Thursday, June 13, 2013

" தீர்ஸாக்கோட்டை "



" தீர்ஸாக்கோட்டை "
    சுவாமி யேசுராஜா இந்தப்பூஉலகில் மனிதாவதாரம் எடுத்து நசரேத்தூரில் வாழ்ந்து அவரது இந்தப்பூவுலகில் தகப்பனாக இருக்கப்பேறு பெற்ற யேசேப்பு மறைந்த பிற்பாடு   தன் தாயாரை அழைத்துக்கொண்டு கலிலேயாவிலுள்ள கப்பர் நஹூம் என்னும் ஊரில் வாழத்துடங்கினார். அங்கிருந்து தான் இந்தப் பூவுலகிற்கு வந்த வேலையாகிய வேத போதக அலுவலை துவங்கி தனக்கென அப்போஸ்த்தலர்களையும் சீடர்களையும் ஏற்படுத்திக்கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு ஒரு முறை தான் வாழ்ந்தவீட்டையும்
ஊரையும் பார்க்க ஆசைப்பட்டு நஸரேத்தூர் வந்தார். நஸரேத்தூரிலுள்ள தேவாலயத்தில் அவர் பிரசங்கிக்க வந்த போது இசையாஸ் தீர்க்கதரிசியின் திருப்படல்கள் அடங்கிய ஒரு ஓலைச்சுருள் ஒன்று அவரிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓலைச்சுருளில் இசையாஸ் தீர்க்கதரிசியின் ஒரு தீர்க்கதரிசனப்பாடல் இருக்க யேசுநாதர் அந்தப்பாடலை படித்தார்.
அந்தப்பாடல் இவ்வாறாக இருந்தது.
" ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது.
ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார்.
ஏழைகளுக்கு நற்செய்தியை.அறிவிக்கவும்
சிறைபட்டோர் விடுதலை அடையவும்
பார்வையற்றோர் பார்வையடையவும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்
அவர் என்னை அனுப்பிவுள்ளார்."
    பின்னர் யேசுநாதர் அந்த ஓலைச்சுருளை சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.தொழுகைக்கூடத்திலிருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கி   இருந்தன. அப்போது யேசுநாதர் அவர்களை நோக்கி " நீங்கள் கேட்ட மறை நூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைகேட்டு வியப்புற்று
" இவர் நம் ஊர் தச்சன் யோசேப்பின் மகன் அல்லவா.. இவ்வளவு ஞானம் இவருக்கு எங்கிருந்து வந்தது...என்று கூறி அவர்மட்டில் இடறல் பட்டனர். அவர் அவர்களிடம் " நீங்கள் என்னிடம் மருத்துவரே நீர் உம்மையே குணமாக்கிக்கொள்ளும் எனக்கூறி " கப்பர்னாஹூமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விபட்டதை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும்
செய்யும்" என கண்டிப்பாகக்கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குக்கூறுகிறேன். இறைவாக்கினர் எவரும் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளபடுவதில்லை. .மதிக்கப்படுவதும் இல்லை....உண்மையாகக்கூறுகின்றேன்.... எலியாவின் காலத்தில் மூன்றறை ஆண்டுகளாக வானம் பொய்த்தது. நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது.
அக்காலத்தில் இஸ்ராயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்... ஆனால் அவர்களுள் எவரிடமும் எலியாஸ் அனுப்பப்படவில்லை.....சீதோனைச்சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த
ஒரு கைம்பெண்ணிடமே அவர் அனுப்பப்பட்டார்.
     மேலும், இறைவக்கினர் எலியாவின் காலத்தில் இஸ்ராயேலாரிடையே தொழு நோயாளிகள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை...சிரியாவைச்சேர்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது " என்றார்.
     யேசுநாதர் தங்களை வார்த்தைகளில் தாக்குகிறார் என்று அறிந்த தொழுகைகூடத்தில் இருந்தவர்கள் பெரும் சீற்றம் கொண்டு எழுந்து அவரை ஊருக்கு வெளியே துரத்தி,  அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச்சென்றனர். ஆனால் அவர் அவர்களிடையே நடந்து சென்று மறைந்துபோனார். தேவ தாயாரும் இந்த மக்கள்
கூட்டத்தினரிடையே சென்று தன் மகனுக்கு என்ன ஆகியதோ என்று கதிகலங்கி தவித்துப்போனார்கள். அவர்கள் தவித்து நின்ற இடத்தில் இப்போதும் ஒரு மாதா சொரூபம்   அமைக்கப்பட்டுள்ளது. அதர்க்கு பயந்த மாதா என்று பெயர் . அந்த மலைக்கு " mount of precipice " என்றும் பெயர்.
தொழுகைகூடத்தில் யேசுநாதர் வாசித்த அந்த இசையாஸ் தீர்க்கதரிசியின் பாடலில் சிறைபட்டோர் விடுதலையடையவும்....ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்.... ஆண்டவர் என்னை அனுப்பினார் என்ற வரிகள் கவனிக்கத்தக்கவை. யேசுநாதர் பார்வை அற்றவருக்கு பார்வை அளித்தார் என்றும் ஏழைகளுக்கு நற்செய்தி அளித்தார் என்றும் நாம்
அறிவோம்... ஆனால் யேசுநதர் எந்த சிறைச்சாலைக்குச்சென்று யாரை விடுதலை செய்தார்....எந்த ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்தார் என்ற விபரங்கள் எனக்கு வெகு நாள் வரை தெரியாமலிருந்தது...அதன் விளைவாக நான் அறியவந்த நிகழ்வுகள் தான் தீர்ஸாக்கோட்டை.
     தீர்ஸா என்னும் வார்த்தைக்கு எபிரேய மொழியில் என் இனியவளே என்று பொருள். பழைய ஏற்பாட்டில் எண்னாகமம் [26: 33] மோயீசன் கட்டளையிட்டபடியே மாக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அதன்படி ஏபேர் மகன் செலேபுகாதுக்கு புதல்வர்கள் இல்லை. செலேபுகாதுக்கு ஐந்து புதல்வியர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயர்கள்.மக்லா...நோகா...ஓக்லா..
மில்கா.. திர்ஸா. தங்கள் தகப்பன் இறந்ததும் இந்த ஐந்து பெண்களும் தங்கள் தகப்பனின் சொத்துக்கு பாத்தியதை கோறினார்கள். மோயீசனும் அவர்களின் கோரிக்கையில் உள்ள   நியாயத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டவரிடம் கேட்டார். ஆண்டவரும் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் தகப்பனுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் இந்த ஐந்து பெண்களுக்கும் சொத்தை பிறித்துக்கொடுத்தார்.. அன்றிலிருந்த எபிரேய பெண்களுக்கு அடித்தது அதிர்ஸ்ட்டம்.. தகப்பன் சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்னும் சட்டபூர்வமான உரிமை அன்றிலிருந்து அமுலுக்கு வந்தது. செலேபுகாதின் கடைசிப்பெண் தீர்ஸாவின் பெயரால் கிடைக்கப்பெற்ற அவள் தகப்பன் வழிவந்த நிலத்திலேயே இந்த கோட்டை அமைக்கப்பெற்று வந்ததால் இந்த கோட்டைக்கு தீர்ஸாக்கோட்டை என்று பெயர் வந்தது. இன்றுவரை அதே பெயராலேயே அழைக்கப்பட்டு வருகின்றது.
     தீர்ஸாக்கோட்டை வேத காலத்திலிருந்தே சமாரியாவில் இருக்கின்றது. பலப்பல அரசர்களின் கை மாறி மாறி அவரவர் காலங்களில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடனே இருந்து  வந்திருக்கின்றது. இந்த தீர்ஸாப்பட்டிணம் ஒரு காலத்தில் கானானியர்களின் பெரும் படைக்கலனுள்ள கோட்டையாக இருந்தது. ஜோஷுவாவின் காலத்தில் அவர் கானானியர்களிடமிருந்து போரிட்டு இந்த கோட்டைக்கைப்பற்றிக்கொண்டார். அதன் பிறகு இந்த கோட்டை இஸ்ராயேலர்களின் கோட்டை ஆயிற்று. ஒரு காலத்தில் சாலமோன் கையில் போய் சேர்ந்தது. இந்த தீர்ஸாக்கோட்டையிலிருந்துதான் சாலமோன் ஞானியும் அரசரும் தான் ஜெருசலேமில் கட்டப்போகின்ற தேவாலயத்திற்கு தேவையான தங்கம் மற்றும் வெண்கலப்பாத்திரங்களை தயாரிக்கும் ஆயத்தங்களை செய்தார். இங்கிருந்து ஜொர்டான் சமவெளீயிலுள்ள சக்கோத்து என்னும் இடத்திலுள்ள களிமண் நிலப்பகுதியை
தேர்ந்தெடுத்து அவற்றை உருக்கி பாத்திரமாக செய்தார்..இந்த தீர்ஸாக்கோட்டை உள்ள இடம் சர்தபா என்று அழைக்கப்படுகின்றது. வேத காலத்தில் சார்தான் என்றும் அழைக்கப்பட்டது.
     சாலமோன் பேரரசருக்குப்பின் ஒன்றாக இருந்த நாடு அவர் மகன் ஜெரோபோயாம் காலத்தில் இரண்டாகப்பிரிக்கப்பட்டு கலிலேயாவும் சமாரியாவும் சேர்ந்த பகுதி இஸ்ராயேல் எனவும்  தென் பகுதியிலுள்ள ஜுதேயா தனி நாடாகவும் ஆயின. இஸ்ரேயலுக்கு தலை நகராக தீர்ஸாக்கோட்டை விளங்கியது..எலியாஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் இந்த கோட்டையில் குறிப்பிடும்படி இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன.
சிரியாவிலிருந்த வந்த பெனதாது என்பவன் இந்த கோட்டையை முற்றுகை இட்டான். மேலும் இஸ்ராயேல் கடவுளின் சாபத்தால் மழைவேறுபொய்த்தது. கடும் பஞ்சம் நிலவியது.
     பஞ்சம் எவ்வளவு கடுமையானது என்றால் பிள்ளையை பெற்றவள் தன் பிள்ளையை வெட்டி சமைத்து தின்றாள்..தீர்ஸாக்கோட்டையில் இருந்த அரசன் தன் பிழைபொறுக்குமாறு கடவுளிடம் வேண்டவே கடவுளும் மனமிரங்கி ஒருஅருள் வாக்கு எலியாஸ் தீர்க்கதரிசியின் மூலம் கூறினார். அடுத்த நாள் கோதுமை கலம் ஒன்று ஒரு ஷெக்கெலுக்கு கிடைக்கும்
என்றார். கோட்டைக்காவலன் இதை நம்ப மறுத்தான். எனவே அவனுக்கும் ஒரு அருள்வாக்கு அருளப்பட்டது. " மக்கள் எல்லோருக்கும் கோதுமை தேவையானது கிடைகும் ஆனால் அதைபெற நீ இருக்கமாட்டாய்" என்பதே.அந்த அருள் வாக்கு.
அன்று இரவே சிரியாவிலிருந்து வந்திருந்த பெனதாதின் படைவீரரிடையே பெரும் கலகம் ஏற்பட்டது. இஸ்ரேல் மன்னன் எகிப்த்திய படையினருடன் உடன்படிக்கை செய்துகொண்டு நம்மை எதிர்க்க வருகின்றான் என்று கேள்விபட்டு அவர்கள் கொண்டுவந்திருந்த படைகலங்களை எல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதை கேள்விப்பட்ட இஸ்ராயேல் மக்கள் பெனதாது அரசன் கொண்டுவந்திருந்த அனைத்தையும் கொள்ளை அடித்தனர். தானியங்களையும் கால்நடைகளையும் கொள்ளையடித்தனர்.
     தானியங்கள் கோதுமை கலம் ஒன்று ஒரு ஷெக்கல் என்று விற்றும் வாங்க ஆள் இல்லாமல் போயிற்று. சமவெளியில் என்ன நடக்கின்றது என்று எட்டிப்பார்த்தான் கோட்டைத்தலைவன். அவ்வளவுதான்.. கொள்ளையடிக்கும் ஆசையில் வந்த மக்கள் அவனை கீழேதள்ளி அவன் மீதேறிச்சென்ற காரணத்தால் அவன் மரித்துப்போனன். ஆக இறைவாக்கினர் எலியஸ் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசனம் மிகச்சரியாய் நிறைவேறியது.
     பட்டும் புத்திவறாத சிரியா மன்னன் பெனதாது மீண்டும் இஸ்ராயேல் மீது படையேடுத்தான். இந்த முறை தோத்தாயீன் மீது படையெடுத்து கடும் முற்றுகையிட்டான். எலியாஸ் தீர்க்கதரிசி எதிரி அரசனின் திட்டங்களை இஸ்ராயேல் அரசனிடம் கூறி அவனை பல முறை காத்தார். இதனால் கடுப்பானான் பெனதாது. நம் திட்டங்களை எதிரி அரசனுக்கு
போட்டுக்கொடுப்பன் ஒருவன் நம்மிடையே இருகின்றான். அவன் யார்? என்று கடுமையக விசாரித்தான். அப்போது படைத்தலைவன் " அரசே, நம்மிடம் துரோகியோ ஒற்றனோ யாரும் இல்லை. எலியாஸ் என்னும் இறைவக்கினர் தோத்தாயீனில் இருகின்றார். அவர் நம் திட்டங்களை அவரது அரசினிடம் கூறிவிடுவதால் நம் திட்டங்கள் அனைத்தும் தோல்வி
அடைகின்றன. அவரை பிடித்துவிட்டால் நாம் ஜெயித்துவிடலாம் " என்றான். பெனதாதும் எலியாஸ் தீர்க்கதரிசியை பிடித்து வர அனுமதித்தான். அவன் படைவீரர்கள் வந்து எலியாஸ் தீர்க்கதரிசியை சூழ்ந்துகொண்டனர். அப்போது எலியாஸ் ஜெபிக்கவே வானினின்று இறங்கிவந்த ஒரு இடி அவரைப்பிடிக்கவந்திருந்த அனைவரின் கண்களையும் குருடாக்கியது.
அப்போது எலியஸ் கூறினார் " நீங்கள் வந்த இடமும் தவறு..சந்தித்த நபரும் தவறு... வாருங்கள்...நான் உங்களை சரியான இடத்திற்கு கொண்டு போவேன்." என்று சமாரியாவில் உள்ள இந்த தீர்ஸாக்கோட்டைக்கு அழைத்து வந்தார்.     நடந்த சேதி அறிந்த இஸ்ராயேல் மன்னன் கடும் கோபம் கொண்டான்.." இறைவாக்கினரே...நான் இவர்களை என்ன செய்ய வேண்டும்..இவர்கள் அனைவரையும் என் கையாலேயே வாளால் வெட்டிப்போடட்டுமா? " என்றான். அதர்க்கு எலியாஸ் இறைவாக்கினர் " வேண்டாம் அரசே, இதற்காகவா நான் இவர்களை இவ்வளவு தூரம் அழைத்துவந்தேன்... இவர்களை நல்ல விதமாய் கவனித்து விருந்தளி " என்றார். மன்னனும் அவ்வாறே செய்தான். எலியாஸ் தீர்கதரிசி அவர்கள் அனைவருக்கும் இறைவேண்டல் செய்து மீண்டும் பார்வை கொடுத்தார். சிரிய மன்னன் பெனதாது நடந்த விஷயங்களைக்கேள்விபட்டு அவமானமாக தன் நாடு திரும்பினான்.
     அதன் பிறகு அவன் மீண்டும் இஸ்ராயேல் மீது படையெடுத்து வரவில்லை.
இப்படியாக இந்த் தீர்ஸக்கோட்டை பல நூற்றாண்டுகளில் பலர் கைமாறி யேசுநாதர் காலத்தில் ஏரோதன் அந்திப்பாஸ் கையில் வந்தது. அவன் காலத்திலேயே கூட கோட்டையின் பல பகுதிகள் சிதிலமாகிப்போனதால் ஏரோதன் இந்தக்கோட்டையை இரண்டு பிரிவாக ஆக்கி ஒரு பிரிவை மருத்துவ மனையாகவும் ஒரு பகுதியை சிறைச்சாலையாகவும் ஆக்கினான்.
இந்த தீர்ஸாக்கோட்டையிலிருந்து ஊருக்கு வெளியே ஒருமணிநேர நடைப்பயணம் நடந்தால் அங்கும் ஒரு கோட்டை வரும். அது தான் லாஸரின் கோட்டை ஆகும். இந்த கோட்டையில் தான் யேசுநாதரும் தங்கி இருந்தார். அப்போது யேசுவின் சீடர்கள் யேசுநாதரிடம் இந்த தீர்ஸாக்கோட்டையில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பற்றிக்கூறி அங்குள்ள
பாவப்பட்ட மக்களை காக்கும்படி கூறினர். யேசுநாதரும் மனமிரங்கி அடுத்த நாள் அந்த கோட்டைக்கு விஜயம் செய்வதாகக்கூறினார்.
       யேசுநாதரின் தீர்ஸாக்கோட்டை விஜயத்தையோட்டி பெரும் சர்ச்சை எழுந்தது யூத பெரியோர்களின் மத்தியிலும் பரிசேயர்களின் மத்தியிலும் அரசாங்க அதிகாரிகளின் மத்தியிலும்.  எங்கே அவர் தங்களுடைய வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி தங்கள் மானத்தை கப்பலில் ஏற்றிவிடுவாரோ என்ற அச்சம்தான் காரணம். எனவே பலர் வெளியே
தலை காட்டாமலேயே வீட்டிலேயே அடைபட்டுக்கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் மதத்தை விமர்சனை செய்தவர்களும் ஏன் என்று கேள்வி கேட்டவர்களும் அரசாங்கத்தை விமர்சனை செய்தவர்களும் அரசாங்கத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தவர்களும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கேள்வி எதுவும்
கேட்காமல் பிடித்து அடக்குமுறைகொட்டிலில் அடைத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த தீர்ஸாக்கோட்டையிலும் நிறைய பேர் இருந்தார்கள்.
    அடக்குமுறைகொட்டில் இந்தக் கோட்டையின் நிலவறையில் இருந்தது. அங்கு உணவோ நீரோ வெளிச்சமோ எதுவும் கிடைக்காது. கேட்காமலேயே கிடைப்பது அடியும் உதையும் தான். அது தாரளமாகவே கிடைக்கும். அவர்களின் குற்றத்திற்கேற்ப தண்டனையும் இருக்கும். உயிரும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் இங்கிருந்து வெளிவரும் மனிதன் உயிருள்ள
பிணமாகத்தான் வெளியே வருவான். அவனால் எந்தப்பிரயோஜனமும் இருக்காது. பெரும்பாலும் அவனுக்கு பைத்தியம் பிடித்திருக்கும்.
சமதளமுள்ள சிறையில் பெரும்பாலும் சாதரணமான குற்றவாளிகள் அடைபட்டிருப்பார்கள். அவர்களுக்கு விலங்கு மாட்டிய கைகளிலும் கால்கலிலும் புண்கள் வந்து சீழ்பிடித்து சமயங்களில் புழுவும் வைத்திருக்கும். இவர்களை பார்க்கவரும் உறவினர்கள் சிறை அதிகாரிகளுக்கு ஏதாவது லஞ்சம் கொடுத்தால் குற்றவாளிக்கு தேவையானவை கொஞ்சம்
கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் கதி அதோகதி தான். இந்த தீர்ஸாக்கோட்டையின் மேல் தலம் பெண்களுக்கானது. ஆண்களின் நிலையைவிட பெண்களின் நிலை மஹா கேவலம்..சொல்லமுடியாத அருவருப்பானது. பல பெண்களின் உதிரப்போக்கிற்கு அது இயல்பானதானாலும் சரி அல்லது வியாதியினாலும் சரி சுகாதரம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத நிலையானது. இதனால் அப்பெண்கள் அடைந்த உடல் வேதனையும் மன வேதனையும் வார்த்தையில் சொல்லி முடியாது.
இந்த தீர்ஸாக்க்கோட்டையில் அடைபட்டிருந்த ஆண்களும் பெண்களும் முக்கால்வாசி மதத்தின் பெயராலும் அரசாங்கத்தின் பெயராலும் பழிவாங்கப்பட்டவர்கள் தான். வலியினலும் அவமானத்தினாலும் கோபத்தினாலும் அவர்கள் எழுப்பியகூச்சல் கோட்டையையும் தாண்டி வெளிவாசல்வரை கேட்டது. இந்த நேரத்தில்தான் யேசுநாதர் இந்தக்கோட்டையில் பிரவேசித்தார். கோட்டைகாவலன் ரோமையன்.      அவனுக்கும் இங்குள்ல நிலைமை புறிந்துதான் இருந்தது. இருப்பினும் யேசுநாதரிடம் பணிவாக நடந்துகொண்டான். அவன் யேசுநாதரை
அறிந்திருந்ததால் அவர் வழியாக இந்த பரிதாபத்துக்குறிய குற்றவாளிகளுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று அவரை பல இடங்களுக்கும் சுற்றிகாண்பித்தான். அங்குள்ள குற்றவாளிகளின் நிலைகண்ட யேசுநாதர் மிகவும் வருந்தி கண் கலங்கினார்.
     அன்றையதினம் விடுதலையாகும் ஆண்கைதிகளும் பெண்கைதிகளும் யேசுவின் பாதம் பணிந்து தங்களுக்கு பாவ மன்னிப்பு வேண்டியும் நோய் நீங்கவும் வேண்டினர். யேசு அவர்களை அன்போடு ஆசீர்வதித்து நற்சுகம் அளித்தார். அவர்கள் ஊருக்குள் சென்று யேசுநாதர் தங்களுக்கு செய்த நலன்களை காண்பித்து சிறையில் உள்ள தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் வெளியே கொண்டுவர பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதர்க்குள்ளாக யேசுநாதர் சிறையில் வாடிய ஆண் பெண் அனைவரையும் குணமாக்கினார்.
     புத்திசுவாதீனம் அடைந்தோர் மீண்டும் தங்கள் பழைய நினைவு பெற்றனர். தங்களை மறந்துபோன பிள்ளைகளையும் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டுகொண்டனர்.
அசுத்த ஆவியினால் துன்புற்றவர்களையும் அந்த சிறைச்சாலையிலேயே குணமக்கினார்.
நிலவரையில் அடைபட்டிருந்த அந்த பாவப்பட்ட ஜென்மங்களையும் தொட்டு குணமாக்கி ஆறுதல்பல கூறினார். பலநாட்கள் வெளிச்சத்தையோ மனிதரையோ சாப்பாட்டையோ
காணாத அவர்கள் தங்களுக்கு சொர்க்கம் திறந்துவிட்டதாக நினைத்தார்கள். அந்த சிறை உயர் அதிகாரியும் ஒரு ரோமன். அவர் மூலமாக அரசாங்க உயர் அதிகாரிகளையும் யூதமத
உயர் அதிகாரிகளையும் சந்தித்து சட்டபூர்வமாக அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டன. இதற்காக அவர்கொடுத்த விலை மிகவும் அதிகம்.
முதலில் கடனாளியாகி கடன்கட்டமுடியாமல் சிறைசென்றவர்கள் கடனை வட்டியும் முதலுமாக செலுத்தவும், கைதியைப்பற்றிய எந்த குறிப்பும் இல்லாமலேயே சிறையில்
வாடுபவர்களுக்கு இரண்டுமடங்காகவும், மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பழி வாங்கப்பட்டவர்களுக்கு நான்கு மடங்காகவும் ரொக்க ஜாமீன் செலுத்த யேசுநாதர்
ஒப்புக்கொண்டார். சட்டபூர்வமான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்றன. முதலில் யேசுநாதர் தன் பையிலிருந்த தங்க காசுகளை கொடுத்தார். அவை ஒவ்வொருபுறமும்
மூன்று அங்குல நீளம் கொண்ட முக்கோண வடிவிலானது. ஆம் ...அந்த காசுகள் யேசு நாதருக்கு அவர் குழந்தையாய் இருக்கையில் அவரை சந்திக்க வந்த மூன்று ராஜாக்கள்
அவருக்கு காணிக்கையாய் கொடுத்தது. யேசுநாதர் அரசர் என்னும் கருத்திலேயே அவருக்கு கொடுக்கப்பட்டத்து. ஆக யேசுநாதர் அரசர் என்னும் அதிகாரத்திலேயே ஏரோதனால்
பழிவாங்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்தார்... குற்றவாளிகளை அரசன்தானே விடுதலை செய்ய முடியும். மீதமுள்ள குற்றவாளிகளை விடுதலை செய்ய லாசர் முன்வந்து
அதற்கான செலவை ஏற்றுக்கொண்டார். இதர்க்காக லாஸர் கொடுத்தவிலை மிகவும் அதிகம். ஆம்... லாஸர் தன் இளைய சகோதரியும் யேசு நாதரால் மனம்திருபட்டவளுமான மதலேன்
மரியாளுக்கு சொந்தமான மகதலாக்கோட்டையை விற்று அந்த கடனை அடைத்து அந்த கைதிகளை விடுதலையாக்கினார்..
இந்த தீர்ஸாக்கோட்டைக்கு அடுத்து இருந்த லாசரின் கோட்டையில் பல மாதங்களுக்குப்பிறகு மீண்டும் யேசு நாதர் தங்கி இருந்தார். அப்போது லாஸரின் தங்கை மார்த்தாள் வந்து
யேசுவின் பாதம் பணிந்தாள். யேசுநாதர் மார்த்தாவிடம் "அம்மணி, என் நண்பர் லாஸர் எப்படி இருக்கின்ரார் என்று நலம் விசாரித்தார்". அப்போது அவர் கண்ணீரோடு கூறினார், " ராபீ,
என் சகோதரரும் உம் நண்பரும் ஆன லாஸர் தற்போது கடும் நோய் கண்டுள்ளார். தாங்கள் வந்து பார்த்தீர்களானால் அவர் நலமடைவார்.. எனவே தாங்கள் அவசியம் பெதானியா
வரவேண்டுகிறேன்" என்றாள். அதர்க்கு யேசுநாதர் "சகோதரி நாம் அவசியம் பெதானியா வருவவோம்... லாஸரைக்குணமாக்குவோம்.. நீங்கள் சமாதானமாகப்போய் வரலாம் " என்று
அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தார்.
தன்னால் பழிவாங்கப்பட்ட பல அரசியல் மற்றும் மத சம்பந்தமான குற்றவாளிகளை யேசுநாதர் தீர்ஸாக்கோட்டையில் விடுவித்துவிட்டார் என்று கேள்விப்பட்ட ஏரோது மன்னன்
அந்திப்பாஸ் தீர்ஸாக்கோட்டை சிறைச்சாலை அதிகாரிகளை உண்டு இல்லை என ஆக்கிவிட்டான். ஆனால் சிறைச்சாலை உயர் அதிகாரியான ரோமன் அவனை ஒரே வார்த்தையில்
மடக்கினான். யேசு நாதரால் விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் அனைவரும் சட்டபூர்வமாகவே விடுவிக்கப்பட்டுள்ளனர்...ஆட்சேபம் தெரிவித்தவர்களே
சமாதானமாகப்போய்விட்டனர்..தேவையானவர்களுக்கு தேவையான பணமும் ஜாமீனும் கொடுக்கப்பட்டுள்ளது..அனைத்தையும் சிறைச்சாலையின் விதிமுறைபடியே செய்யப்பட்டு
விடுதலை செய்யப்பட்டுள்ளது. இதில் நீர் என்மீது காய்வதற்கு ஒன்றும் இல்லை ". என்றான். எனவே ஏரோதனுக்கு மேலும் ஒன்றும் பேச முடியாமல் போய்விட்டது. இருப்பினும்
ஆத்திரமும் அவமானமும் அவனுக்கு மிதமிஞ்சிப்போய் அருகிலிருந்த தன் ஊழியக்காரனை தன் கால்களால் நன்றாக உதையோ உதை என்று உதைத்தான். அந்த ஊழியன் போட்ட
கூச்சல் சிறைச்சாலை முழுவதும் எதிரொலித்தது. மற்ற ஊழியர்கள் ஓடி ஒளிந்தனர்.




No comments:

Post a Comment