Sunday, August 5, 2018

“ இரண்டு ஏதேன் தோட்டங்கள். ”



             “ இரண்டு ஏதேன் தோட்டங்கள். ”
       கிறிஸ்த்து பிறந்த வருடம்:. அந்த அமைதி பொழியும் இரவில் இந்த உலகத்தையும் ஈரேழு லோகங்களையும், அண்ட சராசரங்களையும் …” உண்டாகுக” என்னும் ஒரே வார்த்தையில் படைத்த சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரமாக ஒரு குழந்தையாக அந்த பெத்லஹேமின் மாட்டுக்குடிலில் அவதரித்திருந்தார். வானோர்களின் பாடல்களால் சாமக்காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பிறந்திருக்கும் உலக இரட்ச்சகரை தரிசிக்க வந்திருந்தனர்.
இன்னும் யார் யாரோ வந்திருந்தனர். ஆனால் வந்திருந்தவர்களில் முக்கியமானவர்கள் கீழ்த்திசை நாடுகளை சேர்ந்த கஸ்பார் என்னும் கந்தப்ப ராசாவும் ( இவருடைய நாடு இந்தியாவில் தமிழ் நாடு ) மெல்கியோர் மற்றும் பல்த்தசார் ஆகியோரும் ஆவர். இவர்களில் வயதில் மூத்தவராகிய கந்தப்ப ராசா என்னும் கஸ்பார் ஓபீரின் சுத்த தங்க நாணயங்களைக்கொண்டு வந்திருந்தார். மற்றவர்கள் மிகவும் அரிதான மூலிகைகளையும் கடவுளுக்கே உறித்தான அபிசீனிய சாம்பிராணிகளையும் கொண்டு வந்திருந்தனர். தங்கம் அரசருக்கே உறித்தானது. சாம்பிராணி கடவுளுக்கு உறித்தானது. மிகவும் விஷேஷமாக இதன் சில சேர்மங்களைக்கொண்டு ரகசியமான முறையில் தயாரிக்கப்பட்ட தூபங்களையே மன்னர் சாலமோனும் அவருக்கு பின் வழிவந்தவர்களும்  ஜெருசலேம் தேவாலயத்தில் கடவுளுக்கு ஆராதனையாக காட்டினார்கள்.( மிகவும் அரிதான மூலிகைகளை உபயோகித்தே யேசு நாதரின்அடக்கமும் நிறைவேற்றப்பட்டது.)
 தோபித்து ஆகமம். 13..13 கூறுகிறது.   “ உலகின் எல்லைவரை உம் பேரொளி சுடர்க. தொலைவிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும். உலகின் எல்லா எல்லைகளிடமிருந்தும் மக்கள் உமது திருப்பெயர் விளங்கும் இடதிற்கு வருவார்கள். விண்ணக வேந்தருக்கு தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள். எல்லா தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும். தெரிந்துகொள்ளப்பட்ட  நகரின் பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.”
  வார்த்தையாகிய தேவசுதனின் மனிதாவதாரத்தைக்கண்டு அவரை சாஸ்டாங்கமாக விழுந்து ஆராதித்து தாம் கொண்டு வந்திருந்த அன்பளிப்புகள் அனைத்தையும் மாதாவிடம் சமர்ப்பித்தனர். பிறகு தேவத்தாயாருக்கும் குழந்தை யேசுவுக்கும் வாழ்த்துகள் பல சொல்லியும் அவர்களிடம் ஆசீர்வாதங்கள் பல பெற்றுக்கொண்டும் தத்தம் தாய்நாடு திரும்பினர்.
 இந்த சரித்திர நிகழ்வு நடந்து சரியாக 32 வருடங்களுக்குப்பிறகு…. இயேசுநாதரும் அவருடைய சீடர்களும் சாக்கடலின் பகுதிகளில் நடந்து வருகின்றார்கள். அப்போது தீவிரவாதி எனப்பட்ட சீமோன் “ ஆண்டவரே இந்த பகுதிகள் எல்லாம் எனக்கு மிகவும் நன்றாகத்தெரியும். எனக்கு தொழு நோய் கண்டிருந்த போது மக்களின் பார்வையினின்று விலகி நான் இந்தப் பகுதியில்தான் வாழ்ந்து வந்தேன். இந்தபகுதியில் எங்கெங்கு குடிக்கும் நீர் கிடைக்கும், சாப்பிட தேன் எங்கு கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். தேவரீருடைய கிருபையால் நான் நலம் பெற்று உம் சீடர்களில் ஒருவனாக நான் உயர்த்தப்பட்டது அடியேன் செய்த பெரும் பாக்கியம் “ என்றார். அப்போது யூதாஸ் “ஆண்டவரே இந்த உப்புக்கடல் ஏன் இவ்வளவு அசுத்தமாகிப்போயிற்று. கடவுள் இதை படைக்கும்போதே இப்படித்தான் படைத்தாரா?” என்றான்.
   இல்லை யூதாஸ். கடவுள் இதைப்படைக்கும்போது எல்லாம் நன்றாகத்தான் படைத்தார். மிக்க அழகுள்ளதாகத்தான் படைத்தார். ஒரு காலத்தில் ஏதேன் தோட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இடம்தான் சரியான உதாரணம் என்பதுபோல் அழகிய தோட்டங்களும் ஆங்காங்கே நீறூற்றுகளும் பசும் புல்வெளிகளும் அழகான ஒரு பட்டிணமாய் இருந்ததுதான் இந்த சாக்கடல். காலப்போக்கில் மனிதன் பாவத்தில் மூழ்கித்திளைத்தபோது எல்லாம் தலை கீழாக மாறிப்போயின. இந்த உலகின் ஐம்பூதங்களும் இந்த இடத்தில் வெறியாட்டம் போட்டன. தேவகோபம் இந்த இடத்தில் இறங்கியதால் பூமி பிளந்து பாதாளம் வெளிப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய எண்னணகீள்கள் தீப்பற்றி எரியத்துவங்கின. நீர் நெருப்பு காற்று இடி மின்னல் என அனைத்து சத்துவங்களும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு இங்கே தங்களின் வெறியாட்டத்தை நடத்தியதால் இந்த இடம் பெரும் பள்ளமாகவே மாறிவிட்டது. ஏதேன் தோட்டத்திலிருந்து பாய்ந்து வந்திருந்த நதி இப்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தது விட்டது.. இப்போது வரும் ஜோர்தான் நதி இதில் வந்து முடிகிறது. இந்த சாக்கடலில் விழும் எந்த நீரும் மேலே ஆவியாகிப்போய்விடுவதால் இங்குள்ள நீர் எப்போதும் உப்பு நிறைந்ததாகவே இருக்கும். மேலும் இந்த ஜோர்தான் நதி நீர் இங்கு விழும் அளவைவிட இந்த ஏரியிலிருந்து சூரிய வெப்பத்தால் ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இந்த ஏரி எப்போதும் நிரம்புவதே இல்லை. எனவே அதன் உப்புத்தன்மை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருகின்றது.” என்றார்.
    “ ஆஹா ஆண்டவரே … அப்படியானால் இங்குள்ள அனைத்து நீரையும் வெளியேற்ற முடிந்தால் அடியில் தங்கியுள்ள அந்த பழைய நகரத்தை மீண்டும் காண முடியுமா?” என்றான் யூதாஸ்.
“நான் உனக்கு வாக்களிக்கிறேன் யூதாஸ். எந்தக்காலத்திலாவது மனிதன் இங்குள்ள நீர் அனைத்தையும் வெளியேற்றினால் ஆதாம் ஏவாள் காலம் துவங்கி ஒரு நூற்றாண்டுக்குப்பின்னர் இங்கே மக்கள் வாழ்ந்த பட்டிணங்களின் அடையாளத்தை நிச்சயம் பார்க்கலாம். இங்குள்ள உப்பும் சுண்ணாம்புச்சத்தும் ஜோர்தான் நதியின் மணல்களும் இந்த பட்டிணத்தின் வீடுகளின் மீது அடுக்குகளாகப்போர்த்தி வைத்திருப்பதால் அவை அழியாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன.” என்றார் இயேசுநாதர்.“ ஆண்டவரே இந்த இடம் ஏதொ ஒரு நீதி அல்லது படிப்பினையை கற்பிப்பது போல் இல்லையா?’” என்றார் இராயப்பர்.
“ ஆம். உண்மைதான் இராயப்பா..இந்த உலகில் எத்தனையோ கடல்கள் இருந்தாலும் கடவுள் தாம் வசிப்பதற்க்கு ஏற்ற இடமாக இந்த கலிலேயாக்கடலைத்தான் தெரிந்துகொண்டார். காரணம் இல்லாமல் இல்லை. இந்த கலிலேயாக்கடலின் நீர் ஆதாரம் அதன் வடக்கே உள்ள பனிமேகம் சூழ்ந்த உயர்ந்த ஹெர்மாஸ் மலை. அதிலிருந்து இறங்கிவரும் நீர் கலிலேயாக்கடலில் கலக்கிறது. பின் அதன் வெளியேற்றமாக ஜோர்தான் நதி இறங்கிவருகின்றது. அது பாலஸ்தீனம் ஜோர்டான் நாடுகளுக்குள் பாய்ந்து அவற்றை வளமாக்கியபின் இங்கே சாக்கடலில் அசுத்த நீராக விழுகின்றது. அதில் விழுந்த நீர் அனைத்தும் சாக்கடலால் விழுங்கப்பட்டுவிடும். இதை எதற்க்கு ஒப்பிடலாம் என்றால் மோட்ச்சத்தில் கடவுள் படைத்த ஆன்மா இந்த உலகில் புதிதாய் பிறக்கும் ஒரு குழந்தையின் உடலில் செலுத்துவது போல ஹெர்மாஸ் மலையில் உருவாகும் நீர் பரிசுத்தமான புதிதாய் பிறந்த குழந்தையின் ஆன்மா போல கலிலேயாக்கடலில் கலக்கிறது. அது ஜோர்தான் நதிபோல அங்கிருந்து வெளியேறுகிறது. பல இடங்களில் அது பயணித்து அந்த இடங்களை வளமாக்கிய பிறகு வெற்று நீராக அது சாக்கடலில் விழுகின்றது. புதிதாக பிறந்த குழந்தை வளர்ந்து ஆளாகி பாவி ஆகி சபிக்கப்பட்டவனாகி பாதாளம் என்னும் நரகத்திற்குள் மூழ்குகின்றது.” என்றார் இயேசுநாதர்.
 அப்படியானால் ஆண்டவரே மனிதனுக்கு விமோச்சனமே இல்லையா “ என்றார் இராயப்பர்.
ஏன் இல்லை இராயப்பா. அதற்காகத்தானே நான் வந்திருகிறேன்.ஆண்டவரே உம்மில் நான் என் நம்பிக்கையை வைக்கிறேன். உம்மை நான் அன்பு செய்கிறேன். என்னை காத்து இரட்ச்சியும் என்று என்னை நோக்கி மன்றாடுபவர்களை நான் இரட்ச்சிக்கிறேன். நீ கலிலேயாக்கடலில் மூழ்கும்போது ஆண்டவரே என்னை காப்பாற்று என்று என்னை நோக்கி நீ கதறவில்லையா அப்படித்தான் இதுவும். உன் சம்மதம் இல்லாமல் உன்னைப்படைத்த உன் ஆண்டவருக்கு  உன் சம்மதம் இல்லாமல் உன்னை மீட்கவும் முடியாது. பாவத்தால் மூடிக்கொண்ட உன் இதயக்கதவுகளை நீயாகத்திறந்தால் அன்றி உன்னைப்படைத்த கடவுளால்கூட உன் இதயத்தில் பிரவேசிக்க இயலாது. நீயாக உன் உள்ளார்ந்த அன்பினால் என்னை அழைக்கும்போது உன் இல்லத்திலும் உன் உள்ளத்திலும் நாம் பிரவேசிக்க முடியும். ஆனாலும் ஒன்று நிச்சயம். இன்று மனிதனோ மிருகமோ அல்லது ஊர்வன பறப்பன ஆகிய எதுவுமோ வாழ முடியாத இந்த சாக்கடலும்கூட ஒரு காலத்தில் மாறிப்போகும். மேற்கூறிய அனைத்தும் வாழக்கூடிய தகுதி பெற்று செழிப்பான இடமாக மாறிப்போகும். இப்படித்தான் மனிதனுடைய வாழ்க்கையும். நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் அவரவர் மனமாற்றத்தை பொறுத்ததே. அதுசரி நீ ஏன் சோகமாக இருகின்றாய் யூதாஸ்? உனக்கு ஏதாவது புறிந்ததா ” என்றார் இயேசுநாதர்.” புறிந்தது ஆண்டவரே ”. என்றான் யூதாஸ். பிறகு இந்தப்பேச்சை மாற்ற விரும்பி “ ஆண்டவரே நடந்து நடந்து எனக்கு கால்கள் வலிக்கிறது. எங்காவது நல்ல இடமாகப்பார்த்து தங்கினால் நன்றாக இருக்கும்” என்றான். “ சரி… இன்னும் அழியாமல் கடவுள் காப்பாற்றி வைத்துள்ள  சின்ன ஏதேன் தோட்டத்திற்கு செல்லலாம். வாருங்கள். அங்கே எனக்காக மூன்று ஜீவன்கள்  காத்துக்கொண்டிருகின்றார்கள்.” என்றார் இயேசுநாதர்.
 சின்ன ஏதேன் எனப்படும் எங்கேடி பட்டிணம்.
“ கடவுள் படைத்த ஏதேன் என்னும் சிங்கார வனம் இப்படித்தான் இருந்திருக்குமோ. ஆதாமும் ஏவாளும் இப்படிப்பட்ட தோட்டத்திலா வாழ்ந்தார்கள். அடடா … என்ன அழகு என்ன அழகு… இதன் உயர்ந்த மலைகளும் அதினின்று பொங்கி வழியும் நீர் வீழ்ச்சிகளும் எங்கும் பசுமையான பேரீச்சம் பழ சோலைகளும் திராட்சை பழ தோட்டங்களும் பூங்காக்களும் அடடா…இங்குள்ள மூலிகைகளும் வாசனை மரப்பிசின்களும் மனிதனின் சிந்தைகளை மயக்குவனவாக உள்ளன. இங்குள்ள மலை ஆடுகளும் நீண்ட கொம்பு உள்ள மான்களும் குரங்குகளும் அவற்றின் கூச்சல்களும் வண்டுகளும் அவற்றின் ரீங்காரமும் அழகிய பறவைகளும் அவற்றின் பாடல்களும் பாடலுக்கேற்ற தாளம்போல் அங்கு குதித்தாடும் நீர்  வீழ்ச்சிகளும் அடடா… எவ்வளவு பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் அதிசய உலகம் இது.
மாமன்னர் சாலமோன் காலத்தில் அவர் தம் கருமை நிற காதல் அழகி எத்தியொப்பாவின் ஷெபா நாட்டு இளவரசியை மணமுடித்த பின்னர் இங்கேதான் தன்னுடைய வசந்த காலத்தை கழித்தார். இந்த இடத்தின் அழகை தன் மனைவியின் அழகோடு ஒப்பிட்டு அவர் பாடிய பாடல்கள்தான் உன்னத சங்கீதம் எனப்படுகின்றது.
 “ ஆம். கடவுள் படைத்திருந்த ஏதேன் தோட்டம் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாதிருந்தது. ஆனாலும் அதன் அழகையும் மகிமையும் மனிதன் ஒரு அளவுக்காவது புறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இந்த எங்கேடியை விட்டு வைத்திருக்கின்றார். வாருங்கள் இங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு உணவு உண்டபின் ஊருக்குள் செல்வோம்” என்றார. இந்த நீர் வீழ்ச்சி இன்றளவும் இருகின்றது. தாவீதின் நீர் வீழ்ச்சி என்று இதற்குப்பெயர். இதைப்போல இன்னும் இரண்டு நீர் வீழ்ச்சிகள் சற்று தள்ளி தள்ளி இருகின்றன.
 இந்த தாவீது நீர் வீழ்ச்சியின் அருகில்தான் தாவீது அரசர் சவுல் மன்னருக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்தார்.. மேலும் இந்த உயர்ந்த மலைமேல் பல விதமான குகைகள் `பல இடங்களில் உள்ளன. தற்காப்புக்காக இந்த குகைகளில் அவர் அடிக்கடி தன் வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டிருப்பார். இந்த குகைகளுக்கு மேல் ஏறிசெல்வது மிகவும் கடினமான காரியம். அவர் தினமும்  பல தடவைகள் இந்த குகைகளுக்கு ஏறிச்செல்ல வேண்டியிருந்ததால் அவர் எவ்வளவு வலு உள்ளவராக இருந்திருக்க வேண்டும். ஒருமுறை சவுல் மன்னர் இந்த குகை ஒன்றில் தன் படைவீரர்களுடன் தங்கியிருந்த போது தாவீது யாரும் அறியாமல் அந்த குகையினுள் பிரவேசித்து சவுல் மன்னருடைய ஆடையின் விளிம்பை கத்தரித்து எடுத்துக்கொண்டு அவரது தண்ணீர் குவளையும் எடுத்துவந்தார். இது அவரது வீரத்தையும் தைரியத்தையும் எடுத்துரைக்கின்றது. இந்த நீர் வீழ்ச்சியிலிருந்து சில கிமி தூரம் பயணித்தால் பழைய எங்கெடி பட்டிணம் வரும்.
     இயேசுநாதர் தன் சீடர்களுடன் இந்த எங்கேடிப்பட்டிணத்திற்குள் பிரவேசித்தார் .மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடிவிட்டது. அங்கிருந்த ஒரு தேவாலயத்தினுள் இயேசு நாதர் பிரவேசிக்க அந்த தேவாலயத்தின் குருவானவர் அபிரஹாம் அவரை வரவேற்றார்.( இந்த தேவாலயத்தின் இடிபாடுகள் இன்றளவும் உள்ளன. அவற்றுள் ஒரு அழகிய சிக்கலான ஒரு மொசைக் தரையும் நல்ல நிலையில் உள்ளது. இந்த தேவாலயம் நிச்சயமாக யேசுநாதர் போதித்த தேவாலயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இது முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூறாண்டிரற்குள் இருக்கலாம் என்று தொல்லியல் துறை கூறுகின்றது.)
.” ஆவலுடன் நான் ஆண்டவருக்காக காத்திருந்தேன் அவரும் என்னை கனிவாக கண்ணோக்கினர். என் ஆண்டவரே உமது யோசனைகளில் உமக்கு சமமானவன் ஒருவனுமில்லை.  நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. ஆனால் என் செவிகளை திறந்துள்ளீர்.. மஹா சபையில் உம்மைக்குறித்து எப்போதும் பிரசங்கித்தேன். உமது பிரமாணிக்கத்தையும் இரட்சண்ய கிருபையும் பற்றி பேசினேன். ஆண்டவரே உமது கிருபைகளை என்னைவிட்டு அகற்றி விடாதேயும் என்னும் சில தாவீதரசரின் சங்கீதங்களை பாடி அவர் இயேசுநாதரை வரவேற்றார். பிறகு,” ஆண்டவரே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எம் முன்னோர் பலர் உம்மை தரிசிக்க விரும்பியும் அவர்களாள் உம்மை காண முடியவில்லை. பூர்வீகத்தில்  எம்பிதாப்பிதாக்கள் அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு  ஆகியோர் கூட உம்மை  பார்க்க முடியவிலை ஆனால் நாங்கள் வாழும் இக்காலத்தில் நீர் வந்திருகின்றீர். ஆகவே நானும் இந்த எங்கேடி வாசிகளும் பேறு பெற்றோம். நான் என் மெசியாவை கண்டுகொண்டேன். நீர் என்னை இப்போதே வந்துவிடு என்று கூப்பிட்டாலும் நான் உடனே வந்துவிட சித்தமாயிருகின்றேன்” என்று கூறி அழுதார்.  அங்குள்ள  மக்கள் அந்த வயதான குருவை யேசுவுக்கு அறிமுகம் செய்துவைத்தனர்.
   இயேசு நாதர் அவரை அனைத்துகொண்டு,”சர்வேசுரனுடைய நீதியுள்ள முதிய ஊழியருக்கு சமாதானம்“என்றார். பிறகு“உங்களைப்பற்றிக்கூறுங்கள்.” என்றார். அந்த முதியவர்  பெரும் உணர்ச்சிப்பிழம்பால் தத்தளிக்க அங்கிருந்த மக்கள் அவரைபற்றி கூறினர். அவர் பெயர் அபிரஹாம் எனவும் அவரது மனைவியின் பெயர் கொலம்பா என்றும் அவரது மகள் எலிசா என்றும் அவரது மகன் எலிஷா என்றும் அவர்களுடடைய மகள் சில குழந்தைகளை பெற்ற பிறகு இறந்துவிட்டாள் என்றும் அவரது மகன் பத்துவயதாக இருக்கும்போதே எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் இத்தனை துன்பங்களௌம் போதாது என்பதுபோல் தங்கள் பேரக்குழந்தைகளும் தங்களோடு வைத்து பராமரிப்பது அவர்களுடைய வாழ்க்கையை மிகவும் சோகத்துக்கு உள்ளாக்கியது என்றும் இந்த  துன்பங்களுக்கு மேலும் துன்பம் சேர்ப்பதாக அவள் தன் கண்களையும்  இழந்ததாகவும் அனைத்துக்கும் மேலாக இந்த துன்பங்களை தாங்க முடியாமல் அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும் இத்தனை நிலைகளிலும் அவர் கடவுளின் மீதுள்ள விசுவாசத்தினால் இங்குள்ள தேவாலயத்தில் குருவாக இருப்பதாலும் நாங்கள் அவருடைய முன்மாதிரிகையை கண்டு பாவித்து அவரது பிரசங்கங்களை கேட்டு மகிழ்வதால் வரப்போகும் மெசியாவை அவருடன்  நாங்களும் தரிசிக்க  வேண்டும் என்னும் ஆவலால் உம்மைக்காண வந்தோம் என்றும் கூறினர்.
            இயேசுநாதர் மிகுந்த சந்தோஷப்பட்டு விசுவாசத்தைப்பற்றிய ஒரு நீண்ட பிரசங்கத்தை ஆரம்பித்தார். அப்போது அந்த முதியவர்,” ஆண்டவரே உம்முடைய  போதனையை கேட்க என் மனவி கொலம்பாவுக்கு அருள் செய்ய மாட்டீரா?” என்று கேட்டார். அதற்கு இயேசுநாதர்,” தந்தையே… விசுவாசத்தோடு கேட்கப்படும் எந்த மன்றாட்டுக்கும் கர்த்தர் மும்மடங்காக சம்பாவணை அளிப்பார் என்பதை நீர் முதலில் நம்ப வேண்டும்” என்றார். பிறகு “ தந்தையே  இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் நீர் என்ன விசுவாசிப்பதன் காரணம் என்ன?” என்றார். அதற்கு அந்த முதியவர்,” ஆண்டவர் நீரே நான் விசுவாசிக்கும் மெசியா என்பதை முப்பது வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்தேன். அப்போது எனக்கு வயது ஐம்பது. என் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. என் மகனுக்கு பத்துவயது. என்மனைவி கொலம்பா மிக்க அழகுள்ளவளாயும் நல்ல ஆரோக்கியமானவளாகவும் இருந்தாள். கொலம்பாவின் தாய்வழி சீதனமாகிய திராட்ச்சை தோட்டத்தில் வேலை செய்ய நான் என் மகன் எலிஷாவுடன் சென்றிருந்தேன். நீண்ட நேரம் வேலை செய்திருந்ததால் மிகவும் களைப்புற்றிருந்தபோது மாலையில் ஒரு பெரும் வாணிபர்கூட்டம் என் திராட்ச்சை தோட்டத்திற்குள் புகுந்தது.
   அவர்களுள் தலைவர் என்னிடம் வந்து,” ஐயா… நாங்கள் இந்த இரவு இங்கே தங்க வேண்டும் கூடாரம் அடிக்க இடம் தருவீர்களா? என்றார். அதற்கு நான் ,” ஐயா… ஊருக்குள் தங்குமிடங்கள் உள்ளன.” என்றேன். அவர்கள்,” இல்லை முடியாது நாங்கள் ஏரோது மன்னரால் தேடப்படுகின்றோம்.. நாங்கள் எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவோம். அவன் விரும்பினால் நாங்கள் எந்த இடத்திலும் வெட்டிக்கொலை செய்யப்படலாம். அது சாலையாக இருக்கலாம். அல்லது தோட்டமாக இருக்கலாம்.அவன் இராஜ்ஜியத்தில் எங்கு வேண்டுமானாலும் இது சாத்தியமாகக்கூடும்.
இந்த இடம் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளதால் நாங்கள் இங்கே தங்க விரும்புகின்றோம். எங்களால் உங்களுக்கு ஏதேனும் நஷ்ட்டம் ஏற்பட்டால் அதற்கு நஸ்டஈடும் கட்டணம் ஏதும் உண்டானால் அதையும் தருவோம் “ என்றார். அதற்கு நான்,” ஐய்யா. எங்களுக்கு கட்டணமோ நஷ்ட ஈடோ எதுவும் தேவை இல்லை. முதலில் நீர் அனைவரும் யார்?. பெரிய ஏரோது ஏன் உங்களைத்தேடுகின்றார். அவருக்கு எதிராக நீங்கள் செய்த குற்றம் என்ன? என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்” என்றேன்.
 அதற்கு அந்த முதலானோர் கூறியது. “ என் பெயர் கந்தப்பராசா எனப்படும் கஸ்பார். நான் தென் இந்தியாவில் தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவர் பல்த்தசார். இவர் மெசப்பதோமியாவில் பெர்சியாவையும், மெல்கியோர் அரேபியாவையும் சேர்ந்தவர்கள். நாங்கள் அரசர்கள் ஆயினும் வான சாஸ்த்திரிகளும் கூட. வானில் தெரிந்த வின்மீனைக்கண்டு அது உலகை ஆளப்போகும் மாபெரும் பேரரசர் பிறந்துள்ளார் எனக்கண்டு அவரை ஆராதிக்க அந்த வின்மீன் வழிகாட்டியபடி மூவரும் சேர்ந்து ஜெருசலேம் வந்தோம். ஜெருசலேம் மன்னர் பெரிய ஏறோதை சந்தித்து,” உலகையே ஆளப்போகின்ற அந்த குழந்தை எங்கே பிறந்துள்ளது” என்று கேட்டோம். ஆனால் அவர் எங்களை ,” நீங்கள் அவரை கண்டு பிடித்து ஆராதித்த பின்னர் என்னிடம் வந்து சொல்லுங்கள். நானும் அவரை பார்த்து  ஆராதிப்பேன் “ என்றான். ஆனால்  மன்னர் ஏறோதுக்கு அந்த குழந்தையை பிடிக்க வில்லை. தனக்கு போட்டியாக வந்த குழந்தையை கொல்ல நினைத்தான். எங்களை தந்திரமாக அனுப்பிவிட்டு அந்த குழந்தையை கொல்ல நினைத்தான்.
ஆனால் நாங்கள் கடவுளின் கிருபையால் அந்த குழந்தையை பெத்லஹேமில் கண்டு ஆராதித்தோம். நாங்கள் கொண்டு வந்திருந்த அன்பளிப்புகளை அவரது சார்பாக அவரது திருத்தாயார் தேவமாதாவிடம் சமர்ப்பித்து அவர்களிடம் ஆசீர்பெற்று திரும்பும் வேளையில் சம்மனசானவர் ஒருவர் எங்களிடம் அடுத்து நடக்கப்போவதைப்பற்றி பேசினார். அவர் ஏறோதின்  மனதில் குழந்தையை கொல்ல வேண்டும் என்னும் சதித்திட்டம் பற்றியும் இதிலிருந்து  தப்பிச்செல்லும் வழியையும் கூறியனார். அதன்படியே நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்றனர்.
நான் அவர்களிடம்,” ஐய்யா… இந்த எங்கேடி  பட்டிணம் பேறுபெற்றது. எங்கோ தொலைவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக்கடந்து வந்திருந்து எம் பெருமான் மெசியாவை கண்டு ஆராதித்த பேறு பெற்றவர்களை இந்த பட்டிணம் வரவேற்கிறது. என்னாலோ என் மகனினாலோ உம்மைப்பற்றிய எந்த தகவலையும் நாங்கள் வேறு யாவருக்கும் தெரியப்படுத்த மாட்டோம். இது என் மெசியாவின் மீது ஆணை” என்று வாக்கு கொடுத்தோம். அந்த நேரம் முதல் எனக்கும் பெத்லஹேம் சென்று உம்மை ஆராதிக்க வேண்டும் என்னும் ஆசை எழுந்தது.  என் ஆசைகளை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். ஆனால் அந்த முதிய அரசர் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்த திவ்ய குழந்தையை பற்றிய எந்த தகவலையும் அவர் எங்களிடம் கூறவில்ல. அது குழந்தை இயேசுவின் உயிருக்கு உலை வைத்ததாக ஆகிவிடும் என்பதால் அவர் மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல. அடுத்து நடக்கப்போகும் சில பயங்கரங்களைப்பற்றியும் கூறினார். ஜெருசலேமிலும் யூதேயா மற்றும் சமாரியா எங்கும் ஏறோதின் ஆதிக்கத்துக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் யேசுவின் நிமித்தம் அனேக குழந்தைகள் வெட்டி கொல்லப்படுவார்கள் என்றும் பெரும் கலவரம் நடக்கப்போகின்றதென்றும் அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினார். ஆகவே இந்த நேரத்தில் நான் அங்கு செல்வது பெரும் ஆபத்தில் முடியும். என்னப்பற்றி விசாரிக்கும் பட்சத்தில் நீர் ஏதாவது உளரிக்கொட்டினால் அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இந்த அழகிய எங்கேடி பட்டிண வாசிகளுக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்பதால் இயேசுவைப்பற்றிய எந்த தகவலையும் அவர் என்னிடம் கூறவில்லை. ஆகவே  நாங்கள் இங்கே வந்து தங்கியதுபற்றி யாரேனும் விசாரித்தால் இந்த அழகிய சின்ன ஏதேன் எனப்படும் எங்கேடிப்பட்டிணத்தை பார்க்க சில வியாபாரிகள் வந்து போனதாக மட்டும் கூறிவிடு” என்றார்.
ஆனால் எங்களுக்கு ஒன்று மட்டும் உறுதியாக கூறினார். மெசியாவை காணவேண்டும் என்னும் உம் ஆசை நிறைவேற்றப்படும். நீயாகப்போய் அவரை சந்திக்க வேண்டாம் . மாறாக ஒரு நாள் அவராகவே உம்மை சந்திக்க வருவார் என்னும் உறுதிதான் அது. நானும் அந்த நாளுக்காகத்தான் விசுவாசத்துடனே காத்து வந்திருகின்றேன். அந்த நாள் இந்த நாள் தான் என்றும் நான் சந்திக்க விரும்பிய மெசியா நீர் தாம் என்றும் நான் நிச்சயமாக விசுவாசிகிறேன்.” என்றார் அவர்.
    யேசுநாதர் புன்னகைத்து தம் போதனையை ஆரம்பித்தார்.” விசுவாசத்தின் பலன் மிகப்பெரியது. கடவுள் இருகின்றார் என்பதை விசுவாசிப்பதிலிருந்து விசுவாசப்பிரமாணம் துவங்குகிறது. ஆதாம் பாவியாக இருந்தாலும் கடவுள் இருகின்றார்… அவரே நம்மை சிருஸ்டித்தார்… நான் அவரை கண்டிருக்கின்றன். அவரை நான் முழுதாக அறிந்திருகின்றேன் என்ற விசுவாச சத்தியம் அவரிடமிருந்து நமக்கு கிடைத்த பரம்பரை சொத்தாக இருகின்றது. தந்தை அபிரஹாம் விசுவாசித்ததினால் அவர் அடைந்த பேறுகள் எத்துணை.. அவைகள் எப்பேர்பட்ட மகிமையானவை என்பதை நீங்கள் அறிந்திருகின்றீர்கள் என்று ஆரம்பித்து வேதாகமத்தில் பல சரித்திர நிகழ்வுகளை அவர் தெரியப்படுத்தினார்  இறுதியாக விசுவாசத்தை தம்முள் உறுதியாக பற்றிக்கொண்டிருப்பவன் ஜீவியத்திற்கான வழியை தன்னகத்தே கொண்டிருகின்றான். ஆகவே  துன்பப்படுகின்றவர்கள் என்னிடம் வாருங்கள். ஜீவியத்தை விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்.  எவ்வித பயமுமின்றி என்னிடம் வாருங்கள். ஏனென்றால் நானே இரக்கமும் நேசமுமாக இருக்கின்றேன்.” என்றார்.
     அப்போது கூட்டத்திலிருந்த ஒரு வயோதிக ஸ்த்ரீ,”ஆண்டவரே…நீரும் உம்மை அனுப்பினவருமானவரும் ஸ்தோத்தரிக்கப்படுவீர்களாக. உம்மை சுமந்த திருஉதிரம் சகல பெண்களுடையவும் உதிரங்களிலெல்லாம் மேலானதாக இருப்பதாக. உம்மை பெற்ற உம் தாயின் திருநாமம் போற்றப்படுவதாக “என்று உரத்த சப்த்தமாக கூவினாள். அப்போது கூட்டத்தினர்.” ஆஹா புதுமை.. கொலம்பா பார்வை பெற்றுவிட்டாள். அவளது உன்மத்தமும் குணப்படுத்தப்பட்டுவிட்டது. ஆண்டவர் பெயரால் வந்திருப்பவர் ஆசீர் பெற்றவர்” என்று முழங்கியது. பிற்பாடு கூட்டம் கலைந்தது.
  அடுத்த நாள் இயேசுநாதர்  இந்த எங்கேடி பட்டிண வாசிகளிடம் விடைபெற்றார். அவருடன் அந்த பெரியவர் வெகுதூரம் வரை அவருடன் வந்துகொண்டே இருந்தார். அவர் யேசு நாதருடன் ஏதோ கேட்க வேண்டும் என்பதுபோல் தோன்றவே யேசுநாதர்,” பெரியவரே… நீர் ஏன் இன்னும் உம்மை வருத்திக்கொள்கிறீர். நீர் சென்று வரலாமே” என்றார். அதற்கு அவர்,” ஆண்டவரே… தேவரீர் எனக்கு எவ்வளவோ செய்திருகின்றீர். ஆனாலும் எனக்கு இன்னும் ஒரு வேண்டுதல் இருகின்றது. ஏற்கனவே நான் என் தகுதிக்கும் அதிகமாக பெற்றுவிட்ட பிறகும் மேலும் மேலும் உம்மிடம் கேட்பது நியாயமாகாது அல்லவா?” என்றார். அதற்கு ஆண்டவர்,” பரவா இல்லை. உமக்கு வேண்டுவதைக்கேளும்.” என்றார். ஆண்டவரே, தேவரீர் என் மகன் எலிஷாவை குணப்படுத்த வேண்டும். என் மகன் சிறுவயதிலேயே காணாமல் போய்விட்டான் என்பது உண்மை அல்ல. அவனுக்கு தொழு நோய் கண்டிருந்ததால் சமூகம் என்னையும் என் குடும்பத்தாரையும் தள்ளி வைத்துவிடும் என பயந்தே நான் அவனை மறைத்து வைத்திருகின்றேன். தேவரீர் அவன்மீதும் என் மீதும் இரக்கம் வைக்கும்படியாகவும் மன்னிக்கும்படியாகவும் உம்மை மன்றாடுகின்றேன்” என்று மிகவும் அழுதார். அதற்கு யேசுநாதர்,” பெரியவரே அனைத்தையும் நான் அறிவேன். கடந்த முப்பது வருடங்களாக உம் உள்ளக்குமுறலை நான் கேட்டு வந்திருகின்றேன். உன் மனைவி கொலம்பாவின் கண்ணீரையும் நான் கண்டு வந்திருகின்றேன். உம் மகன் எலிஷாவின் கதறலையும் நான் அறிவேன். கேட்காத எந்த ஒரு வரமும் அருளப்படாது. ஆனால் நாம் உம் மூவர் மட்டிலும் மிகுந்த தயவாயிருகின்றோம். உம்மகனை எங்கே பாதுகாத்து வைத்திருக்கின்றீர்?”
  “ ஆண்டவரே அந்த மலையின் உச்சியில் தாவீது அரசர் வசித்து வந்தார் அல்லவா அதுபோன்ற ஒரு குகையில்.” என்றார். பெரியவர். “ சரி அவனை கூப்பிடுங்கள் நான் அவனை  பார்க்க வேண்டும் “ என்றார்.இயேசுநாதர்.
“மகனே எலிஷா… இதோ யேசுநாதர் …நம் இரட்ச்சகர் வந்திருகின்றார். வெளியே வா…” என்று பலமாக கூவினார். அவர் பலமுறை கூவி அழைத்தும் பதில் வரவில்லை. தன் மகன் ஒருக்கால் வியாதியின் காரணமாக இறந்திருப்பானோ என்று நினைத்த பெரியவர் பலமாக அழத்துவங்கினார். “ பெரியவரே … நம்பிக்கை இழக்க வேண்டாம். மீண்டும் அவனை சப்தமாக கூப்பிடுங்கள். அவன் பசி மயக்கத்தில் இருகின்றான்” என்றார். இயேசு. பெரியவர் மீண்டும் பலமாக‘ எலிஷா பதில்கொடு ‘ இங்கே யேசு நாதர் உன்னை குணப்படுத்த வந்திருகின்றார். வெளியே வா” என்று கத்தினார்.அப்போது மிகவும் பஞ்சையாகிப்போன ஒரு மனித உருவம் வெளியே வந்தது.
 குஸ்டரோகத்தின் கொடுமையாலும் பசி தாகத்தினாலும் மிகவும் சோர்ந்தும் களைத்தும் பேசக்கூட முடியாமல் தன் கைகளை நீட்டி” அப்பா… நான் மரித்துக்கொண்டிருகிறேன். இனிமேல் எனக்கு நிரந்தர விடுதலை கிடைத்துவிடும். நீங்கள் போய்வாருங்கள் அப்பா “ என மெல்லியதாக பேசினான். இவன் நிலை கண்ட யேசுநாதர் அவன்மீது மிகுந்த பரிவுகொண்டு,” எலிஷா…நீ மரிக்க அல்ல… நீ குணப்படுத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்காகவே நான் உன்னிடம் வந்திருகிறேன். உன் கைகளை என்னிடம் நீட்டு “ என்றார். எலிஷா தன் கைகளை நீட்டினான். அவன் கைகளைப்பற்ற யேசுநாதரும் அவனிருக்கும் இடத்திற்கு மேலே ஏறிச்சென்று அவன் விரல் நுனியை தொட்டு,” நான் விரும்புகிறேன்…நீ குணமாகு” என்றார். அந்த நேரமே எலிஷா குணமடைந்தான். அவன் தோற்றம் ஒரு நாற்பது வயது வாலிபன்போல் மாறியது. மகன் கீழே வந்ததும் தன் வயதையும் பொருட்படுத்தாமல் அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க ஓடினார். ஆனால் ஆண்டவர் அவரை தடுத்து ,” மகன் மீதுள்ள பாசம் வேதப்பிரமாணத்தை மீறிவிடக்கூடாது.. அவனை வேதம் சொல்லும் முறைப்படி சுத்திகரித்து பிற்பாடு அவனோடு சந்தோஷமாக இரும்” என்று அவர்களுக்கு வாழ்த்துகூறி அவர்களிடமிருந்து விடை பெற்றார்.        விசுவாசத்தை கடைபிடிப்போரின் வேண்டுதல் ஒன்றுக்கு மூன்றாய் அவர்கள் கேட்பதற்கும் மேலாக சேர்த்துக்கொடுக்கப்படும்.
 இது ஆண்டவரின் அருள் வாக்கு.
பின் குறிப்பு:  ஒரு காலத்தில் ஆதாம் ஏவாள் வாழ்ந்து வந்த ஏதேன் தோட்டதிற்கு ஈடான தோட்டமாக இருந்த அக்காலத்திய சாக்கடல் பகுதி இப்போதுவரை உப்புக்கடலாகவே இருகின்றது. ஆனால் இந்த சாக்கடலைப்பற்றிய இயேசுநாதரின் தீர்க்கதரிசனம் நம்காலத்திலேயே கூடிய விரைவில் நிறைவேறப்போகின்றது.. ஏற்கனவே செத்த கடல் எனப்படும் சாக்கடல் மேலும் அழிவுறும் நிலையில் இருகின்றது. இன்னும் சில காலத்தில் அது முற்றிலும் வறண்டுவிடும் அபாயத்தில் உள்ளதால் இதைக்காபாற்ற இஸ்ரேயேலின் தென் திசை எல்லையாகிய ஏலாத்தில் செங்கடலிலிருந்து ஒரு பெரும் கால்வாய் வெட்டி அதை இந்த சாக்கடலில் இணைப்பார்கள். அப்போது இந்த சாக்கடலுக்கு நீர் வற்றாது கிடைத்துவிடும். பல மில்லியன் டாலர் பொருட்சிலவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்போவதால் இஸ்றேலும் ஜோர்டானும் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றி கைஎழுத்து போட்டிருகின்றார்கள். இத்திட்டம் நிறைவேறினால் சாக்கடலில் உயிரினம் பெருகும். மீன்வளம் அதிகரிக்கும். இந்த செத்த கடல் என்னும் பெயர் மாறி நல்ல கடல் என்னும் பெயர் பெறும்.அதன் எல்லை இந்த இரண்டாம் ஏதேன் எனப்படும் எங்கேடி பட்டிணம் வரை விரியும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.


No comments:

Post a Comment