Tuesday, November 12, 2013

" இதற்குத்தானே ஆசைப்பட்டாய்......"



                                     " இதற்குத்தானே ஆசைப்பட்டாய்......"
            இத்தாலியில் ரோமின் ஆட்சிபீடத்தில் ஏறிய பல சர்வாதிகரிகளுக்கு கிறிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்கவில்லை. ஆனாலும் சில சர்வாதிகாரிகள் பரந்த மனப்பான்மையோடு  யார் எந்த சாமியைக்கும்பிட்டாலும் எமக்கு ஆட்சேபணை இல்லை.. என் குடிமக்கள், ஆளும் மன்னர்களுக்கு ராஜ விசுவாசத்தோடு நடந்துகொண்டால் சரி என்றும் யாரும் எந்த   மதத்தையும் பின்பற்ற உரிமை அளித்தனர்..இப்படியாக கி.பி.262ல் சர்வாதிகாரி பப்லியோ லூசியானோ கல்லினோ என்பவர் தன் ரோமை பிரஜைகளுக்கு முழு மத சுதந்திரம்   அளித்தார்..
      இதனால் பல அரசாங்க அதிகாரிகளும் ராணுவ தலைவர்களும் வீரர்களும் சாதாரண மக்களும் யேசு கிரிஸ்த்துவை பின்பற்றினர்.. நாடு பல காலம் சமாதனமாகவும் அமைதியாகவும்  போய்க்கொண்டிருந்தது. இப்படி உலகம் அமைதியாகப்போய்க்கொண்டிருந்தால் சாத்தானுக்கு வேலை இல்லாமல் அல்லவா போய்விடும்...எனவே இதற்கு சோதனையாகவும் பல
கிறிஸ்த்துவ மக்களுக்கு வேதனையாகவும் ஒரு அரக்கன் வந்து சேர்ந்தான் தியோக்குலேசியன் என்ற பெயரோடு. அவன் பட்டம் பெற்ற வருடம் செப்டெம்பர் 17 கி.பி.284
      இந்த தியோக்குலேசியன் மன்னனும் ஒரு கிறிஸ்த்தவன் தான். அவன் மனைவி பெயர் பிரிஸ்க்கா... மகள் பெயர் வலேரியா...ஆனால் காசு,பணம், பெயர், புகழ், அதிகாரம் என்று  இத்தனை போதைளும் அவன் தலைக்கேரிய போது அவன் சாத்தானின் கைப்பாவை ஆனான்..தானும் ஒரு கிரிஸ்த்துவன் என்பதை மறந்து தன் அரசாட்சியை விஸ்தரிகின்றேன் என்று
கடல்கடந்து அன்றைய பாரசீகம் வரை படை எடுத்துச்சென்றான்...தோல்வி கானும் இடங்களில் எல்லாம் அங்குள்ள துர்தேவதைகளுக்கு பலியிட்டு தூபாராதனை காட்டி தேவ   துரோகத்துக்கு ஆளானான்..தங்களின் தோல்விகளுகெல்லாம் காரணம் கிரிஸ்த்துவர்களே.. அவர்கள் தேவன் நம் ரோமைய தெய்வங்களை அடக்குவதால் நமக்கு தோல்வி ஏற்படுகின்றது
என்று சொல்லிக்கொடுக்கப்பட்ட மந்திரவாதிகள் தியோக்குலேசியனிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனால் அரசனின் கோபம் கிரிஸ்த்துவர்கள் மீது திரும்பியது. ஊருக்கு இளைத்தவன்  கிறிஸ்த்தவன் தானே.. எனவே வேத கலாபனை ரோம் முதற்கொண்டு அதன் சாம்ராஜ்ஜியம் முழுமைக்கும் பரவியது. இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை தன் நேரடிபார்வையில் ஆள
முடியாது என்பதால் தன் சாம்ராஜ்ஜியத்தை நான்காக பிரித்து நான்கு ராஜாக்கள் ஒரே சமயத்தில் ஆண்டார்கள்..ஆனால் முழுமைக்கும் தியோக்குலேசியனே தலைவன்.
                       அவனுக்கு உதவியாக மாக்ஸிமியன். இந்த இருவரும் கிரிஸ்த்துவர்களுக்கு செய்த அக்கிரமங்கள் வார்த்தையில் வர்ணிக்க முடியாது.   தனது ஆட்சிக்குட்பட்ட அனைத்து ரோமை பிரஜைகளும் தங்கள் ராஜ விசுவாசத்தைக்காட்ட அரசனை தங்கள் ரோம தேவர்களின் வாரிசுகளாக கருதி அரசார்களுக்கும் அவர்தம்   ரோமை தேவர்களுக்கும் தூபாராதணை காட்டி தங்களின் குடிரிமையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்   இக்கட்டளைக்கு பணிய மறுக்கும் எவருக்கும் ரோமை குடியுரிமை ரத்து
செய்யப்படும். அவர்கள் சொத்து சுதந்திரம் பறிக்கப்படும். அவர்கள் சித்திரவதைப்பட்டு கொல்லப்படுவர்...கிறிஸ்த்துவ மதம் தடை செய்யப்படுகின்றது...அவர்தம் மடாலயங்கள்   தகர்க்கப்பட வேண்டும்..இது தியோக்குலேசியன் ஆணை....இந்த அரசாங்க ஆணை ரோமையின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சிசிலித்தீவிலும் தன் கோர முகத்தை காட்டியது.
    சிசிலித்தீவு;   உலகத்தின் அத்தனை இயற்கை அழகையும் இறைவன் இந்த சிசிலித்தீவில்தான் ஒட்டுமொத்தமாக வைத்திருக்கின்றான் போலும்...இந்த சிசிலித்தீவின் இயற்கை   அழகை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அதனால்தானோ என்னவோ இந்த சிசிலித்தீவில் அழகிய நான்கு வேத சாட்ச்சிகள் தோன்றியுள்ளார்கள்.. புனித ஆகத்தம்மா, புனித லூசியா,
புனித ரோசாலி, புனித மார்சியானோ மற்றும் பல பெயர் தெரியாத வேத சாட்ச்சிகள் இந்த அழகிய தீவில் தோன்றி யேசுவுக்கு சாட்ச்சியாய் வாழ்ந்து மரணித்திருகின்றார்கள்.
    இந்த கால கட்டங்களில் ஆப்ரிக்காவின் வடக்குப்பகுதியில் கார்த்தேஜ் என்ற நாடு உள்ளது. அங்கிருந்து படகுகள் மூலம் வந்த காட்டுமிராண்டிகள் கூட்டம் சிசிலித்தீவை அடைந்து   பலமுறை கொள்ளை அடித்தனர். அதனால் அன்றைய சிசிலி தீவின் மக்கள் அருகில் உள்ள ரோமர்களின் பக்கம் சாய்ந்தனர். ரோமர்களுக்கும் கார்த்தேஜுக்கும் நடந்த யுத்தமே
புனிக் யுத்தம் என்பதாகும்.. இப்படியாக ஒன்று, இரண்டு, மூன்று என்ற புனிக் யுத்தம் முடிவில் ரோமர்கள் வென்றதால் அவர்களின் ஆதிக்கம் சிசிலித்தீவிலும் கார்த்தேஜ் நாட்டிலும்   பரவியது.
       இந்தக்கதை சிசிலித்தீவில் நடந்ததால் அன்றைய சூழ்நிலையை புறிந்துகொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும். சிசிலித்தீவு மத்திய தரைகடலில் இத்தாலிக்கு அருகில்  இருக்கும் ஒரு சிறிய தீவு. இந்த தீவை கி.மு.8 நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் ஆதிக்கம் செலுத்திவந்தார்கள். அப்போது சிசிலி என்ற பெயர் அதற்கில்லை.. கிரேக்கர்கள்  இந்த தீவை ஓர்டீகியா என்றழைத்தனர். இப்போதும் இந்த ஓர்டீகியா என்னும் பெயர்கொண்ட ஒரு ஊர் சிசிலியில் உள்ள சிராகூஸ் என்னும் மாகாணத்தில் உள்ளது.
        இந்த சிசிலித்தீவு கிரேக்கர்கள் கையிலிருந்து பெர்சியர்கள் கையில் மாறியபோது ஆட்சி மாற்றம் நடந்ததே தெரிந்திராத பிரபல கிரேக்க கணித மேதையும் விஞ்ஞானியுமான   ஆர்க்கிமீடியுஸ் ஒரு தீவிரமான ஆராய்ச்சியில் ஏடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த ஓர்டீஜியா என்னும் ஊரில் தான் கொல்லப்பட்டார். அவரது சமாதி ஓர்டீஜியா என்னும்
இந்த ஊரில் தான் உள்ளது...
      டியோனிசியுஸ் என்னும் மன்னன் காலத்தில் இந்த சிராகூஸ் பட்டிணம் பெரும் மாட்ச்சியுடன் விளங்கியது. அவன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் மற்றும் கோட்டைளுக்கு   தேவையான சலவைக்கற்கள் இங்குள்ள குவாரிகளில் கிடைத்ததால் பல குகைகள் ஒன்றுக்குள் ஒன்றாய் அமைந்தன. சுகாதாரம் என்பது மருந்துக்கும் இருக்காது. இந்த குகைகள்
ஒரு வினோத அமைப்பாக மாறின.. ஒரு பெரும் குகை அதன் உள்ளே ஒருகுகை... இப்படியாக சென்றதால் யார் எவ்வளவு மெலிந்த குரலில் பேசினாலும் அவை அகபிரதிபலிப்பு  ஏற்பட்டு குகையின் ஆரம்பத்தில் தெளிவான சப்தமாக கேட்கும்...
       அரசன் டினோசியுஸ் தன் அடிமைகளையும் விரோதிகளையும் இந்த குகையையே சிறைச்சாலையாக மாற்றி அதற்குள்ளே போட்டு சித்திரவதை செய்தான். அவர்கள் அலறல் சத்தம்  தன் காதில் தெளிவாக கேட்கும் வரை சித்திரவதை தொடரும், எனவே இந்த குகைக்கு டயோனிசியன் காது எனப்பெயர் பெற்றது. பிற்காலத்தில் அதாவது தியோக்குலேசியன் காலத்தில்
இந்த குகை கிறிஸ்த்துவர்களின் சித்திரவதை கூடாரமாயிற்று. அப்படி இறந்த கிறித்துவர்களை தூய அருள்ளப்பர் என்னும் பெயர் கொண்ட ஒரு ரகசிய கல்லறை ஸ்தலத்தில்   அடக்கம் செய்தனர். அந்த ரகசிய கல்லறை இன்றும் இந்த ஓர்டீஜியா ஊரில் உள்ளது. மேலும் இந்த சிராகூஸ் பட்டினத்தின் முதல் மேற்றிறானியாராக பணி புறிந்த வேதாசாட்சி   புனித மார்ஸியானோ என்னும் ஆண்டவரும் இந்த ரகசிய கல்லறையில்தான் புதைக்கப்பட்டிருகின்றார்.   வேத கலாபணை காலத்தில் இந்த ரகசிய குகையில் தான் பூசையும்
ஆராதனையும் ரகசியமாக நடைபெரும். சரி...இனிமேல் கதைக்குப்போவோமா....
     நம் கதாநாயகிக்கு அப்போது ஐந்து வயது.. அவளது தகப்பன் லூசியா என்ற பெயரையே அவளுக்கும் வைத்திருந்தார் அவளது தாயார் யூட்டீஸியா.. சிறு வயதிலேயே தந்தையை  இழந்ததால் தன் தாயாரின் பராமரிப்பில் அருமையாக வளர்ந்தாள் நம் லூசியா..தன் தாயார் லூசியாவுக்கு நல்ல தரமான கல்வியை தகுதியான ஆசிரியர்கள் மூலம் வழங்கினார்..
அக்காலத்தில் பெண்கள் வெறும் அழகுப்பதுமையாகவே போற்றப்பட்டனர்...தங்களின் அழகைக்காட்டுவதிலும் பெருந்தனக்காரர்களின் முன் தங்கள் ஆடம்பரத்தைக்காட்டவும்  அரசாங்கத்தின் விருந்துகளில் அடிக்கடி கலந்துகொண்டு கௌரவப்படுவதையுமே பெருமையாக நினைத்துக்கொண்டார்கள். இதனால் அவர்கள் அரசாங்கத்தினரிடையும் பெரும்  பிரபுக்களிடையும் தங்களை இழந்து போனார்கள்...இதனை பெருமையாகவும் கருதினர். இத்தகைய காரியங்களை கிறிஸ்த்துவம் தடை செய்தது...கற்பெண்ணும் ஒழுக்கத்தை உயிராய் போற்றச்சொன்னது...இதனால் பெரிய இடத்துப்பிள்ளைகள் கிறிஸ்த்துவத்தை வெறுத்தனர்.
      நம் லூசியாவுக்கு கிறிஸ்த்துவம் எப்படி பரிச்சயமானது என்பது குறித்து சரித்திரம் தெரியவில்லை.. ஒருக்கால் அவளது ஆசிரியைகள் மூலம் தெரிந்திருக்கலாம்... யேசுவின்  போதனைகள் லூசியாவுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவள் யேசுவை பின்பற்றினாள். இத்தனைக்கும் அவளது தாயாரோ தந்தையாரோ கிறிஸ்த்துவர்கள் அல்ல. லூசி என்பதற்கு
வெளிச்சம் என்பது பொருள். இவ்வாறாக அவள் வாலிப வயதை அடைந்தபோது பேரழியாக திகழ்ந்தாள்..அவள் தாயார் தன் மகளின் பேரழகைக்கண்டு மிகவும் பூரித்துப்போவாள்.
     பிறகு எல்லா தாய்மார்களுக்கும் வரும் கவலை அவளையும் பீடித்தது..தன் மகளுக்கு ஒரு நல்ல வரனாகப்பார்த்து அவளுக்கு ஒரு கல்யாணம் செய்து விட்டால் தான் நிம்மதியாக   கண்ணை மூடிவிடலாம் என்பது அவளது எண்ணம்..இதைப்பற்றி தன் மகளிடமும் கலந்தாலோசித்தாள்.
ஆனால் மகள் லூசி " அம்மா, திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்..பிறகு பார்த்துக்கொள்ளலாமே " என்பார்.. அடிக்கடி இதே கேள்வி இதே பதில் என்பதால் அவள் தாயார்  யூட்டீஸியா கலக்கமுற்றாள். தன் மகளுக்கு என்ன ஆயிற்று... ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாள்..இவள் அழகுக்கு வசதியும் அழகும் உள்ள மாப்பிள்ளைகள் வந்து வரிசையில்  நிற்கமாட்டார்களா..ஏன்..ஏன்..ஒருக்கால் அவள் மனதில் யாரேனும் இருகின்றார்களா...அடக்கடவுளே இது என்ன சோதனை " என்று கலக்கமுற்றாள் யூட்டீஸியா..
      இதைக்கருத்தில் கொண்டு ஒருநாள் யூட்டீஸியா தன் மகளிடம் துணிவோடு கேட்டுவிட்டாள். " மகளே லூசியா..நீ திருமணமே வேண்டாம் என்பது என்மனதில் எவ்வளவு  கவலையாக இருகின்றது தெரியுமா?.. நான் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க மாட்டேன் என்று நினைத்தாயா?...அல்லது...உன்மனதில் யாரேனும் உள்ளனரா? தைரியமாக
நீ எனக்கு பதில் சொல்ல வேண்டும்.. உன் விருப்பத்திற்கு மாறாக நான் யாதொரு மாப்பிள்ளையையும் உன் தலையில் கட்ட மாட்டேன்... என்னை நம்பு..." என்றாள்.
       மகள் லூசியா தன் கைகளால் தாயை அணைத்துக்கொண்டு, " ஐயோ அம்மா...ஏன் உங்களுக்கு புத்தி இப்படி வேலை செய்கிறது... எனக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும்   என்ற எண்ணம் இன்னும் தோன்றவே இல்லை...என் மனதில் எந்த ஆடவரும் இல்லை..விஷயம் அவ்வளவுதான்.. எனக்கு திருமணம் என்று ஒன்று வேண்டும் போது நானே உங்களை
கேட்பேன்...அப்போது நீங்கள் எனக்கு அந்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் " என்றாள்.. இந்த பதிலால் அப்போதைக்கு சமாதானமானால் அவளது   தாயார் யூட்டீசியா.
     காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டாற்போல் என்பது போல லூசியாவின் தாயாருக்கு பெரும்பாடு நோய் பற்றிக்கொண்டது. அதீதமான ரத்தப்போக்கினால் தாயார்  யூட்டீஸியா உடல் மிகவும் மெலியத்துவங்கியது. மிகவும் சோர்வடைந்தாள்.. இனிமேல் தன் வாழ்நாள் குறைவு என்று உணர்ந்துகொண்ட யூட்டீஸியா தன் மகளுக்கு நல்ல வரன்
தேடத்துவங்கினாள்..அதற்கேற்றாற்போல் ஒரு நல்ல வரன் வந்தான்.. நல்ல அழகும் இளமையும் செழுமையான ஒர் உயர்குடியிலிருந்து வந்திருந்த ஒரு மாப்பிள்ளைக்கு நம்  லூஸியாவை பார்த்தமாத்திரத்தில் மிகவும் பிடித்துப்போயிற்று. அவளது அழகிய நீலநிறக்கண்கள் அந்த வாலிபனை ஏதோ செய்தது...லூசியின் தாயார் இத்திருமணத்திற்கு உடனே
சம்மதம் தெரிவித்தாள். எப்படியும் தன் மகள் லூசி இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்ல மாட்டாள் என்பது அவளது எண்ணமாக இருந்தது..மாப்பிள்ளையாக வந்தவன்  மிகுந்த சந்தோஷமாக தன் வீடு திரும்பினான்..அன்றிலிருந்து அவனுக்கு தூக்கம் என்பதே மறந்து போயிற்று.
         ஆனால் லூசியாவுக்கோ மனது துக்கமானது...அவள் தன் மனதை யேசுவிடம் அல்லவா கொடுத்திருந்தாள்... அதனால்தான் தக்க சமயம் வரும்போது தானே தன் தாயிடத்தில்  தனக்கு கல்யாணம் வேண்டும் போது சொல்வதாக கூறி இருந்தாள். இந்நிலையில் தன் தாய் தன்னிடம் கேட்காமலேயே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது  அவளுக்கு மிகுந்த துக்கமாக இருந்தது.. இருப்பினும் தக்க சமயத்தில் தன் மனதிலிருக்கும் யேசுவை தன் தாயிடம் கூறுவோம் என்று அமைதியானாள்..
    அன்றைய இரவில் லூசியாவிடம்  கனவில் புனிதையாக மரித்திருந்த ஆகத்தம்மாள் தோன்றி தன்னை வந்து சந்திக்குமாறு கூறினாள்.
அடுத்த நாளே லூஸியாவும் அவள் தாயார் யூட்டீஸியாவும் தங்கள் சொந்த ஊரான சிராக்கூஸிலிருந்து ஐம்பது மைல் தொலைவிலுள்ள காட்டானியா ஊருக்கு திருப்பயணம்   மேற்கொண்டனர். இந்த காட்டானியா பட்டிணத்தில்தான் புனித ஆகத்தம்மாள் வேத சாட்ச்சியாக மரித்தார்கள். அவர்களது கல்லறை இந்த காட்டானியா பட்டிணத்தில் இருகின்றது.
        லூசியாவும் அவள் தாயார் யூட்டீஸியாவும் புனித ஆகத்தம்மாள் கல்லறையில் மிகவும் பக்தி சிரத்தையோடு பிரார்த்தித்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. அன்றைய பலி   பூசையின் திருவாசகமாக பெரும்பாடு நோய் கண்ட ஒரு ஸ்த்ரீ யேசுநாதரின் ஆடையின் விளிம்பை தொட்டாலே குணமடைவேன் என்று நம்பி விசுவாசித்து அவரது ஆடையை
தொட்ட மாத்திரத்தில் குணமடைந்தாள் என்று வாசிக்கக்கேட்ட தாயும் மகளும் ஆண்டவர் தங்களுக்காகவே இந்த வாசகத்தை இன்று வாசிக்க திருவுளமானார் என்று விசுவாசித்தார்கள்.
        அவர்கள் இருவரும் புனித ஆகத்தம்மாளின் கல்லறைமேலேயே தூங்கிபோனார்கள்.. அப்போது நடுநசியில் மிகுந்த வெளிச்சத்துடனும், பல சம்மனசுக்கள் புடைசூழவும் புனித   ஆகத்தம்மாள் லூசியாவுக்கு தரிசனமானார். " சகோதரி, ஆண்டவராகிய யேசுகிறிஸ்த்துவுக்கு நீ மணவாட்டியாக உம்மை நேர்ந்துகொண்டதற்கு பாராட்டுகள்...நீ ஏன் நம்மை நோக்கி   மன்றாட வேண்டும்...நீயே உன் தாயாருக்காக மன்றாடினாலே ஆண்டவர் உனக்கு வேண்டிய வரத்தை தந்தருள்வார்... ஆண்டவறாகிய யேசுவுக்கு உன்பேரில் பற்று அதிகம்.   இப்போதும் உன் மன்றாட்டினால்தான் ஆண்டவர் உன் தாயாருக்கு குணம் அளித்துள்ளார்...இதை தெரிவிக்கவே.நாம் உன்னோடு பேச வந்துள்ளோம்.. உன் தாயார்   குணமடைந்துவிட்டார்...இதை இப்போதே பரிசோதித்துப்பார்" என்று கூறி மறைந்து போனார்.
      அந்த நிமிடமே தன் தாயாரை எழுப்பினாள் லூசியா... அவள் தாயார் யூட்டீஸியா தான் முற்றிலும் குணமடைந்ததை உணர்ந்தாள்...புது உற்சாகமும் புது பலனும் தனக்கு   அருளப்பட்டதை உணர்ந்து ஆண்டவராகிய யேசுவுக்கு மிகவும் நன்றி கூறினாள்...இதற்கு நன்றியறிதலாக தான் என்ன கைமாறு செய்ய வேண்டும் என்று கேட்டாள்.. அதற்கு லூசியா
" அம்மா ஆண்டவராகிய யேசுவுக்கு தேவையானது ஒன்றுமில்லை.. நம் மனங்களைத்தான் அவர் கேட்கிறார்...இதைத்தான் நான் அவருக்கு கொடுத்துவிட்டேன்..  .நான் என் கன்னிமையை ஆண்டவராகிய யேசுவுக்கே தத்தம் செய்துவிட்டபடியால் நான் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்.. தயவு செய்து நீ வாக்கு கொடுத்த
மாப்பிள்ளையை வேறு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள்ள சொல்..என் சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு தானம் செய்துவிடு..அதுதான் ஆண்டவருக்கு  உகந்தது".என்றாள்.
     தாயும் மகளும் சொந்த ஊரான சீராக்கூஸை அடைந்ததும் யூட்டீஸியா தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்தாள்.. இந்த செய்தியை அறிந்த அவள்   மாப்பிள்ளை ஓடோடி வந்தான். தான் கேள்விபட்டது உண்மையா...ஏன் சொத்துக்களை தானம் செய்கின்றீர்கள் என்று வார்த்தையில் யூட்டீஸியாவை வறுத்தெடுத்துவிட்டான்.
யூட்டீசியா, " தம்பி, என்ன கேள்விப்படுகின்றாய்... இந்த சில சொத்துக்களை விற்றுவிட்டு வேறு இடத்தில் நல்ல நிலமாக வாங்க விரும்புகிறேன்..அதைப்பற்றி உனக்கென்ன கவலை?"  என்றாள்...ஆனால் அவள் மகள் லூசியா வெளியே வந்து " ஐயா...என்னை மன்னிக்க வேண்டுகிறேன்...அன்று என் தாயார் என்னைக் கேட்காமலேயே திருமணத்திற்கு சம்மதம்   தெரிவித்துவிட்டார்கள்...ஆனால் இந்த திருமணத்தில் எனக்கு இஸ்டம் இல்லை..எனவே நீங்கள் வேறு நல்ல பெண்ணாகப்பார்த்து திருமணம் செய்துகொள்ளுங்கள்..மீண்டும் என்னை
மன்னியுங்கள் என்றள்.. மாப்பிள்ளைப்பையன் அப்படியே ஸ்த்தம்பித்து நின்றுவிட்டான். " ஒரு நிமிடம் லூசியா" என்றான். "உன் தாயார் உன்னை எனக்கு திருமணம் செய்துகொடுக்க  சம்மதம் தெரிவித்தநாள் முதல் இன்றுவரை உன்னை மனைவியாக அடையப்போகின்றேன் என்ற எண்ணத்தோடே நான் வாழ்ந்து வருகின்றன்..என்னை ஏமாற்றாதே லூசியா.. என்னில்   என்ன குறை கண்டாய் லூசியா... எதாவது என்னைப்பற்றி தவறாக கேள்விப்பட்டிருந்தால் தயங்காமல் கூறு... உண்மையாய் இருந்தால் ஏற்று என்னைத் திருத்திக்கொள்கிறேன்...
       ஆனால் என்னை கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மட்டும் சொல்லிவிடாதே... அதை என்னால் காதுகொடுத்து கேட்க முடியாது" என்றான்...
" ஐய்யா மஹாப்பிரபு...உங்களிடம் நான் குறை ஒன்றும் காண வில்லை..எனக்குத்திருமணத்தில் நாட்ட மில்லை... என்னை விட்டு விடுங்கள்" என்றாள் லூசியா.
" முடியாது... என்னால் உன்னை விட முடியாது...உன்னை நான் என் மனைவியாக மானசீகமாக ஏற்று பலநாள் வாழ்ந்துவிட்டேன்...வேறு ஒருத்தியை என் மனைவியாக ஏற்று  வாழ என் மனது இடம் கொடுக்காது " என்றான் அவன்.
" ஐய்யா...இதைத்தான் நானும் சொல்கிறேன்... நான் யேசு கிறிஸ்த்துவை என் மணாளனாக ஏற்று பலநாளாக வாழ்ந்து வருகின்றேன்.. வேறு ஒருவரை நான் என் கணவனாக ஏற்று  வாழ முடியாது. அதற்கு என் மனதும் உடலும் இடம் கொடுக்காது..நீர் வேறு ஒரு நல்ல பெண்னாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் " என்றாள் லூசியா.
திடுக்கிட்டுப்போனன் மாப்பிள்ளைப் பையன்.
" லூசியா... நீ என்ன வார்த்தை சொன்னாய்... நீ கிறிஸ்த்துவளா..அந்த கொடுமையான மதத்தில் எப்படி சேர்ந்தாய்?...அதற்கு அரசாங்கத்தில் என்ன தண்டனை தெரியுமோ?...
          சரி... போனதெல்லாம் போகட்டும்..விஷயம் நம்முடனே இருக்கட்டும்...நானும் யாருடனும் சொல்லப்போவதில்லை...நீயும் யாருடனும் சொல்ல வேண்டாம்..நான் உன் மேல்  வைத்த காதலால் மீண்டும் கேட்கிறேன்..நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா..இல்லையா..எனக்குபதில் சொல்?" என்றான் அவன். ஆனால் லூசியா அவனை தீர்மானமாக  முற்றிலும் நிராகரித்தாள். அதன் விளைவு அடுத்த நாளே தெரிந்தது. அது மிகவும் கொடுமையாக இருந்தது.
          அடுத்த நாள் காலை சிசிலித்தீவின் அதிபரும் ரோமை சக்கரவர்த்தி தியோக்குலேசியனின் பிரதிநிதியுமான பாஸ்காசியோ தன் நியாயாதிபதிக்கான ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.  முதல்விசாரணையாக லூசியாளும் அவளது தாயார் யூட்டீஸியாவும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.. அன்றைய தேதி டிசெம்பர் பதிமூன்று கி.பி. 304.
விசாரணை ஆரம்பமானது. மாப்பிள்ளைப்பையன் தன் குற்றசாட்டை அடுக்கினான்.
" ஐய்யா கணம் நீதிபதி அவர்களே... இதோ தாயும் மகளுமாக குற்றவாளிக்கூண்டில் இருக்கும் யூட்டீசியாவும் அவள் மகள் லூசியாவும்..என்னை ஏமாற்றிவிட்டார்கள். தன் மகள்
லூசியாவை எனக்கு திருமணம் செய்து கொடுப்பதாக எனக்கு வாக்குறுதி கொடுத்து இப்போது திருமணத்திற்கு மறுக்கிறார்கள். அவர் மகள் லூசியா கிரிஸ்த்துவளாக மாறிவிட்டதால்  என்னை திருமணம் செய்ய மறுகிறாள்... மேலும் தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டாள்.. நியாயப்படி திருமணத்துக்குப்பின் அவை
எனக்கு சேர வேண்டியது. நம் நாட்டில் கிறிஸ்த்துவ மதம் தடை செய்யப்பட்டுள்ளது..தியோக்குலேசிய மஹா ராஜாவின் ரோமைய சட்டம் [பிப்ரவரி24, வருடம் 303ன்படி] கிறித்துவர்களின்  உடைமைகள் பரிமுதல் செய்ய்யப்பட வேண்டும்... அவர்களை கடுமையாக தண்டித்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்.. எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி திருமண ஆசை  காட்டி மோசம் செய்த இவர்களை கொடுமையாக தண்டிக்க வேண்டும்" என்றான்.
                    சிசிலித்தீவின் நியாயாதிபதி பாஸ்காசியோ, " பெண்ணே லூசியா...இதெல்லாம் உண்மையா? நீ கிறித்துவளா? உன் வாலிப வயதை முன்னிட்டு உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்..  சரியாகப் பயன்படுத்திக்கொள்...நீ வணங்கும் அந்த யேசு கிறிஸ்த்துவை விட்டுவிடுகிறாயா...இவனை திருமணம் செய்துகொள்கிறாயா? பதில் சொல்" என்றார்.
      அதற்கு லூசியா," ஐய்யா நீதிபதி அவர்களே...நான் கிறித்துவள் என்பதில் பெருமைபட்டுக்கொள்கிறேன்...நான் யேசுக்கிறிஸ்துவை என் மணாளனாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.  அவரை அன்றி என் மனம் வேறு ஒருவரை கணவறாக ஏற்றுக்கொள்ளாது. என் சொத்துக்களை என் இஷட்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க எனக்கு உரிமை உண்டு.
திருமணமே ஆகாத போது என் சொத்துக்களுக்கு உரிமை கொடுண்டாட அவருக்கு பாத்தியதை இல்லை." என்றாள்.
           இத்தகைய பதிலால் மிகவும் கடுப்பாகிப்போனார் நியாயதிபதி பாஸ்காசியோ. " பெண்னே லூசியா...நீ என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறாயா... அல்லது   விளையாட்டுத்தனமாக பேசுகிறாயா...உன் உயிர் உன் பேச்சில் அடங்கிவிடும்...நீ யேசு கிறித்துவைமறுதலித்து நம் சக்கரவர்த்திக்கும் அவர்தம் தேவர்களுக்கும் தூபாறாதணை
காட்டுகிறாயா.. இல்லையா?"
" இல்லை...என்னால் முடியாது.. நான் ,என் நாதரும் என் எஜமானனும் என் கடவுளுமான யேசுகிறிஸ்துவை ஒருபோதும் மறுதளியேன்" என்றாள் லூசியா.
" போதும் ...இவளை இழுத்துச்சென்று கொடுமையான தண்டனைகளால் கொல்லுங்கள்...இவளை இழுத்துக்கொண்டு போங்கள்...இவளது மரணம் மற்ற கிறித்துவப்பெண்களுக்கு  ஒரு பாடமாக இருக்கட்டும் " என்றார் நியாதிபதி.     லூசியா வேதனைபட அழைத்து செல்லபபட்டாள். அவள் நடு ரோட்டில் நிற்க வைக்கப்பட்டாள்.. அவளது மாப்பிள்ளைப்பையன்  வாதைப்போன் தலைவனிடம் எதையோ மறைமுகமாக திணித்தான்... அவன் முகம் ஆசையால் பூவாக மலர்ந்தது... ஐய்யா தங்கள் இஷ்டப்படியே செய்கிறேன் என்றான்..
" லூசியா...நான் உன்னை எவ்வளவுக்கெவ்வளவு நேசித்தேனோ அவ்வளவுக்கவ்வளவு இப்போது வெறுக்கிறேன்...என்னையா வேண்டாம் என்றாய்.. இப்போது ரோட்டில்  போவோர் வருவோர் எல்லாம் உன் கையைபிடித்து இழுத்து உன்னை மானபங்கம் செய்வார்களே... இப்போது என்ன செய்யப்போகிறாய் " என்றான்.
     அதன்படி அவளை மானபங்கம் செய்ய பலர் கூடினர்...எத்தனை பேர் சேர்ந்து இழுத்தும் லூசியாவை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடிய வில்லை. ஆண்டவரின் அருள் லூசியாவில்  இருந்தது. எனவே அவளை எப்படியாவது தனிமையில் இழுத்துப்போய் கற்பளிக்கலாம் என்று ஒரு மூன்று அல்லது நான்கு காளை மாடுகளை அவளோடு கட்டி இழுத்தனர்..ஆனால்
அந்த காளை மாடுகள் லூசியாவை இழுக்க முடியாமல் வாயில் நுறைகக்கி கீழே விழுந்தன. இதனால் மேலும் கடுப்பானான் வாதனை செய்பவர் தலைவன்..
    லூசியாவை ஒரு அங்குலம் கூட நகர்த்தமுடியாததினால் அவளை அவள் நின்ற இடத்திலேயே உயிரோடு கொளுத்த முற்பட்டான்.. லூசியாவை சுற்றி விறகு அடுக்கப்பட்டது.  அவை தீவிரமாக பற்றி எரிய மண்ணெண்னையும் கந்தகமும் குங்குலியமும் சேர்க்கப்பட்டது... ஆனால் எதுவும் தீ பற்றவில்ல. எவ்வளவு முயன்றும் தீயை பற்ற வைக்கவே முடியவில்லை..
      இந்த நேரத்தில் லூசியாவை காதலித்த அந்த மாப்பிள்ளைப்பையனுக்கு மனதில் ஒரு குரூர எண்னம் தோன்றியது. அவன் வாதனை செய்பவன் தலைவனிடம்  " நான் இவள் அழகின் மேல் ஆசைகொண்டதே அவள் நீல நிற கண்களைக்கண்டுதான்.. எனவே அவள் கண்கள் இரண்டையும் என்னிடம் நோண்டி கொண்டு வந்து தாருங்கள்" என்றான்... இவை லூசியாவுக்கு தெளிவாக கேட்டது...அதன்படி அவன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. ஆம் ..லூசியாவின் அழகிய நீல நிறக்கண்கள் இரண்டும் உயிரோடு
நோண்டி எடுக்கப்பட்டன..அவற்றை நோண்டி எடுத்தவன்.லூசியாவின் கைகளில் கொடுத்து எகத்தாளமாக " இந்தக்கண்களால் தானே என் எஜமானனை வஞ்சித்தாய் .. உன் கண்கள் உன்னை காதலித்தவனுக்கு வேண்டுமாம்...இப்போது போய்க்கொடு பார்க்கலாம்". என்றான்...
    இந்த நேரத்தில் ஆண்டவறாகிய யேசு லூசியாவின் மட்டில் ஒரு புதுமையை செய்தார்...லூசியாவின் கைகளில் அவளிடமிருந்து பரிக்கப்பட்ட கண்கள் இரண்டும் இருக்க  அதுவரை நின்ற இடத்திலேயே இருந்த அவள், அவளை திருமணம் செய்ய நினைத்திருந்தவனை நோக்கி நடந்தாள்...இதைக்கண்ட அவன் பயந்து நடுங்கி மற்றவர்கள் பின்னால்  மறைந்துகொண்டான்...   ஆனாலும் லூசியா அத்தனை கூட்டத்திலும் அவனைக்கண்டுபிடித்து அவன் கைகளில் தன் இருகண்களையும் வைத்து " இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.....
இப்போது ஏன் ஓடுகிறாய்...இதோ பாரும் என் கண்கள்...உன்னிடத்தில் கொடுத்துவிட்டேன். இப்போது உமக்கு சந்தோஷம் தானே..உமது எண்ணம் நிறைவேறியதில் உமக்கு திருப்தி  தானே " என்று கூறி மீண்டும் தான் முன்பு நின்றிருந்த இடத்திலேயே போய் நின்று கொண்டாள்..
        மீண்டும் லூசியாவை அசைக்க முடியவில்லை.. அப்போது அவள் கூறியது..." நீங்கள் என்னை வாதிக்கவில்லை... என் யேசுவையே வாதிக்கிறீர்கள்... இதற்கெல்லாம் காரணமான  தியோக்குலேசியனும் மாக்சிமியனும் விரைவிலேயே மக்களால் வெறுக்கப்படுவர்...கூடிய சீக்கிரமே பதவி இழந்து நாடு துரத்தப்படுவர்..அவர்களின் மரணம் வெகு தூரத்தில் இல்லை. "
     லூசியாவின் இரு கண்களையும் பெற்றுக்கொண்ட அவள் காதலன் விரக்தி அடைந்தான்.. அவன் கரங்களில் இருந்த அவள் கண்கள் உடனே தன்நீல நிறத்தை இழந்து வாடி  பட்டுப்போய் விட்டது...ஆனால் அதற்குள். வாதிப்போர் தலைவன் நம் லூயிசாவின் தலை முடியை பற்றி இழுத்து அவள்கழுத்தில் தன் வாளைப் பாய்ச்சினான்..அது முன்பக்கம் பாய்ந்து  பின்பக்கமாய் வெளி வந்து விட்டது. வாளை வெளியே எடுத்தவுடன் லூசியாவின் தலை துவண்டது...வேத சாட்ச்சிகளின் பாரம்பரியப்படி மண்டியிட்டு சரிந்து தரையில் வீழ்ந்து   மரணித்தாள்.
    லூசியாவைக்காதலித்தவன் தன் பிழை உணர்ந்தான்..." ஐய்யோ லூசியா... பாவி நான்..கோழை நான்.. நீ எனக்குக் கிடைக்காத ஆத்திரத்தில் புத்தி இழந்தேன்...ஐய்யோ  உன்னைக்கொண்ற பாவி நான்... என்னை மன்னித்துவிடு. உண்மையில் உன்னை திருமணம் செய்துகொள்ள எனக்குத்தகுதியே இல்லை..பாவி நான்...பாவி நான் " என்று நெஞ்சு  நெஞ்சாக அடித்துக்கொண்டான்...அதன் பிறகு அவன் சரித்திரத்திலிருந்து மறைந்துபோனான்.
     நம் லூசியாவின் இறந்த உடலை தற்காலிகமாக அந்த தூய அருளப்பர் ரகசிய கல்லறையில் பூச்சிதமாக புதைத்தார்கள்..பின்பு அவள் பெயரில் ஒரு கோயில் கட்டி லூசியாவின்   அழியாத உடலை அந்த ரகசிய கல்லறையிலிருந்து எடுத்து அவளது பெயர்கொண்ட ஆலயத்தில் ஆடம்பரமாக புதைத்தார்கள். அந்தக் கோயிலில் அவளது கல்லறையில் வேண்டிக்கொள்பவர்களுக்கு கேட்டது கிடைத்தது. அந்த கோயிலுக்கு வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் கூட்டம் குறைவதே இல்லை.
       பிறகு பல காலம் கழித்து   தூய லூசியா பெயரில் பேராலயம் கட்டி அவளது அருளிக்கமான அவரது அழியாத உடலை அந்த பேராலயத்தில் வைத்தார்கள்..சிராகூஸ் பட்டிணத்திலுள்ள அந்த பேராலயமானது
தூய லூசியாவைப் போலவே அவ்வளவு அழகானது..ரோமன் கத்தோலிக்க திருச்சபை நம் லூசியாவுக்கு புனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது..
அவரது அழியாத திரு உடல் ஒருகாலத்தில் கான்ஸ்ட்டான்டி நேப்பிள்ஸ் பட்டிணம் கொண்டு போகப்பட்டது.. பின் பல காலம் கழித்து வெனிஸ் பட்டிணம் கொண்டு செல்லப்பட்டது.
       புனித லூசியாவின் பெருமையை உணர்ந்த யாரோ அவரது தலையை ஃபிரான்ஸ் தேசம் கொண்டு சென்றதாக ஒரு சரித்திரம் சொல்கிறது. வெகு காலம் புனித லூசியாவின் திருவுடல்  தலை இல்லாமலே இருந்தது... இதை பொறுக்கமுடியாமல் மறைந்த பரிசுத்தபிதா பாப்பானவர் 23 ஆம் அருளப்பர் புனித லூசியாவுக்கு ஒரு வெள்ளியால் தலை செய்து பொருத்தினார்..
      அந்த வெள்ளித்தலை நம் புனிதை லூசியாவுக்கு கச்சிதமாக பொருந்தியது.
இப்போதும் புனித லூசியாவின் திரு உடல் வெனிஸ் நகரத்தில் புனித ஜெரேமியா ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. புனித லூசியாவின் திருநாள் டிசம்பர் 13.ல் வருகின்றது.
      புனித லூசியா அருள்வாக்கின்படி தியோக்குலேசியனும் மாக்சிமியனும் தங்களின் பதவி இழந்தனர்...தியோக்குலேசியன் உன்மத்தம் பிடித்தவன் போல் தற்கொலை செய்து   கொண்டதாக ஒரு சரித்திரம் சொல்லுகிறது..ஆனால் அவன் கிறிஸ்த்துவன் அல்லவா.. கடைசிக்காலத்தில் அவன் மனைவி பிரிஸ்க்கா அவனுக்கு நல்ல புத்தி சொல்லி அவனை   மனம் மாற்றினாள் என்கிறது ஒரு சரிதை...இன்றும் அவனுடைய அரண்மனையும் சமாதியும் குரோசியா நாட்டில் உள்ளது. பல திருயாத்திரீகர்கள் தியோக்குலேசிய மன்னனின்   அரண்மனையையும் அவன் சமாதியையும் வந்து பார்த்து செல்கிறார்கள்..தானும் கிறிஸ்த்துவனாக இருந்துகொண்டு பசாசின் கைப்பாவை ஆகி பல்லாயிரக்கணக்கான கிறிஸ்த்துவர்களைஅநியாயமாக கொண்று குவித்த அந்த பாவிக்கு நீதியுள்ள சர்வேசுரன் என்ன கதி கொடுத்தாறோ நாம் அறியோம். ஆண்டவனின் திருஉளம் எத்தகையதோ அதையும் நாம் அறியோம்.
       புனித லூசியாவின் தாயார் யூட்டீசியாவின் வயோதிகம் காரணமாகவும், அவர் கிறிஸ்த்துவர் இல்லை என்ற காரணத்திற்காகவும் லூசியா மரித்த அன்றே அவரும் விடுதலை   செய்யபட்டார். ஆனால் யூட்டீசியா தன் வாழ்வின் கடைசிக்காலத்தில் யேசுக்கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்... தன் சொத்துக்களை எல்லாம் விற்று
ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு பரமன்பதம் சேர்ந்தார்.
புனித லூசியாவின் திரு உருவப்படத்தில் தன் கைகளில் ஒரு தட்டில் தன் கண்கள் இரண்டையும் வைத்திருப்பது போல சித்தரிக்கப்படுகின்றார்.
வெளிச்சம் என்னும் பொருள்கொண்ட புனித லூசியாவே எங்களுக்கு ஞான ஒளிகொடுக்க உம் கண்களை தந்தீரே...உமக்கு நன்றி.. ஆமீன்.


























No comments:

Post a Comment