Tuesday, June 11, 2013

சொர்க்கம் திருடிய கள்வன்."

" சொர்க்கம் திருடிய கள்வன்."
   "ஊர் உறங்குது உலகம் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே, கார் உறங்குது காற்றும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே நீ உறங்கவில்லை." கவிஞர் கண்ணதாசன். அந்த அமைதி பொழியும் இரவில் அவதரித்திருந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன், யேசுவாக மனிதாவதாரம் எடுத்திருந்ததால் அவரும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார். அவர் என்ன செய்வார் பாவம் !. பிறந்து இன்னும் மூன்று மாதங்கள் கூட முழுமையாய் முடிவடையவில்லை. ஊர் உறங்குவதைப்பற்றியோ உலகம் உறங்குவதைப்பற்றியோ அவருக்கு இந்த வயதில் என்ன கவலை இருந்துவிடப்போகிறது. சம்மனசுகள் பாடும் தேவ கீதங்களும் தாலாட்டுப்பாடல்களும் அவரை இன்னும் சொர்கத்திலிருப்பதாகவே நினைப்பூட்டி தூங்கவைத்துக்கொண்டிருந்தன.அவரது வளர்ப்புத்தப்பனார் சூசையப்பரும் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு நாள் முழுதும் தச்சுத்தொழில்.தினம் இரண்டு மனி நேர நடைப்பயணம் செப்பொரிசுக்கு. அங்கு தான் அவருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம். நசரேத்தூர் ஒரு சிற்றூர். அங்குதான் அவருக்கென ஒரு சிறிய வீடும் ஒரு தச்சுப்பட்டரையும் இருந்தது.பெரிய வேலைகைள் எடுத்துவந்து தன் வீட்டிலேயே செய்துவந்தார். தன் மனைவி மரியாள் தன் குழந்தையுடன் நசரேத்தூரிளுள்ள தன் மாமியார் அன்னமாள் இல்லத்தில் தங்கியிருப்பதாள் இரவில் அங்குதான் தங்குவார்.         தினசரி கடுமையான வேலை காரணமாக அவருக்கும் நல்ல தூக்கம் கொண்டிருந்தது. என்னதான் மாமியார் வீடு மிகவும் வசதியானதாக இருப்பினும் அவர் நீதிமானாய் இருந்ததால் கௌரவமாக சொந்தமாக தச்சுதொழில் செய்து குடும்பத்தை நடத்திவந்தார். தேவ தாயார் மரியாள் கூட தன் பிறந்தவீட்டுப்பெருமையை பீற்றிக்கொள்ளாமல் தன் கணவணை மதித்து மிகவும் சுறுசுறுப்பாய் வீண் காலம் போக்காது நூல் நூற்று, பின்னல் தையல் வேலைகள் செய்து சிறு வருவாய் பெருக்கி தன் கணவனுக்கு உதவியாய் குடும்பம் நடத்தி வந்தாள். எனவே அவரும் கூட பாதி அமர்ந்த நிலையிலும் பாதி சாய்ந்த நிலையிலுமாய் பிள்ளையை தொட்டிலில் அவ்வப்போது ஆட்டிக்கொண்டும் தூங்கியும் தூங்காமலும் இருந்தார். இந்த வேலையில் வானினின்று இறங்கிவந்த ஒரு தேவ தூதன் சூசையை மிகவும் அவசரமாக எழுப்பினார். சூசை நல்ல தூக்கத்திலிருந்ததால் அவரை பலமாகத்தட்டி எழுப்பினார். திடுக்கிட்ட சூசை எழுந்து தேவதூதனைப்பார்த்து அதிசயித்தார். " ஏரோது அரசன் குழந்தையேசுவைக் கொல்லத்துடிக்கிறான். அதற்காக நாடு முழுதும் உள்ள மூன்று வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொண்றுவிடும்படி ரகசிய ஆணை பிறப்பத்துள்ளான். உடனே யேசுவையும் தாய் மரியாளையும் எகிப்திற்கு கூட்டிக்கொண்டு போ"என்று கட்டளை இட்டார். அவ்வளவு தான். சூசை துள்ளி எழுந்து மரியாளையும் அவரது தாயார் அன்னம்மாளையும் எழுப்பினார். கடவுள் தன்னை மரியாளையும் யேசுவையும் உடனே எகிப்திற்கு கூட்டிசெல்ல கட்டளையிட்டுள்ளதாகக்கூறினார். எனவே தன் மாமியார் அன்னம்மாளிடம் தங்கள் பயணத்துக்கு வேண்டிய அனைத்தையும் உடனே ஏற்பாடு செய்யும்படி கேட் டுக்கொண்டார். பயணத்திற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் ரகசியமாக இரவோடு இரவாக ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த இரவிலேயே சூசை தன் மனைவி மரியாளை குழந்தை யேசுவுடன் ஒரு கோவேறு கழுதை மீது ஏற்றிக்கொண்டு எகிப்திற்கு பயணப்பட்டுவிட்டார். அவர்களுடன் சுமார் ஒரு வயதுடைய கழுதைக்குட்டி ஒன்றும் பயனப்பட்டுவந்தது. இந்த குட்டிக்கழுதை கடவுளின் கட்டளை படியே அழைத்துவரப்பட்டது. இந்த கழுதைக்குட்டி எங்கெல்லாம் நிற்குமோ அங்கெல்லாம் திருக்குடும்பமும் நிற்க வேண்டும். அது பயணப்படும்போது திருக்குடும்பமும் பயணப்படவேண்டும். ஆக இந்த கழுதைக்குட்டிதான் திருக்குடும்பதிற்க்கு வழிகாட்டியானது.
      சூசை வெளியூரில் தன் குடும்பத்தைக்காப்பாற்ற தன் பிழைப்புக்குவேண்டிய சகல சாமான்களையும் சில தட்டுமுட்டு சாமாண்களையும் கொஞ்சம் பணம் பழம், ரொட்டிகள் தண்ணீர்குடுவைகள், துணிமணிகள் ஆகியவற்றுடன் எகிப்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டார். கூடுமானவரை ஏழைஎளிய மக்கள் வசிப்பி டங்களிலேயே அவர்கள் பகல் வேளையில் தங்கினர்.பகல் வேளையில் வெயிலின் கொ டுமையிலிருந்து தப்பிக்கவும் மேலும் ஏரொதின் ரகசிய வீரர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கவும் இந்த ஏழை மக்களின் உதவி அவர்களுக்கு மிக அவசியமாகத் தேவைப்பட்டது.இவர்கள் தங்கிய இடங்கள் யாவும் பெரும்பாலும் அன்னம்மாளுக்குச்சொந்தமான இடங்களாகும் எனவே அந்த எளியமக்கள் திருக்குடும்பத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர்களாய் தங்களாளியன்ற மட்டும் அவர்களுக்கு உதவி செய்தனர். முதல் நாள் பயணமாக அவர்கள் தங்கிய ஊரின் பெயர் நஜாரா என்பதாகும். திருக்குடும்பம் இரண்டாம் நாள் பகல் பொழுதில் சிக்கேம் என்ற இடத்தில் தந்தை அபிரகாமின் ஓக்மரம் என்று அழைக்கப்படும் இடத்தில் தங்கினார்கள். இந்த இடம் பல சரித்திர நிகழ்வுகளைக்கொண்டது.இந்த மரத்தின் அடியில்தான் தந்தை அபிரகாம் பல காலம் தங்கி இருந்தார். பல வழக்குகளைத் தீர்க்கும் இடமாக அந்த ஓக் மரம் விளங்கிற்று. இங்குதான் ஆண்டவர் அவருக்கு "வானத்து நட்சத்திரத்தை உன்னாள் எண்ண முடியுமா? கடல் மணலை உன்னாள் எண்ன முடியுமோ? கூடுமானால் முயன்று பார். இப்படியாகவே நான் உன் சந்ததியைப்பெருகப்பண்ணுவேன்." என்று உறுதி கொடுத்த இடம். அவரது பேரன் யாக்கோபும் இவ்விடத்தில் பல காலம் தங்கி இருந்தார். அவர் தன் மனைவி ராக்கேல் கொண்டுவந்திருந்த பலதேவர் சிலைகளை இம்மரத்தடியில் போட்டுப் புதைத்தார். அதன் பின்னர் பலகாலங்களுக்குப்பிறகு ஜோஸ்வா தன் படைக்கலங்களை இங்கு தான் பல காலம் நிருத்தி வைத்து இருந்தார். திருக்குடும்பம் அதிக தூரம் நடந்து பழக்கமில்லாததினால் பல இடங்களிள் தங்கி தங்கிச்செல்ல வேண்டி இருந்தது. நான்காம் நாள் ஒரு குகையில் தங்கினார்கள். இந்த குகையில் தான் மரியாளின் தந்தையார் சுவக்கீன் மாதா பிறப்பதற்கு முன் குழந்தைவரம் வேண்டி பல காலம் தவமிருந்தார்.அன்னம்மாளும் சுவக்கீனும் எருசலேமில் தேவாலயத்தில் சுத்திகாரம் செய்யப்பட்டபிறகு இந்த குகையில் தான் இரண்டு மாதம் தங்கி மாதாவை அமலவுற்பவியாக கருத்தாங்கியதும் கரு உறுதியானதும் தங்களுடைய சொந்த ஊருக்கு அதாவது நசரேத்துக்குஅருகில் உள்ள செபோரிஸ் என்ற ஊருக்குச்சென்றனர். அவ்வளவு பாக்கியம் பெற்ற குகை இது. ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோ செல்லும் வழியில் உயர்ந்த மலைகளுகிடையே wadi quilt என்னும் இடத்தில் உள்ளது. இந்த குகையை சுற்றி தூய ஜார்ஜ் மடாலயம் மிகப்பிரண்டமாய் அமைந்துள்ளது.அந்தப்பாலைநிலத்தில் ஒரு சிற்றாறு ஓடுகின்றது. இந்த ஆற்றைக்கடந்துதான் இந்த குகைக்கு செல்லவேண்டும். இந்த மடாலயத்துறவிகள் எப்படித்தான் இவ்வளவு பிரம்மாண்டமான மடாலயத்தைக் கட்டினார்களோ தெரியவில்லை. திருக்குடும்பம் ஐந்தாம் நாள் பயணமாக மம்பிரே என்னுமிடதிலுள்ள ஒரு குகையில் தங்கினார்கள். இந்த மலைக்குகையும் பாக்கியம் பெற்றது. இனிமேல் தன்னாள் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது என்று தேவ தாயார் கூறிவிட்டதால் இந்த இடத்தில் அவர்கள் தங்க வேண்டி இருந்தது. இந்த மலைக்குகையும் பல சரித்திர நிகழ்வுகளைக்கொண்டது.
       தாவீது ராஜா சிறு பையனாக இருந்தாபோது இந்த குகையில் தான் தன் ஆடு மாடுகளுடன் தங்குவார். அவ்வாறு தங்கியிருக்கும்போது ஒருநாள் சம்மனசானவர் ஒருவர் தாவீதுக்குத்தோன்றி அடுத்த நாள் நிகழப்போகும் சவுல் பிலிஸ்தியர் யுத்தத்தில் கோலியாத்துடன் மோதப்போகும் சண்டைக்கு ஏற்படும் சவாலை தைரியமாய் ஏற்றக்கொள்ளச்சொன்னார். எலியாஸ் தீர்க்கதரிசி ஜாபேலின் வாளுக்குப்யந்து சீனாய் மலைக்குப்போகும்போது இந்த குகையில்தான் சில காலம் தங்கினார். சாமுவேல் தீர்க்கதரிசியும் இங்கு தங்கி தன் பிள்ளைகளுக்காக அழுது அழுது ஜெபித்தார். இத்தனை சிறப்புகள் உள்ள இந்த குகையில் திருக்குடும்பம் பாதுகாப்பாக தங்கியிருந்தாலும் அவர்களுக்கு பசிக்கு உணவு இல்லை. தாகதிற்க்கு தண்ணீரும் இல்லை. பாலன் யேசுவும் பசி தாகத்தால் தவித்தார்.மாதா குழந்தை யேசுவும் தவிப்பது கண்டு மிகவும் பரிதவித்துப்போனாள். அப்போது கடவுள் ஒரு புதுமையை செய்தார். எங்கிருந்தோ வந்தது ஒரு காட்டு ஆடு. தேவதாயாரின் முன் நின்று தானாகப்பால் சுறந்தது. திருக்குடும்பம் நன்றாகப்பசியாறிய பிறகு கண்காணாமல் ஒடி மறைந்தது. இன்றளவும் இந்த குகை அத்துல்லாம் குகை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வழியாக திருக்குடும்பம் யூதேயா என்னும் மலை நாட்டை அடைந்தது.இங்கு தான் யேசுநாதரின் முன்னோடியான ஸ்நாகப அருளப்பர் தன் தாயார் எலிஸபெத் அம்மாளுடனும் தந்தை சக்காரியாஸுடனும் ஜுட்டா என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார்கள். திருகுடும்பம் இந்த ஜுட்டா என்னும் நகரை அடையும்போது ஒரு சம்மனசானவர் ஸ்நாபக அருளப்பருக்குத்தோன்றி தன் ஆண்டவர் திருக்குடும்பத்துடன் அவரது ஊரைத்தாண்டிச்செல்வதாக அறிவித்தார். அடுத்த பகல் பொழுதில் திருக்குடும்பம் அந்த ஜுட்டா என்னும் ஊரைத்தாண்டிசெல்லும் போது தாகத்தால் மிகவும் தவித்துப்போனார்கள். ஏற்கனவே அது மலை சூழ்ந்த வறண்ட பாலைநிலம் பிறகு தாகத்திற்கு கேட்கவா வேண்டும். அவர்களை சுமந்துவந்த கழுதையும் அதன் குட்டியும் கூட இனியும் தங்களாள் முடியாது என்பது போல படுத்துக்கொண்டன. அங்கிருந்த ஒரு சிரு குன்றின் அடியில் சற்றே கிடைத்த நிழளில் திருக்குடும்பம் ஓய்வெடுத்தது. தூரத்தில் ஸ்நாபக அருளப்பர் கையை ஆட்டிக்கொண்டு ஓடி வருவதை தேவதாயார் கண்டார்கள். அப்போது ஸ்நாபக அருளப்பருக்கு இரண்டு வயதுக்கும் குறைவாகத்தான் இருக்கும். திருக்குடும்பத்தின் பரிதாப நிலை கண்ட அவர் ஒரு குச்சியால் நிலத்தைக்கொத்தினார். உடனே அதிலிருந்து புறப்பட்டது ஒரு அதிசய நீரூற்று. இந்த நீர் ஊற்று திருக்குடும்பத்தை அடையும் போது தெளிவான நீரூற்றாக மாறியிருந்தது. குழந்தையேசு அப்போதுதான் ஸ்நாபக அருளப்பரைப்பார்த்து அவர் யார் எனப்புறிந்து கொண்டார். ஆக யேசுநதர் இந்த உலகில் இருந்தவரையில் ஸ்நாபக அருளப்பரைக்கண்டது இரண்டே இரண்டு முறைதான்.ஒன்று இந்த நீர்ச்சுனையிலும் மற்றது யேசுநாதர் ஸ்நாபக அருளப்பரிம் ஞானஸ்னானம் பெறும்போதும் தான்.அந்த இருவரும் இந்த உலகத்தில் வாழ்ந்தவரை இந்த இரண்டுமுறையைத்தவிர நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டதேயில்லை. சுவாமி யேசுநதர் யோர்தாம் நதியைக்கடக்கும்போது சில வேலைகளில் தூரத்தேயிருந்து ஸ்நாபக அருளப்பர் பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலால் அவரைப்பார்த்துக்கொண்டதோடு சரி. தேவ தாயாரானவர் தன் குழந்தையைக்குளிப்பாட்டியபின் தங்கள் பயணக்களைப்பு தீரகுடித்து குளித்து தோல் பைகளில் நீர் நிரப்பி புதியதொரு தெம்பு பெற்றவர்களாய் மீண்டும் எகிப்திற்கு பயணமாகினர். இவ்விதமாக அவர்கள் ஒன்பதாம் நாள் பயணமாக சாக்கடலைக்கடந்தார்கள். இந்த சாககடல் பகுதி யேசுநாதர் காலத்திற்கு முன்பிருந்தே அனாதையாக கிடந்தது. அதன் தென் பகுதியில் வேத காலங்களில் எறிக்கப்பட்ட சொதோ குமரா பட்டிணங்கள் இன்றுவரை சாம்பல் மேடுகளாய் உள்ளன. அவை இன்றும் கடவுளின் கோப ஆக்கினைக்கு சாட்சியமாய் உள்ள்து.இன்றைக்கும் இஸ்ரேலின் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. இந்த சாக்கடலின் கிழக்கே ஜொர்தான் நாடும் வடக்கே இஸ்ரயேலும் தெற்கே செங்கடலும் உள்ளது.ஆக யேசுநாதர் காலத்தில் ஜெரிக்கோ திருடர்கள் தங்கள் வழிபறிக்கொள்ளைகளை இந்த அனாதையான மலைப்பகுதியில் அதிகமாக நடத்தினர்.இந்த பாதைதான் எகிப்த்திற்கு செல்லும் ப்ரதான சாலையானதால் வியாபாரிகள் முதல் அனைத்துப்பிரிவினரும் இந்த சாலையைத்தான் பயன் படுத்தியே ஆக வேண்டும். திருக்குடும்பமும் இந்த வழியகத்தான் செல்ல வேண்டி இருந்தது.[இன்றும் ஜெருசலேம்-செங்கடல் பிரதான சாலை இந்த சாக்கடல் வழியேதான் செல்கிறது.]
      ஒரு இரவுப்பொழுதில் திருக்குடும்பம் எங்காவது ஒரு இடத்தில் தங்க விரும்பினர். எங்கோ தூரத்தில் மினுக் மினுக் என ஒரு ஒளி தெரிந்தது.ஆஹா! ஏதோ மனிதர்களின் குடியிருப்பு போல் தெரிகிறது.இந்த இரவை இங்கே கழித்துவிட்டு மறுநாள் அங்கிருந்து போய்விடலாம் என்று சூசையப்பரும் அந்த ஒளிவந்த இடத்திற்கு தன் குடும்பத்தை கூட்டிச்சென்றார் பின் வரப்போகும் அபாயத்தை அறியாமல். இங்குதான் விதி விளையாடியது. அவர்கள் அந்த விளக்கு வெளிச்சத்தற்கு வந்தது தான் தாமதம். திடீரென வந்தது கள்வர் கூட்டம். தடித்த கம்புகளோடும் பயங்கர கொலைக்கருவிகளுடனும் திருக்குடும்பத்தை சூழ்ந்துகொண்டனர். அடி, குத்து, கொல்லு, வெட்டு போன்ற வெறிக்கூச்சல்களும் கேட்டன. தேவ மாதா பரிதவித்து தன் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டார். சூசை தன் மனைவியை ஆதரவாக அணைத்துக்கொண்டார். இந்த வயோதிக காலத்திலும் அவருக்கு உடலிலும் மனதிலும் நல்ல வலுவும் துணிவும் இருந்தது. என்ன இருந்தாலும் அவர் தாவீதின் வம்சாவழிவந்தவர் அல்லவா. அவர் நிலைமையை நன்றாகப்புரிந்துகொண்டவராய் உரத்த குரலில் பேசியதாவது. "நில்லுங்கள். இதோ பார்.என்னிடம் பணம் காசுஒன்றுமில்லை.நான் வியாபாரியும் அல்ல. பிழைப்பு தேடிச்செல்கிறோம். என்னையோ, என் மனைவியையோ, என் குழந்தையோ தொடாதே, விலகிச்செல்லுங்கள்"என்றார். அவரது பேச்சு ஒவ்வொன்றும் சிம்ம கர்ஜனை போன்று ஒலித்தது. இந்த அதிகார தொனி கள்வர் தலைவனை நிலை தடுமாற வைத்தது. இருப்பினும் மரியாளிடமிருந்து குழந்தை பிடுங்கஎத்தனித்தான்.அவ்வளவுதான். வானத்து மின்னலைப்போன்ற ஒரு ஒளி குழந்தை யேசுவின் கண்களிலிருந்து புறப்பட்டு கொள்ளையர்தலைவன் கண்கள் வழியே சென்று அவன் மூளையைத்தாக்கியது. அவன் தன்னிலை மறந்தான்.அடுத்து வந்தன அதிகாரக்கட்டளை." நில்லுங்கள். அவர்களைத்தொடாதீர்கள்.இது என் கட்டளை" என்றான்.கள்வர் கூட்டம் அடங்கிப் பின் வாங்கியது. திடீரென பூஜை மணியோசைபோல் கிணிங் கிணிங் என்ற சப்தம் கேட்டது. உபதலைவன் கூறினான் " ஆஹா,அடுத்த இறை வந்துவிட்டது ,வேட்டைக்குத்தயார் ஆகுங்கள்" என்றான். இந்த ஜெரிக்கோ திருடர்கள் அக்காலத்தில் வழிப்பறி செய்வது மட்டுமல்ல, கொலையும் ஆட்கடத்தலையும் தங்கள் தொழிலாக வைத்திருந்தனர். இரவில் வரும் வனிகர் கூட்டத்தை மடக்க தற்காலத்தில் யானை பிடிப்பது போன்ற பதுங்கு குழிகளைவெட்டி அதன் மீது செடி கொடிகளையும் மணிகளையும் கட்டி வைப்பர். இருட்டில் அந்த வழியேவரும் ஒட்டக வியாபாரிகள் மனிதர்கள் மற்றும் மிருகங்கள் என்று யார் வந்தாலும் இந்த பதுங்கு குழிக்குள் விழும்போது அதில் கட்டப்பட்டுல்ல மணி ஒலிக்கும். விழுந்தவர் மற்றவர் துணையின்றி மேலே எழும்பிவர முடியாது. மணியோசை கேட்டதும் கள்வர் வந்து அவர்களைத்தூக்கிவிட்டு பின் அவர்களை நையப்புடைத்து அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிடுவர். தூரத்தில் தெரியும் சின்ன விளக்குதான் அவர்களைக் கவரும் தூண்டில் முள். இப்படித்தான் திருக்குடும்பமும் அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டது. தலைவன் தன் மனைவியை அழைத்து திருக்குடும்பத்தை அவளது பாதுகாப்பில் வைக்கும்படி கூ றிவிட்டு மாட்டிக்கொண்ட மற்ற வியாபாரிகளை கவனிக்கத்தொடங்கினான். "அய்யோ, அம்மா, எங்களை விட்டுவிடு. எங்கள் உடைமைகளை எடுத்துக்கொள். எங்களை உயிருடன் விட்டுவிடு" என்ற அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. என்னதான் கொல்லையர் தலைவி தங்களிடம் தயவாய் நடந்துகொண்டாலும் கொள்ளையரது இரக்கமற்ற செயலால் சூசையப்பரும் தேவ மாதாவும் மனம் மிகவும் நொந்து நூலாகிப்போனார்கள். எப்போதடா விடியும் என ஏங்கினார்கள். ஒருவழியாக அடுத்த நாள் பொழுதும் விடிந்தது. கொள்ளையர்கள் இரவெல்லாம் ஆடிய வெறியாட்டம் அவர்களது உடையிலும் முகத்திலும் தெரிந்தது. அவர்களைக்காணவே மரியாளுக்கு அருவருப்பாய் இருந்தது. இரவு முழுவதும் அவர் அழுது அழுது அவரது கண்ணீர் ஆறாகப்பெருக்கெடுத்து ஓடியது. தலைவி கொடுத்த பழமோ, ரொட்டியோ, தண்ணீரோ எதையும் அவர்கள் தொடவே இல்லை. அனைத்தும் அவர்களுக்கு வெறுப்பாகவும் அருவருப்பாகவும் தோன்றியது. பகல் வெளிசத்தில் பார்த்தபோதுதான் அவ்விடத்தின் பயங்கரம் அவர்களுக்குப்புறிந்தது. எங்கு பார்த்தாலும் இரத்தக்கரை படிந்த உடைகள்,உப்புக்கருவாட்டுத்துண்டுகள், மிகவும் அழுக்குபடிந்த உடைகள், போர்வைகள்,மலஜலம் கழித்த இடங்கள் என்று எங்கும் அருவருப்பு, துர்நாற்றம், இத்யாதி போன்றவைகளால் அந்த இடம் ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது. திடீரென வீல் வீல் என குழந்தைகள் வீறிட்டு அழும் பரிதபமான குரல்களும் சாட்டைஅடி சப்தங்களும் கேட்டன. அந்த சப்தம் ஒரு குகையிலிருந்து வந்தது. அது என்ன சப்தம் என்று மாதா எட்டிப்பார்த்தார்கள். அவ்வளவுதான். மாதாவுக்கு மயக்கம் வந்துவிட்டது. கீழே விழந்துவிடப்போகும் அவரை சூசை தாங்கிப்பிடித்துக்கொண்டார். ஏறக்குறைய பத்து அல்லது இருபது பிள்ளைகள் ஆணும் பெண்ணுமாய் சிறிய வயதில் கடத்திவரப்பட்டு அங்கு சாட்டைஅடி பட்டுகொண்டிருந்தார்கள்.          அவர்களை தன் பாதுகாப்பில் வைத்திருந்த கிழவி ஒருத்தி அவர்களை வெறிபிடித்த மிருகம் போல் விளாசித்தள்ளிக்கொண்டிருந்தாள்.
        "நிறுத்து இந்த அநியாயதை" என்று கட்டளையிட்டார் சூசையப்பர். அவ்வளவுதான் ! எங்கும் நிசப்த்தம் நிலவியது. அந்த கிழவியிடமிருந்த சாட்டையை பிடுங்கி எறிந்தார். கொள்ளையர் தலைவனோ , தலைவியோ ஒன்றும் பேசமுற்படவில்லை. சூசையப்பரின் கட்டளைக்கு கட்டுப்பட்ட சிங்கம் போல மற்றோரும் ஆயிைர். இந்த நிலையில் குழந்தை யேசுவுக்கு இயற்கையின் உபாதை ஏற்பட்டது. தேவதாயார் குழந்தையை குளிப்பாட்ட தண்ணீர் கேட்டர்கள். தலைவி அவரையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு நீர் நிறைந்திருந்திருந்த கல் தொட்டிக்கு கூட்டிச்சென்றாள். ஸ்வாமி குழந்தை யேசுவை குளிக்கச்செய்யும்போது உள்ளிருந்து ஒரு சிறு பையன் அழும் குரல் கேட்டது. அம்மா, வலிக்கிறது என்றான். மாதா மரியாள் அது யார் அழுவது? என்று கேட்டார். அது என் மகன் என்றாள் தலைவி. அதற்குள் குழந்தை யேசுவை மாதா குளிப்பாட்டியிருந்தார்கள். அதற்குள் அந்த பையனே வெளிியே வந்து விட்டான். அவனது தோற்றம் மிகவும் பரிதாபத்துக்குறியதாக இருந்தது. .உடல் முழுவதும் செதில் செதிலாக முகம், கை கால்கள் என்று புண்கள் அதிகரித்து குஷ்ட நோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது. அவனது தாயார் சுவாமி குளித்த மீதமுள்ள தண்ணீரில் அவனைக்குளிப்பாட்டினாள். அப்போது ஒரு புதுமை நடந்தது. சுவாமி யேசு குழந்தை குளித்த அந்த நீர் பட்டமாத்திரத்தில் அவன் உடம்பிலிருந்த புண்கள் குணமாகி செதில்செதிலான தோல்கள் கீழே உதிர்ந்துவிழுந்தன. அவன் ஒரு வினாடியில் குணமாகி வெள்ளை வெலேர் என்று நின்றுகொண்டிருந்தான்.தன் மகனுக்கு குஷ்டநோய் குணமான அதிசயத்தைக்கண்ட கொள்ளையர் தலைவனுக்கும் தலைவிக்கும் தலை சுற்றிப்போனது." பாவமே வாழ்வாக, பாவமே தொழிலாக வாழ்ந்த தனக்கா பரமன் அன்பு காட்டினார்?.குஷ்டநோய் குணமாகுமா? இது பேரதிசயம் அல்லவா? ஆஹா! இவர்கள் எப்பேற்ப்பட்ட தெய்வீகப்பிறவிகள்? ". என்று மனம் மாறியவர்களாய் தேவமாதவின் கால்களிலும் சூசையப்பர் கால்களிலும் விழுந்தனர்.ஜென்மப்பாவம் இல்லாமல் பிறந்த மாதா அவர்களுக்கு பாவத்தின் அருவருப்பு தாங்காதாகையால் அவர் அவர்களை தன்னையோ தன் குழந்தையையோ தொட அனுமதிக்கவில்லை. சூசையப்பர் அவர்களிடம் ஏற்பட்ட மன மாற்றத்தைக்கண்டு இனி இத்தொழிலில் ஈடுபடவேண்டாம். என அறிவுருத்தினார். அவர்கள் மீண்டும் பயணம் தொடரும் முன்பாக அவர் அவரகளிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொண்டார். அதாவது மீண்டும் தன் வாழ்நாளில் இத்தகைய கொள்ளைத்தொழிலிலோ அல்லது கொலைத்தொழிலிலோ ஈடுபடப்போவதில்லை எனவும் பிறர் அன்பில் மீதமுள்ள நாட்களிள் ஈடுபடுவதாவகவும் வாக்களித்தனர். தலைவன் செய்த சத்தியம் அவன் கூட்டத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கசமுச என்று பலவாறு பேசிக்கொண்டார்கள். இச்சமயத்தில் திருக்குடும்பம் அவர்களிடமிருந்து விடை பெற்றது. அப்போது தலைவன் கூறினான். "ஐயா பெரியவரே, மஹாபிரபோ, தாங்கள் எப்பொதும் எங்களை மறக்கவேண்டாம்." எப்பொதும் மறக்கவேண்டாம் என்ற கூற்று அவன் பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை கேட்டுக்கொண்டு இருந்தது. அந்த உயர்ந்த மலைகளும் அவன் கூற்றை ஆமோதிப்பதுபோலே மறக்கவேண்டாம் மறக்கவேண்டாம் என்று
எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
திருக்குடும்பம் எகிப்த்தில் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் வசித்தனர். அவர்கள் கடைசியாகத்தங்கிய இடம் அல் முஹராக் அசியுத் என்ற இடமாகும். இந்த இடத்திலிருக்கும்போதுதான் சம்மனசானவர் சூசைக்கு தோன்றி எகிப்தை விட்டு மீண்டும் இஸ்ரேலிலுள்ள நசரேத்தூர் செல்லும்படி கூறினார்." என் மகனை மீண்டும் எகிப்திலிறுந்து அழைத்துக்கொண்டேன்" என்னும் மறைநூல் வாக்கு இவ்விதமாய் நிறைவேறிற்று. சூசையப்பரும் உடனே நசரேத்தூருக்கு பயணம் துவங்கினார். இப்போது அவர்கள் இன்றளவும் அதே பெயரில் அழைக்கப்படும் பலாஸ்தின நாட்டிளுள்ள காசா என்ற பட்டிணத்திற்கு வந்தனர்.

அங்கே சில நாள் தங்கினர். சூசையப்பரை கடைவீதியில் பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு பெரியவர் அணுகி " ஐய்யா பெரியவரே,என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ... மஹாப்ரபூ. தாங்கள் என்னை மறக்கவேண்டாம்" என்ற கூறினேனே என்றார். சூசையப்பரும் அவரை நினைவு கூர்ந்தவராய், "ஆமாம் ஐய்யா, உங்களை நான் மறக்கவில்லை. உங்கள் மனைவி, குழந்தைகள் நலமா?" என்று நலம் விசாரித்தர். அவர் கூறினார் " ஆம் ஐய்யா அனைவரும் நலமே. நீங்கள் என்னை மறவாமலிருந்ததற்கு மிக்க நன்றி.என் மனைவி மிகவும் மாறிவிட்டாள். நாங்கள் அன்று உங்களுக்கு கொடுத்த வாக்கின்படி எங்கள் பழைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு புண்ணிய வாழ்வில்மாறிவிட்டோம். என் மனைவி எப்பொதும் ஜெபம் தபம் என்று தன்னை வருத்திக்கொண்டு வெளி மனிதர் யாவரையும் பார்க்கப்பிடிக்காமல் எப்பொழுதும் வீட்டில்லேயே அடைந்து கிடக்கின்றாள். நாங்கள் உங்களுக்கு சத்தியம் செய்துகொடுத்தபின் என்ன நடந்தது என்று நீங்கள் அறிந்திருக்க முடியாது. தங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் கூறுகிறேன்" என்றார். சூசையப்பரும் ஆர்வமுடன் கேட்கத்தொடங்கினார்." மஹாபிரபூ, நாங்கள் அன்று கள்வர் தொழிலை விட்டுவிடுவதாக செய்த சத்தியம் எங்கள் உப தலைவனுக்கும் மற்ற கள்வர்களுக்கும் பிடிக்கவில்லை. எங்களுக்கு வேறு தொழில் தெரியாது.நாங்கள் திருந்திவிட்டோம் என்றாள் யார் எங்களை நம்பப்போகிறார்? எந்த அரசாங்கமாவது நம்புமா? ஆகவே நாங்கள் இனி திருந்தவே மாட்டோம். இதே தொழிலையே செய்து நாங்கள் பிழைத்துக்கொள்வோம். உன்னையும் நாங்கள் இனிமேல் நம்பப்போவதில்லை.நீ வேண்டுமானால் போய்க்கொள். நீ போய் எங்களைக்காட்டிக்கொடுத்து விடாதபடிக்கு உன் பிள்ளைகள் இருவரை நாங்கள் பணயமாக வைத்துக்கொள்வோம்" என்று கலகத்தில் ஈடுபட்டனர். நானும் எம் பிள்ளைகளையும் என் நண்பர்கள் சிலரையும் காப்பாற்றும்படிக்கு வேறு வழி இல்லமல் என் மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். என் பிள்ளைகளை நினைத்தால் தான் மிகவும் கவலையாக உள்ளது. சரி. இனிமேல் பிழைப்புக்கு என்னவழி பகவானே எனக்கு வழி காட்டமாட்டாயா என்று நினைத்துக்கொண்டிருந்தபோது. இந்த அதிசயம் நடந்தது. " ஐய்யா,நீங்கள் மீண்டும் எகிப்திற்கு பயணம் மேற்கொண்டபோது ஒரு கொடி ரோஜா நீண்டு வளர்ந்து கொண்டே போய்க்கொண்டிருந்தது. அது பல மைல் தூரம் போய்க் கொண்டிருந்ததிலிருந்து அது உங்களுக்கு வழிகாட்டவே கடவுள் அதை அனுப்பியிருக்கிறார் என்று நான் உணர்ந்துகொண்டேன். அப்போது உங்கள் குழந்தை அந்த கொடிரோஜாச்செடியை சுட்டிக்காட்டியதிலிருந்து நான் ஒன்றைப்புறிந்துகொண்டேன். கடவுள் எனக்கு பிழைக்க வழி காட்டியதை நான் உணர்ந்து கொண்டேன். இந்தக் காட்டுரோஜாவை இதுவரை இந்தப்பகுதி மக்கள் பார்த்ததேயில்லை.நானும் என் மனைவியும் அதன் பூக்களைப்பறித்து ஊருக்குள் சென்று அதைவிற்று பிழைப்பு நடத்திவருகின்றோம். வியாபாரமும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது. ஆண்டவன் அருளாள் எங்கள் வாழ்க்கை வசதிகள் யாவும் பெறுகி இப்போது நன்றாக இருக்கின்றோம்" என்றார். சூசையும் மகிழ்ந்து அவரிடமிருந்து விடை பெற்றார்.
அப்போது அவர் மீண்டும் கூறினார்,"ஐய்யா பெரியவரே, மஹாபிரபூ, எங்களை மறக்கவேண்டாம்" என்று. எங்களை.மறக்கவேண்டாம் என்ற குரல் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்ததது. இந்த மறக்கவேண்டாம் என்ற குரல் ஒலி கல்வாரி மலையிலும் எதிரொலித்தது. அதாவது யேசுநாதர் கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கிகொண்டிருந்தபோதும் ஒலித்தது. ஆம். என்னை மறக்கவேண்டாம் என்று கதறியவன் நல்ல கள்வனே.அப்போது யேசுநாதருக்கு இவ்வுலக வாழ்க்கை இன்னும் ஒரு சில நிமிடங்களே என்று நன்றாகத்தெரிந்திருந்தது. அந்த வேதனையிலும் அவர் மனதுக்குள் சிரித்துக்கொண்டார். அவர் உள் மனதில் பின்வரும் நிகழ்வுகள் மின்னலாய் பளிச்சிட்டன." ஆஹா தீஸ்மூஸ், நீ யார் என்று எனக்குத்தெரியாது என்றா நினைத்தாய்? அன்று கள்வர் கூட்டத்தில் நீ சிறு பையனாக குஷ்ட ரோகியாக இருக்கும்போது உன்னை குணப்படுதியதை நீ மறந்திருக்கலாம்.ஆனால் நான் மறக்கவில்லை. ஒரு நாள் நான் நல்ல சமாரித்தன் கதையை கூறியதே உன்னை நினைவில் கொண்டுதான். ஊருக்கும் உலகுக்கும் வேண்டுமானால் அது உவமைக்கதைகளாக தோன்றலாம். நான் பல கதைகளை உவமைகளாக கூறியிருந்தாலும் அவைகள் எங்கோ எப்போதோ நடந்தவைகள் தான். அனைத்தையும் நான் அறிவேன்.நீ காலத்தால் மாற்றப்பட்ட கொள்ளையன். உன்னைக்கெடுத்தது உன் அண்ணன் கிஸ்தாஸ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரைசுற்றிப்பார்க்க வந்திருந்த ஒரு ரோமை வீரனின் மனைவியையும் அவளுடைய வயதுக்குவந்த மகளையும் உன் அண்ணனுடன் சேர்ந்து நீ கொள்ளையடித்தாய். உன் அண்ணன் அந்த பெண்கள் இருவரையும் கற்பழித்துக்கொலை செய்தான். இந்த கொடும் செயலில் உனக்குப்பங்கு இல்லாவிடினும் உனக்கும் அவனுக்குமாய் சிலுவைமரணம் தீர்ப்ளிக்கப்பட்டது. கள்வர்களுல் ஒருவராக நான் எண்னப்படவேண்டும் என்பது இறைவாக்கு. நீ உன் பாவங்களுக்கு வருந்தி நாம் யாரென்று உணர்ந்து நம்மை நீ ஏற்றுக்கொண்டதால் நாம் உன் பாவங்களை மன்னித்தோம். அதன் பயனாக" என்று நினைத்தவராய் வாய்திறந்து கூறினார் " ஆமென்.நீ இன்றே என்னுடன் பரகதியில் இருப்பாய்." சற்று நேரத்தில் யேசு நாதர் சிலுவையில் இறந்துபோனார். அதே நேரத்தில் ஒரு கிழவி தலைவிரி கோலமாய் கல்வாரி மலை மீது ஓடி வந்தாள். "மகனே தீஸ்மூஸ். மகனே கிஸ்தாஸ், நீங்கள் மட்டும் அன்று என் பேச்சைக்கேட்டிருந்தால் இன்று இந்த இழினிலை உங்களுக்கு ஏற்பட்டிராதே. நாங்கள் அந்த பெரியவருக்கு வாக்கு கொடுத்தபடியே எங்கள் வாழ்கையை மாற்றிக்கொண்டோம். உனக்கும் அவனுக்கும் எவ்வளவோ புத்திகூறினேனே. எங்கள் பேச்சை நீங்கள் கேட்கவே இல்லையே, அன்று அந்த தெய்வத்தாய் தன் மகனைக்குளிப்பாட்டிய நீரில் உன்னை குளிப்பாட்டியபோது உன் குஷ்டநோாய் குணமானது போலே உன் ஆண்மாவும் குணமாகியிருக்ககூடாதா? ஐய்யோ மக்களே நீங்கள் தாய் பேச்சை கேளாது போனதால் இப்படி மோசம் போனீர்களே. உங்கள் வாழ்க்கை நாசமாய்ப்போயிற்றே"என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு புலம்பித்தள்ளினாள். இப்போது வீரன் ஒருவன் வந்து கள்வர் இருவரின் கால்கலையும் தன் குண்டாந்தடியால் அடித்து உடைத்தான்.       அலறிச்சாய்ந்தனர் இருவரும். கெட்ட கள்ளன் மிகுந்த தூஷணம் கக்கினான். தாய் என்றும் பாறாது மிகவும் தூஷித்தான். இதற்கு மேலும் பொறுக்கமாட்டாத அந்த வீரன் மீண்டும் அந்த குண்டாந்தடியால் அவன் நெஞ்சின் மீது மிகவும் பலமாக அடித்தான். அந்த அடியில் அவன் இதயம் நசுங்கிரத்தம்கக்கி செத்தான். சாவிலும் அவன் தீயவனே. ஆனால் நல்ல கள்ளனோ அமைதியாக மரித்திருந்தான். சாவிலும் அவன் ஆண்டவரின் ஆசீர் பெற்றிருந்ததால் பரலோக பாக்கியம் பெற்றான். "நீ இன்றே என்னொடு பரகதியில் இருப்பாய்" என்ற ஆண்டவரின் வாக்குறுதி இந்த நல்ல கள்ளனைத்தவிர உலகில் வேறு யாருக்கும் ஆண்டவர் கொடுத்ததில்லை. " இவன் இந்த உலகில் வாழ்ந்தவரை உலகைத்திருடினான். ஆனால் இவன் செத்த பிறகு சொர்கத்தையும் திருடிக்கொண்டான்" என்று இந்த நல்ல கள்ளனைப்பற்றி எழுதிவைத்தார் ஒர் ஞானி. இவனே சொர்க்கம் திருடிய கள்வன். அதுவரை தன் மகனுடைய சாவில் துக்கமயமாய் இருந்த மரியாள் தன் போலவே பெண் ஒருத்தி தன் இரு மக்களையும் சிலுவையில் பறிகொடுத்தது பற்றி மிகவும் வருந்தினாள். அவள் யார் எனவும் கண்டுகொண்டாள். அன்று மரியாளின் காலில் விழுந்த அந்த தலைவியை விட்டு விலகிய அவர் இப்போது அவராகவே அந்த கிழவியை கட்டிக்கொண்டார். திருந்திய உள்ளத்தை யார்தான் புறக்கணிக்கமுடியும்.? இப்போது மாதாவின் நிலையும் அந்த கிழவியின் நிலையும் ஒரே மாதிரியாயிற்று. அந்த நல்ல கள்ளனின் தாயாரும் சிலுவையின் அடியில் நின்ற பரிசுத்த பெண்கள் கூட்டத்தில் ஒருவரானார்.

.

No comments:

Post a Comment