" 300 வருடம் தூங்கியவர்கள்."
" நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக்கெடுத்ததுடன் தானும் கெட்டான்.
சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஸ்ட்டம் இல்லை என அலுத்துக்கொள்வார்..
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்...
சில பொருப்புள்ள பெரியோரின் தூக்கத்தினால்...
பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா." ..கவிஞர் கண்ணதாசன்.
இந்தப்பாடல் அமரத்துவம் வாய்ந்தது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. இந்தப்பாடலைக்கேட்ட மாத்திரத்தில் யாருக்கும் தூக்கம் பறந்தோடிவிடும். அவ்வளவு உத்வேகமான பாடல் இது. ஆனால் இந்தப்பாடல் சுமார் 1700 வருடங்களுக்கு முன் வாழ்ந்து 300 வருடங்களாக தூங்கியவர்களுக்கு பொருந்தாது. காரணம் அவர்களை அவ்வளவு காலமும் தூங்க
வைத்தது கடவுள். இந்த மனித இயல்பையும் மீறி...உலக நியதியையும் மீறி... இயற்கையையின் விதியையும் மீறி ஒரு ஏழு பேர் சுமார் 300 ஆண்டுகளாய் அன்ன ஆகாரமில்லாமல் காற்றும் இல்லாமல் தூங்கினார்கள் என்றால் கடவுள் தன் வல்லமையை வெளிப்படுத்தும் பொருட்டே அவர்களை அவ்வளவு காலமும் தூங்க வைத்திருந்தார் என்றால் இதை நாம்
நம்பித்தான் ஆக வேண்டும்...இனி நாம் கதைக்கு செல்வோம்...
அன்றைய கான்ஸ்டாண்டி நேபிள்ஸ் [ இன்றைய இஸ்தான்புல்..துருக்கி] சக்கரவர்த்தி தேசியன் தன் அரசாங்க விஷயமாக எப்பேஸுப்பட்டிணம் விஜயம் மேற்கொண்டுள்ளார் என்றதுமே அந்த எப்பேஸுப்பட்டிணம் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே செல்வ செழிப்பால் கொழித்திருந்த அந்தப்பட்டிணம் ரோமர்கள் ஆதிக்கத்தில் பெரும் வெற்றித்திருநகராக திகழ்ந்தது.. கல்வி, கேள்வி.கலை.சுகாதாரம், மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம் அனைத்திலும் சிறந்து விளங்கிய அந்த துறைமுகப்பட்டிணமாகிய எப்பேசு
பட்டிணம் ரோமர்களுக்கு பெரும் பெருமைதேடித்தத்தது.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையில் வலியவந்த அதிகாரத்தை கைப்பற்றிய திராஜன் தேசியுஸ் ராயன் தன் பெருமையை நிலை நாட்டும் பொருட்டு இந்த எப்பேசுப்பட்டிணத்தில் தன் கப்பலில் இருந்து இறங்கினான். பெரும் ஆரவாரமாக துறைமுகத்தில் இருந்த
சிப்பாய்களும் பொது மக்களும் அவனை வரவேற்றார்கள். எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் வெள்ளம் அவன் மீது கொண்ட பாசத்தினால் வாழ்க... வாழ்க... தேசியுஸ் ராயன் வாழ்க... ரோமர்கள் ஆதிக்கம் வாழ்க...காத்தியர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்து வெற்றி கொண்ட வீராதி வீரர் வாழ்க என்று பெரும் ஜெய கோஷங்கள் எழுப்பினார்கள்...ரோமைய சிப்பாய்களின் ராணுவ அணி வகுப்புகளும்..இசை வெள்ளமும் காண்போரை மட்டுமல்லாது அரசன் தேசியுஸ் ராஜனையும் மகிழ்ச்சிகொள்ள வைத்தது. தன் இன்முகத்தால் எல்லப்பக்கமும் சூழ்ந்திருந்த மக்களை கை அசைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துவந்த ராஜனுக்கு ஆங்காங்கே தெரிந்த சிலுவை அடையாளம் கொண்ட தேவாலயங்கள் அவன் முகத்தில் கவலை
ரேகையை தோற்றுவித்தன.
காரணம் இல்லாமல் இல்லை. அவனுக்கு கிறிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்காது..அவன் காலத்தில் அலை அலையாய் மக்கள் கிரிஸ்த்துவத்துக்கு மாறினார்கள். ரோமர்களுக்கு அக்காலத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புகிளம்பி தனித்தனி நாடுகளாகப்பிறிந்து போகக்கூடிய சூழ்நிலை இருந்ததால் மக்களை ஒன்றுபடுத்தும் பொருட்டு தேவையான கடும்
நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய சூழ்நிலை இருந்ததது. இந்த நிலையில் கிறிஸ்த்துவம் ஒன்றுபோல் எல்லா நாடுகளிலும் அலைஅலையாய் பெருகவே எங்கே இவர்கள் எல்லாம் ஒன்றுகூடி கிளர்ச்சி செய்து நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி அரசாங்கத்தை கவிழ்த்துவிடுவார்களோ என்ற பயம் காரணமே இல்லாமல் அவர்களுக்கு ஏற்பட்டது. கிறிஸ்த்துவத்தை அவர்கள்
சரியாக புறிந்துகொள்ளாததே அதற்குக்காரணம்..மீளவும் அரசாங்கப்பிரதிநிதிகள் நாடாளும் சக்கரவர்த்திகளுக்கு தவறான போதனைகளை தங்கள் சுய நலன்களுகாக போட்டுக் கொடுத்ததும் ஒரு காரணம். இதன் காரணமாக கிறிஸ்த்துவம் ரோமை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. எப்படியாவது எந்த விதத்திலாவது மக்கள் ஒருமித்த கருத்துகளுகாக ஒன்று கூடாதிருக்க இப்படியும் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ரோமைய குடி உரிமைமக்கள் தங்கள் ராஜ விசுவாசத்தை காட்டவும் தங்கள் தெய்வங்களை மறவாதிருக்கவும் ரோமையின்
ஆதிக்கத்திலிருந்த மக்கள் அனைவரும் கட்டாயமாக சத்தியபிரமாணம் எடுக்க வலியுறுத்தப்பட்டார்கள். அரசனையும் தெய்வங்களையும் ஒன்றாக இணைத்து கடவுளுக்குறிய மரியாதையும் ஆறாதனையும் செய்விக்க வற்புறுத்தப்பட்டார்கள்.. அதற்கு உடன்படாதோர்கள் ராஜ விசுவாசமற்றோர் என முத்திரைகுத்தப்பட்டு கொடுமையன மரணத்திற்கு தீர்வை
இடப்பட்டனர்.
அன்றைய கான்ஸ்டாண்டினேபிள்ஸ் பட்டிணம் ரோமுக்கு வெளியே மிகவும் தொலை தூரத்தில் இருந்ததால் கிறிஸ்த்துவம் இங்கே வெகுவாகப்பரவி இருந்தது. அதன் ஆதிக்கத்தில் இருந்த எப்பேசு பட்டிணம் பல அப்போஸ்த்தலர்கள், புனித பால் மற்றும் புனித தெகீலா போன்றோரின் ஊழியத்தால் கிறிஸ்த்துவ மதம் மிகவும் செழிப்பாக பரவி இருந்தது. யேசுநாதரின் தாயார், அவரது அன்புசீடர் புனித அருளப்பர், சுவிஷேஷகறான புனித லூக்கா ஆகியோரின் புனித கல்லரைகள் இந்த எப்பேசுஸ் பட்டிணத்தில் இருகின்றன. இதில் தேவ தாயாரின் கல்லரை இங்கு இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் கடைசியாய் வாழ்ந்து மரித்த வீடு இங்கு உண்டு.
இங்கு கிறிஸ்த்துவம் மிக ஆழமாக வேறூன்றியுள்ளதைக்கண்ட அரசன் திராஜன் தேசியன் மிகவும் கோபம் கொண்டான். தன் அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் ஒன்றுகூட்டி சரியாக வசைபாடினான்.இந்த எஃபேசுப்பட்டிணத்தில் ரோமைய அரசாங்க ஆணை சரியாக அமுல்படுத்தாதன் காரணம் என்ன? என்?. என்று வார்த்தையில் வறுத்தெடுத்துவிட்டான். அவர்கள் சொன்ன பதில் அரசனை திடுக்கிட வைத்தது.. " அரசே இந்த எப்பேசுப்பட்டிணத்தின் இளவரசர்கள் என்னும் அளவிற்கு பெரும் அதிகாரமும் செல்வமும் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேர் கிறிஸ்த்துவமதத்தை பின்பற்றியதால் மக்கள் எல்லோரும் அவர்களிப் பின்னால் போய்விட்டர்கள்... மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதிருந்த பயமும் போய்விட்டது. பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்களே அனைவருமாக கிறிஸ்துவர்களாகிப்போனதால் அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாம் அந்த ஏழுபேர்களால் வந்த வினை" என்றார்கள்..திராஜன் தேசியன் கண்கள் கோவைப்பழம்போல் சிவந்தன.." கூப்பிடு அந்த ஏழுபேர்களையும்... அவர்களை என்ன செய்கின்றேன் பார்" என்று கர்ஜித்தான்
திராஜன் தேசியன். ராயனின் உத்திரவின்பேரில் அந்த சகோதரர் ஏழுபேரும் கைது செய்யப்பட்டு அரசன் முன் விசாரணைகாக நிறுத்தப்பட்டனர்.ஒவ்வொருவராக பெயர் சொல்ல அழைக்கப்பட்டனர்.
" மேக்சிமியன் " " உள்ளேன் ஐய்யா"
" மால்க்குஸ் " " உள்ளேன் ஐய்யா"
" மார்ட்டின் " " உள்ளேன் ஐய்யா"
" செராபின்" " உள்ளேன் ஐய்யா"
" ஜான் " " உள்ளேன் ஐய்யா"
" டயோனிசு " " உள்ளேன் ஐய்யா"
"கான்ஸ்டன்டைன் " " உள்ளேன் ஐய்யா"
இந்த ஏழு பேரையும் ஏற இரங்கப்பார்த்தான் அரசன் தேசியன். அடுத்த கேள்வி " உங்களில் மூத்தவன் யார்?"
" ஐய்யா நான் தான் ... என் பெயர் மால்குஸ் " என்றான். அடுத்த கேள்வி " நீங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளா?"
" இல்லை ஐய்யா... நானும் என் தம்பி மால்குசும் உடன் பிறந்தவர்கள்.. மற்றவர்கள் என் சித்தப்பா மற்றும் பெரியப்பா பிள்ளைகள்.."
" உன் தகப்பனார் யார்"
" ஐய்யா என் தகப்பனார் தான் இந்த ஊரின் ஆளுனர்.. அவர் இப்போது இல்லை . அவர் இறந்துவிட்டார். என் தாயாரும் இப்போது இல்லை" என்றான் மாக்சிமியன்.
" உங்களை நினைத்தால்தான் பாவமாக இருகின்றது..நான் உங்கள் மேல் மிகவும் கரிசனம் உடையவனாக இருகிறேன். நீங்கள் ஏன் கிறிஸ்த்துவர்களாக மாறினீர்கள்?"
" அரசே, கிறிஸ்த்துவம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்டது. யேசுகிறிஸ்த்துவே அதன் கடவுள்...அவரே இந்த உலகைப்படைத்தவர்...வானமும் பூமியும் அவரது படைப்புகளே.இந்த
உலகிலும், நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, காண்பவை காணாதவை அனைத்தையும் படைத்தவர் அவரே...அவர் எங்களை அழைத்தார்.. அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்."
" அரசே இந்த மாக்ஸிமியன் பேச்சில் வல்லவன்... இவனிடம் பேச்சுக்கொடுத்தால் நீங்கள் அவன் வயமாகிவிடுவீர்கள். இப்படித்தான் அவன் பல பேர்களை கிறிஸ்த்துவர்களாக மாற்றிவிட்டான் . இவனிடம் பேச்சுக்கொடுப்பதை தவிர்ப்பது தங்களுக்கு நல்லது" என்றான் அரண்மனை திவான்.
மேலும் அரண்மனை திவானை பேச விடாமல் தன் கண் அசைவின் மூலம் தடுத்தார் மன்னர் தேசியன். " மாக்ஸிமியா... உனக்கு சரித்திரம் சரியாகத்தெரியவில்லை என நினைகிறேன்..உன் யேசுநாதர் எப்படி இறந்தார் தெரியுமா.? எங்கள் அகஸத்து ராயனின் பிரதிநிதியான ஆளுனர்
போஞ்சிபிலாத்து பாலஸ்த்தீனத்தில் பதவி வகித்தபோது அவரால்தான் யேசுநாதருக்கு சிலுவை சாவு என்னும் கேவலமான மரணம் விதிக்கப்பட்டது. அதன்படி அவரை சிலுவையில் அறைந்து கொண்றனர். போதாததற்கு அவர் கள்வர்களுள் ஒருவறாக எண்ணப்பட்டார்...இவர் எல்லாம் கடவுள் என்றால் நான் வணங்கும் அப்போல்லோ, ஜுபிடர் போன்ற தெய்வங்களை
எல்லாம் என்ன வென்று சொல்வது" என்றான் மன்னன் திராஜன் தேசியன்.
" அரசே தங்களிடம் வாதாடுவதாக தவறாக நினைக்க வேண்டாம்...தாங்கள் வணங்கும் அப்போல்லோ..ஜூபிடர்..வீனுஸ் போன்ற தெய்வங்கள் எல்லாம் உயிர் இல்லாத கிரஹங்கள் இவற்றைப்படைத்ததே எம் யேசு கிறிஸ்த்துதான். அவர் கள்வர்களும் ஒருவறாக எண்ணப்படுவார்..அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார் என்பதை எல்லாம் யேசுநாதருக்கு
முன்பே 800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இசையாஸ் இறைவக்கினர் அவறைபற்றி எழுதிவைத்துவிட்டார். உங்கள் தெய்வங்களின் சிலைகள் எல்லாம் வெறும் கல்லும் மரமும் ஆகும்.. இவை அனைத்தும் அக்கினியில் போடுவதற்கு மட்டுமே பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது. மேலும் எம் கடவுள் யேசுநாதர் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இதற்கும் ஆதாரம் இருகின்றது. யேசுநாதர் மட்டும் சொன்னபடியே அவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்தெழாமல் இருந்திருந்தால் நாங்கள் அவரை நம்பியும் இருக்க மட்டோம்... கடவுளாகவும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம்" என்றான் மாக்ஸிமியன்.
மாக்சிமியனின் இந்த நியாயங்களை ஏற்றுக்கொள்லவில்லை மன்னன் தேசியன்.." போதும் மாக்சிமியா...உன் பேச்சு அளவுகடந்து போகின்றது. இத்தோடு நிறுத்திக்கொள் உன் பிரசங்கத்தை. எனக்கு ஒரே பதில் தான் தேவை...யேசுகிறிஸ்த்துவை விட்டுவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்..உன் தகப்பனார் வகித்த அந்த ஆளுனர் பதவி உனக்காக
காத்திருகிறது..உன் சகோதரர்களுக்கும் தகுதியான பதவியை நாம் தருவோம்...எனக்கு சாதகமான பதிலை இன்றே நீ தரவேண்டும் என்பது அவசியமல்ல..உன் தகப்பனார் வகித்த பதவியை முன்னிட்டும் உன் பிறப்பின் குல கௌரவத்தை முன்னிட்டும், உங்கள் வாலிப வயதை முன்னிட்டும் நாம் உம்மை மன்னிகிறோம்...நாம் மூன்று நாள் அரசாங்க விஜயமாக
ஸ்மிர்னா நகர் போகவேண்டி இருப்பதால் நாம் திரும்பவந்து உம்மை பார்ப்போம்... ஆகவே இன்றுபோய் நாளை மறு நாள் திரும்ப வா...இப்போது நீவீர் அனைவரும் போகலாம்" என்றான் மன்னன் தேசியன்.
மாக்சிமியனுக்கு நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. தன் வீட்டுக்கு வந்த அவன் தம் தம்பிகளை அழைத்து," சகோதரர்களே நாளை மறு நாள் நம்முடைய இவ்வுலக வாழ்க்கை முடிந்துவிடும். அதன்பின் நாம் நித்திய பேரின்பவீட்டுக்கு சென்றுவிடுவோம்..அங்கு நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எதுவுமே பயன்படாது.. எனவே நாம் இன்றே நம் செல்வங்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிடுவோம்..ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து நம் அனைவரையும் தன் வானக வீட்டிற்கு அழைத்து செல்வது
உறுதி.. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ". என்றான். அதற்கு சகோதரர் அனைவரும் ஒருமித்த குரலில் " அண்ணா, உன் முடிவே எங்கள் முடிவு..ஒன்றாகவே வாழ்ந்தோம் ஒன்றாகவே சாவோம்...ஒன்றாகவே பரலோகத்துக்கு செல்வோம்... சாவு எப்படி வந்தால் என்ன..என்றைக்கோ ஒரு நாள் நாம் சாகத்தான் போகின்றோம்.. அதை நல்ல முறையில் யேசுவுக்காக
ஒப்புகொடுப்போம். வேதனையில் ஆண்டவரை சந்திப்பதும் அவருக்கு உகந்ததே... அவர் நமக்காக கடினமாக பாடுபட்டு மரிக்கவில்லையா? அவ்வாறே நாமும் மரிப்போம். இவ்வாறு மரிப்பதை கடவுள் நமக்காக கொடுத்த பாக்கியம் என்று நம்பி அவருக்கு நன்றி செலுத்துவோம்... என்ன இருந்தாலும் கடினமான பாடுகள் என்று நினைக்கும்போது பயமாகத்தான்
இருகின்றது" என்றனர். மாக்சிமியன் அவர்களை அணைத்துக்கொண்டு " இனிமேல் எல்லாம் அவன் செயல்" என்றான்.
அதன்படியே அவர்களுடைய சொத்துக்கள் எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்தார்கள். விற்கமுடியாத சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார்கள். அடுத்தநாள் வரை சாப்பிடவேண்டிய அளவுக்கு மட்டும் சில வெள்ளிக்காசுகளை தங்களுடனே வைத்துக்க்கொண்டார்கள்.. இனிமேல் தங்குவதற்கு இடமிலை...ஊருக்கு வெளியே சீலியா என்னும் ஒரு மலை இருகிறது. அதில் ஒரு குகை இருகின்றது. அந்த குகையில் யாரும் தங்குவதில்லை. ஒரு இரண்டு நாள் இரவும் பகலும் அங்கு தங்குவதால் யாருக்கும் நம் இருப்பிடம் தெரிந்துவிடப்போவதில்லை.. வாருங்கள்
போவோம் " என்றான் மாக்சிமியன். அந்த நாள் இரவு அங்கே கழிந்தது. அடுத்த நாள் காலை தன் தம்பி மால்குஸை ஊருக்குள் அனுப்பி சாப்பிட ரொட்டிகளை வாங்கி வர அனுப்பினான் மாக்சிமியன்.
அடுத்த நாள் ஆரம்பித்தது அக்கிரமம். அந்த எஃபேசு பட்டிணம் முழுவதும் இருந்த கிறிஸ்த்துவர்களை சல்லடைபோட்டு தேடிபிடித்து ஆளுனன் முன் விசாரணைகாக நிறுத்தப்பட்டார்கள். யேசுவை மறுதளித்தவர்கள் உயிரோடும் அவர்கள் உடமையோடும் விடுவிக்கப்பட்டார்கள். மறுத்தவர்கள் கொடுமையாக சித்திரவதைபடுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். எஃபேசுப்பட்டிணமே கதிகலங்கிப்போயிற்று. மக்களுக்கு பயம் வருவிக்கும் விதமாக பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே தண்டனை நிறைவேற்றப்பட்டது..
கிறிஸ்த்துவர்களின் சடலங்கள் நாய்களும் நரிகளும் தின்னும் உணவாயிற்று. இது சுகாதாரக்கேடு என்பதால் சாதாரண குடிமக்களும் விடுவிக்கப்பட்ட கிறிஸ்த்துவர்களும் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வற்புறுத்தப்பட்டனர். இந்த காரியங்களை விடுவிக்கப்பட்ட கிறிஸ்த்துவர்கள் தங்கள் சகோதர கிறிஸ்த்துவனுக்கு செய்யும் தர்ம காரியமாக கருதி விருப்பத்துடனே செய்தார்கள். இதைக்கண்ட மற்றவர்களும் இந்த கிறிஸ்த்துவர்களின் முன்மாதிரிகைகளைக்கண்டு "வாழ்வின் முடிவு எப்படி இருந்தால் என்ன...ஆனாலும் இவர்கள் கடவுளின் மீது கொண்ட நம்பிக்கை அசைக்கமுடியாததாக இருந்தது..உண்மைக்கு சாட்ச்சியம் சொல்ல தங்கள் உயிரையும் பணையம் வைத்த இவர்கள் அல்லவா சுத்த வீரர்கள். இவர்கள் வணங்கும் தெய்வம்தான் உண்மையான தெய்வமாக இருக்க முடியும் " என்று அந்த சூழ்நிலையிலும் யேசுவை ஏற்றுக்கொண்டவர் அனேகர். இப்படியாக யேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டதினால் அடுத்த நாளே தாங்களே ஆளுநன் முன்பாக நேரில் ஆஜராகி தங்கள் விசுவாசத்தை அறிக்கை இட்டார்கள்.. அதன்பலனாக அவர்கள் அனைவரும் தெருவில்
சிலுவை மரணத்துக்கு ஆட்ப்படுத்தப்பட்டார்கள்.
இவர்களையும் புதைக்க ஆள் இல்லமையால் ராணுவத்தைவிட்டு புதைக்க சொன்னார்கள். தாங்களே கொண்று தாங்களே புதைக்கவும் வேண்டும் என்னும் அவல நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட ராணுவத்தினர் வேறு வழி இல்லாமல் அந்த பிரதான சாலை நெடுகிலும் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு குழிகளை வெட்டி அவர்கள் அனைவரையும் சாலையின் இருமருங்கிலும் போட்டுப்புதைத்தனர்.. இந்த கல்லரைகள் இன்றளவும் அன்று நடந்த கொடுமைகளுக்கு சாட்ச்சியாக இருகின்றன.நடந்தது என்னவோ கொடுமைதான் என்றாலும் ராணுவம் என்பது வேறு விஷயம்..கடுமையான போரில் முன்னனியில் நிற்கும் ராணுவ வீரணுக்கு மனசாட்சி என்பதே இருக்காது. அவனைப்பொருத்தவரையில் எதிராளி அல்லது பகைவன் என்பவன் அழிக்கப்படவேண்டும் . அதாவது போரில் பகைவன் கொல்லப்பட வேண்டும்.. அப்போதுதான் நாடு
நிம்மதியாக இருக்க முடியும்..தங்களுடைய தொழில் நாட்டைப்பாதுகாப்பதும் எதிராளிகளை அழிப்பதும்தான்... ஆனால் இங்கே கொல்லப்படுபவர்கள் யார்..அப்பாவி மக்கள் அல்லவா? இவர்களை நாம் ஏன் கொல்ல வேண்டும்?..இங்கு நடபது போர் அல்லவே? தலைவன் கட்டளைக்கு கீழ்படிவதைத்தவிர நமக்கு வேறு கடமை கிடையாதே...ஆனாலும் இது அக்கிரமம்.. அப்பாவி மக்களை கொல்வதில் என்ன நியாயம் இருகிறது? என்று நினைத்த பல ராணுவ வீரர்கள் இந்த வேத கலாபனை முடிந்த பின்னர் மனம் மாறி யேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
இரண்டு நாட்க்களில் நடந்த கொடுமையான வேத கலாபணையில் பலரது மரணத்தை நேரில் கண்ட மால்குஸ் தன் சகோதரர்களிடம் சென்று நடந்த அந்த கொடுமைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் விவரித்தான். இதைகேட்ட சகோதரர் அனைவர்களும் பெரும் திகிலுற்றனர். இருப்பினும் கடவுள் தங்கள் விசுவாசத்தைக்காக்கும் பொருட்டு கைகளை உயர்த்தி ஜெபத்தில் ஏடுபட்டனர். அடுத்தநாள் நடைபெறப்போகும் நீதி விசாரணையில் மன்னன் திராஜன் தேசியன் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் . என்ன பேச வேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டனர். மிச்சம் மீதி இருந்த சிறிதளவே இருந்த ரொட்டிகளை அனைவரும் ஒன்றாகப்பங்கிட்டு உண்டனர்.. எல்லோரையும் உறக்கம் ஆட்கொண்டது. கடவுள் அவர்கள் ஏழுபேரையும் மீளாத்துயிலில் ஆழ்த்தினார்.
அடுத்தநாள் தன் நீதி விசாரணைகாக அந்த ஏழுபேரையும் ஆஜர்படுத்தச்சொன்னான் மன்னன் தேசியன்..ஆனால் அவர்கல் யாவரையும் ஊரில் காணவில்லை என அவனுக்கு அறிவிக்கப்பட்டது. பெரும் கோபம் கொண்டான் மன்னன் திராஜன். தான் குறிப்பாக சொல்லியும் அவர்களைக்காணாததால் எப்படியும் அவர்களை தேடிக்கழ்ண்டுபிடித்து தன்
முன்னர் கொண்டுவரும்படி ஆணையிட்டான். பெரும் படைவீரர்கள் கிளம்பி அவர்கள் ஏழு பேரையும் தேடிக்கண்டுபிடிக்க புறப்பட்டனர். ஊருக்குள் எங்கு தேடியும் அவர்களைக்காண வில்லை ஆகையால் நகருக்கு வெளியே தேடினர். அப்போது அவர்கள் பார்வையில் தென்பட்டது அந்த சீலியாமலை. அந்த சீலியா மலையில் இருந்த குகையில் அந்த ஏழு சகோதரர்களும்
தூங்கிக்கொண்டிருந்ததை கண்டனர் படை வீரர்கள்.. உடனே விஷயம் மன்னர் தேசியனுக்கு அறிவிக்கப்பட்டது. இவர்களைக்காணவிரும்பிய மன்னன் தேசியன் தானே படையோடு வந்த பகலிலும் உறங்கிக்கொண்டிருந்த அந்த சகோதரர் ஏழு பேரையும் கண்ட மாத்திரத்தில் கடும் கோபம் கொண்டு," ஓ...நீங்கள் என்னிடமிருந்து தப்பித்து போக நினைத்தீர்களோ..ஆனால்
ஆண்டவன் உங்களை இன்று என் கையில் அல்லவா ஒப்படைத்துவிட்டான்..இனிமேல் அந்த யேசுநாதரே நேரில் வந்தாலும் உங்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது..அடேய், யார் அங்கே...இவர்களை அப்படியே உயிரோடு சமாதி ஆக்கி விடுங்கள்...ஜீவ சமாதி என்று இதற்குப்பெயர் " என்றான். உடனே அரசனின் ஆணை நிறைவேற்றப்பட்டது..
இந்த அநீதியைகாண சகிக்காத தியோடர் மற்றும் ரூப்பஸ் என்னும் இரண்டு கிறிஸ்த்துவர்கள் உடனே ஒரு காரீயத்தால் ஆன பலகை தயார் செய்தார்கள்.அதில் இந்த ஏழு பேர்களின் பெயர்கைள்யும் எழுதி அவர்கள் வேத சாட்ச்சிகளாய் மரித்தவிதமும் காலமும் அதில் பொறித்து அந்த கல்லறையில் சித்தால் போல வேலை செய்து யாரும் பார்காதபோது அந்த சுவற்றில் இந்த காரீயத்தால் செய்த பலகையை எல்லோரும் சென்ற பிறகு பதித்துவைத்தார்கள்.
" வினாச காலே விபரீத புத்தி " அதாவது மனிதனுக்கு ஒரு கெட்டகாலம் என்று வரும்போது அவனது புத்தியும் அதற்குத்தகுந்தாற்போல் விபரீதமாக வேலை செய்து அவனை அழிவுக்கு உள்ளாக்கும் என்பது ஒரு சமஸ்கிருத ஸ்லோகம். அதேபோல் மன்னன் திராஜன் தேசியன் இந்த எப்பேசுப்பட்டிணத்தில் தான் வந்த வேலை முடிவடைந்தது என்று தன் தலைமை செயலகம் உள்ள ரோமுக்கு சென்றான்.அங்கு அவனுக்கு ஒரு பெரும் தலைவலி காத்திருந்தது. அதாவது இத்தாலிக்கு கிழக்கே உள்ள பால்கன் நாடுகளில் பல்கேரியாவிலுள்ள அப்ரிட்டுஸ் என்னுமிடத்தில் காத்தியர்கள் எனப்படுபவர்களை அடக்க ஏற்பட்ட போரில் கலந்துகொள்ள திராஜன் தேசியனும் அவன் மகன் ஹெரேனியனும் பெரும் படையோடு
சென்றார்கள்..துரதிர்ஸ்ட்டவசமாக அந்தப்போரில் அவரது மகன் ஹெரேனியன் அம்பு பாய்ந்து கொல்லப்பட்டான். ஆனாலும் கலங்காத மன்னன் தேசியன் " அதனால் என்ன ...என் மகன் ஒருவன் இறந்தான் என்றால் மொத்த சைனியமும் அழிந்ததாக அர்த்தமில்லை... எனவே அவனுகாக துக்கம் அனுஷ்டிக்க வேண்டாம்..ஆக வேண்டியதைப்பாருங்கள் என்றான்...
ஆனாலும் விதி அவர்களுக்கு எதிராக வேலை செய்தது. இல்லாவிட்டால் ரோமையர்படை அந்த டூனபே ஆற்றை போர்களமாக பயன்படுத்திக்கொள்ளுமா?.ரோமர்களின் மொத்த சைனியமும் அந்த டுனபே ஆற்றின் சகதியில் மாட்டிக்கொண்டது. இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப்பயன்படுத்திக்கொண்ட எதிரிகளான காத்தியர்கள் ரோமர்களை பந்தாடிவிட்டனர்.
அந்தப்போரில் மன்னன் திராஜன் தேசியன் மடிந்தான். சில சரித்திர ஆசிரியர்கள் இவை எல்லாம் திராஜன் தேசியனின் படைத்தளபதி த்ரிபோனியன் காலூஸென்பவன் செய்த அப்பட்டமான சதி என்கிறார்கள்.
ரோமை பேரரசின் வரலாற்றில் போர்களத்தில் மடிந்த ஒரே அரசன் இந்த திராஜன் தேசியன் தான் என்ற பெருமையோடு அவன் சரித்திரம் முடிந்தது. அவனது ஆட்சிக்காலம் கி.பி.249 ல் துவங்கி 251ல் இரண்டே ஆண்டுகளில் முடிந்தது என்றாலும் இந்த இரண்டு ஆண்டுகளில் அவனது அதிகாரத்துக்கு உட்பட்ட நாடுகளிள் கிறிஸ்த்துவர்கள் பட்ட துன்பங்கள் வார்த்தையில் சொல்லி முடியாது. மன்னர் திராஜன் தேசியன் காலமானார் என்ற செய்தி வந்ததுமே இங்கு எப்பேசுப்பட்டிணத்தில் பெரும் சோகம் நிலவியது. மன்னர்
இப்போதுதானே வந்து போனார். அதற்குள் அவருக்கு இப்படியா ஒரு சோக முடிவு ஏற்பட வேண்டும் என்று அங்கிருந்த மக்கள் அவருக்காக துக்கம் கொண்டாடினார்கள்.
அவர் நினைவாக ஊருக்கு மத்தியில் திராஜன் நீர்நிலை என்ற ஒரு ஞாபக சின்னம் எழுப்பினர். இப்போதும் எப்பேசில் அந்த மன்னர் திராஜன் நினைவிடம் சிதிலமாக உள்ளது. கால சக்கரம் மிகவும் வேகமாக சுழன்றது... இதற்கு நடுவில் ரோமை பேரரசில் பல மான்னர்கள் முதல் பல சாதாரண மன்னர்கள் வரை தோன்றினர். ஒருவழியாக கான்ஸ்ட்டான்டி நேபிள்ஸ் நகரில் ஒரு நல்ல மனிதர் அரசன் ஆனார் அவர்தான் அர்காடியன் எனப்பட்டவர்.. இவருக்கு ஒரு மகன் இருந்தார். இவர்தான் கிறிஸ்த்துவ உலகம் போற்றும் தியோடிசியன் எனப்பட்டார். ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து இவரை வைத்து கிறிஸ்த்துவர்களுக்கு பெரும் சகாயம் பல செய்தார். ஆனால் எக்காலத்தும் கிறிஸ்த்துவர்களுக்கு எதிரியாகிய சாத்தான்
இந்த நாட்டின் மக்களிடையே ஒரு பெரும் விஷக்கொள்கையை பரப்பினான்... அதாவது உயிர்த்தெழுதல் இல்லை. கடவுள் ஆதாமைப்படைத்ததுமுதல் உலகம் முடியும் வரை உள்ள மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மடிந்துபோனால் மீண்டும் உயிர்தெழுவது இல்லை. எல்லாம் இந்த உலகத்தோடு முடிவடைந்து விடும்..ஆண்மா கடவுளிடம் சென்றுவிடும்..
உடல் இந்த உலகிலேயே தங்கி அழுகிப்போய் மண்ணோடு மண்ணாகிவிடும்..என்பதுதான் அந்த விஷக்கொள்கை. அந்த காலத்திலேயே இந்த தப்பான கொள்கையை திருச்சபை மிகவும் வண்மையாக கண்டித்தது. அப்போஸ்த்தலர்களின் விசுவாச அறிக்கையில் " சரீர உத்தானத்தை விசுவாசிக்கிறேன், நித்திய ஜீவியத்தை விசுவாசிகிறேன்" என்னும் சத்திய
பிரமாணங்களை நம்புங்கள்.உங்கள் விசுவாச அறிக்கையை புதுப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் யேசு நாதரின் உயிர்ப்பையும் இறந்த லாசரின் உயிர்ப்பையும் விளக்கி உலகம் முடிந்த பின் மறுபடியும் உயிர்ப்பு உண்டு. பொது தீர்வை நாளில் அனைவரும் உயிர்த்தெழுவர்..பின் ஆண்டவரின் இரண்டாம் வருகை இருக்கும் . பொதுத்தீர்வையின்போது ஆண்டவருகாக மரித்தவர்களும் நல்ல ஆண்மாக்களும் மோட்ச்சம் போவது உறுதி...அக்கிரமிகளும் தீய ஆண்மாக்களும் நரகம் போவது உறுதி என்றும் தங்களுடைய கொள்கைகளை ஆணித்திரமாக போதித்தார்கள்.
இந்தக்காலத்தில் வாழ்ந்த ஸ்மிர்னாவை சேர்ந்த புனித பொலிகார்ப் என்னும் ஆயர், " ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் வேதனை நிறைந்த பாடுகளையும், அவரது மரணத்தையும், அவருடைய உயிர்ப்பையும், அவருடைய உத்தானத்தையும் விசுவாசிக்காதவர்கள் சாத்தானின் தலைச்சன் பிள்ளைகள்" என மிகவும் கடுமையாகவும் பிரசங்கித்தார். ஆனாலும் அந்த
தவறான போதனை என்னவோ மிகவும் வேகமாகவும் அதிகமாகவும் பரவியது.
மன்னர் தியோடீசியன் இந்த தப்பறையான கொள்கை தன் ஆட்சிகாலத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதைக்குறித்து மிகவும் கவலைப்பட்டார்.
" ஆண்டாவா...என் மக்களை இந்த தவறான கொள்கையிலிருந்து காபாற்ற மாட்டாயா? இதற்குத்தகுதியான நபர் யார்? அவர் எங்கே இருகிறார்? தயவுசெய்து அவரையும் அவரது இருப்பிடத்தையும் காண்பியும்.
நான் அவரை வரவேற்க காத்திருக்கிறேன்" என்று மண்டியிட்டு அழுது மன்றாடினார்.. அவரது மன்றாட்டு கேட்க்கப்பட்டது. மன்னன் திராஜன் தேசியன் காலம் துவங்கி மன்னர் தியோடீசியன் காலம் வரை சுமார் 300 வருடங்களாக இந்த எஃபேசுப்பட்டிணத்தின் வெளிப்பகுதியில் அமைந்திருந்த சீலியா மலையின் குகையில் மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த அந்த ஏழு
சகோதரர்களையும் துயில் களைய ஆண்டவறாகிய யேசுநாதர் சித்தம் கொண்டார். அவரது சித்தப்படி அக்காலத்தில் இந்த மலையின் சொந்தக்காரனாகிய தாலியுஸ் என்பவர் இந்த மலைப்பகுதியை பார்வையிட வந்தார். இந்த மலையில் இருந்த ஒரு குகை பலகாலமாக மூடப்பட்டிருப்பதைக்கண்டு அதிசயித்து இந்த வாயிலை நாம் திறந்தால் நம் ஆடு மாடுகளுக்கு ஒரு நல்ல தங்குமிடம் கிடைக்கும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி அந்த குகையின் வாயில் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளே சென்று பார்க்க அவர் தவறினார். தன் வீட்டிற்கும் அவர் திரும்பி சென்றுவிட்டார்.
இந்த சூழ்நிலையில் மீளாத்தியிலில் ஆழ்ந்திருந்த அந்த சகோதரர் ஏழு பேரும் உறக்கம் கலைந்து எழுந்தனர். அவர்களைப்பொருத்தவரையில் நேற்று தூங்கி இன்று எழுந்ததாகத்தான் நினைத்தனர். காலையில் பசி எடுக்கவே பெரியவன் மாக்சிமியன் தன் தம்பி மால்குசை அழைத்து ஊருக்குள் சென்று சாப்பிட ரொட்டி வாங்கி வரும்படி பணித்தான். அதற்காக தன்னிடமிருந்த ஒரு வெள்ளி தெனாரியம் என்னும் நாணயத்தை அவனிடம் கொடுத்தனுப்பினான். மால்குஸ் ஊருக்குள் செல்லும்போது பல ஆச்சரியங்கள் அவனுகாக காத்துக்கொண்டிருந்தன. 300 வருட ஆட்சி மாற்றமும் ஊருக்குள் நிலவிய கிறிஸ்த்துவ மதமாற்றமும் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. எங்கு நோக்கினும் கிறிஸ்த்துவ மதச்சின்னமாகிய சிலுவை பொருத்திய வீடுகள், தேவாலயங்கள் என்று திரும்பிய பக்கம் எல்லாம் தோன்றவே தான் வந்திருப்பது எப்பேசுப்பட்டிணமா அல்லது வேறே எதேனும் பட்டிணமா என்று மால்குசுக்கு புறியவில்லை. 300 வருடமாக அவன் போட்டிருந்த ஆடைகள் முதலாய் நைந்துபோகவுமில்லை..நிறம் முதலாய் மங்கிப்போகவும் இல்லை..அவன் தோற்றம் முதலாய் நேற்று தூங்கி இன்று எழுந்ததுபோல்தான் இருந்தது. ஆனால் எப்படியோ கடை வீதியில் நுழைந்தான். அந்த ஊர் மக்கள் இவனை ஒரு மாதிரியாகப்பார்த்தனர். தோற்றத்தில் இவன் இந்த ஊர் காரன்போல் தெரிந்தாலும் அவன் அணிந்திருக்கும் ஆடைகள் மிகப்பழமையான காலத்தைச்சேர்ந்தது. இது எப்படி...ஒரு வேளை இவன் அயலூர்காரனா? என்றவகையில்
பார்த்தனர் . நம் மால்குஸ் இவர்களை அணுகி," ஐய்யா, இது எப்பேசுப்பட்டிணம் தானே " என்றான்..
அவர்களும் ஆமாம் என்றனர்.மால்குஸ் அவர்களை விட்டு விலகி ஒரு ரொட்டிக்கடை காரனை நோக்கி தனக்கு ஒரு ரொட்டி வேண்டும் என்று கேட்டு தன்னிடமிருந்த அந்த வெள்ளி தினாரியத்தை கொடுத்தான். ரொட்டிக்கடைக்காரன் அந்தக்காசையும் மால்குஸ்சையும் மாறி மாறி பார்த்தான்.." ஐய்யா, நீர் எந்த ஊர்?" என்றான். " ஏன்...நான் இதே ஊர்காரன் தான்... இது எப்பேசுபட்டிணம்தானே" என்றான் மால்குஸ்.
ரொட்டிகடைகாரன்," ஐய்யா.. இது உம் காசுதானே?" என்றான். " ஆம்... இது என் காசுதான்...இதில் உமக்கு என்ன சந்தேகம் " என்றான் மால்குஸ்.
" ஐய்யா, உமக்கு இந்த காசுகள் எப்படிகிடைத்தது. எங்கிருந்து கிடைத்தது?"
" ஐய்யா,இது என்னுடைய காசுகள் தான். ரொட்டியைக்கொடு"
" இல்லை ஐய்யா..நீர் இந்த காசுகளை எங்கிருந்து கொண்டுவந்தீர் என்று சொல்லாதவரை உமக்கு ரொட்டி கிடைகாது."
" அதுதான் ஏன் என்று கேட்கிறேன்..உன் ரொட்டிக்கு இன்னும் அதிக விலை கொடுக்க வேண்டுமா...நேற்றுகூட நான் இந்த விலைக்குதானே வாங்கினேன்"
" ஐய்யா நீர் பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்...இந்த காசுகள் செல்லாதவை..முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை...ஆயினும் இன்றைக்கு இதற்கு விலை அதிகம்.உமக்கு எதேனும் புதையல் கிதையல் கிடைத்ததா?"
" அட முட்டாளே..நீ என்ன பேசுகிறாய் என்று எனக்கு விளங்கவில்லை. நானும் இதே எப்பேசுப்பட்டிணத்தை சேர்ந்தவன் தான் .என் தந்தையார்தான் இந்த எப்பேசுவின் ஆளுநறாக பணிபுறிந்தார். நேற்றுகூட மன்னர் திராஜன் தேசியன் எங்களை பார்த்து கிறிஸ்த்துவை கைவிட சொன்னார்.. அது எப்படி ஒரே நாளில் அவர் மனம் மாறிவிட்டார். கிறிஸ்த்துவன் என்று
சொன்னாலே கொன்றுபோடும் அவர் ஒரே நாளில் மனம் மாறியது யேசுநாதர் எவ்வளவு சக்தி உள்ள தேவன் என்பதைக்காட்டுகிறது. சரி சரி..உனக்கு எதற்கு இந்த கதை எல்லாம். எனக்கும் என் சகோதரர்கள் ஏழு பேருக்குமாக ஏழு ரொட்டி கொடு.பணம் போதவில்லை என்றால் மேலும் தினாரியம் தருவேன்" என்றான் மால்குஸ்.
தலையில் அடித்துக்கொண்டான் ரொட்டிக்கடைக்காரன்..அடக்கடவுளே இப்படியும் பைத்தியக்காரன் உலகில் இருக்க முடியுமா என்று நினைத்தவனாக," ஐய்யா...நான் முட்டாள் அல்ல..நீர்தான் முட்டாள்..உமக்குப்பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைகிறேன்.. மன்னன் திராஜன் தேசியன் இறந்து இன்றோடு சரியாக 372 வருடம் ஆகிறது. உம்மோடு
பேசிக்கொண்டிருந்தால் என் வியாபாரமும் போய்விடும் எனக்கும் பைத்தியம் பிடித்துவிடும் ..நீர் வேறு ஆளைப்பாரும் என்று அவனை அனுப்பிவிட கடையின் முன் ஒரு பெரும் கூட்டம் கூடிவிட்டது.
" பொறு...இவன் சொல்வதிலும் ஏதோ இருகின்றது. அவன் உடையும் அவன் வைத்திருக்கும் காசும் அதர்க்கு ஆதாரம்..இவனை நம் ஆளுனரிடம் ஒப்படைப்போம்..அவர் இவனை விசாரிக்கட்டும் " என்றான்..இதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளவே மால்குஸ் ஆளுநனிடம் கொண்டு செல்லப்பட்டான்.." ஐய்யா...உங்களை நான் மிகவும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என்னை அங்கே கூட்டிப்போகாதீர்கள். அங்கே மன்னன் திராஜன் தேசியன் இருப்பான்..அவன் என்னையும் என் சகோதரர்கள் அனைவரையும் நிச்சயம் கொன்றுபோடுவான்...தயவு செய்து வேண்டாம்...என்னை அங்கே கொண்டு போகாதீர்கள் " என்று அலறினான்.ஆனால் யாரும் அவனை விடுவதாக இல்லை. ஒருவழியாக மால்குஸை ஆளுநரிடம் ஒப்படைத்தார்கள்.
ஆளுநர் அவனிடம் எவ்வளவோ தயவாய் நடந்துகொண்டாலும் மால்குஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லியதால் மிகுந்த எரிச்சல் பட்டார். ஆனாலும் அவன் சொல்வதில் ஏதோ உண்மை இருப்பதை புறிந்துகொண்டவராய் அப்போதைய ஆயராக இருந்த மரியானுக்கு செய்தி அனுப்பினார்.. இந்த ஆயர் அவர் காலத்திலேயே எப்பேசுப்பட்டினத்தில் புனிதராக மதிக்கப்பட்டவர். அவரும் ஆளுநரை சந்திக்க வந்தார்.அவர் மால்குஸைப்பார்த்து," மகனே மால்குஸ்...நீ என்னிடம் உண்மையைதான் பேச வேண்டும்...புறிந்ததா.." என்றார்.
அதற்கு மால்குஸ், " ஆண்டவரே, என் தேவனே..நன் என் ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்துவின் பேரிலும் அவரது திருத்தாயார் புனித கன்னி மரியாளின் பேரிலும் சத்தியம் செய்கிறேன். நான் சொல்வதெல்லாம் உண்மை " என்றான். அப்படியானால் உனக்கு இந்தக்காசு எங்கிருந்து கிடைத்தது என்று சொல்" என்றார். அதற்கு மால்குஸ்," ஆண்டவரே, இது எங்களுடைய காசுதான். மன்னன் திராஜனின் கோபத்திற்கு ஆளாகமல் யேசுவை மறுதளிக்க விருப்பமும் இல்லாமல் இந்த உலக வாழ்கையை வெறுத்து எங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்ததுபோக இரண்டு நாள் சாப்பட்டிற்கு போக மீதம் இன்னும் சில காசுகளும் என் சகோதரனிடம் இருகின்றன. வேண்டுமானால் வந்து பாருங்கள்" என்றான். அதற்கு
ஆயர் ," நீ சொல்வது உண்மையானால் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்... இல்லை என்றால் எங்களை எல்லாம் ஏமாற்றியதற்காக உன்னை சபிப்பேன்" என்றார்.
இப்படியாக ஆயரோடும் அந்த நகர ஆளுநருடனும் மால்குஸ் உடனும் ஒரு பெரும் கூட்டம் அவனப்பின் தொடர்ந்து வந்தது. அந்த சீலியா மலையை அடைந்தபோது அந்த மலையின் உரிமையாளன் தாலியுஸ் மிகுந்த ஆச்சரியப்பட்டு," ஆண்டவரே என் தேவனே...இந்த அடிமையின் இடத்திற்கு தேவரீர் வருகை எப்படிப்பட்டதோ" என்றான். அதற்கு ஆயர் மரியான்
," மகனே தாலியுஸ்.. இந்த மனிதனை இதற்கு முன்னோ பின்னோ பார்த்திருகிறாயா?" என்றார். இந்த ஏழு சகோதரர்களைப்பற்றி ஏதும் அறியாத தாலியுஸ்," ஆண்டவரே, என் தேவனே.. இவனை நாம் இதுவரை பார்த்ததே இல்லை" என்றார். அப்படியானால் இவன் எப்படி மிகச்சரியாக உன் தோட்டத்துக்கு வந்தான்...அவனைப்பின் தொடர்ந்து நாங்களும் வந்திருகிறோம்" என்றார். தாலியுஸ் மிகுந்த ஆச்சரியப்பட்டு மால்குஸைப்பின் தொடர்ந்து அந்த உடைத்து திறக்கப்பட்ட குகைக்குள் பிரவேசித்தார்... அங்கே அவர்கள் கண்ட காட்சி அனைவரையும்
திடுக்கிட வைத்தது. தன்னுடைய மலையில் அதனுள் இருந்த மூடப்பட்ட குகையில் ஏழுபேர் வாழ்ந்ததெப்படி" என்றனர்.
மூத்தவன் மாக்சிமியன்," தம்பி மால்குஸ்... வந்துவிட்டாயா...திராஜன் தேசியனைப்பார்த்தாயா...அவர் என்ன சொன்னார்...உன் உயிருக்கும் உடமைக்கு சேதம் ஒன்றுமில்லையே.. அனைவருக்கும் ரொட்டி வாங்கி வந்தாயா? கொண்டுவா ...பசிவந்துவிட்டது" என்றான்.இதற்குள் ஆயரும் ஆளுநனும் உள்ளே வந்துவிட்டனர். இந்த ஏழு பேரையும் பார்த்த மாத்திரத்தில்
ஆயர் என்ன நடந்தது என்று உடனே புறிந்து கொண்டார். ஆளுநர் வந்து," தம்பி ...நீங்கள் யார்..எத்தனை காலமாக நீங்கள் இங்கே வசிக்கிறீர்கள்..நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?" என்றான்.. அதற்கு மாக்சிமியன்," ஐய்யா.. நாங்கள் இதே எப்பேஸு பட்டிணத்தை சேர்ந்தவர்கள் தான்..திராஜன் தேசியன் ராயன் எங்களுக்கு மூன்று நாள் கெடு விதித்து யேசுவை விட்டு விடும்படியும் அரசனையும் அவர்தம் தெய்வங்களையும் ஆராதிக்கும்படியும் கட்டளை இட்டார். ஆனால் நாங்கள் ஏழுபேரும் எங்கள் யேசுவை மறுதளிக்க முடியாதென கூறிவிட்டோம். மூன்றுநாள் கெடுமுடிய இன்னும் இரண்டு நாள் இருந்ததால் தம்பி மால்குஸை நகருக்குள் அனுப்பி நாங்கள் சாப்பிட ரொட்டி வாங்கிவர அனுப்பினோம்.. அன்று நாங்கள் உண்டு நேற்றுதான் கண் விழித்தோம். தம்பி மால்குஸும் அதற்குள் வந்து விட்டான்..வேறு என்ன விஷயம்?" என்றான். அதற்கு ஆளுநன்," தம்பி உன்னிடமிருக்கும் காசுகளை
என்னிடம் காண்பி" என்றான்.. மாக்சிமியனும் தன்னிடமிருந்த மீதி தெனேரிய காசுகளைக்கொடுத்தான்.
இதற்குள்ளாக அந்த சுவற்றில் ரகசியமாக தியோடர் மற்றும் ரூப்பஸ்
ஆகியோரால் பதித்துவைக்கப்பட்ட அந்த காரீயத்தால் செய்துவைக்கப்பட்ட அவர்கள் பெயர்கொண்ட பலகை கண்டுபிடிக்கப்பட்டு அது ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த ஏழுபேர்களின் பெயரும் படிக்கப்பட்டு அவர்கள் சரிதையும் வாசிக்கப்பட்டு உண்மையை புரிந்துகொண்டார் ஆயர் மாரியான் அவர்களோ. இதைக்கண்ட ஆளுநர் மிகுந்த ஆச்சரியப்பட்டு," தம்பி நீ சொல்வதை நாங்கள் நம்புகிறோம் என்று தடாலென அவர்கள் அனைவரின் கால்களில் விழுந்து வணங்கினார்...ஆயர் அவர்களும் கூட இந்த ஏழுபேர்களின் முன்பாக விழுந்து " ஓ...கடவுள் அருளாள் உயிர்த்தெழுந்துள்ள மக்களே நீங்கள் பாக்கியவான்கள்...கடந்த 372 வருடம் அளவாக நீங்கள் தூங்கினீர்களோ அல்லது மரித்து உயிர்த்தெழுந்தீர்கேளோ ..நாம் அறிவோம்...ஆண்டவனின் வல்லமையால் நீங்கள் உயிரோடு இருப்பது இறந்தபின் நித்திய ஜீவியத்திற்கு உடல் மீண்டும் உயிர்த்தெழும் என்பதற்கு
கடவுள் உங்களை சாட்ச்சியாக எழுப்பியுள்ளார். இதைத்தவிர வேறு சாட்ச்சியம் நமக்குத்தேவை இல்லை" என்றார்.
கடவுள் ஒரு ஏழுபேரை இந்த எப்பேசுப்பட்டிணத்தில் 372 வருடம் அளவாக தூங்க வைத்து மீண்டும் உயிரோடு எழுப்பியுள்ளார் என்ற செய்தி அந்த எப்பேசுப்பட்டிணம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவியது. கான்ஸ்டாண்டினேப்பிள்ல்ஸ் மன்னர் தியோடெசியனுக்கும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது. இந்த சேதியைக்கேட்ட மாத்திரத்தில் மன்னர் " ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் திருநாமம் வாழ்த்தப்படுவதாக..அவரது திருத்தாயார் அன்னை மரியாளின் திரு நாமமும் வாழ்த்தப்படுவதாக..சரீர உத்தானத்தை விசுவாசிகிறேன்...நித்திய ஜீவியத்தை விசுவாசிகிறேன் என்னும் விசுவாசப்பிரமாணங்கள் சத்தியமானவை என்பதை ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து நிரூபித்துவிட்டார்" என்றார். உடனே எப்பேசுப்பட்டினத்திற்கு
விரைந்து வந்தார்...பெருத்த ஆரவாரத்துடன் மன்னர் தியோடீசியன் வரவேற்கப்பட்டார்.. இதை எதையுமே மன்னர் கவனித்ததாக தெரியவில்லை... நேரே உயிர்த்தெழுந்த அந்த சகோதரர் ஏழு பேரையும் சந்தித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். மன்னர் அவர்கள் ஏழு பேரையும் வந்து சந்தித்த அடுத்தநாள் அந்த ஏழுபேரும் மீண்டும் மரணமடைந்தார்கள்.
அது அந்த எப்பேசுப்பட்டிண மக்கள் அனைவருக்கும் மிகுந்த சோகமூட்டியது. மன்னர் தியோடீசியனும் ஆளுநரும் ஆயரும் அடைந்த துக்கத்துக்கு அளவே இல்லை. இருப்பினும் ராஜ மரியாதையுடன் அந்த ஏழுபேரின் உடல்களும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டன. மன்னர் தியோடீசியன் தன் அரண்மனை கஜானாவைத்திறந்து அளவிடமுடியாத அளவுக்கு தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்து அவர்கள் அனைவருக்கும்
தங்கத்தாலேயே பெட்டிகள் செய்ய விரும்பினார்.. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தது. அன்று இரவே அந்த சகோதரர்கள் ஏழுபேரும் அரசன் கனவில் தோன்றி தங்களுக்கு தங்கமும் வெள்ளியும் வேண்டாம்..அவற்றை நாட்டின் முன்னேற்றதிற்காக பயன்படுத்துமாறும்...வெறுமனே சாதாரணமுறையில் மண்ணில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனக்கூறி
மறைந்து போனார்கள். அன்றிலிருந்து மரணத்துக்குப்பின் சரீர உயிர்ப்பையும் உத்தானத்தையும் நித்திய ஜீவியத்தையும் மக்கள் விசுவாசித்தார்கள். தப்பறையான கொள்கை தகர்ந்து போனது.
இதே சரித்திர நிகழ்ச்சி இஸ்லாமியர்களின் புனித குரானிலும் சூரா18 ல் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கூற்றுபடி இவர்களோடு இவர்கள் வளர்த்த ஒரு நாயும் துயில்கொண்டதா கவும் அவர்களோடு அதுவும் உயிர்த்தெழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஜோர்டானில் அவர்கள் குறிப்பிடும் இந்த ஏழு சகோதரர்களின் கதையில் வரும் அந்த குகைக்கல்லறையில்
ஒரு நாயின் எலும்புகூடும் உள்ளதாக கூறப்படுகிறது.
அருளப்பர்,11:25 ," உயிர்தெழுதலும் வாழ்வும் நானே..என்னிடம் நம்பிக்கைகொள்பவர் இறப்பினும் வாழ்வர்...உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் ". எஃபேசு பட்டிணத்தில் இந்த ஏழு சகோதரர்களின் மரணத்திற்குப்பிறகு இந்த சீலியா மலையின் பெயர் பையோஸ் மலை என்று பெயர்பெற்றது.. இன்று வரை
அதே பெயரோடு அழைக்கப்படுகிறது. இந்த சரித்திர நிகழ்ச்சி கி.பி.5 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு கிரேக்க மொழியிலிருந்து பல மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இந்த கதையின் மீதிருந்த விருப்பத்தால் பல நாடுகளில் இந்தக்கதை இங்குதான் நடந்தது என்றும் அந்தந்த ஊர்களின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டு நடைமுறையில் புழங்கி வருகிறது..இதனால் சில நாடுகளில் இவர்கள் 300 வருடம் தூங்கினார்கள் என்கிறார்கள்..இன்னும் சில நாடுகளில் 180 ஆண்டுகள் தூங்கினார்கள் என்கிறார்கள்.
எப்படிப்பார்த்தாலும் 180 வருடம் என்றாலும் 300 வருடம் என்றாலும் 372 வருடம் என்றாலும் கால வித்தியாசம் மிக அதிகம்..300 ஆண்டுகள் மூடிய குகைக்குள் அன்ன ஆகாரம் இன்றி, நீரும் இன்றி, காற்றும் இன்றி தூங்கினார்கள் என்பது ஆண்டவனின் அருளே அன்றி வேறு இல்லை.
No comments:
Post a Comment