Monday, December 30, 2013

" மார்செலீனோ என்னும் ஒரு சிறுவன் " " யேசுவுக்கு ரொட்டியும் ஒயினும் கொடுத்தவன் " .



      " மார்செலீனோ என்னும் ஒரு சிறுவன் "    " யேசுவுக்கு ரொட்டியும் ஒயினும் கொடுத்தவன் " .
          இத்தாலியில் ஜெனேவா நகரைச்சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயின் தேசத்திலிருந்து புறப்பட்டு கி.பி.1500களில் அமெரிக்காவைக்கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தார்.
பல ஐரோப்பிய நாடுகள் கடல் வாணிபத்தை முன்னிட்டு ஒன்றன்பின் ஒன்றாய் அமெரிக்காவுக்கு படை எடுத்துச்சென்றன. முக்கியமாக ஸ்பெயின் அந்த நாட்டை ஆக்கிரமித்து அங்கு தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியது. அதிலும் முக்கியமாக மெஃஸிகோ நாடு அதன் காலனி நாடாய் ஆனது. இவ்விதமாக போர்த்துக்கள்,ஸ்பெயின்,ஃப்ரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து,
டச்சு போன்ற நாடுகள் தங்கள் வியாபாரத்தை பெருக்கவும், தங்கள் ஆதிக்கத்தை ஆங்காங்கே நிலைநாட்டவும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று அங்கிருந்த அரசுகளை வென்று  தங்கள் காலனி நாடுகளாக்கி தங்கள் வசதி வாய்ப்புகளை பெருக்கிகொண்டன. பின் அவைகள் ஆதிக்க சக்திகளாய் மாறின. தாங்கள் வென்ற அந்தந்த காலணி நாடுகளில் தங்களுடைய மதமான கிறிஸ்த்துவ மதத்தை பரப்பினர். இவ்விதமாகத்தான் உலகின் பெருவாறியான நாடுகளில் கிறிஸ்த்துவ மதம் பரவியது.
     இந்தக்காலக்கட்டங்களில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் தேசம் அப்போதுதான் ஃப்ரான்ஸ் தேசத்தில் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருந்தது. ஆனாலும் உள்ளூரிலிருந்த பல சுயேட்ச்சை கட்சிகள் தங்களுக்கும் அரசு அங்கீகாரம் வேண்டியும் ஆட்சியில் பங்கு வேண்டியும் சமத்துவம் வேண்டியும் போர்க்கொடி தூக்கின. இப்படியாக உள்ளூரிலிருந்த
ஒரு இயக்கம் மெக்சிகர்களின் ஆதரவு பெற்று தங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று ஆயுதம் தூக்கினர். எனவே ஸ்பெயின் அரசாங்கம் இவர்கள் எல்லோரையும் சமாளிப்பதிலேயே அதிகம் பொருளும் நேரமும் செலவிட்டது.
       இந்த காலகட்டங்களில் சாதாரண பொதுமக்களின்பாடு மிகவும் அச்சபடும் நிலைக்கு ஆளானது. எங்கு பார்த்தாலும் ஆயுதம் ஏந்தியவர்களின் அட்டகாசம் இருந்ததால் அவர்கள் பாடு கொஞ்சம் கஸ்ட்டம்தான்.. பொது மக்களின் நிலை இப்படி என்றால் துறவிகளின் பாடு மிகவும் கவலைகிடமாக இருந்தது. அவர்களை மதிப்பவர் மதித்துக்கொண்டுதான் இருந்தனர்.
மிதிப்பவர்கள் மிதித்துக்கொண்டுதான் இருந்தனர். அன்றாடம் சாப்பாட்டுக்கே அவர்கள் பொதுமக்களிடம் வாங்கி சாப்பிடும் நிலைக்கு ஆளாயினர். எப்படி இருப்பினும் அந்த துறவிகள்  தங்கள் வேலையை செய்துகொண்டும் மற்றவர்களை நல்வழி நடத்தும் பொருட்டு பூசை வைத்துக்கொண்டு மக்களுக்காகவும் தங்களுக்காகவும் அவர்கள் தங்கள் வேண்டுதலை
நிறைவேற்றி கொண்டுதான் இருந்தார்கள்.
          இப்படி இருக்கையில் ஒரு நாள் ஸ்பெயின் தேசத்தின் சாத்தா மரியா கிராமத்தில் ஒரு மலை உச்சியில் அமைந்திருந்த ஒரு மடாலயத்தில் அதிகாலையில் மணி அடித்தார் ஒரு துறவி. அவரது பெரிய சொட்டைத்தலையை வைத்தே அவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையை சேர்ந்தவர் என்று கூறி விடலாம்.   ஊதுகிற சங்கை ஊதி வை...அது விடியும்போது விடியட்டும் என்பதுபோல் அவர் பாட்டிற்கு காலை மணியை நேரம் தவறாது அடித்துவிடுவார். ஆனால் அதிகாலையில் கண்விழித்து இந்த குன்றின் மீதிருந்த தேவாலயத்திற்கு யார்   வரப்போகிறார் என்ற எண்ணத்தோடு உடனே கதவை சாத்திக்கொண்டார் அவர். ஆனால் ஒரு பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகுரல் அவரை தடுத்து நிறுத்தியது. தான் கேட்டது ஒரு   பச்சிளம் குழந்தையின் அழுகுரல்தான் என்பதை நிச்சயித்துக்கொள்ள மீண்டும் கதவைத்திறந்தார்..
      ஆம் ..சந்தேகமில்லை...இது ஒரு குழந்தையின் அழும் குரல் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார் அவர். தேவாலயத்தின் கதவுக்கருகில் ஒரு அழகிய ஆண் குழந்தை துணிகளால் சுற்றப்பட்டு அனாதையாக விடப்பட்டிருந்தது. அதன் துணியும் அந்தக்குழந்தையின் தோற்றமும் அந்தக்குழந்தை ஒரு மெக்ஸிய தம்பதியருக்கு பிறந்திருக்கும் என தோன்றியது.  அருகில் யாரும் இல்லாததாலும் மிகுந்த பனியாலும் பசியாலும் இந்த குழந்தை அழுகின்றது என புறிந்துகொண்ட அந்த பாதிரியாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  ஆனாலும் இப்போதைக்கு இந்த குழந்தையை காப்பாறாவிட்டால் அது இறந்தே போய்விடும் என்று நினைத்த அந்த பாதிரியார் அதைத்தூக்கிக்கொண்டு மடாலத்தினுள் நுழைந்தார்.
" இங்கா...இங்கா " என்று குழந்தை வீறிட்டழுததால் மற்ற பாதிரியார்கள் உடனடியாக அங்கு வந்தார்கள்.." குசினி ஃபாதர்...என்ன இது...ஏது இந்த குழந்தை " என்றனர்..அதற்குள்   மடத்து தலைவரும் வந்துவிடவே அந்த சமயற்காரரான குசினி பாதிரியார் நடந்ததை விவரித்தார். மடத்து தலைவர் மிகுந்த கண்டிப்பானவர்.." யப்பா...குசினி..ஏதோ நடக்கக்கூடாதது
நடந்து விட்டது...அதைப்பற்றி இனிமேல் ஏதும் பேசிப்பயன் இல்லை...நம் மடத்து கட்டளைப்படி இங்கு பெண்களும் குழந்தைகளும் தங்கக்கூடாது..காலை உணவு முடிந்ததும்   ஊருக்குள் சென்று குழந்தை யாருடையது என்று கண்டுபிடித்து அதை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்து விடு...இது குருமடம்...அனாதை விடுதி அல்ல..சரிதானே போய் அவரவர்
அவரது வேலையைப்பாருங்கள் " என்றார். ஆனாலும் இந்தக்குழந்தை அங்கிருந்த எல்லா பாதிரியார்களையும் தன் அழகான சிரிப்பால் வளைத்துப்போட்டு கொண்டது.
        அந்த குசினி பாதிரியாருக்கு அந்தக்குழந்தையை பிரியவே மனம் வரவில்லை... ஆயிற்று... காலை உணவு முடிந்ததும் சில குருக்கள் இந்த குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்குள்  சென்றால் அவர்களை சுற்றி பெரும் கூட்டம் கூடி அவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கியது. இதில் முதன்மையாக இருந்தவர் அந்த ஊரின் மேயர்தான். " என்னப்பா...
ஒருவழியாக இந்த பிள்ளையை பெற்று எடுத்துவந்து விட்டீர்களா..அந்த புண்ணியவதி யாரோ? அவள் எந்த ஊரோ?... அவளை என்ன செய்தீர்கள்? கொண்றுவிட்டீர்களா?  இல்லை பணம் காசு கொடுத்து அனுப்பிவிட்டீர்களா ?...இந்தக்காலத்தில் யாரையுமே நம்பமுடிவில்லையப்பா " என்று பலம்கொண்டமட்டும் கத்திக்கொண்டிருந்தான். குருவானவர்களை
மட்டம்தட்டுவதென்றால் அவனுக்கு கொள்ளை இன்பம்..ஒரு பச்சிளம் குழந்தையோடு இந்த பாதிரியார்கள் ஊருக்குள் வரவே ஊரே குபார் ஆனது.. ஆனாலும் இந்த குருவானவர்களின்   மேல் பக்திகொண்ட பலர் அப்போதே மேயரைக்கண்டித்தனர்...இத்தகைய இழிவான பேச்சினால் மனம் நொந்து போன பாதிரியார்கள் அன்று முழுவதும் அதன் பெற்றோரை தேடி அது
கிடைக்காமல் போகவே கிடைத்த அன்பளிப்பு பொருளோடு தங்கள் மடாலயத்திற்கு மாலை வந்தடைந்தனர். மீண்டும் குழந்தை தங்கள் இல்லம் வந்ததில் பல பாதிரியார்களுக்கு   சந்தோஷம் தான்.
            அந்த மடாலயத்து தலைவராகிய ரெக்டர்," சகோதரர்களே...இந்த குழந்தையால் நம் தவ வாழ்வுக்கு இடையூறு வரும்போல் தெரிகிறது..எனவே கூடிய விரைவில் இக்குழந்தையின்   பெற்றோரைக்கண்டு பிடிக்க பரமன் யேசு அருள்வாறாக... மடத்து விதிகளையும் மீறி நான் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது....இக்குழந்தை நம்மிடையே இருக்கும் வரை
இங்கிருக்கும் ஒவ்வொரு குருவும் இக்குழந்தைக்கு தகப்பனாக நடந்துகொள்ள வேண்டுகிறேன்..ஒருவரே அதை பராமரிக்க முடியாது...நம் குசினி இக்குழந்தையை வளர்க்க பெரும்   முயற்சி எடுப்பதால் அவரே இக்குழந்தைக்கு பாதுகாப்பாளராக இருக்க நான் உத்திரவிடுகிறேன்..நமக்குள்ள சாப்பாடு பிரச்சினையால் இக்குழந்தை பாதிக்காமலிருக்கும்படி நமக்கு  இனிமேல் குடிக்க பாலோ தயிரோ தவிர்க்கப்படுகிறது ". என்றார்.
        ஒவ்வொடு நாளும் ஊருக்குள் சென்று இக்குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க செல்வதும் அது முடியாமல் போவதும் மாலையில் திரும்பிவருவதும் இந்த குருக்களுக்கு பெரும் தோல்வியானாலும் பெரும் தொல்லையாய் இருந்ததென்னவோ உண்மைதான். இந்த குழந்தையின் காரணமாக பல குருக்களுக்கு கட்டளை ஜெபம் கூட சொல்ல முடியாமல் போனது.  பல குருக்களுக்கு இந்த குழந்தையால் ஏற்படும் கடமைதவறிய பாவங்கள் யாவும் பொதுவாக மன்னிக்கப்பட்டன. குசினி பாதிரியார் தன் வேலை கெடாமலும் அதே நேரத்தில் இந்த   குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கவும் சில உபாயம் செய்தார்..ஒரு நாணற்கூடையில் குழந்தையை வைத்து அதன் ஒரு முனையை தன் கையோடு கயிற்றால் கட்டிக்கொள்வார்.
அப்படியாகவே பாடிக்கொண்டே வெங்காயம் நறுக்குவார்... உருளைக்கிழங்கு சீவுவார்.. காய்கறி நறுக்குவார்... இப்படியாக அந்த தாலாட்டில் குழந்தை நன்றாக தூங்கிப்போகும்...
        ஒருநாள் அந்த நகரத்து மேயர் இந்த மடாலயம் வந்தான்...மரியாதை நிமித்தம் மடத்து தலைவர் அவரை வரவேற்றார்..." இதோபார் பெரிசு...நீ தான் இந்த மடத்து ரெக்ட்டரோ...  இந்த குழந்தையை நான் தத்து எடுத்துக்கொள்கிறேன்...என்ன சொல்லுகிறீர்...அன்பளிப்பு எவ்வளவு வேண்டும்?" என்று திமிறாகப்பேசினான். அதற்கு ரெக்டொர்," ஐய்யா...நாங்கள்
அனாதையாக வந்த இந்தக்குழந்தையை அதன் பெற்றோரிடம் சேர்க்கவே விரும்புகிறோம்...நாளைக்கு எப்போதாவது அதன் பெற்றோர் வந்து அதன் அங்க அடையாளங்களைக்கூறி  மீண்டும் தங்கள் குழந்தை வேண்டும் என்றால் எங்கள் நிலை என்னாகும் என்பதை சற்றே யோசித்துப்பாரும்..." என்றார்.. அதற்கு மேயர்," யோவ் பெரிசு...நான் என்ன கேட்கிறேன்...
நீர் என்ன பேசுகிறீர்..குழந்தையை நான் வளர்க்க விரும்புகிறேன்...மீறி எவனாவது வந்து கேட்டால் அவனை என்னிடம் அனுப்பும்... நான் பார்த்துக்கொள்கிறேன்...இல்லாவிட்டால் அந்த  தரித்திரம்பிடித்த குழந்தை செத்துப்போயிற்று என்று சொல்லி தொலைந்தது சனியன் என்று நிம்மதியாய் இருப்பீரா... அதை விட்டுவிட்டு என்னிடம் ஏதேதோ கதை அளந்துகொண்டு
இருகிறீர்கள்... எங்கேஅந்த குழந்தை ?" என்றான் மேயர்.
         மடத்து தலைவருக்கு அப்படியே கோபம் பொத்துக்கொண்டு வந்தது...ஒரு குழந்தையின்மட்டில் எவ்வளவு வர்மம்..எவ்வளவு திமிரான் பேச்சு...இவனிடம் குழந்தையை கொடுத்தால்  அவனிடம் அக்குழந்தை எப்படி வளரும்...இல்லை ...இல்லை...இவனிடம் குழந்தையை கொடுக்கக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டு," ஐய்யா. .மேயர் அவர்களே...குழந்தையை உங்களிடம் ஒப்படைக்க முடியாது..நீங்கள் வேறுகுழந்தையை தத்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். இதனால் பெரும் அவமானமடைந்தான் மேயர்.  கோபத்தால் தன் பற்கலை நற நற வென்றுகடித்துக்கொண்டு
  " அப்படியா சேதி.. என் அதிகாரம் எவ்வளவு என்று உங்களுக்குத்தெரியாது..எனக்கு வானளாவ அதிகாரம் உண்டு..
என் அதிகாரத்தைப்பயன்படுத்தி உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்...உங்கள் மடாலயத்தை இழுத்து மூடிவிட்டுத்தான் இனி நான் மறுவேலை பார்ப்பேன்" என்றவனாய்   விருட்டென்று எழந்து வெளியே சென்றான்.
        மடாலயத்தலைவரின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. அந்தக்குழந்தையை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அந்தக்குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு," அடேய் சின்னபைய்யா...உன்னை தகுதியானவர்களிடத்தில் மட்டுமே சேர்ப்பேனே தவிர இந்த மாதிரி அற்பனிடம் ஒருபோதும் கொடுக்க மாட்டேன்...இதனால் என் மடாலயமே காலியானாலும்   சரி... என்னை என்ன வென்று நினைத்துக்கொண்டான் அந்த அற்பன்..நான் பணம் காசுக்கு விலைபோய்விடக்கூடியவனா... அல்லது பயமுறுத்தினால் வணங்கிவிடக்கூடியவனா...  அதற்கு அவன் வேறு ஆளைப்பார்த்துக்கொள்ளட்டும்...சகோதரா குசினி...நாளைக்கு இந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்போம்...கூடியவரை எல்லோருக்கும் நல்ல சாப்பாடு  தயார் செய்..." என்றார்... அதற்கு மற்ற சகோதர குருக்கள்,
 " கணம் ரெக்டொர் அவர்களே...உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக..எங்கே இந்த குழந்தை நமக்கு  தொல்லையாக இருகிறதே என்று மனம் மாறி அந்த மேயருக்கு கொடுத்துவிடுவீர்களோ என்று பயந்திருந்தோம்...நல்ல வேளையாக நீங்கள் அந்த முடிவை எடுக்கவில்லை " என்று   அனைவரும் நன்றியின் அடையாளமாக அவர் கையை முத்தமிட்டனர். சற்றே புன்முறுவலோடு அந்த நன்றியின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார் ரெக்ட்டர் சாமியார்.
           அடுத்த நாள் அந்த குழந்தைக்கு மார்சலீனோ என்று பெயரிட்டு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அப்போது அந்தக்குழந்தை யேசுநாதர் குழந்தையாய் இருந்தபோது அப்படித்தான்   இருந்திருப்பார் என்று எண்ணும்படி அவ்வளவு அழகாக இருந்தது. மடத்தலைவர்கூட சற்று நேரம் அந்த குழந்தையை தன் கைகளிலேயே வைத்து யாரும் பார்காதபோது அதன்
கண்ணத்தில் முத்தமிட்டுக்கொஞ்சினார்...அவரது கண்டிப்பான குணத்துக்கு நடுவிலும் இந்த குழந்தையின் மட்டில் இவ்வளவு பாசம் வைத்திருகின்றாரே என்று சக சன்னியாசிகள்  ஆச்சரியப்பட்டார்கள்...ஆயிற்று...குழந்தை இங்கு வந்து ஒரு வாரம் என்றாகி ஒரு மாதமும் ஆனது...ஆனால் அதன் தாய் தகப்பனை மட்டும் இன்னும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
தினமும் குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்குள் செல்வதும் மாலையில் திரும்பவும் மடாலயத்துள் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விடவே தலைவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
         இனிமேல் குழந்தையை ஊருக்குள் தூக்கிக்கொண்டு போக வேண்டாம்... அவன் இங்கேயே வளரட்டும்..இனிமேல் யாராவது குழந்தையை தேடி வந்தால் இங்கேயே வந்து பார்த்து   கேட்கட்டும்...கடவுளின் சித்தம் எப்படி என்று பார்ப்போம்...காரணமில்லாமலா இக்குழந்தையை இங்கே கொண்டுவந்து சேர்த்திருப்பார்...இனி எல்லாம் அவன் செயல்" என்றார். .
      கடவுளின் சித்தமோ எண்னவோ தெரியவில்லை...யாரும் மடாலயம் வந்து குழந்தையை பார்க்கவும் இல்லை...தங்களுடையது என்று கேட்கவுமில்லை.இப்படியாக ஐந்து வருடங்கள்  உருண்டோடிவிட்டது. இந்த ஐந்து வருடத்துக்குள் அந்த குழந்தை மார்சலீனோ அந்த மடாலத்தில் வாழ்ந்துவந்த அத்தனை சன்னியாசிகளுக்கும் மிகுந்த செல்லப்பிள்ளை ஆனான்.
       மிகுந்த சுட்டிப்பிள்ளையாகவும் ஆனான்.. அவன் செய்யும் குறும்புகளில் தங்களை மறந்தனர் மடத்தில் வாழ்ந்த அத்தனை சாமியார்களும். இதில் ஒரு சாமியார் மிகுந்த வயதானவர்...  கடுமையான சளியினால் துன்புற்ற அவர் நடக்கவும் சக்தியற்று கட்டிலே கதி என்றானார்..நம் மார்சலீனோ அவரிடம் சென்று அவருடைய மழிக்கப்பட்ட தலையை வருடிவிட்டு,
 " தாத்தா..நான் கடவுளைக்கண்டால் உங்களுக்காக செபிப்பேன் " என்பான்.. அதற்க்கு அவர்," மகனே மார்சலீனோ..நீ எனக்காக மன்றாடவேண்டாம்...எனக்கு இந்த உலகில் வாழ   இஷ்டமே இல்லை..ஒருக்கால் நீ கடவுளைக்கண்டால் என்னை அவரிடம் சேர்த்துக்க சொல்லி கேள்" என்றார்..நம் மார்சலீனோ," தாத்தா...தாத்தா..." என்று அவர் நெஞ்சில் தன்  தலையை வைத்துக்கொள்வான்.. பெரியவருக்கு அப்படியே புளகாங்கிதமாகப்போகும். இப்படியாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருமாதிரியாக தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்துவான்
மார்சலீனோ.
      ஒருநாள் ரெக்டர் பாதிரியாருக்கு ஒரு யோசனை தோன்றியது.
  " பையனுக்கு இப்போது ஐந்து வயதாகிவிட்டது...இனிமேல் அவனை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.  ஊருக்குள் சென்று ஒரு நல்ல குடும்பமாகப்பார்த்து அவர்களிடம் நம் மார்சலீனோவை ஒப்படைத்துவிட்டால் அவனுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்கும். அவனோடு ஒத்த பிள்ளைகளோடு வளர்வது அவனுக்கும் நலமாக இருக்கும்...நீங்கள் என்ன நினைகிறீர்கள்" என்றார். எலோருக்கும் இது ஒரு நல்ல யோசனையாகப்படவே மீண்டும் ஒரு நல்ல தாய் தந்தை
தேடும்படலம் ஆரம்பித்தனர். ஊருக்குள் அப்போது ஏதோ திருவிழா...அதற்காக வேடிக்கை காட்டி பிழைக்கும் கழைக்கூத்தாடிகளும் சர்க்கஸ் கூடாரங்களும் ஊரில் நிறைந்திருந்தன.
        நம் மார்சலீனோ அடுக்கிவைத்திருந்த பழக்கூடைகளில் அடியிலிருந்து ஒன்றை உறுவினான்.. அது என்னடாவென்றால் எல்லா பழங்களும் சரிந்து சாலையில் விழுந்து   உருண்டோடிவிட்டன.. பழக்கடைக்காரன் அதற்க்கு நஸ்ட்ட ஈடு கேட்டான்..ஆனால் பாதிரியாரிடம் சுத்தமாக காசே இல்லை... அவனிடமிருந்து மார்சலீனோவை   விடுவித்து வருவதற்குள் அந்த பாதிரியாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது. மறு நாள் இதேபோல சர்க்கஸ் கூடாரங்களில் அடைக்கப்பட்டிருந்த கொடிய விலங்குகளை திறந்து
விட்டான் மார்சலீனோ. பாவம் அவனுக்கு என்னதெரியும்..அதன் பின் விளைவுகள் மிகுந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. நல்ல வேளையாக அவனால் விடுவிக்கப்பட்ட  அந்த கொடிய விலங்குகள் ஊருக்கும் போகும்முன்பே பிடிக்கப்பட்டு மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டன.. இந்த சம்பவத்தை தன் ஆதாயத்துக்காக பயன்படுத்தினான் அந்த  நகர மேயர்..இந்த பையன் இந்த மலையில் வாழும் சாமியார்களுக்கு முறைதவறிப்பிரந்த பையன்..அவனுடன் இந்த மடாலயத்தை சேர்ந்த துறவிகள் அனைவரும்   வெளியேற்றப்படவேண்டும் என்று அரசாங்கத்திடம் நன்றாகப்போட்டுக்கொடுத்தான்... ஆனால் கடவுள் நம் மார்சலீனோவுடன் இருந்ததால் அவனது கோரிக்கை   நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த நகர மேயர் அரசாங்கத்திடம் கெட்ட பெயர் சம்பாரித்துக்கொண்டார்... இதனால் அந்தப்பையன் மட்டிலும் அந்த மடாலயத்தின் அனைத்து சந்நியாசிகள்
பேரிலும் அவனுக்கு துவேஷம் அதிகமாயிற்று. இவர்களை இன்னும் நன்றாக மாட்டிவிட சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான்.
       ஒரு இரண்டு நாள் கழித்து ஒரு பாதிரியார் நகரில் ஒரு பெரிய பணக்காரர் கொல்லுப்பட்டரை வைத்திருகிறார்...நமக்கு அடிக்கடி உதவிகள் பல செய்திருகிறார்...நல்ல கிறிஸ்த்தவன்.  நல்ல குடும்பம்.. நல்ல பையனாக தங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள்...நம் மார்சலீனோவை அங்கு கொண்டுபோய்விடலாமா என்றார். ரெக்டரும் சம்மதிக்கவே
நம் மார்சலீனோவை அழைத்துக்கொண்டு அந்த கொல்லுப்பட்டரைகாரனிடம் சென்றார்கள்...இந்த பையன் மார்சலீனோவைக்கண்ட மாத்திரத்தில் கொல்லுப்பட்டரைகாரனுக்கு மிகவும்  பிடித்துப்போயிற்று. ஃபாதர்...இவனை இப்படியே என்னிடம் விட்டுவிட்டுப்போய்விடுங்கள்...கவலையை விடுங்கள்... அவனை நான் பார்த்துக்கொள்கிறேன்...நான் அவனை ராஜா மாதிரி
வளர்ப்பேன் " என்றான்...பாதரும் சரி நம் மார்சலீனோவுக்கு நல்ல புகளிடம் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார்.. அப்போது அந்த கொல்லுப்பட்டரைக்காரன் மனைவி  பாதிரியாரை தனியே அழைத்து," பாதர் ..நான் சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம்... தயவு செய்து பிள்ளையை உங்களுடனே கூட்டிச்செல்லுங்கள்..  பையனைப்பார்த்தால் அழகும் பண்பும் உள்ளவனாகத்தெரிகிறான்...அவன் இங்கே இருந்தால் கெட்டுப்போவான்... என் கணவனுக்கு பத்து பிள்ளைகள்...ஊருக்கு பெரும்தனக்காரணாக  காட்டிக்கொள்லும் இவர் உண்மையில் பெரும் கஞ்சன்... இங்கு வேலை செய்யும் என் பிள்ளைகளுக்கே பசிக்கு சோறு கிடைக்காது..இதில் உம்முடைய வளர்ப்பு பிள்ளையும் சேர்ந்தால்
அதுவும் பத்தோடு பதினொன்றாகத்தான் வளரும். சோறுபோடாமலேயே வேலை வாங்கியே பிள்ளையை கொண்றுவிடுவான்...இதெல்லாம் உமக்குத்தேவையா...நான் சொல்ல   வேண்டியதை சொல்லிவிட்டேன்...பிறகு உம் இஷ்ட்டம்" என்றாள் அந்தப்புண்ணியவதி.
   " நல்ல வேளை ...இந்தப்பெண் உண்மையை சொன்னாள் " என்று தம் மடாலயம் திரும்பினார்.  ஆனால் வழியிலேயே நம் மேயர் என்னும் சனியன் அவரை எதிர்பட்டான்...அதற்குள்ளாக பாதிரியாருக்கு தெரிந்த ஒருவர் அவரைக்கூப்பிடவே அவர் அவனுடன் சென்றார். இந்த
சந்தர்ப்பத்தில் தரையிலிருந்த சேற்றை தன் கோட்டில் தடவிக்கொண்டு பையனின் கையிலும் சேற்றை தடவிவிட்டார் மேயர். அருகிலிருந்த காவல் நிலயத்தில் இவ்வாறாக புகார்   செய்தான் மேயர்." இந்த முறைதவறிப்பிறந்த பையன் மஹா துஷ்ட்டன்...பெரும் ரௌடியாக வளர்கிறான். இப்போதுகூட பாருங்கள் இவனிடம் சற்று நேரம் பேசலாம் என்று வந்த என்னிடம்
சகதியால் உருண்டை செய்து என் கோட்டின்மீது எறிந்துவிட்டான்..ஊருக்குள் பெரிய மனிதனாக வரும் என்னை எப்படி அவமானப்படுத்திவிட்டான் பாருங்கள்.. சந்தேகமிருந்தால்  அவன் கையைப்பாருங்கள்.. எவ்வளவு சகதி அவனிடம் இருகிறது பாருங்கள் என்றான். பெரிய மனிதன் பேச்சு எடுபட்டது. அப்போது அங்கு வந்த பாதிரியார் கையில் சகதி எடுத்து
அவரது அங்கியின்மேல் பூசிக்கொண்டார்..இவர் நடந்ததை நேரில் பார்த்துவிட்டர் என்று அறிந்த மேயர் பேசாமல் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.
     இந்தப்பையன் மார்சலீனாவுடனும்   இந்தப்பாதிரியார்களிடமும் எப்போதெல்லாம் மோதுகிறோ அப்போதெல்லாம் நாம் அவமானப்பட்டுப்போகிறோம்..இதை இப்படியே விட்டுவிடக்கூடாது..மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்கு  வராமலா போய்விடும் ..அப்போது பார்த்துக்கொள்லலாம்...அடே மார்சலீனோ என்னை யார் என்று நினைத்துக்கொண்டாய்...உன்னைகொல்லாமல் விடமாட்டேன்டா " என்று மனதுக்குள் கருவிக்கொண்டான் மேயர்.
         " நம் பையன் மார்சலீனோவை நாம் நம்முடனே வளர்ப்பது அவனது வளர்ச்சிக்கு இடையூறாகப்போகும்..இவனை வளர்கத்தான் ஆள் கிடைக்கவில்லை.. இவனுக்கு தோழனாக   இருக்கும்படியாக ஏதாவது ஒரு பையனைப்பாருங்கள்.அவனுடன் இவன் காலைமுதல் மாலை வரை இருக்கட்டும் மாலையில் நாம் வைத்துக்கொள்வோம்... அப்படிப்பட்ட ஒரு பையனும்   தாயும் இருக்கும்படியான ஒரு குடும்பத்தை பாருங்கள் " என்றார் ரெக்டர் பாதிரியார். இதன்படி ஒரு குடும்பம் அவர்கள் பார்வையில் பட்டது. அது ஒரு மெக்சியக்குடும்பம். மெக்சிய  நாட்டிலிருந்து இந்த ஸ்பெயின் தேசத்திற்கு வந்தேறிய பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக சுமார் 100 ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வந்தார்கள்..அவர்களும் தங்களது
கோரிக்கைகளுக்கு அவ்வப்போது துப்பாக்கி தூக்குவதுண்டு. ஆனால் ஸ்பெயின் ராணுவம் அவர்களை அடக்கிவிடும்..இப்படியாக இவர்களின் தலைவன் டையஸ் எனப்பட்டவன்   ஸ்பெயின் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக இருந்தான்..இவனை உயிரோடு பிடிக்கும் முயற்ச்சியில் பலமுறை ராணுவம் தோல்விகண்டது. இந்த மெக்சிய கலஹக்காரணாகிய
டையஸுக்கு ஒரு மனைவியும் நம் மார்சலீனோவை ஒத்த ஒரு பையனும் இருந்தார்கள். எனவே பாதிரியார் ரோட்ரிக்ஸ் நம் மார்சலீனோவை அழைத்துக்கொண்டு டயசின் மனைவியிடம்   வந்தார்." பாதர் ரோட்ரிக்ஸ் தங்கள் வரவு நல் வரவு ஆகுக.. என்ன விஷேஷம்" என்றாள் டயசின் மனைவி.
" அம்மணி... நம் மார்சலீனொவுக்கு இப்போது தாய் அன்பு தேவையாய் இருகின்றது. மேலும் அவனை ஒத்த பையனோடு பழகுவது அவனது முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கும்.  இவனை உன்னுடன் காலை முதல் மாலை வரை வைத்துக்கொள்...மாலையில் நாங்கள் வந்து அவனை அழைத்துச்செல்கிறோம்...நீ மாட்டேன் என்று சொல்லமாட்டாய் என்று
நினைகிறேன்" என்றார். அந்தப்பெண்," ஃபாதர்..நம் மர்சலீனோவை நாங்கள் வைத்துக்கொள்வது எங்களுக்கு ஒன்றும் கஷ்டமல்ல...ஆனால் எங்கள் நிலையே நித்திய கண்டம்   பூர்ணஆயுசு என்பதுபோல் உள்ளதே" என்றாள். அதற்கு அவர் " அம்மணி..நடப்பது நடக்கட்டும்..முதலில் பையன் உங்களுடன் பழகட்டும்..பிறகு பார்க்கலாம்" என்றார். இப்படியாக  இரண்டு சுட்டிப்பசங்களும் அடித்த லூட்டி காண்பவர் யாவருக்கும் நகைப்பாக இருக்கும்..கள்ளம் கபடமற்ற பிள்ளைகள் எது செய்தாலும் அவை அழகுதான்..அவை ரசிப்பதற்கு
ஏற்றதாகும். இந்த இரண்டு வாண்டுகளும் மடாலயத்தில் விளையாடுவார்கள்..அப்போது ஃபதெர் மாலோ என்பவர் தம்பி உங்களுக்கு எப்படி வேட்டையாடுவது என்று சொல்லித்தருவேன்   என்று கவன் விளையாட்டை சொல்லித்தந்தார். அதன்படி மார்சலீனோ கவனில் ஒரு கல்லை வைத்து வேகமாக சுழற்றியடித்தான்.
  அப்போது அந்த குசினி பாதர் எதையோ குனிந்து  எடுத்துக்கொண்டிருந்தார். கவனிலிருந்து வேகமாக வந்த கல் குசினி பாதரின் பின்பாகத்தை நன்றாகப்பதம் பார்த்துவிட்டது. அவவளவுதான்.. இந்த பயல்கள் இருவரும் பிடித்தனர் ஓட்டம். இருவரும் ஓடி ஒளிய மாடிப்படி ஏறினார்கள். அப்போது குசினி பாதிரியார் " டேய் பசங்களா...நில்லுங்கள்... ஓடாதீர்காள்.. என்பேச்சை கேளுங்கள்" என்றார்.அவர்கள் இருவரும்  மாடிப்படியிலேயே நின்றார்கள்.  ஒருவழியாக இவர்களிடம் வந்த குசினி பாதர்," டேய் பசங்களா...மேல் மாடிக்கு போகாதீர்கள்..அங்கே பூச்சாண்டி இருகிறான்..அவன் சின்னப்பசங்கள்
யாராவது வந்தால் அவர்களைப்பிடித்து சாக்கில் போட்டுக்கட்டி தூக்கிக்கொண்டு போய்விடுவான்...தெரிஞ்சதா " என்றார்..அந்த இருவரும் அபோதைக்கு பூச்சாஞ்ண்டிக்கு பயந்து கொண்டு மேலே போய் விளையாட மாட்டோம் என்றார்கள்.
" மார்சலீனோ...உனக்கு ஓனான் பிடிக்கத்தெரியுமா...உடும்பு பிடிக்கத்தெரியுமா...இல்லை என்றால் சொல் .நான் உனக்கு அவற்றை எப்படிப்பிடிப்பது என்று சொல்லித்தருவேன்" என்றான் ஹென்றி என்னும் அவன் நண்பன்..இப்படியாக தினம் ஒரு பூச்சியாய் பிடிக்ககற்று கொண்டான் மார்செலீனோ.. ஆனால் விளையாட்டு வினை ஆகியது. அது விபரீதத்தில்
முடிந்தது.. அன்று ஒரு நாள் காலையில் ஃபாதெர் மாலோ இவனை கொண்டு வந்து ஹென்றியுடன் விளையாடவிட்டுவிட்டு ஹென்றியின் தாயாருடன் பேசிக்கொண்டிருந்தார்.
         அப்போது மார்செலீனோ ஒரு பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கவனித்துவிட்டார்..." மார்சலீனோ... வேண்டாம்... அது பாம்பு...அதை பிடிக்க முயற்சி செய்யாதே... அது  விஷமுள்ள பாம்பு...அதை பிடிக்காதே" என்று கத்திக்கொண்டு ஓடி வருவதற்குள் விதி வேலை செய்து விட்டது.. அந்தக்கட்டு விரியன் மார்செலீனோவை காலில் நன்றாகக்கடித்து
விட்டது.காலில் ரத்தம் கொட்டியது. அதன் வேதனையில் மார்சலீனோ அலறிய அலறல் அந்த கிராமத்தையே உலுக்கிவிட்டது. பாதர் மாலோ நம் மார்சலீனோவை அப்படியே அலாக்காக   தூக்கிக்கொண்டு மடாலயத்துக்கு ஓடிவந்தார். மடாலயத்திலிருந்த அத்தனை குருக்களும் கையை பிசைந்துகொண்டனர்.. ஏதேதோ முதலுதவி செய்தனர்..யார் முகத்திலும் ஈ
ஆடவில்லை.. எல்லோர் முகத்திலும் கவலை ரேகை படர்ந்தது. அப்போது மூர்ச்சை ஆன மார்சலீனோ இரவு விளக்கு வைக்கும்வரை கண் திறக்கவே இல்லை..இந்த இராப்பொழுதில் ஹென்றியின் தாயாரும் அவள் சகோதரியும் ஹென்றியுடன் வந்தனர். மார்சலீனுக்கு சாமியார்கள் செய்த முதல் உதவியால் திருப்தியடையாத அவர்கள் தங்கள்   மெக்சிகோ நாட்டில் செய்யும் பாம்புகடி வைத்தியம் செய்தனர். அதன்படி நன்றாக பழுக்க காய்ச்சிய ஒரு கத்தியால் பாம்பு கடித்த கடிவாயில் இந்த கத்தியால் நன்றாக சூடு போட்டு
விஷத்தை முறித்து மேலும் பல பச்சிலைகள் வைத்துக்கட்டினார்கள்..இரவு மணி பத்து ஆகும்போது மார்சலீனுக்கு நினைவு திரும்பியது. அப்போது ஃபாதர் ரோட்ரிக்ஸ் " அம்மணி..  மடாலய விதிப்படி பெண்கள் இங்கே தங்கக்கூடாது. மேலும் மார்சலீனுக்கு நினைவு திரும்பிவிட்டது...இனிமேல் அவனுக்கு உயிருக்கு அபாயம் இல்லை...நீங்கள் இப்போது சென்று  நாளை வரலாமே" என்றார். ஹென்றியின் தாயாரும் அவள் சகோதரியும் மடாலயத்திலிருந்து திரும்பிவந்துகொண்டிருந்ததை மறைந்துகொண்டிருந்த பல ராணுவ சிப்பாய்கள்  கவனிக்கத்தவறவில்லை.
       ஒருவன்," கேப்டன்... சத்தம்போடாமல் இந்த மூன்று பேரையும் முடித்துவிடலாமா?" என்றான். " இல்லை...இவர்கள் கதையை முடிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை..நமக்கு வேண்டியது அவர்கள் தலைவன் டியஸ் தான்..இப்போது இவர்களை சுட்டால் அந்த சப்த்தத்தில்   அவர்கள் உஷார் ஆகிவிடுவார்கள்...இவர்களைப்பின் தொடர்ந்து செல்வோம்...அங்கு டயஸ் இருந்தால் அவனை சுட்டுப்பிடிப்போம் . அவன் மனைவியையோ அவன் பையனையோ   சுடுவதில் எனக்கு விருப்பம் இல்லை" என்றான் கேப்டன். அதன்படி பெண்கள் இரண்டுபேரையும் சப்த்தம்போடாமல் பின் தொடர்ந்தது ராணுவம்.. இந்த இரண்டு பெண்களும் அவர்தம் குடும்பத்தோடு சேர்ந்ததும் ஆரம்பித்தது போர். இந்த நிலையில் டயசின் ஆட்களும் பதிலுக்கு திரும்ப தாக்கினர். சிறுவன் ஹென்றியை தூக்கிக்கொண்டு ஓடினாள் அவன் தாயார்..
ஆனால் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குண்டு ஹென்றியின் முதுகில் பாய்ந்தது. சற்று நேரத்தில் வாடிய ரோஜாவாக அவன் தாயின் கரத்திலேயே மரித்துப்போனான் ஹென்றி.
       தன்மகன் ஹென்றியின் மரணம் பற்றி அறியவந்தான் டயஸ்...துக்கமும் ஆத்திரமும் அவன் நெஞ்சை அடைத்தது..ஒரு வழியாக தன்னை தேற்றிக்கொண்டு.தன் சகாக்கள் துணையுடன் ராணுவ கேப்டனை சிறை பிடித்தான் டையஸ்.. பிறகு ஒரு வாரம் யார் கண்னிலும் காணாமல் மறைந்து போயினர் டயஸும் அவன் ஆட்களும்.
   இந்த ஒரு வார காலத்தில் நம் மர்சலீனோ நன்றாகத்தேறிவிட்டான். மீண்டும் பழையபடி விளையாட ஆரம்பித்தான்.. அவன் கண்கள் அவன் தோழன் ஹென்றியைத்தேடின. அந்த மடாலயம் இருந்த மலையின் சரிவுகளில் சோளம் நன்றாக விளைந்திருந்தது. அங்கு வந்தான் நம் மார்சலீனோ. அங்கு அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.
அந்த சோளக்கொல்லையில் ஒரு வாரகாலமாக யார் கண்ணிலும் படாமலிருந்த டயஸ் தன் வீரர்களுடனும் கைதியாக்கி கொண்டு வரப்பட்டிருந்த ராணுவ கேட்டனுடன் அங்கு தோன்றினான். ராணுவ கேப்படனை நிற்க வைத்து சுட்டான்..இதைப்பார்த்துவிட்டான் நம் மார்சலீனோ... ஒரு மெக்சிகன் " டயஸ்..நீ செய்த காரியத்தை ஒரு சிறுவன் பார்த்துவிட்டான்.  அவனை தப்பிக்கவிடாதே.சுடு அவனை" என்றான்..மார்சலீன் யார் என்று டயஸுக்கு தெரியும் ஆதலால் அவனுக்கு அவனை சுட மனது வரவில்லை. " இல்லை... அவன் சிறுவன்
என்று நினைக்காதே... அவனால் உனக்கும் நமக்கும் பின்னால் பிரச்சனை வரும்...நீ செய்த கொலைக்கு அவன் நேரடி சாட்சி...நாளைக்கு கோர்ட்... வம்பு.. வழக்கு என்று வரும் . அப்போது இந்த சிறுவனின் சாட்சியம் எடுபடும்...அப்போது உன் நிலையும் நம் நிலையும் என்னவாகும் என்று சற்றே எண்னிப்பார்...சுடு அவனை...சுடு அவனை" என்றான்.
            அப்போது சற்றுமுன்னர் கேட்ட அந்த துப்பாக்கி சப்தம் அந்த மலையின்மீதிருந்த மடாலயத்திலும் கேட்டது. மதிய உணவுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த   மடாலய குருக்கள்," அது என்ன துப்பாக்கி சப்தம்... ஐய்யோ...நம் மார்சலீன் எங்கே?" என்று அலறியபடி மடலாயத்தைவிட்டு வெளியே வந்தார்கள்..இவர்கள் வருவதைக்கண்ட
மெக்சிகோ கலவரக்காரர்கள் ஓடிப்போனார்கள். மர்சலீனோ மடாலயத்துள் கொண்டு செல்லப்பட்டான்.
           அடுத்த நாளே அந்த மடாலயத்துள் மிகுந்த கோபாவேசத்தோடு பிரவேசித்தான் அந்த மெக்சிகனான டயஸ்.  டமால்..டுமீல் என்னும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் அவன் வருகையை  தெரியப்படுத்தின. இதனால் அந்த மடாலயமே கிடுகிடுத்து கலங்கியது.. இவன் வருகை எத்தகையதோ என்று கலங்கினார் ரெக்ட்டர்.
" பாதர் எங்கே அந்த பொடியன் மார்சலீனோ... அவனை நான் கொல்லாமல் விடமேட்டேன்" என்றான். அதற்குள் அவன்மனைவிஅவனைக்கட்டிக்கொண்டு," அன்பரே .. வேண்டாம் இந்தக்கொலை வெறி...நாம் நம் பையன் ஹென்றியை இழந்தது போதும்..மார்சலெனோவும் நம் மகன் போலத்தான். நீர் செய்த கொலைக்கு இந்த மார்சலீனோ நேரடி சாட்சி என்பதற்காக அவனைக்கொல்ல நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்...திரும்பிப்போ.." என்றாள்.
   அப்படியே வெலவெலத்துப்போனார் அந்த மடத்து தலைவர். " மகனே டயஸ்.. வேண்டாம்... மார்சலெனோவை விட்டுவிடு...அவன் உயிருள்ள ஒரு சம்மனசு..அவனால் உனக்கு யாதொரு துன்பமும் நேராதபடி நான் பார்த்துக்கொள்கிறன்..என்னை நம்பு...அவனை நான் எங்காவது கண்காணாத இடத்துக்கு அனுப்பிவிடுகிறேன்" என்றார்.      இத்தகைய பதிலால் திருப்தியுற்ற டயஸ் " பாதர் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவனை எங்காவது கண்காணாத இடத்திற்கு அழைத்துச்சென்று விடுங்கள்...மீண்டும் இந்த ஊரில் நான் அவனைப்பார்த்தால் நான் அவனைக்கொல்வது உறுதி " என்றான்.
        அந்த சபைத்தலைவருக்கு அந்த நேரத்தில் மார்சலெனோவை காப்பாற்றிவிட்டோம் என்பதில் மகிழ்ச்சிதானே தவிர அவனை எங்கே அனுப்புவது என்ற எண்ணம் வந்ததும் அவருக்கு கவலை பிடித்துக்கொண்டது. " அடக்கடவுளே ஒரு ஐந்து வயது அனாதைப்பையனுக்கு இவ்வளவு எதிர்ப்பா... ஆண்டவரே இவன் அப்படி என்ன பாவம் பண்ணினான்..அன்று அந்த
மேயர் வந்து இவனை கொல்லாமல் விடமாட்டேன் என்றான்... இன்று இந்த டயஸ் வந்து இவனைக்கொல்லாமல் விடமாட்டேன் என்கிறான்.. இனி நான் என்ன செய்ய வேண்டும்.   யேசுவே நம் மார்சலீனோவுக்கு ஒரு நல்ல வழி காட்டமாட்டீரா... அவன் மேல் இரக்கம் வையும் ஸ்வாமி " என்று மன்றாடினார்.
          இந்த நிகழ்சிக்குப்பின் இரண்டு நாட்களுக்கு மார்செலீனை வெளியே கொண்டு செல்ல மடத்து ரெக்டர் அனுமதிக்க வில்லை. ஒரு ஐந்து வயதுப்பையனை எவ்வளவு நேரம்தான்   அடக்கி வைக்க முடியும். இந்த நாட்களிள் மார்செலினீன் மனது குறுகுறுக்க ஆரம்பித்தது. மேல் மாடியில் என்ன இருக்கிறது...அங்கே யாரோ பூச்சாண்டி இருகின்றான் என்று குசினி
பாதர் சொல்லி இருகிறாறே...போய்தான் பார்ப்போம் என்று மாடிப்படி ஏறினான். ஒரு நாலு படிதான் ஏறி இருப்பான் ..அதற்குள்ளாக இந்த வயதான தாத்தா சாமியாருக்கு மூச்சுவாங்கவே   துணைக்கு யாரேனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவறாய் தன்னிடம் கொடுக்கப்பட்டிருந்த ஊதலை ஊதினார். உடனே பதறியடித்து ஓடிவந்தான் மார்செலீனோ..
அவரை மார்பில் தடிவிகொடுத்து அவரது பெரிய சொட்டையில் முத்தமிட்டு அவரை அமைதிப்படுத்தினான்..பிறகு மீண்டும் மாடிப்படி ஏறினான்..மாடியில் உள்ளே ஒரு அறை உடைந்த கதவோடு இருந்தது. அந்தக்கதவையும் திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்தால் அங்கே பழைய தட்டுமுட்டு சாமாங்களும் விவசாய கருவிகளும் இருந்தன. போதாததற்கு ஒரு
பெரும் பாடுபட்ட சிலுவையும் அங்கே நிற்கவைக்கப்பட்டிருந்தது. அந்த சிலுவையிலிருந்த யேசுவைக்கண்டமாத்திரத்தில் மார்செலீனோ பயந்து அதோ பூச்சாண்டி என்று அலறிக்கொண்டு தட தடவென்று கீழே ஓடிவந்து தன்னுடைய அறையில் படுத்துக்கொண்டான்.. ஆனாலும் அந்த பூச்சாண்டியின் முகம் அவனை பயமுறுத்தியதாக தெரியவில்லை.
ஏதோ ஒரு பயம்... அவ்வளவுதான் என்று தன்னைதேற்றிக்கொண்டான் மார்செலீனோ.
      மறுநாள் எல்ல பாதிரியார்களும் அவரவர்கள் வேலையைபார்க்கப்போனபின்பு நம் மார்சலெனோ மெதுவாக மாடிப்படி ஏறினான்.. ஒரு இரண்டு படி ஏறுவதற்குள் அந்த வயதான சாமியார்
அவனைப்பார்த்து," மார்சலீனோ...மார்சலீனோ" என்றழைத்தார். ஆனால் அவனோ அவரை பொருட்ப்படுத்தாமல் மேலே சென்றுவிட்டான். இதக்கண்ட அந்த சாமியார்," மார்சேனோ   இப்போது முன்புபோல் இல்லை...ஊம் ..கிழவன் பேச்சு கிண்ணாரத்துக்கு ஆகுமா என்று சும்மாவா சொல்லி இருகிறார்கள்" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் இருமுறை இருமிவிட்டு தூங்கிப்போனார்.
          மேல் மாடிக்கு போகும் முன்பாக அதன் முன் அறையில் இருந்த ஒரு பெரும் கோலை எடுத்துக்கொண்டு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு," அடே பூச்சாண்டி... தைரியம் இருந்தால் என் முன்னே வா.." என்றான். ஆனால் அங்கிருந்து எந்த சப்தமோ பூச்சாண்டியோ வரவில்லை. அவனிடமிருந்த கோலால் மேலே இருந்த ஜன்னலை திறந்துவிட்டுப்பர்த்தால்  சிலுவையில் யேசுநாதரின் முழு உருவமும் தெரிந்தது.. அவரது ஒட்டிய வயிறைப்பார்த்த நம் மார்சலெனோ," அடடா...இந்த மனிதருக்கு ரொம்ப பசி போலிருகிறது.அதுதான் பேச மாட்டேன் என்கிறான்" என்று நினைத்து," ஐய்யா...பூச்சாண்டி... அங்கேயே இரும்...நான் உனக்கு சாப்பிட எதாவது கொண்டுவருகிறேன் " என்றவனாய் கீழே இறங்கி வந்து குசினியில்  [ சமையல் அறையில்] இருந்த ஒரு ரொட்டியையும் ஒரு தம்லர் நிறைய ஒயினையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான். கதவை சாத்திக்கொண்டு,"ஐய்யா பூச்சாண்டி... இதோ ரொட்டியும் ஒயினும் கொண்டுவந்திருக்கிறேன்... இறங்கி வந்து சாப்பிடும்" என்றான். அப்போது அந்த பேரதிசயம் நடந்தது.
           அதுவரை அந்த பழைய சிலுவையில் சிலையாக இருந்த யேசுநாதர் இப்போது உயிரோடு வந்தார். அந்த அறை முழுவதும் பரலோக காந்தியால் நிறைந்தது. அந்த காட்சியைக்கண்ட மார்சலெனோ திகைத்து நின்றான். அவன் முகமும் கூட பிரகாசமாக மாறியது. சிலையாக இருந்தவர் இப்போது உயிரோடு என்றால் அந்த சிறுவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே
இல்லை.." ஐய்யா... உம் பெயர் என்ன... பூச்சாண்டியா?" என்றான். அதற்கு யேசுநாதர்," இல்லையப்பா... என் பெயர் பூச்சாண்டி இல்லை" என்றார்.. " அப்படியானால் உம் பெயர்தான் என்ன?" என்றான் மார்சலெனோ..அதற்கு யேசுநாதர்," என்னை எல்லோரும் இம்மானுவேல் என்றழைப்பார்கள் " என்றார்.." சரி ஐய்யா..உம்மை இனிமேல் நானும் இம்மானுவேல் என்றே
கூப்பிடவா?" என்றான்." சரி அப்படியே கூப்பிடு..எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைபிரியம்.." என்றார் யேசுநாதர்.
" சரி இம்மானுவேல்...உனக்கு பசியாக இருக்கும்..இப்போது சாப்பிடு..என்னை குசினி பாதர் தேடுவார்.. அவருக்கு என்மீது பாசம் அதிகம்" என்றான் மார்சலீன்.இதற்குள் யேசுநாதர் நம்   மர்சலெனோ கொண்டுவந்த ரொட்டியையும் ஒய்னையும் சாப்பிட்டு முடித்திருந்தார்..தான் கொண்டுவந்திருந்த தட்டையும் தம்ளரையும் எடுத்துக்கொண்டு," சரி இம்மானுவேல்..  நாளைக்கும் இதே நேரம் சந்திப்போம்.. உம்மைகண்டதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் " என்றான் மார்சலீன். இப்படியாக ஒவ்வொருநாளாக சென்றது.
         ஏற்கனவே தரித்திர வார்த்தைப்பாடு கொடுத்திருந்த அந்த மடத்து சாமியார்களுக்கு தினமும் ஒருவருக்கு ரொட்டியும் ஒய்னும் இல்லாமல் போனதில் கொஞ்ச்ம் வருத்தம்தான். மடத்து   ரெக்டர் கூட தன் அதிருப்த்தியை குசினி சாமியாரிடம் தெரிவித்துக்கொண்டார். குசினி பாதருக்கும் தினமும் ஒரு ரொட்டி எப்படி காணாமல் போகிறது...நம்மிடையே யாரோ ஒரு
சாமியார் வெளியே தெரியாமல் அதிகம் சாப்பிடுகிறார்...தினமும் ஒய்னும் குறைகிறதே.. இத்தனை பேருக்கும் சாப்பாட்டுக்கு பொருப்பான இந்த குசினி பாதர்தான் தினமும்   ஒருவேளைக்கு பட்டிணி கிடக்க வேண்டி இருகிறது. இதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று மண்டையை குடைந்துகொண்டார். எனவே அவர் இதன் மர்மத்தை கண்டுபிடிக்க சுட்ட ரொட்டிகைள் எண்ணி எண்ணி வைத்தார்.. எப்படிப்பார்த்தாலும் தினமும் ஒரு ரொட்டியும் ஒரு தம்லர் ஒயினும் குறைவதால் அவருக்கு சந்தேகம் அதிகமாகி இந்த காரியத்தை செய்யும்   அந்த திருட்டு சாமியாரைப்பிடித்து நன்றாக நாலு கேள்விகள் கேட்க வேண்டும் என்று முடிவு பண்ணிக்கொண்டார். ஆனால் திருடன் தான் அகப்படவே இல்லை. எத்தனை நாள் தான் இந்த திருட்டு நாடகத்தை நடத்தமுடியும்..
    ஒருநாள்..மார்சலெனோ எடுத்துச்சென்ற ஒய்ன் கொஞ்சம் கீழே சிந்தி அதன் சுவடுகள் மாடி வரை சென்றது. அதை பின்தொடர்ந்த குசினி பாதர் மார்சலீன் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.ஆனால் அவர் யார் என்று அப்போது அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இப்படி ஒரு குரல் உடைய பாதிரியார் நம்மிடையே இல்லை... அவர் யாராக இருக்கக்கூடும்... சரி சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனிடம் கேட்டுவிடவேண்டியதுதான் என்று கீழே இறங்கி  வந்துவிட்டார். அன்றைய பூசையில் ரசம் ஊற்ற குமிளை சாய்த்தபோது அதில் சுத்தமாக ஒயின் இல்லை. அன்று நிறைவேற்ற வேண்டிய திருப்பலியை யேசுநாதரே நிறைவேற்றிவிட்டது பாவம் அந்த பாதிரியார்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இப்படி இருக்கையில் ஒரு நாள்.
            இன்றும் சத்தம்போடாமல் ஒரு ரொட்டியையும் ஒயினையும் எடுத்துக்கொண்டு யேசுவை சந்திக்கப்போனான் மார்சலீன். வழக்கம்போல யேசுநாதரும் சிலுவையிலிருந்து கீழே இறங்கி  வந்து மார்சலெனோ எடுத்துவைத்த அந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர்களுகிடையே சம்பாஷணை ஆரம்பித்தது.
" ஆமாம் நண்பா எம்மானுவேல்...உம் சொந்த ஊர் எது "
" ஓ... அதுவா...அது பரலோகத்தில் இருகிறது"
" அது இங்கிருந்து வெகு தூரத்தில் இருகிறது..அப்படித்தானே?"
" ஆம்... ஆனால் அப்படி ஒன்றும் அது வெகு தூரத்தில் இல்லை"
" அங்கே யார் யார் எல்லாம் இருகிறார்கள்?"
" எனது தாயார்...எனது தந்தையார்..எல்லாம் இருகிறார்கள்"
" எம்மானுவேல்... என் நண்பன் ஹென்றி கூட கொஞ்சநாள் முன்பாக இறந்துபோய்விட்டான்.அவனை நினைத்தால்தான் எனக்கு கவலையாக இருகிறது."
" மார்சலீன்..உன் நண்பனைப்பற்றி இனிமேல் கவலைப்படாதே.. உனக்கு நான் வேறுபெயர் வைக்கிறேன்..."
" எனக்கு வேறு பெயரா...அது என்னா?"
" ஆம்...பான்..ஈ...வையின்...அதாவது நமக்கு நீ ரொட்டியும் ஒயினும் தந்தவன் என்பது பொருள் "
" பான் ஈ வையின்..அதுவும் நன்றாகத்தான் இருகிறது...பார்த்தீரா... மறந்தே போனேன்...எம்மானுவேல் சாப்பிடும்...சாப்பிடும்போது தலையில் எதுவும் இருக்கக்கூடாது. இதை நான்  எடுத்துவிடவா?"
" சரி ..எடுத்துவிடு...என்னை யூதர்களின் அரசன் என்று என் தேசத்தவர் எனக்கு கொடுத்த கிரீடம் அது.."
" நண்பா.. அதை ஏன் இன்னும் தலையில் வைத்திருகிறீர் "
" என் நண்பர்கள் எனக்கு ஆசையாகக்கொடுத்த பரிசு அது... அதை எப்படி நான் கீழே வைக்கமுடியும் "
" சரி..எனக்கு புதுப்பெயர் வைப்பதாகக்கூறி சும்மா பான் ஈ வையின் என்று அழைத்தால் போதுமா..ஞாஸ்நானம் கொடுக்க வேண்டாமா... ஞாஸ்நானத்தின்போதுதானே குழந்தைக்கு பெயர் சூட்டுவார்கள்? "
" சரி வா...பிதா சுதன் பரிசுத்தா ஆவியின் பெயராலே நான் உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்று அவன் கொண்டுவந்திருந்த ஒயினை தன் விரலால் நினைத்து அவனுக்கு  தன் கையாலேயே ஞானஸ்நானம் கொடுத்தார் யேசுநாதர். அன்றோடு அந்த நாள் காட்ச்சி முடிந்தது.    மார்சிலெனோவும் கீழே இறங்கி வந்தான். அப்போது அந்த தாத்தா பாதர்
அவனைக்கூப்பிட்டார். " தாத்தா...இனிமேல் என்னை மார்சலீனோ என்று கூப்பிடாதீர்கள்...பான் ஈ.வைன் என்றுகூப்பிடுங்கள்" என்றான்." ஏனப்பா...உனக்கு இப்படியொரு பெயரை  கொடுத்தது யார்?" என்றார் அவர்... "அதுவா தாத்தா என் நண்பன் எம்மானுவேல் எனக்கு கொடுத்தபெயர் அது " என்றான் மார்சலெனே. அறியாப்பையன் எதோ தெரியாமல்
சொல்கிறான் என அந்த பெரியவரும் இதை பொருட்படுத்தவில்லை..ஆனாலும் அவனை அள்ளி அணைத்து கொஞ்சினார்.. அப்போது அவரது சுவாசத்தில் பரிமள தைலத்தின் வாசமும்
பரலோக சுகந்தமும் வீசவே அவர் தன்னுடைய சுவாச நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதை உணர்ந்தார். இவர்களுடைய சம்பாஷணையை குசினி ஃபாதர் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவரது மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகள் தோன்றி மறைந்தன. தன்னை இந்த குசினி சாமியார் கவனிப்பதை உணர்ந்தான் மார்சலீனோ...
அடுத்தநாள் இந்த குசினி பாதரின் கண்னில் மண்னைத்தூவிவிட்டு எம்மானுவேலுடம் சம்பாஷிக்க சமயம் பார்த்தான் நம் மார்சலெனோ.. ஆனால் அவர் தன் இருப்பிடத்திலிருந்து   நகருவதாகக்கானோம். எனவே சப்த்தமாக," குசினி பாதர் வாசலில் யாரோ சிலர் வந்திருகிறார்கள்" என்று கத்தினான். இதை உண்மை என்று நம்பிய அவர் வாசலுக்கு ஓடினார்.
            இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த மார்சலீனோ சரேலென ஒரு ரொட்டியை உறுவினான். ஒரு ஒயின் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு மேல் மாடிக்கு ஓடினான். உள்ளே போய்  கதவை தாளிட்டுக்கொண்டான்.. காட்சி ஆரம்பமானது..
       யேசுநாதர் தன் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வந்து அவர் ஆசனத்தில் அமர்ந்தார். அவன் கொண்டுவந்திருந்த ரொட்டியையும் ஒயினையும் சாப்பிட்டார். அவர்கள் சம்பாஷணை  ஆரம்பித்தது.
" எம்மானுவேல்...என் நண்பன் ஹென்றியை உமக்குத்தெரியுமா...அவனைப்பற்றி நான் கவலைப்பட வேண்டாம் என்று நேற்று கூறினீரே"
" ஆமாம்..கூறியிருந்தேன்.. அவன் இப்போது என்னுடந்தான் பரலோகத்தில் இருகிறான். அதனால் தான் அவனைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி இருந்தேன்."
" அப்படியானால் என் தாயார்?"
" அவரும் இப்போது என்னுடன் தான் பரலோகத்தில் என்னுடனே இருகிறார் "
" ஹை...அப்படியானால் நான் பரலோகம் வந்தால் என் தாயாரை பார்க்கமுடியுமா? எனக்கு அவரைப்பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருகின்றது"
" இல்லை நண்பா...முதலில் நான் என்னுடைய தாயாரை இங்கே அழைத்துவருகிறேன்.. அதன்பின் உன்னுடைய தாயாரை நீ பார்க்கலாம் "
" இல்லை இல்லை...இம்மானுவேல் நீ என்னை ஏமாற்றப்பார்கிறாய்... முதலில் என் தாயாரைக்காட்டு..பிறகு நான் உன் தாயாரைப்பார்க்கிறேன்.
" சரி நண்பா. இந்த எம்மானுவேல் தன்னை நம்பிவந்த யாவரையும் ஏமாற்றுபவன் அல்ல. நீ முதலில் உன் தாயாரை பார்க்க வேண்டும் அப்படித்தானே..அப்படியானால் நீ சாக வேண்டும்"
" சாவதென்றால் எனக்கு புறியவில்லை."
" நீதானே உன் நண்பன் ஹென்றி மரித்துப்போனான் என்றாயே ...அப்படித்தான்"
" அப்படியானால் நான் சாகத்தயார்... எப்படியாவது என் நேச தாயாரை நான் சந்திக்க முடியுமானல் நான் சாகத்தயார். ".
" சரி வா... வந்து என்னைக்கட்டி அணைத்துக்கொள் " என்றார்.
இத்தனை சம்பாஷணைகளையும் கதவுக்கு வெளியே ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த அவனை வளர்த்த குசினி சாமியாருக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. ஆஹா..நான்  ஆசையாய் வளர்த்தபிள்ளை மார்சலெனோ...இப்போது நம்மை எல்லாம் விட்டுவிட்டு யேசுவோடு போகப்போகிறான் என்றதுமே அவருக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது...ஓஓஓ..  என்று பெரும் கூக்குரலிட்டு அழுதார்..இவரது பெரும் அழுகை சப்த்தம் கேட்ட மற்ற பாதிரிமார்கள் ஓடிவந்தார்கள்... என் சகோதரர்களே... நாம் ஆசையாய் வளர்த்தபிள்ளை நம் அருமை மார்சலெனோ நம்மை எல்லாம் விட்டுவிட்டு யேசுவோடு போகிறான் .. வந்து பாருங்கள் என்று பெரும் குறலெடுத்து அழுதார். மார்சலெனோ இருந்த அந்த மேல் மாடி
பரலோக ஒளியால் சூழப்பட்டிருந்தது. முடியாமல் படுத்திருந்த அந்த பெரியவர் கூட எப்படியோ எழுந்து மாடி ஏறி வந்து பார்த்தார்...அவர்கள் கண்ட காட்சி இந்த மானிட சந்ததிக்கு கிடைத்திறாத பெரும் பாக்கியம்.
    அனைவரது கண்களும் மெய் மறந்து நின்றன. யேசுவின் சிலுவையில் அவரது திரு உருவம் இல்லை..வெறும் சிலுவையே இருந்தது. நம் மார்சலீனோ  யேசுவின் கரங்களில் துவண்டு படுத்திருந்தான். அவனது முகம் பரலோக காந்தியுடன் ஒளி வீசியது. சற்று நேரத்தில் அவன் உடல் அந்த மேஜையின் மீது கிடத்தப்பட்டிருந்தது.
      அந்த மேஜையில் யேசுநாதர் உண்டதுபோக மீதம் இருந்த ரொட்டியும் ஒயினும் இருந்தன. வெறுமையாக கிடந்த சிலுவையில் மீண்டும் யேசுநாதரின் திரு உருவம் தோன்றியது.
" மார்சலெனோ மேல் மாடிக்குப்போகாதே...அங்கே ஒரு பூச்சாண்டி இருக்கிறான்.. உன்னைப்போல் சிறு பிள்ளைகள் வந்தால் அவன் ஒரு சாக்குப்பையில் அவர்களை   பிடித்துக்கொண்டு போய்விடுவான் " என்று அந்த குசினி சாமியார் எந்த முஹூர்த்தத்தில் சொன்னாறோ... அவ்வாறே பலித்தது. யேசுநாதர் அவருக்கு உகந்த பிள்ளையை தன்னுடனே
அழைத்துக்கொண்டு போய்விட்டார்.. இந்த மடாலயத்திலிருந்த அந்த பழைய சிலுவையை வைத்தே ஒரு புதிய தேவாலயம் கட்டி அதன் அருகிலேயே நம் மார்சலீனுக்கு ஒரு  கல்லறை கட்டி இருகிறார்கள்.. அதில் மார்சலீனோ..இவன் யேசுவுக்கு ரொட்டியும் ஒயினும் தந்தவன் என்று எழுதி வைத்து இருகிறார்கள்.
       உலகத்துக்கே படியளப்பவருக்கு, பசியால் வயிறு ஒட்டிப்போயிருந்த ஆண்டவறாகிய யேசுநாதருக்கு, அவர் பசிக்கு ரொட்டியும் தாகத்துக்கு குடிக்க ஒயினும் கொடுத்த   அந்த பாக்கியமான பிள்ளை மார்செலீனோவுக்கு ஆண்டவர் தன் திருக்கையாலேயே மரணத்தைக்கொடுத்து எடுத்துக்கொண்டார் என்றால் அது அவன் செய்த பாக்கியமா அல்லது
அவன் பெற்றோர் செய்த பாக்கியமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை.
       இந்தக்கதை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. மூலக்கதை ஜொசே மரியா சாஞ்சே சில்வா எழுதி திரைப்படமாக எடுக்கப்பட்டது.
    ஸ்பெயின் தேசத்தவரால் 1950 களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் எங்கும் சக்கைபோடு போட்டது. பல பரிசுகள் வாங்கியது. இந்தக்கதையில் ஈர்க்கப்பட்ட நான் நம் பிள்ளைகளும் இக்கதையை தெரிந்துகொள்ளும்பொருட்டு எனக்கு தெரிந்தபடி எழுதி உள்ளேன். ஊரின் பெயரும் கதா பாத்திரங்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. வணக்கம்.

No comments:

Post a Comment