Wednesday, August 21, 2013

" அமர கீதம் "



                                                         " அமர கீதம் "

     கி.பி.25. ரோம். அரசாங்க ஆணையை முன்னிட்டு ஏறக்குறைய அறு நூறு ராணுவத்தினர் கப்பலேறக்காத்திருந்தனர். இந்த வணங்காக்கழுத்துள்ள யூத மக்களை அடக்க  உடனடியாக ஆயிரம் வீரர்களை பாலஸ்தீனாவுக்கு அனுப்பவும் என்ற போஞ்சிபிலாத்தின் கடிதத்தை முன்னிட்டு ரோமைய செனட் சபை முதல்கட்டமாக ஆறு நூறு வீரர்களை   பாலஸ்தீன நாட்டுக்கு அனுப்ப உத்திரவிட்டது. தன் மகனையும் அவர் மனைவிமக்களுடன் அனுப்ப ஒரு எழுபதுவயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் ரோமை துறைமுகத்துக்கு வந்திருந்தார். தகப்பனும் மகனும் ஒருவரைஒருவர் கட்டித்தழுவிக்கொண்டனர். இருவர் கண்களிலும் கண்ணீர் ஆறாகப்பெருகிக்கொண்டிருந்தது.
" மகனே கொர்னீலியுஸ்...இந்த விதியைப்பார்த்தாயா....இந்த தள்ளாத வயதில் உன்னையும் என்னையும் பிரிக்கின்றது. இனிமேல் நான் காலமெல்லாம் தனிமையில்தான் வாழவேண்டும். நானும் ஒரு காலத்தில் உன்னைப்போன்ற சுத்த வீரன்தான்...வெளி உலகைப்பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நான் ராணுவத்தில் சேர்ந்து பல போர்களில் பணியாற்றியவன்தான்..அப்போதெல்லாம் எனக்கு குடும்பத்தின்மீது பற்றில்லாமல் போனது..காரணம்... நானும் சமுதாயத்தில் ஒரு பெரிய ஆளாக வர வேண்டும்... வீரதீர சாகசம் புறிய வேண்டும்...பேரும் புகழும் பெற வேண்டும்...என் பெயரை இந்த பார் எல்லாம் புகழ வேண்டும் என்ற ஆசையால் நான் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டேன். நாடுகள் பல
சென்றேன்.நான் சென்ற நாடுகளில் எல்லாம் ஜெயதேவி என்னை கட்டிக்கொண்டாள். காசு பணம் புகழ் எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. நீ பிறந்த வேளையில் அதிர்ஸ்ட்ட தேவதைகள் எல்லம் என் வீட்டில் வாசம் செய்தார்கள். எல்லாம் இப்போது கனவுபோல் இருகின்றது. நிம்மதியான குடும்ப வாழ்கைக்கு முன் இந்த காசு பணம் புகழ் எல்லாம்
ஒன்றுமில்லை என்பதை நான் வெகு தாமதமாக உண்ர்ந்தேன். எல்லாவற்றையும் நான் இப்போது இழந்துவிட்டதுபோல் உணருகின்றேன். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.. .என் அனுபவத்தில் சொல்லுகிறேன்....இந்த கொலைத்தொழிலை விட்டுவிடு...மனிதனை மனிதன் கொல்லும் இந்த அபாயமான தொழிலை ...இழிவான தொழிலை விட்டுவிடு..
உன்மனைவி மக்களுடனும் என்னுடனும் சந்தோஷமாக மீதி நாட்க்ளை கொண்டாடி மகிழ்வாக இருக்கலாம். கடவுள் புண்ணியத்தில் நான் சேர்த்த சொத்து ஏறாளமாக இருக்கின்றது.
உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நான் ஏற்படுத்தி தருகின்றேன்....நீ என்ன சொல்லுகின்றாய்." என்றார் அந்த பாசமுள்ள தந்தை..
"அப்பா...நீங்கள் என்ன பேசுகிறீர்கள்....நீங்கள் தெரிந்துதான் பேசுகிறீர்களா...இல்லை தெரியாமல் பேசுகிறீர்களா...நீங்களும் ஒரு காலத்தில் ராணுவத்தில் பணியாற்றியவர் தானே...
நீங்கள் எப்படி இப்படி பேசலாம்...ஒரு நாட்டின் கௌரவமே அதன் பாதுகாப்பில்தானே இருகின்றது. அந்த நாட்டின் ராணுவம் குறைத்துமதிக்கப்பட்டால் எதிரி நாடு அதை எப்படி மதிக்கும்..உள் நாட்டின் தீய சக்திகள் அந்த நாட்டை சின்னாபின்னமாக்கிவிடும்..பிறகு அந்த நாட்டு மக்களை கடவுள் கூட காப்பாற்ற முடியாது..உங்கள் வயதும் சுயநலமும் இவ்வாறு உங்களை பேசவைத்திருக்கின்றது. ஆனால் நான் அப்படி அல்ல...நான் என் நாட்டை நேசிக்கின்றேன்...என் நாடு நன்றாக இருந்தால் என் மக்களும் நன்றாக இருப்பர்..நாமும் நன்றாக இருக்கவேண்டும்...பிறரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டவன் நான்...நீங்கள் இப்படிப்பேசுவீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை." என்றான் மகன்.
" மகனே கொர்னெலியுஸ் நீ ஒரு சுத்த வீரனுக்குறிய தோரணையோடு பேசுகின்றாய்...மிகவும் சந்தோஷம்...நீ சொல்வதுதான் சரி... என் வயோதிகமும் என் சுய நலமும் என்னை இப்படி பேச வைக்கின்றது..நிம்மதியான வாழ்க்கையை என் மனம் விரும்புகின்றது. அது சேர்ந்து வாழும் குடும்பத்தில்தான் இருகின்றது. இதை உணரவே எனக்கு எழுவது வயது ஆகியது. இதை உனக்கு இப்போது புறிய வைக்க முடியாது..எல்லாம் பட்டால் தான் புறியும்..உன்னை நான் வீரனாக வளர்த்ததற்கு பதில் ஒரு கவியாக படிக்க வைத்திருந்தால் இந்நேரம்
நீ பெரிய கவியாக வளர்ந்திருப்பாய்,,,உலகமே உன் கவி பாடும் திறமையைக்கண்டு ஆனந்தக்கூத்தாடி இருக்கும்..என்ன செய்வது..விதி உன் வாழ்க்கையில் விளையாடிவிட்டது.
நீ பெரும் வீரனாகிவிட்டாய் . எல்லாம் அவன் செயல் " என்று சற்றே கண் மூடினார் அந்த பெரியவர்.
" அப்பா...நான் என்னவாக வேண்டும் என்பது கடவுள் விதித்த விதி...அதை நீங்களோ அல்லது நானோ மாற்ற முடியாது. இப்போதும் என் உள் மனதில் நான் ஒரு பெரும் பதவிக்கு நியமிக்கப்படுவேன்.என்றும் என்பெயர் இந்த உலகமெல்லாம் போற்றப்படும் என்று சொல்கிறது. இந்த பயணமும் நான் விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்..நான் மீண்டும் இந்த
நாட்டுக்கு திரும்ப வருவேன் என்று எனக்குத்தோன்றவில்லை.. அனேகமாக இதுதான் நம்முடைய கடைசி சந்திப்பாக இருக்கும் என்றும் நினைகின்றேன்...மனதை தேற்றிக்கொண்டு என்னை ஆசீர்வதித்து அனுப்பி வையுங்கள் அப்பா..ஒரு சுத்த வீரனை நம் தாய் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளோம் என்ற பெருமையோடு உங்கள் மீதி நாட்களை கழித்துக்கொள்ளுங்கள்" என்று தன் தந்தையை அரவணைத்து அவரது கண்னங்களில் மாறிமாறி முத்தமிட்டான் மகன் கொர்னேலியுஸ்..
சற்று நேரத்தில் கப்பல் புறப்பட்டது.
" ஜாப்பா துறைமுகம்."
உலகில் உள்ள மிகப்பழமையான துறைமுகங்களில் ஜாப்பா துறைமுகம் ஒன்று என்றால் அது மிகையாகாது. இந்த துறைமுகத்தைப்பற்றி நேயர்கள் அறிந்து கொள்வது கொஞ்சம் அவசியம்..இதைப்பறறிய சில சரித்திரக்குறிப்புகள்.
    ஆதியாகமதில் நோவாகாலத்தில் ஏற்பட்ட ஜலப்பிறலயம் முடிந்தபிற்பாடு அவரின் ஒருமகன் ஜாபேத் தன் மனைவி மக்களுடன் இந்த பகுதியில் குடியேறியதால் இந்த துறைமுகம் அவர் பெயரில் ஜாப்பா என்று அழைக்கப்படதாக ஒரு சரித்திரம் உண்டு.
    கி.மு. 1440ல் எகிப்த்திய பாரோ மன்னர் துத்மொஸ் 3 என்பவர் தன் தளபதி தெஹுதி என்பவரை இந்த ஜாபா துறைமுகத்தை கைப்பற்ற அனுப்பினார். அவர் பலகூடைகளில் பலவிதமான அன்பளிப்புகளை அப்போதய கானானிய கவர்னருக்கு அனுப்பினார். அன்றிறவு அன்பளிப்புளுடன் கூடைக்குள் அமர்ந்திருந்த எகிப்த்தியவீரர்கள் வெளிவந்து இந்த ஜாப்பா துறைமுகத்தை கைப்பற்றினார்கள் என்று ஒரு சரித்திரம் உண்டு.
யோனாஸ் தீர்க்கதரிசி இந்த ஜாப்பா துறைமுகத்திலிருந்துதான் தார்சியுஸ் பட்டிணத்திற்கு கப்பல் ஏறினார்.
மோசேக்குப்பிற்பாடு இஸ்ராயேல் மக்களை வழி நடத்திய ஜோஷுவா " தான் " குலத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த ஜாப்பா பகுதியை அவர்கள் உரிமைசொத்தாக. பிரித்துக்கொடுத்தார்.
தெபோராவின் பாடலில் " தான் ஏன் கப்பலிலேயே வசிக்கின்றான்" என்று வருகின்றது.
பேரரசர் தாவீதும் சாலமோனும் இந்த ஜாப்பா துறைமுகத்தை தனதாக்கிக்கொண்டார்கள். சாலமோன் மன்னர் தான் கட்டிய தேவாலயத்திற்கு தேவையான மரங்களை தீர், சீதோன்,
லெபனான் நாட்டிலிருந்து வரவழைக்க இந்த ஜாபா துறைமுகத்தை பயன்படுத்தினார்.
கி.மு.701ல் இந்த ஜாப்பா துறைமுகத்தை பொனீஸியர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.
மாவீரன் அலெக்ஸாண்டர் இந்த ஜாப்பாவை கைப்பற்றி கிரேக்கர்களின் ஆட்சிக்கு வழிவகுத்தார். அதன்பிறகு பல காலம் கழித்து மக்கபேயர்கள் இந்த ஜாப்பாவைக்கைப்பற்றி யூதர்கள் ஆட்சியை ஏற்படுதினார்கள். இவர்களிடமிருந்து ரோமர்கள் கைக்கு மாறியது.
கி.பி.636 இந்த ஜாப்பா துறைமுகம் அராபியர்கள் கையில் மாறியது. பிறகு கி.பி. 1100ல் முதல் சிலுவையுத்தத்தின் போது அது மேற்கத்திய சிலுவை யுத்தவீரைகள் கையில் மாறியது.
கி.பி. 1268ல் எகிப்தியர்கள் கையில் மாறியது. பதினாலாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை இந்த ஜாப்பா பட்டிணம் பல போர்களால் பாதிக்கப்பட்டு சிதிலமாகிப்போய் ஒரே மண்மேடும் குப்பையுமாய் மாறிப்போனது.
ரோமர்களின் ஆட்சியின்போது யூதர்கள் புரட்சிசெய்தனர். அந்தப்போரில் 8400 யூதர்கள் இந்த ஜாபாவில் கொல்லப்பட்டர்கள். வெற்றிகண்ட ரோமர்கள் இந்த ஜாப்பாவில் ஒரு கோட்டைக்கட்டிக்கொண்டு யூதர்கள் மீண்டும் தலைஎடுக்காதபடி நிரந்தரமாக தங்கிவிட்டார்கள்.[ இப்போதுள்ள ராயப்பர் தேவாலயம் இந்த கோட்டையின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது].
கி.பி.1515ல் இந்த நாடும் இந்த ஜாப்பதுறைமுகமும் பைசாந்தியர்கள் எனப்படும் துருக்கியர்களின் கைக்கு மாறிப்போனது.
பலகாலங்களுக்குப்பிறகு அதாவது மார்ச்மாதம் 7 ஆம் தேதி 1788 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் தேசத்தின் அதிபதி முதலாம் நெபோலியன் பைசாந்தியர்களிடமிருந்து இந்த ஜாப்பாவை
கைப்பற்ரினார். அதன் பிறகு நடந்தவை படிப்போர் மனதை பதைபதைக்க வைக்கும். இதைப்பற்றி அந்த போரில் உதவி கமிஷனர் ஆகப்பணியாற்றிய மோய்த் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்.
"மார்ச் 10 ஆம் தேதி1799 ஆம் வருடம் ஜாப்பா வெற்றிகொள்ளப்பட்டவுடன் சரணடைந்த பல ஆயிரம் பைசாந்திய ராணுவ வீரர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டபின் ஒரு வெட்ட வெளியில் பல பிரிவுகளாக நிற்கவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தங்களுக்கு நேரப்போகும் கதிபற்றி நன்றாகவே தெரிந்திருந்ததால் பலர் அழுவதையும் விட்டுவிட்டு மனம்
வெறுத்துப்போய் பரிதாபமாக நின்றார்கள். சிலர் ஒருபகுதியாக பிறிக்கப்பட்டு மஞ்சள் நிறமாக தேங்கியிருந்த ஒரு குட்டையின்முன்பாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். தளபதி பான் என்பவர் " சார்ஜ் " என்று உத்திரவுகொடுத்ததும் அட்டூழியம் ஆரம்பித்தது..பல ஆயிரம் பைசாந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாக்கப்பட்டனர். எங்கும் வெறியாட்டம் .தாண்டவமாடியது. ஃப்ரென்ச் ராணுவ வீரர்களின் குண்டுகள் அனைத்தும் தீர்ந்துபோய் விட்டது. ஆனால் பரிதாபம். இன்னும் சில நூறு பைசாந்திய ராணுவ வீரர்கள் உயிரோடு நின்றுகொண்டிருந்தார்கள்... அவர்களைக்கொல்ல என்னவழி....இருக்கவே இருக்கின்றது துப்பாக்கி முனையில் உள்ள பைனெட் என்னும் விஷம்தடவிய கத்தி. மேலும் பட்டாக்க்கத்தி  உதவியாலும் பைனெட் என்னும் துப்பாக்கிமுனை கத்தியாலும் மீதமுள்ள பைசாந்திய ராணுவ வீரர்களை கொன்று தீர்த்தார்கள். இந்த வெறியாட்டமெல்லாம் வெற்றிகரமாக முடித்தபின்  இறந்த வீரர்களைப்புதைக்காமல் அப்படியே விட்டுவிடவே அந்த ஆயிரக்கணக்கான சடலங்களும் அழுகிப்போய் அதன் வீச்சத்தால் ஜாப்பா நகரமே நாறிப்போனது."
சாதாரண நம்மைப்போன்ற மக்களுக்கு இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் உலகில் உள்ள எந்த நாட்டைச்சேர்ந்த ராணுவத்துக்கும் வெற்றி ஒன்றே   குறிக்கோள். அதை அடைய என்ன விலையையும் கொடுக்க தயாராய் இருகின்றார்கள். வெற்றி அடைந்துவிட்டால் தோல்வியுற்ற எதிரி மீண்டும் தலை எடுக்கதபடி முற்றிலுமாக   அழிக்கப்படவேண்டும்..அப்போதுதான் மற்ற எதிரிகள் இவர்களைக்கண்டு பயப்படுவார்கள்.
    மேலும் சரித்திர நிகழ்வுகள் இந்த கதைக்கு தேவையற்றது என்று நான் நினைகின்றேன்.... ஆனால் யேசுநாதர் காலத்துக்குப்பின் புனித ராயப்பர் தபித்தா என்னும் இறந்த பெண்ணை உயிர்பித்தது இதே ஜாப்பாவில்தான். இனிமேல் நாம் கதைக்கு செல்லலாம்.
பெரும் வாணிக கப்பல்களும் ராணூவ கப்பல்களும் ஜாப்பா துறைமுகத்தில் நேரடியாக வர முடியாது.. அது ஆழமற்ற துறைமுகம்.. எனவே அவை கடலில் ஆழமானபகுதியில் நிறுத்தப்பட்டு சிறு தோணிப்படகுகள் மூலம் பயணிகளும் சரக்குகளும் துறைமுகத்தில் கொண்டுவந்து சேர்க்கப்படும். இவ்விதமாகத்தான் அன்று ரோமாபுரியிலிருந்து புறப்பட்ட
அந்த600 ராணுவ வீரர்களும் அவர்தம் படைக்கலன்களோடு ஜாப்பா பட்டிணம் வந்திருந்தனர். துறைமுக சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு அந்த ரோமானிய வீரர்கள் நூறு நூறு நபர்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு நூற்றுவர் தலைவன் நியமிக்கப்பட்டு அங்கிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள செசாரியாவை அடைய வேண்டும்.
அங்குதான் ரோமைசாம்ராஜிய அரசப்பிரதிநி அரண்மனை இருக்கின்றது. அப்போதைய அரசப்பிரதிநிதியாக பதவி வகித்தவர் ஃப்ரான்ஸ் நாட்டைச்சேர்ந்த போஞ்சிபிலாத்து என்பவர்.
     இந்த சமயத்தில் ஜெருசலேமில் ஒரு கலவரம் ஏற்படவே இரண்டு நூறு சிப்பாய்களை ஜெருசலேமுக்கு அனுப்பவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஒரு வீரன் அவசரகடிதம் ஒன்று கொண்டுவந்து நம் கதாநாயகன் கொர்னீலியுஸிடம் சேர்பித்தான். அதை எழுதியவர் போஞ்சிபிலாத்தின் அரண்மனை அதிகாரியும் தளபதியுமான அபியத்தார். அதன்படி
கொர்னீலியுஸ் தன் படைவீரர்கள் நூறுபேரை தன்னுடன் வைத்துக்கொண்டு மேலும் இருனூறு வீரரை ஜெருசலேமுக்கு திருப்பினார். அந்த இடம் தான் நசறேத்தூர். அந்தக்காலத்தில்  நசரேத்தூர் பிரமாதமான ஒரு ஊராக இல்லை. தேவமாதாவைப்பற்றியோ சூசையப்பரைப்பற்றியோ யேசுநாதரைப்பற்றியோ யாருக்கும் அவ்வளவாகத்தெரியாது. அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம் சூசை ஒரு வயோதிக ஏழைத்தச்சன். அவர்மனைவி மரியாள்...செப்போரிஸிலுள்ள பெரும்பணக்காரியான அன்னாம்மாளின் மகள்.. இவர்களுக்கு
இருபத்து ஐந்துவயதில் ஒரு ஆண்பிள்ளை...யேசு என்று பெயர்..ஆனாலும் இந்த பணக்காரியான அன்னம்மாளுக்கு தன் மகளுக்கு அதுவும் பதினான்கு வயதுகூட நிரம்பாத ஒரு அழகிய பெண்ணுக்கு இப்படி ஒரு வயோதிக மாப்பிள்ளைதானா கிடைத்தார் என்று மரியாள் தண்ணீர் குடம் தூக்கிவரும்போதும் போகும்போதும் அவர் காதுபடவே
பேசிக்கொள்வார்கள். இதைக்கேட்க்கும்போதெல்லாம் மரியாளுக்கு மனது மிகவும் வலிக்கும்...திருமணம் என்பது சொர்கத்தில் கடவுளால் தீர்மானிக்கப்படுகின்றது... இதைப்பற்றிப்பேச
இவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. என் கணவர் எப்பேற்பட்ட நீதிமான்...இவரை கணவனாக நான் அடைய நானும் என் பெற்றோரும் எப்பேற்பபட்ட தவம் செய்திருக்க வேண்டும்   என்று மனதுக்குள் பொருமிக்கொள்வார்...
[நசரேத்தூரில் மரியாளின் நீறூற்று என்று வழ்ங்கப்படும் marys fountain மாதாவின் காலத்தில் அவ்வாறு அழைக்கப்படவில்லை..அது பொதுவாக நசரேத்தூர் மக்கள் தண்ணீர் பிடிக்கும் இடம். இந்த இடத்தில்தான் கபிரியேல் சம்மனசனவர் தேவமாதாவுக்கு தோன்றி அருள் நிறைந்தவளே வாழ்க என்று முகமன் கூறினார். இதைக்கேட்ட மரியாள் என்னவோ ஏதோ என்று பயந்து பதறியடித்து தன் வீட்டுக்குள் ஓடினார். அந்த வீட்டினுல் கபிரியேல் தூதன் தோன்றி மீண்டும் வாழ்த்துக்கள் கூறி ஆண்டவனின் மீட்புத்திட்டத்தை கூறவே மரியாளும் ஆண்டவனின் தாயாக தான் தயார் என்று தன் சம்மதத்தை கூறினார். எட்டு நூற்றாண்டுகளுக்குப்பின் மாதாவின் பக்தி ஆரம்பித்தபிறகுதான் இந்த தண்ணீர்பிடிக்கும் இடம் மாதாவின் நீறூற்று என்று பெயர் பெற்றது.]
இந்த பொதுவான தண்ணீர் பிடிக்கும் இடத்திற்கு முன்னூறு ரோமை ராணுவ வீரர்கள் வந்ததும் பெரும் அமளி ஏற்பட்டது. வெகுதூரம் நடந்து வந்த ரணுவ வீரர்கள் தண்னீரைக்கண்டதும் பெரும் மகிழ்ச்சிகொண்டு தாகம்தணிக்க ஓடினர். அங்கிருந்த பெண்கள் பதறியடித்து " ஓடுங்கள்... ஓடுங்கள்.. உயிர் பிழைக்க ஓடுங்கள்..இந்த ரோமை வீரர்களிடமிருந்து.தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று அந்த நசரேத்தூர் வீதிகளில் ஓடினர். அனேகமாக எல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும் பட் ..பட்... என்று மூடிகொள்ளும் சப்த்தம் கேட்டது.
அப்போது கொர்னேலியுஸ் " அமைதி..அமைதி...எச்சரிக்கை...யாரும் பொதுமக்களுக்கு ஒரு தொந்திரவும் செய்யக்கூடாது.. முக்கியமாக யூதப்பெண்களை நம் ஆட்கள் யாரும்  தொடக்கூடாது.. அவர்களின் கால்நடைகளையோ...எந்தப்பொருளையுமோ தொடக்கூடது. இந்த யூத மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் ...நம்முடைய செயலால்
ஏதேனும் ஏடாகூடம் ஆகிவிட்டால் பெரும் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது ..எனவே எச்சரிக்கை... தவறு செய்பவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார்.
    கொர்னேலியுஸின் எச்சரிக்கை பல ரோமை வீரர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. அக்காலத்தில் ராணூவம் ஊருக்கு புகுந்தால் பெண்கள் கால்நடைகள் நகைகள் என்று அனைத்தையும் கொள்ளைஅடிப்பார்கள்.. அவர்களின் மேலதிகாரிகளும் அவற்றை கண்டுகொள்ள மாட்டார்கள்..காரணம் ஆதாயமில்லாமல் யாரும் வேலை செய்ய முன்வருவதில்லை.  பிறகு போர் என்று வந்துவிட்டால் போரிட யார் வருவார்கள். எனவே கொர்னேலியுஸின் எச்சரிக்கையால் ரோமை வீரர்கள் கோபப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
   ஒருவன் " இந்த கொர்னேலியுஸ் சுத்த மோசம்... தானும் தின்ன மாட்டான்... மற்றவரையும் தின்ன விட மாட்டான் " என்றான்.
மற்றவன் " இவன் தானும் படுக்க மாட்டான்...தள்ளியும் படுக்க மாட்டான் " என்றான்.. மற்றவன் " அடே... கொர்னேலியுஸுக்கு குடும்பம் குட்டி என்று இருக்கின்றது. ஆனால்  உனக்கும் எனக்கும் இப்படியா இருகின்றது .. நம்முடைய குடும்பம் ரோமில் இருக்கின்றது.. உயிர் பிழைத்து சொந்த நாட்டுக்கு போகும்போது நாலு காசு சம்பாரித்து கொண்டுபோகலாம்
என்றால் இந்த நாய் நம்மை விட மாட்டேன் என்கின்றதே " என்றான்.
இந்த சம்பாஷணைகள் எல்லாம் கொர்னேலியுஸுக்கு தெரியாமலில்லை. அவனைப்பொருத்தமட்டில் ராணுவம் என்பது பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்யும் ஒரு  பொதுநல ஸ்தாபனம்.. இதில் சுய நலத்துக்கோ லாப நோக்கத்திற்கோ இடமில்லை...ஆனால் மற்ற ரோமை ராணுவ வீரர்களைப்பொருத்தமட்டில் ராணுவம் என்பது சீருடை அணிந்த
கொள்ளையர் கூட்டம்... தங்களை எதிர்க்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதை. இப்படியாகத்தான் கொர்னேலியுஸ் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தார். இந்த சூழ்நிலையில்  நசரேத்தூரில் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டது. நடைப்பயிற்சி சென்ற ராணுவ வீரர் சிலர் தனிமையில் ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு திருமணமான பெண்ணைப்பார்த்து
காமுற்றனர். இருவர் காவலுக்கு நிற்க ஒருவன் அவளை வாயைப்பொத்தி தூக்கிச்சென்றான்..ஆனால் விதி வேறுவிதமாக வேலை செய்தது. யாரும் அறியாமல் செய்த காரியத்தை  தூர ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சில பெண்கள் பார்த்துக்கூச்சலிட்டனர். ரோமை வீரனிடம் மாட்டிக்கொண்ட பெண் திமிறினாள்..இந்த முயற்சியில் அவளது ஆடை கிழிந்து மானபங்கமேற்பட்டது. அதற்குள் ஊர் திரண்டது. நிலமை உணர்ந்த அவன் அவளை விட்டுவிட்டு ஓடிப்போனான். ஆனால் அவளோ சப்பதமிட்டு அழுதாள்..
" அடே ரோமை நாயே..இனி நான் என் கணவன் முகத்திலும் என் உறவினர் முகத்திலும் எப்படி விழிப்பேன்..என் கணவனோ இல்லை இந்த ஊர் மக்களோ யார்தான் என்னை இனி கௌரவமாக நடத்துவார்கள்.. .என் வாழ்கையே பாழாகிவிட்டது... இனிமேல் நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்...நான் வயிறெறிந்து சொல்கிறேன் ... உன் குடும்பம் விளங்காது..
.உன் பெண்டாட்டி பிள்ளைகள் அவிசாரியாகப்போகட்டும்...உன் குடும்பம் மொத்தமும் நாசமாகப்போகட்டும் "... என்று கூறி மண்ணை வாறி வீசினாள்...பிறகு யாரும் எதிர்பாராத   வகையில் தடதடவென்று ஓடி உயிர்ந்த மலைமீது ஏறி தலை.குப்புற விழுந்து தற்கொலை செய்துகொண்டாள்..இந்த மலை mount precipice எனப்படுகின்றது.
[ இந்த மலையில்தான் பிற்காலத்தில் யேசுநாதரையும் கீழே தள்ளி கொல்ல மூயற்ச்சித்தார்கள்.ஆனால் யேசுநாதர் அவர்களிடையே சென்று மறைந்துபோனார். சொந்த ஊர் தீர்க்கதரிசிகளுக்கு மரியாதை இல்லை என்றதர்காக அவருக்கு இந்த தண்டனை.]
தற்கொலை செய்துகொண்ட அந்த எபிரேயப்பெண் விட்ட சாபம் அந்த ரோமை வீரனுக்கு அப்படியே நூற்றுக்கு நூறு பலித்தது. ஆனால் அதற்கு ஐந்து வருடகாலம் பிடித்தது.
நாசரேத்தூரில் யேசுநாதரின் தகப்பனாறாக இருக்கப்பேறுபெற்ற புனிதர் சூசையப்பர் யேசுநாதருக்கு இருபதைந்து வயதாகும்போது மரித்தார். அதற்குப்பிறகு தன் இருபத்தெட்டாவது வயதில் தன் தாயார் மரியாளுடன் கலிலேயாவிலுள்ள கப்பர்னஹூம் என்னும் கடற்கறைப்பட்டினத்திற்கு சென்று அங்கே வசித்துவந்தார். அங்கே லேவி என்றும் பிற்காலத்தில் மத்தேயு
என்றும் அழைக்கப்பட்டவரின் வீட்டில் வசிக்கலானார். இந்த மத்தேயூ சுங்க வசூல் செய்யும் அதிகாரியாக பணியாற்றினார். ஒரு விதத்தில் மத்தேயூ யேசுநாதரின் சகோதரர் உறவின் முறை ஆகின்றார். அதாவது மேரி என்பவர் தேவதாயாரின் உடன்பிறந்த மூத்த சகோதரி. அதாவது மரியாளின் தாயார் அன்னம்மாளுக்கும் அவர் கணவர் சுவக்கீன் என்பவருக்கும் முதல்
மகளாகப்பிறந்தவர்... திருச்சபையும் உலகமும் இவரை ஏனோ மறந்துவிட்டது. இந்த மேரியை கிளியோப்பா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.
இந்த தம்பதியினருக்கு பிறந்தவள் தான் இன்னும் ஒரு மேரி.இவரை மேரிகிளியோப்பா என்றும் அழைப்பர். இந்த மேரிக்கு அல்பேயுஸ் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார்கள். அல்பேயுஸ் ஏற்கணவே திருமணம் ஆகி இந்த மத்தேயுவை பெற்றிருந்தார். தன் மனைவி இறந்தபின்புதான் இந்த மேரியை திருமணம் செய்துகொண்டார்.
இந்த மேரி அல்பேயுஸ் தம்பதியினருக்கு சின்ன யாகப்பரும் யூதா ததேயும் மக்களாகப்பிறந்தனர். அல்பேயுஸ் இறந்தபின் மேரி மீண்டும் திருமணம் செய்துகொண்டு சீமோன் என்பவரை  பெற்றார். ஆக தேவதாயாரின் சகோதரியின் மகளான மேரி என்னும் பெண்ணுக்குப்பிறந்தவர்கள் சின்ன யாகப்பர், யூதாததேயு, சீமோன் என்பவர்கள்.இப்போது மத்தேயும் இந்த மேரிக்கு  மகன் முறை ஆகிறார். இவர்கள் அனைவரும் யேசுநாதரின் அப்போஸ்த்தலர் ஆயினர்.இவர்கள் உறவு இப்படி என்றால் தேவதாயாரின் பெரிய அம்மா அதாவது அன்னம்மாளின் மூத்த   சகோதரி சோபி. இவரை சாலமோன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இந்த தம்பதியினருக்கு சலோமி என்பவள் மகளாக பிறந்தாள்..சலோமிக்கு தக்க பருவம் வந்ததும்  சபதேயு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். இந்த சலோமி சபதேயு தம்பதியருக்கு பிறந்தவர்கள்தான் பெரிய யாகப்பரும், சுவிஷேஷகரான அருளப்பரும்.   ஆக யேசுவின் அப்போஸ்த்தலர்களில் பாதிப்பேர் அவருடைய சகோதரர் உறவின்முறையினறே. அதாவது அவர்கள் யேசுவின் சின்னம்மா...பெரியம்மா பிள்ளைகளே.
       இந்த காலக்கட்டத்தில்தான் யேசுநாதர் தன் வேதபோதக அலுவலை கப்பர்னஹூமில் ஆரம்பித்தார். சொல்லிவைத்தாற்போல் கொர்னீலியுஸும் செசாரியாவிலிருந்து மாற்றலாகி  க்ப்பர்னஹூமுக்கு வந்து குடியேறினார். அவருடன் நசரேத்தூரின் ஒரு எபிரேயப்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான அந்த ரோமை வீரனும் வந்திருந்தான்.இந்த ஊருக்கு
வந்தவுடன் அவனுக்கு ஒரு கெட்ட செய்தி வந்தது. செய்தியைகொண்டுவந்தவள் ஒருகிரேக்கப்பெண்...பெயர் கிரேசியா...அவள் சொன்ன செய்தியில் ஒரு பெரும் பயங்கரம் இருந்தது.
" நண்பரே, உமக்கு உம் மனைவி மற்றும் மகளிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா " என்றாள் கிரேசியா
" ஆம். பாலஸ்த்தீனம் வந்து என்னைப்பார்பதாக செய்திவந்து ஆறு மாதம் ஆகிறது,,, ஆனால் அவர்களைத்தான் இன்னும் கானோம். ஏன் இப்படிக்கேட்கிறீர்கள்."
" அவர்களைப்பற்றி உமக்கு வேறு ஏதாவது தெரியுமா?'
" தெரியாது...இதுவரை நான் செசாரியாவிலிருந்தேன்..ஜாப்பாவுக்கு அவர்கள் வருவதாக தகவல் வந்ததிலிருந்து நான் ஊண் உறக்கம் கொள்வதில்லை. ரோமிலிருந்து வந்த கப்பல்கள் அனைத்தும் விசாரித்துவிட்டேன்..கடைசியில் ஒருகப்பல் சிப்பந்தி கூறிய ஒரு தகவலில் என்மனைவியும் மகளும் ஆறு மாதம்முன்பு ஜாப்பா வந்துவிட்டதாக அறிந்தேன்.அவர்களைக்
காணாததால் ஜாப்பாவிலுள்ள காவல் நிலையத்திலும் என் ராணுவ மேல் அதிகாரிகளிடத்திலும் அவர்களைப்பற்றி விசாரிக்கும்படி எழுதி வைத்துள்ளேன்"
" நண்பரே...இந்த விஷயத்தை உங்களிடம் சொல்வதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், என்னை மன்னிக்கவும்...மனதை தேற்றிக்கொள்ளுங்கள்... உங்கள் மனைவியும் மகளும் இறந்துபோய்விட்டார்கள்".
அந்த ரோமை ராணுவ வீரனுக்கு இடி இடித்து பூமி பிளந்து தான் மூழ்கிப்போனதுபோல் ஆயிற்று. தன் எஜமான் கொர்னீலியுஸைகட்டிக்கொண்டு ஆனமட்டும் கூக்குறாலிட்டு
அழுதான். பிறகு மெதுவாக கேட்டான் " அம்மணி...நீங்கள் யார்?"
" நண்பரே,..என் பெயர் கிரேஸியா... ரோமை ராணுவத்தில் உளவுப்படை அதிகாரியாகப்பணிபுறிகிறேன்.தங்கள் மனைவி மற்றும் மகள் காணாமல் போன விஷயம் தொடர்பாக உங்கள்  முறையீட்டின்பேரில் நான் விசாரணை அதிகாரியாக அமர்த்தப்பட்டேன். முதலில் நான் உங்களை முழுமையாக ரகசியமாக விசாரித்தேன். இதற்கு கொர்னீலியுஸ் மிகவும் உதவினார்.
உங்களைப்பற்றி தெரிந்துகொண்டபின் உங்கள் முறையீட்டில் உள்ள நியாயத்தை உணர்ந்து என் தேடுதல் வேட்டையை நடத்தினேன் ஜாப்பாவில் தங்கிய அவர்கள் விடுதியில்   உங்களுக்காக காத்திருப்பதாகவும் அதுவரை இந்த ஜாப்பா பட்டிணத்தை சுற்றிப்பார்த்துவருவதாகவும் தங்களிடம் கூறிச்சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரவே இல்லை என்றும்
அறிந்தேன். நான் உள்ளூர் திருடர்களை ராணுவ முறையில் விசாரித்ததில் பரபாஸ் என்னும் கள்வன் இந்த ஊருக்கு வந்திருப்தாகவும் இது அவன் வேலையாக இருக்கலாம் என்றும்  கேள்விபட்டேன். ஆனால் ஒரு சாதாரண திருடன் சொன்ன ஒரு விஷயம் என்னை சிந்திக்கத்தூண்டியது. ஜெரிக்கோவிலிருந்து வந்தவர்கள் போன்ற தோற்றமுடைய
இருவாலிப வயதுடையவர்கள் ஜாப்பாவில் நடமாடியதாக கூறினான். அவர்கள் ஊருக்கு புதியவர்களாக தோன்றியதாகவும் கூறினான். மேலும் அவன விசாரிக்கவேண்டிய விதத்தில்   விசாரித்ததில் அவர்கள் அண்ணன் தம்பிகள் என்றும் வேறு விஷயம் தனக்கு தெரியாது என்றும் கூறினான். எனக்கு அந்த ஜெரிக்கோ சகோதரர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மேற்கொண்டு தீவிர விசாரணையில் இறங்கினேன். அவர்கள் நடமாட்டம் ஆள் அறவமற்ற மிகச்சாதாரணமான நசரேத்தூரில் இருப்பதாக அறிந்தேன். ஒரு விபச்சாரிபோல் என்னை  மாற்றிக்கொண்டேன். என்வேடம் சரியான வேலை செய்தது. ஊருக்கு வெளியே ஒரு குகைப்பகுதியில் அந்த இருவரைக்கண்டேன்..என் காமப்பார்வையில் தன்னை இழந்தான் ஒருவன்.
மற்றவன் என்ன திரும்பிகூட பார்க்கவில்லை. என்னைப்பார்த்தவன் தன் தம்பியைபார்த்து " திஸ்மூஸ்...கொஞ்சம் அந்தப்புறம் போ.. நான் இவளுடன் கொஞ்சனேரம் இருந்துவிட்டு   வருகிறேன்...எச்சரிக்கை" என்றான். பிறகு என்ன நினைத்தானோ...சடாரென கத்தியை உறுவினான். சுதாரிப்பாக இருந்த நான் என் சவுக்கால் அவனை சுழட்டியடித்தேன்..அவன்  கத்தி வானில் பறந்தது. இந்த மாதிரி தாக்குதலை அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அடுத்த அடி அவன் கழுத்தில் ..சவுக்கு அவன் கழுத்தில் சுறுக்காகி அவனை இழுத்தது.  அவன் கழுத்தில் ரத்தம். பீரிட்டது. மின்னல் வேகத்தில் அவன் கையில் ஒரு குறு வாள் தோன்றியது. இடதுகையால் என் சவுக்கை பிடித்துக்கொண்ட அவன் வலது கையால்  தன் குறுவாளை என்மீது எறிந்தான். அது என் வயிற்றில் பாய்ந்தது. எல்லாம் வினாடி நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. என் கை தானாக சவுக்கை விட்டுவிட்டது. நான் மயங்கினேன்.
        ஆனால் அவன் தம்பி சுதாரித்துக்கொண்டான்...அண்னே கிஸ்தாஸ்... ஓடிவா...அபாயம் நம்மை நெருங்குகின்றது... ஓடிவா...என்றான். அவர்கள் போகும்போது இருவரும் இரண்டு பெரிய சாக்கு பையை தூக்கிக்கொண்டு போவதை பார்த்தேன். இப்போது நான் என் நினைவு மயங்குவதற்குள் என்னை காப்பாற்றியாக வேண்டும். நசரேத்தூரில் ஒரு பெரிய மாடிவீடு
என் கண்ணில் பட்டது. மெதுவாக அந்த வீட்டை அடைந்து கதவைத்தட்டினேன்..
." செராபி...யார் அது கதவை தட்டுவது என்று பார்.".. என்னும் ஒரு தேன்மதுரக்குரல் கேட்டது.
அந்தப்பெண் கதவைத்திறந்துபார்க்கும்போது நான் மயங்கி அவள் காலில் விழுந்தேன்... ஆதரவாகப்பற்றிக்கொண்டாள் அந்தப்பெண்.
" அம்மா...யாரோ ஒரு வெளி நாட்டுப்பெண். அடிபட்டு வந்திருக்கின்றாள்...நல்ல வேளை உயிர் இருக்கின்றது.. என்ன செய்யலாம் " என்றாள் அவள்.
" செராபி... இது என்ன கேள்வி...அந்தப்பெண் யாராக இருந்தால் என்ன?.. முதலில் அவளுக்கு முதல் உதவி செய். " செராபி என்னும் அந்தப்பெண் தனக்கு முதல் உதவிசெய்தும் அடுத்தநாள் வைத்தியர் ஒருவர்வந்து வைத்தியம் பார்த்ததும் எனக்கு நினைவில் வந்தது. அடுத்த நாள் நான் நினைவுபெற்று செராபியை அழைத்து என்னென்ன காரியங்கள் செய்ய
வேண்டும் .. யார் யாரிடம் என்னென்ன விஷயங்கள் சொல்லவேண்டும் என்னும் விஷயங்களை அவளிடம்கூறினேன்.. விடிந்ததும் நாசரேத்தூரே குபார் ஆகியது. இரண்டு பெண்  சடலங்கள் மலைஅடிவாரத்தில் கிடக்கின்றன என்னும் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. கத்திக்குத்து காயத்தாலும் ஏறாளமான ரத்தப்போக்கினாலும் வலி நிவாரணி மருந்துகலாலும்
நான் மயக்கமுற்றேன்.. நான் மயக்கம் தெளிந்தபோது ஒருவாரம் ஆகி இருந்தது. அதுவரை எனக்கு நினைவுதிரும்பும்போதெல்லாம் வலிதெரியாமலிருக்க வைத்தியர் மயக்கமருந்து  புகட்டிக்கொண்டிருந்தார்.
இறந்த அந்த பெண் சடலங்கள் ரோமை பெண்களுடையது.. அனேகமாக சாயலில் தாயும் மகளுமாக இருக்க வேண்டும் இருவருமே கற்பழித்து கொல்லப்பட்டிருகின்றார்கள் என்ற  மருத்துவ அறிக்கை எனக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் புதைக்கப்பட்ட இடமும் எனக்கு காட்டப்பட்டது. உமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்கள்... ஆனால் உமக்கு ஏன்
செய்தி வந்து சேரவில்லை என்பதுதான் எனக்கு புதிராக உள்ளது என்றாள் கிரேஸியா.
    கதறி அழுதான் அந்த வீரன். கொர்னேலியுஸைக்கட்டிக்கொண்டு அழுதான். " கொர்னேலியுஸ்...நீ பிறக்கும்போதே நல்லவனாக பிறந்துவிட்டாய்... ஆனால் நான் அப்படி அல்ல. பிறக்கும்போதே கெட்டவனாகப்பிறந்தேன்.. கெட்டவனாகவே வளர்ந்தேன்...இதற்காகவே ராணுவத்தில் சேர்ந்தான்...பல நாடுகளில் பணியாற்றி பலவிதங்களில் இன்புற்றேன்...ஆனால்
இந்த நாட்டுக்கு வந்து நசரேத்தூரில் அந்த எபிரேய பெண்ணை மானபங்கம் செய்ததற்கு அவள் இட்ட சாபம் இப்படியா பலிக்கவேண்டும்... கடவுள் இருகின்றார்.. எனக்கு   தக்கதண்டனை கொடுத்துவிட்டார். எனக்கு இதெல்லாம் தேவைதான் கொர்னேலியுஸ்... கடவுள் என்னை மன்னிக்கட்டும்... இனிமேல் நான் இந்த ராணுவத்தில்
பணியாற்றப்போவதில்லை. இனிமேல் நான் யாருக்காக வாழ வேண்டும். எல்லாம் முடிந்துவிட்டது...கொர்னேலியுஸ்... என்னை மன்னித்து உன் வேளையாளாக ஏற்றுக்கொள்..  .ஒரு நல்ல மனிதருக்கு சேவகம் செய்து என் மீதி நாட்களை கழித்துக்கொள்வேன். ஏற்றுக்கொள்வாயா கொர்னேலியுஸ் என்று அவர் காலைகட்டிக்கொண்டு அழுதான் அழுதான் அப்படி அழுதான்.
    ஆனால் கிரேஸியா அவனை விடவில்லை. " பொறும் நண்பரே.பொறும் .நான் வந்த வேலை இன்னமும் முடியவில்லை,,அது உம்மாலும் என்னாலும் தான் ஆகமுடியும் என்று நம்   தலைமை கருதுகின்றது.. உன் மனைவியையும் மகளையும் கதறக்கதற கற்பழித்துக்கொண்ற அந்த பாவிகளை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டாமோ ....என்னக்கொல்ல என்மீது குறுவாள்வீசி என்னை ஆறுமாத காலம் படுக்கவைத்தவனை நான் சும்ம விடலாமா...இந்த இரண்டு காரியங்களும் நம் ரோமை ராணுவத்துக்கு பெரும் இழிவைத்தேடி தந்துள்ளது..
இத்தோடு இல்லாமல் சமாரியாவிலும் ஜெருசலேமிலும் கலகம் செய்து நம் ராணுவத்தை சேதப்படுத்தி ராணுவத்தின் ஆயுதங்களை எல்லாம் கொள்ளை அடித்ததுமல்லாமல் சுமார் ஐம்பது பேரைக்கொண்ற கார்லோஸ் நகரைச்சேர்ந்த சாதோக்கின் மகன் யூதாஸ் என்பவனையும் அவன் கூட்டாளிகளையும் கூண்டோடு அழிக்கும்படி உத்திரவாகி உள்ளது.
எனக்குக்கிடைத்த ரகசியத்தகவலின்படி இன்னும் பத்து நாட்க்களில் இந்த யூதாஸும் பரபாஸ் என்னும் கொள்ளையனும் அந்த ஜெரிக்கோ கொள்ளையர்களும் கூட்டணிபற்றி பேச ஜெருசலமில் கூடுவார்கள் என தெரிகின்றது. அப்போது அவர்கள் அனைவரையும் முடிந்தவரை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவோம் இல்லை என்றால்
அழித்துவிடுவோம்...இந்த அபாய வேலை எல்லாம் முடிந்தபிறகு நமக்கு உயிர் இருந்தால் உம் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும்... என்ன கொர்னேலியுஸ் சரிதானே... இந்த விஷயங்களை உங்கள் மனதின் அடி அழத்தில் போட்டு பூட்டிவையுங்கள் என்றாள் கிரேஸியா. திட்டம் செயல்படுத்த நாள் குறிக்கப்பட்டுவிட்டது.
    ஜெருசலேமின் தேவாலயத்தில் அன்று அதிகமான கூட்டம் கூடியிருந்தது. கிரேஸியாவும் அந்த ராணுவ வீரனும் ஊர் சுற்றிப்பார்க்க வந்த வியாபாரிகள் போலும் கணவன் மனைவி  போலும் சுற்றித்திரிந்தார்கள்.. கொர்னீலியுஸ்கூட மாற்று உடையில் இருந்தார். உள்ளூர் ராணுவ வீரர்களை எதிரிகள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால் கப்பர்னஹூமில்
பணியாற்றிய ஒரு நூறு பேர் கொர்னீலியுஸ் தலைமையில் மாற்று உடையில் திரிந்தார்கள்.
      கொத்தித்தின்னும் கோழியும் நக்கிக்கண்ட நாயும் அதன் பிறவி குணத்தை மறவாது என்பதுபோல் பெண் சபலம் பிடித்த கிஸ்தாஸ் கிரேசியவை சுற்றினான். அவனைப்பார்த்த  உடனே அவன் யார் என்று கண்டுகொண்டாள் கிரேஸியா.. இப்படியாக பரபாஸும் யூதாசும்கூட அடையாளம் காணப்பட்டனர். தேவாலயம் என்பதால் நிராயுதபாணிகளாய்
தேவாலய வளாகத்தில் வந்திருந்த அவர்களை நெருங்கினர் ரோமைப்படையினர். சொல்லி வைத்தாற்போல் தேவாலயத்தில் வாசல்கள் அனைத்தும் சாத்தப்பட்டன. ஒருவரும் வெளியே   போகவும் முடியாது... உள்ளே வரவும் முடியது. இதைப்பயன்படுத்தி ரோமர்கள் வெறியாட்டம் நடத்தினர். தேவாலயமே குபார் ஆனது.என்ன நடக்கின்றது என்று தெரியாமல்
பொதுமக்களும் பெண்களும் குழந்தை குட்டிகளும் கதறிய கதறல் நெஞ்சை பதற வைத்தது. அரைமணி நேரத்திற்குள்ளாக அனைத்தும் முடிந்துவிட்டது..கார்லோஸ் நகரைச்சேர்ந்த  யூதாஸும் அவன் கூட்டாளிகளும் கொல்லப்பட்டுவிட்டனர். பரபாஸும் ஜெரிக்கோ கொள்ளையர் கிஸ்தாஸும் அவன் சகோதரன் தீஸ்மாஸும் கைது செய்யபட்டனர்.
   ஜெருசாலேமின் தேவாலயத்திலேயே நடந்த இந்த கொலைச்சம்பவங்களால் தேவாலயம் தீட்டுப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.
     இந்தப்போரில் தன்மனைவி மகளை இழந்த அந்த ராணுவ வீரன் படுகாயமடைந்தான். அவனுக்கு முதலுதவி செய்து அவனை கப்பர்னஹூமுக்கு அனுப்பினர். அவனுக்கு ராஜினாமா கொடுக்கப்பட்டது
அவனுக்கு உன்மத்தம் பிடித்துவிடும்போல் ஆகியது..மிகுந்த காய்ச்சலுற்றான் அவன். கொர்னேலியுஸ் கப்பர்னாஹூமிலிருந்த பொழுது யூதர்களுக்காக ஒரு தேவாலயம்   தன் சிலவில் கட்டிக்கொடுத்தார். இந்த தேவாலயத்தில்தான் யேசுநாதர் நல்லநிலம் கதையைக்கூறினார். தன் ரோமை ராணுவத்தால் யூத மக்களுக்கு யாதொரு துன்பமும் நேராதபடி
பார்த்துக்கொண்டார்.. இதனால் அவர்பெயர் நல்லவிதமாக கலிலேயா முழுவதும் பரவியது. அவர் யேசுநாதரின் பிரசங்கங்களையும் அவர் செய்த அற்புதங்களையும் நேரில் கண்டார்..
கப்பர்னஹூமில் ஜேயிரின் மகள் இறந்தபின் அவளை உயிர்பெற செய்தது அவர்மீது இன்னும் பக்தியை வளர்த்தது. ஆனாலும் கொர்னேலியுஸ் தன் மூதாதையர்கள் வழிபட்ட வீனுஸ்,  மெர்குரி, அப்பொல்லோ,,, ஸீயுஸ் போன்ற தெய்வங்களை தானும் வழிபட்டுவந்தார்.
அந்த தெய்வங்களின் சிலைகளை தன் வீட்டிலும் வைத்து அவற்றிற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து வந்தார். மொத்தத்தில் அவரும் அவர் வீட்டாரும் நல்லவர்கள்தான். தன் ஊழியக்காரனாக ஏற்றுக்கொண்ட அந்த ரோமைவீரன் நிலை நாள் ஆக ஆக மிகவும் மோசமடைந்தது. இனிமேல் மருந்து மாத்திரைகளால் அவனைகாப்பாற்றமுடியாது என்னும் நிலைக்கு அவன் ஆளானான். கொர்னீலியுஸும் சற்றே கலக்கமடைந்தார். எத்தனைகாலமாக தன்னோடு பணியாற்றியவன்...பெரும்போர் பல கண்டவன் இன்று வாழ்கையை   வெறுத்து தன் ஊழியகாரனாக மாறிவிட்டான்.. இவனுக்காக நாம் என்ன செய்ய முடியும் என்று ஆறாய்ந்தார். பளிச்சென்று அவரின் நினைவுக்கு வந்தவர் யேசுநாதர்...ஆம் இந்த  காய்ச்சல் அவரால் மட்டுமே குணமாக முடியும் என்ற முடிவுக்கு வந்தவறாக யேசுவை சந்திக்க அவர் வீடு சென்றார்.. ஆனால் பரிதாபம் ...அவர் எப்போதெல்லாம் யேசுவை சந்திக்க அவர்  வீடு செல்வாரோ சோதனையாக யேசுநாதர் இருக்க மாட்டார். எனவே ஒருநாள் யேசுவின் தாயாரிடம் தான் வந்த காரியத்தைப்பற்றி கூறினார். தேவ தாயாரும் அடுத்த நாள் தன் மகனை கொர்னேலியுஸ் வீட்டுக்கு அவசியம் அனுப்பிவைப்பதாக கூறினார். தேவ தாயாருக்கு கொர்னீலியுஸை நான்றாகத்தெரியும்.
      அடுத்த நாள் யேசுநாதர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது கொர்னீலியுஸைப்பற்றியும் அவர் யூத மக்களுக்கு செய்துவந்த நல்ல காரியங்கள் பல பற்றியும் எடுத்துறைத்தார்.
யேசுநாதரும் " அம்மா... கொர்னீலியுசை நாம் அறிவோம்..அவர் சுபாவத்தில் நல்ல மனிதர். அவர் நம் குல மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கின்றார்...இப்போதுகூட அவர் தனக்கெனவோ அல்லது அவர் மனைவி மக்களுகாகவோ நம்மிடம் உதவி நாடி வரவில்லை. தன் ஊழியக்காரனுகாக அவனுக்கு குணம் வேண்டி நம்மை அணுகி இருகின்றார்..
இதிலிருந்தே தெரியவில்லையா அவரது குணம்... நாம் அவசியம் இன்று அவரைப்பார்த்து வருவோம்... அவர் வேண்டுவதை செய்வோம்...கவலையை விடுங்கள் அம்மா " என்று   அவர் தன் தாயாரை தன் இருகரங்களையும் விரித்து அணைத்துக்கொண்டார்.
தன் மகனின் பாசமிகு அணைப்பில் தன்னை மறந்தார் தேவ தாயார். யேசுநாதருக்கு எப்பொதெல்லாம் சந்தோஷமான சமயங்கள் வருமோ அப்போதெல்லாம் தன் தாயாரை தன் இரு  கரங்களையும் விரித்து அன்போடு அணைத்துக்கொள்வது அவர் வழக்கம். மதியம் அவர் தன் சீடர்களுடன் கொர்னெலியுஸ் வீட்டுக்கு வருவதாக ஆள் அனுப்பி தயாராக இருக்கும்படி
கூறினர். கொர்னீலியுஸும் தன் வீட்டில் யேசுவின் வருகைகாக காத்திருந்தார். தூரத்தில் யேசுநாதர் வருவதைக்கண்டவுடன் கொர்னீலியு"ஸ் தெண்டனிட்டு வணங்கி ரோமையர்   முறைப்படி வணங்கினார். வயதில் முதியவறான ஒரு ஊழியக்காரனை அழைத்து அவர்காதில் சில வார்த்தைகளைசொல்லி அவற்றை யேசுநாதரிடம் கூறுமாறு சொன்னார். அந்த
ஊழியக்காரனும் யேசுநாதரை எதிர்கொண்டு சந்தித்து அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து " எம் எஜமானே...எம் தேவனே...தேவரீருக்கு அவ்வளவு கஷ்ட்டம் வேண்டாம்.   எம் எஜமானுக்கு தங்களை வரவேற்க தகுதி இல்லாத காரணத்தால் அதோ அவர் வீட்டின் முன்பாகவே மண்டியிட்டு தங்களுக்கு நமஸ்காரம் தெரிவிக்கின்றார். தேவரீர் இங்கிருந்தே அவரை ஆசீர்வதித்தரும். அவரது ஊழியன் குணமடைவான்" என்று தன் எஜமான் நம்புவதாகக்கூறினான். யேசுநாதர் உண்மையில் ஒரு வினாடி திக்குமுக்கடித்தான் போனார்.
அப்போது அவர் கூறினார் " உள்ளபடியே இவரது விசுவாசம் பெரிது. என் சொந்த மக்களிடம் கூட நான் இப்படிப்பட்ட ஒரு விசுவாசியை காண்வில்லை... எனவே ஊழியனே உன்
தலைவனிடம் போய் அவர் விருப்பப்படியே அவர் ஊழியன் குணமடைவான் என்று கூறு " என்றார். அந்த வினாடியே அவரது ஊழியக்காரன் குணமடைந்தான்.
யேசுநாதர் திரும்பிச்செல்லும்போது கொர்னீலியுஸை ஒரு அன்புப்பர்வை பார்த்தார். அது அவரை என்னென்னம்மோ செய்தது. யேசுநாதர் தன் பார்வையிலிருந்து மறையும்வரை கொர்னீலியுஸ் மண்டியிட்டபடியே வணங்கி இருந்தார்.
இதைகண்ட கொர்னேலியுஸ் மனைவி " என் தலைவா...நான் கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்... யேசுநாதர் எப்பேற்பட்ட மகான்.. அவரே நம் வீட்டிறு வர விரும்பியபோது தாங்கள் ஏன் அவரை நம் வீட்டிற்கு அழைக்கவில்லை. நம் வீடும் அவரது வருகையால் புணிதமடைந்திருக்கும் அல்லவா...ஏன் இப்படி செய்தீர்கள்" என்றாள்.
      அதற்கு கொர்னீலியுஸ் " அடிப்பெண்ணே, அவரை அழைக்க எனக்கு மிகுந்த விருப்பம் தான்... ஆனால் நம் வீட்டிலிருக்கும் பிற தெய்வச்சிலைகள் அவருக்கு ஏற்புடயவை அல்ல. அவர் நம் வீட்டிற்குள் வந்தாள் நம் வீடு புனிதம் அடையும்தான் ...ஆனால் அவர் மிகவும் வருத்தப்படுவார்... மேலும் அவர் அவரது ஜாதிஜனங்களாள் பெரிதும் மெசியாவாக  மதிக்கப்படுகின்றார். என்ன இருந்தாலும் நாம் புற இனத்தவர்கள்... நம்மால் அவருக்கு கனவிலும் துன்பம் நேரக்கூடாது... இப்போது புறிந்ததா நான் ஏன் அவரை நம் இல்லத்திற்கு
அழைக்கவில்ல என்று" என்றார்.
     அடுத்தநாள் கொர்னீலியுஸ் செய்த முதல் காரியம் தன் வீட்டிலிருந்த அன்னிய தெய்வங்களின் சொரூபங்களை எல்லாம் ஒரு சாக்குமூட்டையில் போட்டுக்கட்டி ஒரு படகைப்பிடித்து அந்த கலிலேயாக்கடலின் நடுவில் மிக ஆழமானபகுதியில் போட்டதுதான். இதனால் கோபமுற்ற அந்த அன்னிய தெய்வங்களின் ஆவிகள் இதற்குக்காரணமான யேசுநாதரை
பழிவங்க தக்க தருணம் பார்த்திருந்தன. அதற்கான ஒரு வாய்ப்பும் கிடைத்தது. யேசுநாதரும் அவர் சீடர்களும் ஒருபடகில் இந்த கலிலேயக்கடலில் பயணம் செய்யும்போது இந்த அசுத்த   ஆவிகள் கடலுக்கு வெளியே வந்து கடலை சுழற்றியடித்தன. இதனால் கடல் பொங்கியது. பெரும் புயல் உண்டானது. படகு மேலுக்குமாகவும் ஆழதிற்குமாகவும் தத்தளித்தது. இதனால்
மிரண்டுபோன யேசுவின் சீடர்கள் " ஆண்டவரே... எழுந்திருங்கள்..நாம் அனைவரும் புயலால் கடலில் மூழ்கப்போகிறோம்...காப்பாற்றுங்கள் என்றனர். யேசுநாதரும் நிலைமையை உணர்ந்தவராய் கடலை நோக்கி " இறையாதே... அமைதியாய் இரு " என்றார். அவ்வளவுதான். துர்த்தேவதைகள் எழுப்பிய புயல் உடனே அடங்கிப்போயிற்று.. அவைகள் இன்றுவரை
அந்த கடலின் அடியிலேயே வாசம் செய்கின்றன. ஆனால் யாருக்கும் அவை தொந்திரவு செய்யாதபடி யேசுநாதர் அவைகளுக்கு கட்டளையிட்டுவிட்டார்.
யேசுநாதர் அவர் விதீப்படியே சிலுவை சாவுக்கு உட்ப்படுத்தப்பட்டார்.. யேசுநாதர் வேண்டுமா.. அல்லது பரபாஸ் வேண்டுமா என்ற பேரத்தில் யூத குருக்கள் பரபாஸ விடுதலை  செய்யும்படி போஞ்சிபிலாத்துவிடம் கேட்க்கவே பரபாஸ் விடுதலை செய்யப்பட்டான். தீஸ்மோஸ் என்பவனும் அவனது மூத்த சகோதரன் கிஸ்தாஸ் என்பவனும் அந்த ரோமை ராணுவ
வீரனின் மனைவியையும் மகளையும் கற்பழித்துக்கொண்ற குற்றத்திற்காக யேசுவோடு சிலுவையில் அறையப்பட்டனர். இதில் தீஸ்மோஸ் என்பவன் நல்ல கள்ளனாகி யேசுவோடு   பரலோகம் சென்றான். யேசுநாதார் மரித்து பரலோகம் சென்றபிற்பாடு பரிசுத்த ஆவியானவர் தேவதாயார் மீதும் அப்போஸ்த்தலர்களின் மீது இறங்கிவந்த திருநாளுக்கு பிறகு நடந்தவை.
மிகவும் சுவாரசியமான நிகழ்சிகள்.
     செசாரியாவில் கொர்னேலியுஸ் ஒருநாள் மதியம் தன் வீட்டில் யேசுநாதரைப்பற்றி தியானம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு வானதூதன் அவர் முன் தோன்றி
" கொர்னேலியுஸ் உனக்கு சமாதானம்.. ஆண்டவரின் திருமுன் உம்முடைய நற்செயல்கள் பேசப்படுகின்றன.. நீயும் உம் குடும்பத்தாரும் நல்லவர்களாக இருப்பது பற்றி ஆண்டவர்   மிகவும் சந்தோஷப்படுகின்றார். ஆனாலும் உம்மிடத்தில் குறை ஒன்று உண்டு." என்றார். உடனே கொர்னேலியுஸ் முழந்தாட்படியிட்டு.." ஆண்டவரே என் குறையை தெரிவிதால்
அடியேன் உடனே திருத்திக்கொள்வேன்" என்றார். அதற்க்கு தேவ தூதன், " கொர்னேலியுஸ்.. நீ யேசுநாதாரை உன் கடவுளாக ஏற்று ஞானஸ்நானம் பெருவாயாக... அப்போது  நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவார்கள். இப்போது ஜாப்பாவில் தோல் பதனிடும் சீமோன் வீட்டில் இராயப்பர் தங்கி உள்ளார். நீ உடனே உன் ஆட்களை அனுப்பி பேதுருவை உன் வீட்டிற்கு அழைப்பாயாக. மற்றவை உனக்கு பிறகு அறிவிக்கப்படும் " என்றுகூறி மறைந்துபோனார்..
    இதைப்பற்றி வியந்துபோன கொர்னேலியுஸ் உடனே தன் ஊழியக்காரர்கள் ஆறு பேரை ஜாப்பாவுக்கு அனுப்பி இராயப்பர் என்னும் பேதுருவை தன் வீட்டிற்கு அழைக்க அனுப்பினார்.
இதே நேரத்தில் ஜாப்பாவில் சீமோன் வீட்டில் ராயப்பர் மேல் மாடியில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது வானத்திலிருந்து போர்வை ஒன்று இறங்கியது. அதற்குள் மோயீசன் காலத்தில்  யூதர்களுக்கு அருவருப்பானதும் தீட்டானதும் உண்ணக்கூடாததும் என்று அறிவிக்கப்பட்ட பலதரப்பட்ட பறவைகள் விலங்குகள் இருந்தன. அப்போது ஒரு குரல் " இராயப்பா
இவைகளை நீ வெட்டி சமைத்து சாப்பிடு " என்றது. அதற்கு இராயப்பர் " ஆண்டவரே இவை யூதர்களுக்கு தவிர்க்கப்பட்டவை..தீட்டானவை.. இவற்றை நான் ஒரு போதும் உண்டதும்   இல்லை..உண்ணப்போவதும் இல்லை." என்றார். அதற்கு ஆண்டவர்," இராயப்பா.. இவற்றை நீங்கள் உண்ணலாகாது என்று கூறியதும் நாம் தான்..இப்போது அவற்றை சுத்திகரித்து
உம்மை உண்ணச்சொல்வதும் நாம் தான்" என்றார். இந்த காட்சி மறைந்துபோனதும் இரயப்பர் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மீட்பு யூதருக்கு மட்டும் அல்ல. ஆண்டவரால்   படைக்கப்பட்ட அனைத்துலகினருக்கும் பொதுவானது என்பதை உணர்ந்தார்.
       இதே நேரத்தில் கொர்னேலியுஸால் அனுப்பப்பட்ட அந்த ஆறு ஊழியக்காரரும் ஜாப்பாவில் சீமோன் வீட்டின் அழைப்புமணியை அடித்தனர். யூதர்கள் பெரும்பாலும் புறவினத்தாருடன்  பழகுவது இல்லை. அவர்கள் மற்ற இனத்தவரை தன் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை,,தாங்களும் மற்ற இன மக்கள் வீட்டிற்குள் பிரவேசிப்பதும் இல்லை. ஆனால் தன் வீட்டிற்கு
ரோமர்கள் வந்துள்ளதால் சற்றே கலக்கமுற்றார் சீமோன். வந்தவர்கள் இரயப்பரைப்பார்க்க வந்துள்ளதாக கூறியதால் இராயப்பர் வெளியே வந்தார். ரோமைய ஊழியக்காரர்கள் அவர்   பாதம்பணிந்து தங்கள் எஜமான் கொர்னேலியுஸ் தங்களை தரிசிக்க விரும்புவதாகவும் மேலும் பல விஷயங்கள் பேச வேண்டி இருப்பதால் தங்கள் அவசியம் தங்கள் எஜமான்
கொர்னேலியுஸ அழைப்பை ஏற்று செசரியாவுக்கு வந்து அவரை சந்திக்கவேண்டும் என்று அன்போடு அழைத்தனர். இராயப்பரும் அவர்கள் அழைப்பை ஏற்று அவசியம் செசாரியாவில்   கொர்னேலியுஸை சந்திப்பதாக கூறினார்.
    இராயப்பர் இதுவும் ஆண்டவரின் திருவுளம் என்று உண்ர்ந்து செசாரியா சென்று கொர்னேலியுஸை சந்தித்தார். கொர்னேலியுஸ் இராயயப்பரின் பாதம் பணிந்து அவரை வரவேற்றார்.  ஒரு புறவினத்தாரின் வீட்டிற்கு இராயப்பர் நுழைந்தது இதுதான் முதல் தடவை. வீட்டினுள் கொர்னேலியுஸ் தனக்கு சம்மனசானவர் கூறிய காரியங்களைப்பற்றி இராயப்பரிடம் கூற
இராயப்பரும் தான் கண்ட காட்ச்சிகளைப்பற்றி கொர்னேலியுஸிடம் கூறினார். இருவரும் ஆண்டவரின் திருவுளத்தை உணர்ந்தார்கள். ஒருநாளில் இராயப்பரிடம் கொர்னேலியுஸும் அவர்  மனைவி மக்கள் மற்றும் அவரது ஊழியக்காரர்கள் அனைவரும் ஞானஸ் நானம் பெற்றுக்கொண்டனர். ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட சில நாளில் கொர்னேலியுஸ் தன் ராணூவ
வேலையை ராஜினாமா செய்துவிட்டு இராயப்பரின் சீடராக மாறினார்..இராயப்பர் எங்கெங்கு சென்றாரோ அங்கெல்லாம் கொர்னேலியுஸும் சென்றார்..இதற்குப்பின் கொர்னேலியுஸ்
மனைவி மக்களைப்பற்றி எந்த விஷயமும் அறியமுடியவில்லை.
       புனித இராயப்பரும் கொர்னேலியுஸும் இறைவனில் மிகவும் ஐக்கியப்பட்டுப்போனார்கள், இராயப்பர் கொர்னேலியுசுக்கு பிஷப் பட்டம் சூட்டினார். இத பட்டாபிஷேம் நடந்து   செசேசாரியாவில்தான் என்றும் சிலர் ஸ்கெப்சில் என்னும் இடத்தில்தான் என்றும் கூறுவர். புனித இராயப்பர் இவரை புனித திமொத்தியுடன் எஃபெசுஸ் பட்டிணத்திற்கு வேதம் போதிக்க
அனுப்பினார்.   அங்கிருந்து கொர்னேலியுஸை ஸ்கெப்சிஸ் என்னுமிடத்திலுள்ள அரசனை மனம்திருப்ப அனுப்பினார்..அந்த மன்னன் பெயர் திமொதிரியுஸ்.. பெரும் கொடுங்கோலன்..
அவன் அனேக தர்க்க சாஸ்த்திரங்களை கற்றதினால் அவனுக்கு கிரிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்காது. இப்படியொரு மன நலன்கொண்ட மன்னனையும் அவன் நாட்டு  மக்களையும் மனம்திருப்ப வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.
     புனித இரயப்பரின் கட்டளையை சிரமேற்கொண்டு புனித கொர்னேலியுஸும் ஸ்கெப்சிஸ் பட்டிணத்திற்கு சென்றார். இவரது வருகை உடனே மன்னன் திமித்ரியுஸுக்கு   தெரிவிக்கப்பட்டது. மன்னனின் ஆணைப்படி கொர்னேலியுஸ் மன்னனை நேர்காணல் கண்டார். அவரைக்கண்ட மாத்திரத்தில் மன்னன் அவர் மீது கடும் கோபம் கொண்டான்.
இந்த நாட்டிற்கு எதர்காக வந்திருகின்றீர் என்றார். அதற்க்கு கொர்னேலியுஸ் மன்னனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் அறியாமை இருளை அகற்றி யேசு கிரிஸ்த்துவின்  ஞான ஒளியை ஏற்ற வந்துள்ளதாகக்கூறினார்.
மன்னன் திமிதிரியுஸ் அவரிடம் பல கேள்விகள் கேட்டான்.. எல்லா கேள்விகளுக்கும் கொர்னேலியுஸ் அமைதியாக பதில் கூறினார்.. சிறிது நேரத்தில் மன்னனின் குணம் மாறியது.
யேசுநாதரைப்பற்றி பல கேள்விகள் கேட்டான்... கொர்னேலியுஸ் அவனுக்கு தம திருத்துவம் பற்றியும் தேவ அன்னையின் அமல உற்பவம் பற்றியும் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய   சர்வேசுரனின் மனிதாவதாரம் பற்றியும் அவரது அற்புதங்கள் போதனைகள்பற்றியும், அவரது கொடுமையான் சிலுவைச்சாவுபற்றியும் அவரது உயிர்த்தெழுதல் பற்றியும் இதற்கெல்லாம்
தான் சாட்சி என்பது பற்றியும் அவனுக்கு கூடுமானதுவரை விளங்கக்கூறினார்...இருப்பினும் திமித்திரியுஸ் மன்னனுக்கு ஆணவம் தலைதூகியது. பிறவிக்குணம் அவ்வளவு லேசில் மாறிவிடுமா என்ன..
     விடிய விடிய ராமாயணம் கேட்டகதையாக கொர்னேலியுஸ் தன் பூர்வீக தெய்வமான அப்பொல்லோ, ஸீயுஸ் போன்றவைகளுக்கு தூபம் மற்றும் தூபாராதனை காட்ட வற்புறுத்தினான்.
மன்னன் திமித்ரியுஸுக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்த கொர்னேலியுஸ் தன்னை அந்த தெய்வங்கள் உள்ள கோயிலுக்கு அழைத்துப்போக சொன்னார். மன்னன், கொர்னேலியுஸ்  பணிந்துவிட்டார் என்று இருமாப்பு அடைந்தான். தன் மனதில் பெரும் உவகை கொண்டான். ஆனால் அவன் சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை..
      அந்த ஸ்கெப்சிஸ் நகரில் பெரும் கோயில் ஸீயுஸ் தெய்வத்தினுடையது. கொர்னீலியுஸ் அந்த கோயிலின் முன் சென்று கிழக்கு நோக்கி திரும்பி மண்டியிட்டு தம் கைகளை மிகவும்   உயர்த்தி யேசுவை நோக்கி மன்றாடினார். அப்போது அந்த பேரதிசயம் நடந்தது. திடீரென எழுந்தது ஒரு பூகம்பம். ஒரு வினாடி நேரத்தில் அந்த மா பெரும் ஸீயுஸ் ஆலயம் தரைமட்டம்
ஆனது. அந்த கோயிலில் இருந்த தெய்வங்கள் சிலைகள் எல்லாம் தரைமட்டம் ஆகின. அந்தக்கோயிலில் இருந்தவர்கள் எல்லாம் மரணித்தனர். அந்தக்கோயிலின்   இடிபாடுகளைக்கண்டவர்கள் இந்தக்கோயிலில் யாரேனும் இருந்தால் அவர் உயிரோடு இருக்கவே முடியாது என்று கூறுமளவுக்கு கோயில் அவ்வளவு சிதிலமாகி இருந்தது.
அப்போது அந்தக்கோயிலின் பூஜாரி ஒருவர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மன்னன் திமிதிரியுஸை அணுகி " அரசே...ஆபத்து. . மன்னா... நாம் மோசம் போய்   விட்டோம்... இந்தக்கொடுமையை நான் என்னவென்று சொல்லுவேன்...நம் மஹாராணியும் நம் இளவரசரும் கோயிலில் நுழைவதைப்பார்த்தேன்..ஆனால் அதற்குள்ளாக பூகம்பம்
வந்துவிடவே கோயில் தரைமட்டம் ஆகிவிட்டது.. உறுதியாக சொல்ல முடியவில்லை...நாம் மஹா ராணியையும் நம் இளவரசரையும் இழந்துவிட்டோம் என்று தோன்றுகின்றது" என்றார்.
      மன்னான் திமித்ரியுஸுக்கு இந்த செய்தியால் அப்படியே தலை சுற்றிப்போனது. இதற்கெல்லாம் காரணம் இந்த கொர்னீலியுஸ்... ஆஹா... கொர்னேலியுஸ் என்னிடமே கடைசியில்   உன் வேலையை காட்டிவிட்டாயா... உன்னை என்ன செய்கிறேன் பார்... அதுவரை இவனை அந்த இருட்டு சிறையில் போடுங்கள்" என்று உத்திரவிட்டான்.
இருப்பினும் மன்னனுக்கு தன் மனைவியிடமும் மகனிடமும் இருந்த பாசத்தால் தன் மதி மந்திரிகளை அழைத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டான்.
அவன் மந்திரிகள் " அரசே ...கொர்னேலியுஸின் கடவுள் வல்லமையானவர் போலும் ..கொர்னேலியுஸின் ஜெபத்தால் பூகம்பத்தை வரவைக்கமுடியுமானால் ஏன் நம் மஹ ராணியையும்   இளவரசரையும் மீட்டுகொண்டுவர முடியாது... இந்த விஷயத்தில் நாம் அவரை எதிர்க்கமுடியாது. அவரிடம் சமாதாணமாகப்போவதுதான் நல்லது.." என்றனர்.
இதே நேரத்தில் கொர்னேலியுஸ் சிறையில் மஹராணிக்காகவும் அவர் மைந்தனுக்காகவும் யேசுவிடம் மன்றாடினார். அப்போது ஒரு கோயில் பூஜாரி பார்பதோஸ் என்பவன் அரசனை   அணுகி," அரசே.. ஒரு நல்ல செய்தி.. தரைமட்டமான நம் சீயுஸ் ஆலயத்தில் இடிபாடுகளூக்கு உள்ளிருந்து நம் மஹா ராணியார் குறளும் நம் இளவரசர் குறளும் கேட்கிறது. அவர்கள்
நாம் முன் பின் கேட்டறியாத யேசுக்கிரிஸ்த்துவின் பாடல்களை பாடிக்கொண்டிருகின்றார்கள்... யேசுவின் திருநாமம் வாழ்க என்றும் ஆண்டவறாகிய யேசுவே என் தேவனே தேவறீர்
என் இல்லத்திற்கு எழுந்தருளி வர நான் தகுதியற்றவள்..ஆனல் தேவரீர் ஒரு வார்த்தை கூறும்..நாங்கள் குணமடைவோம் " என்று பெரும் குறலெடுத்துப்பாடுவதை நான் கேட்டேன்" என்றான்.
     ஆம் . இந்தப்பாடல் அன்று கொர்னீலியுஸ் தன் ஊழியன் குணமடைய ஆண்டவறாகிய யேசுக்கிரிஸ்த்துவை நோக்கி கூறிய அதே பாடல் தான்..
மன்னன் மிகுந்த மகிழ்சிகொண்டான். உடனே சிறைக்கு ஓடி கொர்னேலியுஸை விடுதலை செய்து அவர் பாதம் பணிந்தான்...கடவுளின் கிருபையால் மஹாராணியும் இளவரசரும்   உயிருடன் மீட்கப்பட்டார்கள்..பிற்பாடு அந்தநாட்டு மன்னன் திமிதிரியுஸும் அவன் குடும்பத்தினரும்.அவன் நாட்டு மக்களும் யேசுகிரிஸ்த்துவின் பேரருளாள் ஞானஸ்நானம்   பெற்றனர்.
      கொர்னீலியுஸ் பலகாலம் அந்த நாட்டிலேயே வாழ்ந்து வேத சாட்சியாக மரித்தார். அவரை அந்த இடிந்த ஸீயுஸ் கோயிலின் முன்பாகவே புதைத்தனர். பலகாலங்களுக்குப்பிறகு அவரது  சமாதி திரான்ஸ் நகரைச்சேர்ந்த புனித சிலுவானுஸ் என்பவரால் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடத்தில் புதைக்கப்பட்டதாக ஒரு சரித்திரம் சொல்லுகின்றது. ஆனல் எங்கு மீண்டும்
புதைக்கப்பட்டார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை.
          அமர கீதம்...இந்த புனித கொர்னேலியுஸ் கதைக்கும் இந்த கதையின் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று நேயர்கள் கேட்ப்பது எனக்கு புறிகிறது. இந்தக்கதையின் ஆரம்பத்தில்   ரோமில் புனித கொர்னேலியுஸை கப்பலிலேற்றி வழி அனுப்பவந்த அவரது தந்தை " கொர்னேலியுஸ் ...உன்னை நான் உன்னை ஒரு கவியாக படிக்க வைத்திருந்தால் நீ இன்னேரம்
உலக மஹா கவி ஆகியிருப்பாய்" என்று கூறினார் அல்லவா...அவரது வாக்கு பலித்தது...கொர்னேலியுஸ் கவித்துவம் படிக்காமலேயே உலகமஹா கவி ஆகிவிட்டார்...அவரது பாடல் வரிகள் " ஆண்டவரே...தேவரீர் என் இல்லத்திற்கு எழுந்தருளிவர நான் தகுதியற்றவன்...ஆனால் தேவரீர் ஒரு வார்த்தை மட்டும் கூறியருளும் என் ஊழியன் குணமடைவான்" இந்த
பாடலை சற்றே கவணியுங்கள்... என்ன ஒரு தாழ்ச்சி... என்ன ஒரு பணிவு..என்ன ஒரு வேண்டுதல்..என்ன ஒரு நம்பிக்கை.. ஆஹா இதுவல்லவோ ஆண்டவருக்கு ஏற்ற ஜெபம்..
ஆகவே ஆண்டவரும் இந்த கொர்னேலியுஸை மகிமைப்படுத்த விரும்பினார். அதற்காக இவரது மன்றாட்டை உலகமெல்லாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று உலகமெல்லாம்   நிறைவேற்ற்ப்படும் தம் பலி பூசையில் இந்தப்பாடலை சேர்பித்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை இந்தப்பாடலை சற்றே மாற்றி
" ஆண்டவரே தேவரீர் என் உள்ளத்தில் எழுந்தருளிவர நான் தகுதியற்றவன்... ஆனால் தேவரீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆண்மா குனமடையும்" என்று   சொல்லுகின்றது. இந்தப்பாடல் உலகம் முடியும் வரை பாடப்படும்... உலகம் முடியும் அந்தக்கடைசி நாளிலும் எந்த நாட்டிலாவது ஒருகுருவானவர் உயிரோடு இருந்து ஒரு பூசை  நடத்துகின்றார் என்றால் அந்தப்பூசையிலும் கடைசியாக பாடப்பட்டு உலகம் முடியும் .   அவ்வளவு அமரத்துவமானது இந்தப்பாடல்... அதனால்தான் இந்தப்பாடல் அமரகீதம் என்று புகழ்பெற்றது.
" அப்பா...நான் என்னவாக வேண்டும் என்பது கடவுள் விதித்த விதி...அதை நீங்களோ அல்லது நானோ மாற்ற முடியாது. இப்போதும் என் உள் மனதில் நான் ஒரு பெரும் பதவிக்கு நியமிக்கப்படுவேன் என்றும் என்பெயர் இந்த உலகமெல்லாம் போற்றப்படும் என்று சொல்கிறது " என்று அன்று தன் தந்தை தனக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பும்   போது கொர்னீலியுஸ் சொன்ன வார்த்தையும் அட்ச்சரம் பிசகாமல் நிறைவேறியது.















































.







No comments:

Post a Comment