Wednesday, January 8, 2014

" மீன் பொறிஞ்சி போச்சிடா வலேரியா "



                             " மீன் பொறிஞ்சி போச்சிடா வலேரியா "

         இந்தக்கதை ஆரம்பிக்கும்போது [ கி.பி. 253-259 ] ரோமின் ஆட்ச்சிப்பீடத்தில் இருந்தவர் வலேரியன் என்னும் ஒர் சர்வாதிகாரி. இவருக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே வாய் வேப்பங்காய் ஆக கசக்கும். கி.பி. 253. அக்டோபர் 22 அன்று ரோமின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய மன்னர் வலேரியன் செய்த முதல் காரியம் தன் மகன் கல்லியனை சீசர் ஆக்கியதுதான்.
        இத்தனை பெரிய ரோமைய சாம் ராஜ்ஜியத்தை தன் ஒருவரால் ஆள முடியாதென தன் மகனை ரோமின் மேற்கு பகுதிகள் நாடுகளை ஆளவும் தான் ரோமின் கிழக்குப்பகுதி நாடுகளை  ஆளவும் முடிவு செய்தனர். இக்கால கட்டங்களிள் ரோமர்களின் ஆட்சிக்குட்பட்ட ஐரோபிய நாடுகளில் பலம்பெற்ற சில நாடுகள் கிளர்ச்சி செய்தபடியால் ரோமின் ஆட்சியாளர்களுக்கு
பெரும் தலைவலி ஆரம்பமானது.
       இதை தங்களின் இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைத்தனர் மன்னர் வலேரியனும் அவர் மகன் கல்லியனும். இதற்கு ரோமர்களின் செனேட் சபை
முழு ஆதரவு அளித்தது. இதே காலக்கட்டத்தில் ரோமர்களின் கிழக்கு பகுதியை சேர்ந்த டமாஸ்கஸ், அந்தியோக்கியா ஆகிய நாடுகளை சசானியர்களும் எடேசாவவை பெர்சியாவை   சேர்ந்த ஷாபுர் 1 என்ற மன்னரும் கைப்பற்றிக்கொள்ளவே மன்னர் வலேரியன் தன் பெரும் படைகளோடு எடேசா வந்தார்.கி.பி.254 முதல் 257 வரை எடேசா வை சுற்றியுள்ள நாடுகள்   அனைத்தையும் வென்ற ரோமை மன்னர் வலேரியன் சசானியர்களை அடக்கி அந்தியோகியாவை மீண்டும் கைப்பற்றி தன் ரோமை பேரரசை ஸ்த்திரப்படுத்தினார். ஆனால் விதி அவருக்கு  வேறு ரூபத்தில் வந்து மிகுந்த தொல்லைபடுத்தியது.
      கி.பி. 259ல் ஆசிய மைனர் முழுவதையும் தன் வயப்படுத்தியிருந்த கோத் இனத்தவர்களை வென்று எடெசாவை தன் வயப்படுத்த நினைத்தார் மன்னர் வலேரியன்.   இந்த நிலையிலும் கி.பி. 257 ல் ரோமை செனட் சபைக்கு ஒரு கடிதம் எழுதினான் மன்னன் வலேரியன். அது அரசாங்க ஆனையாகவும் கருதப்பட்டது.
       ரோமைய அரசர்களையும் அவர்தம் கடவுளர்களையும் கிறிஸ்த்துவர்கள் வணங்க வேண்டும்.. அதற்கு தீபாராதனை காட்ட வேண்டும் இதற்கு மறுப்பவர்களை ராஜ துரோகிகளாக   கருதப்பட்டு கிறிஸ்த்துவர்களை கொடுமைப்படுத்தி கொல்லும்படியும் அவர்கள் சொத்துக்களை பரிமுதல் செய்யும்படியும் இந்த அரசகட்டளை உடனே அமுல் படுத்தப்பட
வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டது. மீண்டும் இதே போன்ற ஒரு ஆணை மன்னர் வலேரியனால் அடுத்த ஆண்டே வெளியிடப்பட்டது..எனவே ரோமர்களின் ஆட்சிக்குட்பட்ட   அனைத்து நாடுகளிலும் கிறிஸ்த்துவர்களுக்கு எதிரான பெரும் வேத கலாபணை ஆரம்பமானது. இந்த வேத கலாபணையில் கிறிஸ்த்துவர்கள் பட்ட வேதனையும் துன்பமும் சொல்ல
முடியாத அளவுக்கு போனது. இப்படியொரு காலகட்டத்தில் ஸ்பெயின் தேசத்தில் ஒரு நாள்....
         ஹுஸியா என்னும் ஒரு பட்டிணம் வடக்கு ஸ்பெயினின் ஆரகோன் என்னுமிடத்தில் உள்ளது. அந்தப்பகுதி பெரும் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களாள் ஆளப்பட்டு வந்தது. இந்த   ஹூசியா பட்டிணத்தை சேர்ந்தவர்தான் நம் லாரன்ஸ்.கி.பி. 225ல் பிறந்த இவர் வம்சா வளியப்பற்றி எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்   எனவே அறிய முடிகிறது. அவர் அவர் காலத்திலேயே பெரும் அறிவு ஜீவியாக திகழ்ந்தார். இறையியல் படிக்க மிகுந்த ஆர்வம் கொண்டு கம்போஸ்த்தலா பட்டிணத்திற்கு வந்தார். அங்கு   பெரும் வேத சாஸ்த்திரியாக விளங்கிய சிக்ஸ்த்துஸ் என்பவரை சந்தித்தார். இவர்மீது மிகுந்த பாசமும் நம்பிக்கையும் கொண்ட சிக்ஸ்த்துஸ் சாஸ்த்திரியார் இவரை ரோமுக்கு வந்து தம்மை  பின்பற்றுமாறு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட லாரன்ஸ் அவரோடு ரோமுக்கு வந்தார். கடவுளின் திருவுளத்தால் சிக்ஸ்த்துஸ் சாஸ்த்திரியார் ரோமில் மிகவும் வணக்கத்துகுறிய ஆயராகவும் பிறகு சிலகாலங்களில் பரிசுத்த பிதா பாப்பானவராகவும் ஆகினார். அப்போது அவரது பெயர் பரிசுத்த பிதா இரண்டாம் சிக்ஸ்த்துஸ் என மாற்றி
அழைக்கப்பட்டது.
      ஆனால் லாரன்ஸ் தியாகோனாகவே வாழ்ந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் ரோமை மன்னன் வலேரியனின் முதலாம் அரசாணை[கி.பி.257ல்] வந்தது. எப்படியும் விரைவில்  வேத காலாபணை வந்துவிடும் என்று உணர்ந்த பரிசுத்த பிதா அவர்கள் நம் லாரென்ஸை அழைத்து ரோமில் தன்னுடைய அதிகாரத்தில் உள்ள அனைத்து பரிசுத்த பொருட்க்களையும்
தேவாலயங்களையும் அவரிடம் ஒப்படைத்து அவரை தாம் ஏற்கனவே தெரிந்துகொண்ட ஏழு தியாக்கொண்களில் இவரை தலைவராக நியமித்தார். ஜெனுவாரிஸ்,வின்சென்ட், மக்னுஸ், ஸ்தேவான், பெலிஸிமுஸ்,அகாபிடுஸ்,லாரன்ஸ் ஆகிய எழுவர் பரிசுத்த பிதா பாப்பு இரண்டாம் சிக்ஸ்த்துவின் தியோகோன்கள்.
     அவரிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கியமான பரிசுத்தபொருட்க்களில் மிகவும் முக்கியமானது யேசுநாதர் தன் இராப்போஜனத்தில் உபயோகித்ததாக சொல்லப்படும் ரசக்குப்பி ஒன்றாகும்.  லாரன்ஸ் இதனை தன் நண்பர்களில் நம்பிக்கைகுறிய ஒருவரிடம் ஒப்படைத்து அரகோனில் உள்ள அரச குடும்பத்தில் ஒப்படைக்கும்படி கொடுத்தார். அவர் சம்பத்தப்பட்ட
ஒரு துறவியிடம் அந்த ரசக்குப்பியை ஒப்படைத்தார். அது பலரது கைமாறி பலகாலம் அதைப்பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியாமல் போயிற்று. கடைசியில் இப்போது ஸ்பெயினில் வாலென்சியாவில் ஒரு தேவாலயத்தில் அது பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு இன்றளவும் அங்கே அது உள்ளது.
        இந்த காலகட்டத்தில் எப்படியோ முதலாம் அரசாணையிலிருந்து தப்பித்துவந்த திருச்சபையின் தலைவர் அடுத்த ஆண்டில் வந்த அரசாங்க ஆணையால் மாட்டிக்கொண்டார்.  அந்த இரண்டாம் அரசாங்க ஆணையின்படி எல்லா கிறிஸ்த்துவ மதத்தலைவர்களும் பரிசுத்தபிதா பாப்பானவர் முதற்கொண்டு கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், தியோக்கோன்கள்
அனைவரும் உடனடியாக கொல்லப்படவேண்டும்.
       இப்படியொரு சூழ்நிலை தமக்கு வரும் என்றுணர்ந்த பரிசுத்தபிதவும் ஆயர்களும் தம் மக்களை விசுவாசத்தில் ஊன்றியிருக்கும்படியாக பிரசங்கித்துவந்தார்கள். இதனால் கிறிஸ்த்துவர்கள்   ரகசிய குகைகளில் சந்தித்து பலிபூசையில் பங்கேற்று வந்தார்கள்.இப்படியாக பல ரகசிய குகைகள் அந்தகாலத்தில் இருந்தன.வேத காலணையின்போது உயிரிழந்த பல
கிறிஸ்த்துவர்களின் சடலங்கள் ரகசியமாக அந்த குகைகளில் அடக்கம் செய்யப்பட்டு வந்ததால் அவை பல கிலோ மீட்டர் தொலைவிற்கு பூமிக்கு அடியில் வெட்டப்பட்டு பாதுகாப்பாய்   இருக்கும்படியும் அதே சமயம் உள்ளே ரகசியமாக தங்குவதற்கு வசதியாகவும் காற்றோட்டமுள்ளதாகவும் ரகசிய வெளியேறும் வழிகளும் இருக்கும்படியும் அமைக்கப்பட்டன. இத்தகைய
ரகசிய சுரங்கங்களையும் குகைகளையும் அறியவந்த ரோமைய சிப்பாய்கள் இங்கே கூடும் நபர்களைப்பற்றி ரகசியமாக விசாரித்துவந்தனர்.
        இங்கே பரிசுத்த பிதா பாப்பானவர் இரண்டாம் சிக்ஸ்த்துஸ் தன் தியாக்கோண்களுடன் அடுத்தநாள் பலிபூசை நிறைவேற்ற வருவார் என்னும் தகவலுடன் மறைந்திருந்தனர்
     அடுத்தநாள் பரிசுத்தபிதா பாப்பானவர் தன் சகாக்களுடன் இந்த கலிஸ்த்தா ரகசிய குகையில் பலிபூசை நிறைவேற்ற வந்தார். அப்போது பாதி பூசையில், மறைந்திருந்த ரோமை வீரர்கள்   சடேரென பரிசுத்த பிதாவின் மீது பாய்ந்து அவரையும் அவருடனிருந்த அந்த ஏழு தியோக்கொண்களின்மீதும் பாய்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அப்போது பரிசுத்தபிதா
மக்கள் அனைவரையும் பார்த்து," என் மக்களே , வீனே யாவரும் பயப்பட வேண்டாம்... இது கடவுளுக்குறிய நேரம். அவருடைய சித்தம் நிறைவேற்றப்பட வேண்டும்..இந்த அழிந்துபோகும் உடலை துன்புறுத்துவோருக்கு அஞ்ச வேண்டாம். மாறாக ஆண்மாவையும் அழிக்க வல்ல கடவுளுக்கே அஞ்சுங்கள்...கடவுளுக்கு சாட்ச்சியாக வாழ இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...எல்லாம் வல்ல நம் கடவுள் நம்மோடு இருப்பாறாக ...ஆமேன்" என்றார்.
            அந்த பரிசுத்தபிதாவோடு அவருடன் வந்திருந்த அனைத்து தியாக்கோன்களும் கைது செய்யப்பட்டு ஆளுனனிடம் அழைத்து செல்லப்பட்டனர். ஆளுனன் அனைவருக்கும் சிரச்சேதம்
செய்யும்படி கட்டளையிட்டான். எனவே மீண்டும் அவர்கள் அனைவரும் அந்த கலிஸ்த்தா ரகசிய குகைக்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது லாரன்ஸ் " என் எஜமானரே... என் ஆண்டவரே...தேவரீர் என்னை விட்டுச்செல்ல வேண்டாம்...நானும் தேவரீருடனே கல்வாரிக்கு வர விரும்புகிறேன்..தேவரீரின் தலைமை தியாக்கோன் இல்லாமல் தேவரீர் என்றாவது ஆண்டவரின் சேவையில் ஈடுபட்டதுண்டா..இப்போதுமட்டும் தேவரீர் என்னை தனியே விடலாமா...அந்த அளவுக்கு நான் தேவரீரின் மனதில் நம்பிக்கை இல்லமல் போனதெப்படி.. .தேவரீர் எனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்ல மாட்டீரா?" என்று தயவாய் கேட்டார்..
         அப்போது அந்த பரிசுத்த பிதா," லாரென்ஸ்..நான் உன்னை தனியே விட்டுச்செல்ல காரணம் உண்டு.. திருச்சபையின் சொத்துக்களை நீர் பார்த்துவருவது நமக்கு உம்மீதுள்ள  நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது...மீளவும் அவ்வாறே இரும்..இன்றிலிருந்து நான்காம் நாள் நீர் நம்மோடு இணைந்துகொள்வாய்...நம் ஆண்டவறாகிய கடவுள் உம்மை மிகவும்   கணம்படுத்தும்படிக்கு உமக்கு கொடுமைகள் பல நிகழும். நான் வயோதிகன்..ஆனால் நீயோ நல்ல இளைஞன்..உன் அளவுக்கு என்னால் அந்த பாடுகளைப்பட முடியாது. என் ஆடுகளை   பொருப்பாக பார்த்துக்கொள்" என்றார். பிறகு நம் பரிசுத்தபிதா பாப்பரசர் இரண்டாம் சிக்ஸ்த்துஸ் அவரது திரு ஆசனத்தில் அமர்த்திவைக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு
கொல்லப்பட்டார். அவருடன் மேலும் ஆறு தியோக்கோண்களும் தலை வெட்டிக்கொல்லப்பட்டனர். நம் லாரன்ஸ் முறை வந்த போது ஒரு வீரன் அவரிடம்தான் ரோமின்   கிறிஸ்த்துவர்களின் பொக்கிஷங்கள் உள்ளன என்று போட்டுக்கொடுக்கவே மீண்டும் அவரிடம் விசாரணை ஆரம்பமானது.
ஆளுனன்," லாரன்ஸ்..உம்பேரில்தான் மரித்துப்போன சிக்ஸ்துஸ் கிறிஸ்த்துவர்களின் பொக்கிஷங்களை ஒப்புவித்திருகின்றாராமே...உண்மையா..நீர் என்னிடம் உன்மையைதான் பேச
வேண்டும் தெரிகிறதா? "
லாரண்ஸ்," ஆம் ஐய்யா.. என் எஜமான் என்னிடம்தான் ஐய்யா திருச்சபையின் பொக்கிஷங்களை ஒப்படைத்திருகின்றார்...இது உண்மைதான்"
ஆளுனன்," நல்லது லாரண்ஸ்.நீர் உம்மையை பேசுவது பற்றி மிகவும் சந்தோஷம்... உம் திருச்சபையின் சொத்துக்கள் எவ்வலவு தேரும் என்று சொல்ல முடியுமா...கிழக்கே நடக்கும் போரில் நம் ரோமை படையினருக்கு மிகுந்த சிலவு ஆவதால் அதற்காக நிறைய நிதி தேவையாக இருக்கிறது...கடவுளுக்குறியதை கடவுளுக்கும்...சீசருக்குறியதை சீசருக்கும் கொடு என்று உம் யேசுநாதர் கூற வில்லையா...அந்த செல்வங்கள் எல்லாம் எங்கே இருகின்றன..உடனே சொல்வாயாக"
லாரன்ஸ்," ஆளுநர் அவர்களே...என் எஜமானர் திருச்சபையின் சொத்துக்களை என்னிடம் பொறுப்பாக விட்டுச்சென்றது என்னவோ உண்மைதான்..ஆனால் அவை என்னென்ன என்றும்  அவை எங்கெங்கு இருகின்றன என்றும் இனிமேல்தான் நான் கணக்கெடுக்க வேண்டும்... பிறகே அவற்றிற்கு பொறுப்பாளியாக முடியும் . தாங்கள் திடீரென கேட்டால் நான் என்ன பதில்
சொல்வது. எனக்கு ஒரு மூன்று நாள் கால அவகாசம் கொடுத்தால் அவற்றை பற்றிய விபரங்களை உம்மிடம் தெரிவிப்பேன்".
ஆளுநன்," சரி லாரன்ஸ்...உமக்கு மூன்று நாள் காலக்கெடு தர அனுமதிக்கப்படுகிறது..உமக்குத்தெரிந்தவரை அவற்றின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று ஒரு தோராயமாக கூற முடியுமா?'
லாரன்ஸ்," கூறமுடியும் ஆளுநர் அவர்களே... எனக்குத்தெரிந்து திருச்சபையின் சொத்துக்கள் கணக்கில் அடங்காதன..உம் அரசன்.வலேரியனின் சொத்து மதிப்பை விட பல மடங்கு அதிகம்" என்றார்.
ஆளுநனின் கண்கள் அகல விரிந்தன.   ."  அடேங்கப்பா..ரோமைக்கிறிஸ்த்துவர்களின் சொத்துமதிப்பு அவ்வளவா?...இதில் சரி பாதியை நாம் வைத்துக்கொண்டு மீதியை நம் சீசருக்கும் கிழக்கே போய் இருக்கும் வலேரியனுக்கும் அனுப்பிவிட்டால் போயிற்று...நமக்கு அதிர்ஸ்ட்டதேவதை அருகிலேயே இருக்கிறாள் போலும் ..இவன் மூன்று நாள் தானே அவகாசம் கேட்கிறான்... இந்த மூன்று நாளில் என்ன குடி முழுகிப்போய்விடபோகிறது...மனதே ..நீ ஆனந்தக்களிப்படைவாயாக" என்று தன் மனதோடு பேசிக்கொண்டான். எனவே நம் லாரன்ஸ்   ஹிப்பொலினன் என்பவரின் பாதுகாவலில் விடுவிக்கப்பட்டார்... இந்த மூன்று நாள் அவகாசத்தில் லாரன்ஸ் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டார்.
நான்காம் நாள் காலையில் ஹிப்போலினன் வீட்டின்முன் நூற்றுக்கணக்கான ஏழைகள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூன், குருடு, செவிடு, நொண்டி, முடம், தொழு   நோயாளிகள் என ஒரு பெரும் பட்டாளமே கூடியிருக்கக்கண்ட ஹிப்போலினன் திடுக்கிட்டுப்போனான். அப்போது கிரசன்டைன் என்னும் ஒரு குருடன்," ஐய்யா...லாரன்ஸ்...நீர் கடவுள்
அருள் பெற்றவர் என்பதை விசுவாசிகின்றேன்... எனக்கு பார்வை கிடைக்கும்பொருட்டு எனக்காக என் மீது உம் கையை வைத்து மன்றாடும்" என்றான்.. அதற்கு லாரன்ஸ்," ஐய்யா உமக்கு  எம்மீதும் எம் கடவுளாகிய யேசுநாதர் மீதும் உமக்கு விசுவாசம் இருந்தால் அப்படியே ஆகட்டும் " என்று அவர் கண்கள் மீது தம் கையை வைத்து சிலுவை அடையாளமிட்டு அவனுக்காக மன்றாடவே அவன் பார்வை பெற்றான்.இந்த அதிசயத்தைக்கண்ட ஆளுனனின் உதவியாளன் ஹிப்போலினன் யேசுநாதரின் மீது நம்பிக்கைக்கொண்டான்.
      தனக்கு இன்று ஏறாளமான சொத்துக்கள் கிடைக்கும் என்று நம்பிவந்தான் ஆளுநன்." லாரண்ஸ்...திருச்சபையின் சொத்துக்கள் எங்கே?" என்றான்.
லாரன்ஸ்" ஐய்யா...இதோ..இவர்கள் அனைவரும்தான் திருச்சபையின் உண்மையான சொத்துக்கள்." என்றார். இத்தகைய பதிலை கொஞ்சமும் எதிர்பாராத ஆளுநன்," லாரண்ஸ்...நீர் என்னிடம் விளையாட வேண்டாம்... எங்கே தங்கமும் வெள்ளிப்பாத்திரங்களும் காசுகளும்?"
" ஆளுநரே..நான் உம்மிடம் விளையாடவரவில்லை....உண்மையில் இவர்கள் தான் திருச்சபையின் உண்மையான சொத்துக்கள்...ஆண்டவறாகிய யேசுவின் மீது ஆணையாக   சொல்லுகிறேன்...இவர்களின் ஆண்மாக்கள் கடவுளின் முன்னிலையில் மிகவும் விலையேறப்பட்டவை..இவைகளை ஒப்பு நோக்கும்போது...உம்மிடமும் உம் சீசரிடமும்..
உம் வலேரியனிடமும் இருக்கும் சொத்துக்கள் யாவும் வெறும் செல்லாக்காசுகளே" என்றார். இந்த பதிலை சற்றும் எதிர்பாராத ஆளுநன் கடும் கோபம் கொண்டான்...இனிமேல் இவனிடம்   பேசிப்பயன் இல்லை என்று உண்ர்ந்த ஆளுநன் தன்னை ஏமாற்றிய லாரன்சை பழிவாங்க கடுமையாக சித்திரவதை செய்யச்சொன்னான்.
      அதன்படி லாரண்ஸ் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்..வெற்று உடம்பில் கடுமையாக சவுக்கால் அடிபட்டார்..அவரது முதுகுத்தோல் அனைத்தும் உறித்தெடுக்கப்பட்டன.   பழுக்கக்காய்ச்சிய இரு இரும்புத்தட்டுகளாள் அவரது திருமேனி எங்கும் சூடு வைக்கப்பட்டன.   அப்போது ரோமுலு என்னும் ஒரு வீரன்," ஐய்யா லாரண்ஸ்..உம்மோடு ஒரு அதி அற்புதமுள்ள ஒரு இளைஞனை காண்கிறேன்...அவர் யாரோ?... அவர் தன் கையிலுள்ள லினென் துணியால் உம் காயங்களை துடைக்கும்போது அந்தக்காயங்கள் உடனே ஆறிப்போய் விடுகின்றன..நீர் உண்மையில் கடவுள் அருள் பெற்றவர் என்பதை நான் நம்புகிறேன்... நீர் உடனே தயவு செய்து எனக்கு உம் கையால் ஞாஸ்நானம் கொடுப்பீறாக" என்று வேண்டினான்..
        சற்று நேரம் கழித்து ஆளுநன் வந்தான். அவன் வாதிப்போர்களை அழைத்து," இன்று இரவுக்குள் இவன் கொல்லப்பட வேண்டும்...இவன் மரணம் மிகவும் துன்பம் உள்ளதாக இருக்க வேண்டும்...பழுக்க காய்ச்சிய இரும்பு கட்டிலில் இவனை கிடத்துங்கள்..உடனே மரணம் நேராதபடிக்கு இவனை குறைந்த வெப்பத்தில் வெகு நேரம் இரவு முழுவதும் வாட்டி வாட்டி...
தீய்த்து தீய்த்து கொல்லுங்கள்..ரோமை அளுனனை ஏமாற்றியதற்கு இவனுக்கு இந்த தண்டனை போதாது" என்றான்.
        நம் லாரன்ஸ் அந்த பொல்லாத இரவு முழுவதும் தீய்த்து கொடுமையாக வேதனைப்பட்டார். அந்த வேதனையில் " ஆண்டவரே இரக்கமாயிரும்" என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம்  அவருக்கு மட்டும் கேட்கும்படியாக," மகனே லாரன்ஸ்...பயப்படாதே...நாம் உன்னுடம் இருகிறோம்" என்றார். இந்த நேரத்தில் வானில் ஒரு பெரும் வால் நட்ச்சத்திரம் தோன்றியது.
அதன் தோற்றம் ஒரு நீர் திரள் நிறைந்ததுபோல் இருக்கவே அதற்கு பிற்காலத்தில் லாரண்சின் கண்ணீர் என்று பெயரிடப்பட்டது.
      லாரன்ஸ் மரணிக்கும் வேளையில் மிகவும் சந்தோஷமாக " இந்த இரவு விடியவே விடியாததுபோல் மிகவும் பிரகாசமாக இருக்கட்டும்..அடே வலேரியனே... தீயால் மீன் நன்றாக வெந்துவிட்டது...அதை இந்தப்பக்கமாக திருப்பிவிட்டு வெந்த பாகத்தை எடுத்து சாப்பிடு" என்றார்... வலேரியனின் ஆளுநன் மிகவும் வெட்க்கப்பட்டு தீயால் வாடும் ஒரு மனிதன்
தன்னை எப்படிக்கேவலப்படுத்துகிறான்... என்ன மனிதன் இவன் ..இவனால் எப்படி இப்படி பேச முடிகிறது" என்று மிகவும் அவமானப்பட்டு நொந்து போனான்.பிறகு லாரன்ஸ்   அந்த இரவு முழுவதும் கொடிய வேதனைப்பட்டு மரித்தார்..
          இவரது மரணத்தைப்பார்த்த அந்த ரோமை வீரன் ரோமுலுவும் அந்த ஆளுநனின் உதவியாளன் ஹிப்போலினனும்   கிறிஸ்த்துவர்களாக மாறி அவர்களும் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவுக்கு சாட்ச்சியாக மரித்து வேத சாட்ச்சி முடி பெற்றனர். நம் லாரன்சின் மரணத்தால் ரோம் முழுவதும்
ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் பெயரால் மனமாற்றம் பெற்றனர்.. அங்கிருந்த சிலை வழிபாடு என்னும் கலாச்சாரம் சிதைந்தது. இந்த வேத கலாபனைக்கு காரணமாக   இருந்த ரோமை சக்கரவர்த்தி வலேரியனை ஆண்டவறாகிய யேசுநாதர் கொடுமையாக வதைத்தார்..
            ரோமையை ஆண்ட வேறு எந்த சக்கரவர்த்தியும் அடையாத அவமானங்களை மன்னன் வலேரியன் அடைந்தான். ரோமை பேரரசின் வரலாற்றில் போரின்போது எதிரிகளாள் கைது   செய்யப்பட்டு மிகுந்த அவமானமடைந்த ஒரே ரோமைய பேரரசன் இவர் தான். அதாவது அன்றைய பெர்சிய [ இன்றைய ஈரான் ] மன்னர் ஷாபுர் 1 என்பவர் ரோமர்களுடன் எடேசா
என்னுமிடத்தில் நடந்த யுத்தத்தின்போது நம் ரோமைய மன்னர் வலேரியனை தோற்கடித்து கைதியாக்கினார். இதனால் ரோமைய சாம்ராஜ்ஜியமே மிகவும் கதிகலங்கிப்போயிற்று.
      இதை இயற்கை செய்த சதி என்பதா அல்லது யேசுவின் தீர்மானம் என்பதா என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. காரணம் இதுதான்..எடேசாவின் ரோமையை படை வீரர்களை ஒரு   கொள்ளை நோய் தாக்கியது. அதில் பல ரோமை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
      இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப்பயன்படுத்தினான் பெர்சிய மன்னன் முதலாம் சாபூர். ஏற்கனவே கொள்ளை நோயால் தன் ராணுவத்தை இழந்திருந்த ரோமை மன்னன்  வலேரியன் இந்த எடேசா போரில் பெர்சிய மன்னன் முதலாம் சாபூரிடம் தோற்று சரணாகதி அடைந்தான். அவரது சரணாகதியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பெர்சிய மன்னன்
முதலாம் சாபூர் தன் வார்த்தையை கைவிட்டு வலேரியனை ஏமாற்றினான். அவரை பல விதத்தில் கேவலப்படுத்தினான்.
      எங்கெல்லாம் பெர்சிய மன்னன் சாபூர் குதிரையிலிருந்து இறங்குவாறோ அங்கெல்லாம் ரோமைய மன்னன் வலேரியன் அவருக்கு முன்பாக மண்டியிட்டு இருக்க வேண்டும் .  அவர் முதுகின் மீது பெர்சிய மன்னர் சாபூர் கால் வைத்து தன் குதிரையிலிிருந்து இறங்குவார். இப்படியாக பல காலம் ரோமானியோய மன்னர் வலேரியன் அவமானப்படுத்தப்பட்டார்.
மன்னர் வலேரியனின் மரணம் மிகவும் கொடுமையானதாக இருந்தது. மன்னன் என்னும் முறையில் அவருக்கு மரியாதையான மரணம் கொடுப்பதாக பெர்சிய மன்னன் ஒரு உபாயம்   செய்தான்.. அதன்படி ரோமைய மன்னர் வலேரியனுக்கு உருக்கி வைக்கப்பட்டிருந்த தங்கக்குழம்பு அவருக்கு வாய் வழியே ஊற்றப்பட்டது. அது அவரது வாய் முதல் ஆசனம் வரை
வெந்து புண்ணாகும்படி செய்தது. வலேரியன் மிகவும் கஸ்ட்டப்பட்டு மரித்ததாக ஒரு சரித்திரக்குறிப்பு கூறுகிறது. எல்லாம் அவர் லாரன்ஸுக்கு செய்த கொடுமையால் வந்த வினை..
          பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்பது உண்மையாயிற்று. வேறு ஒரு சரித்திரக்குறிப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது.. அதாவது ரோமை மன்னன்  வலேரியன் தம்மை விடுவிக்க ஒரு பெரும் பணம் பிணைத்தொகையாக பெர்சிய மன்னர் சாபூரிடம் கொடுத்து தப்பிக்கப்பார்த்ததாகவும் ஆனால் மன்னர் சாபூர் அவரிடம் பணத்தை
வாங்கிக்கொண்டு சாட்டையால் அவரை நையப்புடைத்ததாகவும் அந்த சாட்டைஅடியில் மன்னன் வலேரியன் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்த ரோமைய மன்னன் வலேரியனின்  சடலத்தை பெற்றுக்கொண்ட ரோமானிய வீரர்கள் அவரை மன்னருக்குறிய முறையில் அவரை புதைத்ததாகவும் ஒரு சரித்திரக்குறிப்பு கூறுகின்றது.
       இந்த வலேரியனின் கதை இப்படி என்றால் அவரது மகன் கல்லியனின் மரணமும் வேதனையான ஒன்று. தகப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்தது என்பது போல கல்லியன் போட்ட  ஆட்டமும் கொஞ்சநஞ்சமல்ல. அவனும் தன் அதிகாரத்துகுட்பட்ட நாடுகளில் கிறிஸ்த்துவர்களை வதைத்தான்..இவனது ஆட்சியில் வெறுப்புற்ற மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.
இதற்கு பயந்த கல்லியன் தற்கொலை செய்துகொண்டான் என்று அவனைப்பற்றிய ஒரு சரித்திரம் சொல்லுகிறது.
          ஆனால் வலேரியனின் அதிகாரத்தால் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட நம் லாரன்ஸை ஆண்டவறாகிய யேசு நாதர் மிகவும் பெருமைபடுத்தினார். பழங்காலரோமை   கிறிஸ்த்துவர்கள் அவர்தம் திருச்சபையில் புனித ராயப்பர் புனித சின்னப்பர் இவர்களுக்கு அடுத்தபடியாக கொண்டாடும் புனிதராக லாரன்ஸ் கொண்டாடப்படுகிறார். புனித லாரன்ஸ்
வேதசாட்ச்சியாக மரித்தது ஆகஸ்ட் 10ஆம் தேதி கி.பி.258 ஆம் வருடம். அவர் கொல்லப்பட்ட இடத்தில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னர் புனித லாரன்ஸுக்காக ஒரு தேவாலயம்   கட்டி இருந்தார்.
         அது புனித லாரன்ஸ் பசிலிக்கா எனப்படுகிறது. அந்த தேவாலயத்தில் அவரை கொல்லப்பயன்படுத்திய இரும்பு கட்டில் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளது. புனித லாரன்ஸின்   உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. ரோமை கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் அவர் இறந்த அந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று மட்டும்
பாடம் செய்யப்பட்டஅவரது திரு சிரசை பொது மக்களின் பார்வைக்காக வத்திக்கானின் பொருட்காட்சியில் வைத்திருப்பார்கள்.
       

ரோமாபுரிக்கு திரு யாத்திரை செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஏழு தேவாலயங்களில் புனித லாரன்சின் பசிலிக்காவும் ஒன்று

புனித லாரன்ஸ் பாவிகளாக இருகின்ற எங்களுகாக வேண்டிக்கொள்ளும்.









No comments:

Post a Comment