Monday, May 19, 2014

" வீரத்தாய் புனித சிம்பரோஸா "




" வீரத்தாய் புனித சிம்பரோஸா "

" அப்படியானால் இந்த நசரேயனான யேசுநாதரை நான் என்ன செய்யட்டும்?" என்றான் போஞ்சி பிலாத்து.
" அவனை சிலுவையில் அடியும். அவனை சிலுவையில் அடியும். அவனை சிலுவையில் அடித்து கொல்லும் " என்றனர் அந்த வெறி பிடித்த யூதர் கூட்டம்.
" என்ன... உங்கள் அரசனை நான சிலுவையில் அறைவதா?" என்றான் போஞ்சி பிலாத்து.
" யேசுநாதர் எங்களுக்கு அரசன் அல்ல. இனி சீசரே எங்கள் அரசர் " என்றனர் அந்த யூதர்.
யேசுநாதர் குற்றமற்றவர் என்று தனக்கு நன்றாக தெரிந்திருந்தும் தன்னால் இனி எந்த காரியமும் இவர்மட்டில் செய்ய முடியாது என்று உணர்ந்த போஞ்சி பிலாத்து ஒரு பேசின் நிறைய தண்ணீர் கொண்டுவரச்செய்து," இவன் மட்டில் நான் குற்றமற்றவன், இவன் ரத்தப்பழி என்மீது விழாதபடிக்கு நான் என் கைகளை கழுவிக்கொள்கிறேன்" என்றான்.
" இவன் ரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் தலைமுறை மக்கள் மீதும் விழட்டும். அவனை சிலுவை அடியும் அவனை சிலுவையில் அடியும் " என்று யூதர்கள் உரக்கககத்திக்கொண்டே  இருந்தனர். வேறு வழி இல்லாமல் போஞ்சி பிலாத்தும் யேசுநாதரை சிலுவையில் அடிக்க உத்திரவிட்டான்" என்று கதையை சொல்லி நிறுத்தினான் சிம்பரோஸாவின் கணவன்.
" அதன் பிறகு என்ன ஆயிற்று " என்றாள் சிம்பரோஸா.
" ஏன் உனக்கு தூக்கம் வரவில்லையா.. எனக்கு தூக்கம் வருகின்றது" என்றான் அவள் கணவன்.
" இல்லை அத்தான்... யேசுநாதர் கதை என்றாலும் நம் ரோமர்களின் சரித்திரம் என்றாலும் எனக்கு உயிர். எனக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை. விடிவதற்கு இன்னும் வெகு நேரம்  இருகின்றது. பிறகு என்னவாயிற்று என்று எனக்கு சொல்லுங்கள்" என்றாள் சிம்பரோஸா.
" அன்பே சிம்பரோஸா..நம் கதை கேட்டுக்கொண்டே நம் ஏழு பிள்ளைகளும் தூங்கிப்போய்விட்டார்கள்.. இப்படி இரவு முழுவதும் விழித்திருந்தால் நாளைக்கு எப்படி காலையில்  விழித்தெழ முடியும்?"
" அத்தான் உங்களுக்கு பழைய நினைப்புதான் போங்கள்.நம் மாமன்னர் ஏட்ரியனின் வீரத்தளபதியான நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்து இன்றோடு ஒரு வரு வருடம்  ஆகப்போகிறதக்கும். நீங்களும் நானும் நம் பிள்ளைகளும் எப்போது யேசுவை நம் கடவுளாக ஏற்றுக்கொண்டோமோ, எப்போது ஞான முழுக்கு பெற்றுக்கொண்டோமோ அன்றே நீங்கள்
தளபதியார் என்னும் பதவியை துறந்துவிட்டீர்கள். இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மீதிக்கதையை சொல்லுங்கள்" என்றாள் சிம்பரோஸா.
" அது தானே நியாயம் சிம்பரோஸா.. எப்போது நம் மன்னருக்கு கிறிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்கவில்லையோ அதை தெரிந்திருந்தும் நான் அங்கே எப்படி அவரிடம் பணியாற்ற  முடியும்.? அதனால்தான் நான் என் குடும்ப நலனுக்காக என் தளபதி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று காரணம் கூறி வெளியே வந்துவிட்டேன். மன்னருக்கும் இது விஷயத்தில்
என் மீது வருத்தம்தான். எப்படியோ மனதுவைத்து என்னை அனுப்பிவிட்டார். இருப்பினும் எப்போது கூப்பிட்டாலும் வந்து பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்திரவின்பேரில்தான் நான் பதவி விலக அனுமதிக்கப்பட்டேன்."
" சரி யேசுநாதருக்கு பிறகு என்ன நடந்தது. அந்த யூதர்களுக்கு என்ன நேர்ந்தது?" சொல்லுங்கள் அத்தான் என்றாள் சிம்பரோஸா.
" சிம்பரோஸா... என் அழகிய கலை மானே...மீதி கதையை கேள்" என்று ஆரம்பித்தான் அவள் கணவன்.
இந்த நசரேயனாகிய யேசுவின் ரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் தலைமுறை மக்கள் மேலும் விழட்டும் என்று யூதர்கள் எந்த வாய் முஹூர்த்தத்தில் கூறினார்களோ அது அப்படியே  அவர்கள் தலைமுறை மக்கள் மேல் விழுந்தது. இப்படி ஆகும் என்றும் அதன் விளைவு எவ்வளவு பயங்கரமாக தங்கள் தலைமுறை மக்கள் மீது வந்து தாக்கும் என்று அப்போது அந்த யூத
மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நரகமே தங்கள் மக்களின் தலைமுறையில் வந்து இறங்கியது போல் இருந்தது அந்த நிகழ்ச்சி.
        அந்த பயங்கரம் கி.பி. 70ல் நடந்தது.
   இந்த ஜெருசலெம் நகரத்தின் அழிவைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அக்காலத்திய சூழ்நிலையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். என்னதான் யேசுநாதரின் சாபம் " இந்த நகரில் கல்லின்மேல் கல் நில்லாது இடிக்கப்படும்" என்றிருந்தாலும் தன் சாபத்திலிருந்து இந்த யூத மக்களை காக்கும்படிக்கு அவர் சில அருங்குறிகளையும்  காண்பித்திருந்தார் என்று சில வேத விற்பன்னர்கள் கூறுகின்றார்கள். அவற்றுள் சில பின்வருமாறு.
கி.பி.66 புளியாத அப்பத்திருநாளன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் வானில் உதய சூரியனைப்போல் ஒரு ஒளி தோன்றியது. அது சுமார் அறைமணி அளவில்  தேவாலயத்தின் கருவறை மீது நின்றது. இது ஒருவிதமான நல்ல சகுனம் என்றாலும் சில வேத பாரகர்கள் இது பின் வரப்போகும் துன்பமான நிகழ்வுகளுக்கு இனம்புரியாத ஒரு முன்
அடையாளமாகும் என்றே கருதுகிறார்கள்.
ஒரு இளம் பசு தேவாலயதிற்கு பலிகொடுக்கப்பட அழைத்துச்செல்லப்படும்போது அது தேவாலயத்தின் முன்பே ஒரு குட்டியை ஈன்றது.
பாஸ்காதிருவிழா இரவின்போது தேவாலயத்தின் கிழக்கு கதவு தானாக திறந்துகொண்டது. கடினமான வெண்கலத்தால் செய்யப்பட்ட அந்த பெரிய கதவை சாதாரணமாக திறக்கவோ அல்லது மூடவோ சுமார் இருபது பேர் தேவைப்படும் . அப்படி இருக்கையில் இந்த பெரிய கதவு தானாக திறந்துகொண்டது.  இனிமேல் இந்த தேவாலயத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றும்  அது வரப்போகும் எதிரிகளை வரவேற்க அதற்கான அழிவுக்கு தானே திறந்துகொண்டது என்றும் வேதபாரகர் கருதுகின்றனர்.
ஐயார் மாதத்தின் 21 ஆம் நாள் சூரிய அஸ்த்தமனத்திற்கு முன்பாக சீருடைகளும் கவசங்களும் அணிந்திருந்த குதிரை வீரர்கள் வானவீதியில் பவனியாக வருவதை பலரும் கண்டனர். [ லூக்கா 21:20] காணவும்.
  கி.பி.66.பெந்தகோஸ்த்து திருவிழாநாளின் இரவில் அந்த பரிசுத்த தேவாலயத்தின் இரண்டாம் சுற்றுப்பிரகாரத்தில் தேவாலய குருக்கள் நுழையும்போது அவர்கள் மக்கள் பலர்
" எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் " என தெளிவான குறலில் கதறி அழும் குரலைக்கேட்டு திடுக்கிட்டனர்.ஆனால் அங்கே மக்கள் யாரும் இருக்கவில்லை என்பதை உறுதியாய் அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
    யூதர்களின் வரலாற்று நூல் இவ்வாறு விவரிகின்றது." கடவுளின் பிரசன்னமாகிய ஷெகினா என்னும் ஒளி [ The shekinah glory ] தேவாலயத்தின் கருவறையிலிருந்து புறப்பட்டு எதிரே அமைந்துள்ள ஒலிவ மலைமீது சுமார் மூன்றரை ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்தது. அந்த நாட்க்களில் பலசமயங்களில்," ஜெருசலேம் மக்களே உங்கள் பாவங்களுக்காக தவம் செய்யுங்கள். ஜெபம் செய்யுங்கள் " என்னும் ஒருவிதமான பரலோக குரலால் மக்களை கேட்டுக்கொண்டு எச்சரிக்கவும் செய்தது.. அந்த தெய்வீக ஒளியும் ஒலியும் ஜெருசலெம்  தேவாலயம் எதிரிகளால் முற்றுகை இடப்படும் நாளுக்கு முந்திய நாள் வரை அங்கே நின்று பின் பரலோகத்திற்கு சென்று மறைந்துவிட்டது.
      ஆனால் யூதர்கள் அந்த வானக ஒளிக்கும் ஒலிக்கும் செவிகொடுக்காமல் போனதால் பேரழிவுக்கு உள்ளானார்கள்.
     அன்பே சிம்பரோஸா," உண்மையில் யேசுநாதர் தனக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எருசலேம் நகருக்கு நேரப்போகும் அழிவைப்பற்றி எவ்வளவு துல்லியமாக கூறிஇருகின்றார்  என்பதை நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருகின்றது. எருசலேமை படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கிவந்துவிட்டது என அறிந்து
கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்கு தப்பி ஓடட்டும்.     நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெறியேறட்டும்.நாட்டுப்புறங்களில் உள்ளவர்கள் நகரத்துக்குள்ளே
வர வேண்டாம். ஏனெனில் அவைகள் பழிவாங்கும் நாட்க்கள். அப்போது மறை நூளில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்த நாட்க்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர்  ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம். ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்ந்தப்படுவர். எல்லா
நாடுகளுக்கும் சிறைபிடித்து செல்லப்படுவர். பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலெம் அவர்களாள் மிதிக்கப்படும்."
     " அத்தான் ... வேதாகமத்தில் கூறியபடி எல்லாம் நடைபெற்றதா?" என்றாள் சிம்பரோஸா.
" அன்பே சிம்பரோஸா.. உனக்கு அதில் என்ன சந்தேகம். வின்னும் மண்ணும் ஒழிந்துபோகும் ..ஆனால் என் வார்த்தைகள் ஒன்றுகூட ஒழியாது என்று யேசுநாதர் கூறவில்லையா?"
" அத்தான்... அப்படியானல் எருசலேமின் அந்த பேரழிவைப்பற்றி எனக்கும் புறியும்படி கூறுங்கள் " என்றாள் சிம்பரோசா.
" அன்பே சிம்பரோஸா...நானும் ரோமின் ஒரு படைத்தளபதி என்னும் அனுபவத்தில் அங்கு என்ன நடந்தது என்பதைப்பற்றி கூறுகின்றேன்... கவனமாகக்கேள்" என்றான் அவள்  கணவன்.
         " ஜூலியஸ் சீசர் காலத்திலேயே அதாவது யேசுநாதரின் காலத்திற்கு முன்பே இந்த பாலஸ்தீன நாடு ரோமர்களின் ஆதிக்கதிற்கு உட்பட்டிருந்தது. ஆனால் சீசர் காலத்தில்  பாலஸ்த்தீனத்தில் அங்கு நிலையானதொரு ஆட்ச்சியை நிலைநாட்ட முடியவில்லை. காரணம் அங்கிருந்த யூதர்கள் ரோமையர்களை அளவுக்கதிகமாக வெறுத்தனர். அவ்வப்போது
எதிர்க்கவும் செய்தனர். அதற்குகாரணம் இல்லமலும் இல்லை. ரோமையர்கள் யூதர்களின் மீது அளவுக்கதிகமான வரிச்சுமையை ஏற்படுத்தினார்கள். வரி என்னும் பெயரில் யூதர்களை  கொள்ளை அடித்தனர். ரோமைய அரசாங்கதிற்கு அவர்கள் நிர்ணயித்த வரியை செலுத்திவிட்டு மீதியான பணத்தை தங்களுக்கென வைத்துக்கொண்டு செழித்தார்கள்.இதனால்
வெறுப்புற்ற யூதர்கள் ரோமையர்களை விரட்டிவிட்டு தங்களை சுதந்திர நாட்டு மக்களாக்கிக்கொள்ள முடிவெட்டுத்தனர். இதற்கேற்றாற்போல் ரோமர்களும் சில விரும்பத்தாகாத செயல்களால் யூதர்களை வெறுப்பேற்றினர். அவர்களை பல விதங்களிலும் கேவலப்படுத்தி அவமானப்படுத்தினர்.
     ஒருகாலகட்டத்தில் ரோமர்களை நாட்டைவிட்டே துறத்த முடிவெடுத்து தீவிரவாத குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு யூதர்களின் தலைமைச்சங்க உறுப்பினர்களும் தேவாலய  குருக்களும் ஆதரவு கொடுத்தனர். அங்கும் சதி நடந்தது. ரோமர்களுக்கு விசுவாசமானவர்களே தலைமை சங்க உறுப்பினர்களாகவும் தலைமை குருக்களாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
இங்கும் அரசியல் விளையாடியது. யேசுநாதர் வந்து தங்களை இந்த ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பார் என பலரும் நம்பினர்.
ஆனால் வணங்காக்கழுத்துள்ள யூத மக்கள் யேசுநாதரைக்கொல்ல வேண்டி தாங்கள் சீசரை தங்கள் அரசராக ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் யேசுநாதரை சிலுவையில்  அறைந்துகொல்ல வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதால் அப்போது ரோமைய ஆளுநராகப்பதவி வகித்த போஞ்சிபிலாத்து வேறு வழி இல்லாமல் அவரை சிலுவையில் அறைந்து
கொல்ல உத்திரவிட்டான்.
        அதன்படியே யேசுநாதர் சிலுவையில் அறைந்துகொல்லப்பட்டார். பிரச்சனை அத்தோடு நின்றுவிட்டதா என்றால் அதுதான் இல்லை.ரோமர்களின்  ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதி அளித்த யூதர்கள் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து மாறினார்கள். ரோமர்களின் அடக்குமுறையாலும் அவர்களால் தங்களுக்கு ஏற்பட்ட
அவமானத்தினாலும் பல சமயங்களில் ரோமர்களை எதிர்த்தார்கள்.       யூதர்களின் சரித்திரத்தில் முதலாம் விடுதலைப்போர் கி.பி.67களில் ஆரம்பித்தது.
   அப்போதைய ரோமைய சர்வாதிகாரி நீரோ என்னும் ஒரு கொடுங்கோலன். அவன் தன்னை கடவுளாகவணங்க வேண்டுமென தன் ஆதிக்கத்திற்குட்பட்ட மக்களை நிர்பந்தித்தான். அவனது ஆணை அவனது பேரரசு முழுவது அமுல்படுத்தப்பட்டது. அதன்படி அப்போது பாலஸ்த்தீனம் சிரியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததால் அதன் அதிபதியான கெஸ்ஸியுஸ் ஃப்லோருஸ் என்பவன் பாலஸ்த்தீனத்திலும் நீரோ மன்னனின் ஆணையை அமுல்படுத்தினான். அதன்படி யூதேயாவில் ஜெருசலேமில் நீரோ மன்னனின் சிலையை  நிறுவி அதற்கு கடவுளுக்குறிய தீப தூப ஆராதணையை செய்ய எல்லா யூதரையும் நிர்பந்தித்தான். ஆனால் ஒரே தேவனை வழிபடும் யூதர்கள் இந்த ரோமைய மன்னனாகிய நீரோவை  கடவுளாக கும்பிட மறுத்தனர். அதைத்தொடர்ந்து மூண்டது பெரும் கலகம். இந்த கலவரத்தை அடக்க சிரியாவிலிருந்து 12 ஆம் லிகேட் என்னும் பெரும்படை வரவழைக்கப்பட்டது.
இந்த பெரும்படைபிரிவு அன்றைய ரோமர்களின் காலனியான பெய்த் ஷியான் என்னுமிடத்தில் முகாமிட்டிருந்தது. இந்த இடத்தில்தான் தாவீதரசர் காலத்தில் அவரது பெருமைகுரிய  மாமன்னர் சவுல் பிலிஸ்த்தியருடன் தொடர்ந்த ய்த்தத்தில் கொல்லப்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக யூதர்களின் போர் உபாயங்களாலும், தற்கொலைப்படை தாக்குதல்களாலும்
ரோமர்களின் இந்த படை சிதறடிக்கப்பட்டது. ரோமர்களின் படை பெருத்த சேதத்திற்கு உள்ளாகியது. குறைந்த பட்ச்சம் 6000 ரோமைய சிப்பாய்கள் இறந்தனர். பெருமளவு வீரர்கள் உடல் ஊனமுற்றார்கள். ரோமர்களின் ராணுவ தளவாடங்களும் படைக்கலங்களும் பெருமளவில் கொள்ளை அடிக்கப்பட்டன.
      மேலும் ரோமர்களின் பெருமை மிக்க சின்னமாகிய அக்வில்லா என்னும் கழுகுச்சின்னம் காணாமல் போய் இருந்தது. போரிலும் தோற்று தங்கள் பெருமை மிக்க கழுகு சின்னமும் காணாமல் போனதினால் ரோமர்களுக்கு இது பெரும் மானக்கேடான விஷயமாக போய்விட்டது. ஆனாலும் இதற்கு தக்க சமயத்தில் பழிக்குப்பழி வாங்கப்போவதாக சபதம்
எடுத்துக்கொண்டார்கள்.இதனால் கோபமுற்ற நீரோ மன்னன் அக்காலத்தில் பெரிதும் ராணுவ அனுபவம் கொண்டிருந்த வெஸ்பேசியன் என்னும் தளபதியை இந்த யூதர்களை அடக்க  யூதேயாவுக்கு அனுப்பினான். வெஸ்பேசியன் அக்காலத்தில் எகிப்த்தில் அலெக்ஸாண்டிரியாவில் தளபதியாக இருந்த தன் மகன் தீத்துவை வரவழைத்து இந்த யூதர்களை அடக்க
தனக்கு உதவிக்கு வருமாறு பணித்தான். வெஸ்பேசியன் கலிலேயாவிலிருந்து ஜெருசலேம் வரையிலும் யூதர்களை அடக்கினான். தன் மகன் தீத்துவை யூதேயாவை மையமாகக்கொண்டு அங்கிருக்கும் யூதர்களை அடக்க பணித்தான். ஆனால் துரதிர்ஸ்டமாக நீரோ மன்னன் தற்கொலை செய்துகொள்ளவே வெஸ்பேசியன் ரோமாபுரிக்கு சென்று அங்கே
மாமன்னராக முடி சூடிக்கொள்ளவே அவர் மகன் தீத்து கலிலேயாமுதல் யூதேயா வரை அனைத்து யூதர்களின் கோட்டைகளையும் வென்று அவர்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
   இந்த விடுதலைப்போர் ஜெருசலேம் நகரமும் அவர்களின் உலகப்புகழ்பெற்ற தேவாலயமும் அழிந்துபோக காரணமாயிற்று. ரோமர்களால்தான் இந்த பரிசுத்த நகரம் அழிந்துபோனது என்றில்லாமல் இந்த நகரை பாதுகக்கிறோம் என்றும் நாங்கள்தான் உண்மையான பாதுகாவலர்கள் என்றும் ஆங்காங்கே காளாண்கள் போல் முளைத்த தீவிரவாத குழுக்கள் பலர் தங்கள்
சுய நலத்தாலும், ஆதிக்க போட்டியாலும் இந்த ஜெருசலேம் நகரில் நுழைந்துகொண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்துக்கொண்டும் தங்களைத்தாங்களை அழித்துக்கொண்டும் ரோமர்களின்
வேலையை சுலபமாக்கினார்கள் என்பதுதான் உண்மை."
" என்னது ...எருசலேம் அழிவுற்றதற்குக்காரணம் அவர்களுடைய சொந்த மக்களா... ஆச்சரியமாக இருகின்றதே..இப்படியும் மக்கள் இருகின்றார்களா?..தங்கள் சொந்த மக்களை தாங்களே அழித்துக்கொண்டார்களா? ... சற்றே விபரமாக சொல்லுங்கள் அத்தான்" என்றாள் சிம்பரோஸா.
" ஆமாம் சிம்பரோஸா...அந்த வணங்காக்கழுத்துள்ள யூத மக்கள் தங்களைத்தாங்களே அழித்துக்கொண்டார்கள் என்பதே சரித்திரம் நமக்குக்கூறும் உண்மை.இவற்றுள்  முக்கியமானவர்கள் தேவாலய தலைமை சதுசேயர் அனானஸ் பென் அனானஸ், தீவிரவாதி கிஸ்கலா நகரைச்சேர்ந்த ஜான் என்பவன், தீவிரவாதி சைமன் பார் கியோரா என்பவன்,
தீவிரவாதி எலியேசர் பென் யாயிர் மற்றும் தீவிரவாதி எலியேசர் பென் ஹனானியா என்பவர்கள். இவர்கள் செய்த கைங்கர்யம் வார்த்தையில் சொல்லி முடியாது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
    தலைமை சதுசயர் குரு அனானஸ் பென் அனானஸ். இவருக்கு அத்தனாஸ் என்றும் பெயருமுண்டு. நீதியை நிலை நாட்டுவதில் இவர் மிகுந்த கண்டிப்பனவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். சிறந்த அரசியல் நிர்வாகி. எனவே தங்களை ஆளும் ரோமர்களுக்கு நீக்குப்போக்காக போகக்கூடியவர் என்றாலும் மத ரீதியான கருத்துகளுக்கு
உறுதியான முடிவு எடுப்பவர். எனவே அந்த சூழ்நிலையில் தன் திறமையான நிர்வாகத்தால் யூதர்களுக்கும் நகர மக்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் ரோமர்களுக்கும் சிறந்த பாலமாக விளங்கினார். அனைவரும் இவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருந்தனர். ஆனாலும் அவர்காலத்தில் கிறிஸ்த்துவமதம் தன் நாட்டில் பரவாதபடிக்கு  கிறிஸ்த்துவர்களிடம் மிகவும் கொடுமையாக நடந்துகொண்டார். இவரது உத்திரவினால்தான் யேசுவின் சகோதரர் என பெயர் பெற்றிருந்த சின்ன யாகப்பரை கல்லால் அடித்து
கொல்லும்படி உத்திரவிட்டார். அதன்படியே புனித சின்ன யாகப்பர் கல்லால் அடித்துகொல்லப்பட்டார்.
     கிஸ்கலா நகரைச்சேர்ந்த ஜான்.: இவன் ஒரு தீவிரவாதி. இவன் தன்னுடைய படை என்னும் ஒரு சிறிய அமைப்பை வைத்துக்கொண்டு பெரிய ஆர்ப்பாட்டம் செய்துவந்தான். ஒரு  முறை கலிலேயாவில் உள்ள கிஸ்கலாவில் இவன் இருகின்றான் என்று தெரிந்த ரோமர்கள் ஒரு பெரும் படையுடன் தீத்து ராயன் தலைமையில் இவனை பிடிக்க விறைந்து அந்த கிஸ்கலா கோட்டையை முற்றுகை இட்டது. அன்று சாபாத்த் நாள். அதாவது யூதர்களுடைய ஓய்வு நாள். இதைப்பயன்படுத்திக்கொண்ட ஜான் இன்று ஓய்வு நாள் எனவே நம்
சண்டையை அடுத்த நாள் வைத்துக்கொள்லலாம் என்று தீத்து ராயனுக்கு ஒரு ஓலை அனுப்பினான். இதை நம்பிய தீத்து ராயன் அடுத்த நாள் படை எடுக்க உத்திரவிட்டார், ஆனல்  ஜான் அதற்கு முன் இரவே ரோமர்களுக்கு தண்ணீர் காட்டிவிட்டு தன் படையுடன் ஜெருசலேம் நகர் அடைந்துவிட்டான். தானே படை எடுத்திருந்தும் ஒரு சிறிய படையுடன்  இருக்கும் இந்த கிஸ்கலா நகரை சேர்ந்த ஜானை பிடிக்கமுடியாமல் போனதால் தீத்து ராயன் மிகுந்த எரிச்சலடைந்தான். இருப்பினும் " அடேய் ஜான் உன்னை பிடிக்காமல்
விடமாட்டேன்டா... நீ மட்டும் என் கையில் அகப்பட்டால் உனக்கு என் கையாலேதான் சாவு " என்றான்.
           ஜெருசலேம் நகரை அடைந்த கிஸ்கலா ஜான் தலைமை குரு அன்னானியாஸ் பென் அன்னானியாஸை சந்தித்து அவரோடு இணைந்துகொண்டான். ஜெருசலேமின் இளைஞர்களுக்கும் அங்கிருந்த யூதப்பெரியோர்களுக்கும் முன்பாக ஒரு பெரும் பிரசங்கம் செய்தான் பாருங்கள்... அடடா.. அண்டப்புழுகு என்றால் அதுதான்.
" பெரியோர்களே இளையோர்களே, கலிலேயாவின் கிஸ்கலாக்கோட்டையிலே இருந்து வந்திருக்கும் நான் இந்த ரோமையர்களைப்பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்திருந்தேன்.
பிறகுதான் தெரிந்தது அவர்கள் ஒன்றும் வெல்லவே முடியாத பெரும் வீரர்கள் அல்ல என்று. அவர்கள் அப்படி ஒன்றும் பெரும் வீரர்களும் அல்ல. வந்திருப்பவர்களும் வெகு  சொற்பப்பேர். இந்த தீத்து ராஜா ஒன்றும் பெரும் வீரரும் அல்ல. நானும் அவரும் நேரடியாகவே மோதிக்கொண்டோம். இரண்டே அடியில் அவர் சாய்ந்து விட்டார். அவரோடு
வந்தவர்களும் வெறும் அரை மணி நேர யுத்தத்திலேயே உயிர்பிச்சை கேட்கவே நானும் போனால் போகிறதென்று உயிர்பிச்சைக்கொடுத்து என் வீரர்களுடன் நம் தாய் நாட்டை பலப்படுத்தவும் இந்த ரோமர்களை அடியோடு நம் தாய் திருநாட்டிலிருந்து விரட்டியடிக்கவும் உங்கள் உதவிகேட்டு உங்களை நம்பி வந்திருகிறேன். ரோமர்களை நாம் ஒன்று சேர்ந்து
விரட்டினால் ஒரு மணி நேரத்திலேயே அவர்கள் அனைவரின் கதையையும் முடித்துவிடலாம். அவர்களுக்கு ஒன்றும் கொம்பும் முளைத்துவிடவில்லை. அவர்களுக்கு ஒன்றும  இறக்கையும் முளைத்துவிடவில்லை. அவர்கள் ஜெருசலேமிற்கு பறந்துவந்து தாக்கினாலும் நம்முடைய வீரமிக்க சேனைக்கு முன்னால் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.
என்னை நம்புங்கள்.. நானே ஆண்டவனால் அனுப்பப்பட்ட மெசியா. இப்போதைக்கு உங்களைக்காக்க என்னை விட்டால் வேறு ஆளே இல்லை... வாழ்க நம் இஸ்ராயேல் தேவன். ஒன்று சேர்வோம் போராடுவோம். வெற்றிபெறுவோம்" என்றான். உடனே அங்கிருந்த ஜெருசலேமிய இளைஞர்கூட்டம் பலத்த ஆரவாரத்துடன் அவன் பின்னே சேர்ந்தது.
சுமார் 25000 போர் அவனுடன் அப்போதே இணைந்தார்கள். இதைக்கண்ட தலைமைகுகு அனானியாசுக்கு தலை சுற்றிப்போனது.
    ஆனால் தலைமை குருவின் ஆட்களுக்கும் ஜானுடைய ஆட்களுக்கும் ஒத்துப்போகவில்லை. நாளடைவில் ஜானுக்கும் அனனியாசுக்குமே ஒத்துப்போகவில்லை. தினமும் ஏதாவது  ஒரு காரணத்திற்காக ஒரே சண்டை. இது அவர்களுக்குள் கை கலப்பில் முடிந்தது. தனக்கு அதிகபட்ச்ச ஆதரவு இருப்பதை அறிந்த ஜான் அன்னானியாஸை தனக்கும் கீழ்ப்படுத்த
நினைத்து அவரை ஓரம் கட்டினான். தானே ஜெருசலேமிற்கு ஒரு சர்வாதிபோல நடந்துகொண்டான். இந்த ஜான் என்னும் சனியனை நாம் வலுவில் அல்லவா இழுத்துப்போட்டுக்கொண்டோம் என்று தலைமைகுரு அனானியாஸ் தலையில் அடித்துக்கொண்டார். இந்த சனியன் பிடித்த ஜானை எப்படி ஜெருசலேமிலிருந்து வெளியேற்றலாம் என்று மிகவும்
தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த வேளையில் அவர் மூளையில் தோன்றினான் ஒரு தீவிரவாதி. அவன் பெயர் சைமன் பார் கியோரா.
          " சைமன் பார் கியோரா" ஒரு தீவிரவாதியாக பாவிக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் அவனுடைய வாழ்க்கை போக்கிரியாகவே இருந்தது. தன் பிழைப்புக்காக ஆரம்பத்தில் சிறு சிறு  கொள்ளைத்தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தீவிரவாதி என்னும் அளவில் அதுவும் பெருமளவில் ஆகியது. தனக்கென ஒரு பெரும் கொள்ளைக்கூட்டம் சேர்த்துக்கொண்டு நாளடைவில்
நாட்டுப்பற்றும் சேர்ந்துகொண்டதால் பெரும் தீவிரவாதியாக மாறினான். இவனுடைய வளர்ச்சிகண்டு ஜெருசலேம் தேவாலயத்தில் இருந்த தீவிரவாத கூட்டம் கூட திகிலுற்றது.
        ஆனாலும் இவனை தங்களுடன் சேர்த்துக்கொண்டால் தாங்கள் ரோமர்களுக்கு ஆகாதவர்களாகப்போய்விடுவோம் என்று அஞ்சிய அனானியாஸ் அவனை தங்கள் கூட்டத்தோடு  சேர்க்காமல் இருந்தார். ஆரம்பத்தில் சைமன் பார் கியாராவை அடக்க வேண்டி தன் சேனைகளை அனுப்பிய தேவாலய தலைமை குரு அன்னானியாஸ் அவன் தப்பி ஓடிவிட்டன் என அறிந்து சற்றே நிம்மதி ஆனார். ஆனால் தப்பி ஓடிய சைமன் பார் கியாரா மலைநாடுகளில் கடைசி நாடான மசாடாக்கோட்டையில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்த தீவிரவாத குழுக்களும் கொள்ளையர்களுமான சிக்காரிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டார். இந்த சிக்காரிகள் கட்டாரி என்னும் அயுதத்தை கை ஆள்வதில் வில்லாதி வில்லன்கள். இவர்களுள்
முக்கியமானவர்கள் மனேஹென் பென் யெஹுதா மற்றும் எலியேசார் பென் யாயிர் என்பவர்கள். ஆக சைமன் பார் கியாரா பெரும் வலிமை வாய்ந்த தீவிரவாதியும் சர்வாதிகாரியுமானான்.
      இவர்கள் அனைவரின் விபரங்களை எல்லாம் துல்லியம்னாக அறியவந்த தலைமை குரு அனானியாஸ்," சரி ஆபத்துக்குப்பாவமில்லை. இந்த கிஸ்கலா ஜானை அடக்க நமக்கு  சரியான துணை இந்த சைமன் பார் கியாராவாகத்தான் இருக்கமுடியும் என நினைத்து அவனை வரவேற்க ஆள் அனுப்பினார். இத்தகைய ஒரு அழைப்பு தனக்கு வரும் என சற்றும்  எதிர்பாராத சைமன் பார் கியாரா தனக்கு நல்லதொரு எதிர்காலம் வாய்த்ததென கண்டு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டான். தனது பெரும்படையுடன் மிகுந்த ஆரவாரமாக  எருசலேம் நகர வீதிகளில் வலம் வந்தான்.
        " எருசலேம் நகர கதவு தானாக திறந்துகொண்டது " ஏன் என்று அப்போது புறியாத அர்த்தம் இப்போது நான்கு வருடம் கழித்து அங்கிருந்த யூத பெரியோர்களுக்கு சற்றே புறிய  ஆரம்பித்தது. இந்த சைமனின் வருகை ஏன் என்று அப்போது கிஸ்கலா ஜானுக்கு புரியவில்லை. ஆனால் தனக்கு ஆப்பு வைக்க தலைமைகுரு அனானியாசின் வேலைதான் இது அவனுக்கு புறிய வெகுநேரம் ஆகவில்லை. இப்போது ஜெருசலேம் நகரத்தில் மூன்று சக்திகள் ஒன்றுக்கொன்று விரோதமாக செயல்பட ஆரம்பித்தன. மூன்றும் ஒருவிதத்தில் கொள்ளைக்கூட்டம். மூன்று தலைவர்கள். அவர்களுடைய படைகள். . ஆக ஜெருசலேம் நகரம் முழுக்கவும் கொள்ளையர்களால் சூழப்பட்டது. " என் தந்தையின் ஆலயத்தை கள்வர்
கூடாரமாக்கினீரே '' என்னும் யேசுநாதரின் வார்த்தை அப்போதும் பலித்தது.
      ஜெருசலேம் நகரில் ஆதிக்கப்போட்டி ஆரம்பித்துவிட்டது. தலைமை குரு அனானியஸ் மீது கிஸ்கலா ஜானுக்கும் சைமன் பாஃர் கியாராவுக்கும் சந்தேகம் ஆரம்பித்தது. எங்கே இந்த  தலைமைகுரு நம்மை எல்லாம் ரோமையரிடம் காட்டிக்கொடுத்து மாட்டிவிட்டுவிடுவாரோ என்ற பயத்தில் கலகத்தில் ஈடுபட்டான் ஜான். மூன்று ஆதிக்க சக்த்திகளும் சண்டையிட
ஆரம்பித்தனர். இந்த சண்டையில் தலைமை குரு அனானியாஸ் கொல்லப்பட்டார். அவருடைய படை வீரர்கள் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டனர். சைமனின் ஆட்க்கள்  தேவாலயத்தையும் அதன் மேற்பகுதிகளையும் தங்கள் இருப்பிடமாக்கிக்கொண்டனர். ஜான் ஜெருசலேம் நகரின் முற்பகுதிகளை தனதாக்கிக்கொண்டான்.
      இதே நேரத்தில் கி.பி.70ல் ரோமிலிருந்து வந்திருந்தான் தீத்து ராயன் .இந்த ஜெருசலேம் நகரை எல்லாப்பக்கங்களும் சூழ்ந்து கடுமையான முற்றுகை இட்டான். முற்றுகை கடுமையானதாக இருக்கவே ஜான் ஒரு முட்டாள்தனமான காரியம் செய்தான். அதன்படி தங்களுக்கு வெகு காலத்திற்கு வரும்படியான தானியங்களை கொளுத்தினான்.
அதாவது ஜெருசலேம் மக்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் பசி தாங்க முடியாமல் கிடைக்கும் ஆயுதம் ஏந்தி ரோமர்களை எதிர்த்து போரிட வேண்டும் என்பதே அவன் நோக்கமாக  இருந்தது.
            இதேபோல் சைமன் மிச்சம் மீதி இருந்த ஜானின் தானிய களஞ்சியங்களைக்கொள்ளை அடித்தான். இதனால் இருவருக்கும் பெரும் யுத்தம் ஏற்பட்டது .இந்த யுத்தத்தில்  ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களும் வியாபாரிகளும் யாத்திரிகர்களாக வந்திருந்தவர்களும்தான். இவர்களிடமிருந்து தப்பி ஜெருசலேமை விட்டு வெளியேறினால் அவர்கள் ரோமர்களிடம் அகப்பட்டுக்கொண்டார்கள். அப்படி அகப்பட்டவர்களை ரோமர்கள் தினமும் 500 பேருக்கும் குறையாமல் சிலுவையில் அறைந்து கொண்றார்கள்.
        இதனால் பொது மக்கள் நகரைவிட்டு வெளியேறமுடியாமலும் ஊருக்குள்ேள் இருக்க முடியாமலும் போகவே அவர்கள் பட்டபாடு வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. சாப்பிட ஒன்றும் இல்லாமலும், குடிக்க தண்ணீரும் இல்லாமலும் சாகவும் முடியாமல் உயிரோடிருக்கவும் முடியாமல் இந்த மக்கள் பட்ட பாடு உண்மையில் மிகவும் பரிதாபம்தான். எனவே ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வயதானவர்களும் வாய்விட்டே கதறி அழுதனர்." எங்களை யாராவது வெளியே கொண்டுபோய் விடுங்கள்" என்று அவர்கள்
அழுத அழுகை ஜெருசலேம் நகருக்கு வெகு தொலைவு வரை கேட்டது. இதற்கிடையில் நடக்கும் உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்ட ஜெருசலேமியரை புதைக்க ஆளுமில்லை,  இடமுமில்ல என்பதால் அந்த சவங்கள் அழுகி நாற்றம் குடலை பிடுங்கியது. அதனால் தொற்று நோய் பரவியது.
      இந்த சூழ்நிலையிலும் எலியஸார் பென் யாயிர் தன் தலைமையில் தன் வீரர்களுடன் எப்படியோ ஜெருசலேமை விட்டு வெளியேறிவிட்டான். அவனை பின்தொடர்ந்துசென்ற பல வீரர்களும் பொதுமக்களும் ரோமர்களின் வாளுக்கு இறையானார்கள். எலியஸார் பென் யாயிர் தன் வீரர்களுடன் மசாடாக்கோட்டையில் பதுங்கிக்கொண்டான். ரோமையர்களிடமிருந்து
எப்படியோ தப்பிப்பிழைத்த சில ஜெருசலேம் வாசிகள் வேறு புகளிடம் இல்லாததால் இந்த எலியஸாரை பின்தொடர்ந்து சென்று மசாடாக்கோட்டையில் பதுங்கினர்.
       தன் கடினமானமுற்றுகையை மேலும் வலுப்படுத்தினான் மன்னன் தீத்து ராயன். முற்றுகை ஏழுமாதம் நீடித்தது. அவன் ஆணைப்படி ஜெருசலெம்கோட்டைக்கு பல இடங்களில் சாய்தளங்கள் அமைக்கப்பட்டன.
       " ஆரம்பமானது ஜெருசலேமின் அழிவு "
    தேனீக்கள் போலவும் கட்டெரும்புகள் போலவும் ரோமைய வீரர்கள் அந்த சாய் தளத்தின் வழியாகவும் ஏணிக்கள் வழியாகவும் ஜெருசலேம்
நகருக்குள் இறங்கினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் வாளால் வெட்டிக்கொண்றனர். மேலும் ரோமைய வீரர்கள் உள்ளே வர வசதியாக அந்த பெரிய கோட்டைகதவை திறந்து  வைத்தனர். அவ்வளவுதான்..திபு திபுவென் ஆயிரக்கணக்கான ரோமைய வீரர்கள் ஜெருசலேம் நகர வீதியில் புகுந்து கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சங்காரம் செய்தனர்.    ஆணாவது..பெண்ணாவது...குழந்தையாவது...குட்டியாவது...பெரியோராவது...சிறியோராவது...அனைவரையும் கொல்ல தீத்துராயன் ஆணையிட்டான்.
ஜெருசலேம் நகருக்குள் ரோமைய ராணுவம் நுழைந்துவிட்டது என்றதும் ஜானுடைய வீரர்களும் சைமனுடைய வீரர்களும் பலத்த எதிர்ப்பு காட்டினார்கள். தேவாலயத்தின் மூன்று  சுற்றுப்பிரகாரங்களும் உடைக்கப்பட்டன. எங்கும் சங்காரம் நிகழ்ந்தது. எங்கும் தீ வைப்புகளும் நிகழ்ந்தது. ஆக சாலமோனின் புகழ்பெற்ற தேவாலயம் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது.
          ஜெருசலேமே முழுவதும் பற்றி எரிந்தது. ஜெருசலேம் நகர வாசிகள் யாரிடம் தஞ்சம் கோருவது எனத்தெரியாமல் மனம்போனபோக்கில் ஓடினர். ஆனால் எங்கு ஓடியும் அவர்களுக்கு  பாதுகாப்பில்லை. மக்கள் உயிர் பிழைக்க மதில் மேல் ஏறி நின்று குதித்தார்கள். அங்கும் அவர்களுக்கு ஆபத்து இருந்தது. வெளியே இருந்த ரோமைய வீரர்கள் அவர்களை வாளுக்கு
இறையாக்கினார்கள். தப்பியவர்கள் கால், கை , மண்டை உடைந்து படுகாயமுற்றும் உயிர்பிழைக்கமுடியாமலும் தவித்தார்கள்.
திடீரென ஒரு புரளி ஒன்று கிளம்பியது. இந்த யூதர்கள் சாலமோன் கட்டிய தேவாலயத்திலிருந்து தங்கம், வைரம் ஆகிய நகைகளையும் பொற்குவியலையும் அள்ளிச்செல்கிறார்கள் என்றும் பலர் வைரங்களையும் விலை உயர்ந்த மாணிக்க கற்களையும் விழுங்கிச்செல்கிறார்கள் என்றும் பரவியது. அவ்வளவுதான். ரோமர்கள் இவைகளை கொள்ளையடிக்க ஒவ்வொரு யூதனையும் உயிரோடு வயிற்றைக்கிழித்து சோதித்தார்கள். அகப்பட்டதை சுருட்டினார்கள். எந்த யூதனையும் ஆண்,பெண் சிறுவர் என பேதம்பாராது வயிற்றைக்குத்திக்கிழித்துக் கொண்றர்கள்.
        மாமன்னர் சாலமோன் கட்டிய தேவாலயம் எல்லாப்பகுதிகளிலும் நன்றாகப்பற்றி எரிந்ததால் அதன் சுவர்கள் தூண்கள் அனைத்திலும் போர்த்தியிருந்த தங்க அடுக்குகள் யாவும்  உருகின. உருகிய தங்க குழம்புகள் தேவாலத்தின் சுவர்களின் இடுக்குகளில் தேங்கின. இவற்றை சேகரிக்க முடிந்தவர்கள் சேகரித்தார்கள். இதற்காக தங்கள் உயிரை பணயம்
வைத்தார்கள். இந்த உருகிய தங்க படிமங்களை எடுக்க தாங்களே தேவாலய சுவர்களை இடித்தார்கள். இவ்விதமாக இந்த அழகிய தேவாலயத்தை பற்றிய யேசுநாதரின் தீர்க்க தரிசனம்  நிறைவேறியது." இந்த அழகிய தேவாலயம் கல்லின்மேல் கல் நில்லாதபடி இடித்து புறம்பே தள்ளப்படும்" மேலும் ஜெருசலேம் மக்கள் பலர் இந்த தேவாலய மதிலின்மேல் ஏறிக்கொண்டு
தங்களைத்தாக்கவரும் ரோமர்களை எதிர்க்க தாங்கள் நின்றிருந்த மதில்சுவரை உடைத்து அவர்கள் மீது தள்ளினர். இவ்விதமாவும் இந்த தேவாலயமும் அதன் மதில் சுவரும் இடிபட்டது.
     இந்த ஜெருசலேம் அழிவின்போது கொல்லப்பட்டவர்கள் ஏறக்குறைய ஒரு லட்ச்சத்து பத்தாயிரம்பேர். இந்த ஜெருசலேம் நகரும் அதனுள் இருந்த தேவாலயமும் அதனுள் இருந்த  மக்களின் அழிவும் யேசுநாதரின் தீர்க்கதரிசனத்தின்படியே அட்சரம் பிசகாமல் நிகழ்ந்தேறியது."
" பிறகு என்ன நடந்தது" என்றாள் சிம்பரோஸா.
இந்த எருசலேம் அட்டூழியங்கள் அழிவுகளை எல்லாம் வெற்றிகரமாக நிகழ்த்திய தீத்து ராயனுக்கு மேலும் ஒரு கோட்டை பாக்கி இருப்பதாக கூறப்பட்டது.  அதுதான் ' மசாதாக்கோட்டை "
   சாக்கடலின் ஓரத்தில் யூதேயாவின் கடைசிப்பகுதியில் மலைமீதிருந்த ஒரு கோட்டைதான் மசாதாக்கோட்டை. பெரிய ஏரோது மன்னன் ஒரு பெரிய மலையை கரைத்து  மூன்றடுக்கு கோட்டையாக கட்டி இருந்தாதன். சிறந்த கலா ரசிகனான இவன் கட்டி இருந்த இக்கோட்டை கட்டிடக்கலைஞர்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய ஒரு சவால். எல்லா வசதிகளையும் வைத்து மஹா அற்ப்புதமாக கட்டி இருந்தான் மன்னன் ஏரோது. எருசலேம் அழிவிலிருந்து தப்பி வந்திருந்தானே ஒரு தீவிரவாதி எலியேசார் பென் யாயிர் அவனும் அவன் சகாக்களும் மற்றும் உயிர்பிழைக்க வந்திருந்தவர்களுமாக ஏறக்குறைய 960 பேர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக இங்கே தங்கி இருந்தார்கள். இதை அறிந்த தீத்து ராயன் லூசியுஸ் ஃப்லேவியுஸ் சில்வா என்பவர் தலைமையில் ஒரு 15000 ரோமை வீரர்களை இந்த மசாதாக்கோட்டைக்கு அனுப்பி அங்கே மறைந்திருக்கு சிக்காரி கூட்ட தீவிரவாதிகளை சிறை பிடிக்க அனுப்பினார். அவர் இந்த மலையின் அடியில் தங்கி மூன்று மாதம் கடுமையான முற்றுகை நிகழ்ந்தினார். இந்த கடும் முற்றுகையினால் சிக்கார் தீவிரவாதிகள் மிகவும் சோர்ந்து போயினர். இருப்பினும் ஏதாவது உதவி வரும்வரையில் காத்திருக்க முடிவு செய்தனர்.      ஆனால் ஜெருசாலேமே அழிந்துபோனது அவர்களுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
     இதற்குள்ளாக ஃப்லேவியுஸ் சில்வா மலையின் கீழிருந்து மலைக்கு மேல் வரை ஒரு சாய்தளம் அமைத்தார். இனிமேல் இந்த ரோமர்களிடம் பிடிபடுவதைத்தவிர வேறு வழி  இல்லை என்று உணர்ந்த தீவிரவாதி எலியேசார் அனைவரையும் உயிர் தியாகம் செய்ய கட்டளையிட்டார். அதன்படி ஒரு பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பத்துபேரும் தங்கள்
குடும்பத்தார் மற்றும் உறவினர் என்றும் பாராது அனைவரையும் கொண்றனர். மீதி பத்துபேரே இருந்தனர். இந்த பத்துபேரில் ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டு மீதி ஒன்பது பேரையும்  கொண்று கடைசியில் அவன் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு சரித்திரக்குறிப்பு கூறுகின்றது. மிகவும் கஸ்ட்டப்பட்டு மேலே ஏறிவந்து பார்த்த ரோமர்கள் அப்படியே விக்கித்து
நின்றார்கள். அவர்களைப்பொருத்தவரையில் இந்த மசாதாக்க்கோட்டை ஒரு வெற்றியாக படவில்லை."
" பிறகு என்ன நடந்தது " என்றாள் சிம்பரோஸா.
" தீத்து ராயன் இந்த ஜெருசலேம் நகரை அழித்த பெருமையுடனும் இந்த வணங்காக்கழுத்துள்ள யூதர்களை அடக்கிய பூரிப்பாலும் இந்த யூதேயா நாட்டையே கொள்ளை அடித்துக்கொண்டு ரோமுக்கு வெற்றி வீரனாக திரும்பினான். அங்கே அவனுக்கு ரோமைய ராஜாவாக முடிசூடப்பட்டது. ஆம். அதற்குள் அவன் தகப்பனார் வெஸ்பேசியன்  சொற்ப காலத்திலேயே ரோமின் மாமன்னர் பதவி முடித்து பரலோகபிராப்த்தி அடைந்திருந்தார். இந்த வெற்றியின் அடையாளமாக ரோமில் அவனுக்கு தீத்து ராயன் வளைவு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த வளைவில் அவன் ஜெருசலேமில் கொள்ளை அடித்துவந்த பல பொருட்க்களையும் சிற்பமாக செதுக்கி இருக்கிறார்கள். இவற்றுள் முக்கியமானது சாலமோன் பேரரசர் கட்டியிருந்த தேவாலயத்தில் கர்ப்பகிருஹத்தில் வைக்கப்பட்டிருந்த ஏழு மாட விளக்கும் ஒன்று.அது மனோரா என்றழைக்கப்படுகின்றது. முழுவதும் சுத்த தங்கத்தால்
செய்யப்பட்டது. மிகவும் சுத்தமாக தயாரித்து சுத்திகரிக்கப்பட்ட ஒலிவ எண்ணெய் மட்டுமே இதில் கடவுளுக்காக எரிக்கப்படும். மிகவும் விஷேஷமான நாட்க்களில் மட்டுமே அதன்  ஏழு மாடக்கால்களிலும் தீபம் ஏற்றப்படும். இந்த தேவாலயத்தில் சுவாமி யேசுநாதரை கோயிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டபோது அன்று அவருக்கு மட்டுமே விஷேஷமாக பலி ஒப்புகொடுக்கப்பட்டு இந்த மனோராவின் ஏழு தீபக்கால்களிலும் தீபம் ஏற்றப்பட்டது ஒரு தனி சிறப்பாகும்." என்றான் அவள் கணவன்.
      அப்போது சிம்பரோஸாவின் கடைசிக்குழந்தை யூஜின் தூக்கத்தில் வீர் என கத்திக்கொண்டு எழுந்தான். சிம்பரோஸா அவனை வாரி அணைத்துக்கொண்டு தலையைக்கோதி அவனைத்தேற்றினாள். " யூஜின்... என் செல்வமே .. ஏன் அழுகிறாய் ... தூக்கத்தில் கனவு ஏதும் கண்டாயோ?" என்றாள் சிம்பரோஸா.
" ஆம் அம்மா.. நான் கனவுதான் கண்டேன் என்றாலும் அது நேரில் கண்டது போலத்தான் இருந்தது" என்றான் அவன்.
" யூஜின்... என்ன கனவு கண்டாய்... அதை அம்மாவிடம் அப்படியே சொல்லு" என்றாள் சிம்பரோஸா.
" அம்மா.. என்னை ஒரு கருத்த தடியன் பெரும் வாளாள் என் தலைமுதல் இடுப்பு வரை இரண்டாக வெட்டுவதுபோல கனவு கண்டேன்" என்றான் அவன்.
" யூஜின்.. அப்போது நீ என்ன செய்தாய்" என்றான் அவன் தந்தை.
" அப்பா... அப்போது நான் பயத்தால் என் கண்களை இறுக மூடிக்கொண்டேன்" என்றான் அவன்.
" யூஜின்..நீ கனவுதான் கண்டாய் என்றாலும் உனக்கும் பயத்துக்கும் வெகுதூரம் இருக்க வேண்டும்.. நீ நான் பெற்ற பிள்ளை.. நான் ராணுவத்தில் பெரும் தளபதியாக்கும். எனக்குப்பிறந்த உனக்கு பயம் என்பது இருக்கலாமோ?. இருக்கவே கூடாது. ஆகவே..தூக்கத்தில்கூட நீ பயப்படக்கூடாது. அடுத்த முறை நீ இப்படி கனவுகண்டால் நீ உன் கண்களை மூடாமல் தைரியமாக என்ன வெட்டு பார்க்கலாம் என்று கூற வேண்டும் .புரிந்ததா?" என்றான் அவன் தந்தை. பிறகு யூஜின் அப்படியே தூங்கிப்போனான்.
" போங்கள் அத்தான்..இதற்குத்தான் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த மாதிரி கதைகளை எல்லாம் பேசக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். பிறகு என்ன நடந்தது" என்று கேட்டாள் சிம்பரோஸா.
" தீவிரவாதிகளான கிஸ்கலாவைச்சேர்ந்த ஜானும், சைமன் பார் கியோராவும் போரின் முடிவில் கைதியாக பிடிபட்டு ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களை சங்கிலிகளாள் கட்டி ரோமின் வீதிகளில் மிகுந்த அவமரியாதையாக இழுத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் மீது ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு மமர்த்தியான் சிறையில்
அடைக்கப்பட்டனர்.இந்த மமர்த்தியான் சிறையில்தான் யேசுநாதரின் தலைமை சீடர் இராயப்பர் எனப்படும் பேதுருவும் சின்னப்பர் எனப்படும் பாலும் சிறைபட்டிருந்தனர்.
    தீவிரவாதி கிஸ்கலா ஜானுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு காலம் முழுவதும் கடுங்காவல் தண்டனையால் மிகுந்த கஸ்ட்டப்பட்டு இறந்தான். ஆனால் தீவிரவாதி சைமன் பார் கியாராவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ரோமாபுரியில் மிகவும் உயரமான தார்பியன் பாறையிலிருந்த தலை கீழே விழும்படி வீசப்பட்டு தலை சிதறி இறந்தான்."
" அடேய்யப்பா... முதலாம் யூதர்களின் விடுதலைப்போர் எவ்வளவு கடினமாக இருந்தது என்று நினைக்கும்போது மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருகின்றது." என்றாள் சிம்பரோஸா.
" சிம்பரோஸா...யூதர்களின் முதலாம் விடுதலைப்போர் மிகவும் கொடுமையானதாக இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அதைவிட யூதர்களின் இரண்டாம் விடுதலைப்போர்  அதைவிட மிகவும் கொடுமையாக இருந்தது என்பதும் உண்மைதான். ஏனென்றால் யூதர்களின் அந்த இரண்டாம் விடுதலைப்போர் நடக்கும்போது நானும் அங்கிருந்தேன்.
அந்த கொடுமைகளை நேரில் பார்த்தும் இருகிறேன். செய்தும் இருகிறேன். நான் ஒரு கிறிஸ்த்துவனாக மாற அதுவும் ஒரு காரணம்தான்"
" என்ன அத்தான் சொல்கிறீர்கள்...நீங்கள் அந்த கொடுமையை செய்தீர்களா?" எப்படி? ஏன்? சொல்லுங்கள் அத்தான் சொல்லுங்கள்" என்றாள் சிம்பரோசா.
" சிம்பரோஸா... நதிமூலமும் பார்க்காதே... ரிஷிமூலமும் பார்காதே... என்பார்கள் பெரியோர்கள்... நானும் யேசுநாதரை என் கடவுளாக ஏற்றுக்கொள்ளும்வரை ஒரு மிலேச்சனாகத்தான்  இருந்தேன். ஆனால் நான் எப்போது கல்வாரி மலையில் யேசுநாதரின் சிலுவையை தொட்டு தூக்கும் பாக்கியம் பெற்றேனோ அப்போதே நான் மாறிவிட்டேன்...நான் ஒரு நல்ல
மனிதனாக மாறி....பிறகு ஒரு கிறிஸ்த்துவனாக மாறினேன்... அது ஒரு நீண்ட நெடும் கதை... சொல்கிறேன் கேள்" என்றான் அவள் கணவன்.
            " கி.பி.115. கிடோஸ் கலகம்."
   இந்த யூதர்கள் முதலாம் விடுதலைபோரை முடித்து சரியாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது கி.பி.115 ஆம் ஆண்டு தங்களை ஒருவாறாக தேற்றிக்கொண்டு  ரோமர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் அகற்றுவோம் என முடிவெடுத்து தகுந்த தற்காப்பு நடவடிக்கை எடுக்காமலும் தகுதியான தலைமைப்பண்பு இல்லாமலும் மிகபெரிய ராணுவமான ரோமர்களை எதிர்க்க போரிட்டிடதன் பயன் தோல்விதான். இது கிடோஸ் கலகம் என சரித்திரத்தில் இடம் பெற்றது. இதில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த ரோமர்களின் சேனையில் நானும் ஒரு பிரிவுக்கு தளபதியாக இருந்த காரணத்தால் யூதேயாவில் ஜெருசலேமில் காவல் பணியில் நான் ஈடுபட்டிருந்த நேரம் அது.  அப்போதுதான் அங்குள்ள கிறிஸ்த்துவர்களின் தேவாலயமான கல்வாரிமலையின் பகுதிக்கு நான் செல்ல நேரிட்டது. அங்கு சில முரட்டு ரோமைய சிப்பாய்களுக்கும் சில பக்தியுள்ள
கிறிஸ்த்துவர்களுக்கும் வாய்ப்பேச்சும் தகறாரும் ஏற்படக்கண்டேன். ரோமர்கள் அந்த கல்வாரி மலையின் உச்சியில் நடுவில் இருந்த யேசுநாதரின் சிலுவையை சேதப்படுத்துவதை  தடுக்கும் முயற்சியில் கிறிஸ்த்துவர்கள் ஈடுபட்டிருக்க கண்டேன். அதற்குள் அந்த சிலுவையின் அடிப்பகுதியை ரோமர்கள் கோடாரி கொண்டு சிதைக்கக்கண்டேன். அது கீழே
விழுவதற்கும் நான் போய் தாங்கிப்பிடிப்பதற்க்கும் மிகச்சரியாக இருந்தது. அப்போது எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகள் வார்த்தையில் சொல்லி விவரிக்க முடியாததாக இருந்தது.
    அந்த சிலுவை ஏதோ மரக்கட்டையால் ஆனதாக இருந்தாலும் அது என்மீது சாய்ந்த போது யாரோ என்னை கட்டிப்பிடித்து அணைப்பது போன்றே இருந்தது.  இந்த விந்தையான அனுபவத்தை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.காரணம் இது யாராலும் நம்பமுடியாதது மட்டுமல்ல .என் உள்ளத்து உணர்ச்சிகளை யாரிடம் பகிர்ந்துகொண்டாலும் அது கேலியில்தான் முடியும் ஆதலால் அந்த அனுபவத்தை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அன்றிலிருந்து நான் அந்த கல்வாரி மலைக்கு தினமும் சென்று வருவதும் அந்த யேசுநாதரின் சிலுவையை முடிந்தவரை தொட்டுப்பார்த்து அணைத்துக்கொள்வதும் எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியை தருவதாக  இருக்கவே சில கிறிஸ்த்துவ துறவிகளை ரகசியமாக சந்தித்து என் அனுபவங்களை பகிர்ந்துகொண்டேன். அவர்கள் எனக்கு யேசுநாதரைப்பற்றியும் அவரது சிலுவை மரணம் பற்றியும்,
அவரது உயிர்ப்பை பற்றியும் அதன்பிறகு பரிசுத்த ஆவியாரின் வருகையைப்பற்றியும் எனக்கு எடுத்துறைத்தார்கள்..நான் ஜெருசலேமில் இருந்தவரையில் யேசுநாதர் பற்றிய அனைத்து  இடங்களையும், யூதர்களின் பிதாப்பிதாக்கள் வாழ்ந்த அனைத்து பரிசுத்த இடங்களையும் பார்த்து எனக்குள் பெரியதொரு மனமாற்றம் ஏற்பட்டதை உண்ர்ந்தேன். யேசுநாதரே
உண்மையான தெய்வம் என தெள்ளத்தெளிவாக உணர்ந்தபிறகு அங்கேயே யேசுநாதர் ஞாஸ்நானம் பெற்ற இடத்திலேயே நானும் ஞாஸ்நானம் பெற்றுக்கொண்டேன். எனக்கு அவர்கள்  கொடுத்த பெயர்தான் கேத்துலியுஸ். இதற்குள் ரோமாபுரியில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. மன்னர் திராஜன் பிள்ளைப்பேறு இன்றி காலமானதால் அவரது வம்சாவளியில் வந்த
ஏட்றியன் ரோமைய சக்கரவர்த்தியாக பதவி ஏற்றார். நானும் பாலஸ்தீனத்திலிருந்து ரோமாபுரி வந்து நம் குடும்பத்தோடு இணைந்தேன். உனக்கும் நம் ஏழு ஆண் பிள்ளைகளுக்கும் ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்த்துவர்களாக ஆனோம்.இது நடந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. எல்லாம் ஏதோ நேற்று நடந்தாற்போல் இருகின்றது. இல்லையா சிம்பரோஸா?"
" உண்மைதான் அத்தான். உங்கள் மன்னர் ஏட்றியனைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்."
" மன்னர் ஏட்றியன் உண்மையில் சிறந்த அரசியல் நிர்வாகி. மிகுந்த ஞானம் உள்ளவர்.கல்வி, கலை, கேள்வி, அரசியல், விஞ்சானம், மருத்துவம், வான சாஸ்த்திரம், ஜோதிடம்  அனைத்திலும் நல்ல ஞானமுள்ளவர். அவரிடம் உள்ள ஒரே கெட்ட குணம் என்ன தெரியுமா?. அவர் தனக்கு மிஞ்சியோ அல்லது அவருக்கு போட்டியாகவோ யாரேனும் இருக்கக்கண்டால் அவரை அழைத்துவந்து அவரது ஞானத்தை சோதித்துப்பார்த்து அது அவரைவிட அதிகமாக அவருக்கு இருப்பதாக அவர் உணர்ந்தால் அவரை உடனே கொண்று  விடுவார். இதனால் யாரும் இவரிடம் தனக்கு தெரிந்தவைகளை காட்டிக்கொள்வதில்லை. மன்னர் ஏட்றியனுக்கு இருக்கும் ஞாபக சக்தி மிகவும் அபாரமானது. தனது ராணுவத்தில் இருக்கும் அனைத்து வீரர்களையும் அவர் பெயர் சொல்லிக்கூப்பிடும் அளவுக்கு அவருக்கு திறமை இருந்தது. மன்னர் தனக்கு கீழ் இருக்கும் சாதாரண சிப்பாய் முதல் அவரது அதிகாரி
வரை அவரவருக்கு இருக்கும் திறமைகளை நன்றாக அறிந்து வைத்திருப்பதால் யாரும் அவரிடம் சிபாரிசு மூலம் காரியம் சாதிக்க முடியாது.
       என் பெயரைக்கூட அவர் தெரிந்து வைத்திருகிறார். கேஸ்த்துலு என்றே என்னைக்கூப்பிடுவார். நான் ஆரம்பம் முதலே அவரிடம் என் பெயரை காத்துலியுஸ் என்றே கூறி  வைத்திருக்கிறேன். இவருக்கு ஊர் சுற்றி மஹாராஜ என்றும் ஒரு பெயர் உள்ளது. காரணம் அரசியல் நிர்வாகத்திர்காக தானே நேரே ஆஜராகிவிடுவது அவரது இயல்பு.
மன்னர் ராணுவத்தின் நேரடி தலைவர். எதிரிகளை இவர் வளரவிடுவதில்லை. இதற்காக அடிக்கடி நாடுவிட்டு நாடு சுற்றிக்கொண்டே இருப்பார்."
" அது சரி மன்னருக்கு ஏன் குழந்தை குட்டிகள் இல்லை. நீங்களும்தான் ராணுவத்தில் தளபதி ஆயிற்றே. உங்களுக்கு என்மீது இருக்கும் ஆசையைப்போல உங்கள் மன்னருக்கு இல்லாமல் போனதெப்படி?"
" இந்த விஷயத்தில் உலகத்தில் எல்லா ஆண்களும் ஒன்றுதான். பிரிவுதான் பாசத்துக்கு அடிகோல் வகுக்கும். ஆனால் மன்னர் ஏட்றியனுக்கும் அவர் மனைவி விவியா சாபினாவுக்கும் ஏனோ எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை. இத்தனைக்கும் அவர் மனைவி விவிய சாபினா மன்னர் திராஜனுடைய நெருங்கிய உறவினள். மேலும் மன்னர் ஏட்றியனை
விட பத்து வயது இளையவள். எப்படியோ ஒரு முறை விவிய சாபினா மன்னர் ஏட்றியனுக்கு ஒரு குழந்தையை கருத்தாங்கினாள். ஆனால் ஏனோ தனக்குத்தானே கருக்கலைப்பு  செய்துகொண்டாள். 
மன்னர் ஏட்றியனக்கு அடங்காத கோபம் உண்டானது.ஏன் இப்படி கருக்கலைப்பு செய்துகொண்டாய் ? என காரணம் கேட்டான் மன்னன். அதற்கு அவன் மனைவி விவியா சாபினா சொன்ன பதில்," நீயே ஒரு ராட்ச்சதன். உனக்கு ஒரு ராட்ச்சதனை நான் பிள்ளையாக பெற்றுத்தர மாட்டேன் " என்பதுதான். இந்த கருக்கலைப்பால் விவியா சாபினா இறந்தாள்.
தன் மனைவி இறந்த சோகம் தீருவதற்குள் மன்னர் ஏட்றியன் செய்த ஒரு காரியம் மிகவும் வினோதமானது."
" என்ன.... மன்னர் ஏட்றியன் வேறு பெண்னை திருமணம் செய்துகொண்டாரா? பெஞ்சாதி இறந்துபோனால் ஆண்கள் புது மாப்பிள்ளைகள்தானே?"
" அதுதான் இல்லை. மாறாக அழகான ஒரு வாலிபனை தன் மகனாக தத்து எடுத்துக்கொண்டார். அவன் பெயர் அந்தினோஸ் என்பதாகும்."
" இதில் என்ன தப்பு இருகின்றது."
" இதில் தப்பு ஒன்றும் இல்லை. ஆனால் மன்னர் அந்த வாலிபனுடன் தகாத உறவு வைத்துக்கொள்வதாக வதந்தி பரவியது."
" அடக்கடவுளே... இது என்ன அசிங்கம்.. மன்னருக்கு என்ன பெண்ணா கிடைக்காது. இவர் ஏன் இப்படி செய்தார்."
" அந்த வாலிபன் அந்தினோசின் முக சௌந்தர்யம் அப்படி. மன்னர்களுக்கு இது எல்லாம் சகஜம். ஆனாலும் அந்த உறவும் அதிக காலம் நீடிக்கவில்லை."
"ஏன்..அந்த பையனுக்கு என்னவாயிற்று"
" ஒரு முறை மன்னரும் அந்த வளர்ப்பு மகன் அந்தினோஸும் எகிப்த்தில் நைல் நதியில் படகில் பயணிக்கும்போது அந்த வாலிபன் நதியில் வீழ்ந்துவிட்டான். யாராலும் அவனைக்காப்பாற்ற முடியவில்லை. நைல் நதி முதலைகள் அந்த வாலிபனை யாவரும் பார்த்த்துக்கொண்டிருக்கும்போதே விழுங்கிவிட்டனவாம். பாவம் மன்னர் ஏட்றியன் மிகவும்
விசனப்பட்டு போய்விட்டார். பிறகு வெகு காலத்திற்குப்பின் தான் தெரிந்தது அந்த வாலிபன் அந்தினோஸ் தன்னால் தான் மன்னருக்கு அவப்பெயர் எற்படுகிறது என்று உணர்ந்து  அந்த நைல் நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டன் என்று."
" அடப்பாவமே. பிறகு என்னவாயிற்று?"
" அதிலிருந்து மன்னர் வாழ்க்கையை வெறுத்துவிட்டு பட்டதெல்லாம் போதுமடா சாமி என்று வேறு திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்துவிட்டார்... சரி சரி. வெகு நேரம் ஆகிறது .போய்த்தூங்கு சிம்பரோஸா" என்றான் அவள் கணவன் கேத்துலியுஸ். பாவம்.. அதுதன் அவர்கள் இருவரும் சேர்ந்து தூங்கிய கடைசி இரவு என அந்த அப்பாவி தம்பதிகளுக்கு
அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
        அடுத்த நாள் காலையில் கேத்துலியுஸின் இளைய சகோதரன் அமாதியு கொண்டு வந்த ஒரு செய்தி இவர்கள் இருவருக்கும் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
அந்த செய்தி இதுதான். மன்னர் ஏட்றியன் வெளி நாட்டுப்பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். ரோமின் ஆதிக்கத்திலிருக்கும் அனைத்து நாடுகளில் இருக்கும் யூதர்கள் விடுதலை வேண்டி மிகுந்த கிளர்ச்சி செய்வதால் அவர்களை அடக்க அவர் மீண்டும் சிரியா, பாலஸ்தீனம் போகவிருப்பதாகவும் அதனால் யூதர்கள் என்றாலே கடும்
கோபத்திலிருப்பதாகவும் கூறப்பட்டது.மன்னரைப்பொருத்தமட்டில் அவருக்கு யூதர்கள் என்றாலும் யூத மதத்திலிருந்து கிறிஸ்த்துவ மதத்திற்கு போனவர்களானலும் எல்லாம் ஒன்றே. அவருக்குத்தெரிந்ததெல்லாம் கிரேக்க மதமும் அவர்கள் மொழியும் கலாச்சாரமும் அவர்களின் தெய்வங்களும்தான் சிறந்தது. மற்றதெல்லாம் போலி. எனவே தன் ராஜ்ஜியதிற்குட்பட்ட
அனைத்து மக்களும் கிரேக்க தெய்வங்களையே வணங்கவேண்டும். மற்ற எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று கருத்தாய் இருகின்றார். இதுபற்றி அரசபையில் விவாதமும் நடைபெற்றதாக அமாதியு கூறினான். அமாதியு அரண்மையின் ஒரு படை பிரிவுக்கு தளபதியாக ஏட்றியனிடம் வேலைபார்ப்பதால் இத்தகைய செய்திகளை அவர் உடனுக்குடன்
அறிய முடிந்தது.
" தம்பி அமாதியு...நீ இன்னும் அரசாங்க வேலையில் இருப்பது நமக்கு நல்லது. மேலும் உனக்கு தெரிந்ததை சொல்."
" அண்ணா...ரோம் நகரில் இருக்கும் அனைத்து யூதர்களையும் கிறிஸ்த்துவர்களையும் பலிகொடுக்க கிரேக்க மத குருமார்கள் திட்ட மிட்டு செயல் படுகிறார்கள். ஊரில் இருக்கும் பெரிய பதவியில் இருக்கும் அனைத்து நபர்களும் கணக்கிடப்படுகின்றார்கள்.இது யூதர்களுக்கும் கிறிஸ்த்துவர்களுக்கும் மிகப்பெரிய கெட்ட காலமாகும். உங்கள் பெயர்கூட
அடிபட்டது.மன்னருக்கு உங்களை மிகவும் நன்றாக தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?."
" தம்பி அமாதியு... இது கிறிஸ்த்துவர்களுக்கும் யூதர்களுக்கும் கெட்ட காலம் தான். என்னவானாலும் சரி.. என்னை கட்டி அணைத்துக்கொண்ட என் யேசுநாதரை நான்  மறுதளிக்கப்போவதிலை. ஒன்று செய்.நீ என் மனைவியையும் என் ஏழு ஆண் பிள்ளைகளையும் கூட்டிப்போய் திவோலியில் இருக்கும் என் பண்னை வீட்டில் பாதுகாப்பாக வை.
மற்றவைகளை இனி ஆண்டவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.. போ... காலாம் தாழ்த்தாதே." என்றான் அவன் சகோதரன் கேத்துலியுஸ். சிம்பரோஸா அவசரம் அவசரமாக தன் ஏழு ஆண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு திவோலியிலுள்ள அவள் கணவனின் பண்னை வீட்டுக்கு குடி பெயர்ந்தாள். திவோலி ரோமிலிருந்து பதினெட்டு மைல் தொலைவில் உள்ளது.
        சிம்பரோசாவின் கணவர் கேத்துலியுஸ் எதிர்பார்த்தபடியே அரண்மனையிலிருந்து ஒரு உயர் அதிகாரியும் ஒரு படையின் தளபதியுமான சேரியாலியுஸ் என்பவர் கேத்துலியுசை  கைதுசெய்து மன்னரிடம் கூட்டிப்போக வந்திருந்தார். கேத்துலியுஸ் தான் ஏன் ரோமைய கடவுளர்களை விட்டுவிட்டு ஆண்டவராம் யேசுவை பின்பற்றினோம் என்னும் காரணத்தை
விவரித்தபோது சேரியாலியுஸ் மிகவும் அதிசயித்துப்போனார். அப்போது ஆண்டவறாம் யேசுநாதர் இந்த படைத்தளபதி சேரியாலியுஸின் கண்களை திறந்தார். சேரியாலியுஸ் உடனே  ஆண்டவறாம் யேசுவை விசுவாசித்து அப்போதே அவரை தன் கடவுளாக ஏற்றுக்கொண்டார். உடனே அவர் தன்னுடன் வந்திருந்த வீரர்களிடம் தான் தன் அரசாங்க வேலையை
ராஜினாமா செய்துவிட்டதாக கூறவே விஷயம் மன்னர் ஏட்றியனுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே அவர் வேறு ஒரு தளபதியை அனுப்பி சிம்பரோஸாவின் கணவறான கேத்துலியுஸை  கைதுசெய்து அழைத்துவரும்படி கூறினார்.
    பிரிமிதிவ் எனப்படும் அந்த வேறு ஒரு தளபதி சிம்பரோஸாவின் கணவரை கைது செய்து மன்னரிடம் அழைத்துப்போக வந்திருந்தார். அவரையும் ஆண்டவறாம் யேசுநாதர்  தடுத்தாட்கொள்ளவே அவரும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகக்கூறவே மன்னர் ஏட்றியன சந்தேகம் வந்தது. அப்போது மன்னர் ஏட்றியனுக்கு அந்தரங்க காரியதரிசியும்
அரண்மனைக்காவல் அதிகாரியுமாக இருந்தவன் சிம்பரோஸாவின் கணவர் கேத்துலுஸின் சகோதரன் அமாதியும் ஒரு கிறிஸ்த்துவன் என போட்டுக்கொடுக்கவே அந்த நால்வரும் அதாவது கேத்துலுஸ், அவர் சகோதரன் அமாதியு,மனம்திரும்பிய தளபதி சேரியாலியுஸ் மற்றும் பிரிமிதிவ் ஆகிய அனைவரும் கைதுசெய்யப்பட்டு மன்னர் ஏட்றியன் முன்பாக
விசாரணைகாக கொண்டு வரப்பட்டிருந்தனர்.
      மன்னர் ஏட்றியன்," மாஜி தளபதி கேத்துலுஸ்,அமாதியு, சேரியாலியுஸ், பிரிமிதிவ் நீங்கள் அனைவரும் என் வீரமிக்க தளபதிகளாக பதவி வகித்து எனக்கே துரோகம் செய்தீர்கள். நம் நாட்டில் கிறிஸ்த்துவ மதம் தடை செய்யப்பட்ட ஒன்று. அதை பின்பற்றுவது ராஜ துரோக குற்றம் என நன்றாக தெரிந்திருந்தும் அதை ஏன் நீங்கள் பின்பற்றினீர்கள்?. அதுவும்
சேரியாலியுஸ், பிரிமிதிவ் நீங்கள் நேற்றுதான் மதம் மாறியுள்ளீர்கள்.எப்படி? ஏன்? போனதெல்லாம் போகட்டும். நீங்கள் எனக்கு செய்த சேவையினிமித்தாம் நாம் உங்களை  மன்னிக்கிறோம். இப்போதும் ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை. நம் முன்னோர்கள் வணங்கிய ரோமிய கிரேக்க தெய்வங்களுக்கு தீப தூப ஆராதனை காட்டுங்கள். உங்கள் ராஜ
துரோக குற்றத்தை மன்னித்து உங்களுக்கு நீங்கள் வகித்த பழைய பதவியையும் இன்னும் பதவி உயர்வையும் நாம் கொடுப்போம். என்ன சொல்லுகிறீர்கள்?" என்றான்.
" அரசே எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் யேசுநாதரை அல்லாது வேறு தெய்வங்களை கடவுளாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இது உறுதி" என ஒரே குரலாக சொன்னார்கள்.
" அப்படியானால் உங்கள் கொடுமையான மரணத்தை நீங்களே ஏற்றுகொண்டீர்கள். ஊம்.. தொடரட்டும் சித்திரவதைகள்" என்றான் மன்னன் ஏட்றியன்.
பாரம்தூக்கி கப்பிகள் அப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. அதைவைத்துதான் ரோமர்களும் கிரேக்கர்களும் அதிகமான பாரங்களை குறைந்த சிரமத்தில் உயரத்தில் ஏற்றி மிகப்பெரிய உயரமான கட்டிடங்களை கட்டினார்கள். அந்த கப்பிகள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் உதவியால் அந்த நால்வர்களின் உடலிலிருந்த அத்தனை மூட்டுகளும்
தனித்தனியே விலக்கப்பட்டன. அவர்கள் நால்வர்களும் அடைந்த உடல் வேதனை வார்த்தையில் வர்ணிக்கமுடியாததாக இருந்தது. ஆனாலும் அவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்கள். பலவிதமான சித்திரவாதைகள் தொடர்ந்தன. தினமும் கட்டிவைத்து ரத்த விளாறுகளாய் அடிக்கப்பட்டனர். இத்தகைய சித்திரவாதனைகள் இருபத்து ஏழுநாட்களாக
தொடர்ந்தது. மன்னன் ஏட்றியன் முன்பாக இந்த நான்கு பேரும் நான்கு தூண்களில் கட்டி வைத்து எரியும் எண்ணையால் பூசப்பட்டார்கள் அவர்கள் உடல் முழுவது சாக்கு துணியால் சுற்றப்பட்டு அதன்மீது எரியும் எண்ணை பூசப்பட்டு அவர்கள் அனைவரும் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். ஒரு நாள் முழுவதும் தீ அவர்கள் நால்வர்களையும் சுட்டெரித்தது.
ஆனால் தீ ஒரு நாள் முழுவதும் எரிந்ததுதான் மிச்சம். ஆனல் அதன் பயனாக எதுவும் நடக்கவில்லை. ஆண்டவறாகிய யேசுவின் கிருபையால் அந்த நால்வர்களும் தீயினின்று  யாதொரு சேதமும் ஆகாமல் காப்பாற்றப்பட்டார்கள்.
     அதனால் ஒரு புறம் ஆச்சர்யம் அடைந்தாலும் மறுபுறம் மிகுந்த கோபாம் அடைந்தான் மன்னன் ஏட்றியன். அவன் கோபம்  உச்சத்தை அடைந்தது. எனவே அவன் வாயிலிருந்துவந்தது கடுமையான ஆணை. " இவர்கள் அனைவரையும் சிரச்சேதம் செய்யுங்கள்." மன்னனின் ஆணை உடனே
நிறைவேற்றப்பட்டது. அந்த நால்வரும் சிரச்சேதம் செய்யப்படு வேத சாட்சி முடி பெற்றனர். அந்த நாள் ஜூன் 10 கி.பி.120 ஆம் ஆண்டு. ரோமை கத்தோலிக்க திருச்சபை இந்த நால்வருக்கும் புனிதர் பட்டம் அளித்து கெளரவித்தது. விஷயம் கேள்விப்பட்டு வந்திடுந்த சிம்பரோஸா தன் கணவரின் உடலை ரகசியமாக பெற்று தன் பண்ணை வீட்டிலேயே
அடக்கம் செய்தாள்.
      பிறகு மன்னன் ஏட்றியன் என்ன நினைத்தானோ தன் வேத கலாபனையை நிறுத்திவிட்டு ஒருவருட காலம் ஓய்வெடுத்தான். அதற்குள்ளாக பாலஸ்த்தீனாவில் யூதர்கள் விடுதலை போராட்டம் நடத்துகிறார்கள் என்று கேள்விபட்டு அவர்களை அடக்க பாலஸ்த்தீனம் வந்தான். இதற்குள்ளாக சிம்பரோஸாவின் கணவன் கேத்துலுஸ் மரித்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அரசன் ஏட்றியன் அரசாங்க அலுவல்கள் நிமித்தமாக பல நாடுகளுக்கும் போய்விட்டு கி.பி.132 ல் பாலஸ்த்தீனம் வந்தடைந்தான்.
                       " யூதர்களின் மூன்றாம் விடுதலைப்போர்."
          ஏற்கனவே கி.பி.70ல் யூதர்களின் முதலாம் மற்றும்115ல் இரண்டாம்விடுதலைப்போர்கள் நடந்திருந்தாலும் தங்கள் முயற்சியில் சற்றும் பின்வாங்காத  விக்கிரமாதித்தனைப்போல் யூதர்கள் தங்கள் மூன்றாம் விடுதலைப்போருக்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டார்கள். இதற்காக தங்களை தகுந்த முறையில் தயார்  படுத்திக்கொண்டார்கள், சென்ற இரு முறையும் செய்த தவறுகளை திருத்திக்கொண்டும் மீண்டும் அவ்வாறு நடக்காதபடிக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும்
எச்சரிக்கையாக திருத்திக்கொண்டார்கள்.  இந்த முறை தகுதியான ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஷிம்மோன் பார் கொக்பா என்பவரின் தலைமையில் அனைத்து யூத விடுதலைப்போராட்ட இயக்கங்களும்
கை கோர்த்துக்கொண்டன. அதற்கான உடன்படிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.ஷிம்மோன் பார் கோக்பாவின் தலைமையில் மூன்று ஆண்டுகளுக்கும் குறையாமால் விடுதலை போராட்டம் தொடர்ந்தது.
       அவரது அதிரடியான திடீர் திடீர் கொரில்லா தாக்குதல்களால் ஏட்றியன் நிலைகுலைந்து போனான். எனவே ஏட்றியன் சிரியாவிலிருந்தும் எகிப்த்திலிருந்தும்  அதிகப்படியான ராணுவத்தை வரவழைக்க வேண்டியதாயிற்று. ரோமர்களின் 22 ஆம் தியோரித்தானா என்னும் படையும் 9 ஆம் ஹிஸ்பேனியா படையும் முற்றிலும் அழிக்கப்பட்டது.
ரோமர்களுக்கு மிகுந்த ஆட்சேதம் ஆனது.  மிகுந்த கடுப்பாகிப்போனான் மன்னன் ஏட்றியன். கடுமையான ராணுவ தாக்குதல்களை யூதர்களின்மீது ஏவினான். அந்த தாக்குதலால் யூதர்கள் பெருமளவு
பாதிப்புக்குள்ளானார்கள். தாங்கள் ரோமர்களிடமிருந்து வென்ற அத்தனை கோட்டைகளையும் நகர்களையும் ஒவ்வொன்றாக இழந்தார்கள்.
     ரோமர்களின் அதிகப்படியான ராணுவ தாக்குதலை சமாளிக்க முடியாத ஷிம்மோன் பார் கொக்பா முடிவில் பீதார் கோட்டையில் பதுங்கினான். இதற்குள்ளாக ரோமர்களின் அதிபயங்கர ஐந்தாவது மாசிடோனியர்களின்
படையும் பதினொன்றாம் க்ளாடியன் படைகளும் இந்த பீதார் கோட்டையை முற்றுகை இட்டன. மற்ற ரோமைய ராணுவங்கள் யூதர்களின் ஆயிரம் நகர்களையும் ஐம்பது  கோட்டைகளையும் தரை மட்டம் ஆக்கி இருந்தன. எஞ்சி இருந்தது இந்த பீதார் கோட்டை மட்டுமே. முடிவில் இந்த பீதார் கோட்டையும் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
      ஏறக்குறைய மொத்தத்தில் ஆறு லட்ச்சம் யூதர்கள் போரில் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு சரித்திர குறிப்பு கூறுகின்றது. இந்த போரின்போது யூதர்களின் மெசியா எனவும் நம்பிக்கைகுறிய தலைவன் எனவும் கிழக்கே உதித்த நம்பிக்கை நட்சத்திரம் என்றும் அழைக்கப்பட்ட ஷிம்மோன் பார் கோபா
கொல்லப்பட்டார். போர் என்று வந்துவிடால் எதிரி யாராக இருந்த போதிலும் அது குழந்தையோ பெரியவர்களோ, ஆண்களோ பெண்களோ அனைவரும் ரோமர்களின் வாள் வீச்சுக்கு  பலியாக்கப்பட்டார்கள். பெருமைகுறிய ஜெருசலெம் வீழ்ந்தது. அந்த நகர் முழுவதும் தீக்கிறையாக்கப்பட்டது. இதன் அழிவைப்பற்றி மேலும் மேலும் சொல்லிகொண்டே போகலாம்.
மொத்தத்தில் பெருமைக்குறிய ஜெருசலேம் துடைத்துவிட்டாற்போல் ஆனது. அதில் குடியிருந்த யூதப்பெரியோர்கள் மத குருமர்கள் அனைவரும் மதிப்பிழந்துபோனார்கள். மிகவும்  கேவலப்படுத்தப்பட்டார்கள். அடிமைகளாக விற்கப்பட்டார்கள். பெண்கள் நிலை அதிலும் மிகமிக மோசமாகிப்போனது. வேதகாலத்தில் பாபிலோனியர்களாள் சிறைபிடித்து செல்லப்பட்டதைப்போல் இப்போதும் ஆனது. இன்னும் சொல்லப்போனால் பிந்திய நிலை முந்திய முதலாம் விடுதலைபோர் கி.பி.70ல் நடந்ததல்லவா.....அதினிலும் மிகமிக
மோசமாகிப்போனது. இப்படிப்பட்ட ஒரு மரண அடி யூதர்களின் சரித்திரத்தில் என்றுமே நடந்ததில்லை என்னும் அளவுக்கு ஏட்றியனின் வெறியாட்டம் நடந்திருந்தது.
       யூதர்களின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி [THE JEWS DIOSPORA ] அதாவது யூதர்களின் வெளியேற்றம் என குறிப்பிடப்படுகின்றது.
ஜெருசலேமின் இடிபாடுகளை மன்னன் ஏட்றியன் நேரில் மேற்பார்வை இட்டான். ஒருகட்டத்தில் இந்த பெருமைகுறிய ஜெருசலேம் தேவாலயத்தை மீண்டும் தான் கட்டித்தருவதாக எஞ்சியிருந்த யூதர்களுக்கு வாக்களித்தான். ஆனால் சமாரியாவிலிருந்து வந்திருந்த சில தூது கோஸ்ட்டியினர் ஏட்றியனை சந்தித்து ஜெருசலேமில் மீண்டும் யூதர்களுக்கான
தேவாலயம் கட்டித்தர வேண்டாம் என நன்றாக போடுக்கொடுக்கவே அவன் அந்த எண்னத்தை கைவிட்டு அதற்குப்பதில் அந்த இடத்தில் தன்னுடைய சிலையை நிர்மாணம்  செய்ய உத்திரவிட்டான். தன்னுடைய சேனைகளுக்கு இந்த யூதர்களாள் வந்த நஸ்ட்டம் எவ்வளவு பெரிது என எண்ணிய அவன் இந்த யூதர்களை மேலும் பழிவாங்க நினைத்து  ஜெருசலேமில் இனிமேல் யூதர்கள் யாரும் நுழையவோ அங்கு எந்தவிதமான வழிபாடு நடத்தவோகூடாதெனவும் யூத மதத்தை தடை செய்வதாகவும் யாரும் விருத்தசேதனம்  செய்யக்கூடாதெனவும் அவர்கள் வேத நூலான புனிதமான தோராவை வாசிக்கவோ தொடவோ கூடாதெனவும் தடை செய்தான். இது யூதர்களுக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும்  என அவனுக்கு தெரியாமல் இல்லை.
      ஜெருசலேமில் கல்வாரிமலையில் இருந்த யேசுநாதரின் சிலுவையையும் அதன் சுற்றுப்பிரகாரங்களையும் இடித்து தரைமட்டமாக்கி அந்த இடத்தில்
ஜூபிடரின் சிலையை நிர்மானித்தான். பெத்லஹேமில் யேசுநாதரின் பிறந்த இடத்தையும் நாசமாக்கி அங்கு காதல் தேவதை வீனசுக்கு ஒரு கோவில் கட்டுவிதான். புனிதமான  ஜெருசலேம் நகரை எருதுகள்கொண்டு உழுது இந்த நகர் இனிமேல் இப்படித்தான் ஆகும் என கூறி இதன் நினைவாக ஒரு நாணயத்தை வெளியிட்டான். 
      ஜெருசலேம் என்ற  பெயரையே அடியோடு மாற்றி ஜூபிடர் தெய்வத்தின் நினைவாக அலியுஸ் கபிடொல்லி என்று ரோமர்களின் பெயரையே வைத்தான். பழைய ஜெருசலேம் தெருக்களிள் ரோமர்களின்
தூண்களை வரிசையாக நிறுவி தெருக்களின் பெயரையும் மாற்றினான். யூதேயா மா நிலம் என்பதை சிரிய பாலஸ்தீனம் என்றும் மாற்றினான்.
வெகு காலத்திற்குப்பின் போரில் தோல்வியுற்ற மிச்சம் மீதி இருந்த யூதர்களுக்கு தங்கள் புராதனமான ஜெருசலேம் சுவற்றில் முட்டிக்கொண்டு அழுவதைத்தவிர அவர்களால்  வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.
யூதர்களின் மூன்றாம் விடுத்தலைப்போரை வெற்றிகரமாக முடித்த ஏட்றியன்     கி.பி.135ல் மீண்டும் ரோம் வந்து ஆட்சிப்பொருப்பை ஏற்றான். ரோமுக்கு அருகில் சுமார் 18  மைல் தொலைவில் அமைந்திருந்த திவோலி என்னும் பட்டிணத்தில் தனக்கென ஒரு அழகிய அரண்மனையைக்கட்டினான்.
[இந்த திவோலி நகர் ஒரு மலை மீது அமைந்துள்ள அழகிய நகரம். அனியோ என்னும் நதி இந்த மலையிலிருந்து உற்பத்தி ஆகி அடுக்கடுக்காக நீறூற்றுகளாக வழிந்துவந்து  கீழே சமவெளியை அடிந்து தைபர் நதியோடு கலக்கும். எனவே அந்தக்காலத்திலிருந்தே இதன் அழகிய நீரூற்றுகளுக்கு பெயர் பெற்றது. எனவே ரோமைய மன்னர்களும்  அரசியல் அதிகாரிகளும் பெரும் பணக்காரர்களும் இங்கே தங்களுக்கென வில்லாக்ககளும் தோட்டங்களும் அமைத்துக்கொண்டு தங்களின் ஓய்வு நாளை கழிப்பார்கள்.
               இந்த இடத்தில் அரசன் ஏட்ரியனுக்கும் அவன் மனைவி விவியா சாபினாவுக்கும் ஒரு பெரிய மாளிகை இருந்தது. நம் சிம்பரோசாவுக்கும் ஒரு பெரும் வில்லாவும்  பண்னை வீடும் இருந்தது என்றால் அவள் எவ்வளவு பெறிய சீமாட்டியாகவும் அவள் கணவன் கேத்தூலியுஸ் எவ்வளவு பெரிய சீமானகவும் இருந்திருக்க வேண்டுமென நேயர்கள்  புரிந்துகொள்லலாம்.].
         ஆனால் சொல்லி வைத்தாற்போல் அரண்மனை கட்டிடம் சரியாக அமையவில்லை. இதன் காரணத்தை அறிய ரோமைய கிரேக்க தெய்வங்களிடம் குறி கேட்டான்.  அவைகள்," இந்த ஊரில் குடியிருக்கும் சிம்பரோஸா எனப்படும் ஒரு பெண் தனது ஏழு ஆண் பிள்ளைகளுடன் தினமும் அவர்கள் கும்பிடும் கிரிஸ்த்துவ தேவனால் தாங்கள் மிகவும்
எரிச்சல் படுவதால் அவளும் அவளது ஏழு பிள்ளைகளும் தங்களுக்கு தீப தூப ஆராதணை காட்டினால் அந்த அரண்மனையை தாங்கள் நல்ல விதமாக கட்டித்தருவோம் " என  வாக்களித்தன. அவ்வளவுதான். யூதர்களையும்     கிறிஸ்த்துவர்களையும் அளவுக்கதிகமாக வெறுக்கும் மன்னன் ஏட்றியன உடனே சிம்பரோஸாவையும் அவளது ஏழு ஆண் பிள்ளைகளையும் கைது செய்து தன்முன்னிலையில் விசாரணைகாக கூட்டிவரச்செய்தான்.
        சிம்பரோஸாவைப்பார்த்த மாத்திரத்தில்," ஓஓஓ....இவள்தான் சிம்பரோஸாவா... இவள் கணவன்தான் கேதூலியுஸா... அவன் நம் வீரமிக்க படைத்தளபதிகளில் ஒருவனாயிறே... இவன் பண்னைவீடுதான் நம் பண்னைவீட்டின் அருகில் அமைந்துள்ளதா...இது இத்தனை நாள் நமக்கு தெரியாமல் போனதெப்படி.?. இவள் இவ்வளவு வசதி படைத்தவளா..இருக்கட்டும் இருக்கட்டும்... இவளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மனதில் கறுவிக்கொண்டான்.
    இப்படி ஒரு சூழ்நிலை தனக்கும் தன் பிள்ளைகளுக்கு என்றாவது ஒரு நாள் ஏற்படும் என்றுணர்ந்திருந்த சிம்பரோஸா தன் அனைத்து ஆண் பிள்ளைகளையும் தகுந்த விதத்தில்  கிறிஸ்த்துவ ஜீவியத்திலும் விசுவாசத்திலும் வளர்த்து வந்திருந்தாள். மன்னனும் சின்பரோஸாவும் அவள் ஏழு ஆண் பிள்ளைகளும் ரோம் நகரில் இருந்த ஹெர்குலிஸ்
தேவாலயத்தின்முன்பாக நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். விசாரணை ஆரம்பமானது.
" சிம்பரோஸா...நான் உன் கணவன் கேத்துலஸுக்கு எவ்வளவோ செய்திருந்தும் அவன் என் பேச்சை மதியாமல் போனதினால் அவனுக்கு என்ன நேர்ந்ததென உனக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நீ ஏழு ஆண் பிள்ளைகளைப்பெற்றவள். புத்திசாலித்தனமாக நடந்துகொள். இதுவரை நம் ரோமைய சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திகள் செய்ததுபோல என்னையும் கடவுளாக மதித்து எனக்கும் என் ரோமைய தெய்வங்களான ஜூபிடர், ஹெர்குலிஸ் தெய்வங்களுக்கும் தீப தூப ஆராதனை செலுத்து. இதோ நம் புனித ஹெர்குலிஸ்  தெய்வம் இதோ உப்பும் தேனும். உன் கையால் எடுத்து அவர்களுக்கு அபிஷேகம் செய். " என்றான் மன்னன் ஏட்றியன்.
         " அரசே....என் கணவருக்கு என்ன நடந்தது என எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மிக நன்றாகத்தெரியும். நாங்கள் அவர் வழியிலேயே போக விரும்புகிறோம்."
" அடிபெண்னே சிம்பரோஸா...உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருகிறது. உன் கணவர்தான் அறிவிலியாக அப்படி நடந்துகொண்டார் என்றால் நீ கூடவா அப்படி நடந்துகொள்ள வேண்டும். உன் ஏழு ஆண் பிள்ளைகளும் வாழ வேண்டாமா.?"
" அரசே.. என் கணவர் அறிவிலியாக அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. தன்னை ஆட்கொண்ட யேசுநாதருக்கு சாட்ச்சியாகவே அவர் தன் உயிரை பலிகொடுத்தார். நானும் என்  பிள்ளைகளும் ஆண்டவறாம் யேசுநாதருக்கு சாட்ச்சியாக உயிரைவிட சம்மதிகிறோம். எங்களுக்கு மேலுலகில் என் நாதராம் ஆண்டவருடனும் என் கணவருடனும் சேர்ந்து வாழவே
விரும்புகிறோம்."
" சிம்பரோஸா...நீ என் அரண்மனைக்கு பக்கத்திலேயே நீயும் குடியிருக்கும் அளவுக்கு வசதி படைத்தவள். இவ்வளவு வசதிகளையும் வாய்ப்புகளையும் இழந்துபோவாய். இவை  அனைத்தும் எதிர்காலத்தில் உனக்குப்பின்னால் உன் ஏழு ஆண் பிள்ளைகளுக்கும் போய் சேர வேண்டியது. அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்காலத்தையும் நீ குழி
தோண்டிப்புதைக்கப்பார்க்கிறாய். இது ஒரு தாய் செய்யும் காரியம் அல்ல என்பதை நீ நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்."
" மன்னிக்க வேண்டும் அரசே. எந்தக்காலமும் கடவுளுக்குறியது. எந்த செல்வமும் நிலைத்து நிற்கப்போவதும் இல்லை. இந்த உலக வாழ்க்கையும் நிலையானதல்ல. கடவுள் ஒருவரே  நிலையானவர்.அவருக்கு சாட்ச்சியாக வழவே நாங்கள் படைக்கப்பட்டிருகின்றோம். எனவே இந்த உலக செல்வங்களையும் அதன் மாய் மாலங்களையும் காட்டி நீர் எங்கள் மன
உறுதியை குலைக்க முடியாது."
" அடிப்பெண்னே சிம்பரோஸா.. நான் அரசன். என் சாம்ராஜ்ஜியத்திற்கு நான்தான் அதிபதி. நான் தான் அவை அனைத்திற்கும் கடவுள். நீ என்னையும் என் தெய்வங்களையும்  வணங்கியே ஆக வேண்டும். நீ ஒரு ரோமையபிரஜை என்றால் என் ஆணைக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். இல்லை என்றால் இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்..உன்னை உயிரோடு கொளுத்திவிடுவேன்"
" அரசே.. இதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. என் ஆன்மாவை விற்று அவியாத கட்டையாக முடிவில்லாத நரக நெருப்பில் ஊழிஊழிக்காலமும் வேகுவதைக்காட்டிலும்  நான் சற்று நேரமே எரிந்து சாம்பலாகிப்போகவே விரும்புகிறேன். அப்போதும் என் ஆன்மாவை உன்னால் எரிக்கமுடியாது. என் உடலை எரித்து அதனால் ஏற்படும் புகையால் என்  ஆண்டவருக்கு உகந்த தூப சாம்பிராணியாக மாறினால் நான் மேலும் ஆனந்தப்படுவேன்"
" சிம்பரோசா... உன் கூற்றினால் நீ என்னையும் என் தெய்வங்களையும் மிகுந்த கோபத்துக்கு ஆளாக்கிவிட்டாய். உன்னையும் உன் ஏழு ஆண் பிள்ளைகளையும் உயிரோடு கொளுத்தி சாம்பலாக்கி அதன்மீது என் அரண்மனையைக்கட்டுவேன். உன்னைப்பணிய வைக்காமல் நான் விடப்போவதில்லை."
" அப்படியே செய்துகொள்ளும் மன்னா.. நானோ என் பிள்ளைகளோ சாம்பலாவது பற்றி நன் கவலைப்படப்போவதில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீயும் ஒரு நாள்  சாம்பலகத்தான் போவாய். அப்போது நீ கட்டும் அரண்மனை உன் சாம்பலைக்கூட ஏற்காது கீழே தள்ளிவிடும் ஒரு காலமும் ஏற்படும். நீ கட்டும் அரண்மனை சுடுகாடாக மாறும்.  ஆனால் நானும் என் பிள்ளைகளும் என் கணவரோடு என் பரலோக தந்தையின் வான் வீட்டில் மாட்ச்சியுடன் குடியிருப்போம். இது உறுதி."
" அடியே சிம்பரோஸா... எனக்கா சாபம் விடுகிறாய். உன் சாபம் என் தேவர்களின் முன் ஒன்றும் பலிக்காது. அடேய் யாரங்கே ..இந்த சிறுக்கியை உயிர்போகுமட்டும் சவுக்கால்  அடித்தே கொல்லுங்கள்" என்றான் ஏட்றியன்.
   அதன்படியே சிம்பரோஸாவை அவள் தலை முடியைக்கொண்டே உயரத்தில் கட்டிவைத்து அவள் ஏழு பிள்ளைகளும் பார்க்கும்வண்ணம் சவுக்கால் அடிமேல் அடியாய் அடித்து  துவம்சம் செய்தார்கள். அவள் முகத்தில் அறைந்த அறைகளுக்கு கணக்கே இல்லாமல் போனது. அப்போதும் அவள்," என் மக்களே.... என் செல்வங்களே..இதைக்கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்..நம் ஆண்டவறாகிய யேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு அடிபட்ட பாடுகளின் முன்னால் என் பாடுகள் ஒன்றுமில்லை. நான் இந்த பாடுகளாள் என் ஆண்டவரை மகிமைப்படுத்துவேன்...இவற்றை என் ஆண்டவராம் யேசுவுக்காக மிகுந்த விருப்பமுடனே ஏற்றுக்கொள்கிறேன். கலங்காதீர்கள்...உங்களுக்கு இதைவிட மேலான மகிமை
கிடைக்கும். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்றாள்
         இதைக்கண்ட மன்னன் ஏட்றியன் இவளை இழுத்துக்கொண்டு போய் கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக்கட்டி அனியோ நதியில் வீசிக்கொல்லுங்கள்.. இவள் பிள்ளைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான்.
          அதன்படியே ஜூலை 18 அன்று சிம்பரோஸாவின் கழுத்தில் பெரிய எந்திரக்கல் கட்டப்பட்டு அனியோ நதியின் ஆழத்தில் வீசிக்கொல்லப்பட்டாள். நம் சிம்பரோசாவுக்கு  யேசுநாதர் வேத சாட்சிகளுக்கான் முடியை அணிவித்தார். இதை எல்லாம் கவனித்துவந்த சிம்பரோஸாவின் சகோதரன் யூஜின் என்பவன் அவளது சடலத்தை எடுத்து அந்த திவோலி நகரின் ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் நல்லடக்கம் செய்தார். அழகே உருவான தன் சகோதரியின் உடல் அவள் பட்ட பாடுகளால் அவள் முகத்தின் சாயலே மாறிப்போய் அடிபட்ட அவள் உடல் முழுவதும் கிழிந்த துணிபோல் நைந்துபோய் இருக்கக்கண்ட அவள் சகோதரன் அடைந்த துக்கம் வார்த்தையில் சொல்ல முடியாது. சிம்பரோஸாவை ரகசியமாக
எடுத்துவந்து புதைக்க வேண்டி இருந்ததால் அவனால் வாய்விட்டும் அழ முடியாமல் மனதுக்குளாகவே குமுறிக்குமுறி அழுதுகொண்டே தன் அன்பான சகோதரியை புதைத்தான். 
      பிற்கால கிறிஸ்த்துவர்கள் அந்த இடத்தில் சிம்பரோஸாவின் நினைவாக தேவாலயம் ஒன்றைக்கட்டினார்கள். இப்போதும் அந்த தேவாலயம் இருகின்றது. அடுத்து அவள் பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என பார்ப்போம். சிம்பரோஸாவிடம் அத்தனை கடுமையாக நடந்துகொண்ட மன்னன் ஏட்றியன் அவள் பிள்ளைகளிடம் மிகவும் தயவாக நடந்துகொண்டான். மூத்தவன் க்ரசென்ஸ் அழைக்கப்பட்டான்.
" க்ரசென்ஸ்...நீ இந்த ஏழு பேரிலும் மூத்தவன்..உன்னைப்பர்த்தால் எனக்குப்பாவமாக இருக்கிறது. நீ வாலிப வயதை அடைந்துவிட்டாய்.இந்த உலகில் நீ இன்னும் எவ்வளவோ  பார்க்க வேண்டி இருகிறது... அனுபவிக்கவேண்டி இருகிறது. உனக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் நான் உனக்கு தருவேன். ஆனால் நீ மட்டும் நான் சொல்வதை
செய்ய வேண்டும். அந்த உப்பையும் தேனையும் எடுத்து அதோ அங்கிருகின்றாரே புனிதமான ஹெர்குலியுஸ் தேவன். அவருக்கு அபிஷேபம் செய்" என்ரான் மன்னன் ஏட்றியன்.
" அரசே... நான் என் சகோதரர்கள் அனைவரிலும் மூத்தவன். என்னைப்பின்பற்றியே என் சகோதரர்களும் வர வேண்டும். நான் என் சகோதரர்களுக்கு ஒருபோதும் தீய வழி காட்ட மாட்டேன். நீ எனக்கு என்ன மாய்மால வார்த்தைகள் கூறினாலும் எவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்தாலும் நான் என் தாய்தந்தையர்கள் எங்களுக்கு காட்டிய அந்த யேசுநாதர்
என்னும் தெய்வத்தைத்தவிர வேறு எந்த தெய்வத்தையும் ஒருபோதும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன்... கும்பிடவும் மாட்டேன்...வாழ்க என் யேசுநாதர்" என்றான்.
மன்னன் ஏட்றியன் அப்படியே அவமானத்தால் கூனிக்குறுகிபோனான்.
" அடேய் க்ரசென்ஸ்.. முட்டாள் நாயே... என்னையா எதிர்த்துப்பேசுகிறாய்... உன்னை என்ன செய்கிறேன் பார்... உன்னை அடிக்கும் அடியில் உன் தம்பிகள் குலை நடுங்க  வேண்டும். கூப்பிடு மஸ்த்தூர் என்னும் அந்த எத்தியோப்பியனை" என்றான். இந்த மஸ்த்தூர் என்னும் எத்தியோப்பியன் ஏட்றியனின் ஒரு அடிமை என்றும் சொல்லலாம்.  அந்தரங்க வேலையாள் என்றும் சொல்லலாம். பெரும் முறட்டுத்தோற்றமும் சிறந்த வேட்டைக்காரனும் சிறந்த வீரனுமாக இருந்ததால் அவன் எப்போதும் மன்னன் ஏட்றியனுடனே  நம்பிக்கைகுறிய வேலையாளாக இருந்தான். மஸ்த்தூர் வந்து பணிவாக மன்னன் முன்பாக நின்றான்.
" அடேய் மஸ்த்தூர்...இவனிடம் உன் பலத்தைக்காட்டு. இவன் கை, கால்களில் உள்ள மூட்டுகளை தனித்தனியே பிறித்துவிடு " என்றான். அதன்படி மூத்தவன் க்ரசென்ட் ஒரு மரத்தூணின்மீது அமர வைக்கப்பட்டான். மன்னனின் ஆணைப்படியே அவன் கை, கால்களில் உள்ள அனைத்து இணைப்புகளும் தனித்தனியே விலக்கப்பட்டன.
" அடேய் க்ரசென்ட்.. இப்போது என்ன சொல்லுகிறாய்..உயிர்பிச்சை வேண்டுமா...ஹெர்குலெஸ் தெய்வத்திற்கு பணிவதாக வாய் வார்த்தையாகக்கூறு..உனக்கு உயிர்பிச்சை  தருகிறேன். என்ன சொல்லுகிறாய்." என்றான் மன்னன் ஏட்றியன்.
" மன்னா..என் உடலில் இன்னும் எத்தனையோ இணைப்புகள் இருகின்றன. நீர் அத்தனைகளையும் கழட்டினாலும் நான் ஒருபோதும் உன் பொய்தேவர்களுக்கு பணிய மாட்டேன்"  என்றான் க்ரசென்ட்.
" அடேய் மஸ்த்தூர்.. இனி இவனிடம் பேசிப்பயனில்லை. இவன் கழுத்தில் உன் குறுவாளை சொறுகு " என்றான் ஏட்றியன்.
மஸ்த்தூர் தன் குறுவாளால் க்ரசென்ட்டின் கழுத்தின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்தின் வெளியே வரும்படியாக தன் குறுவாளை சொறுகினான். க்ரசென்ட் வேத சாட்ச்சியாக  மரித்துப்போனான். அடுத்தவன் ஜூலியன் வரவழைக்கப்பட்டான்.
" தம்பி ஜூலியன்... நீ உன் மூத்தவன் க்ரசென்டைப்போல் இருக்க மாட்டாய் என நான் நம்புகிறேன். நீயாவது புத்தியாக பிழைத்துக்கொள். நீ விரும்பும் அனைத்தையும் நான் உனக்கு  மறுக்காமல் தருவேன்..என்ன சொல்கிறாய்"
" அரசே..விதை ஒன்று போட சுறை ஒன்று முளைக்காது என என் தந்தையார் எனக்கு சொல்லி இருகிறார்..நீ எனக்கு என்ன செய்ய விருப்பமோ அவற்றை செய்துகொள்ளலாம்" என்றான்.
" அப்படியானால் நீ உன் அண்ணன்போனவழியிலேயே போக உத்தேசமோ?"
" ஆம் அரசே... இதில் நான் உறுதியாக இருகிறேன்." என்றான் ஜூலியன்.
" அடேய் மஸ்த்தூர் இவனுக்கும் அவன் அண்ணனுக்கு செய்ததுபோல செய்" அதன்படியே ஜூலியனின் அனைத்து மூட்டுகளும் விலக்கப்பட்டன. கடைசியில் ஒரு வாள் ஜூலியனின் நெஞ்சில் இறக்கப்பட்டது. ஜூலியன் ஒரு வேத சாட்ச்சியாக மரித்தான். அடுத்தவன் நெமெசிஸ் வரவழைக்கப்பட்டான்.
" அடேய் நெமெசிஸ்... நீ எப்படி சாக விரும்புகிறாய்"
" அரசே...அது என் விருப்பமல்ல.. என் கடவுளாகிய ஆண்டவர் எனக்கு எத்தகைய மரணத்தை அனுப்புகிறாரோ அது எனக்கு பாக்கியம்" என்றான்.
" அப்படியா... இதோ வாங்கிக்கோ என்று ஏட்றியன் வீரன் ஒருவனின் கையிலிருந்த வேலை வங்கி அதை நெமெசிஸின் நெஞ்சில்... இதயத்தில் ஆழ சொருகினான்...நெமெசிஸ் வேத சாட்ச்சியாக மரித்தான். அடுத்தவன் ப்ரிமாத்திவ் வரவழைக்கப்பட்டான்.
" ப்ரிமாத்திவ்..நீ என்ன சொல்லுகிறாய்...நீயும் உன் அண்ணன்மார்களைப்போல அப்படித்தானே..?" என்றான் மன்னன்.
" ஆம் அரசே..நானும் என் அண்ணன்களைப்போலவே சாக விரும்புகிறேன்" என்றான். மன்னன் மஸ்த்தூரைப்பார்த்த பார்வையில் மஸ்த்தூர் வந்து அவன் உடலில் உள்ள அத்தனை மூட்டுகளையும் தன் கைகளாலேயே பிரித்தான். வீரன் ஒருவன் வந்து தன் வாளால் ப்ரிமித்திவின் வயிற்றை ஒரே வீச்சில் துண்டித்தான். பிரிமித்திவ் வேத சாட்ச்சியாக மரித்தான். அடுத்தவன் ஜுஸ்டின் வரவழைக்கப்பட்டான்.
" மகனே ஜுஸ்டீன்... உன் சகோதரர்களைப்பார்த்தாயா.. அவர்கள் மரணம் கண்டு உனக்கு பயமாக இல்லை." என்றான் மன்னன்.
" இல்லை அரசே.. என் சகோதரர்களைக்கண்டு எனக்கு பயமாக இல்லை. அவர்களைக்கண்டு நான் பெருமைகொள்கிறேன். நானும் அவர்களோடு போகவே விரும்புகிறேன்.சீக்கிரம்  என்னையும் கொல்லுங்கள்." என்றான் ஜஸ்டீன்.
" அடேய் மஸ்த்தூர்.. இவனை..." என்றான் மன்னன். " ஆகட்டும் எஜமான்" என்ற மஸ்த்தூர் தன் கைகளால் அந்த சிறியவன் ஜஸ்டீனியனின் அனைத்து மூட்டுகளையும்  விலக்கினான். வீரன் ஒருவன் வந்து வேலால் அவ்ன் நெஞ்சில் அவனைக்குத்தப்போனான்..அவனைத்தடுத்தான் மன்னன். " இல்லை... இவனை நெஞ்சில் குத்தாதே..  இவன் வீரனாகி விடுவான். எனவே அவனை பின்னால் இருந்து குத்து " என்றான். அப்போது ஜஸ்டீன் " அரசே நான் உன்னை ஒரு பெரும்வீரன் என்றல்லவா நினைத்தேன்..
ஆனால் இப்போதுதான் தெரிகிறது... நீ ஒரு கோழை ...நான் தைரியமாக ஒரு வீரனாக சாக விரும்பினேன்...ஆனால் நீ ஒரு கோழை போல் என்னை பின்னால் இருந்து குத்துகிறாய்" என்றான். அதற்குள் ஜஸ்டீனியனை அந்த வீரன் முதுகுபுறம் வழியாக குத்திக்கொன்றான். ஜஸ்டீனியன் வேதசாட்ச்சியாக மரித்தான். மன்னன் ஏட்றியன் ஜஸ்டீனியனின் வீரமிக்க
பேச்சினால் அப்படியே வெட்கி தலை குனிந்தான். அடுத்தவன் ஸ்டாக்தியுஸ் வரவழைக்கப்பட்டான்.
" ஸ்டாக்தியுஸ்..நீயாவது..." என்றான் மன்னன்
" அரசே தயவு செய்து என்னையும் உடனே கொண்றுவிடுங்கள்" என்றான் அவனையும் ஒரு பெரும் வாளால் வலப்பக்க விலாவிலிருந்து அவனது இடப்பக்க விலாவழியாக எடுத்து கொண்றார்கள்.
    அடுத்தவன் கடைக்குட்டி யூஜின். இவனைக்கண்ட மாத்திரத்தில் மன்னன் ஏட்றியன் இவன் மீது பரிவு கொண்டார். அவன் தலைமீது தன் கையைவைத்து தடவி, மகனே யூஜின்..உன்மீது நான் மிகவும் பரிவுகொள்கிறேன். நான் உன்னை என் மகனாக தத்து எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். உனக்கு இதெல்லாம் வேண்டாம்.. நான் உன்னை  எதையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. வா என் அரண்மனைக்குப்போகலாம்." என்றான் மன்னன்.
" அரசே...நீர் என் மீது பரிவு கொண்டதற்கு நன்றி..எனக்கு உமக்கு மகனாக ஆவது பற்றி கொஞ்சமும் விருப்பமில்லை. நீ என்னை மகன் என்று அழைத்ததும் எனக்கு பிடிக்கவும்  இல்லை. நீ என் தந்தையைக்கொண்றவன்.. என் தாயைக்கொண்றவன்... என் உடன்பிறந்த சகோதரர்கள் அறுவரையும் கொண்றவன். மொத்தத்தில் நீர் ஒரு மனித மிருகம். உன்னை
என் தந்தையாக் நான் எப்படி பாவிப்பேன். அன்பு நிறைந்த என் தந்தை எங்கே..மனித மிருகமான நீ எங்கே? நீ சொல்லும் எதையும் நான் ஒருபோதும் கேட்கவும் மாட்டேன். உன் ஆணையை நிரைவேற்றிகொள்ளலாம்" என்றான் யூஜின்.
      ஒரு சிறிய பாலகன் முன் தான் தலை குனியவேண்டியதாகப்போய்விட்டதில் மன்னன் ஏட்றியனுக்கு பெரும்
அவமானமாகப்போய்விட்டது. அது கடும்கோபமாகவும் வெளிப்பட்டது. உடனே அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது கொடும் வார்த்தைகள்.
" அடேய் பொடியா..உன் சகோதரர்களிள் நீ சிறியவனாக இருந்தும் அவர்கள் யாரும் பேசாத வார்த்தைகளால் என்னை மிகவும் அவமானமாகப்பேசிவிட்டாய். எனவே அவர்கள்  அனைவருக்கும் கொடுத்த தண்டனைகளிலும் அதிகமான கொடுமையான தண்டனை உனக்கு காத்திருக்கிறது. அடேய் மஸ்த்தூர் ... இந்த பொடியனை உன் வாளாள்
இரண்டாகப்பிளந்துவிடு" என்றான்.
" அரசே நான் இதற்காக வருத்தப்படப்போவதில்லை. ஆனல் உனக்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன். நீயும் இப்படியாகத்தான் சாகப்போகிறாய். ஆனால் அது உனக்கு உடனடி மரணமாக இருக்காது. நீடித்த துன்பமாக அது உனக்கு இருக்கும் " என தீர்க்கதரிசனம் கூறினான் யூஜின்.
அடுத்து மஸ்த்தூர் வந்து யூஜின் முன்பாக நின்றான்.
" யூஜின்.. உனக்கு பயமாக இருகிறதா? பயமாக இருந்தால் கண்களை மூடிக்கொள் " என்றான் மஸ்த்தூர்.
" எனக்கு பயமாக இல்லை. இப்படி ஆகும் என்று எனக்கு பத்து வருடங்களுக்கு முன்பே தெரியும். என் தந்தையார் இப்படிப்பட்ட சமயங்களிள் பயப்படாமல் தைரியமாக இருக்க  வேண்டும் என்று கூறி இருகிறார். எனவே எனக்கு பயமே இல்லை..நான் கண்களை மூடவும் மாட்டேன்." என்றான் யூஜின்.
   தன் வாழ்நாளில் எத்தனையோ  கொலைக்குற்றவாளிகளின் தலையை சீவிய மஸ்த்தூருக்கு தன் வாழ்நாளில் ஒரு பொடியனின் உடலை இருகூறாக பிரிப்போம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டததால்
யூஜினைப்பற்றி மிகவும் வியந்து போனான். எங்கே தெய்வ குற்றம் தன்மீது வந்து விழுந்துவிடுமோ என்று சற்றே பயப்படவும் செய்தான்.இருப்பினும்
" யூஜின் என்னை மன்னித்துவிடு " என்று கூறினான்.
" ஆண்டவறாகிய யேசு உன்னை இந்த பாவத்திலிருந்து விடுவிப்பாறாக. நீ உன் கடமையை நிறைவேற்றிக்கொள்" என்றான் யூஜின். எதற்கும் கலங்காத அந்த மாவீரன் மஸ்த்தூர்  கண்களில் கண்ணீர் தாரை தரையாக வழிந்தது.
" மஸ்த்தூர் ஏன் இன்னும் தாமதம்" என்றான் மன்னன் ஏட்றியன்.
": இதோ எஜமான்" என்ற மஸ்த்தூரின் நீண்ட கொடும் வாள் வானுக்கு எழும்பியது . அது ஒரே வீச்சில் யூஜினின் தலைமுதல் இடுப்புவரை இருகூறாக பிரித்தது.
   அப்போதும் யூஜினின் கண்கள் திறந்தே வானைப்பார்த்தபடியே இருந்தன. இதைப்பார்த்த மஸ்த்தூர் " யூஜின்..நீ சுத்த வீரன்" என்றான்.
மன்னன் ஏட்றியனின் ஆணைப்படி அந்த ஹெர்குலிஸ் கோயிலுக்கு வெகு தொலைவில் ஒரு பெரும் குழி தோண்டப்பட்டு அந்த ஏழு சகோதரர்களின் உடல்களும் அதனுள்ளே போடப்பட்டு புதைக்கப்பட்டன. பிற்காலத்தில் கிறிஸ்த்துவர்கள் அந்த ஏழு சகோதரர்களின் கல்லறையிலிருந்து அந்த எழு புனிதர்களின் எலும்புகளையும் எடுத்துவந்து ரோமிலிருந்து 
திவோலி நகர் செல்லும் திபுர்த்தியன் சாலையின் ஓரத்தில் ஒரு கல்லறைகட்டி அதன்மீது ஒரு தேவாலயம் கட்டினர். இன்றுவரை அந்த தேவாலயம் இருகின்றது.
               கி.பி. 138. திவோலி.
   தன் விருப்பபடியே மன்னன் ஏட்றியன் திவோலி பட்டிணத்தில் ஒரு அழகிய அரண்மனை அமைத்தான்.ஆனால் அதில் அவனால் நிம்மதியாக குடி இருக்க முடியவில்லை.  ஒருக்கால் அதில் புனிதை சிம்பரோசாவின் சாபம் இருந்ததோ என்னவோ. மன்னன் ஏட்றியனின் கடைசி நாட்க்கள் மிகவும் கொடுமையாக இருந்தன. சிம்பரோஸாவின் கடைசிமகன் யூஜினின் தீர்க்கதரிசனம் பலித்தது. மன்னர் ஏட்றியனுக்கு ஆசனவாயில் ஒரு பெரும் கட்டி வந்தது. நாளடைவில் அது பெரிதாகி இடுப்புவரை பரவி இடுப்பு இரண்டாக கிழிந்தது..
     எப்போதும் அந்த புண்ணிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டே இருந்தது. நாளடைவில் அந்த இரத்தமும் சீழுமாக வழிந்து நாற்றம் சகிக்கமுடியாதபடி இருந்ததால் யாரும் மன்னரை பார்க்கவே விரும்பவில்லை. மன்னர் அடைந்த வேதனை வார்த்தையில் சொல்ல முடியாதபடி இருந்தது. எந்த வைத்தியனாலும் மன்னரை குணப்படுத்த இயலவில்லை.
இப்படி பலகாலம் மன்னர் ஏட்றியன் பட்டபாடு அந்த கடவுளுக்குத்தான் தெரியும். இதனால் வாழ்கையில் வெறுப்புற்ற மன்னர் தற்கொலை செய்துகொள்ள பல முறை முயன்றார்.
ஆனால் முடியவில்லை. மன்னர் தன் ராஜ வைத்தியனை அழைத்து ஏதாவது விஷ மருந்தை தனக்கு கொடுத்து தன்னைக்கொல்ல வேண்டுமென பலமுறை கேட்டுக்கொண்டார். இதற்கு பயந்த ராஜ வைத்தியன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எங்கேயோ ஓடிப்போய்விட்டான். அடுத்து தன் நம்பிக்கைகுறிய வீரன் மஸ்தூரை அழைத்து,
" மஸ்த்தூர்... தயவு செய்து என்னை கொண்றுவிடு " என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு கண்களிள் கண்னீர் மல்க கெஞ்சினார். மாமன்னர் ஏட்ரியன்.
மன்னரை கொண்றால் தன்கதி என்னவாகும் என்று நன்றாக அறிந்திருந்த மஸ்த்தூர் " என் எஜமானே..எனக்கொரு சந்தர்ப்பம் தாருங்கள். ஊருக்கு வெளியே ஒரு மலை இருகிறது. அதில் சிலவகை மூலிகைகள் இருக்கின்றன. நான் அவற்றை நன்றாக அறிவேன். ஒரு முறை முயன்று பார்க்கிறேன். எனக்கு உத்திரவு கொடுங்கள் " என்றான்.
மன்னரும் உத்திரவு கொடுக்கவே அன்றே ஊரைவிட்டு வெளியேறினான் மஸ்த்தூர். அதன் பிறகு அவன் எங்கே போனான் என்று யாருக்கும் தெரியாது. ரோமர்களுக்கும் மாமன்னர் ஏட்றியனுக்கும் பயந்துபோன மஸ்த்தூர் அக்காலத்தில் அபிசீனியா என்றழைக்கப்பட எத்தியோப்பியா காடுகளில் எங்கோ ஒளிந்துகொண்டான் போலும்.
 இனிமேல் இந்த நோயோடு இந்த ரோமாபுரிபட்டிணத்தில் வாழவும் முடியாது, இந்த திவோலி அரண்மனையில் குடி இருக்கவும் முடியாது என்று உணர்ந்த மாமன்னர் ஏட்றியன் தனக்கு எந்த வாரிசும் இல்லாததால் தனக்குப்பின் அந்தோணி பயஸ் என்பவரை ரோமை ராஜ மன்னராக அறிவித்துவிட்டு தான் பதவி விலகிவிட்டார். பிறகு தனது இறுதி நாட்களை நேபிள்ஸ் நகருக்கு அருகில் உள்ள கடற்கறைபட்டிணமான பேயீ என்னுமிடத்தில் கழித்தார். தன் ராஜ பிளவை நோயை குனப்படுத்தமுடியாமல் தன் சாவை
தனக்குத்தானே வரவழைக்க எதை எதையோ தின்றார். ஆனாலும் அவருக்கு சாவு உடனே வரவே இல்லை. சிம்பரோசாவின் கடைசிமகன் யூஜின் கொடுத்த சாபம் அவரது  நினவுக்கு அடிக்கடி வந்து தொல்லைபடுத்தியது. இரவும் பகலும் இந்த நோயின் வேதனை தாங்காமல் கத்திக்கொண்டே இருந்தார்.     எப்படியோ ஒருநாள் அதாவது ஜூலை பத்தாம்  நாள் கி.பி. 138 அன்று தன்னுடைய 62 ஆம் வயதில் இயற்கை எய்தினார். சாகும் முன்னர் அவர் எழுதிவைத்த ஒரு வாக்கியம்," ஒரு ரோமைய மாமன்னனை இந்த வைத்தியர்கள் வைத்தியம் பார்த்தே கொண்றுவிட்டார்கள்."
        வாழ்க்கை எப்படியோ மரணமும் அப்படியே என்பது ஒரு கிறிஸ்த்துவ பழ மொழி. அதன்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பேரை ரத்த வெறியோடு கொண்ற மன்னன் ரத்தப்பெருக்கு நோயாலேயே செத்தான். பேய்த்தனமாக வாழ்ந்தவனுக்கு மரணமும் பேய் என்னும் ஊரிலேயே வந்தது.
இறந்த மா மன்னர் ஏட்றியனை அங்கிருந்த புத்தியோல்லி என்னுமிடத்தில் புதைத்து பின்னர் அவரது எரியூட்டப்பட்ட சாம்பலை அவரது மனைவி விவியா சபினாவின் சாம்பலுடன்ன் கலந்து ரோமுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் திவோலியில் அவர் கட்டிய அரண்மனையின் உச்சியில் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டது.  அங்கு மன்னர் ஏட்ரியனின் அந்த சாம்பல் நிறைந்திருந்த பாத்திரமும் வெகு காலம் நிலைத்து நிற்க முடியவில்லை.
மன்னர் ஏட்றியன் கட்டிய இந்த அரண்மனையும் ராசி இல்லாததாக ஆனது. அது ஏட்றியனின் காலத்திற்குப்பிறகு ரோமையை ஆண்ட பல மன்னர்களின் கல்லறையாகவும்  நினைவு மண்டபமாகவும் ஆனது. இந்த் அரண்மனை முற்றத்தில் பல கொலை குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றும் இடமாகவும் ஆனது. சிம்பரோஸா கூறிய  தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறின.
     கி.பி. 590ல் இந்த நகரை பிளேக் நோய் தாக்கியபோது அதிதூதர் மிக்கேல் சம்மனசானவர் இந்த அரண்மனைமீது தன்னுடைய வாளை உறுவியபடி காட்ச்சி கொடுத்ததாக ஒரு வரலாறு உண்டு. அதிதூதர் மிக்கேல் சம்மனசானவரின் காட்ச்சி தோன்றியவுடன் பிளேக் நோய் உடனே நின்றது. அதற்குப்பின்னர் இந்த அரண்மனை பாப்பானவர்களின்
கோட்டையாக மாறியதால் இந்த கோட்டையின் உச்சியில் இருந்த ஏட்றியனின் சாம்பல் நிறைந்த பாத்திரம் கீழே இறக்கப்பட்டு அதற்குப்பதில் அதிதூதராகிய மிக்கேல் சம்மனசானவரின் சிலை அவர் தன் வாளை உறுவிய வண்ணம் நிற்கவைக்கபட்டுள்ளது.
கி.பி.752 ல் சிம்பரோஸாவின் ஆண்குழந்தைகள் ஏழு பேர்களின் எலும்புகளும், அவரது கணவர் கேஸ்த்துலுஸ் எலும்புகளும் , சிம்பரோஸாவின் எலும்புகளும் தோண்டி  எடுக்கப்பட்டு ரோமுக்கு கொண்டு வரப்பட்டு தூய ஆஞ்சலோ தேவாலயத்தில் ஒரு சலவைகல் பெட்டியில் வைக்கட்டது. அது கி.பி.1587 ஆம் ஆண்டு வரை அங்கே இருந்ததாக  ஒரு சரித்திரம் கூறுகின்றது. மேலும் இந்த தேவாலயம் பல காலங்களுக்குப்பிறகு மிகவும் சிதிலமாகிப்போய் அதிலிருந்த புனித சிம்பரோசாவின் குடும்பத்தினர்களின் அருளிக்கம் அனைத்தும் எங்கே கொண்டுபோய் வைக்கப்பட்டன என்ற விபரம் தெரியாமல் போய்விட்டது.
   இந்த வீரத்தாய் புனித சிம்பரோசாவின் பக்தி முயற்சி மேலை நாடுகளுக்கு பரப்ப  அவர்களது அருளிக்கம் அனைத்தும் எடுத்துசெல்லப்பட்டன என்றும் சிம்பரோஸாவின் குடும்ப அருளிக்கம் சில இந்தியாவுக்கும் யேசு சபை பாதிரியார்களிடம் [ ஜூன் 25. 1572 ஆம்
ஆண்டு] கொடுத்து அனுப்பபட்டாதாகவும் ஒரு சரித்திரம் கூறுகின்றது. இருப்பினும் புனித பிலோமினாம்மாள் சரித்திரம் போன்று நம் புனிதை வீரத்தாய் சிம்பரோசாவின் புனிதர் பற்றிய சரித்திரம் தகுந்த ஆதாரம் இல்லை என ரோமன் கத்தோலிக்க திருச்சபை அவர்களது புனிதர் பற்றிய அட்டவணையிலிருந்து அவரது பெயரை நீக்கியது ஒரு வருத்தமான செய்தியாகும். ஆனாலும் அக்கால முறைப்படி அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது கொடுத்ததுதான் என்றும் அவரது பக்தி முயற்சிக்கு தடை எதுவும் இல்லை  எனவும் ஒரு செய்தி உள்ளது. எது எப்படி இருப்பினும் புனித சிம்பரோஸா இப்போதும் திவோலி நகர பாதுகாவலியாகவே இருகின்றார் என்பது அந்த திவோலி பங்கு மக்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.
புனித சிம்பரோஸாவே எங்களுக்காக வேண்டிகொள்ளும். ஆமென்.
























































No comments:

Post a Comment