம் புனித ஜெனுவாரியுஸ் ஆண்டவர் நேபிள்ஸ் நகரைகாக்கும் பாதுகாவலராக விளங்குகிறார்.
அவரிடம் கேட்க்கும் மன்றாட்டு எதுவும் வீண் போகாது என்பது அந்த நேப்பிள்ஸ் நகர மக்களின் நம்பிக்கை.
see naples and die என்பது இந்த நேப்பிள்ஸ் நகரைப்பற்றிய ஒரு பழமொழி.. அதாவது நாம் சாவதற்கு முன் ஒருதடவையாவது இந்த நேப்பிள்ஸ் நகரை பார்த்துவிட வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம்.இந்த நேப்பிள்ஸ் நகரின் அழகை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நீண்ட பெரும் கடற்கறையும்,அதை அடுத்து உயர்ந்த மலைத்தொடர்களும்
அதன்மீது போடப்பட்டுள்ள சாலைகளும் கடலில் கப்பல் போக்குவரத்தும், தரையில் அரண்மனைகளும் கோட்டைகளும் வில்லாக்களும் அந்த நகரின் கலை ரசனைகளும் எந்த விதத்திலும் இந்த நகர் இத்தாலியின் மற்ற நகரங்களுக்கு சளைத்தது அல்ல என்று நிரூபிக்கும். அதேபோல நம் வணக்கத்துக்குறிய ஆயர் ஜெனுவாரியுஸ் அவர்கள் நல்ல அழகும் அறிவும்
வீரமும் உள்ளவர். நம் தேவனாகிய யேசுவிடத்தில் அதிகமான பாசம் கொண்டவர். எனவேதான் யேசுவும் அழகான ஆயர் ஜெனுவாரியுஸை அந்த அழகான நேப்பிள்ஸ் நகருக்கு பாதுகாவலராய் நியமித்தார்.
மிகவும் வணக்கத்துகுறிய புனித ஜெனுவாரியுஸ் ஆண்டவரே எங்களுகாக வேண்டிகொள்ளும்.. ஆமேன்.