" வீரத்தளபதி புனித எஸ்தாக்கியார்."
ரோம் சாம்ராஜ்ஜியத்தில் கி.பி.முதல் நூற்றாண்டில் கொடுங்கோலன் நீரோ துவங்கி வைத்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபணை கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை அதாவது தியோக்குலேசியன் ஆட்சிவரை தொடர்ந்தது.
ஒவ்வொரு கிறிஸ்த்துவனும் இந்த வேத கலாபணைகளைப்பற்றி அறிந்திருப்பது அவசியம். அப்போதுதான் அக்கால கிறிஸ்த்துவர்கள் ஆண்டவராகிய யேசுகிறிஸ்த்துவின்மீது எவ்வளவு அன்பும் பக்த்தியும் விசுவாசமும் கொண்டிருந்தார்கள். யேசுநாதர் தான் உண்மையான கடவுள் என்பதற்காக எவ்வளவு கடினமான பாடுகளையும் தாங்கிக்கொண்டு யேசுவுக்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு துணிந்தார்கள். அதற்கு பிரதிபலனாக யேசுநாதர் அவர்களுக்கு செய்திருக்கும் கைமாறு எத்துணை மாட்சிமைமிக்கது. பரலோகத்தில் அவர்கள் அனுபவிக்கும் பரமானந்தம் எத்தனை எத்தனை என்பதை வார்த்தையில் வர்ணிக்க முடியாதது. தன் நண்பனுக்காக உயிரைக்கொடுப்பதைக்காட்டிலும் உத்தமமான அன்பு வேறு ஒன்றும் இல்லை என்பது யேசுவின் அருள்வாக்கு. ஆக இந்த பத்து வேத கலாபணைகளிலும் அந்தந்த காலகட்டங்களுக்கு தகுந்தார்ப்போல் தகுதியானவர்களை கடவுள்தாமே தேர்ந்தெடுத்து இத்தகைய கொடிய வேத கலாபனைகளிலும் யேசுவே உண்மையான கடவுள் என்பதற்கு சாட்சியம் கூற இந்த உலகத்திற்கு அனுப்புகின்றார். இப்படிப்பட்ட சிலரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகின்றேன்.
நீரோ மன்னன் ரோமில் கி.பி. 67ல் முதல் வேத கலாபணையை ஆரம்பித்துவைத்தான். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானாலும் குறிப்பிடத்தக்கவர்கள் திருச்சபையின் தூண்களாக கருதப்படும் புனித இராயப்பரும் புனித சின்னப்பரும்.
மாமன்னன் டொமிஷியன் கி.பி.81ல் இரண்டாம் வேத கலாபனையை ஆரம்பித்து வைத்தான். இந்த வேதகலாபனையில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமாக ஏரோபேகைட்டிஸை சேர்ந்த டியோனீசியன் என்னும் வான சாஸ்த்திரியும், வேத சாஸ்த்திரியுமானவர். இவர்தான் யேசுநாதரின் சிலுவை மரணத்தின்போது நடந்த முழு சூரிய கிரஹணத்தைப்பற்றி ஆராய்ந்து தன்னுடைய குறிப்பில் பதிந்து வைத்தவர். மற்றும் புனித சின்னப்பரின் சீடரான திமோத்தி என்பவரும் முக்கியமானவர்கள்.
மாமன்னர் திராஜன்.இவர்தான் கி.பி.108 ல் மூன்றாம் வேத கலாபணையை ஆரம்பித்துவைத்தார். கிறிஸ்த்துவ மதத்தை தடை செய்யும் நோக்கத்தில் மன்னரையும் ரோமைய தெய்வங்களையும் கடவுளாக கருதி அவர்களுக்கு தீப தூப ஆராதணை காட்டினால் மட்டுமே ரோமைய பேரரசின் சாம்ராஜ்ஜியங்களுக்குட்பட்ட அந்தந்த நாடுகளில் வாழும் ரோமைய குடி உரிமை பெற்றவர்களுக்கு ரோமைய பிரஜா உரிமைப்பத்திரம் வழங்க முடியும். இந்த சட்டத்தை ஏற்காதவர்களுக்கு தேச துரோகம் குற்றம் சாட்டப்பட்டு, நாடுகடத்தல், அவர்தம் குடி உரிமையை பறித்தல், அவர்தம் சொத்துக்களை பறிமுதல் செய்தல், மேலும் கொடுமையின் உச்சகட்டமாக கொடுமையான தண்டனைகள் மூலம் கொல்லப்படுதால் ஆகியவை சட்ட பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த மன்னனுடைய ஆணையின்படியே அப்போஸ்த்தலரும் சுவிஷேஷகரான புனித அருளப்பரின் சீடரும் பெரும் வேத சாஸ்த்திரியுமான புனித இஞ்ஞாசியார் சிங்கங்களுக்கு இறையாக போடப்பட்டார். மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி கிறிஸ்த்துவர்கள் மிகவும் அநியாயமான முறையில் கொல்லப்பட்டனர்.
மன்னர் திராஜனைத்தொடர்ந்து மன்னர் ஏட்ரியன் ரோமை சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியானான். இவன் போட்ட வெறியோயாட்டம் வார்த்தையில் சொல்ல முடியாது. இன்றைய துருக்கியில் அராரத் மலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி கிறிஸ்த்துவர்கள் யேசுநாதரைபோலவே தலையில் முள்முடி சூட்டப்பட்டும் அவர்களின் மார்பில் இரும்பு ஊக்குகளாளும் கூரான ஈட்டிகளாலும், கூரான அம்புகளாலும் சொருகப்பட்டும் சிலுவையில் அறைந்தும் கொல்லப்பட்டனர். ரோமாபுரியில் மன்னன் ஏட்ரியனின் நம்பிக்கைகுறிய தளபதி கேத்தூலியுஸும் அவர் சகோதரரும் மேலும் நான்கு தளபதிகளும் கிறிஸ்த்துவத்தை ஏற்றுக்கொண்ட பாவத்துக்காக மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இவர்களைவிட தளபதி கேத்தூலியஸின் மனைவி புனித சிம்பரோசாவும் அவளுடைய ஏழு ஆண் பிள்ளைகளும் கிறிஸ்த்துவுக்கு சாட்சியாக மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இவனது ஆட்சிக்காலத்தில் ஃபிரான்ஸ் தேசத்தில் புனித சோஃபியாவும் அவளது வயதுக்குவந்த மூன்று பெண் குழந்தைகளும் யேசுவுக்காக தங்களின் இன்னுயிரை ஈந்தார்கள்...நம்முடைய கதா நாயகன் புனித எஸ்த்தேக்கியார் இந்த இரண்டு பேரரசர்களான திராஜன் மற்றும் ஏட்ரியன் காலத்திலேயே வாழ்ந்தார்.
இத்தகைய பின்னனியோடு நாம் கதைக்கு செல்வோம்.
ரோமாபுரியில் மாமன்னர் டொமீஸியனுக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாததால் அவர்தன் வாரிசாக திராஜன் என்னும் தளபதியை அடுத்த சீசராக அறிவித்தார். இத்தனைக்கும் தளபதி திராஜன் அரச பாரம்பரியப்படி இல்லாமல் எங்கேயோ ஒரு கிளையில் பிரபு வம்சத்தை சேர்ந்தவர். அக்காலத்தில் இஸ்பேனியா என்னும் இன்றைய ஸ்பெயின் நாட்டின் ரோமைய குடியுரிமை பெற்ற ஒரு பிரபு குடும்பத்தை சேர்ந்தவர். இந்த அறிவிப்பு வரும்போது நம் திராஜன் என்னும் தளபதி அக்காலத்தில் ஜெர்மானிய தேசத்தில் அங்கிருந்த பெர்பெர்கள் என்னும் காட்டு மிராண்டி கூட்டத்தை அடக்கும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் கோத்லாந்து எனப்படும் தேசத்தில் வாழ்ந்த மக்கள் கோத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் மேற்கு கோத்லாந்தில் வாழ்ந்தவர்கள் விசிகோத்தியர்கள் என்றும் கிழக்கு கோத்லாந்தில் வசித்து வந்தவர்கள் ஒஸ்திரகோத்தியர்கள் என்றும் அழைக்கப்பட்டிருந்தனர். அக்காலத்தில் இந்த ஜெர்மானிய மலை பிரதேசங்களிலிருந்து கிழக்கே கருங்கடல் வரை ரோமர்களின் ஆதிக்கம் இருந்ததால் இந்த கோத்தியர்கள் அவ்வப்போது கிளர்ந்தெழுவதும் அவர்களை அடக்கும் முயற்சியில் ரோமர்கள் ஈடுபடுவதும் சகஜம். நம் தளபதி திராஜன் அவர்கள் தனக்கு சீசர் பதவி தன்னைத்தேடி வந்ததும் உடனடியாக அவர் ரோமாபுரிக்கு ஓடிவந்து தன் சீசர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ரோமர்களை ஆளவேண்டுமானால் மக்களிடம் தனக்கு இருக்கும் ஆதரவு எவ்வளவு என்றும் இந்த செனட் அங்கத்தினர்களை எவ்வளவுதூரம் நம்ப முடியும் என்றும் தன் ராணும் தனக்கு எவ்வளவு அநுசரனையாக இருக்கும் என்பதையும் நன்றாக புறிந்துகொண்டால்தான் அந்த ரோமைய சிங்காதனத்தில் ஏறமுடியும் என்றும் இதில் ஏதேனும் தவறு நடந்தால் ஜூலியுஸ் சீசருக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் நேரும் என்றும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவே அவர் தன் சீசர் பட்டத்தை உடனடியாக ஏற்காமல் சற்றே காலம் தாழ்த்திவந்து வரும் வாழி எல்லாம் தன் அரசாங்கத்தை வழிமறிக்கும் தடைகள் என்னென்ன? அரசாங்க சட்டமெல்லாம் பொதுமக்களை சேராமல் தடுக்கும் காரணிகள் என்னென்ன, ராஜ்ஜிய விஸ்த்தரிப்புக்கு ஏதுவான வழிகள் என்னென்ன, விஸ்த்தரித்த ரோமைய சாம்ராஜ்ஜியத்தை காத்து பராமரிக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதுபற்றி எல்லாம் நேரில் ஆய்வு செய்து கொண்டே வந்தார்.
மாமன்னர் டொமிஷியான் இறந்ததும் அடுத்து தற்காலிகமாக அதாவது நம் திராஜன் ரோம் வந்து பட்டத்துக்கு வரும்வரை நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்புக்காக மார்க்கஸ் கோஷியுஸ் நெர்வா என்னும் ஒரு முதிய ரோமைய செனட் அங்கத்தினர் சீசர் பதவி ஏற்றார். அவருக்கு அரசியல் அனுபவம் உண்டே தவிர ராணுவ அறிவு என்பது கொஞ்சமும் கிடையாது. இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. அவரது அரண்மனையிலேயே ஏற்பட்ட ஒரு கலவரத்தைக்கூட அவரால் அடக்கமுடியாமல் போனது. இந்த நெர்வாவுக்கும் பிள்ளைகள் இல்லை.எனவே அவர் மீண்டும் நம் திராஜனையே சீசராக அறிவிக்க வேண்டி இருந்தது. அவர் ஜனவரிமாதம் 27 ஆம் தேதி கி.பி.98 ல் காலமாகவும் திராஜன் ரோமை பட்டிணம் வந்தடையவும் சரியாக இருந்தது. ரோம் வந்ததும் சற்றே ஓய்வெடுத்துக்கொண்டு ரோமைய சாம்ராஜிய அதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இப்போது நம் திராஜன் ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் ஏக சக்கரவர்த்தியாக கி.பி.99ல் முடிசூடிக்கொண்டபோது அவர் தனக்கு வைத்துக்கொண்ட பெயர் இம்பிரரேட்டர் சீசர் நெர்வா ஃபீலியுஸ் அகுஸ்த்துஸ் . அப்போது அவருக்கு வயது 43. நம் திராஜன் சீசர் பட்டத்துக்கு வந்ததும் செய்த முதல் காரியம் நெர்வாவின் ஆட்சியின்போது அரண்மனையில் நடந்த கலவரத்தை தூண்டிவிட்ட கஸ்பார் ஏலியனையும் அவன் கூட்டாளிகளையும் அரசாங்க விஷயமாக ஜெர்மனிக்கு அப்பால் உள்ள ரோமின் ஆதிக்கத்திற்குட்பட்ட நாட்டின் பாதுகாப்பு அரண்களை கவனித்துக்கொள்ளும் பொருப்பை அளித்ததுதான். அப்போது போன அவர்கள் மீண்டும் ரோமுக்கு திரும்பவே இல்லை. நம் திராஜன் எப்போதும் ரோம் மக்களின் நலன் விரும்பி ஆதலால் எப்போதும் போர் செய்யும் ஆர்வம் உள்ளவர். அவருக்கு வலது கரமாக இருந்து செயல்பட்ட தளபதிகள் பலர் இருந்தாலும் ப்ளாஸிடஸ் என்னும் ஒருதளபதியே அரசரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார். தளபதி ப்ளாஸிடஸின் வீரத்தின் மட்டில் யாருக்கும் சந்தேகம் என்பதே இல்லை என்றாலும் அவரது பதவியின்மேலும் அவரிடம் மன்னரின் கவனிப்பின்மேலும் பலருக்கும் ஒரு கண் இருந்ததால் ப்ளாஸிடஸை சமயம் வரும்போது கீழே தள்ளிவிட பலரும் அவர்தம் மனதில் எண்ணிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் மாமன்னருக்கு கிறிஸ்த்துவர்களைப்பற்றிய பல தவறான எண்ணங்கள் ஏற்படுத்தப்பட்டன.
கிறிஸ்த்துவர்கள் நம்பிக்கைகுறியவர்கள் அல்ல என்றும், நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றும், குழந்தைகளைக்கொண்று அவர்களின் பச்சை ரத்தத்தை குடிப்பவர்கள் என்றும் நாட்டில் ரகசிய கிறிஸ்த்துவர்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால் அவர்கள் ராணுவத்திலும் ஊடுருவிவிட்டார்கள் என்றும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு கிறிஸ்த்துவ ஆட்சியை ஏற்படுத்த காத்திருகின்றார்கள் என்றும் பலவாறாக துர்போதனைகளை ஏற்படுத்தவே மன்னர் திராஜன் கிறிஸ்த்துவர்களுக்கு எதிராக மூன்றாம் வேத கலாபணையை ஏற்படுத்தினார். இதை செய்ய அவர் ஒரு சட்டத்தையே ஏற்படுத்த வேண்டியதாயிற்று. அந்த சட்டம் என்ன சொல்லுகின்றது?. ரோமைய சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த மக்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் ராஜ விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியது தலையாய கடமை. அந்தந்த நாடுகளிலுள்ள ரோமைய பிரஜா உரிமை பெற்றவர்கள் அந்தந்த ஆளுநரின் முன்னிலையில் ரோமைய அரசரையும் அவர்தம் ரோமைய கிரேக்க தெய்வங்களையும் கடவுளாகக்கருதி அவர்களுக்கு தீப தூப ஆராதனை காட்டி தங்களுடைய ராஜ விசுவாசத்தை நிரூபிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மீண்டும் ரோமைய பிரஜா உரிமை கொடுக்கப்படும். இந்த சட்டத்தை மறுப்பவர்களுக்கு ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு கொடுமையன மரண தண்டனைக்கும் , நாடு கடத்தப்படவும், அவர்தம் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த அவசர சட்டம் ரோமைய ஆதிக்கத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் அனுப்பட்டு கண்டிப்பாக உடனே அமுல்படுத்தப்படவேண்டுமென உத்திரவிடப்பட்டது. இந்த அவசர சட்டம் பல யூதர்களுக்கும் கிறிஸ்த்துவர்களுக்கும் பேரிடியாய் இறங்கியது. ஒரே சர்வேசுரனை விசுவாசிகிறேன் என்பது கிறிஸ்த்துவர்களின் விசுவாச கோட்பாடு. நம்மைத்தவிர வேறே சர்வேசுரன் உனக்கில்லாமல் போவதாக என்னும் பத்துக்கட்டளையின் முதற்கட்டளை கிறிஸ்த்துவர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான கட்டளைகள். எனவே அவர்கள் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தார்கள். ரோமை சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியே ஆனாலும் அவரும் ஒரு மானிடப்பிறவிதான். மன்னர் என்னும் முறையில் அவருக்கு நாம் மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க நாம் கடமை பட்டிருகின்றோம். ஆனால் மானிடரை கடவுளாக ஏற்கவோ அவருக்கும் ரோமைய கிரேக்க தெய்வங்களாக கருதப்படும் ஏனைய தெய்வங்களுக்கோ நாம் தீப தூப ஆராதணை ஒருபோதும் காட்டப்போவதில்லை என்று அறிவித்தார்கள். இதனால் பலர் சொத்து இழந்தார்கள். குடும்பத்தை பிறிந்தார்கள், நாடு கடத்தபட்டார்கள், பலர் மிகுந்த வாதைபட்டு இறந்தார்கள்.தன்னுடைய ஆணையை பின்பற்றாதவர்கள் மீது மன்னர் திராஜன் கடும் கோபம் கொண்டார். கிறிஸ்த்துவர்களை தன்னுடைய ஜென்ம விரோதிகளாக பாவித்தார்.
மாமன்னர் திராஜன் சீசராக பதவி ஏற்ற சில காலத்திலேயே அரசாங்க விஷயமாக அந்தியோக்கியா வந்திருந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. காரணம் இதுதான். எங்கு நோக்கினும் கிறிஸ்த்துவர்களின் தேவாலயங்கள் இருக்கக்கண்டு மிகுந்த சினம் கொண்டார் மன்னர் திராஜன். அந்தியோக்கியாவில் தன்னுடைய ஆளுநரை அழைத்து, " என்னுடைய அரசாணையை ஏன் சரியாக அமுல்படுத்தவில்லை?" என சாடினான்.
அதற்கு ஆளூநர்," அரசரே பெருமானே, என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் அரசாணையை நான் இங்கு முழுமையாக அமுல்படுத்த இயலவில்லை" என்றான்.
" ஏன் ... என்ன காரணம்? என்று கடும்கோபமாகக்கேட்டார் மன்னர் திராஜன்.
" என் அரசே ... என் எஜமானரே... என்மீது கோபம் கொள்ள வேண்டாம். இங்கு கடவுளின் மனிதர் எனப்பேறுபெற்ற துறவி ஒருவர் இருகின்றார். அவர் யேசுநாதரின் தலைமை சீடர் பேதுருவால் ஆயராக நியமனம் செய்யப்பட்டவர். அவர் மீது கைவைத்தால் கடவுளின் சாபம் நமக்கு வரும்.. எனவே தங்களது சட்டத்தை நான் அமுல்படுத்த இயலவில்லை "
" அடே முட்டாள் ஆளுநனே... என்னைவிடவா அந்த யேசு நாதர் பெரியவராகப்போய்விட்டார். நாம் ரோம் சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தி. ஜூலியஸ் சீசர் காலம் துவங்கி இதுநாள் வரை ரோமின் அரசர்தான் ரோமைய குடிகளுக்கு கடவுள். அப்படி இருக்க ஒரு சாதாரணமான ஒரு சாமியாருக்கா நீ பயப்படுகிறாய்.. யார் அந்த சாமியார்...உடனே அழைத்துவா அந்த சந்நியாசியை என்னிடம் " என்றார் மன்னர் திராஜன்.
அதன்படி இஞ்ஞாசியார் என்னும் ஆயர் மன்னர் திராஜன் முன்னிலையில் கைது செய்யப்பட நிலையில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருந்தார். விசாரணை ஆரம்பமானது.
" ஓ...நீர்தாம் அந்த பரதேசி சாமியாரா ? "
" ஆம் அரசே நீர் சொல்வது உண்மைதான். இந்த உலகில் பிறந்த நாம் அனைவருமே பரதேசிகள்தான்...நீர் உட்பட" என்றார் இஞ்ஞாசியார்.
[ உண்மையில் மன்னர் திராஜன் ரோமைய குடியுரிமைபெற்ற ரோமர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட இஸ்பானிய தேசத்தில் ரோமர்களின் அரச பாரம்பரத்தை சேராத ஒரு பிரபு வம்சத்தில் பிறந்தவர். எனவே தான் இவரை ரோமை வம்சாவளியில் வராத ரோமைய பேரரசர் என்னும் பட்டப்பெயரிட்டு அழைகின்றனர். ஆகவே பரதேசி என்னும் பெயர் வெளிநாட்டுக்காரன் என்னும் அர்த்தத்தை கொடுப்பதால் இதுமன்னர் திராஜனுக்கு பெரும் அவமானமாகப்போய்விட்டது. அவர் பரதேசி என்பது உண்மைதான் என்றாலும் தன் பிறப்பை இந்த சாமியார் கேவலமாக கூறுகின்றார்...பெயருக்கு இதை மூடிமறைத்து இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டார். இருப்பினும் என்பிறப்பைப்பற்றி கூற இந்த சாமியாருக்கு என்ன உரிமை இருக்கின்றது? என்னைக்குறை சொல்ல இவர் யார்? என்று மன்னர் திராஜன் அவர் மீது அடங்காத கோபம் கொண்டான்.]
" அடப்பரதேசி சாமியாரே...நீர் பிறந்தது எங்கே? வளர்ந்தது எங்கே? வாழ்வது எங்கே? நீ அல்லவோ பரதேசி....நான் ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி.. என்னிடமே வியாக்கியானம் செய்கிறாய். நெஞ்சில் அரசன் என்ற மரியாதையும் இருக்கட்டும் பயமும் இருக்கட்டும் "
" அரசே நான் உண்மையைத்தானே சொன்னேன். இந்த உலகம் நமக்கு தற்காலிக வாசஸ்த்தலம் தான். பரலோகமே நம்முடைய கடைசி வாசஸ்த்தலம். அது நித்தியமானதும் கூட. அப்படி இருக்கையில் நான் கூறியதில் என்ன தவறு இருக்கிறது."
" அடேய் அதிகப்பிரசங்கி..நாம் அரசன்..என்னிடம் உனக்கு பயமில்லாமல் போனதெப்படி ?"
" அரசே... நான் பற்றற்றவன்..எனக்கு யாரிடமும் பயம் இல்லை. நான் பயப்படுவதெல்லாம் ஆண்டவராகிய யேசுநாதருக்கும் அவருடைய நீதிக்கும் மட்டுமே."
" ஆ... அடேய் சந்நியாசி... உனக்கு எவ்வளவு ஆணவம்... என்னை எதிர்த்துப்பேச உனக்கு என்ன தைரியம்.. நாம் உனக்கு அரசன் என்ற ஒரு பயமோ மரியாதையோ இல்லாமல் போனதெப்படி?"
" அரசே... நீவீர் அரசர் என்றமுறையில் என்னுடைய மரியாதை எப்போதும் உண்டு. ஆனால் நீவீர் கடவுள் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது."
" ஏன் முடியாது. இது அரச கட்டளை.. இதற்கு தலை வணங்க வேண்டியது உம்முடைய தலை எழுத்து. ஜூலியஸ் சீசர் காலத்திலிருந்து இப்படித்தான் இருகிறது. எனக்கும் எம் தெய்வங்களுக்கும் தீப தூப ஆராதணை காட்ட முடியுமா முடியாதா?"
" முடியாது அரசே.. ஆண்டவராகிய என் யேசுநாதரை அன்றி வேறு ஒருவரை நான் கடவுளாக ஏற்றுக்கொள் ள முடியாது."
" யேசுநாதர்தான் கடவுள் என்று அவரே உனக்கு சொன்னாரா ?"
" ஆம் அரசே... இதை நானே என் கண்ணாரக்கண்டேன்..நானே என் காதாறக்கேட்டேன்."
" ஏது ..ஏது.. விட்டால் அவரே உன்னை அள்ளி எடுத்து கொஞ்சி மொச் மொச் என முத்தமிட்டர் என்பாய் போலிருகிறதே"
" ஆம் அரசே... நீர் சொல்வதெல்லாம் உண்மை.. நீர் அன்று நடந்ததை நேரில் கண்டார்போல் கூறுகின்றீர் " என்றார் இஞ்ஞாசியார்.. அப்போது அவர் கண்களிள் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. அவரது நினைவுகளில் தான் சிறுவயது குழந்தையாய் இருக்கும்போது நடந்த ஒரு நிகழ்வு ஒரு சலனப்படமாக தோன்றியது.
[ யேசுநாதருடைய தலைமை சீடர் புனித இராயப்பர் என்னும் பேதுரு இந்த அந்தியோக்கியா என்னும் ஊரில்தான் தன்னுடைய திருச்சபையை ஆரம்பித்தார். அவரது வாரிசாக புனித இஞ்ஞாசியாரை அந்தியோக்கியாவின் ஆயராக அறிவித்தார்.
இந்த இஞ்ஞாசியாரை யேசுநாதரே தேர்ந்தெடுத்து தன் அன்பான சீடரும் சுவிஷேகருமான புனித யோவானிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது யேசுநாதர் ஒரு முறை தன் சீடர்களுடன் கலிலேயாவில் உரையாடிக்கொண்டிருக்கையில் அவர்களுக்குள் யார் பெரியவர் என்னும் ஒரு சர்ச்சை நடந்தது. அப்போது சில பெண்கள் தத்தம் குழந்தைகளுடன் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்திருந்தனர். இந்த குழந்தைகள் போட்ட கூச்சலால் யேசுவின் சீடர்கள் அவர்களை விரட்டினர். அப்போது யேசுநாதர்," சிறு குழந்தைகளை தடுக்க வேண்டாம் அவர்களை என்னிடம் வர விடுங்கள். ஏனெனில் மோட்ச்ச ராஜ்ஜியம் அவர்களுடையதே என்றார். அப்போது அவர் ஒரு ஐந்து வயது பாலகனை அள்ளி எடுத்து அவன் கண்ணங்களில் முத்தமிட்டுக்கொஞ்சி ," நீங்கள் இத்தகையோரைப்போல் மாறாவிடில் மோட்ச்ச ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது. எனவே உங்களுக்குள் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் முதலில் சிறியவனாக இருக்கட்டும் . அருளப்பா..இதோ இவனை நீ இனிமேல் உன் பொருப்பில் வைத்துக்கொள் " என்றார். இந்தக்குழந்தையின் பெற்றோர் வசதியற்ற ஏழை நெசவாளிகள். எனவே அவர்களும் இது கடவுளின் காரியம் என அந்தக்குழந்தையை அவரிடமே கொடுத்து விட்டார்கள். அருளப்பரும் அந்த குழந்தையை வாங்கி தன் கைகளில் எடுத்துக்கொண்டபோது அந்த குழந்தையின் கண்களில் இரு சிங்கங்கள் தோன்றி மறையக்கண்டு திடுகிட்டார். அப்போது யேசுநாதர் ஒரு மென்மையான புன்னகை சிந்தி " என்ன பார்கிறாய் அருளப்பா... ஆம் .. அவன் அந்தியோக்கியாவின் சிங்கம் " என்றார்.அன்று முதல் இஞ்ஞாசியார் சுவிஷேகரான அருளப்பரின் நேரடி பராமரிப்பில் வாழ்ந்துவந்துமில்லாமல் அவருடைய சீடராகவும் மாறினார்.]
" அடேய் பரதேசி... என்ன மௌனம்..உன் மனதில் என்ன பெரும் சிங்கம் என்னும் நினைப்போ ? என்றார் மன்னன் திராஜன்.
" ஆம் அரசே ...நீர் சொல்வது முற்றிலும் உண்மை. நான் என் ஆண்டவராகிய யேசுநாதரால் அந்தியோக்கியாவின் சிங்கம் என்னும் பட்டம் பெற்றவன் "
" ஓஓஓ... உம் மனதில் இப்படி ஒரு நினைப்போ... நான் ரோமைய சிங்கம். என்முன் இன்னொரு சிங்கம் இருப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். உன் முடிவை நீயே தேடிக்கொண்டாய். உன்னை இப்போதே தீர்வை இடுகின்றேன். என்னை கடவுளாக ஏற்றுக்கொள்ளாததினால் என்னை அவமானப்படுத்திய குற்றத்திற்காகவும் எம்முடைய தெய்வங்களை வணங்க மறுத்த குற்றத்திற்காகவும், என்னை மதியாமல் நேருக்குனேர் பேசிய குற்றதிற்காகவும் உம்மை கொலைத்தண்டனைக்கு கை அளிக்கிறேன். நீரே உம்மை அந்தியோக்கியாவின் சிங்கம் என்று கூறியதால் உம்மை சிங்கங்களுக்கு இறையாக போட உத்திரவிடுகின்றேன். நாம் ராஜ்ஜியபரிபாலனம் முடிந்து ரோம் வந்த பிறகு அங்கே மரண விளையாட்டரங்கத்தில் சிங்கங்களுக்கு இறையாகப்போட உத்திரவிடுகின்றேன்" என்றான் மன்னன் திராஜன்.
“ மிக்க நன்றி அரசே...மீண்டும் என்னை மன்னியுங்கள். தாங்கள் என்னை சைத்தான் என்பதைத்தான் ஆட்சேபிகிறேன். எந்த சைத்தானும் இந்த தியோபிலுஸ் முன்னால் நிற்காது ஓடிவிடும்..” என்றார் இஞ்ஞாசியார்.
அது யாரது தியோபிலுஸ்.?” என்றார் மன்னர் திராஜன்.
“ அரசே அது நான் தான். தியோபிலுஸ் என்றால் கடவுளை சுமப்பவன் என்பது பொருள். எனக்கு தியோபிலுஸ் என்ற பெயரும் உண்டு. தங்கள் தண்டனையை நான் முழு மனத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். தங்கள் விருப்பத்தை என் கடவுளின் சித்தமாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார் இஞ்ஞாசியார்.
“ இந்த பரதேசி சாமியார் மீண்டும் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்த மன்னர் திராஜன் “ இரு இரு..உன்னை நான் என்ன செய்கிறேன் பார் “ என்று உறுமியபடி தன் முகத்தை திருப்பிக்கொண்டு வேகமாக வெளியே சென்றான்.
மன்னர் திராஜன் சென்ற பிறகு இஞ்ஞாசியாரின் சீடர்கள் அவருடைய கால்களில் விழுந்து ஆசீர் பெற்றார்கள். இஞ்ஞாசியார் எப்பேர்பட்ட ஒரு வேத சாஸ்த்திரி. அவருக்கு எத்தகைய ஒரு கொடுமையான மரணத்தை மன்னன் அளித்திருகின்றான்.. இத்தகைய ஒரு தண்டனையிலிருந்து அவரை தப்புவிக்க முடியுமோ என ஏங்கினார்கள். ஆனால் இஞ்ஞாசியார் அவர்களை தடுத்து," என் மரணத்திற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். இது கடவுளின் சித்தம். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது ஒன்றுக்கு நூறாய் பலன் தராது என நம் ஆண்டவராகிய யேசுநாதர் கூறவில்லையா. அதேபோல் நானும் சிங்கங்களின் வாயில் நன்றாக கடிபட்டு நொறுக்கப்பட்டு மாவாகி என் ஆண்டவருக்கு உகந்த ரொட்டியாய் மாறவேண்டும்... ஆகவே என் நண்பர்களே என்னை விடுவிக்க யாரும் யாதொரு முயற்சியையும் தொடர வேண்டாம்..போய்வாருங்கள்" என்றார். அவர் அந்தியோக்கியாவிலிருந்து அந்த பைசாந்தியத்தை [ இன்றைய துருக்கி ] கடந்து போகும் போது ஆங்காங்கே இருந்த திருச்சபையின் தலைவர்கள் அவரை கப்பலில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சமயங்களில் அவர் எழுதிய ஏழு நிரூபங்கள் சரித்திரப்புகழ் பெற்றன.
மன்னர் திராஜன் ரோமில் தன் அரசவையில் இருக்கையில் தேசியா [ இன்றைய ரொமானியா ] தேசத்திலிருந்து ஒரு தூதுவன் வந்தான். அரசரை முறைப்படி வணங்கி தான் வந்த காரியத்தை விளக்கினான்.
" தூதுவனே...என்ன சொல்கிறான் தேசியன். ஒழுங்காக கப்பம் கட்ட சம்மதிக்கிறானா... இல்லையா ? "
" அரசே தேசியாவும் [ இன்றைய ரோமானியா ] மோசியாவும் [ இன்றைய செர்பியா ] கூட்டு சேர்ந்துகொண்டு நம் ரோமைய ஆதிக்கத்தை எதிர்கின்றன. நம்முடைய ரோமைய படைகலண்களுக்கு எப்போதும் ஆபத்து சூழ்ந்திருகின்றது."
" சரி இரண்டு நாடுகளுக்கும் நாம் சரியான பாடம் கற்பிப்போம். இந்த முறை அவர்களை நான் சும்மா விடப்போவதில்லை.. மாமன்னர் டொமெஷியன் ஆட்சிக்காலத்திலிருந்தே நாம் அவர்களை அடக்கிவைத்திருகிறோம். தேசியனும் மோசியனும் நம்மிடம் காலில் விழாத குறையாக கேட்டுக்கொண்டதால் நாம் அவர்களுடன் யுத்த உடன்படிக்கை செய்திருந்தோம். நீண்டநாட்களாக அவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டது நம் தவறுதான். அதனால் அவர்களுக்கு பயம் விட்டுப்போயிற்று. இருக்கட்டும் அவர்களுக்கு நான் சரியான பாடம் கற்பிக்கிறேன்.. தூதுவனே அங்கிருக்கும் நம் தளபதிக்கு நம்முடைய ஆதரவு எப்போதும் உண்டு என்று கூறு. தேசியா மீது நான் உடனே படை எடுக்க ஆணை பிறப்பிக்கிறேன்" என்றார் மன்னர் திராஜன். அடுத்ததாக " எங்கே நம் நம்பிக்கைகுறிய தளபதி ப்ளாஸிடஸ் ?" என்றார் மன்னர் திராஜன். அடுத்த நிமிடம் அரசர் திராஜன் முன்பாக ராணுவ முறைப்படி சல்யூட் செய்து நின்றார் தளபதி ப்ளாஸிடஸ்.
" நல்லது ப்ளாஸிடஸ்... உன்னை நம்பி உன்னிடம் ஒரு பெரும் காரியம் ஒப்படைக்கப்போகின்றேன்.. அதை நல்ல விதமாக முடித்துவருவாய் என நம்புகின்றேன் " என்றார் மன்னர்.
" அரசே... தாங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக எப்போதும் நடந்துகொள்வேன். தாங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எனது நன்றி உறித்தகுக." என்றார் தளபதி ப்ளாஸிடஸ்.
" நன்று சொன்னாய் என் நல்ல ஊழியனே..நமக்கு பலகாலமாக தொல்லைகொடுத்துவரும் தேசியாவையும் மோசியாவையும் ஒரு கை பார்த்து வருவோம். தளபதி ப்ளாஸிடஸ்... உனக்கு ஒரு சேதி தெரியுமோ?" என்றார் மன்னர்.
" சொல்லுங்கள் அரசே" என்றார் ப்ளாஸிடஸ்.
" தளபதி. மோசியாவும் தேசியாவும் டூனபே நதிக்கு வடக்கில் உள்ள நாடுகள். இந்த டூனபே நதிநீர் பாசனத்தால் அங்கிருக்கும் விளை நிலங்கள் அதிக விளைச்சளைத்தருகின்றன. அங்கிருக்கும் மக்களும் நல்ல வீரர்கள். இதைவிட நமக்கு இந்த தேசியாவின்மீது ஒரு கண் எப்போதும் உள்ளது. அது ஏன் தெரியுமா?"
" சொல்லுங்கள் அரசே... அடிமை நான் கேட்டுக்கொண்டிருகின்றேன் ".
" ப்ளாஸிடஸ்... இந்த தேசியா நாடு பல இயற்கை வளங்கள் நிறைந்தது. விஷேஷமாக பொன்னும், வெள்ளியும், தாமிரமும் இங்கே அதிகம் விளைகின்றன. நமக்கு வேண்டிய செல்வக்கலஞ்சியம் அங்கே இருகின்றது. எனவே மோசியாவும் தேசியாவும் நம்மிடம் இருக்கும் வரை நமக்கு செல்வத்துக்கும் பஞ்சமில்லை.... உணவுக்கும் பஞ்சமில்லை. இத்தகைய இரு அருமையான நாடுகளை நாம் இழந்து போகலாமோ? இப்போது நான் சொல்லவந்த விஷயம் என்னவென்று உனக்கு புறியும் என நினைகிறேன் " என்றார் மன்னர் திராஜன்.
" அரசே... உங்கள் எண்ணங்களை நான் அறிவேன்... எனக்கு அந்த நாடுகளைப்பற்றி மிகவும் நன்றாகத்தெரியும்."
" ப்ளாஸிடஸ் உடனே படை எடுப்பை ஆரம்பி..
மாமன்னர் திராஜனின் படைகள் தேசியாவை தவிடுபொடி ஆக்கியது. தேசியாவின் மன்னன் தேசிபாலு மிகவும் மூர்க்கமாகப்போரிட்டான். மன்னர் திராஜனின் படைகளும் தேசிபாலுவின் படைகளும் பல நாட்க்களாக தொடர்ந்து போரிட்டதன் பயனாக இரு படைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தில் நம் வீரத்தளபதி ப்ளாஸிடஸ் காட்டிய வீரம் மிகவும் பெரிதாக பேசப்பட்டது. இரு படைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டதால் தேசியாவின் மன்னன் தேசிபாலு சமாதானக் கொடியுடன் வந்தான். பிறகு சம்பிரதாயமாக சமாதானம் பேசி இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி தேசியாவின் மன்னன் தேசிபாலு அந்த டூனபே நதிக்கறைக்கு பலகாத தூரத்திற்கும் அப்பால் தன்னுடையை எல்லையை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். போரில் ஏற்பட்ட நஸ்ட்டத்திற்கு ஈடாக ஒரு பெரும் தொகையாக தங்கத்தை தரவேண்டும் என்றும் இனிமேலும் ரோமுக்கு எதிராக எவரும் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாதென்றும் அவர்கள் நாட்டிற்கு வேறு எதிரிகள் யாரும் வந்தால் ரோம் உடனடியாக இவர்களின் உதவிக்கு வரும் என்றும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார்கள். பிறகு வெற்றி வீரர்களாக போரில் தாங்கள் கொள்ளையிட்ட பொருட்க்களுடன் ரோமுக்கு திரும்பி வந்தார்கள். இந்த வெற்றியைக்கொண்டாட ரோமில் உள்ள கொலோசியத்தில் [ மரண விளையாட்டரங்கம்] பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரோமைய மன்னர் திராஜன் ஏற்படுத்திய மூன்றாம் வேத கலாபணை கிறிஸ்த்துவர்களின் சரித்திரத்தில் பெரும் இரத்தக்கறையை ஏற்படுத்தியது. கிறிஸ்த்துவர்களின் சொத்துக்களை சூறையாட அவர்தம் சொந்தங்களே அவர்களைக்காட்டிக்கொடுத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான கிறிஸ்த்துவர்கள் ரோமாபுரியின் ஆதிக்கத்துக்குட்பட்ட ராஜ்ஜியங்களில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இவர்களின் கொடூரமான மரணம் ரோமர்களுக்கு பெரும் கேளிக்கையாகவும் வேடிக்கை பொருளாகவும் ஆனது. இப்படியாகத்தான் அன்று திராஜனுடைய தேசியன் யுத்தத்தின் வெற்றிவிழா ரோமிலுள்ள கொலோசியம் என்னும் மரண விளையாட்டரங்கத்தில் பெரும் கோலாகலமாக கொண்டாடபட்டது.அந்த வெற்றித்திருவிழ இருபது நாட்களுக்கு நடைபெற்றது. தினமும் காலை முதல் மாலை வரை சமயங்களில் தீவட்டிகளின் வெளிச்சத்தில் இரவு வெகுநேரம் வரை இந்த வீர விளையாட்டுக்கள் தொடரும்.
இங்கு நடைபெறும் வீர விளையாட்டுக்களில் வெற்றி தோல்வி என்பது அந்தந்த வீரர்களின் வீரம்,சமயோஜித புத்தி, அதிர்ஸ்ட்டம் ஆகியவற்றைப்பொறுத்தது. போட்டியில் வெற்றிபெற்றவன் தோல்வியுற்றவனை கொல்ல வேண்டும்.இப்படியாகவும் பல அப்பாவி வீரவாலிபர்கள் சிலபல சதிகளை அறியாமல் தோல்வியுற்று தங்கள் உயிரை இழந்தார்கள். மேலும் சில கிறிஸ்த்துவ வீரவாலிபர்கள் பிறர் அன்புக்கு எதிரான செயல் இது என விளையாட்டரங்கத்தில் சண்டை இட விரும்பாமல் சும்மாவே நின்றார்கள். இவர்கள்மீது கொடும் வனவிலங்குகள் ஏவிவிடப்பட்டன. அவைகள் இந்த வீரவாலிபர்களைக்கடித்து குதறி கொல்லும். இதைப்பார்த்து ரோமர்கள் கைகொட்டி தங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்துவார்கள்.
வீரவிளையாட்டின்போது தோல்வியுற்றவனை ஜெயித்தவன் கொல்லவது நம் தளபதி ப்ளாஸிடஸுக்கு நியாயமாகப்படவில்லை. இங்கு நடப்பது போர் அல்ல. விளையாட்டு. அவரவர் தம் சாமார்த்தியத்தை காட்டும் இடம். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வியிலிருந்துதானே பாடம் கற்றுக்கொள்ள முடியும். ஆக தோல்வி என்பதே வெற்றியின் முதல்படி. வெற்றியும் சதமல்ல. தோல்வியும் சதமல்ல. இப்படி இருக்கையில் எதற்காக இந்த அநியாயமான படுகொலைகள். மேலும் இங்கே உயிரிழக்கும் கிறிஸ்த்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அரசனுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராகவோ இவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லையே....பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள்
என்று அப்பாவிகளான இவர்களை ஈவிரக்கம் இல்லாமல் கொல்வது எந்த விதத்தில் நியாயம்? என்று இத்தகைய கேள்விகளாள் நம் தளபதி ப்ளாஸிடஸுக்கு இந்த மரண விளையாட்டரங்கத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் மன்னர் திராஜன் இங்கே இருக்கும்போது தான் இவ்விடத்தைவிட்டு வெளியேற முடியாதே. ஆக நம் தளபதிக்கு அங்கிருக்கப்பிடிக்கவில்லை என்பதை அவரது முகத்தோற்றத்தை வைத்து ஒருவாறாக உணர்ந்துகொண்டார் மன்னர் திராஜன்.
" ப்ளாஸிடஸ்... என்ன ஆயிற்று உனக்கு?...எத்தனையோ போர்க்களங்களில் கலங்காதவனாகிய உனக்கு இந்த வீர விளையாட்டுக்கள் ஏன் பிடிக்காமல் போயிற்று. இந்த வெற்றி விழா அனைத்தும் உனக்காகத்தானே ...உன்னை கௌரவிக்கத்தானே நான் ஏற்பாடு செய்தேன் " என்றார் மன்னர் திராஜன்.
" அரசே... என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இங்கு நடப்பது போர் அல்ல...இங்கே கொல்லப்படும் அப்பாவிகளைக்கண்டு ஏனோ என் மனம் கலங்குகின்றது. போர்க்களம் என்றால் என் மனது எதிரிகளைக்கண்டு வெகுண்டெழும்...அங்கு என் எதிரிகளின் ரத்தச்சகதியில் பெரும் ஆர்வத்தோடு மூழ்கித்திளைத்தவன் நான். அப்போதெல்லாம் கலங்காத என் மனம் இப்போது கலங்குகின்றது. விளையாட்டில் தோல்வியுற்ற வீரர்கள் கொல்லப்படுவது எனக்கு நியாயமாகப்படவில்லை. இந்த வீரவாலிபர்களை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவர்களுக்கு பயிற்சிகொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்கிறேன். நம் நாட்டிற்கு இதுபோன்ற ராணுவ வீரர்கள் அதிகம் தேவை. இங்கே அநியாயமாக கொல்லப்படும் கிறிஸ்த்துவ
வாலிபர்களையும் என்னிடம் ஒப்படையுங்கள். அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் சர்வ சாதாரணமாக கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை அரசே" என்றார் தளபதி ப்ளாஸிடஸ்.
" ஓஓஓ.. இதுதான் உன் பிரச்சனையா... அதை என்னிடம் விட்டுவிடு... நீ அதிகமாக போர்செய்துவிட்டாய்... அதனால்தான் உன் மனதில் இத்தகைய போராட்டங்கள்.. உனக்கு இப்போது ஓய்வு தேவை... கொஞ்சம் பொறு. இன்று இருபதாம் நாள் திருவிழா அல்லவா..இன்றைக்கு விஷேஷமாக ஒரு விளையாட்டு.ஏற்பாடாகி இருகின்றது. அந்தியோக்கியாவிலிருந்து ஒரு சிங்கம் வந்திருகின்றது . நீ அதை அவசியம் பார்க்கத்தான் வேண்டும்... எங்கே அந்த அந்தியோக்கியாவின் கிழட்டு சிங்கம்.. கொண்டுவாருங்கள் என் கண்முன்னே. அடேய் பரதேசி சாமியாரே... அன்று என்னை என்னவாகப்பேசி அவமானப்படுட்த்திவிட்டாய். நீ அந்தியோக்கிய சிங்கமானால் நான் ரோமைய சிங்கம்... இப்போது ஜெயிக்கப்போவது யார் என்று பார்ப்போம் " என்றார் மன்னர் திராஜன்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு வயதான சாமியார் கயிறுகளால் கட்டி இழுத்து வரப்பட்டார். அவர்தான் அக்காலத்தில் பெரும் வேத சாஸ்த்திரியாக கருதப்பட்ட புனித இஞ்ஞாசியார். இவரைக்கண்ட மாத்திரத்தில் அந்த மரண விளையாட்டரங்கமே அதிர்ந்துபோகும் அளவுக்கு பெரும் ஆரவாரம் எழுந்தது. அவரை நிலையாய் நிற்க வைக்க மைதானத்தில் இரும்பு ஆப்புகள் நடப்பட்டன. அப்போது புனித இஞ்ஞாசியார் அவர்களைப்பார்த்து," என் சகோதரனே... இதெல்லாம் வீண் வேலை.. என் கட்டுகளை அவிழ்த்துவிடு.. நான் எங்கும் போய்விட மாட்டேன்." என்றார். அவன் " ஐயா... இது அரசாங்க ஆணை.. என்னை மன்னியுங்கள்" என்றான். அவன் ரகசியத்தில் ஒரு கிறிஸ்த்துவன். புனித இஞ்ஞாசியாரைப்பற்றி நன்கு அறிந்தவனாகையால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்..மேலும் ஆசீரும் கேட்டான்.. " சகோதரா... உன்மீது எனக்கு வருத்தம் இல்லை...நீ சமாதாணமாகப்போய்வா " என்றார்.
அவன் சென்றபிறகு அந்த அரங்கத்தினுள் இரண்டு வாலிப சிங்கங்கள் அனுப்பப்பட்டன. அவைவந்து நம் இஞ்ஞாசியாரைப்பார்த்தவுடன் அவர்முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டன. சில நிமிடநேரம் அளவாய் அவை அவரை ஒன்றும் செய்யவில்லை. நம் புனித இஞ்ஞாசியாரும் அவற்றை அன்போடு நாய்குட்டிகளைபோல தடவிக்கொடுத்தார். இதைக்கொண்ட ரோமானியர்கள் சிங்கங்களின்மீது கற்களைவீசி அவற்றை கோபமூட்டினர். நம் இஞ்ஞாசியார் தன் கண்களைமூடி கைகளைக்குவித்து தன் எஜமானர் யேசுநாதரிடம் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டினார்.அந்த சிங்கங்கள் அவரை இருமுறை வலம் வந்தன. ஒரு சிங்கம் அவரது தோளின்மீது ஏறி அவரின் முகத்தை பார்த்தது. அவரின் கண்களின் இப்போதும் இரண்டு சிங்கங்கள் தோன்றவே அவை இதோ நம் எதிரி என்று நினைத்ததுபோல பெரும் கர்ஜனை போட்டது. அவ்வளவுதான்.. அந்த இரண்டு சிங்கங்களும் மிகுந்த கோபாவேசம் கொண்டு அவரின் மீது பாய்ந்து குதறின. இதில் விஷேஷம் என்னவென்றால் எந்த வனவிலங்கும் தன் இறையை முதலில் கழுத்தைப்பிடித்துகுதறி அதைக்கொண்ற பிறகே உண்ணும். ஆனால் தேவ சித்தம் வேறுமாதிரி இருந்தது. இந்த இரண்டு சிங்கங்களும் அவரை கொல்லாமலேயே அவரின் கைகளையும் கால்களையும் உடம்பின் பல பகுதிகளையும் கடித்துக்குதறின.. அவரின் ரத்தம் பீறிட்டு அடித்தது. அந்த இரு முரட்டு வாலிப சிங்கங்கள் புனித இஞ்ஞாசியாரின் உடலின் பல பகுதிகளையும் அவர் உயிருடன் இருகும்போதே கடித்துத்தின்றன. அதாவது நம் புனித இஞ்ஞாசியார் தான் மரிக்கும் வரை தன்வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருந்தார். இறுதியில் ஒரு சிங்கம் அவரது சிரசை கடித்துத்தின்றது. ஒருவழியாக புனித இஞ்ஞாசியார் மறைந்தார். புனித இஞ்ஞாசியாரின் மறைவுக்குப்பிறகு அவருடைய எலும்புகள் சில அவருடைய சீடர்களாள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தாலும் கால வெள்ளத்தால் அவை அடித்துசெல்லப்பட்டுவிட்டன. கிடைத்த எலும்புகள் சில ரோமையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பிறகு அந்தியோக்கியாவில் புனித இஞ்ஞாசியாரின் பெயரால் ஒரு தேவாலயம் கட்டப்பட்டு அங்கே பலகாலம் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பெர்சியர்கள் அந்தியோக்கியாவை கைப்பற்றிய பிறகு
அந்தியோக்கியாவிலிருந்த இஞ்ஞாசியாரின் புனித அருளிக்கமான அவரது எலும்புகள் மீண்டும் ரோமுக்கு கொண்டுவரப்பட்டு இன்றளவும் ரோமிலேயே புனித க்ளமென்ட் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கிருப்பது அவரது ஒரு தொடை எலும்பு மட்டுமே என்று ஒரு குறிப்பு உள்ளது.
ஒருவழியாக இந்த இருபது நாள் வெற்றிவிழா முடிவுக்கு வந்தது. நம் புனித இஞ்ஞாசியரின் மறைவும், மேலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்த்துவர்களின் உயிர்த்தியாகமும் நம் தளபதி ப்ளாஸிடஸின் மனத்தில் பெரும் உறுத்தலாக இருந்தன. இத்தனைக்கும் தளபதி ப்ளாஸிடஸ் ஒரு கிறிஸ்த்துவன் அல்ல என்றாலும் அவர் மனதில் ஏதோ ஒரு பெரும் பாரம் அவரை வருத்திக்கொண்டுதான் இருந்தது. இவரது மன மாற்றத்தை கவனித்த அவரது சக தளபதிகள் நம் ப்ளாஸிடஸ் மனம் மாறி கிறிஸ்த்துவர் ஆகிவிட்டார் என்று மன்னர் திராஜனிடம் நன்றாக போட்டுக்கொடுத்தனர். எனவே இதைப்பற்றி மன்னர் திராஜன் ப்ளாஸிடஸை விசாரித்தார்.
" இதோ பார் ப்ளாஸிடஸ்... நீ என்னிடம் உண்மையைத்தான் பேச வேண்டும்... நீ கிறிஸ்த்துவனா... இல்லையா? எனக்கு ஒரே வார்த்தையில் பதில் தேவை"
" அரசே...நான் எப்போதும் தங்களின் உண்மை ஊழியனாகவே இருகின்றேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இதுவரையில் நான் ரோமன்...கிறிஸ்த்துவன் அல்ல."
" நன்று சொன்னாய் என் தளபதி... உனக்கு இப்போது ஓய்வு தேவை...நீ எவ்வளவு நாட்க்கள்...மாதங்கள் என்று ஓய்வு எடுக்க விரும்புகின்றாயோ அவ்வளவு நாட்க்கள் மாதங்கள் நீ ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்... ஆனால் நீர் எங்கிருகின்றாய் என்பதை நீ எமக்கு தெரிவிக்க வேண்டும்... நான் உன் சேவை தேவை என்றழைக்கும்போது நீ வந்து நம் படைகளை நடத்த வேண்டும்... தெரிகின்றதா...நல்லது..போய்வா" என்று அவரது சேவைக்கு விடைகொடுத்தான் மன்னன் திராஜன்.
மன்னர் திராஜனிடம் விடைபெற்ற நம் தளபதி ப்ளாஸிடஸ் தன்மனைவியுடனும் தன் இரு குமாரர்களுடன் ரோமுக்கு வடக்கே உள்ள திவோலி என்னும் இயற்கை நீரூறுகள் அமைந்த ஒரு அழகான இடத்தில் தன் குடும்பத்தை அமைத்துக்கொண்டு விவசாய வேலை பார்த்துவரலானார். இப்படி இருக்கையில் ஒருநாள்....
நம்முடைய தளபதி ப்ளாஸிடஸ் இப்போது ஒரு விவசாயி. இருப்பினும் தன் பழைய தொழில் மறவாமல் இருக்க வேட்டைக்கு கிளம்பினார். அந்த திவோலி மலையின் ஒருபகுதியில் ஒரு அழகிய கலைமான் தென்படவே அதைத்துறத்திக்கொண்டு அதன்பின்னே வெகுதூரம் சென்றுவிட்டார். அந்த மாயமானும் அவரை பலகாத தூரம் போக்குகாட்டி இழுத்துக்கொண்டே போனது. இறுதியில் ஒரு மலை முகட்டில் நின்றது.இதை தன் அம்பால் குறிவைத்தார் ப்ளாஸிடஸ். அப்போதுதான் அவர் ஒருவிஷயத்தை கவனித்தார். அந்த அழகிய கலைமானின் இருகொம்புகளுக்கிடையே ஒரு சிலுவை ஒளிர்வது தெரிந்தது. ஆச்சரியமுற்ற அவர் அந்த மானை நோக்கி நடக்கலானார். அப்போது ஒரு குறல் மிகத்தெளிவாக அவருக்கு
கேட்டது.
" ப்ளாஸிடஸ்.. அங்கேயே நில்..நாமே உம்மையும் இந்த ஈரேழு உலகங்களையும் படைத்த தேவன்..நாம் சவுல் என்பரை தடுத்தாட்க்கொண்டு பவுல் என்று மாற்றியது போல உன்னையும் தடுத்தாட்கொண்டுள்ளோம் "
" என் ஆண்டவரே என் தேவனே... தேவரீர் யார் என்று என்னால் இன்னமும் உணர முடியவில்லையே..என்னைத்தடுத்தாட்கொண்ட எம் தேவரீரே...சுவாமி... தேவரீர் எனக்கு உம்மை வெளிப்படுத்தக்கூடுமோ. "
" நாமே தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன்.. மனிதர் செய்த துரோகத்தினால் நாம் யேசுநாதர் என்னும் பெயரோடு இந்த உலகத்துக்கு வந்து பாடுகள்பட்டு சிலுவை மரத்தில் அறையப்பட்டு, மரித்து நம், ரத்தத்தால் அவர்களைக்கழுவி அவர்களை மீட்டுக்கொண்டோம். நம் தேவ சுபாவத்தல் உயிர்த்தெழுந்து எம்பிதாவின் வலப்புறத்தில் வீற்றிருகிறோம். ப்ளாஸிடஸ்..நீர் ஏழைகள்மட்டில் இரக்கம் உடையவன்... உம் தாராள குணமும், என் கிறிஸ்த்துவமக்கள் மீது நீர் கொண்ட உதார குணமும் நம்மை வெகுவாக கவர்ந்துள்ளன. இதுவரை நம்மை யார் என்று அறியாமலேயே எம்மீதும் எம் மக்கள்மீதும் நீர் கொண்ட அன்பு எம்மை மிகுந்த உவகை கொள்ள வைகிறது. இன்றுமுதல் நீர் எஸ்த்தாக்கி என்றழைக்கப்படுவாய்...[ நிலைத்து நிற்பவன்..நிறைய பலன் தருபவன் என்பது பொருள் ] நாம் உம்மை இரண்டாம் யோபுவாக அங்கீகரித்திருகிறோம்..எம்பொருட்டு உம்பாடுகளாள் நம்மை மாட்ச்சிமைபடுத்துவாய்.... நாமும் உம்மை பரலோகத்தில் மாட்ச்சிமைப்படுத்துவோம்..நீர் இந்த உலகத்தில் உள்ளவரை நாம் என்றும் உம்மோடு இருப்போம். நாம் உம்மை உம் குடும்பத்தாருடன் எம்மோடு அழைத்துக்கொள்வோம்.....அஞ்சாதே...எத்தகைய இடர் வரினும் கலங்காதே...மறவாதே....நாம் என்றும் உம்மோடு இருகிறிறோம்."
" என் ஆண்டவரே என் தேவனே... தேவரீர் என்னிலிருந்து செயலாற்றும்போது நான் பாக்கியவான்..என் இடர்களிலும் என் சோதனைகளிலும் தேவரீர் என் கண்முன்னே தோன்றுவீராக..உம்முடைய விசுவாசத்தில் நான் நிலைகொள்ள எப்போதும் அருள்வீராக...என்னை தடுத்தாட்கொண்ட என் தேவரீருக்கு அனந்தகோடி நமஸ்காரம் உறித்தாகுக " என்றார் நம் எஸ்தாக்கியார். நம் எஸ்த்தாக்கியார் இங்கே யேசுநாதரோடு உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் மனைவி அவரது இல்லத்தில் இதே காட்சி கண்டுகொண்டிருந்தார். ஆண்டவராகிய யேசுநாதருடன் உரையாடி முடித்தவுடன் நேரே தன் இல்லம் நோக்கி வந்தார் இஸ்த்தாக்கியார். தன் அன்பான மனைவி தாத்தியானாவிடம் தான் கண்ட காட்சிகளை விவரித்தார். அப்போது அவர் மனைவி தாத்தியானா தானும் இதே காட்சியை அவரது இல்லத்திலேயே கண்டதாக கூறியதைக்கேட்ட எஸ்தாக்கியார் இது தெய்வச்செயலே என்று கூறி தன் இரு மக்களுடனும் தன் மனைவியுடனும் இரவோடு இரவாக யேசுநாதரின் திருத்தொண்டர்களை சந்தித்து தாம் கண்ட காட்சிகளை விவரித்தார். அவர், " கடவுளாள் தெரிந்துகொள்ளப்பட்டு அவர் அருள் பெற்ற எஸ்த்தாக்கியாரே நீர் பாக்கியவான் " என்று கூறி அவருக்கும் அவர் மனைவி,மற்றும் அவரது இரு புதல்வர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார். அவர் மனைவி தாத்தியானாவின் பெயர் தியோபிஸ்தா எனவும் அவரது ஒரு மகன் அகாபியுஸ் என்றும் மற்றொருவன் தியோபிஸ்த்துஸ் எனவும் பெயர் பெற்றனர்.
கொஞ்ச நாள் வரை இவர்களுடைய வாழ்க்கை நல்ல விதமகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சோதிப்பவன் தன் வேலையை ஆரம்பித்தான். எஸ்த்தேக்கியார் இரண்டாம் யோபுவாக மாற ஆண்டவர் அனுமதியும் அளித்தார். அன்றிலிருந்து அவர்களுக்கு ஆரம்பித்தது துன்பகாலம்.
திடீரென இடி இடித்தது. இந்த இடியுடன் பெய்த மழையால் அவரது கால நடைகள் இறந்தன. திருடர்கள் வந்து அவர்களுடைய செல்வங்களை கொள்ளையிட்டனர்.. இப்படியாக தினம் தினம் ஏதாவது ஒரு திடுக் செய்தி வந்து அவர்களுடைய வாழ்வாதாரங்களை நொறுக்கிப்போட்டன. அனைத்திலும் எஸ்த்தேக்கியார் அன்று யோபு கூறியதைப்போலவே," ஆண்டவர் கொடுத்தார்...ஆண்டவர் எடுத்துக்கொண்டார் " என்று அமைதியாகக்கூறுவார். ஒரே வாரத்தில் எஸ்தேக்கியார் வரியவர் ஆனார். " சரி..நாம் வருமையுடன் இந்த நாட்டில் வாழவேண்டாம்..வேறு இடத்தில் சென்று குடியேறுவோம் " என்று ஒரு நெடும் கடல் பயணம் மேற்கொண்டார். அங்கும் விதி விளையாடியது.கடல் பொங்கியது. கப்பல் தத்தளித்தது.
ஒருமின்னலின் வெளிச்சத்தில் கடற்கரை தோன்றவே அனைவரும் கடலில் இறங்கி நீந்தி கரை சேர்ந்தனர். கடலில் அந்த கும் இருட்டில் எஸ்தேக்கியாரின் மனைவி கடல் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு எங்கேயோ காணாமல் போனாள்.
" என் அன்பே தியோபிஸ்த்தா... நீ எங்கே இருகிறாய்... ஒரு குரல் கொடு போதும்...இதோ நான் வந்துவிட்டேன் " என்று கத்திகத்தி அழுதார். ஆனால் அவர் காதல் மனைவி தியொபிஸ்த்தவை அவரால் கடைசிவரை கண்டே பிடிக்க முடியவில்லை. எஸ்தேக்கியார் தன் இரு பிள்ளைகளையும் தன் இரு கரங்களில் ஏந்திக்கொண்டு எப்படியோ கரை சேர்ந்தார். அங்கும் அவருக்கு விதி காத்திருந்தது. இந்த கடற்கறையில் ஒரு காட்டாறு சங்கமித்தது. அதைக்கடக்க வேண்டுமானால் எஸ்தேக்கியார் தன் ஒரு மகனை இக்கறையில் வைத்துவிட்டு அடுத்த மகனை தன் கைகளில் அணைத்துக்கொண்டு அக்கறைக்கு போய் சேர்த்துவிட்டு மீண்டும் இக்கரைக்கு திரும்பிவரும்போது அங்கிருந்த தன் மகனை ஒரு சிங்கம் வாயில் கௌவிக்கொண்டு போவதைப்பார்த்தார். அவரால் அந்த மகனைக்காப்பாற்ற முடியவில்லை. மீண்டும் இக்கறைக்கு நீந்திவந்து பார்த்தால் இக்கறையில் இருந்த தன் மகனை ஒரு ஓநாய் கௌவி இழுத்துச்சென்றதை பார்த்தார். ஆக இந்த மகனையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
. ஒரே இரவில் தன் மனைவியையும் பறிகொடுத்து, தன் இரு மகன்களையும் பறிகொடுத்த எஸ்தேக்கியாரின் நிலைமையை வார்த்தையில் சொல்லி முடியாது. அவர் வாய்விட்டே கதறி அழுதார். இருப்பினும்," ஆண்டவரே...தேவரீருக்கு இது விருப்பமோ...என்னை துன்பப்படுத்தி பார்ப்பதில்தான் தேவரீருக்கு ஆனந்தம் என்றால் இன்னும் என்னை வாதிப்பீராக... தேவரீருடைய சித்தம் என் பாக்கியம் " என்று கதறிக்கதறி அழுதார் அழுதார் அப்படி அழுதார்.
" ஒரே நாளில் என் அன்பான மனைவியையும் என் அன்பான இரு பிள்ளைகளையும் நான் பறிகொடுத்தேனே... என் போன்ற துரதிர்ஸ்டசாலி இந்த உலகில் யாரேனும் உண்டோ. என் அன்பே தியோபிஸ்தா...உன்னையும் உன் இரு பிள்ளைகளையும் காப்பாற்ற முடியாத பாவியாகிப்போனேனே... என்னை மன்னிப்பாயா..நான் எல்லாம் ஒரு ஆண்...அதிலும் வீரத்தளபதி என்னும் ஒரு பட்டம் வேறு... என் அன்பே எனக்கு என்னை பார்க்கவே பிடிக்கவில்லை.. எனக்கு நானே அருவருப்பானவனாக தெரிகின்றேன்...நான் வீரனல்ல... பெரும் கோழை... என் அன்பே ... என் மக்களே...என்னை மன்னித்துவிடுங்கள் " என்று கதறிக்கதறி அழுதார். இது மனித சுபாவம்... என்னதான் ஆண்டவராகிய யேசுநாதர் அவருக்கு நான் உன் துன்ப காலங்களில் உன்னோடே இருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும் எஸ்தேக்கியாரின் மனோபலம் சரிந்து போனதால் அவரால் அப்படி கதறி அழாமல் இருக்க முடியவில்லை. எல்லாம் கொஞ்ச நேரம்தான். அதன்பின் அந்த ஆளில்லாத தீவில் அவர் தன்னைத்தானே தேற்றிக்கொண்டார். பிறகு ஆண்டவரின் வாக்குறுதி அவருக்கு ஞாபகத்துக்கு வரவே ," ஆண்டவரே தேவரீர் என்மீது இரக்கம் வையும். இந்த துன்பத்தை தாங்க எனக்கு வரம் தாரும் . உம்முடைய வாக்குறுதிகளை நான் மறந்து போனேனே... என்னை மன்னித்தருளும் " என்றும் சொல்லிக்கொண்டார்.
எவ்வளவு நாள் அந்த தீவில் தனித்திருந்தாரோ தெரியவில்லை. ஒருநாள் இந்த தீவில் ஒரு கப்பல் வரவே அவர் அதில் ஏறி தன் சொந்த ஊரான திவோலிக்கு சென்றார். இப்போது அவர் மனைவி மக்கள் இல்லாத ஒரு தனி மரம். மனம்போன போக்கில் நடந்த அவர் பாதிபஸ் என்னும் ஒரு ஊரை அடைந்தார். இந்த ஊருக்கு அவர் வரும்போது அவரது உருவமே முற்றிலும் மாறிப்போய் இருந்தது. யாருக்கும் அவரை தெரியவில்லை. இந்த ஊரில் இருந்த ஒரு நிலச்சுவான்தார் வீட்டில் அவர் கூலிவேலை செய்யும் ஒரு எடுபிடியாக வேலைக்கு சேர்ந்தார்...இப்படியாக ஒரு பதினைந்து வருடம் சென்றது....
இந்த பதினைந்து வருட இடைவெளியில் ரோமைய சக்கரவர்த்தி திராஜன் ரோமுக்கு கிழக்கே ஆசியாவில் உள்ள பெர்சியா [இன்றையா ஈரான் ] மெசபோடோமியா ஆகிய நாடுகளை வென்று தன் ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை கிழக்கே வெகுதூரம் விஸ்த்தரித்தார். பிறகு மேற்கே ஆப்ரிக்கா கண்டத்தில் எகிப்த்து மற்றும் அதன் மேற்கு நாடுகளையும் வென்று பெரும் வெற்றி வீரராய் ரோமுக்கு திரும்பிவந்தார். இந்த பதினைந்து வருட இடைவெளியில் மோசியாவும் தேசியாவும் மீண்டும் அதிக படைபலம் பெற்று அங்கிருந்த ரோமர்களை விரட்டியடித்தனர். ரோமர்களின் செல்வக்கலஞ்சியமும் தானியக்களஞ்சியமுமான இந்த நாடுகள் தங்களின் கையைவிட்டுப்போய்விடுமோ என்று அஞ்சினர் ரோமர்கள்.
உடனே ஒரு தூதுவனை ஆனுப்பி ரோமில் மன்னர் திராஜனுக்கு செய்தி அனுப்பினர். இப்போதுதான் மன்னர் திராஜனுக்கு நம் வீரத்தளபதி ப்ளாஸிடஸின் நினைப்பு வந்தது. இப்போதைக்கு அவனைவிட்டால் நமக்கு வேறு தகுதியான ஆள் கிடையாது. எனவே கூப்பிடுங்கள் என் தளபதி ப்ளாஸிடஸை..இது என் அரச கட்டளை " என்றார் மன்னர் திராஜன். இப்போதுகூட மன்னர் திராஜனுக்கு ப்ளாஸிடஸ் என்னும் தனது தளபதி கிறிஸ்த்துவராக...எஸ்தேக்கியாராக மாறிய விஷயம் தெரியாது.
மன்னர் திராஜனின் ராணுவ வீரர்கள் எப்படியோ நம் எஸ்தேக்கியரை தேடிக்கண்டுபிடித்து அவர் முன் நிறுத்தினார்கள். மீண்டும் அவருக்கு தளபதிக்கான ராணுவ சீருடை வழங்கப்பட்டது. தான் ஒரு கிறிஸ்த்துவராக மாறிய விஷயத்தை தளபதி எஸ்தேக்கியார் மன்னரிடம் அவசியம் நேராததால் சொல்லவே இல்லை. இருப்பினும் அரச கட்டளைக்கு பணிந்து அரசருடனும் தன் படைவீரர்களுடனும் மோசியா பயணம் ஆனார். மோசியா பயணம் எளிதான ஒன்றல்ல. அந்த நாட்டுக்கு ஜெர்மனியில் உற்பத்தியாகி ஐரோப்பாவின் பலநாடுகளைக்கடந்து முடிவில் கருங்கடலில் கலப்பதால் இந்த நதிகறையே பல நாடுகளுக்கு எல்லையாய் அமைகிறது. மோசியாவும் தேசியாவும் இந்த நதிகளால் பெரிதும் வளம் அடைகிறது என்றாலும்
இந்த நதியே அவர்களுக்கு எல்லையாகவும் பாதுகாப்பாகவும் அமைந்திருந்தது. எனவே ரோமர்கள் இந்தமுறட்டு காட்டாறான டூனபே நதியை கடக்க படாதபாடு படவேண்டியதாக இருந்தது. தளபதி ப்ளாஸிடஸ் என்னும் எஸ்தேக்கியாரின் முன்யோசனைப்படி கிடைத்த மரங்களை எல்லாம் வெட்டி இணைத்து படகுகளாகவும் மிதவைகளாகவும் செய்து தங்கள் படைகளை நடத்தினர். இந்த பதினைந்து வருடம் அமைதியாக இருந்த ரோமர்கள் இப்படி திடுதிப்பென தங்கள தாக்க வருவார்கள் என மோசியர்களும் தேசியர்களும் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. இந்த நிலையில் ஒரு இருபது வயது மதிக்கத்தக்க ஒரு வீரனும் ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு வீரனும் நம் தளபதி ப்ளாஸிடஸின் வலது பக்கத்திலும் இடப்பக்கத்திலுமாக இருந்து பணியாற்ற அமர்த்தப்பட்டிருந்தனர். இந்த இருவாலிப வீரர்களையும் பார்த்தமாத்திரத்தில் நம் தளபதி ப்ளாஸிடஸுக்கு கண்களில் நீர் சுரந்தது.
" வீரர்களே உங்கள் பெயர் என்ன " என்றார் தளபதி.
ஒருவன் ," ஐய்யா என் பெயர் அந்தியோக்கு " என்றான்.
மற்றவன், " ஐயா.. என் பெயர் அக்காசியா" என்றான்
ஒருவன், " ஐயா தளபதியாரே... கேட்கிறேன் என்று எங்களை தவறாக நினைக்க வேண்டாம்... தங்கள் கண்களில் கண்ணீர் வரக்காண்கிறேன்... காரணம் அறியலாமா?" என்றான்.
" காரணம் ஒன்றும் இல்லை அப்பா.ஏதோ என் மனதில் தோன்றியது..உன்னிடம் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை... எனக்கும் இரண்டு மகன்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் இருந்திருந்தால் உங்களை ஒத்த வயதுதான் அவர்களுக்கும் இருக்கும். உங்கள் முக ஜாடைகூட அப்படித்தான் தோன்றுகிறது. என்ன செய்வது. விதி அவர்களை என்னிடமிருந்து பிறித்துவிட்டது."
" ஏன் ..என்னவாயிற்று அவர்களுக்கு... எங்களிடம் கூறலாமோ?"
" காலன் அவர்களை என்னிடமிருந்து பிறித்துவிட்டான்.. எல்லாம் என் தலை எழுத்து..இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை மாற்ற யாரால் முடியும் ? சரி. சரி. வேலையைப்பாருங்கள்."
தேசியா, மோசியா யுத்தம் ஆரம்பமானது. முதலில் களம் இறங்கினார் தளபதி ப்ளாஸிடஸ்..ஏற்கனவே ப்ளாஸிடஸ் வகுத்திருந்த போர்முறைப்படி யாவும் கனகச்சிதமாக நிறைவேற்றபட்டிருந்தன. இப்போது நம் தளபதி பப்ளாஸிடஸின் கண்முன்னே அன்று அவர் கண்ட அந்த மாயமான் தோன்றியது. அதன் இரு கொம்புகளுக்கிடையே இருந்த சிலுவை ஒளிர்ந்து அந்த மான் போகும் இடங்களைக்காட்டியது. அந்த மாயமானைத்தொடர்ந்த
நம் தளபதி போரில் படுவேகமாக முன்னேறி சுழன்று சுழன்று போராடினார். அவரின் கத்திவீச்சுக்கு பலர் பலி ஆனார்கள். பலர் வெட்டுண்டார்கள். பலர் முடமாகிப்போனார்கள்..இந்தப்போர் நடந்தபோது அவரை நேரில் கண்டவர்கள் இவர் அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசோ என்றார்கள். இவருக்கு பாதுகாப்பாக அமர்த்தப்பட்டிருந்த இரு வாலிப வீரர்களும் அவருக்கு இணையாக போரிட்டார்கள். இந்த மூன்று பேர்களின் வீரத்தைக்கண்ட ரோமானியர்களுக்கு புது வீரமும் தெம்பும் வந்து ஆவேசமாகக்குறல் எழுப்பிக்கொண்டு போரிட்ட வேகம் வார்த்தையில் சொல்லி முடியாது. இரவில் நடந்தபோர் இப்படி என்றால் அந்த இரவில் திரைமரைவில் நடந்த காரியங்கள் மிகப்பல. ரோமானியர்கள் ஊருக்குள் புகுந்து பல ஆண்களையும் பெண்களையும் பிணையக்கைதிகள் ஆக்கினர். அவர்களும் பல செல்வந்தர்களும்,பிரபுக்களும் ராஜ வம்சத்தை சேர்ந்த பிரபுக்களும் இருந்தனர்.
தன் படைவீரர்கள் போரில் மிகத்தீவிரமாக போராடுவதைக்கண்ட மன்னர் திராஜன் பெரிதும் உவகை கொண்டார்." சபாஷ் ப்ளாஸிடஸ்.. உன் ஒருவனால்தான் இதை சாதிக்க முடியும்... இந்த தேசியர்களையும் மோசியர்களையும் ஒருவன் விடாமல் நிர்மூலமாக்கு...இனிமேல் இந்த ரோமர்களுக்கு இந்த மோசியாவும் தேசியாவும் அடிமை நாடுகளாக ஆக்கிவிடுகிறேன்... இனி ஒருவனும் ரோமுக்கு எதிராக கனவில்கூட வாளெடுக்காதபடி நம் தாக்குதல் அத்தனை பயங்கரமாக இருக்கட்டும் " என்றார்.
மன்னரின் இந்த உத்திரவைத்தொடர்ந்து தேசியாவின் வீரர்கள் மீதும் மோசியாவின் வீரர்கள் மீதும் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. தேசியாவின் குடியிருப்பில் இருந்த அத்தனை ஆண்களும் பெண்களும் பிணைக்கைதிகள் ஆக்கப்பட்ட விஷயம் தேசியாவின் மன்னருக்கும் மோசியாவின் மன்னருக்கும் தெரியப்படுத்தப்படவே அவர்களின் போராடும் குணத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டது. தேசியாவின் மன்னர் தேசிபாலு மிகவும் அத்திரம் அடைந்தார். "நம் நாடே நம் கையை விட்டுப்போய்விடும் என்ற நிலையில் நம் மக்களைப்பற்றி கவலைப்படாமல் வீரமாகப்போராடுங்கள். வெற்றி நம் பக்கம் தான் " என்று வீரவசனம் பேசினார். அவரது தாய் நாட்டுப்பற்று அத்தனை உயரியதாய் இருந்தது. ஆனால் அவருக்கிருந்த தன்னாட்டுப்பற்று அவரது கூட்டாளியான மோசியர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் மீண்டும் யுத்தத்தை தொடராமல் சரணடைந்து தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற விரும்பினார்கள். இதற்கு தேசியா அரசன் தேசிபாலு ஒப்புகொள்ளவில்லை. இந்த முறை எதிரியாகிய ரோமர்களிடம் தோற்கும்போது சரணடைவதைவிட போர்க்களத்தில் உயிரைவிடுவது நல்லது என்றான். இதற்கு மோசியர்கள் ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் போர்க்
களத்தை விட்டு வெளியேறினர்.
தேசியாவின் மன்னன் தேசிபாலு நிற்கதியாக விடப்பட்டான். இந்த நிலையில் நம் தளபதி ப்ளாஸிடஸ் தேசியாவின் மன்னரை சிறைபிடித்தார். எதிரி கைதுசெய்யப்பட்டான் என்பதை அறிந்த மன்னர் திராஜன் மிகுந்த ஆரவரத்துடன் இனி தேசியா நாடு ரோமர்களுக்கே என்றார். அதைத்தொடர்ந்த பெரும் கரகோஷத்தில் மா மன்னர் திராஜன் வாழ்க... நம் வீரத்தளபதி ப்ளாஸிடஸ் வாழ்க என்னும் கரகோஷங்கள் வானைப்பிளந்தன. இனி இந்த தேசியா நாடு ரோமர்களுக்கே என்று மன்னர் திராஜன் அறிவித்ததும் ரோமர்கள் விவா ரோமா...விவா ரோமா..விவா ரோமா.. என்று மகிழ்சியால் பெரிதும் ஆர்ப்பரித்தனர். அன்று முதல் தேசியா என்னும் அந்த நாடு ரோமானியா என்று பெயர் பெற்றது.
தேசியாவின் மன்னர் தேசிபாலு சிறைபிடிக்கப்பட்டு மன்னர் திராஜன் முன்னால் விசாரணைகாக நிற்க வைக்கப்பட்டார். " அடேய் தேசியா... உன்னுடன் சமாதான ஒப்பந்தம்போட்டு என்ன பிரயோஜனம்..இரண்டு முறை அதை மீறிவிட்டாய். இதனால் எம்நாட்டு வீரர்கள் எத்தனை பேர் மடிந்தார்கள் தெரியுமா. இப்போது என்ன சொல்கிறாய்?"
" அட ரோமையா...நீ செத்த பாம்பை அடிக்கப்பார்கிறாய்..உன்னுடன் பேசிப்பிரயோஜனம் இல்லை. ஆக வேண்டியதைப்பார்."
" உன்னை என்ன செய்ய வேண்டும் என நினைகிறாய்.?"
" நான் அரசனாகவே வாழ்ந்தேன்.. அரசனாகவே சாக விரும்புகிறேன். எனக்கு ஒரு கத்தி கொடுங்கள். நான் போரிட்டு சாக விரும்புகிறேன்" அதன்படி தேசியாவின் மன்னர் தேசிபாலுவிடம் ஒரு நீண்ட உடைவாள் கொடுக்கப்பட்டது.
" அடேய் தேசியா...நீ யாருடன் போரிட விரும்புகிறாய்... என்னுடனா அல்லது என் தளபதியுடனா... யாருடன் ஆனாலும் நாங்கள் தயார்."
அப்போது மாவீரனும் தேசியாவின் அரசனுமான தேசிபாலு யாரும் நினைத்திராத ஒரு காரியத்தை செய்தார். அவர் யாருடனும் சண்டையிட விரும்பாமல் அந்த நீண்ட வளைந்த உடைவாளால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
தேசியா நாட்டின் வீழ்ச்சியும் அதன் அரசன் தேசிபாலுவின் தற்கொலையும் மோசியாவின் நாட்டுத்தலைவர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் அரசர்முதல் நாட்டின் பிரபுக்கள்வரை ரோமைய மன்னர் திராஜனை சரணடைந்து ஏறாளமான தங்கமும் பணமும் பரிசுகளையும் கொடுத்து தங்கள் மக்களையும் விளை நிலங்களையும் மீட்டுக்கொண்டார்கள்.மோசியாவின் வீரர்கள் ரோமுக்கு சகல விதத்திலும் உறுதுணையாக இருப்பதாக ஒப்பந்தமும் செய்துகொண்டார்கள்.
ரோமைய மாமன்னர் திராஜனுக்கு அவசர செய்தி ஒன்று வந்தது. அதாவது ஆசியாவில் உள்ள பார்த்தினிய நாடுகள் ரோமுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிட்டதால் மன்னர் வந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்ற செய்தியே அது.
அதன்படி மாமன்னர் திராஜன் இந்த யுத்த பொறுப்புகளையும் ரோமேனியா நாட்டு நிர்வாகத்தையும் நம் வீரத்தளபதி ப்ளாஸிடஸிடம் ஒப்படைத்துவிட்டு பைசாந்தியம் வழியாக பாரசீகம் சென்றார். போனவர் மீண்டும் ரோமுக்கு திரும்பி வரவே இல்லை. பைசாந்தியத்திலும் பார்த்தீனியாவிலும் தன் ரோமப்பேரரசை நிலையாக்கிவிட்டு மீண்டும் ரோம் வரும் வழியில் சிசிலித்தீவில் ஓய்வெடுத்தார். அப்போது அவருக்கு ஏற்ப்பட்ட ஒரு விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார். அவரது சிதைக்கு தீ மூட்டப்பட்டு அவரது அஸ்த்தி ரோமுக்கு கொண்டுவரப்பட்டு அவர் கட்டிய திராஜனின் ஜெயஸ்த்தம்பத்தின் மீது வைக்கப்பட்டது. இப்போதும் ரோமில் அவரது ஜெயஸ்த்தம்பம் இருகின்றது. அதில் மாமன்னர் திராஜனின் படை எடுப்புகளும் அவர்கண்ட வெற்றிகளும் புடைப்புச்சித்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளன. [ இப்போது மன்னர் திராஜனின் ஜெயஸ்தம்பத்தில் அவருடைய அஸ்த்திவைக்கப்பட்டிருந்த கலசம் பெயர்த்தெடுக்கப்பட்டு அதற்குப்பதில் புனித பேதுரு என்னும் இராயப்பரின் திரு உருவச்சிலை வைக்கப்பட்டிருகின்றது. ]
மாமன்னர் திராஜனைத்தொடர்ந்து ரோமைய சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த சக்கரவர்த்தியாக முடி சூடிக்கொண்டவர் ஏட்றியன். அவாளுக்கிவாள் என்னும் கதையாக கிறிஸ்த்துவர்களுக்கு எதிராக மன்னர் திராஜனைவிட மிகவும் மோசமான சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் மன்னர் ஏட்றியன்.இதற்குள் வருடம் மூன்று ஓடிவிட்டது.
இந்த மூன்று வருட இடைவெளியில் நம் தளபதி ப்ளாஸிடஸ் ரோமானியாவில் ரோமர்களைஅங்கு குடி அமர்த்தி அந்த நாட்டுக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்துவிட்டு ஒரு ஆளுநரை தனக்கு பதிலாக நியமித்துவிட்டு தன் சேனைகளுடன் ரோமாபுரி திரும்பினார். வரும் வழியில் தான் எடுபிடி வேலை பார்த்த அந்த நிலச்சுவாந்தார் வீட்டின் முன்பாக தன் கூடாரங்களை அமைத்து சில நாள் ஓய்வெடுத்தார். ஒருநாள்...
நம் தளபதி ப்ளாஸிடஸுடன் வலது பக்கத்திலிருந்த ஒருவீரனும் இடது புறத்திலிருந்த ஒருவீரனும் எதிபாராதவிதமாக பேசித்துக்கொண்டிருந்தார்கள்.
" அக்காஸியா... நான் உன்னை நண்பன் என்றழைக்கலாமா ?"
" வேண்டாம் அந்தியோக்கு...உன்னை என் மனம் ஏனோ நண்பனாக ஏற்றுக்கொள்ள தயங்குகின்றது...அதுதான் ஏன் என்று எனக்குப்புரியவில்லை."
" அந்தியோக்கு.. என் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் அடிக்கடி ஏற்படுகின்றது.. ஆனால் நீ யாரோ... நான் யாரோ..நாம் சேர்ந்து பழகியது கொஞ்ச காலமே என்றாலும் ஏதோ வெகுநாள் பழகிய ஒரு உணர்வு எனக்குள் ஏற்படுகின்றது."
" அக்காஸியா...நீ எந்த தேசத்தவன்?"
" அந்தியோக்கு...நான் ரோமிலேயே பிறந்தவன். என் தந்தையார் ராணுவத்தில் ஒரு பெரும் அதிகாரியாக திகழ்ந்தவர். எனக்கும் உன்போன்ற ஒரு சகோதரன் இருந்தான். எனக்கு அப்போது ஐந்து வயது இருக்கும் என் தாயார் மிகுந்த அழகுள்ளவள். ஒருமுறை நாங்கள் ஒரு கடற்பயணம் மேற்கொண்டபோது கப்பல் ஒரு தீவில் நின்றது. அப்போது என் தாயார் காணாமல் போய்விட்டார். அவர்களைத்தேடிய என் தந்தையும் காணாமல் போய்விட்டார். என் தம்பி என்ன ஆனான் என்றும் எனக்கு தெரியவில்லை. என்னை வளர்த்தவர்கள் என்னை ஒரு சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றியதாக கூறினார்கள். நான் வளர்ந்தபிறகு ராணுவத்தில் சேர்ந்தேன்.இப்போது உன்னுடன் பேசிக்கொண்டிருகிறேன்... இதுதான் என் கதை" என்றான் அவன்.
" அக்காஸியா... என்ன ஆச்சரியம். எனக்கு சிறுவயது நிகழ்வுகள் எதுவுமே தெரியாது. என்னை வளர்த்தவர்கள் என்னை ஒரு ஓநாயின் வாயிலிருந்து காப்பாற்றியதாகக்கூறினார்கள். அவர்கள் நாடோடிகள். அவர்கள் மூலம்தான் எனக்கு வீரவிளையாட்டுக்கள் பழக்கமாயின. இதனாலேயே நான் ரோமைய ராணுவத்தில் சேர்ந்தேன். ஆனால் ஒன்று நிச்சயம். நம் கதையை பார்க்கும்போது நாம் இருவருமே ஏதோ சூழ்நிலையில் பிறிக்கப்பட்டு மிருங்கங்களிடமிருந்து காப்பாற்றப்பட்டிருகிறோம் என்பதும் இப்போது ஒன்று சேர்ந்திருகிறோம் என்பதும் உறுதி ஆகிறது. அனேகமாக நாம் இருவரும் ஒருக்கால் சகோதரர்களாக இருந்திருப்போம். காலமும் கடவுளும் மட்டுமே இதற்கு விடை கூறமுடியும்."
இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒருவீட்டின் மேல் மாடியில் நின்றிருந்த ஒரு பெண் இவர்கள் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தோடிக்கொண்டிருந்தது. உடனே வீட்டிற்கு வெளியே வந்து அந்தியோக்குவையும், அக்காஸியாவையும் சந்தித்து அவர்களின் தகப்பனார் யார் என்று கேட்டாள். அவர்கள் தாங்கள் அநாதைகள் என்றுகூறினார்கள்.
" இல்லை அப்பா...இல்லை...நீங்கள் அநாதைகளாய் இருக்க முடியாது. நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை நானும் கேட்டேன். உங்கள் கதைபோலவேதான் என்னுடைய கதையும். அதை பிறகு கூறுகிறேன்... நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?"
" அம்மணி..நான் பிறந்தது ரோமாபுரிபட்டனம்..ஒரு கடற்பயணத்தில் நாங்கள் சிசிலித்தீவை அடைந்தோம்.அங்கே என் தாயார் காணாமல் போய்விட்டார். அவர்களைத்தேடிச்சென்ற என் தந்தையும் காணாமல் போய்விட்டார். என் சகோதரணூம் காணாமல் போய்விட்டான்.நான் ஒரு சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றப்பட்டேன்.இதுதான் எனக்குத்தெரியும்."
" அம்மா... நானும் இதே சிசிலித்தீவில் தான் வளர்ந்தேன். என்னை ஒரு ஓநாயின் வாயிலிருந்து காப்பாற்றியதாக என்னை வளர்த்தவர்கள் கூறினார்கள். அவ்வளவுதான் எனக்குத்தெரியும்"
" சரி...நான் என் மனத்தில் உள்ளதை உறுதி செய்த பிறகு என்னைப்பற்றி உங்களுக்கு கூறுவேன்.. யார் உங்கள் தலைவர்? இப்போது எங்கே அவர் இருகின்றார்?" என்றாள் அந்த மாது.
" அம்மா... அதோ பாருங்கள் எங்கள் தலைவர்." என்று கூறவும் நம் தளபதி ப்ளாஸிடஸ் வரவும் சரியாக இருந்தது. அவரைப்பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு அவள் தேகமெல்லாம் ஒருமுறை சிலிர்த்தது. அவள் தன்னை சுதாரித்துக்கொண்டு ஓடிச்சென்று அவர்காலில் விழுந்தாள்.
" மஹாப்பிரபோ...என்னை இரட்ச்சியும் " என்றாள்.
" பெண்ணே ...நீ யார்...நீ ஏன் என்காலில் விழ வேண்டும்.? "
" மஹாப்பிரபூ...நான் என் கணவனையும் என் இரண்டு பிள்ளைகளையும் தொலைத்துவிட்டேன். கடவுள் அருளால் நான் என் பிள்ளைகளை கண்டுகொண்டேன். இனி உங்கள் அருளாள் என் கணவரை கண்டுகொள்ள வேண்டும்."
" மஹாப்பிரபூ..நான் பூர்வீகத்தில் ரோமாபுரியில் ஒரு உயர்ந்த குலத்தில் பிறந்தேன். என்னை ஒரு பெரும் வீரத்தளபதிக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர் பெயர் ப்ளாஸிடஸ். என் பெயர் தாத்தியானா.எங்கள் திருமணத்தின் அன்பு பரிசாக கடவுள் எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளைக்கொடுத்திருந்தார். நானும் என் கணவரும் கிறிஸ்த்துவர்களாக மாறி அவர் பெயர் எஸ்தேக்கி என்றும் என் பெயர் தியோபிஸ்த்தா என்றும் என் குமாரர்கள் அகாப்பே என்றும் தீயோபிஸ்த்து என்றும் பெயர் சூட்டப்பட்டோம்... பிறகு கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டோம். உங்களுக்கு ராணுவத்தில் இப்படியொரு நபரை தெரிந்தால் அவரை என்னோடு சேர்த்து வைக்க முடியுமா " என்றாள்.
நம் தளபதி ப்ளாஸிடஸுக்கு அப்படியே தலை சுற்றிப்போனது. " இஸ்ராயேலின் தேவன் வாழ்த்தப்படுவாராக..என் தேவன் யேசுநாதரின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக... என் அன்பே தாத்தானியா...என் அன்பே தியோபிஸ்த்தா...நீ தேடும் அந்த நபர் நான் தான்... என்னை நம்பு... நான் தான் உன் கணவன் ப்ளாஸிடஸ் என்னும் எஸ்தேக்கி. என் அன்பே தாத்தானியா... உன்னை நடுக்கடலில் தவிக்கவிட்டுச்சென்ற பாவி நான் தானம்மா... என்னை மன்னித்துவிடு... என்னை மன்னித்துவிடு " என்று அவளை மார்புறத்தழுவிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
" என் அன்பரே... நான் உம்மக்கண்ட மாத்திரத்திலேயே நீர் யார் எனக்கண்டுகொண்டேன்... ஆனால் நானாகவந்து நான்தான் உம்முடைய மனைவி என்று சொன்னால் ஒருக்கால் நீர் என்னை நம்பாமல் போகலாம். பணம், காசு, பேர், புகழ் இவற்றிற்கு ஆசைப்பட்டு நான் உரிமை கொண்டாட வந்திருப்பதாக நீர் நினைக்கலாம். அதனால்தான் நான் உம்மை அறியாததுபோல உம்மிடமே உதவிகேட்டு வந்ததுபோல் உம்மிடம் பேசினேன்.. அப்போதும் நீர் என்னை நம்பவில்லையானால் திருமண வாழ்வில் நம்முடைய அந்தரங்கங்களைக்கூறி உம்மை நம்பவைத்திருப்பேன்..ஐய்யா... இது கணவன் மனைவிக்குள்ள தெய்வீக பந்தம். இதை உயர் குலத்திலிருந்து வந்துள்ள நீங்கள் நிச்சயம் மதிப்பீர்கள் என நான் நம்பினேன்.
இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டதல்லவா?" என்றாள் தியோபிஸ்த்தா என்னும் அவர் மனைவி.
" என் அன்பே தாத்தியானா.."
" என் அன்பரே..இப்போது நான் கிறிஸ்த்துவள்...நீரும் கிறிஸ்த்துவர்...என்னை தியோபிஸ்த்தா எனறே கூப்பிடுங்கள். "
" மிக்க மகிழ்ச்சி தியோபிஸ்த்தா..காணாமல் போன என் மனைவியை கண்ட மாத்திரத்தில் நான் இப்போது சொர்கத்தில் இருப்பதாகவே எண்ணுகிறேன்."
" ஆம் அன்பரே... திருமணமான எல்லா தம்பதியருக்கும் இந்த உலக வாழ்க்கையே சொர்க்கமாகும்."
" உண்மைதான் தியோபிஸ்த்தா... நம் பிள்ளைகளைக்கண்டுவிட்டதாக கூறினாய் அல்லவா.. இப்போது அவர்கள் எங்கே? அவர்கள் யார். யார்?"
" என் அன்பரே... உங்களுக்கு அவர்களைத்தெரியவில்லை?. மூன்று வருடமாக அவர்களுடன் பழகி இருகின்றீர்கள் . அவர்களை உங்களாள் கண்டுகொள்ள முடியவில்லையா?"
" என்ன?... நான் அவர்களுடன் மூன்று வருடங்களாக பழகி இருகின்றேனா? யார் அவர்கள்?"
" என் அன்பரே.. இதோ உங்கள் பிள்ளைகள். அக்காஸியா..அந்தியோக்கு இங்கே வாருங்கள்... இவர்தான் உங்கள் தகப்பனார்..இவர்தான் ரோமாபுரியின் வீரத்தளபதி ப்ளாஸிடஸ்...நான்தான் உங்கள் இருவருக்கும் தாய். என் பெயர் பூர்வீகத்தில் தாத்தியானா. இப்போது தியோபிஸ்த்தா...அக்காஸியா..உன் பெயர் அப்போது அக்காபியுஸ்..அந்தியோக்கு உன்பெயர் அப்போது தியோபிஸ்த்துஸ். என்ன புறிந்ததா?" என்றாள்.கடவுள் அருளாள் பிறிந்த குடும்பம் பதினெட்டு வருடங்களுக்கு பிறகு சேர்ந்தது.
" அம்மா...நம் தளபதியார்தான் நம் தகப்பன் என்று அறியாமல் அவரிடமே நாங்கள் பணிபுறிந்தோம். ஆனாலும் முதன்முதலில் அவர் எங்களை பார்க்கும்போது கண்ணீர் சிந்தினார். காரணம் கேட்டபோது அவருக்கும் எங்கள் வயதில் இரு பிள்ளைகள் இருந்ததாகவும் நாங்கள் ஜாடையில் கூட அவரது பிள்ளைகள் போலவே இருந்ததாகவும் கூறினார். அப்போதே எங்கள் மனதில் ஏதோ தோன்றியது. ஆனாலும் நாங்கள் சகோதரர்கள் என்றுகூட நினைக்கமுடியாதபடி சூழ்நிலை அப்படி இருந்தது. போர்க்களத்தில் அப்பா காட்டிய வீரம் வார்த்தையில் வர்ணிக்க முடியாதபடி இருந்தது. அந்தக்காட்டுமிராண்டி கூட்டத்தைசேர்ந்த கோத்தியர்கள் வெறிபிடித்தாற்போல் எங்களை சூழ்ந்துகொண்ட போது நம் தளபதியார் தன்
குதிரையில் ஆரோகணித்துவந்தது எப்படி இருந்தது தெரியுமா? வானத்திலிருந்து பறந்துவரும் ஒரு தேவதூதன் போல் அவர் தோன்றினார். அவரது சிம்ம கர்ஜனையும் அவர் வாள் வீசும் வேகமும் திறமையும் கண்ட கோத்தியர்களும் மோசியர்களும் தேசியர்களும் பயந்து பின்வாங்கும்போது சூராவளியாய் அவர் வாளை சுழற்றிக்கொண்டு எதிரிகளின் கூட்டத்தில் பாய்ந்து பலபேரை வெட்டிக்கொண்றது எங்களுக்கெல்லாம் அவர்மீது ஒரு இனம்புறியாத ஒரு பயத்தையும் பற்றையும் ஏற்படுத்தியது. அதைக்கண்ட யாவருக்கும் வீரம் தொற்றிக்கொள்ளும். அண்ணன்மட்டும் என்ன சும்மாவா போரிட்டார். இத்தகைய ஒரு வாள் வீச்சை நான் அப்பாவிடம் மட்டுமே கண்டேன். ஆனால் அண்ணன் அவரைபோலவே போரிட்டதுதான் ஆச்சரியம். ஒருமுறை நானும் அண்ணனும் தேசியர்களை பின்தொடர்ந்து போகையில் திடீரென ஒரு ஐம்பது எதிரிகள் எங்களை சூழ்ந்துகொண்டு தாக்கினர். நானும் அண்ணனும் ஒருவருக்கொருவர் முதுகோடு முதுகை சேர்த்துக்கொண்டு வாள்வீச்சில் ஈடுபட்டோம். அப்போது நம் தளபதியர் வீரகர்ஜனை செய்தபடியே வந்து அந்தகூட்டத்தில் புகுந்து எங்களை விடுவித்தார். இப்போதும் அவரது வீர கர்ஜனை எங்கள் காதில் ஒலித்தபடியே இருகின்றது... அந்த கும் இருட்டிலும் அவர் எப்படித்தான் எதிரிகள் ஒளிந்திருக்கும் இடங்களை மோப்பம் பிடித்தாரோ தெரியவில்லை. எப்படியப்பா நீங்கள் எதிரிகளின் நடமாட்டங்களை கண்டுபிடித்தீர்கள்?"
" ஓ அதுவா..அதை நம்புவதற்கு உங்களால் முடியாததாக இருக்கும்.நம் ஆண்டவறாகிய யேசுநாதர் என்னை வழிநடத்திச்சென்றார். என்னைமட்டுமல்ல. அவரை நம்பும் எல்லோரையுமே அவர்தான் வழிநடத்திச்செல்கின்றார் என்பது சத்தியமான உண்மை. அவர் காட்டும் இடங்களுக்கெல்லாம் நான் போவேன்... அவர் நம்மோடு இருக்கையில் நமக்கு பயம் ஏது? தோல்வி ஏது?. அன்பே தியோபிஸ்த்தா...அப்போது நம் பிள்ளைகளை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த இரண்டு வீர வாலிபர்களும் போரிட்ட விதம் என்னை புல்லரிக்க வைத்தது. இவர்களைப்பெற்ற தகப்பனார் மிகவும் கொடுத்துவைத்தவராக இருக்க வேண்டும் எனவும் எண்ணினேன். அதிலும் இளையவன் தியோபிஸ்த்துஸ் சண்டையிட்டவிதம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் .எதிரிகளிடமிருந்தும் அவர்கள் வாள் வீச்சிலிருந்தும் தப்பிக்க அவன் குதிரைக்கு குதிரை தாவினான். இத்தகைய ஒரு வித்தையை அவன் யாரிடம் கற்றானோ தெரியவில்லை. என்னால் கூட அப்படி முடியாது " என்றார் எஸ்தேக்கியார்.
இப்படி ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்ளும்போது அவள் பிள்ளைகள்," அம்மா... உங்கள் கதை என்ன? உங்களுக்கு என்ன நேர்ந்தது?அப்பாவைவிட்டு எப்படிபிரிந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அவள் தன் கணவனை நோக்கினாள்.
" என் அன்பரே...எனக்கு என்னவாயிற்று ? நான் எங்கே போயிருந்தேன். இத்தனைகாலமும் நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதுபற்றி உங்களுக்கு ஏதும் சந்தேகம் வரவில்லையா?" என்றாள் தியோபிஸ்த்தா.
" என் அன்பே...நீ அன்று கடல் அலையில் சிக்கி உயிர் இழந்திருக்ககூடும் எனறே நான் எண்ணி இருந்தேன்.வேறு சந்தேகம் என்பது எனக்கு வரவே வராது. நீ உயர்குடியில் பிறந்த உத்தமமான பெண்..உன்னைப்பற்றி நான் வேறு எப்படி நினைக்க முடியும்?"
" அன்பரே... நான் பாக்கியவதி. உம்மை நான் என் கணவராக அடைய நான் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.நீர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் பிள்ளைகளுக்காகவாவது நான் எனக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி கூறத்தான் வேண்டும்" என்று ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு தன் கதையை கூறினாள்.
" ரோமாபுரியில் நம் குடும்பம் வருமையில் வாட ஆரம்பித்ததும் நீங்கள் இந்த நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம்.வளமாக வாழ்ந்த நாட்டில் நாம் வறுமையில் இருப்பது தெரிந்தால் நம் சொந்த பந்தங்காள் நம்மை மதிக்க மாட்டார்கள் எனவே நாம் எகிப்த்துக்கு செல்லலாம் என்று கூறி எங்களை கப்பலில் அழைத்துச்சென்றீர்கள். ஆனால் அங்கும் விதி நம்மை துரத்தியது. கப்பல் கவிழும் அபாயத்தில் இருந்ததால் நாம் கடலில் இறங்கி நீந்தி கரைசேரலாம் என்று நீங்கள் சொன்னதால் நாம் கடலில் இறங்கினோம். எனக்கு நீச்சல் நன்றாகவே தெரியும் என்றாலும் கடல் நீச்சலில் என்னால் ஜெயிக்க முடியவில்லை. எனக்கு உதவிக்கு வந்தான் ஒருவன். அவன்தான் அந்தக்கப்பலின் தலைவன்.எனக்கு ஆபத்துக்கு உதவிகரம் நீட்டினான். நானும் ஆபத்துக்கு பாவம் இல்லை என கருதி அவன் கையை பற்றிக்கொண்டு நீந்தினேன். ஆனால் அவன் என்னை மீண்டும் கடலுக்குள்ளே இழுத்தான்.மயக்கம் என்னை ஆட்கொண்டது. அவன் என்னை மீண்டும் கப்பலுக்கே இழுத்துச்சென்றான்.எனக்கு சிகிட்ச்சை அளித்தான்.இரவோடு இரவாக கப்பலில் பயணித்து சிசிலித்தீவை அடைந்தான். நல்லவன்போல் நடித்த அந்த கப்பல் தலைவன் பெரும் பெண்பித்தன் என்பதை அவன் செயல்பாடுகள் எனக்கு காட்டியது. இந்த செசிலித்தீவில் அவனுடைய அரண்மனையில் என்னை சிறைவைத்தான். ஒவ்வொருமுறையும் அவன் என்னை அடைய முயற்சிக்கும் போதும் ஏதோ ஒரு தெய்வ வல்லமை என்னில் இறங்கி என்னை பாதுகாத்தது. இதை அவனும் உணர்ந்து என்மீது பயமும் மரியாதையும் கொண்டான். என்னிடமிருந்த தெய்வ வல்லமையால் அவன் அடைந்த துன்பங்கள் மிகப்பல. இதனால் பயந்துபோன அவன் என்னிடம் பெரிதும் வருந்தி மன்னிப்பும் கேட்டுக்கொண்டான். திடீரென அவனுக்கு விஷக்காய்ச்சல் கண்டது. தன் தவறுக்கு பிராயசித்தமாக அவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் என்பெயருக்கு மாற்றி எழுத்தித்தந்தான். இறுதியில் அவனும் இறந்துவிட்டான். அவன் இறந்தபின்பு நான் ரோமாபுரிவரும் கப்பலில்வந்து அவனுடைய சொத்துக்களுக்கு அதிபதி ஆனேன். என்மனதில் என் கணவரையும் என் இருபிள்ளைகளையும் நாம் என்றாவது ஒருநாள் காண்போம் என்ற எண்ணமும் மீண்டும் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக சேர்ந்து வாழ்வோம் என்றநம்பிக்கையும் ஒருநாளும் என்னை விட்டுப்போனதில்லை. என் எண்ணங்களோ நம்பிக்கையோ எதுவும் வீண்போகவில்லை. இதோ நாம் மீண்டும் ஒரே குடும்பமாக சேர்ந்து விட்டோம் " என்றாள் தியோபிஸ்த்தா.
இவர்கள் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்ல....தங்களுடைய ஓய்வு நாள் முடிய சிலநாள் கால அவகாசமே இருந்ததால் நம் தளபதியார் ப்ளாஸிடஸ் என்னும் எஸ்தேக்கையார் மீண்டும் தன் படைகளை நடத்திக்கொண்டு ரோமாபுரிக்கு வந்தார். தேசியாவை வெற்றிகொண்ட மாவீரனாக அவர் ரோமாபுரிக்கு வரவேற்கப்பட்டார். அதிலும் தேசியாவின் தங்கச்சுரங்கத்தையே காலி செய்யும் அளவுக்கு செல்வங்களையும் கொள்ளைபொருட்க்களையும் அவர் அள்ளிக்கொண்டு வந்ததால் அப்போதிருந்த ரோமைய மாமன்னர் ஏட்றியனுக்கு தலை கால் புறியவில்லை.தேசியா, மோசியா ஆகிய இருநாடுகளையும் பணியவைத்த நம் தளபதிக்கு மாமன்னர் ஏட்றியன் பெரும் வெற்றிவிழா கொண்டாடினார்.வெற்றி விழாவின் கடைசி திருநாளாக ரோம் நகரின் ஒரு மலையிலிருந்த ஜூபிடர் தேவாலயத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கே மன்னர் ஏட்றியன் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார்.
" அரசே...என்னை எதற்காக இங்கே அழைத்து வரச்செய்தீர்கள்." என்றார் எஸ்தேக்கியார்.
" என்ன தளபதி...ஏதும் அறியாததுபோல் கேட்கிறீர்கள். இந்த ஜூபிடர் நம் அரச குல தெய்வம். நம்முடைய அனைத்து வெற்றிகளும் நம் குல தெய்வம் தானே கொடுத்தது. இதோ இப்போது நீர் அடைந்த தேசியா, மோசியா யுத்தங்களின் வெற்றி கூட நம் ஜூபிடர் தெய்வம் தானே தந்தது. இதில் உமக்கு என்ன சந்தேகம்.. வா வா... வந்து உன் வெற்றியின் காணிக்கையை செலுத்து. ஐய்யா பூஜாரி..பூஜையை ஆரம்பிக்கலாமா..."
" இல்லை அரசே.என்னை மன்னிக்க வேண்டுகிறேன்..இந்த பூஜைக்கு நான் வரமாட்டேன். பலியும் செலுத்த மாட்டேன்."
" என்னா... பூஜைக்கு வரமாட்டாய்... பலியும் செலுத்த மாட்டாய்... காரணம் என்ன ?" என்று கர்ஜனை செய்தான் மன்னர் ஏட்றியன் அடங்காத கோபத்துடன்.
" அரசே... எனக்கு இந்த மா பெரும் வெற்றியை தந்தது இந்த ஜூபிடர் தெய்வம் அல்ல.."
" நம் அரசகுல தெய்வம் ஜூபிடர் இடி தேவர்.. போரில் வெற்றியை குவிப்பவர். இந்த தேசியா,மோசியா போரில் கூட நம் சேனைகள் இந்த இடிதேவரின் பதாதைகளைத்தானே தூக்கிச்சென்றார்கள்."
" இடிதேவரின் பதாதைகளை நம் சேனை வீரர்கள் தூக்கிச்சென்றிருக்கலாம். அது அவர்கள் பழக்க வழக்கத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது. ஆனால் என் நம்பிக்கை வேறு."
" உன் நம்பிக்கை என்ன?"
" என் நம்பிக்கை என் யேசுநாதரே...எனக்கு இந்த போர்க்களங்களில் வெற்றியை தேடித்தந்தவர் என் யேசுநாதரே..."
" தளபதி ப்ளாஸிடஸ்... வார்த்தையை அளந்து பேசு. நீ பேசுவது யாரிடம் தெரியுமா ? "
" தெரியும் அரசே..நான் யாரிடம் பேசுகின்றேன் என்பது எனக்கு நன்றாக தெரிந்தே பேசுகின்றேன். நான் இந்த ரோமைய சாம்ராஜ்ஜிய பேரரசர் மாமன்னர் ஏட்றியனிடம் தான் பேசுகின்றேன்."
" தளபதி ப்ளாஸிடஸ்...யேசுநாதர் எனக்கு பரம விரோதி. அவருடைய கிறிஸ்த்துவ மதம் நம் சாம்ராஜ்ஜியத்தில் தடை செய்யப்பட்டிருகின்றது. தெரிந்துமா நீ அந்த மதத்தில் சேர்ந்தாய்.? இது ராஜ துரோகம். இதற்கு என்ன தண்டனை தெரியுமா?"
" அரசே... கிறிஸ்த்துவம் என்பது ஆண்டவனால் கொடுக்கப்படும் ஒரு தெய்வீக அழைப்பு. அவரை கடவுளாக விசுவாசித்து அவரில் நம்பிக்கை கொள்பவர்களை அவர் தம் மக்களாக ஏற்றுக்கொள்கிறார். அவர் என்னையும் என் குடும்பத்தாரையும் அழைத்தார்..நாங்கள் அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டோம். அவரை உன் கடவுளாக ஏற்றுக்கொள்ளாதே என்று சொல்ல இந்த உலகத்தில் யாருக்கும் உரிமை இல்லை."
" தளபதி ப்ளாஸிடஸ்.. இனிமேல் உன்னிடம் பேசிப்பயனில்லை. உன்னிடமிருந்து நான் ஒரே பதிலை எதிர்பார்க்கிறேன். உன் யேசுநாதரை விட்டுவிட்டு, என்னையும் என் ரோமைய தெய்வங்களையும் கடவுளாக ஏற்று தீப தூப ஆராதனை காட்ட முடியுமா...முடியாதா?"
" என்னை மன்னியுங்கள் அரசே..நீவீர் ரோமைய சாம்ராஜ்ஜிய அதிபதி என்னும் முறையில் உமக்கு நான் மரியாதை செய்ய கடமை பட்டிருகின்றேன். ஆனால் உம்மையோ உம்முடைய மூதாதையர் வழிபட்டுவரும் கடவுளர்களுக்கோ நான் கடவுளாகக்கருதி அவர்களுக்கு தீப தூப ஆராதணை ஒருபோதும் காட்ட முடியாது."
" அடேய் தளபதி..நீ.. என்னைமட்டுமல்லாது உம்மை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து அழகு பார்த்த நம் ரோமைய சக்கரவர்த்திகள் அனைவருக்கும் துரோகம் செய்துவிட்டாய்.உன்னைப்பெற்ற இந்த நாட்டுக்கும் உன்னை வளர்த்த நம்முடைய தேவர்களுக்கும் நீ காட்டும் நன்றிகடன் இதுதானா?"
" மீண்டும் என்னை மன்னியுங்கள் அரசே...என்னைபெற்ற இந்த ரோமைய சாம்ராஜ்ஜியதிற்கு அதன் பிரஜை என்னும் முறையில் நான் என் உடல், பொருள், சொத்து, சுகம் என அனைத்தையும் முழுமனதாக அர்ப்பணித்திருக்கிறேன்.அதன் வெற்றிக்காகவும், முன்னேற்றதிற்காகவும் நான் அயராது உழைத்திருக்கின்றேன். இதை தாங்கள் அறியாததல்ல. ஆனால் ஆன்மா விஷயம் வேறு. அது என் ஆண்டவராகிய என் யேசுகிறிஸ்த்துவுக்கே சொந்தம். எனக்கு ஞானம் வந்த பிறபாடு இந்த அகில உலகத்தையும் படைத்தவர் என் யேசுநாதரே அன்றி வேறல்லர் என்று உணர்ந்த பிற்பாடு மற்றைய தெய்வங்கள் அனைத்தும் பொய் என்று அறிந்துகொண்டேன்."
" போதும் தளபதி...நிறுத்து உன் பிரசங்கத்தை.நீ நன்றி மறந்த நாய்."
" அரசே..நீவீர் என்னை நாய் என்றாலும் சரி.... பேய் என்றாலும் சரி...நான் வருத்தப்படப்போவதில்லை.எங்களைப்பொருத்தமட்டில் யேசுநாதரைத்தவிர அனைத்து தெய்வங்களும் போலியானவைகளே."
" எங்கிருந்தோ வந்த அந்த யேசுநாதரை உன் கடவுளாக ஏற்றுக்கொண்ட நீ நம் முன்னோர்கள் வழிபட்டுவந்த கடவுர்களை அவமானப்படுத்திவிட்டாய்..நீ மட்டும் கிறிஸ்த்துவனா அல்லது உன் ஒட்டுமொத்த குடும்பமும் கிறிஸ்த்துவர்களா.?"
" இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை அரசே. நான், என் மனைவி, என் இரண்டு பிள்ளைகள் அனைவரும் கிறிஸ்த்துவர்கள் தான்.."
" அப்படியானால் உன் ஒருவன் முடிவுதான் உன் குடும்பத்தினர் அனைவரின் முடிவா?"
" ஆம் அரசே..என் முடிவுதான் எங்கள் அனைவரின் முடிவும். "
கோபத்தின் உச்சத்துக்கே சென்றான் மன்னன் ஏட்றியன். நம் தளபதி தன் நாட்டுக்காக செய்த சகல வெற்றிகளையும் அவர் கொண்டுவந்திருந்த அத்தனை செல்வங்களையும் மறந்தான். நன்றி மறந்தவன் ஆனான் . அடுத்துவந்தன அவன் வாயிலிருந்து அரச கட்டளை.
" கிறிஸ்த்துவமதத்தை சேர்ந்த இந்த நன்றிகெட்ட நாய்... தளபதி ப்ளாஸிடஸும் அவன் மனைவியும் அவன் இரு பிள்ளைகளும் அரச கட்டளைக்கு பணியாமல் கிறிஸ்த்துவத்தை ஏற்றுக்கொண்டதால் சிங்கங்களுக்கு இறையாகப்போட்டு கொல்ல உத்திரவிடுகிறேன். நாளைக்கு காலை தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்."
மன்னர் ஏட்றியனின் உத்திரவைத்தொடர்ந்து அடுத்த நாள் காலை கொலோஸியம் என்னும் அந்த மரண விளையாட்டரங்கத்தில் இந்த நான்கு பேரின் மரணத்தைக்காண அந்த விளையாட்டரங்கம் முழுவதும் கூட்டம் கூடி இருந்தது.
தளபதி ப்ளாஸிடஸ் என்னும் எஸ்தேக்கியார், தாத்தியானா என்னும் தியோபிஸ்த்தா, அந்தியோக்கு என்னும் தியோபிஸ்த்துஸ், அக்காஸியா என்னும் அக்காபியுஸ் ஆகிய நால்வரும் இந்த கொலோசியத்தின் நடுவில் தூண்களோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தனர். மன்னரின் ஆணைப்படி இரண்டு சிங்கங்கள் அவர்கள் மீது ஏவி விடப்பட்டன. அவை இவர்களை ஒன்றும் செய்யாமல் அவர்கள் முன்னே நாய்குட்டிகள் போல அமர்ந்துகொண்டன. என்ன செய்தும் பல மணி நேரமாக அவைகள் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. இதனால் கடுப்பாகிப்போனான் மன்னன் ஏட்றியன்.
" ஓஓஓ.. இதென்ன மாய்மாலம். அடேய் ப்ளாஸிடஸ்...உன் மாய வித்தைகள் என்னிடம் ஒன்றும் பலிக்காது. அடேய் யாரங்கே கொண்டு வாருங்கள் அந்த வெண்கல மாட்டை " என்றான்.
இந்த இடத்தில் நேயர்களுக்கு இந்த வெண்கல மாட்டை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. ஒரு சமயம் சிசிலி தீவின் அதிபதியும் கொடுங்கோலனுமான பல்லாரியுஸ் என்பவன் தன் எதிரிகளை பழிவாங்க புதுமையான ஒரு ஆயுதத்தை கண்டு பிடிக்க விரும்பினான். அதன்படி கிரீஸ் நாட்டை சேர்ந்த பெரிலோஸ் என்னும் ஒரு தொழில் நுட்ப வல்லுனனை அனுகினான். அவனும் காசுக்கு ஆசைப்பட்டு வெண்கலத்தால் ஒரு மாட்டை வடிவமைத்தான். அந்த மாட்டின் வயிற்றுப்பகுதி குடைந்தெடுக்கப்பட்டு மேற்பகுதியில் ஒரு திறப்பும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. மேலும் சில காற்றுக்குழாய்கள் செய்யப்பட்டு அவை அந்த எருதின் மூக்கின் வழியே சப்தமாக கேட்க்கும்படியும் அமைக்கப்பட்டிருந்தது. இதை முடித்த பிறகு அவன் அரசனை அணுகி," இந்த எருதினுள் போடப்படும் நபர், அதன்கீழ் ஏற்றப்படும் தீயினால் வேகும்போது அவன்விடும் ஏக்கப்பெருமூச்சுகளும் , வேதனையால் கத்தும் அலறல்களும் இந்த வெண்கல எருதினுள்ளிருந்து அதன்மூக்கு வழியே வெளிவரும்போது அந்த மாடு கத்துவதைபோலவே இருக்கும்" ' என்றான்.
இந்த விஞ்ஞான கண்டுபிடிப்பை சோதித்தறிய மன்னன் பல்லாரியுஸ் அதை செய்த பெரிலோஸ் என்பவனை அந்த வெண்கல எருதின் உள்ளே போட்டு அதன் கதவை சாத்தி அவன் கத்தும் ஒலி கேட்கிறதா என பரிசோதித்துப்பார்த்தான்.
அவன் செய்த படியே எல்லாம் சரியாக இருக்கக்கண்டு அவனை வெளியே எடுத்து அவனை ரகசியமாக ஊருக்கு வெளியே உள்ள பெரிய மலையில் இருந்து கீழே தள்ளி கொண்றான். அந்த கொடுங்கோலன் இப்படியாக இந்த வெண்கல மாட்டை பயன்படுத்தி பல விரோதிகளை கொண்றான். ஆனால் தன்வினை தன்னைச்சுடும் என்பதுபோல இந்த கொடுங்கோலனுக்கு எதிராக ஒருகலகம் ஏற்படுத்தப்பட்டு அவன் கைது செய்யப்பட்டான். அவனையும் இந்த வெண்கல மாட்டினுள்ளே போட்டு தீ வைத்து எரித்துக்கொண்றார்கள். இந்த வெண்கல மாட்டைத்தான் இப்போது இந்த கொலோசியும் என்னும் மரண விளையாட்டரங்கத்தில் கொண்டுவர ஆனையிட்டான் மன்னன் ஏட்றியன்.
இந்த வெண்கல மாட்டின் கீழே ஒரு பெரும் குழி தோண்டப்பட்டது. அதனுள் விறகுகள் அடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் நம் வீரத்தளபதி எஸ்தேக்கியாரும் அவரது மனைவியும் இரு மகன்களும் கைகளைத்தூக்கியபடியே ஜெபத்தில் ஈடுபட்டனர்.
" ஆண்டவறாகிய சர்வேசுரா..நீர் அழைத்ததினாலேயே நாங்கள் உம்மை ஏற்றுக்கொண்டோம்.
நீர் எங்களுக்கு கொடுத்த வார்த்தையின்படியே நாங்களும் பல துன்பங்களும் அநுபவித்தோம்.
நீர் எங்களுக்கு கொடுத்த வாக்கின்படியே நாங்கள் மீண்டும் ஒரே குடும்பமாக சேர்ந்தோம்.
இன்று இப்போது நீவீர் கொடுத்த வாக்கின்படியே உம்மை சரணடந்துள்ளோம்.
நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாய் உம்மிடம் சேர்ந்துவர தேவரீர் அனுமதித்துள்ளீர்.
இது பலபேருக்கு கிடைக்காத பாக்கியம். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
கொடும் சிங்கங்களின் வாயிலிருந்து எங்கள் சரீரங்களை சேதமுறாமல் காத்த தேவனே, இந்த கொடும் அக்கினியிலிருந்தும் எங்களைக்காத்து இரட்ச்சிப்பீராக..
எங்கள் ஆன்மா சேதமுறாதவாறு எங்களை ஈடேற்றியருளும்.யேசுவே சரணம். எங்கள் விசுவாச அறிக்கையை உமக்கு காணிக்கை ஆக்குகிறோம்.
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறோம்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய ஆண்டவர் யேசு கிறிஸ்த்துவை விசுவாசிகிறோம்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து உடலெடுத்து மனிதர் ஆனார்.
மேலும் போஞ்சிபிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாலங்களில் இறங்கி மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார்.
பரலோகத்துக்கு எழுந்தருள்ளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனின் வலது பக்கத்தில் வீற்றிருகின்றார்.
அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தோரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவாசிகிறோம்
பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்த்தலிக்க திருச்சபையை விசுவாசிகிறோம்.
புனிதர்களுடைய புனித உறவை விசுவாசிகிறோம்.
பாவ பொறுத்தலை விசுவாசிகிறோம்.
சரீர உத்தானத்தை விசுவாசிகிறோம்.
நித்திய ஜீவியத்தை விசுவாசிகிறோம்... ஆமேன்."
இதற்குள்ளாக மன்னன் ஏட்றியனுக்கு பொருமை குறைந்து கோபம் அதிகரித்து அவன் வாயிலிருந்து தூஷணம் கக்கினான்." அடேய் ப்ளாஸிடஸ்... இப்போது உன் யேசுநாதர் வந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாறா பார்ப்போம். என்றான்.போ...போ...உனக்காக வெண்கல எருது காத்துக்கொண்டிருகிறது. அடேய் யாரங்கே... அந்த நன்றிகெட்ட நாயையும் அவன் பெண்டாட்டி பிள்ளைகளையும் வெண்கல எருதினுள் தூக்கிப்போடுங்கள் " என்றான்.
உடனே அந்த கொலோசியம் என்னும் மரண விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த மொத்த கூட்டமும் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டது. ஆனால் அங்கே கூடியிருந்த பல ரகசிய கிறிஸ்த்துவர்கள் எஸ்த்தாக்கியாருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஏற்படப்போகும் கதியைநினைத்து பெரும் கவலைகொண்டு கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டிருந்தனர்.
அரச தண்டனை நிறைவேற்றுபவன் எஸ்தேக்கியாரப்பற்றி இழுத்தான். எஸ்தேக்கியார் அவனைப்பார்த்து, " வேண்டாம் சகோதரா..உனக்கு அந்த கஷ்ட்டம் வேண்டாம். நாங்களே போய்க்கொள்வோம்" என்றார். அவன் ரகசியமாய் கண்ணீரை துடைத்துக்கொண்டான். இவ்விதமாக எஸ்தேக்கியாரும் அவர் மனைவியும் அவர்களின் இரு குமாரர்களும் அந்த எருதின் உடலில் நுழைந்ததும் அதன் கதவுகள் சாத்தப்பட்டன. கீழே பெரும் அக்கினிக்குண்டம் பற்றிவைக்கப்பட்டு அது மிகவும் கொடூரமாக அதன் தீ நாக்குகளை வீசி கொடும் உஷ்ணத்தை ஏற்படுத்தியது.
இதைக்கண்ட ஏட்றியன் வாய் விட்டே மிகப்பலமாக சிரித்தான்.ஏதோ பெரும் பேயையோ பிசாசையோ அக்கிணியில் இட்டு பொசுக்குவதுபோல் இருந்தது அவன் சிரிப்பு. மேலும்," ரோமர்களே...இந்த வெண்கல எருதின் உள்ளே என் எதிரியும் நன்றிகெட்ட நாயுமான ப்ளாஸிடஸின் ஒட்டுமொத்த குடும்பமும் கதறி அழும் சப்த்தம் கேட்கிறதா...என்ன ..கேட்க்கவில்லையா... அடேய் யாரங்கே இன்னும் தீயை ஜோராக மூட்டுங்கள். அவர்கள் இடும் கூக்குறல் எனக்கு கேட்க்கவே இல்லை " என்றான். ஆனால் தீயை இன்னும் எவ்வளவு ஏற்படுத்தியும் அந்த வெண்கல மாட்டிலிருந்து ஒரு சிறு முக்கல்,முனகல் கூட கேட்க்கவில்லை. இது ஏட்றியனுக்கு மிகவும் ஏமாற்றமாகப்போய்விட்டது.
ஒருக்கால் இந்த வெண்கல எருதின் கருவி ஏதேனும் பழுதுபட்டிருக்கும்" என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டான். ஆனாலும் " இன்னும் தீயை அதிகரியுங்கள் " என்றான். அப்போது ஒரு மேற்பார்வையாளன் வந்து அவரை வணங்கி, " அரசே ...என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இப்போதே வெண்கல எருது பழுத்து தனதன என்றாகிவிட்டது. இன்னும் தீயை அதிகரித்தால் அது உருகிவிடும். பிறகு அது யாருக்கும் பயன்படாமல் போய்விடும் " என்றான்.
இதனால் மன்னர் ஏட்றியன் ," அடடா...அந்த தளபதியும் அவன் மனைவி மக்களும் பெரும் ஓலமிட்டு அழும் குறலைக்கேட்க்க முடியாமல் போய்விட்டதே " என்று உண்மையில் மனம் வருந்தினான்.
ஒரு வழியாக தீயை அணைத்து அந்த வெண்கல எருது குளிர மூன்று நாள் தேவைப்பட்டது. நான்காம் நாள் அந்த வெண்கல எருதின் வயிற்றை திறந்து அந்த நால்வர்களின் சடலங்களையும் வெளியே எடுத்துப்பார்த்தபோது அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்துக்கும் ஆளாயினர். ஆண்டவராகிய யேசுநாதர் ப்ளாசிடஸ் என்னும் எஸ்த்தேக்கியாரின் குடும்பத்தை சேர்ந்த அனைவரின் உடலையும் அந்த கொடிய தீயினால் ஒரு சிறிதளவும் சேதமுறாதபடி காத்திருந்தார். அவர்களின் தலைமுடி கூட கருகி சேதமாகவில்லை.அவர்களின் சடலங்கள் எதிலும் ஒரு சிறிதும் தீக்காயங்கள் ஏற்டவில்லை. உயிரோடு உள்ளே சென்ற அவர்கள் எப்போது எப்படி இறந்தார்கள் என்பது ஆண்டவறாகிய யேசுநாதருக்கே வெளிச்சம். " கொடும் சிங்கங்களின் வாயிலிருந்து எங்கள் சரீரங்களை சேதமுறாமல் காத்த தேவனே, இந்த கொடும் அக்கினியிலிருந்தும் எங்களைக்காத்து இரட்ச்சிப்பீராக.." என்று வேண்டிக்கொண்ட அவர்கள் ஜெபம் கேட்க்கப்பட்டுவிட்டது.
இந்த அதிசயத்தை கண்ட மக்கள் பலர் இயேசுநாதரை விசுவாசித்து கிறிஸ்த்துவர்கள் ஆனார்கள். எஸ்தேக்கியார் அவரது மனைவி மற்றும் அவர்களின் இரு புதல்வர்களின் உடல்களை ரகசியமாகப்பெற்று ரகசியமாகவே புதைத்தனர்.
ஆண்டவர் எஸ்த்தேக்கியாரின் புகழை உலகெங்கும் அறிவித்தார். நீ என்னை மாட்ச்சிமை படுத்துவதுபோல நானும் உன்னை மாட்ச்சிமை படுத்துவேன் என்று அன்று எஸ்த்தேக்கியாருக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை இன்று அவர் நிறைவேற்றினார். .
ரோம் பட்டிணத்தில் செப்டம்பர் 20 கி.பி.118 ல் நம் எஸ்தேக்கியார் தன் குடும்பத்தாருடன் வேத சாட்ச்சியாக மரித்ததால் அந்த நாளிலேயே அவரது திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கன் திருச்சபை, கிழக்கு பழமை ரீதி திருச்சபை போன்றவைகள் நம் எஸ்த்தாக்கியாருக்கும் அவர் மனைவி மற்றும் அவரின் இரு புதல்வர்களுக்கும் புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளன.
ரோமாபுரியில் அவர் பெயரால் ஒரு மிகப்பெரிய தேவாலயம் இருக்கின்றது.
தென் இந்தியாவில் திரு நெல்வேலி மாவட்டத்தில் மிட்டாதார் கோயில் என்னும் கிராமத்தில் நம் புனிதர் எஸ்தக்கியார் தேவாலயம் ஒன்று இருகின்றது.
ஃப்ரான்ஸ் தேசத்தில் அதன் தலை நகர் பாரீஸில் உள்ள புனித டென்னிஸ் தேவாலயத்தில் நம் புனித எஸ்தேக்கியாரின் அருளிக்கங்கள் சில இருந்ததாக கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அக்கோயிலின் நிர்வாகியான சுகர் அப்பொட் என்பவர் சாட்ச்சியம் கூறியிருகிறார்.
இவருடைய பெயரில் கரிபியன் நெதெர்லாண்ட் தீவுகளில் ஒன்று எஸ்த்தக்கி தீவு என பெயர் பெற்றுள்ளது.
இத்தாலியிலுள்ள டெ. அப்ஃபிட்டோ என்னும் ஒரு அரச கோத்திரம் தாங்கள் இன்னும் புனித எஸ்தேக்கியாரின் நேரடி வாரிசுகள்தாம் என்று கூறிக்கொள்கிறார்கள். .
நம் புனிதர் எஸ்தேக்கியார் வேட்டை ஆடுபவர்களுக்கும், தீ அணைப்பவர்களுக்கும், நீதிக்காக போராடுபவர்களுக்காகவும், வேத சாட்ச்சிகளுக்கும், அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கும் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டுள்ளார்..
ஆண்டவறாகிய யேசுநாதரின் பெரும் அருளைப்பெற்றவராகிய புனித எஸ்தேக்கியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
St eustachius church pakiapuram arumanai 629151,kk district,tamilnadu,india..
ReplyDelete