“ சாட்சி சொன்ன சேவல்கள்.”
அந்த மாலைப்பொழுது…சூரியன்
மறைந்த நேரம்… முக்காடிட்ட இரண்டு பெண்கள் தங்கள் கண்களில் கண்ணீரை தேக்கிபடி யாரையோ
சந்திக்கவேண்டிய அவசரத்தில் ஜெருசலேம் தேவாலயத்தை நோக்கி செல்லும் சாலையில் பயணிப்பதாக
தெரிகிறது. அப்போது தேவாலயத்தில் இயேசுநாதர் தன்னுடைய புகழ்பெற்ற பிரசங்கத்தை முடிக்கும்
நிலையில் இருந்தார்.” நானே ஒளியும் வழியும் சத்தியமுமாக இருகின்றேன். என்னை பின் செல்பவன்
இருளில் நடவான். உயிரில் ஒளியை கொண்டிருப்பான். உங்கள் உயிர் வாழ ஜீவிய தண்ணீர் என்னிடம்
உள்ளது. இந்த தண்ணீரை குடிப்பவனுக்கு தாகம் என்பதே இராது.” என்பது போன்ற பிரசங்கத்தை அவர் அப்போதுதான்
முடித்திருந்தார். யேசுநாதரின் பிரசங்கம் முடித்த உடனே கூட்டம் கலைந்தது. அதைத்தொடர்ந்து
யேசுநாதரும் ஜெருசலேம் வீதிகளில் நடக்கத்துவங்கினார். அப்போது மேற்சொன்ன இரண்டு பெண்களும்
யேசுநாதரின் பாதம் பணிந்து,” போதகரே.. எங்கள் மேல் இரக்கம் வையும்.வாழ்வுதரும் வார்த்தைகள்
உம்மிடம் இருந்தே வருகின்றன.என்பதை நாங்கள் நம்புகிறோம் விசுவாசிகிறோம்.” என்றனர்.
” பெண்களே ..உங்களுக்கு சமாதானம். உங்களுக்கு என்ன வேண்டும்..நீங்கள் யார்…தயவுசெய்து எழுந்திரியுங்கள் ” என்றார் இயேசுநாதர் கனிவோடு. ஆண்டவரே, நீர் யாராக இருகின்றீர் என்பதை நாங்கள்
நன்றாகவே அறிவோம். எங்களை விட எங்கள் கணவர்கள்
நீர் யார் என்பதை மிகவும் நன்றாகவே அறிவார்கள். அவர்களை தேவரீர் பெரிய மனது வைத்து
மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல்லும்வரை நாங்கள் உம் பாதத்தைவிட்டு எழுந்திரிக்கப்
போவதில்லை “ என்று அவரது பாதங்கள் முத்தி செய்தனர். எனக்கு நினைவு தெரிந்து நீங்கள்
எந்த தவறும் செய்ததாக எனக்கு தோன்றவில்லை. ஆயினும் முதலில் எழுந்திரியுங்கள்” என்று அவர்களை தேற்றி எழச்செய்தார்.
பின்னர் “ இப்போது சொல்லுங்கள்.நீங்கள் யார்?. உங்கள் கணவர் யார் யார்?” என்றார்.
“ போதகரே. இந்த ஜெருசலேமில் இஸ்ரயேல் குலத்தில்
பிறந்த பாவப்பட்ட பெண் ஜென்மங்கள் நாங்கள். கடவுள் ஏன் எங்களுக்கு இப்பேர்பட்ட ஒரு
ஜென்மத்தை கொடுத்தார். எங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட கணவர்களை கொடுத்தார் என்று நாங்கள்
மிகவும் மனமொடிந்து போய் இருகிறோம். எங்களுக்கு இந்த உலக வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது.
நாங்கள் நரகத்துக்கு பாத்திரவான்கள் ஆகிவிட்டோம்.என்று நினைக்கும்போது நாங்கள் பிறவாதிருந்தாலே
நலமாயிருந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகின்றது.” என்று அழுதனர். “ பெண்களே. முதலில்
நீங்கள் அழுவதை நிறுத்துங்கள். உங்கள் துன்பதிற்கு காரணம் என்ன.? யார்/ யார்? என்றார்.
“ ஆண்டவரே.. எங்கள் துன்பதிற்கு காரணம் எங்கள் கணவரே? என்றனர். “ சரி அவர்களைப்பற்றி
சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு செய்த துன்பம் என்ன?.“ என்றார்.
“ பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் “
இருவருள் ஒருத்தி
பேச ஆரம்பித்தாள். ஆண்டவன் அருளில் எங்களுக்கு எந்த குறையும் இல்லை. போதும் போதும்
என்னும் அளவுக்கு வீடுகளும் நிலங்களும் பழத்தோட்டங்களும் நகைளும் பணமுமாக எந்த விதமான
செல்வங்களும் எங்களுக்கு குறைவில்லாமல் இருந்தன. எனக்கு மணமுடிக்கும் வயது வந்ததும்
எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் என் தந்தை. அதற்கேற்றபடி நல்ல அழகும், சிவந்த
நிறமும், இந்த தேவாலயத்தில் ஒரு பொறுப்பில் இருந்த ஒரு கணவான் என்னை பெண் பார்க்க வந்திருந்தார்.
அவரைப்பார்த்த மாத்திரத்தில் எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போயிற்று. அவருக்கும் என்னை
பிடித்துப்போயிற்று. ஒரு நல்ல நாளில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் திருமண வாழ்க்கை
கொஞ்ச நாட்க்களாக நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சில காலங்களிலேயே அவருடைய
சுய ரூபம் வெளிப்பட்டது. என் கணவர் ஒரு பெண் பித்தர் என்பதும் பெரும் பணப்பசி கொண்டவர்
என்றும் பணத்திற்காகவே அவர் என்னை திருமணம் செய்துகொண்டார் என்பதும் பாழும் பணத்திற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்
என்றும் எனக்கு போகப்போக புறிந்தது. அப்போது கூட நான் அவரை நேசித்தேன். வாலிபத்தில்
எல்லா ஆண்களின் குணமும் அப்படித்தான் இருக்கும்.
போகப்போக எல்லாம் சரி ஆகிவிடும் என்று எனக்கு நான் சமாதானம் சொல்லிக்கொண்டேன். ஏரோதின் வைப்பாட்டி
ஆக்ளே என்னும் வெளிநாட்டு விபச்சாரியிடம் தவறாக நடக்கப்போய் அவளிடம் மானம் மரியாதையை
இழந்தது பற்றி நான் அறிய வந்தபோது என் மானமே பறிபோய்விட்டது. ஆனாலும் தேவாலயத்தில்
ஒரு பதவியில் இருப்பவர் இறைமக்களால் மதிக்கப்படவேண்டியவர் இவ்வளவு தூரம் தாழ்ந்த கீழ்த்தரமான
செயல்களில் ஈடுபடுவார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எங்கள் திருமணத்திற்கு
முன்பாக அவர் ஒரு பெண்ணை விரும்பி அது திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு அவரால்
நிறுத்தப்பட்டுவிட்டது. அவள் ஏழையாக இருந்தாள் என்னும் ஒரே காரணத்திற்காக அவளை அவர்
நிராகரித்தார். இத்தனைக்கும் அந்தப்பெண் ஜோஹான்னாவின் தாயார் அன்னாவும் இவருடைய தாயார்
சீமோனின் மேரியும் பால்ய சினேகிதிகள். இருவருடைய சம்மதத்தின் பேரிலும் தான் அந்த நிச்சயதார்த்தம்
நடந்தது. திருமணம் தடைபட்டதால் அந்த மணப்பென் ஜோஹன்னா மனம் உடைந்தாள். அது கடைசியில்
அவளது உயிரைப்பறித்தது. தன்னால் ஒரு அப்பாவி
ஏழைப்பெண் வாழ்விழந்ததை பற்றியோ அவள் இன்னுயிர் பறிபோனதை பற்றியோ எதைப்பற்றியும் சிறிதும்
கவலைப்படாமல் இந்த சம்பவத்தை மறைத்தே என்னை திருமணம் செய்துகொண்டார்.” என்றாள் அந்தப்பெண்.
“ சரி .முடிந்துபோனதைப்பற்றி
இப்போது பேசி என்னவாகப்போகின்றது. திருமணம் என்பது அவரவர் விருப்பு வெறுப்பைப்பொறுத்தது.
ஆனாலும் உன் கணவர் செய்தது முற்றிலும் தவறான காரியம்தான். மேற்கொண்டு என்ன ஆயிற்று.?
அவர் உன்னை எவ்விதத்திலாவது கொடுமை படுத்தினாறா?”
“ போதகரே… அவர்
செய்யும் அனைத்து காரியங்களும் என்னை பயமுறுத்துகின்றன. என்னால் நிம்மதியாக இருக்கவே
முடியவில்லை. ஆனாலும் அவர் என் கணவர். அவரை நான் என் மனசாட்சிப்படி மிகவும் நேசிக்கிறேன்.
அவர் எனக்கு செய்த துரோகங்களை நான் மன்னிக்கிறேன். ஆனால் அவர் உமக்கு செய்யும் துரோகங்களைத்தான்
என்னால் மன்னிக்க முடியவில்லை. அவர் தேவதுரோகம் செய்கின்றார். அவர் உம்மை கொல்ல தேடுகின்றவர்களுக்கு
துணைபோகின்றார் என்று நான் தெரிந்துகொண்டேன். இதைப்பற்றி நான் அவரிடம் கேட்டால் அவர்
என்மீது மிகவும் கோபம் கொள்கின்றார். எங்கே என் கணவர் தேவ சாபதிற்கு ஆளாகிவிடுவாரோ
என்று நான் அஞ்சுகிறேன்.” என்றாள் அவள்.
“ பெண்ணே . என்னை கொல்லத்தேடுபவர்கள் பலர் என்று
நான் அறிவேன். உன் கணவரைப்பற்றிய உன் குற்றச்சாட்டுகளுக்கு
ஏதேனும் ஆதாரம் உண்டா.? கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்ப்பதும் பொய் என்பது நீ
அறியாததா? வெறும் வாய் வார்த்தைகள் …ஹேஸ்யங்கள் எதுவும் சபையில் நிற்காது. சாட்சியங்கள்
மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.. ஆனாலும் என்னை கொல்லத்துணியும் சதியில் உன் கணவனும்
சம்பந்தப்பட்டிருப்பதால் அவன் யார் என்று அறிய நான் ஆசிகிறேன். உன் கணவணைப்பற்றி சொல்லு”
என்றார் இயேசுநாதர்.
“ போதகரே..என்
கணவர் உமக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். அதோ .அங்கே தூரத்தில் தெரிகின்றாரே அவர்தான்”
என்று ஒருவனை சுட்டிக்காட்டினாள். அவள். அங்கே இவர்களைப்பற்றி கவனியாமல் தனியே போய்க்கொண்டிருந்தான்
அவள் கணவன் யூதாஸ். “ ஓ… இவன்தான் உன் கணவனா?. நான் அப்போதே நினைத்தேன் “ என்றார்.
இயேசுநாதர். பிறகு அடுத்தவளைப்பார்த்து,” பெண்னே உன்னைப்பற்றி சொல்லு” என்றார்.
“ நசரரேத்தூர் இயேசுவே…நானும் வசதியான ஒரு உயர்குலத்தில்
பிறந்தவள்தான். என்னைப்போல் ஒரு துரதிஸ்ட்டம் பிடித்த பெண் இந்த உலகத்தில் வேறு யாரும்
இருக்க முடியாது.” என்று ஆரம்பித்தாள் அவள்.
“ஏன்.. உனக்கென்ன அவ்வளவு துன்பம்”
“ ஆண்டவரே நான் ஒரு கேடுகெட்ட பிறவி. என் பிறப்பைக்கண்டு நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்.”
என் தகப்பன் ஒரு கொலைகாரன். என் கணவனும் ஒரு கொலைகாரன்.” என்று கூறி மிகவும் அழுதாள்.
இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தில் என்ன மரியாதை இருக்கப்போகிறது? என்றாள் அவள்.
“ பெண்ணே.. நீ
ஒரு கொலைகார குடும்பத்திலிருந்தா வந்திருக்கின்றாய். உன் நிலை கண்டு நான் மிகவும் பரிதாபப்படுகின்றேன்.
சரி.. யார் அவர்கள்.?”
“ ஆண்டவரே… என்
தந்தையார்தான் அன்னாஸ் எனப்படும் மூத்த முன்னாள் தலைமை குரு. அவர்தான் உம்மை கொல்லத்தேடும்
முதல் கொலைகாரன். என்கணவர் கைபாஸ்தான் இப்போதைய தலைமை குரு. இவர்தான் உம்மை கொல்லத்தேடும்
இரண்டாம் கொலைகாரன். இப்போது தெரிந்ததா நான் யாரென்று?”. அவர்கள் உம்மை கொல்லத்தேடுவதற்கு
உண்மையான காரணம் நீர் யாரென்று உண்மையிலேயே அவர்கள் அறிந்திருப்பது தான். நீரே உண்மையான
மெசியா. நீரே இந்த உலகை மீட்க வந்திருக்கும் சர்வேசுரனின் மனிதாவதாரம் என்று மிக சத்தியமாக
அவர்கள் அறிந்திருப்பதுதான் உண்மையான காரணம்..போதகரே… லாசரின் உயிர்ப்பு எப்பேர்ப்பட்டது.
இறந்து நான்கு நாட்க்களாகி, அழுகி, புழு வைத்து, நாற்றமடித்து,, நாறிப்போன அந்த லாசரின்
சடலத்தை ஒரே வார்த்தையில் உயிர்த்தெழவைத்த இந்த புதுமையை இந்த பரந்த உலகத்தில் எந்த
மனிதனாலும், எந்த தீர்க்கதரிசியாலும் செய்ய முடியாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இதை
செய்திருக்க முடியும். அந்த கடவுள் மனித உருவில் வந்திருக்கும் நீரே என்பதை நாங்கள்
அனைவரும் முழுமனதாக விசுவாசிகிறோம். இந்த கேடுகெட்ட மனிதர்களுக்கு உம்முடைய கடவுளின் தன்மையை நம்பவைக்க இதைவிட பெரிய புதுமையை
உம்மால் இனிமேலும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. இந்த புதுமையை நம்பாதவன் இதைவிட
பெரிய புதுமை எதை நீர் செய்தாலும் அதையும் நம்பமாட்டான்.
லாசரின் உயிர்ப்புக்குப்பிறகு மிகவும் சாதாரண இந்த
பெத்தானி வாசிகள் முதல் ஜெருசலேம் வாசிகள் வரை கல்வி கற்றோர் முதல் கல்வி அறிவே இல்லாதவர்
வரை நீரே மெசியா என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் அறிந்திருப்பதால் வேத பண்டிதர்களாக
இருப்பவர்களும் வேத பாடங்களையும் தீர்க்க தரிசனங்களையும் கரைத்து குடித்தவர்களூமான
என் தந்தைக்கும் என் கணவருக்கும் இது தெரியாமலா இருக்கும்?. எங்கே உம்மை மெசியாவாக ஏற்றுக்கொண்டால் . தங்கள் கௌரவம் பாதிக்கப்படும்
தங்கள் வருமானம் வீழ்ந்துவிடும். தங்களைக்கண்டால் தரைமட்டும்க் தாழ்ந்து பணியும் மரியாதை
இனி கிடைக்காது என்பன போன்ற காரணங்களால் அவர்கள் உம்மை எதிர்கிறார்கள்.தாங்களே உண்மையான
இஸ்ராயேல் கடவுளின் வழிவந்த பிதாப்பிதாக்கள், யூத குலத்தை காக்கவந்த மெய்காவலர்கள்
எனறு மார்தட்டிக்கொள்கின்றார்கள்.
தேவரீர் லாசரை உயிர்பித்திருந்திருக்கவே கூடாது.
அதனால் நீர் உம் உயிருக்கு இவ்வளவு விரைவில் உலை வைத்துக்கொண்டீர்…இப்போது என் நிலை
புறிகிறதா உமக்கு. பாவி நான் என்ன செய்வேன் சுவாமி. நான் என் பெற்றொர் மீது கொண்ட பாசத்தாலும்
என் கணவர் மீது கொண்ட பாசத்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறேன். தேவரீர்
அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். தேவனின் கோபமும் சாபமும் பொல்லாதது..மிகவும் கொடுமையானது
இந்த தேவ கோபமும் சாபமும் என் கணவர் மீதும் என் தந்தையார் மீதும் கொடுமையாய் இறங்கும்
” என்றாள் அவள்.
“ பெண்னே..உன்
நிலை மிகவும் பரிதாபமானது. நான் உன்மீது மிகவும் இரக்கமுள்ளவராக இருகின்றேன். உன் கணவர்
மற்றும் உன் தந்தையார் மீது சுமத்தப்படும் தேவ கோபம் உன்மீது இறங்காது. உண்மை எதுவென
தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ளாதவர் பொய்க்கு தூப ஆராதணை காட்டுகின்றனர். பொய்யிலே நிலைத்திருக்கவே
விரும்புகின்றனர். அனைத்தையும் படைத்த கடவுள் உண்மையானவர். அவரது எதிரி சாத்தான் பொய்யன்.
.உண்மையை வெறுத்து பொய்யை ஆசிப்பவன் கடவுளை எதிர்கிறான். பகைக்கிறான். இதுவே தேவ துரோகம்.
நானே உண்மையும் ஒளியும் சத்தியமும் ஜீவியமுமாய் இருகின்றேன். நான் இந்த உலகத்தில் இருக்கும்
வரை நான் இரக்கமுள்ளவராகவே இருகின்றேன். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னிடம் சரணடையட்டும்.
நான் என் பிதாவின் சித்தப்படியே போக வேண்டியதாக இருக்கின்றது. நீ அவர்களுக்காக பரம
பிதாவிடம் வேண்டிக்கோள். கடவுளின் சுபாவம் கோபம்கொள்ளும் ஒரு தகப்பனைப்போன்றது. ஆனால்
அவரிடம் அன்பும் இரக்கமும் அபரிமிதமாக இருகின்றது என்பதை நம்புங்கள். உங்கள் கணவரின்
துரோகத்தால் நான் சிந்தப்போகும் என் இரத்தம் அவர்களையும் இரட்சிக்கட்டும். நானும் உங்களுக்காக
என் பரமபிதாவிடம் ஜெபிகிறேன்..நீங்கள் இருவரும் சமாதானமாக சென்று வாருங்கள் என்று அவர்களை
ஆசீர்வதித்து அனுப்பினார்.
இதே நாள் விளக்கு வைத்தபிறகு இயேசுநாதர் ஜெத்சேமனி
தோட்டத்தில் தன் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். “ இராயப்பா..இதே கெதிரோன் சாலை
வழியாக ஜெருசலேமுக்கு ஒரு நாள் நான் வருவேன். இப்போதுபோல் ஒரு ஏழையாக அல்ல. பெரும்
மா மன்னராக, அரச பதவியில் வீற்றிருப்பவராக, இந்த உலகை நடுத்தீர்ப்பவராக..உண்மை கடவுளாக”
என்றார். பிறகு இந்த இரவிலே நான் காட்டிக் கொடுக்கப்படுவேன். ஆயனை சிதறடிப்பேன். ஆடுகள்
சிதறிப்போகும் என்பது எழுதப்பட்டு உள்ளபடியே நிகழும்.உங்களில் ஒருவன் என்னை காட்டிக்கொடுக்க
போகின்றான் “ என்றார். அதற்கு இராயப்பர்,” ஆண்டவரே எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும்
நான் உம்மைவிட்டு போகமாட்டேன். இதில் என் உயிரே போனாலும் சரி.. நான் உம்மைவிட்டு போகவே
மாட்டேன்.” என்றார். “ இராயப்பா… இந்த இரவே சாத்தான் உன்னை புடைத்தெடுக்க என் பரம தந்தையிடம்
அனுமதி பெற்றுவிட்டான். நானும் உங்களுக்காக நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க என்
பரம பிதாவிடம் மன்றாடுகிறேன். இந்த இரவில் இருமுறை கோழி கூவு முன்பாக நீ என்னை மூன்று
முறை மறுதலிப்பாய்” என்றார். அப்படியே ஆயிற்று. அந்த பெரிய வியாழன் அன்று இரவில் ஜெத்செமெனி
தோட்டத்தில் யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்தான்.
இயேசுநாதர் கைப்பாஸின் அரண்மனையில் விசாரணைக்காக
காத்திருக்கையில் இராயப்பர் அங்கே என்ன நடக்கின்றது என்று காண வந்திருந்தார். அப்போது
ஒருத்தி,” உன்னைப்பார்த்தால் கலிலேயன்போல் தோன்றுகிறது. நீ அந்த இயேசுவின் சீடன் தானே”
என்றாள். இராயப்பர்.” இல்லை அம்மா.. அது நான் அல்ல” என்றார். இன்னொருவன்,” தோட்டத்தில்
உன்னை நான் அந்த ஆளோடு காணவில்லையா” என்றான். அதற்கு இரயப்பர் ,” நீ யாரையோ பார்த்துவிட்டு
அவன் நான்தான் என கூறுகின்றாய்” என்றார். இப்போது இரண்டாம் முறையாக இயேசுவை மறுதளித்தார்.
மீண்டும் ஒருவன்,” உண்மையிலேயே நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவன்தான். அது உன்னைப்பார்த்தாலே
தெரிகின்றது,” என்றான். அப்போது இராயப்பர்,” யார் அந்த இயேசு. அவரை எனக்கு தெரியவே
தெரியாது. அவர் நாசமாகப்போக “ என்று சபிக்கவும் ஆணையிடவும் செய்தார். அப்போது கைப்பாசின் அரண்மனை வாசலில் இருந்த ஒரு
செவல் கொக்கரக்கோ என இரண்டுமுறை கூவியது. அப்போது இயேசுநாதர் இராயப்பரை பார்த்தார்.
அந்த பார்வை அவருக்கு ஆயிரம் கதை சொல்லியது. இன்று மாலையில்தானே நீ என்னை மும்முறை
மறுதலிப்பாய். அப்போது இருமுறை கோழி கூவும் என்று சொன்னேன் என்று சொல்லியது. இதை நினைத்துப்பார்த்த
இராயப்பர் இனியும் அங்கிருக்க பிடிக்காமல் தான் இயேசுவை மறுதளித்தது பற்றி மிகவும்
வருந்தி அழத்துவங்கினார்..
அன்று மாலையி;ல் இயேசுநாதரை சந்தித்து வீடு திரும்பிய
யூதாசின் மனைவிக்கு அந்த இரவில் தன் கணவன் இயேசுநாதரை காட்டிக் கொடுத்தது பற்றி எதுவும்
தெரியாமல் உறங்கிப்போனாள். காலையில் எழுந்து நல்ல ஒரு விடலை கோழியை சமைத்தாள். இயேசுநாதரை காட்டிக்கொடுத்த யூதாஸ் அவருக்கு சிலுவை
சாவு கொடுக்கப்பட்டது என்று கண்டு மிகவும் மனம் உடைந்தான். தான் வாங்கியிருந்த லஞ்சப்பணத்தை
தேவாலய குருக்களிடம் வீசி எறிந்துவிட்டு தன் வீடு திரும்பினான். தன் மனைவியிடம் தான்
செய்த துரோகசெயல்களை கூறி தான் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை கூறினான். அவன் மனைவி
அவனிடம் தான் நேற்று மாலை இயேசுநாதரை சந்திதது பற்றி கூறினாள். இயேசுநாதர் இந்த உலகத்தில்
இருக்கும்வரை அவரிடம் இரக்கம் உள்ளதால் அவரிடம் சென்று மன்னிப்புகேள். நீர் அவருக்கு
செய்த துரோகத்துக்கு தண்டனையாக உன் ஆத்துமா நித்தியத்துக்கும் எரி நரகத்தில் தள்ளப்படுவதைவிட
இப்போதே ஆண்டவரிடம் மன்னிப்பு பெற்றுக்கொள். எனவும் இன்னும் பல சமாதான வார்த்தைகளால்
தேற்றியும் அவன் இயேசுநாதரை சந்திக்க. வற்புறுத்தினாள். ஆனால் அவன் காதில் எதுவும்
ஏறவில்லை. அவன் இயேசுவின் இரக்கத்தை நம்பவில்லை. அவன் இதயம் முழுவதையும் சாத்தானும்
அவனது தூதர்களும் ஆக்கிரமித்திருந்தார்கள்.
இயேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்து தன்னை தண்டிப்பார் என்பதையே
திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு தன்னுடைய தற்கொலை பற்றிய எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.
அவனது எண்ணத்தை மாற்ற விரும்பிய அவன் மனைவி, “ இதோ பாரும்.இயேசுநாதர் மீண்டும் உயிர்க்கப்போவது
உண்மைதான். அவரிடம் இரக்கம் இருப்பதும் உண்மைதான் .இந்த விஷயத்தில் நான் மிக உறுதியாக
இருகின்றேன் அதற்கு ஆதாரமாக நான் சமைத்துவைத்துள்ள இந்த கோழி சாட்ச்சியம் சொல்லட்டும்.
ஓ…சேவலே எனக்கு சாட்ச்சியம் கூறுவாயாக… இயேசுநாதர் மேல் ஆணை” என்றாள். அப்போது அவள்
சமைத்து வைத்திருந்த அந்த கோழி உயிர் பெற்று எழுந்துவந்து “ கொக்கரக்கோ “ என்று இருமுறை
கூவி மறைந்து போனது.
இதைக்கண்ட யூதாசுக்கு தலை சுற்றிப்போனது. இயேசுநாதரின்
உயிர்ப்புக்கு இறந்த கோழி சாட்ச்சியம் கூறுகின்றது. அப்படியானால் இயேசுநாதரின் உயிர்ப்பும்
சர்வ நிச்சயம் என்று உணர்ந்தவனாக அவரது இரக்கத்தை நம்பாமல் போய் தூக்கு போட்டுக்கொண்டு
செத்தான். இந்த கதை கிரேக்க ரீதி திருச்சபையில் சொல்லப்பட்டு வருகின்றது.
இதைப்போல இன்னும் ஒரு கதை. இது கதை அல்ல நிஜம்.
இந்த கதை எப்போது நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை.
ஆனால் இந்த கதை நடந்தது நிஜம் என்கின்றது இந்த ஊரில் பொறித்து வைக்கப் பட்டுள்ள ஒரு
சிலுவை. மேற்கு ஐரோப்பாவில் போர்த்துக்கல் தேசம் உள்ளது. இதில் பார்சிலோஸ் என்னும்
ஒரு பட்டிணத்தில்தான் இந்த சிலுவை ஊரின் நடுப்பகுதியில் நிற்கின்றது. இனி கதைக்குப்போகலாம்.
ஸ்பெயின் தேசத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து
புனித சந்தியாகப்பரின் பக்தி பரவியது. ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலராக புனித பெரிய
யாகப்பர் என்றழைக்கப்பட்ட சந்தியாகப்பரின் சமாதி அமைந்துள்ள சந்தியாகு தெ கம்போஸ்த்தலா என்னும் ஊர் பெரும் திருயாத்திரை
ஸ்தலமாக கருதப்படுகின்றது.. இந்த ஊருக்கு ஐரோப்பாவிலிருந்து அக்காலத்திலிருந்தே பெரும்பாலான கிறிஸ்த்துவர்கள்
திருயாத்திரை செல்வது வழக்கம். எனவே புனித சந்தியாகப்பருக்கு திருயாத்திரை செல்வோரின்
பாதுகாவலர் என்னும் பட்டமும் உண்டு. இந்தனை பெருமை நிறைந்த இந்த சந்தியாகு தெ கம்போஸ்த்தலா
என்னும் ஊருக்கு திருயாத்திரை செல்வதற்காக புனித சந்தியாகப்பரின் மேல் நம்பிக்கை வைத்து
தனக்கு வழித்துணையாக நீரே வர வேண்டும் என்னும் வேண்டுதலையும் வைத்து தன் நடைபயணத்தை
ஆரம்பித்தான் ஒரு கிறிஸ்த்துவன் பல நாட்க்கள் நடந்து பார்சிலோஸ் என்னும் பட்டிணத்தை
அடைந்தான் அவன். இந்த பட்டிணத்தில் சில நாள் ஓய்வெடுக்க விரும்பி ஒரு விடுதியில் தங்கினான்.
ஆனால் அவனுக்கு இந்தப்பட்டிணம் ஒரு கொடும் பழியையும் மரண தண்டனையையும் தரும் என்பது
அப்போது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த பார்சிலோஸ் பட்டிணத்தில் ஒரு பெரும் பணக்காரன்
இருந்தான். துரதிர்ஸ்ட்ட வசமாக அவனது வீட்டிலிருந்த பெரும்பாலான வெள்ளி தங்க நகைகளும்
பணம் காசுகளும் யாராலோ கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. ஊரார் அனைவருக்கும் இந்த விஷயம்தெரிந்துவிட்டதால்
இப்படிப்பட்ட கொள்ளைகாரனை கண்டுபிடிக்க ஆவலாக இருந்தார்கள். ஒருவழியாக கள்ளனை பிடித்துவிட்டார்கள்.
அவன் வேறு யாரும் அல்ல. நம் கதாநாயகன் தான். தான் சந்தியாகப்பரின் தேவாலயத்திற்க்கு
செல்லவிருக்கும் ஒரு திருயாதிரீகன் என்றும் இந்த ஊருக்கு வந்து தங்கியிருக்கும் ஒரு
வழிப்போக்கன் என்றும் தனக்கும் இந்த கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சந்தியாகப்பரின்
மேல் சத்தியம் என்று எவ்வளவு சத்தியம் சொல்லியும் அந்த ஊர் மக்கள் அவனை நம்பாமல் நையப்புடைத்தார்கள்.
பொருளை பறிகொடுத்த அந்த ஊர் பணக்காரனோ அவனை அந்த நாட்டு அதிபதியிடம் ஒப்படைத்தான்.
அந்த அதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தான். தண்டனை நிறைவேற்று முன் அவனது கடைசி ஆசையை
கேட்டனர். அவன் தன் கூற்றை நிரூபிக்க ஒரு கடைசி சந்தர்ப்பம் வேண்டும் எனவும் அதற்காக
அந்த நாட்டு அதிபதியை பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமென கேட்டான். அவனுக்கு அந்த வாய்ப்பு
அனுமதிக்கப்பட்டது. ஆனால் அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவனை அதிபதி சந்திக்கும் வேளையில் அவர் பெரும்
விருந்து ஒன்றில் அமர்ந்திருந்தார். அவர் முன்பாக பலவிதமான பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று கோழி வறுவல்.இதைக்கண்ட மாத்திரத்தில் அந்த அதிபதிக்கு வாயில் எச்சில்
ஊறியயது. இருப்பினும் தன்னைக்காண வந்திருந்த அந்த தூக்கு தண்டனைக்கைதி பேச ஒரு நிமிடம்
வாய்ப்பளித்தான். ஆனால் அவன் கூறியது எதையும் அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவனோ
தான் மாசற்றவன் என்றும் தனக்கும் இந்த கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்
தன் மரண தண்டனையை நீக்குமாறும் எவ்வளவோ மன்றாடினான். ஆனால் அந்த அதிபதி மிகுந்த எரிச்சலுற்று
“ இந்த மரண தண்டனைக்கைதியை கொண்டுபோய் தூக்கிலிடுங்கள். பசி என்வயிற்றை பிடுங்கி எடுக்கின்றது “ என்று கோபத்துடன்
கத்தினான். அப்போது அந்த கைதி,” நான் சந்தியாகப்பரின் பக்தன் என்பது உண்மையானால், நான்
நிரபராதி என்று கூறும் என் சாட்சியம் உண்மையானால் நான் மரிக்கும்முன், நீர் உண்ணப்போகும்
இந்த செத்த கோழி சாட்சியம் கூறட்டும் “ என்றான். அவனை ஊருக்கு நடுவில் உள்ள முச்சந்தியில்
ஒரு குதிரையின்மேல் அமரவைத்து அவன் கழுத்தில் சுறுக்கு கயிரை மாட்டினர். தண்டனை நிறைவேறட்டும்
என்னும் ஆணை கிடைத்ததும் வீரன் ஒருவன் அந்த குதிரையை சவுக்கால் ஒரு அடித்தான். அவ்வளவுதான்.
அந்த குதிரை வேகமாக ஓடிவிட்டது. கைதியின் மரணதண்டனை
நிறைவேற்றப்பட்டது. அடுத்த வினாடி விருந்தில் இருந்த அந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த கோழி உயிர்பெற்றது.
“ கொக்கரக்கோ” என்று உரத்தகுரலில் இருமுறை கூவிவிட்டு எங்கோ ஓடி மறைந்தது. இதைக்கண்ட
ஆளூநன் மிகவும் பயந்து போனான். “ ஆஹா … நான் தவறு செய்துவிட்டேன். அநியாயமாக ஒரு நிரபராதிக்கு
தூக்கு தண்டனை கொடுத்துவிட்டேன்… நிறுத்துங்கள்…நிறுத்துங்கள் “ என்று கூறிக்கொண்டே அந்த தூக்கு மேடைக்கு ஓடினான்.
அவனே அந்த கைதியை தாங்கி பிடித்துக் கொண்டு அவனை காப்பாற்றினான். நல்ல வேலையாக அந்த
தூக்கு தண்டனை கைதிக்கு உயிர் இருந்தது. அந்த கைதி விடுவிக்கப்பட்டான். நடந்த சம்பவதிற்காக
அந்த நாட்டு அதிபதி அவனிடம் மன்னிப்பு கோறினார். அதுமுதல் புனித சந்தியாகப்பர் இயேசுவின் பெரும் வல்லமையான அப்போஸ்த்தலர் என்பதும் அவர் திருயாத்திரீகர்களின்
பாதுகாவலர் என்பதும் ஐரோப்பிய மக்களுடைய பெரும்
நம்பிக்கை ஆனது. இந்த நம்பிக்கை உலகம் முழுவதும் பரவியது.
இந்த நிகழ்ச்சி நடந்து பல காலம் கழித்து அந்த யாத்திரீகன்
இதே பார்சிலோஸ் நகருக்கு மீண்டும் வர நேரிட்டது. தன் மரண தண்டனை பற்றிய காட்ச்சியை
அந்த ஆளுநன் ஒரு சிலுவையில் பொறித்து அதே முச்சந்தியில் நிலை நாட்டி இருக்க கண்டான்.
மேலும் சேவல் சின்னத்தை போர்த்துகல் நாட்டின் தேசீய பறவையாக அறிவித்திருந்தான்...
இப்படியாக சாட்ச்சி சொன்ன சேவல்கள் பல இருகின்றன.
ஆனாலும் சரித்திரத்தில் சேவல்களைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கூற நான் விரும்புகிறேன்.
சேவல் இல்லாமல் அதிர்ஸ்ட்டம் ஏது? .உங்களுக்கு
அதிர்ஸ்ட்டம் வேண்டுமா.. உங்கள் வீட்டில் ஒரு சேவலின் படம் மாட்டி வையுங்கள்.பல நூற்றாண்டுகளாக
சேவல் செழுமையின் அடையாளமாக இருகின்றது. சேவலின் கொக்கரக்கோ என்னும் சப்த்தம் அசுத்த
ஆவிகளை விரட்டும். சேவல் ஆண் தன்மையின் அடையாளம்.
எதிபாராமல் ஒரு சேவல் உங்கள் வீட்டு சமையல் அறைக்கு வந்துவிட்டதா? சந்தோஷப்படுங்கள்.
அதிர்ஸ்ட்ட தேவதை உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டாள்.
பெட்டைக்கோழி தாய்மையின் அடையாளம். இயேசுநாதர்
தன் நற்செய்தியில் இந்த பெட்டைக்கோழிக்கும் ஒரு இடம் கொடுத்திருகின்றார். அதுதான் ஜெருசலேம்
நகரின் அழிவைப்பற்றியது. தன்னை ஒரு தாய்க்கோழியாக பாவித்து,” ஜெருசலேமே..ஜெருசலேமே..பெட்டைகோழி
தன் செட்டைக்குள் தன் குஞ்சுகளை அணைத்து காப்பதுபோல் நான் உன்னை காக்க வந்தேன். என்னும்
வேத வசனத்தை நினைவு கூருங்கள்.
ஏதோ ஒரு காரியமாக வீட்டை விட்டு வெளியே போகின்றீர்களா
? உங்கள் எதிரே ஒரு சேவலோ அல்லது பெட்டையோ
தென்பட்டால் போகும் காரியம் வெற்றிதான். அது நல்ல சகுணம் எங்கின்றனர் மேல் நாட்டினர்.
சேவலின் கொக்கரக்கோ என்னும் சப்த்தம் ஆண்டவரின் ஆசீரை
கூவி அழைப்பதாக இருகின்றது. எழுந்திருங்கள். இருள் விலகிவிட்டது. அதிகாலையில் எழுந்து
ஆண்டவரை தொழுங்கள். ஆண்டவருக்கு புதியதோர் பாடலை பாடுங்கள் . அல்லேலூயா என்று அது உங்களுக்கு
உரக்கக்கூவி நினைவூட்டுகின்றது. இதற்காகவே அது இரவு முழுவதும் கவனமாக காத்திருகின்றது.
சேவல் திசைக்காட்டும்
கருவியில் அமர்ந்திருக்கின்றது.
தேவாலயங்களில் சேவல்…
சேவல் ஒரு பலிப்பொருள். ஒருவிதத்தில் அது இயேசு நாதரை
ஒத்திருகின்/றது. இயேசுநாதர் உலகின் பாவங்களை தன்மேல் சுமந்துகொண்டு தன்னையே பலி ஆக்கினார்
அல்லவா… இப்படியாகத்தான் அக்காலத்தில் தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு சேவலை
எடுத்து எனக்கு பதிலாக நீ மரணிக்க வேண்டும் என்று அதற்கு சொல்லி தன்தலைமீது அதை மூன்று
முறை சுழற்றி அதை பலி கொடுப்பார்கள். திருச்சபையின் தலைவராக புனித இராயப்பர் இருகின்றார்.
அவர் பெயர் சொல்லுமிடம் எல்லாம் யாரும் இந்த சேவலை மறக்க முடியாது. எனவே அந்த சேவலுக்கு
இராயப்பரின் கோழி என பெயரிடப்பட்டுள்ளது. பெரிய வியாழன் நிகழ்ச்சிகள் நினைவு கூறப்படும்
அனைத்து கிறிஸ்த்துவ தேவாலயங்களின் உச்சியில் சிலுவையின் மீது இந்த கோழியின் சிற்பமும்
வைத்திருக்கப்பட வேண்டுமென அக்காலத்திய பாப்புமார்கள் புனித சிங்கராயர் எனப்படும் லியோ
மற்றும் நிக்கோலாஸ் போன்றவர்கள் வாய்மொழி உத்திரவுகள் போட்டதாக சில தகவல்கள் உண்டு.
ஆனால் காலப்போக்கில் அந்த உத்திரவு மறைந்து போய்விட்டது.
ஆனால் பரிசுத்த பிதா பாப்பு பெரிய கிரகோரியார்
ஒரு சேவலின் படம் வரைந்து அதற்கு புனிதர்களுக்கு இடப்படும் ஒளிவட்டத்தையும் போட்டு
பெரும் மதிப்பு கொடுத்திருகின்றார். அந்த படம் இன்னும் வத்திக்கானில் இருகின்றது.
இன்றும்கூட ஜெருசலேமில் கைப்பாஸின் வீட்டின் மேற்கூறையில்
சிலுவைக்கு மேலாக அங்கு நடந்த கோழிகூவிய சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஒரு சேவலின்
சுரூபம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கைப்பாசின் வீட்டுக்கு சேவல் கூவிய தேவாலயம்
என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கொக்கரக்கோகோ….கொக்கரக்கோகோ…கொக்கரக்கோகோ..
No comments:
Post a Comment