Monday, June 3, 2013

" ஆசூர் கோட்டையில் ஒரு துஷ்ட்டப்பிள்ளை "





" ஆசூர் கோட்டையில் ஒரு துஷ்ட்டப்பிள்ளை "

        யேசுநாதர் ஆசூர் என்னும் இந்த ஊருக்கு தன் சீடர்களூடன் ஒரு நாள் வந்திருந்தார். அவரது காலத்தில் கூட இந்த ஆசூர்க்கோட்டை நல்ல வனப்புடன் இருந்தது.   இந்த ஊரில் பலதரப்பட்ட மக்கள் வசித்துவந்தாலும் யேசுநாதர் காலத்தில் யூதர்கள் மட்டும் தனித்தனி இடங்களிலையே வசித்து வந்தார்கள். அவர்கள் மற்ற இன மக்களிடையே கலப்பதில்லை. அதாவது பெண் கொடுப்பதுமில்லை, கொள்வதும் இல்லை. தூய நெறிமுறையின் படியே வாழ்ந்து வந்தார்கள். இந்த கோட்டையை சுற்றி ஆலிவ் மரங்கள் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டு நன்கு பராமரிகப்பட்டு வந்தன.
      பழங்காலத்தில் டெபோரா இஸ்ராயேலை ஆண்டுவந்த காலத்தில் மாஸ்ப்பா என்னும் பட்டிணத்தில் ஒரு பெண் எப்போதுமே ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்தாள்.  அவள் பெஞ்சமீன் குலத்தை சேர்ந்தவள். அவள் குறி சொல்வதிலும் வேவு பார்ப்பதிலும் மிகவும் கெட்டிக்காரி. அப்போதைய இஸ்ரேலிய ராணுவம் அவளை அவர்களுடைய  காரியங்களுக்கு சரியாய் பயன் படுத்திக்கொண்டது. ஆனாலும் அவளாள் வேவு பார்க்கப்பட்ட இடங்களில் தோல்வியே கண்டன. அதற்கான காரணம் தான் புறியவில்லை. இந்த   ஆசூர்க்கோட்டையின் பின் பகுதியில் உள்ள மலைத்தொடரில் மிதியானியர்களின் ராணுவம் குவிக்கப்படு இருந்தது. எந்த நேரத்திலும் இஸ்ராயேல் மக்கள் மீது போர் தொடுக்க முனைப்பாய் இருந்தது,     மிதியானியர்களின் படைபலம் மிகப்பெரியதாகையால் இஸ்ரேல் இவளை எதிரியின் மீது வேவு பார்க்க அனுப்பியது. அவளும் மிக சாமார்தியமாக எதிரியின் படைகளினூடே பல அடுக்குகளை யாரும் அறியாமல் கடந்து சென்று கடைசியில் மிதியானியர்களின் தளபதியின் கூடாரத்தை அடைந்தாள். அவள் தன் பெண்மையை மிக சாதுர்யமாய்   மறைத்து தன்னை இஸ்ரயேலின் ஒரு பெரும் லெப்டினன்ட் அந்தஸ்து உள்ள அதிகாரியாகவும் பெயர் அபினோயாம் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டள்.
     தான் தன் இஸ்ரேலிய ராணுவ ரகஸ்யங்களை தெரிவிப்பதாகவும் அதனால் இஸ்ரேலிய் ராணுவ வீரர்களை அவர்கள் வசம் ஒப்படைப்பதாகவும் அதற்கு என்ன விலை கொடுப்பீர்கள்   என்றும் பேரம் பேசியபடியே எதிரிகளை வேவு பார்த்தாள். மிதியானிய தளபதி மிகவும் மகிழ்ந்து போனான். தளபதி பேரத்திற்கு ஒப்புகொண்டு காரியம் முடிந்தபின் வேண்டிய பணம்   தருவதாகவும், அதற்கு முன் விருந்து சாப்பிடும்படியாகவும் கட்டாயப்படுத்தினான். அபினோயமும் சம்மதித்தாள். தடபுடலான விருந்துடன் போதைக்கு பாணங்களும் பரிமாறப்பட்டன.
      இந்த பெண் அபினோயாமுக்கு இருந்த கெட்ட பழக்கம் போதைப்பழக்கம். போதை தலைக்கேறியதும் அபினோயாம் தன்னிலை மறந்தாள். தன் சட்டையின் பொத்தான் கழண்டு   அவள் பெண்மைகுறிய மார்பகம் வெளிக்காட்டப்படவே அவள் மாட்டிக்கொண்டாள். மிதியானிய தளபதி இந்தப்பெண் அபினோயாம் ஒரு இஸ்ரேலிய வேவுக்காரி என்று உணர்ந்து ஒரு  பெரிய பலகையில் அவளைப்படுக்க வைத்து அவள் கைகளையும் கால்களையும் ஆணிகளால் அறைந்து இனிமேல் உன் பெயர் கூட வெளியில் தெரியகூடாதென்று ஒரு பெரிய குழி  வெட்டி அவளை அதில் போட்டுப் புதைத்தான். அவளது சாமாதி இந்த ஆசூர்க்கோட்டையின் பின்புறம் சற்று தூரத்தில் உள்ளது.
         மீண்டும் பல காலதிற்குபிறகு இந்த ஆசூர் கோட்டையில் கிதியோன் என்னும் வீர வாலிபன் நிகழ்த்திய சாகசம் இஸ்ரேலிய வரலாற்றில் பெரும் புகழ் பெற்றது.  இந்த ஆசூர்  கோட்டையை கைப்பற்ற அதன் பின்னே இருந்த மலைத்தொடரில் மிதியானியர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து மிகப்பெரும் படையுடன் காதிருந்தனர். இஸ்ரேலிய மக்களுக்கு கதி  கலங்கித்தான் போயிற்று. ஆண்டவரே எங்களைகாப்பாற்ற வாரும் என்று அழுது மன்றாடினர். ஆண்டவரும் மனமிறங்கினார். இந்த கிதியோன் என்னும் வாலிபனையும் மிக சொற்பமாக  300 வீரர்களின் துணையுடனும் இந்த மாபெரும் மிதியானிய சைனியத்தை வெற்றி கொள்ள ஆண்டவர் சித்தம் கொண்டார். இது இஸ்ரேலியர்களின் தேவன் நடத்தப்போகும் போர்.
எனவே அதிகம் பேருடன் நடைபெறப்போகும் போரில் வெற்றி பெற்றாலும் அது ஆண்டவரின் வெற்றியாகக்கருதப்படாது என்று அவர்களில் வெறும் 300 பேரை மட்டுமே தெரிவு  செய்ய ஆண்டவர் கட்டளையிட்டார்.அருகில் உள்ள நீர் நிலையில் கிதியோனின் படையினரை நீர் அருந்த கட்டளையிட்டார். அவர்களிள் மண்டியிட்டு கைகளால் நீர் எடுத்து குடித்த  300 வீரர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டனர். மீதமுள்ள படையினர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
அன்று இரவு கிதியோன் எதிரனியிலிருந்த மிதியானிய படையினரை வேவு பார்த்தான்.
         அப்போது ஒரு மிதியானிய வீரன் தான் கண்ட ஒரு கனவைப்பற்றி மற்ற வீரனிடம்  விவரித்துக்கொண்டிருந்தான். அதாவது இந்த மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு ரொட்டித்துண்டானது அவர்கள் மீது விழுந்து அவர்களை நசுக்கிப்போட்டது, இதன் அர்த்தம் எனக்கு  விளங்கவில்லை, உனக்குத்தெரிந்தால் சொல்லு என்றான். அதற்க்கு மற்றவன் ஆ.. ஆ.. இது கெட்ட சகுணம், நாளக்கே கிதியோன் நம்மை எல்லாம் அழிக்கப்போகிறான் என்றான்.
       கிதியோனும் ஆண்டவர் கூறியபடியே தீச் சட்டிகள் உள்ள பானைகளை ஒரு கையிலும் ஊதுவதற்கு எக்காளங்களை ஒரு கையிலும் வாட்களையும் ஆயுதங்களையும்  எடுத்துக்கொண்டு மலையில் எதிராளிகளை சுற்றி இருட்டில் நின்றுகொண்டனர். ஆண்டவரின் உத்திரவு கிதியோனிடமிருந்து உத்திரவாக வந்ததும் அந்த 300 வீரர்களும்   தீப்பந்தங்களை ஒரே சமயத்தில் ஏற்றி ஹோ ஹோ என கத்திக்கொண்டு எக்காளங்களையும் ஊதினர். இந்த திடீரென ஏற்பட்ட பரபரப்பால் மிதியானியர்களிடையே கலவரம்
ஏற்பட்டதும் அந்த 300 வீரர்களும் தீ சட்டிகளை ஏக சமயத்தில் போட்டு உடைத்தனர். இந்த அமலியில் மிதியானிய வீரர்கள் இந்த கும்மிருட்டில் கிதியோன் வீரர்களுடன் மோதுவதாக   எண்ணி அவர்களுக்குள்ளேயே வெட்டிக்கொண்டார்கள். தப்பி ஓடிய மிதியானர்களை இஸ்ரேலிய வீரர்கள் வெட்டிக்கொண்றார்கள். கிதியோனின் வீரர்களிடம் மாட்டிக்கொண்ட
மிதியானியவீரர்களின் கதி அதோகதி ஆயிற்று. மிதியானிய ராணுவம் பெரும் தோல்விகண்டது. இந்த வெற்றியை கிதியோன் ஆண்டவரின் வெற்றியாக பிரகடணம் செய்தார்.
        அதற்காக ஒரு நன்றிபலி ஒப்புகொடுத்தார்.
   ஆண்டவரும் அந்தபலியை ஏற்றுக்கொண்டார். ஆக கிதியோன் அடைந்த வெற்றி ஆண்டவரின் வெற்றியாக பிரகடணம் செய்யபட்டு இந்த ஆசூர்க்கோட்டையில் ஆண்டு   ஆண்டு காலமாய் கொண்டாடப்பட்டு வந்தது.இந்த கொண்டாட்டம் நடைபெற்ற சமயத்தில் தான் யேசுநாதரும் இந்த கோட்டையில் பிரவேசித்தார்.
      இந்தக்கோட்டையில் நடைபெற்றிருந்த வேறுஒரு நிகழ்ச்சியும் ஆண்டவராகிய யேசுவின் மனத்திரையில் தோன்றிமறைந்தது. கிதியோனின் காலத்திற்குப்பிறகு இந்த ஆசூர்  கோட்டை வலுவிழந்து போய்விட்டது.கிதியோன் காலத்தில் இக்கோட்டையில் ஏராளமான கோதுமைக்களஞ்சியங்கள் இருந்தன. ஏராளமான தான தருமங்களுக்கு கிதியோன் இந்த   களஞ்சியங்களை பயன் படுதினான். பிற்காலத்தில் தகுந்த அரசர்களோ, தலைவர்களோ சரியாக அமையாதபடியால் இந்த ஆசூர்க்கோட்டை பாழ்பட்டுப்போயிற்று. பலர் கைகளில்
மாறிமாறி ஒருகாலத்தில் ஒரு ஜமீன்தாரர் வசமாயிற்று. இந்த வயதான ஜமீந்தாரருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். வயல்வெளியில் வேலை செய்யவும் வீட்டு வேலை செய்யவும்  ஏராளமான வேலையாட்க்களும் அடிமைகளும் இருந்தனர்.
         ஜமீந்தாரரும் தன் வீட்டு வேலையாட்களை மதித்து தன் பிள்ளைகளைப்போல் அவர்களை நடத்தினார். அந்த ஆசூர்கோட்டையில் அன்பும் நட்பும் சமதானமும் நிலவி வந்தது.  அப்போது ஒரு நாள் ஒரு வில்லங்கம் வந்தது. தன் இரண்டாம் மகன் தீயவர்களோடு சகவாசம் கொண்டுள்ளான் எனவும் அவனை கண்டித்து திருத்தும்மாறும் அவர்மீது நல்லெண்னம்  கொண்ட சிலர் ஜமீந்தாரிடம் தகவல் கூறினர்.அவரும் இது வாலிபக்கோளாறு எனவும் அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார்.
      ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது.
பகைவர்கள் தன் இரண்டாம் மகனுக்கு துற்புத்தி சொல்லி அவனைபடுகுழியில் வீழ்த்த நினைத்து அவன் சொத்துக்களை அவன் தகப்பனிடமிருந்து பறிக்கச்செய்தார்கள்.
       அவர்கள் முயற்சி வெற்றிபெற்றது. என்ன இருந்தாலும் விதி வலிது அல்லவா !...அன்பான தகப்பனையும் அன்பான சகோதரனையும் சொத்துக்காகப்பிறித்து ஏராளமான   சொத்துக்களுடன் ஊர் சுற்றக்கிளம்பினார்கள். பக்கதில் வசித்தால் மீண்டும் அவனது தகப்பன் வந்து அவனை கூட்டிசென்றுவிடுவார் என்று அவனுக்கு துற் புத்தி சொல்லி
கலிலேயாக்கடல் கடந்து பெத்சாய்தா என்னும் ஊர் அடைந்தனர்.அந்தக்காலத்தில் பெத்சாய்தா பெரும் ஆடம்பரபட்டிணமாய் விளங்கிற்று. பெரும் மதில்களுடைய கோட்டை,  அரண்மனைகள், வில்லாக்கள்.எஸ்டேட்டுகள் என்று ஏகப்பட்ட ஆடம்பரங்கள் நிறைந்த சொர்கபுரியாக திகழ்ந்தது. மதுபாண தொழிற்சாலைகள், மீன்பிடி தொழில்கள் பிரதான தொழில்   ஆகும் ஒரு விதமான கருங்கற்களால் ஆன வீடுகள் மொசைக் போன்று வழுவழுப்பாக உட்பக்கத்திலும் வெளிப்பக்கதிலும் ஒட்டப்பட்டு அக்காலத்திலையே மிகவும் பிரம்மாண்டமாக
விளங்கின. அந்த ஊர் முழுக்க இதே போன்ற வீடுகள் நிறைந்து இந்த ஊரில் யாரும் ஏழைகள் இல்லை என்று கூறாமல் கூறின. இந்த செல்வ செறுக்கால் அந்த பெத்சாய்தா   பட்டிணத்தில் சகலவிதமான பாவங்களும் பெறுகியிருந்தன.
         நம் கதாநாயகனும் தன் தீய நண்பர்களுடன் இந்த பெத்சாய்த்தா பட்டிணத்தை அடைந்தான்.அவன் செலவிலேயே உண்டு குடித்து எல்லாவிதமான களியாட்டமும் போட்டனர்.  ஆயிற்று.!...எல்லாம் கொஞ்சநாட்களிலெயே செலவாகிவிட்டது. குந்தி தின்றால் குன்றும் கறையும் என்னும் பலமொழி உண்மையானது. கையில் காசு குறையக்குறைய நண்பர்களும்  குறைந்தனர். ஒருசமயம் காசும் இல்லை நண்பர்களும் இல்லை என்று ஆகிவிட்டது. அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழி இல்லை என்ற நிலை தனக்கு வரும் என்று அவன் கணவில்  கூட அவன் நினைத்திருக்க மாட்டான்.கையில் காசு இல்லாமல் அந்த பெத்சாயித்தா பட்டிணத்தில் ஒரு நாள் கூட ஓடாது.
      இவ்வளவு நாளும் ஆடம்பரமாக வாழ்ந்துவந்த அவனுக்கு பசி பட்டிணி தாகம் தாங்க இயலவில்லை. அந்த நகரத்திலேயே ஏதாவது வேலை தேடிக்கொள்ளலாம் என்றால் யாரும்  அவனை சீண்டுவார் இல்லை. எத்தனை நாள் தான் பட்டினிகிடக்க முடியும். எனவே வேலை தேடி நடந்தான்.. நடந்தான்.. நடந்தான்...ஒருவழியாக கு[ர்]ஷி என்னும் சிற்றூரை
அடைந்தான். ஊர் பேர் தான் கு[ர்]ஷியே தவிர அங்கு வாழ்ந்த மக்களின் நிலைமை படு மோசம். அந்த ஊர் மக்களின் பிரதான தொழிலே சாராயம் காய்ச்சுவதும் பன்றி மேய்ப்பதும் தான்.
      இவன் நிலை கண்ட ஒரு எஜமான் அவனுக்கும் பன்றி மேய்க்கும் வேலை கொடுத்தான். வயிற்றுக்கு சாப்பாடு . இதுதான் அவன் செய்யும் வேலைக்கு சம்பளம்.   பசி எதையும் கருத்தில் கொள்ளாது.   இந்த வேலையை அவன் ஏற்றுக்கொண்டான். கொஞ்ச நாளில் எஜமான் அவனை ஏமாற்ற ஆரம்பித்தான். மூன்று வேலை சாப்பாடு இரண்டு வேலை ஆனது. அதுவும் கொஞ்ச  நாள் தான்.பிறகு இரண்டு வேலை சாப்பாடு ஒருவேலை ஆயிற்று. அதுவும் கொஞ்ச நாள் தான். அந்த ஒரு வேலை சாப்பாடும் ஊசிப்போனதும், வீணானதும் என்று ஆயிற்று. அதுவும்  கொஞ்ச நாள் தான். பிறகு சாப்பாடே இல்லை என்று ஆகிற்று. வேறு வழி இல்லாமல் பன்றிகளுக்கு போடப்படும் அசுத்தமான கிழங்குகளையும், கோதுமைகளையும் தின்ன
ஆரம்பித்தான். பார்த்தான் எஜமான். அவனை வேலையை விட்டே துரத்திவிட்டான். இப்போதுதான் அவனுக்கு உலகம் புறிந்தது. அவன் தன் நிலை உணர்ந்தான்.
      அவனது மனக்கண்ணில் அவன் தகப்பனும் சகோதரனும் தோன்றினர். அவர்கள் வேலையாட்களும் அடிமைகளும் கூட எவ்வளவு சந்தோஷமாக வாழ்கின்றனர். தான் அவர்களை  விட்டுப்பிறிந்து வந்தது எவ்வளவு பெரும் மதியீனம், எவ்வளவு பெரும் துரோகம் என்று உணர்ந்தவனாய் " நான் என் தந்தையிடம் செல்வேன்.அவரின் காலில் விழுந்து என்னை
மன்னிக்கும்படி வேண்டுவேன். என்னை மகனாக அல்லாமல் ஒரு வேலைக்கரனாகவாவது ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுவேன்.இந்த பன்றி மேய்க்கும் நரகவாழ்கைக்கு  என் தந்தையிடம் அடிமை வேலை செய்வது எவ்வளவோ மேல்."என்று நினைத்தவனாக மீண்டும் தன் தந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
        இங்கு இந்த ஆசூக்கோட்டையில் இருந்த பெரியவர் ஜமீந்தாரருக்கு நிலைமை மோசமாகியது.மகனை இழந்த சோகம் அவரை ஆட்டுவித்தது. தன் செல்ல மகன் எங்கோ   வாழ்கிறான் என்றிறுந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாகமாறி அவன் இறந்துதான் போய் இருப்பான் என்ற எண்ணம் மேலோங்கியது. கால இடைவெளி அவரை இவ்வாறாக
எண்ண வைத்தது.   அவன் பிரிவால் அவர் மனது சொல்லொண்ணாத வேதனையில் வாடித்துடித்தது. என் மகனை என் வாழ்க்கையில் இனி ஒரு முறையாவது பார்ப்பேனோ என்று  தவிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது முதல் மகனும் அவரை எவ்வளவோ தேற்றிப்பார்த்துவிட்டான்." அப்பா, சனியன் விட்டது என்று இருங்கள். தரித்திரம் விட்டது என்று சந்தோஷப்
படுங்கள்,பீடை ஒழிந்தது என்று மனதில் அமைதி அடையுங்கள்" என்றான்.அதற்கு அந்த பெரியவர் சொன்னார், "மகனே, அவன் உனக்குவேண்டுமானால் சனியனாகவோ,   தரித்திரமானவனாகவோ பீடையாகவோ இருக்கலாம். ஆனால் அவனும் எனக்கு மகன் தான். என்னைப்பொருத்தவரைக்கும் எனக்கு நீயும் ஒன்று தான். அவனும் ஒன்று தான்.நீங்கள்  இருவருமே என் உயிர் தான், எனக்கு நீ ஒரு கண், அவன் ஒரு கண். நான் யாரைப்பிரிந்து உயிர் வாழ்வேன். இன்னும் சொல்லப்போனால் அவன் என் கடைசிப்பையன்,   என் செல்லபிள்ளை .அன்று சொத்தை பிரித்தபோது நானும் அவன் மீது கோபம் கொண்டது உண்மைதான். கோபத்தில் நீ நாசமாகப்போ என்று சபித்ததும் உண்மைதான். என் சாபமே
அவனை இந்த கதிக்கு ஆளாக்கியது, அன்று மட்டும் நான் என் கோபத்தை அடக்கியிருந்தால், அன்று மட்டும் நான் அவனை சபிக்காமல் இருந்திருந்தால் இன்று அவனுக்கு இந்த   நிலை வந்திருக்காது, எனக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது, எனக்கு மட்டும் ஒரே ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால்,    அவன் மட்டும் என்னை வந்து பார்ப்பானேஎன்றால் அவன் எந்த
நிலையில் இருந்தாலும் மீண்டும் என் மகனாக ஏற்றுகொள்வேன், இது உறுதி " என்றார். பெரிய மகன் தலையில் அடித்துக்கொண்டான்.
       இப்படியாக பல நாட்க்கள் மாதங்கள் வருடங்கள் என்று போய்க்கொண்டே இருந்தன. ஒரு நாள் பகவான் கண் திறந்தான். எந்த நாடகத்திற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா.  அப்படியாகத்தான் அன்றும் நடந்தது. ஒருநாள் மாலை அந்தி சாயும் நேரம். மாடியில் நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்
அன்று வழக்கத்திற்கு மாறாக யாரோ ஒரு பக்கிரி அடர்ந்த தாடியோடும், அழுக்கடைந்த மேனியோடும் கிழிந்துபோன ஆடைகளோடும் காலில் செருப்பு இல்லாமலும் தளர்ந்த நடையோடு  அவரது வீட்டை நோக்கி வருவதைக்கண்டார். தன் பெரிய மகனை அழைத்து வருவது யார் என்று பார்த்து வரும்படி கட்டளை இட்டார். அவன் பார்த்துவிட்டு யாரோ ஒரு பிச்சைக்காரன்   என்றான். மேலும் ," உங்களுக்கு இதே வேலையாய் போயிற்று.உங்கள் இளைய மகன் இனிமேல் வரவே மாட்டான்.அவன் எங்கேயாவது இத்தனை காலத்தில் செத்து தான் போய்
இருப்பான். எல்லாம் என் தலை எழுத்து " என்று தலையில் அடித்துக்கொண்டு அவன் வேலையை பார்க்கப் போய்விட்டான்.ஆனால் தகப்பனுக்கு ஒரு எண்ணம். இவன் நடை  தளர்ந்திருப்பினும் இந்த நடை என் மகனுக்கு உறியதே, அவன் நிச்சயமாக என் மகனாகத்தான் இருப்பான் என்று உணர்ந்து மடியிலிருந்து இறங்கி தெருவில் அவனை நோக்கி  வேகமாக நடந்து வந்த்தார்.
     பசியிலும் தாகத்திலும் தவித்துப்போன மகன் இனி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் அவன் தகப்பன் ஓடி வந்து அவனைத்தாங்கிக்கொண்டார்.  மகன் அவரது காலைக்கட்டிக்கொண்டு அழுதான்...அழுதான்...அப்படி அழுதான். தகப்பன் , "போதும் அப்பா... போதும்..அழாதே.. எல்லாம் முடிந்துவிட்டது. உன் துன்பம் எல்லாம்
முடிந்துவிட்டது. என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா.இனிமேல் அப்பா நான் பார்த்துக்கொள்வேன்.முதலில் அழுகையை நிறுத்து. நீ அழுதால் நானும் அழுவேன்" என்று அவரும்  அழுதுகொண்டே கூறினர்.ஆனால் மகன் பேசினான், " அப்பா என்று உங்களை அழைக்கவோ மகன் என்று உரிமை கொண்டாடவோ எனக்கு தகுதி இல்லை. அப்பா உங்களுக்கு
விரோதமாகவும் ஆண்டவருக்கு விரோதமாகவும் நான் பாவம் செய்தேன், மன்னிக்க முடியாத துரோகம் செய்தேன், நீங்கள் என்னை மன்னியுங்கள் என்று கேட்கக்கூட எனக்கு  தகுதி இல்லை.என் நிலைமை இந்த உலகில் வேறு யாருக்கும் வரக்கூடாது. என்னை உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளவேண்டாம்.என்னை ஒரு வேலைக்காரனாககூட வேண்டாம்..
ஒரு அடிமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தோட்டத்தில் ஏதோ ஒரு குடிசையில் மீதியுள்ள என் நாட்க்களை நான் கழித்துக்கொள்வேன். இந்த ஆடை அழுக்கடைந்தது போலே  என் ஆண்மாவும் அழுக்கடைந்து விட்டது.இந்த உடை கிழிந்துள்ளது போலே என் மனமும் சுக்குநூறாய்க்கிழிந்து போய்விட்டது. தயவு செய்து என்னை தொடாதீர்கள் அப்பா.. நான்
நீங்கள் தீண்டத்தாகதவன் ஆகிவிட்டேன்" என்று ஓ. என்றுபெருங்குரலேடுத்து அழுதான். பாசமுள்ள தந்தை திரும்பிவந்த தன் மகனின் அழுக்கடைந்த மேனியை   கட்டிபிடித்துக்கொண்டு அழுக்கோடும் நீண்ட தாடியோடும் இருந்த அவன் முகத்தில் ஆயிரம் முத்தங்கள் கொடுத்து அவனைத் தேற்றினார். அவனை வீட்டிற்கு அழைத்துசென்று  குளிக்கச்செய்து புத்தாடை அணிவித்து பெரும் விருந்து ஒன்று ஏற்பாடு செய்தார்.. அதற்காக தன் பண்ணையில் இருந்த பெரும் கொழுத்த கன்று ஒன்றை அடிக்கச்செய்தார்.
     வெளியில் சென்றிறுந்த பெரிய மகன் வீட்டிற்க்கு திரும்பிவந்தபோது தன் வீட்டில் விருந்து களைகட்டிருப்பதைகண்டு நடந்த சேதியறிந்து கடும் கோபம் கொண்டான்.  தன் தகப்பனிடம் ," நான் என் நண்பர்களுடன் விருந்து கொண்டாட நீர் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூட கொடுக்க உமக்கு மனதுவரவில்லை.ஆனால் சொத்தை எல்லாம்  பிரித்துச்சென்ற உம் இளைய மகன், உமக்கு துரோகம் செய்தவனுக்கு ஆடம்பரமாக பெரிய கொழுத்த கன்று அடித்து விழா கொண்டாடுகின்றீர். இது என்ன அப்பா நியாயம்? " என்று
தன் வயிற்றெறிச்சலைக் கொட்டித் தீர்த்தான். அதற்கு பெரியவர் " அப்பா மகனே,இதுதான் ஒரு நல்ல தகப்பனுக்குறிய குணம்.இந்த சொத்தெல்லாம் உன்னுடையது.எப்போதும்  உன்னுடனே இருக்கப்போகிறது. ஆனால் அவன் அப்படியல்ல. அவன் இறந்திருப்பான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் மனம் திரும்பி வந்த்துவிட்டான். அவன்   திரும்பிவந்தது நான் செய்த பாக்கியம். நான் அவனை ஏற்றுக்கொள்வேன் என்று என்னை நம்பி வந்தவனை நான் எப்படி தள்ளி விட முடியும். இதற்குதானே நான் இவ்வளவு நாளும்  காத்திருந்தேன். இதெல்லாம் உனக்கு இப்போது புறியாது. நீயும் என் நிலைக்கு வரும்போது தான் அப்போது உனக்கு புரியும். எனவே கோபத்தை விட்டுவிட்டு என்னோடு விருந்து கொண்டாட வா " என்று அழைத்தான்.
         இந்த நிகழ்ச்சி எல்லாம் யேசுநாதரின் மனக்கண்ணில் ஓடியது. அவர் அன்றைய சொற்பொழிவாக இந்த ஊதாரி மைந்தன் கதையை கூறி அனைவரையும் அச்சர்யத்தில்   ஆழ்த்தினார். அவர் மேலும் கூறியதாவது. " அந்த நல்ல தகப்பன் தன் திருந்திய மகனுக்காக தன் பண்ணையில் இருந்த சிறந்த கொழுத்த கன்றை அடித்தார். ஆனால் பரலோக  பிதாவாகிய சர்வேசுரன் இழந்துபோன இந்த மனித ஜென்மங்களை மீட்க்க தன் ஒரே பேரான மகனை இந்த பூலோகத்திற்க்கு பலியக அடிக்க அனுப்பியுள்ளார். ஆனால் இந்த மக்கள்  கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் உள்ளனர் ." என்றார்.ஆனால் அங்கிருந்த
பாதி மக்களுக்கு இந்த ஊதாரி மைந்தன் கதை தான் புறிந்ததே தவிர யேசுநாதர் இந்த உவமான கதை மூலம் எதைக்குறிக்கிறார் ? மேசியா என்று யாரைக்குறிப்பிட்டு கூறுகின்றார்?  என்று புரியவில்லை.ஆனால் புறிந்து கொண்டவர்களுக்கு அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மனதில்லையாதலால் அவர்கள் வாயினின்று " நற.நற. நற."என்று பற்கடிக்கும் ஓசை மட்டும் வெகு நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment